எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:11)

This entry is part of 43 in the series 20070104_Issue

சி. ஜெயபாரதன், கனடா


பன்னாடு வென்று பொற்காசு திரட்டி
அடிமைகள் பிடித்துப் பெரும்பணம் புரட்டி
ரோமின் பொக்கிசம் நிரப்பிய சீஸரா
பேராசை மனிதர்? …….
அன்று நான் மும்முறை அவர்க்கு
பொன் மகுடம் சூடப் புகுந்திடும் போது
ஏற்றிலர் சீஸர்! இதுவா பேரவா? ……
நீதியே! எங்குநீ ஓளிந்து விட்டாய்?
மிருகத் தனத்தைத் நோக்கி
விரைந்து விட்டாயா?
மனிதர் ஈங்கே மாண்பிணை இழந்தார்! …. (ஆண்டனி)

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

சீஸரின் புண்கள் பேசா வாய்கள்!
எனக்காய் நீவீர் இயங்கிடச் செய்வீர்! …..
இங்குதான் குத்தினான் வஞ்சகக் காஸ்கா!
இனிய புரூட்டஸ் குத்தியது இவ்விடம்!…
சீஸர் வீழ்ந்ததும் மோசச் சதிதான்
நேசர் நம்மேல் வீசிச் சென்றிட
நீங்களும் நானும் ஏங்கியே வீழ்ந்தோம்!
எத்தகை வீழ்ச்சி என்னாட் டவர்காள்! …. (ஆண்டனி)

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

சீஸர் வாழ்ந்து நீவீர் யாவரும்
அடிமையாய் மடிவதை விட,
சீஸர் செத்து நீவீர் யாவரும்
விடுதலை அடைவது மேலானது! … (புரூட்டஸ்)

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

வேதனை உலைத்தீ ஓர் அபாயச் சக்தி!
செப்பணிடும் பண்பை, அறிவை, ஆத்மாவை!
புதுப்பிக்கும் மானிட மகத்து வத்தை!
அதுவே படைப்பின் கண்படா ஆணிவேர்!
ஆக்கப் படுவது அருக முடியாது
அச்சம் ஊட்டலாம்! நம்பிக்கை நீக்கலாம்!
முரணாக ஓர் புரட்சியாய் மாறலாம்!

பெக் எலியட் மாயோ, பெண் கலைத்துவ மேதை [Peg Elliot Mayo]

கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!

முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.

நாடகப் பாத்திரங்கள்:

எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:

ஜூலியஸ் சீஸர்: ரோமானியப் போர்த் தளபதி [52 வயது]
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி [20 வயது]
டாலமி XIV: கிளியோபாத்ராவின் தனயன் (கணவன்), எகிப்தின் மன்னன் [15 வயது]
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா [45 வயது]
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன் [வயது நான்கு]
போதினஸ்: டாலமியின் பாதுகாப்பாளன் [50 வயது]
தியோடோடஸ்: டாலமியின் ஆசிரியர் [45 வயது]
அக்கில்லாஸ்: டாலமியின் போர்த் தளபதி [53 வயது]
பிரிட்டானஸ்: சீசரின் அரசாங்கச் செயலாளர் [40 வயது]
ரூ·பியோ: சீஸரின் லெ·ப்டினன்ட் [40 வயது]
லூசியஸ் ஸெப்டிமியஸ்: ரோமானிய இராணுவ அதிகாரி [50 வயது]
அபெல்லோடோரஸ்: ஸிசிலியன் கம்பள வாணிகன்.
சீஸரின் சதிகாரர்கள்.
பாம்ப்பியின் அனுதாபிகள்.

ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்கள்.

அங்கம்:5 காட்சி:11

நேரம், இடம், கட்டம்: சீஸர் பட்டாபிசேக தினம். மார்ச் பதினைந்தாம் தேதி மாலை வேளை. ரோமாபுரியில் மக்கள் மன்றம் கூடிய சமயம் பாம்ப்பியின் சிலைக்குக்கீழ் படுகொலை செய்யப்பட்டுக் குருதியில் கிடக்கும் சீஸர் உடலை ஏந்திக் கொண்டு ஆண்டனி அங்காடி மேடைக்கு வருக்கிறார். மேடை முன்பு ரோமானியர் மரணச் சடங்கு உரைகளைக் கேட்க ஆர்வமோடு, ஆரவாரமோடு நிற்கிறார்கள்.

நாடகப் பாத்திரங்கள்: புரூட்டஸ், காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா மற்றும் சீஸர் கொலையில் ஈடுபட்ட சதிகாரர்கள், ஆண்டனி, ஆண்டனியின் தோழர்கள், ரோமானிய மக்கள்.

