எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:3)

This entry is part of 29 in the series 20070201_Issue

சி. ஜெயபாரதன், கனடா


ஒருபெரும் ஆத்மா பிரிந்து போனது!
ஒழியட்டும் அப்படி என விழைந்தேன்!
நாமே கக்குவோம் நம்முடை வெறுப்பை!
நம்மதாய்ப் பெற்றிட வேண்டுவோம் மீண்டும்!
இப்போதைய இன்பம் மாறிடும் துன்பமாய்க்,
காலச் சக்கரம் கீழ் சுற்றி எதிராய்!
நல்ல பெண்மணி அவள்! போன பின்பு
தள்ளிய கையே நீளும் தழுவிட மீண்டும்!
ஒதுக்கிட வேண்டும், கவர்ச்சி ராணியை!
ஓய்வாய்ச் சோம்பிக் கிடந்தால்
ஓராயிரம் இடர்கள் உதித்து விடும்! … புல்வியாவைப் பற்றி ஆண்டனி

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

(ஆண்டனி, பிரிந்து செல்லும்)
மெல்லோசை கேட்டால்
அக்கணமே உயிரை விடுவாள்!
ஒன்று மில்லா சிறு நிகழ்ச் சிக்கும்
பன்முறை அப்படிச் சாவதை
கண்டுளேன் நான்; மரணம் மீதவள்
கொண்டுள்ள மோகம் மிகையே! ….எனோபரஸ்

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!

முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.

ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்

நாடகப் பாத்திரங்கள்:

எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:

கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ், ரோமின் மூன்றாம் தளபதி
எனோபரஸ் (ஆண்டனியின் பாதுகாவலன்),
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
•பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன்)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

கிளியோபாத்ரா
அங்கம்:6 காட்சி:3

ரோமா புரியின் நிலைமை: •பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள்.

நேரம், இடம்: அலெக்ஸாண்டியா, கிளியோபாத்ராவின் மாளிகை. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, சேடிகள், ஆண்டனி, ஆண்டனியின், பாதுகாவலர், படையாட்கள்

காட்சி அமைப்பு: கிளியோபாத்ராவின் மாளிகையில் ரோமானிய படையினர் •பிலோ, டெமிடிரியஸ் இருவரும் தமது தளபதி ஆண்டனியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கிளியோபாத்ராவும், ஆண்டனியும் தம் சகாக்களோடு நிற்கும் போது, எனோபரஸ், சார்மியான், அலெக்ஸாஸ், ஜோதிடர் உள்ளே நுழைகிறார்கள்.

சார்மியான்: அலெக்ஸாஸ் பிரபு! என்னருமைப் பிரபு! அன்றைக்கு மகாராணி கிளியோபாத்ராவிடம் நீங்கள் புகழ்ந்த அந்தப் பெயர் போன ஜோதிடரை எங்கே? என் கையைக் காட்ட வேண்டும். என் திருமணத்தைப் பற்றிக் கேட்க வேண்டும். எத்தனை மனைவிகள் என்றும் தெரிந்து கொள்ள வேண்டும்? செல்வந்த மாதரா அல்லது சிங்கார மாதரா என்று அறியவும் ஆசை!

அலெக்ஸாஸ்: நம்மை நோக்கி அந்த ஜோதிட மேதை அதோ வருகிறார்!

ஜோதிடர்: [சிரித்துக் கொண்டு] மாளிகை ராணி, மன்னர் தேடும் என்னை எந்த வழிப்போக்கனும் காண முடியாது! யார் நீங்கள்? பொற் காசுகள் உள்ளனவா?

சார்மியான்: இவரா அந்த ஜோதிடர்? ஏதோ வட்டிக் கடைக்காரர் போலிருக்கிறது! இவரா புகழ்பெற்ற ஜோதிடர்? ஜோதிட சிகாமணியே! உங்களுக்கு மட்டும் எப்படி எதிர்காலம் தெரிகிறது? கடந்த காலம் தெரிகிறது! உங்களுக்கு நிகழ் காலம் தெரியுமா?

ஜோதிடர்: [சினத்துடன்] எக்காலமும் அறிந்தவன் நான்! உங்களுக்கு வேண்டியது போனதா? வருவாதா? அல்லது நிகழ்வதா? இயற்கையின் முடிவில்லா மர்ம, மாய நூலில் அடியேன் அறியாதன எதுவு மில்லை!

அலெக்ஸாஸ்: சார்மியான்! உன் கையைக் காட்டு, ஜோதிடர் என்ன சொல்கிறார் பார்க்கலாம்.

சார்மியான்: [கையை நீட்டி] ஜோதிட சிகாமணி! எனக்கு நல்ல சேதிகளைக் கொடுங்கள்! எனக்குத் திருமணம் எப்போது? செல்வப் பெண்ணா? அல்லது சிங்காரப் பெண்ணா?

