எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:4, காட்சி:1 பாகம்:2)[முன்வாரத் தொடர்ச்சி]

This entry is part of 43 in the series 20061019_Issue

சி. ஜெயபாரதன், கனடா


எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா
(பேரங்க நாடகம்: அங்கம்:4, காட்சி:1 பாகம்:2)

[முன்வாரத் தொடர்ச்சி]

சி. ஜெயபாரதன், கனடா

புரூட்டஸ்!
வீழும் நோய் சீஸருக் கில்லை!
உனக்கும், எனக்கும் உள்ளது!
உத்தமன் காஸ்கா வுக்கும் உள்ளது!

காஸ்ஸியஸ்

குறுகிய நம்முலகு மீது காலைப் பரப்பி,
பெரும் பூதம்போல் நிற்கிறார் சீஸர்!
நீண்ட கால்களின் கீழ் நடந்து நம்,
பிரேதக் குழிகளை எட்டிப் பார்க்க வைப்பார்!
விதிக்கு மனிதர் சில வேளையில்
அதிபதியா யிருப்பார்!
அருமை புரூட்டஸ்! தவறு,
நாம் பிறக்கும் போதிருக்கும்
விண்கோளிட மில்லை!
நம் விளைவுக்கு நாம்தான் காரண கர்த்தா!

காஸ்ஸியஸ்

ஆண்டனி!
காஸ்ஸியஸைக் கண்டு அஞ்ச வில்லை நான்!
சீஸர் என்னும் பெயர் அச்சம் ஊட்டுகிறதா?
காஸ்ஸியஸ் போல் விரைவில் யாரை
ஒதுக்க வேண்டும் என்றறியேன்! காஸ்ஸியஸ்
மெத்தப் படித்தவன்! உற்று நோக்குவான்!
மனிதர் போக்கை நுணுக்கி ஆய்பவன்!
நாடகம் விரும்பான்! பாடலைக் கேளான்,
நகைப்பது அபூர்வம்! நகைப்பினும்
தன்னை ஏளனப் படுத்தும் தன்மைதான்!
அமைதியில் ஆறாது அவனது நெஞ்சு!
அத்தகையோர் ஆகவே அபாய மாந்தர்!

ஜூலியஸ் சீஸர்

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]


Fig. 1
Brutus, Cassius & Caska
In Discussion

கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!

முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.

நாடகப் பாத்திரங்கள்:

எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:

ஜூலியஸ் சீஸர்: ரோமானியப் போர்த் தளபதி [52 வயது]
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி [20 வயது]
டாலமி XIV: கிளியோபாத்ராவின் தனயன் (கணவன்), எகிப்தின் மன்னன் [15 வயது]
பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா [45 வயது]
கிளியோபாத்ராவின் மகன் [வயது ஒன்று]
போதினஸ்: டாலமியின் பாதுகாப்பாளன் [50 வயது]
தியோடோடஸ்: டாலமியின் ஆசிரியர் [45 வயது]
அக்கில்லாஸ்: டாலமியின் போர்த் தளபதி [53 வயது]
பிரிட்டானஸ்: சீசரின் அரசாங்கச் செயலாளர் [40 வயது]
ரூ·பியோ: சீஸரின் லெ·ப்டினன்ட் [40 வயது]
லூசியஸ் ஸெப்டிமியஸ்: ரோமானிய இராணுவ அதிகாரி [50 வயது]
அபெல்லோடோரஸ்: ஸிசிலியன் கம்பள வாணிகன்.
சீஸரின் சதிகாரர்கள்.
பாம்ப்பியின் அனுதாபிகள்.

ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்கள்.


Fig. 2
Caesar in Rome

அங்கம்:4 காட்சி:1

நேரம், இடம்: பகல் வேளை. செனட் மாளிகைக்கு அருகில் ரோமாபுரியின் பெருவீதி.