காட்சி அமைப்பு: அங்காடி மேடையில் புரூட்டஸ் முதல் பேச்சாளராய் நிற்கிறார். பக்கத்தில் காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா மற்றும் ஏனைய சதிகாரர் கையில் குருதியில் மூழ்க்கிய கைவாளை ஏந்தி விடுதலை
வீரர்களாய்க் காட்டிக் கொண்டு நிமிர்ந்து நிற்கிறார்கள்.

இரண்டாம் நபர்: பேசியது போதும், ஈதோ ஆண்டனி தொடர்ந்து பேசப் போகிறார்.

ஆண்டனி: [மேடையில் நின்று தொடர்கிறார்]

நேற்று சீஸரின் சொல் வலுத்து நின்றது
உலகின் முன்பு! ஈதோ கிடக்குது அவர் உடல்,
எளியோர் கூட நோக்கி மதிக்கா வண்ணம்!
என் மேலதி பதிகளே! நான்பழி வாங்கிடக்,
கலகம் விளைந்திட மக்கள் மனதை
உசுப்பி விடுவே னாகில், தவறி ழைப்பேன்
புரூட்டஸ், காஸ்ஸியஸ் ஆகி யோர்க்கு!
இருவரும் அறிவீர் மாபெரும் பண்பாளர்!
ஈதோ பாரீர்! சீஸரின் சாசனம்!
கையொப் பமோடு கண்டேன் அலமாரியில்!
ஆயினும் மன்னிப்பீர் என்னை,
அதைப் படித்திட விரும்பேன்!
அதனைக் கேட்டால் அனைவரும் சீஸரின்,
செத்த புண்களை முத்த மிடச் செல்வீர்!
புனிதக் குருதியில் துணிகளை மூழ்க்கிச்
சீஸரின் மயிரைச் சிறிது கொடுப்பீரென
நேசமாய்க் கேட்பீர் நினைவில் வைத்திட!
சாகும் சமயம் உமது உயில் எழுதி
சந்ததி களுக்கும் சொந்தப் படுத்துவீர்
செல்வப் படுத்தி!

முதல் நபர்: வாசிப்பாய் உடனே அந்த சாசனத்தை, ஆண்டனி!

இரண்டாம் நபர்: சாசனம்! சாசனம்! சீஸரின் சாசனம்! வாசிப்பாய் சீஸரின் சாசனம்!

ஆண்டனி: பொறுப்பீர் அன்பு நண்பர்களே, பொறுப்பீர்!
நான் அதைப் படிப்பது தவறு!
சீஸர் உம்மை நேசித்த பாங்கை
சரியன்று நீவீர் அறிவது!
மரமில்லை நீவீர்! கல்லில்லை நீவீர்!
மக்கள் நீவீர்! சீஸரின் உயிலை
மனிதராய்க் கேட்பின், உம்மைக்
கொதித்தெழச் செய்திடும், பித்தராய் ஆக்கிடும்!
தெரியா திருப்பதே உமக்கு நல்லது,
நீவீர் அவரது வாரிசு என்று!
அறிந்து கொண்டால் ஆவது என்ன?

முதல் நபர்: உயிலை வாசிப்பாய்! உடனே வாசிப்பாய்! சீஸர் உயிலை வாசி!

பலரது கூக்குரல்: சாசனம் வாசி! சீஸரின் சாசனம்! யாமதைக் கேட்போம்!

ஆண்டனி: அமைதி! அமைதி! பொறுப்பீர் ஒருகணம்!
எல்லை மீறிச் சென்று விட்டேன்!
குத்திக் கொன்ற உத்தமர்க் கெதிராய்
பேசி விட்டேன், பெரும்பிழை செய்தேன்!
சீஸரின் சாசனம் வாசிக்க மறுப்பேன்!
மன்னிப்பீர் என்னை, அன்புடை மக்காள்!

இரண்டாம் நபர்: துரோகிகள் அவர்! உத்தமரா அவர்?

அடுத்தவன்: கொலைப் பித்தர்கள் அவர்! குணவாளரா அவர்?

முதல் நபர்: முதலில் படியப்பா உயிலை! என்னதான் எழுதி வைத்திருக்கிறார் சீஸர்?

ஆண்டனி: அப்படியானால் கேட்பீர் அவரது உயிலை!
கட்டாய மாக வாசிக்க வைக்கிறீர்!
எனது சொற்படிச் செய்வீர் முதலில்!
வட்டமாய்ச் சவத்தைச் சுற்றி நிற்பீர்!
சாசனம் வடித்த சீஸரைக் காண்பீர்!
கீழிறங்கி நானவர் அருகில் வரவா?
அனுமதி தருவீரா?