ஜோதிடர்: அட, கடவுளே! என்னால் கொடுக்க முடியாது! செல்வப் பெண்ணைத் தேடிப் போனால் சிங்காரப் பெண் கிடைப்பாள்! சிங்காரப் பெண்ணைத் தேடிப் போனால், செல்வப் பெண் கிடைப்பாள்! சிங்காரப் பெண் உன் பையில் கையை விடுவாள்! செல்வப் பெண் பார்க்க அசிங்கமாய் இருப்பாள்! கடந்த காலம் ஓர் சதுராட்டம்! எதிர்காலம் ஒரு புதிராட்டம்! நிகழ் காலம் ஓர் அரங்கேற்றம்! எதைப் பற்றியும் நான் சொல்வேன்!

சார்மியான்: சொல்லுங்கள், சொல்லுங்கள்! எனக்கு நல்லதாகப் பார்த்துச் சொல்லுங்கள்.

ஜோதிடர்: இப்போது இருப்பதை விட நீ வெள்ளையாக இருக்க வேண்டியவன்.

சார்மியான்: [முகத்தைச் சுருக்கி] என் தோலின் நிறத்தைச் சொல்கிறீரா? யாரதை உம்மிடம் கேட்டது? வெள்ளையாக இருந்தால் என்ன? கருப்பாக இருந்தால் என்ன? காசு நிரம்பச் சம்பாதிப்பேனா? பணமில்லாமல் இருந்தால், மனைவியாவது கொண்டு வருவாளா?

ஜோதிடர்: [கைரேகையை உற்று நோக்கி] முகத்தில் சுருக்கு விழாமல் பார்த்துக் கொள்.

சார்மியான்: ஜோதிடரே! நீர் என் முகத்தைப் பார்த்தா சொல்கிறீர். கைரேகையைப் பார்க்கப் பணம் கொடுத்தால் முகரேகையைப் பார்ப்பதா?

அலெக்ஸாஸ்: அவமரியாதை செய்யாதே அவரை! ஜோதிடர் மகாராணிக்கு ஜோதிடம் சொல்பவர். கோபம் உண்டாக்கினல் எதுவும் சொல்லாமலே போய்விடுவார். அவர் சொல்வதைக் கேட்டுக் கொள்.

ஜோதிடர்: உன் காதலி மீது நீ அன்பைச் சொரிய வேண்டும். மனைவி இருந்தால் அவளை மிகவும் நேசிக்க வேண்டும் நீ.

சார்மியான்: [சிரித்துக் கொண்டு] மதுபானம் குடித்து என் கல்லீரலைச் சூடாக்கலாம் காதல் புரிய. எனக்கு மனைவியு மில்லை, காதலியு மில்லை! நல்ல ஜோதிடமிது. பேரதிர்ஷ்டம் வருவதுபோல் தெரியுது! மூன்று அரசிளங் குமரிகளைக் காலையில் மணந்து மாலையில் விதவை ஆக்க வேண்டும்!

அலெக்ஸாஸ்: மனைவி எப்படி விதவை ஆவாள், நீ சாகாமல்? அதுவும் மூன்று தரம் எப்படிச் சாவாய் நீ? கொஞ்சம் யோசித்துப் பேசு!

ஜோதிடர்: [கூர்மையாக நோக்கி] நீ எந்த ராணிக்குப் பணிபுரிகிறாயோ, அவளை விட நீண்ட ஆயுளோடு வாழ்வாய்!

சார்மியான்: [சிரித்துக் கொண்டு] ஓ! எனக்கு நீண்ட ஆயுளா? பெருமகிழ்ச்சி! இரண்டு அல்லது மூன்று தரம் திருமணம் செய்து கொள்ளலாம்.

அலெக்ஸாஸ்: ஜோதிட சிகாமணி! என்ன சொல்கிறீர்? அப்படியானால் கிளியோபாத்ராவுக்குக் குறைந்த ஆயுளா? சார்மியான் ஆயுளைப் பற்றி யார் கவலைப் படுகிறார்? கிளியோபாத்ரா ஆயுளைப் பற்றி சார்மியான் கைரேகை எப்படிக் காட்டும்? ஜோதிடரே! நீவீர் சொல்வது உண்மைதானா?

சார்மியான்: சத்தமாகப் பேசலாமா பிரபு! அரண்மனைக்குச் சுவரிலும் காது! தரையிலும் காது! ராணியின் காதில் விழுந்தால், உங்கள் கழுத்தல்லவா துண்டிக்கப்படும்! மகாராணியைப் பற்றி நாம் பேச வேண்டாம்.