நாடகப் பாத்திரங்கள்: ஜூலியஸ் சீஸர், படை வீரர்கள், தெருவின் இருபுறமும் பொதுமக்கள்

காட்சி அமைப்பு: ரோமாபுரியில் ஒரு பொதுத்தளம். நகர மக்கள் ஆரவாரம் செய்ய, படையினர் வாத்தியங்கள் முழங்க ஜூலியஸ் சீஸர் கையை உயர்த்தி அசைத்துக் கொண்டு குதிரை வாகனத்தில் ரோமாபுரிக்குத் திரும்பி வருகிறார். ஒரு ஓரத்தில் பாம்ப்பியின் அனுதாபிகள் சீஸருக்கு எதிராக உரையாற்றி வருகிறார். சீஸரின் பகைவர், சில செனட்டர்கள் அடுத்தொரு பகுதியில் சீஸர் வரவேற்பைத் தடை செய்து வருகிறார். ஜோதிடன் ஒருவன் வரப் போகும் அபாயத்தை சீஸருக்கு எச்சரிக்கிறான். கல்பூரிணியா, ஆண்டனி, புரூடஸ், காஸ்ஸியஸ், காஸ்கா, ஒரு ஜோதிடன் கூட்டத்தில் காணப் படுகிறார். சீஸருக்கு மார்ச் 15 ஆம் நாள் வரப் போகும் அபாய எச்சரிக்கையை ஜோதிடன் உரக்கக் கூறுகிறான்! அவன் கனவு காண்பவன் என்று ஒதுக்கிறார் சீஸர்! அவருடைய நிழலில் ஒளிந்து கொண்டு சில சதிகாரர் ஓர் பயங்கர நிகழ்ச்சிக்கு விதையிடுகிறார்.

[முன்வாரத் தொடர்ச்சி]

காஸ்ஸியஸ்: மிக்க மகிழ்ச்சி புரூட்டஸ்! வலுவற்ற எனது சொற்கள் உங்கள் வைர நெஞ்சில் தீப்பொறி உண்டாக்கியதே போதும். ஆனால் அந்த தீப்பொறி அணைந்து விடாமல் பார்த்துக் கொள்வீர். பண்பு மிகும் புரூட்டஸ்! சீக்கிரம் முடிவு செய்வீர்! சீஸர் முடிசூடி ரோமின் வேந்தனாய் ஆசனத்தில் அமரக் கூடாது! நாம் அதைத் தடுக்க வேண்டும்! உடனே நிறுத்த வேண்டும்!

புரூட்டஸ்: ஆரவாரம் குறைந்து விட்டது, அரங்கத்தில். அதோ சீஸர் எழுந்து வெளியே வருகிறார்.

காஸ்ஸியஸ்: புரூட்டஸ்! கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை நாமறிய வேண்டும்! சீஸரை முந்திக் கொண்டு காஸ்கா வருகிறான்! அவனைப் பிடித்து நம்பக்கம் இழுக்க வேண்டும். கைதட்டலுக்கும், எதிரான கூச்சலுக்கும் என்ன காரணம் என்று தெரிய வேண்டும். காஸ்கா கையைப் பற்றி விக்கென இழுப்பீரா புரூட்டஸ்?

Fig. 3
Casar, Antony & Calpurnia

புரூட்டஸ்: நிச்சயம் செய்கிறேன். ஆனால் சீஸரை பார்த்தாயா? கோபக் கனல் அவர் கண்களில் சுடர்விட்டு எரிகிறது! பின்னால் வரும் சீஸரின் ஆட்டு மந்தை பொறுமை யிழந்து ஏமாந்த முகத்துடன் தொடர்கிறது! கல்பூர்ணியாவின் கன்னங்கள் ஏன் வெளுத்துப் போயுள்ளன? மாமேதை சிசெரோ ஆந்தை விழியில் பேதலித்துக் காணப் படுகிறார்! ரோமாபுரி மன்றத் தர்க்கத்தில், செனட்டர் அவரை குறுக்கிட்டு எதிர்க்கும் போது, அப்படித்தான் சிசெரோ ஆந்தை விழியில் விழித்துக் கொண்டு நிற்பார்!

காஸ்ஸியஸ்: அதைத்தான் ஏனென்று காஸ்காவிடம் கேட்கப் போகிறோம். அவனைத் துளைத்து நாம் வினவ வேண்டும்! அவன் வாயிலிருந்து வார்த்தைகளைக் கறப்பது மிகக் கடினம், புரூட்டஸ்!