முதல் நபர்: அனுமதி உண்டு, ஆண்டனி உனக்கு!

இரண்டாம் நபர்: சவத்தைச் சுற்றி வட்டமாய் நிற்பீர்!

முதல் நபர்: இடம் அளிப்பீர் ஆண்டனி நுழைய. [சீஸர் உடலைச் சுற்றி வட்டமாக நிற்கிறார்கள்]

ஆண்டனி:
கண்ணீர் இருந்தால் சொட்டுவீர் இக்கணம்!
இந்த அங்கியை யாவரும் அறிவீர்!
கோடை மாலையில் முதல்முறை அணிந்தார்!
நெர்வியை வென்றது போது கிடைத்தது.
காண்பீர், இங்குதான் குத்தி ஆழமாய்க்
கிழித்தான் ஆங்காரக் காஸ்ஸியஸ்!
இங்குதான் குத்தினான், வஞ்சகக் காஸ்கா!
இவ்விடம் குத்தினார் இனியன் புரூட்டஸ் !
கத்தியை புரூட்டஸ் எடுத்ததும் பீறிட்டு
கதவைத் திறந்தது போல விரைந்து
ரத்தம் வெளியே வந்ததைப் பாரீர்!
ஏனெனில் புரூட்டஸ் சீஸரின் நேசன்!
உத்தமன் புரூட்டர் குத்துதல் முறையா?
செப்பிடு நீதி! தீர்ப்பளி தெய்வமே!
எப்படி நேசித்தார் புரூட்டஸை சீஸர்?
அனைத்திலும் கொடூரக் குத்து தான்அது!
குணவான் சீஸர் புரூட்டஸ் குத்திடக் கண்டு
பலத்தை இழந்தார்! பலிக்கிரை யாகிப்
பாம்ப்பியின் சிலைக் காலடியில்
சீறிடும் குருதி
சிந்தச் சிந்த சீஸரும் விழுந்தார்!
எத்தகை வீழ்ச்சி என்னாட் டவர்காள்!
சீஸர் வீழ்ந்ததும் மோசச் சதிதான்
நேசர் நம்மேல் வீசிச் சென்றிட,
நீங்களும் நானும் ஏங்கியே வீழ்ந்தோம்!
அந்தோ நீவீர் இக்கணம் அழுகிறீர்!
பரிவுக் கண்ணீர் பெரிதாய்ப் பொழிகிறீர்
கரையுள அங்கியைக் கண்டே அழுகிறீர்!
கனிவு ஆத்மாக்கள் கதறும் ஈங்கே!
பாரீர் யாவரும் சீஸரின் பரிதாப நிலையை!
நாட்டுத் துரோகிகள் காட்டுத் தனமாய்க்
குத்திக், குத்தி கோரக் கொலையில்
கூறாக்கிய சீஸரின் உடலை!

[அங்கியை சீஸர் மேனியிலிருந்து நீக்கி வெளியே எறிகிறான்]

முதல்வன்: ஐயோ பாரிதாபம்! கண்கொளாக் காட்சி!

அடுத்தவன்: குணாளர் சீஸர்! உத்தமர் சீஸர்! துரோகி புரூட்டஸ்! துரோகி காஸ்கா, காஸ்ஸியஸ், சின்னா. அனைவரும் நாட்டுத் துரோகிகள்!

ஆண்டனி: அப்படிச் சொல்லாதீர்! அனைவரும் விடுதலைத் தீரர்கள்! முடியாட்சி ஒழித்தவர்! குடியாட்சியை நிலை நாட்டியவர்! அடிமையாகப் போகும் நம்மைப் பாதுகாத்த பிதாக்கள்! புரூட்டஸைப் போல் நானொரு பெரும் பேச்சாளன் அல்லன்! சாதா மனிதன்! சீஸரின் ஈமக் கிரியை செய்ய வந்திருக்கிறேன்.

சீஸரின் புண்கள் பேசா வாய்கள்!
எனக்காய் நீவீர் பேசிட வைப்பீர்!
நானொரு புரூட்டஸ் போல் பேச்சாளன் ஆனால்,
ஊனை உருக்கி உலகைக் கலக்கி சீஸரின்
ஊமைப் புண்களில் ஒவ்வொரு நாக்கை வைத்து
ரோமின் கற்களும் எழுந்து தாக்கிடப்
புரட்சியைச் செய்வேன், மரணப் பேச்சிலே!