அலெக்ஸாஸ்: ஐரிஸ் சீமாட்டி! வா, வந்து உன் கையை ஜோதிட சிகாமணியிடம் காட்டு!

ஐரிஸ் சீமாட்டி: [ஜோதிடரிடம் கையைக் காட்டி] எனக்கு எத்தனை கணவர் சொல்லுங்கள்?

சார்மியான்: [வியப்புடன்] ஐரிஸ் கண்மணி! எப்போது நீ உன் கணவனை விலக்கப் போகிறாய்?

ஐரிஸ்: அதை எல்லாம் நான் சொல்ல மாட்டேன்! என் வீட்டு ரகசியம் கூரையைத் தாண்டி வராது.

சார்மியான்: அந்த ரகசியம்தான் உன் வாயிலிருந்து உதிர்ந்து விட்டதே! எத்தனை திருமணம் என்று கேட்பதின் அர்த்தம் என்ன? …. இப்போதே என் பெயரைப் போடுகிறேன், அடுத்த கணவன் பட்டியலில்! உன்மீது எனக்கு மோகம் உண்டு சிறு வயது முதலே! எனக்கு வீடு, வாசல், தோட்டம், வயல் எல்லாம் உள்ளன! 40 வயது எனக்கு! இது என் அரை ஆயுள்! முழு ஆயுள் எனக்கு 80 வரை என்று வேறு ஜோதிட சிகாமணி சொல்லி யிருக்கிறார். ஐரிஸ், கண்மணி! ஏற்றுக் கொள்வாயா என்னை அடுத்த கணவனாக?

ஐரிஸ்: [சிரித்துக் கொண்டு] அடாடா! எப்படிப் பொருத்தம் இருக்கும்? உமது வயதில் பாதி வயது நான்! தகப்பனுக்கு மகள் தாரம் போலிருக்கும்! உமது மகளுக்குத் தர வேண்டிய சீதனங்களை எனக்கு ஏன் அளிக்க வேண்டும்?

ஜோதிடர்: ஐரிஸ் சீமாட்டி! நீண்ட காலம் வாழ்வாய் நீயும்! உன் ராணி காலத்துக்கும் பிறகும் வாழ்வாய்.

சார்மியான்: ஜோதிடரே! மகாராணி கிளியோபாத்ரா ஆயுளைப் பற்றிப் பேசக் கூடாதென்று சொன்னேன். உன் காதில் விழவில்லையா? மெதுவாகப் பேசுங்கள் என்றேன்! அதுவும் உம் காதில் விழவில்லை. .. ஐரிஸ் கண்ணே! பார்த்தாயா? நீயும் நானும் நீண்ட காலம் வாழப் போகிறோம். மகாராணி ஆயுளுக்குப் பிறகும் ஒன்றாய் வாழலாம்!

ஐரிஸ்: ஏன் முடியாது? தனித் தனியாக மணந்து வெவ்வேறு குடும்பங்கள்! [உஷ்] ஈதோ மகாராணி வருகிறார். வாயை மூடு!

[அப்போது கிளியோபாத்ரா, தன் சகாக்களுடன் நுழைகிறாள்]

கியோபாத்ரா: [கோபமாக] ஐரிஸ்! என் சீமான், ரோமானியக் கோமான் எங்கே என்று தெரியுமா? இங்கே இல்லையா?

ஐரிஸ்: [சிரம் தாழ்த்தி வணங்கி] மகாராணி! அவரை அடியாள் காண வில்லை! பார்த்து வருகிறேன்.

கிளியோபாத்ரா: தேடி வந்து எனக்குச் சொல்! உடனே சொல்! போ விரைவில். [ஐரிஸ் ஓடிச் செல்கிறாள்] ஆண்டனிக்கு மோகமுண்டு, போகமுண்டு! ரோமின் மீது தாகமுண்டு! ஏதாவது தகவல் வந்ததா ரோமிலிருந்து? என்னை தேடி எகிப்துக்கு வந்து என்னிடம் கண்ணாம்மூச்சு விளையாடுகிறார்! எங்கே ஆண்டனி! எனோபரஸ்! போ நீ ஒரு பக்கம்! தேடிப் பிடித்து வா, ஆண்டனியை!

அலெக்ஸாஸ்: ஈதோ எமது சீமான் வருகிறார். உங்களை நோக்கித்தான் வருகிறார். [ஆண்டனி, ஒரு தூதுவன் பின்வர நுழைகிறான்]

கிளியோபாத்ரா: [வேகமாக] நம்மை ஆண்டனி பார்க்கக் கூடாது; வாருங்கள் போவோம். [கிளியோபாத்ரா, அலெக்ஸாஸ், ஐரிஸ், சார்மியான், ஜோதிடர் அனைவரும் விரைவாக வெளியேறுகிறார்]

ஆண்டனி: [உணர்ச்சியோடு, கவலையுடன்] என்ன ஆனது என் மனைவிக்கு? விபரமாகச் சொல்! புல்வியா எப்படிச் செத்தாள்? எங்கே செத்தாள்?