[போட்டி முடிந்து பிறகு, ரோமானியர் சூழ சீஸர் கல்பூர்ணியாவுடன் வீதியில் நடக்கிறார். ஆண்டனி கூடவெ வருகிறார்]

ஜூலியஸ் சீஸர்: ஆண்டனி! ஆண்டனி!

ஆண்டனி: [சற்று பின்னிருந்து முன் தாவி] சீஸர், எதற்காக அழைத்தீர் என்னை?

ஜூலியஸ் சீஸர்: ஆண்டனி! என்னைச் சுற்றிலும் பருத்த உடலுடைய ரோமானியர்தான் நிற்க வேண்டும்! அதோ! அங்கே பார்! பசித்த பார்வையும், மெலிந்த மேனியும் கொண்ட காஸ்ஸியஸ்! கழுகுக் கண்களுடன் யாரையோ கொத்தித் தின்னக் காத்துக் கொண்டிருக்கிறான்! ஆழமாய்ச் சிந்திக்கிறான்! அதிகமாய் யோசிக்கிறான்! எதையும் குதர்க்கமாய் ஆராய்கிறான்! அங்குமிங்கும் அலை மோதுகிறான்! அத்தகைய மனிதர் அபாயகரமானவர்!

ஆண்டனி: அஞ்ச வேண்டாம் சீஸர், அவனுக்கு! பயங்கரவாதி யில்லை காஸ்ஸியஸ்! பண்பு மிக்க ரோமானியன் அவன்! பரிவு மிக்கவன் அவன்! பயப்பட வேண்டாம் அவனுக்கு!

ஜூலியஸ் சீஸர்: அவனிடம் பயமில்லை எனக்கு! ஆனால் அவனது மனக் கொந்தளிப்பால் ரோமாபுரிக்கு என்ன தீங்கு நேரப் போகிறது என்று தெரியவில்லை! பூமிக்குள் பதுங்கி யிருக்கும் எரிமலை போல் அவன் நெஞ்சத்தில் புகையும் தீப்பொறி என் கண்களுக்குத் தெரிகிறது! காஸ்ஸியஸ் நிரம்பப் படிக்கிறான்! ஆவேசமாய்த் தர்க்கம் புரிகிறான்! தன்னெஞ்சில் எரியும் தீயை அவன் பிறர் உள்ளத்திலும் ஏற்றுகிறான்! அமைதியாக அமர்ந்து அவன் நாடகம் பார்ப்பதில்லை! காதுக்கினிய கீதம் ஒன்றைக் கேட்பதில்லை! முகத்தில் புன்முறுவல் கிடையாது! சிரித்தாலும் அதிலும் தன்மீது ஓர் ஏளனம் கொக்கரிக்கும்! அம்மாதிரி நபரின் மனம் எப்போதும் கொந்தளிப்பில் குமுறும்! .. எனக்கு ஒன்று மட்டும் புரிய வில்லை! புரூட்டஸை நான் என் புதல்வனாய்க் கருதுகிறேன்! அவன் காஸ்ஸியஸ் அருகே ஏன் நிற்கிறான்? காஸ்ஸியஸ் கூறுவதைக் காது கொடுத்து ஏன் கேட்கிறான்? ஆண்டனி! நீ பேசும் போது எனது வலப்புறம் வந்துவிடு! என்னிடது காது செவிடு! .. வலப்புறம் வந்து காஸ்ஸியஸைப் பற்றி உன் கருத்தைச் சொல்! புனிதன் புரூட்டஸைப் பற்றி எனக்குத் தெரியும்.

Fig. 4
Caesar & Calpurnia in Rome

[ஜூலியஸ் சீஸர், கல்பூர்ணியா, ஆண்டனி அனைவரும் வெளியேறுகிறார். அச்சமயம் இடையில் செல்லும் காஸ்காவின் கையைப் பற்றி புரூட்டஸ் இழுக்கிறார்.]