எல்லோரும்: புரட்சி செய்கிறோம் ஆண்டனி! உன் பேச்சே போதும்! துரோகி புரூட்டஸ் ஆக வேண்டாம்!

முதல்வன்: முதலில் புரூட்டஸ் வீட்டுக்குத் தீ வைப்போம்! [தீப் பந்தத்தைத் தூக்குகிறான்]

இரண்டாம் நபர்: சீஸரைப் புண்படுத்திய புரூட்டஸ் வயிற்றைக் கிழிப்போம்! [வாளை உயர்த்துகிறான்]

மூன்றாம் நபர்: துரோகிகள் அத்தனை பேர் வீட்டிலும் தீ வைப்போம்! கொலைகாரருக்குக் கொள்ளி வைப்போம். [தீக் கம்பத்தைத் தூக்குகிறான்]

முதல்வன்: அமைதி, அமைதி, அமைதி! பண்பாளர் புரூட்டஸ் ஏதோ சொல்கிறார். என்ன வென்று கேட்போம்!

ஆண்டனி: நண்பர்களே! புரூட்டஸ் வீட்டில் தீ வைக்காதீர்! காஸ்ஸியஸ் வீட்டில் தீவைக்காதீர்! காஸ்கா வீட்டில் தீ வைக்காதீர்! சின்னா வீட்டில் தீ வைக்காதீர்! அத்தனை பேரும் உத்தமர்! செத்த
சீஸருக்காக உத்தமர் உயிரைப் பழிவாங்க வேண்டாம்! சீஸரின் சாசனத்தைக் கேட்க மறந்து விட்டீரே!

எல்லோரும்: ஆம், ஆம் மறந்து விட்டோம். வாசிப்பாய் ஆண்டனி சாசனத்தை. முதலில் அதைக் கேட்போம்.

முதல்வன்: ஆண்டனியின் பட்டியலைக் கேட்டால் யார் யாரை முதன் முதலில் தாக்க வேண்டும் என்று சொல்வது போல் அல்லவா உள்ளது.

ஆண்டனி: கேளுங்கள், சீஸரின் சாசனத்தை. வாசிக்கிறேன். ரோமா புரியில் ஒவ்வொரு நபருக்கும் 75 நாணயங்கள் அளிக்கப்படும்.

இரண்டாம் நபர்: [ஆனந்தம் அடைந்து] அடடா! ரோமானியர் மீது எத்தனை பரிவு, கனிவு, அன்பு!

ஆண்டனி: மேலும் கேளுங்கள்! சீஸரின் பூங்காக்கள், பூந்தோட்டங்கள் பொதுமக்களுக்கு விடுவிக்கப் படுகின்றன. அதுபோல் தைபர் நதிக்கரை அருகே உள்ள அவரது வயற்காட்டுக் குடில்கள், வயல்கள் பொது நபருக்குப் போகும். அவை எல்லாம் உங்களுக்கும், உங்கள் சந்ததியார்க்கும் சொந்தம். அவற்றை உமக்கு எழுதி வைத்த சீஸருக்கு வாழக் கொடுத்து வைக்க வில்லை! ஈதோ கிடக்குது அவர் சடலம்! சீஸரைப் போலொரு அதிபதி இனிமேல் ரோமா புரியில் பிறப்பாரா?

எல்லோரும்: இல்லை, இல்லை ஆண்டனி! சீஸர் போலொரு வேந்தரினிப் பிறக்கப் போவதில்லை!

முதல்வன்: வாரீர், சீஸர் உடலைத் தூக்குவீர்! அவரது உடலைப் புண்ணிய தளத்தில் வைத்துத் தகனம்
செய்வோம். துரோகிகள் வீட்டெரித்தத் தீயைக் கொண்டு வந்து கொள்ளி வைப்போம் அவருக்கு, அவரது பிள்ளைகளாய்!

எல்லாரும்: தீப்பந்தம் ஏந்தி புரூட்டஸ் இல்லத்துக்குச் செல்வோம். மரப் பலகணிகளை உடைத்துக் கொண்டு வாருங்கள்! மேஜை, நாற்காலி, கட்டில் எதுவாயினும் பரவாயில்லை! கொண்டு வாருங்கள்.

[சீஸர் சடலத்தைக் தூக்கிக் கொண்டு சிலர் விரைகிறார்கள். கத்திகளை, தீக் கம்பங்களை ஏந்திக் கொண்டு புரூட்டஸ் வீட்டுக்கு ஓடுகிறார் மற்றவர் எல்லோரும்.]

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (Jan 4, 2007)]

Series Navigation