தூதுவன்: உங்கள் மனைவி புல்வியா போர்க்களத்துக்கு வந்தார் முதலில்!

ஆண்டனி: என் சகோதரன் லூஸியஸை எதிர்த்துத்தானே!

தூதுவன்: ஆமாம் பிரபு. ஆனால் பிறகு அவர்களுடன் சேர்ந்து கொண்டு புல்வியா அக்டேவியஸைத் தாக்க முனைந்தார். முத்தளபதிகளில் மூர்க்கரான அக்டேவியஸின் ரோமானியப் படை முன்பாக யாரும் நிற்க முடியுமா?

ஆண்டனி: என்ன கோர விளைவுகள் நிகழ்ந்தன வென்று சொல்? புல்வியாவுக்கு என்ன ஆனது என்று முதலில் சொல்? அக்டேவியஸ் வல்லமையைப் பற்றி யார் கேட்டார்?

தூதுவன்: சொல்லத் துணிவில்லை எனக்கு. எப்படிச் சொல்வேன் பிரபு? உங்கள் மனைவிக்கு என்ன ஆனது என்று முழுவதும் தெரிய வில்லை பிரபு!

ஆண்டனி: யாரங்கே வருகிறார்? சரி நீ ரோமுக்குப் போய் என் வீட்டில் நான் சொன்னதாகச் சொல்! எகிப்தில் நலமாக உள்ளேன் என்று சொல்! கிளியோபாத்ரா மாளிகையில் விருந்தினன் ஆக இருப்பதாகச் சொல். எனக்கு எல்லா வசதிகளும் உள்ளதாகச் சொல்!

முதல் தூதுவன்: அப்படியே செய்கிறேன் பிரபு.

[முதல் தூதுவன் போகிறான். இரண்டாம் தூதுவன் வருகிறான்]

இரண்டாம் தூதுவன்: [அழுதுகொண்டே] பிரபு! பிரபு! உங்கள் மனைவி புல்வியா போர்க்களத்தில் இறந்து போனார்.

ஆண்டனி: கேள்விப்பட்டேன். எங்கே இறந்தாள்? எப்படி இறந்தாள்? அதை நான் தெரிந்து கொள்ள வேண்டும். விபரமாகச் சொல்!

தூதுவன்: ஸிசியான் என்னும் இடத்தில் இறந்து போனார், பிரபு. போர்க்களத்தில் கடும் நோய் தாக்கியது. வந்த நோயிக்கு மருந்து எடுத்துக் கொள்ள மறுத்தார் என்று தெரிகிறது. சாகும் போது உங்கள் நினைவில் புலம்பினார். உங்களைத் தேடினார்! உங்களைக் காண விரும்பினார்! ஆண்டனி எங்கே? ஆண்டனி எங்கே என்று அலறினார்.

ஆண்டனி: [மிக்க வருத்தமுடன்] போய்விட்டாயா புல்வியா? உன்னைத் தனித்துப் போகவிட்டேன்! நானிப்போது தனித்துப் போய்விட்டேன்! புல்வியாவின் மரணத்துக்குப் பாதிக் காரணம் நான்! என் அரசியல் வாழ்க்கையில் முழுப் பங்கு எடுத்தாள். அவள் அடுப்பறையில் குழல் ஊதும் மாதில்லை! ஈட்டி எடுத்துப் போரிடுபவளும் இல்லை! போர்த் தளபதிகள் அருகிலிருந்து உதவி புரியும் மந்திரி அவள்! அவள் இப்போதில்லை. உயிருடன் உள்ள போது அவள் மீது எனக்கு வெறுப்பு மிகுதி. செத்த பிறகு அவள் மீது பரிவு பாசம் ஏற்படுகிறது. கள்ளி கிளியோபாத்ரா மேல் கொண்ட மோகத்தில் புல்வியாவை மறந்தேன். அவள் மன நோயிக்கும், நிஜ நோயிக்கும் காரணம் நான்தான். புல்வியா! மன்னிப்பாயா நீ? அவள் அருகிலிருந்து அவளை நோயிலிருந்து காப்பாற்றி இருக்கலாம் … ஆனால் கட்டழகி கிளியோபாத்ராவை எப்படி மறப்பது? மோகினியை எப்படித் துறப்பது? புல்வியாவை மறக்க வைத்தவள் இந்தக் கள்ளி! இவளை விட்டுவிட்டு ரோமா புரிக்கு நான் மீள வேண்டும்.

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]

10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]

11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (Feb 1, 2007)]

Series Navigation