காஸ்கா: [சற்று சீற்றமுடன்] புரூட்டஸ்! எதற்காக என்னை இழுத்தீர்? ஏதாவது என்னுடன் நீ பேச வேண்டுமா? [புரூட்டஸை நேராக நோக்கி அருகில் வருகிறான்]

புரூட்டஸ்: ஆமாம் காஸ்கா! அங்கே பெருங் கூச்சலில் என்ன நடந்தது? எனக்கும் காஸ்ஸியஸ¤க்கும்
எதுவும் தெரியாது. நடந்ததை எமக்குச் சொல்வாயா? ஏன் சீஸர் முகத்தில் புன்னகை யின்றிச் சிடுசிடு வென்று கடூரம் காணப் படுகிறது? கல்பூர்ணியா பேய் அறைந்தவள்போல் ஏன் காணப்படுகிறாள்?

காஸ்கா: ஏனென்றா கேட்கிறீர்? சீஸருக்கு முடிசூட ஓர் மகுடம் அளிக்கப் பட்டது! ஆனால் தலையில் வைத்துக் கொண்ட சீஸரோ அதைக் கையால் தடுத்து நிராகரித்தார்! உடனே கூட்டத்தார் கூச்சலிட்டனர்! எல்லார் முன்பாக மலடி என்று சீஸர் மறைமுகமாகக் காட்டியது, கல்பூர்ணியாவுக்கு அறவே பிடிக்க வில்லை! அதனால் கல்பூர்ணியா உம்மென்று முகத்தைக் காட்டிக் கொண்டு நடந்தாள்!

புரூட்டஸ்: இரண்டாவது கூச்சல் ஏன் கேட்டது?

காஸ்கா: அதுவும் அதே காரணத்துக்குத்தான்! மகுடம் சூடப் போன இரண்டாம் தடவையும் சீஸர் தடுத்தார்!

காஸ்ஸியஸ்: மூன்று முறை கூச்சல் கேட்டதே! கடைசி ஆரவாரம் எதற்கு?

காஸ்கா: அந்தக் கூச்சலும் அதற்குத்தான், புரூட்டஸ்!

காஸ்ஸியஸ்: என்ன? மூன்று முறையா சீஸருக்கு மகுடம் அளிக்கப் பட்டது? யாரளித்தார் மகுடத்தை?

காஸ்கா: ஆமாம் மெய்யாக மூன்று தரம் முடிசூடினர் சீஸருக்கு! மூன்று முறையும் முறுவலுடன் சீஸர் கிரீடத்தை ஏற்றுக் கொண்டார்! கூட்டத்தார் பூரித்துப் போய் கை தட்டினர்! அடுத்த சிறிது கணத்தில் சீஸர் மகுடத்தை நிராகரித்துக் கீழே வைத்தார்! உடனே கூட்டத்தார் அதை விரும்பாது கூச்சலிட்டார்! யார் துணிச்சலுடன் சீஸருக்கு அப்படி மகுடம் சூடுவார்? ஆண்டனிதான்! சீஸரின் தாசர் ஆண்டனி!

புரூட்டஸ்: அருமை நண்பனே! அந்த வேடிக்கையைச் சற்று விளக்கமாகக் கூறுவாயா?

Fig .5
Calpurnia helping Caesar

காஸ்கா: [கேலியாக] நான் தூக்கில் தொங்கலாம், அந்த கூத்தை விளக்குவதற்குப் பதிலாக! அது ஒரு நகைச்சுவை நாடகம்! விருப்பமுடன் ஆண்டனி சீஸருக்கு கிரீடம் வைப்பது! வேண்டாம், வேண்டாம் என்று சீஸரின் வாயில் வெறும் வார்த்தைகள்தான் வரும்! ஆனால் சீஸரின் கரங்கள் விரும்பி ஏற்றுக் கொள்ளும்! சீஸரின் வாய் உண்மை பேசுகிறா? அல்லது அவரது உடல் உண்மை பேசுகிறதா என்பதி அறிவது கடினம்! அது மெய்யாக ஓர் அரச கிரீடமில்லை! நாடகக் கிரீடம் மாதிரி தெரிந்தது! நடுத் தெருவில் யாரோ தயார் செய்தது! மூன்று முறை ஆண்டனி முடிமேல் சூடினார்! மூன்று தரமும் புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டார்! ஆனால் ஏனோ அவரது தலை நடுங்கும்! அடுத்த கணம் சீஸர் மகுடத்தை எடுத்து ஆண்டனி கரங்களிலே கொடுத்து விடுவார்! எனக்கு ஒன்றும் புரியவில்லை! ஆனால் மூன்றாம் தடவை மகுடத்தைக் கொடுத்த பிறகு கை கால்கள் ஆடிக், கண்கள் மூடி, தடாலெனச் சீஸர் மயக்கமுற்றுக் கீழே வீழ்ந்தார்!

காஸ்ஸியஸ்: [கண்களை அகல விரித்து] என்ன? முடிசூட்டு விழாவில், சீஸருக்குக் காக்காய் வலிப்பு வந்து விட்டதா? எல்லார் முன்பும் பரிதாபமாகக் கீழே வீழ்ந்தாரா? என்ன அவமானம் ரோமுக்கு? வயதாகி முதிர்ந்த கிழட்டு மரம் அப்படி எத்தனை தரம் விழப் போகிறதோ? சீஸர் தளபதியா? அல்லது கிழபதியா?

புரூட்டஸ்: ஆமாம்! சீஸருக்கு வீழும் நோய் உள்ளது உனக்குத் தெரியாதா?

காஸ்ஸியஸ்: [சினத்துடன்] சீஸருக்கு வீழும்நோய் கிடையாது புரூட்டஸ்! உனக்கும், எனக்கும், உத்தமன் காஸ்காவுக்கும்தான் உள்ளது, வீழும்நோய்! நிமிர்ந்து நோக்கும் எதேட்சை அதிபதி சீஸர்! நாமெல்லாம் கூன் விழுந்து அவருக்குப் பணிசெய்யும் அடிமைகள்!

காஸ்கா: நீ என்ன உட்பொருளில் பேசுகிறாய் என்று புரியவில்லை எனக்கு! சீஸர் எல்லார் முன்பும் தடலாலென விழுந்து மண்ணில் புரண்டார்! பற்களை நறநற வென்று அரைத்தார்! கல்பூர்ணியா மண்டி யிட்டு அமர்ந்து, மடிமேல் சீஸர் தலையை வைத்துக் கொண்டாள். ஆண்டனி தன் வாளுறையை சீஸர் வாயில் நுழைத்தார். நுரை தள்ளிய சீஸரின் வாய் பிறகு ஓய்ந்து உலர்ந்தது! என்ன பயங்கரமான காட்சி அது! காஸ்ஸியஸ்! நான் உத்தமன் அல்லன்!

புரூட்டஸ்: நினைவு பெற்று எழுந்ததும் சீஸர் என்ன சொன்னார்?

காஸ்கா: உயிர் பெற்றுக் கண்விழித்த சீஸரைத் தூக்கியவர் ஆண்டனியும், கல்பூர்ணியாவும்! சீஸரின் பேச்சு பரிதாபமாக இருந்தது. தழுதழுத்து குரலில் ஏதோ பிதற்றினார்! மயக்கமுற்ற தருவாயில் தான் ஏதாவது உளறி யிருந்தால், தன்னை மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டார்!

காஸ்ஸியஸ்: கண்ட விடமெல்லாம் கவிழ்ந்து வீழும் சீஸரா நமக்கு வேந்தர்? ரோமுக்கு ராஜா? வியாதியில் வேதனை அடையும் சீஸர் வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டும்! சீஸருக்கு வேறு ராஜ மகுடமா? தகுதியற்ற தளபதிக்கு மூன்று தரம், ஆண்டனி முடிசூட வேண்டுமா? அறிவு கெட்ட ஆண்டனி! ஆசை மிக்க சீஸர்! அடிமை ஆகப் போகிறவர் நாம்! ரோமானியர்!

Fig. 6
Brutus & Cassius in
Discussion

புரூட்டஸ்: மாமேதை சிசெரோ என்ன பேசினார்? சீஸர் மகுடம் ஏற்பதை ஒப்புக் கொண்டாரா?

காஸ்கா: அவர் கிரேக்க மொழியில் ஏதோ பேசினார்! கிரீடம் வைக்கப் போகும் போது, கை தட்டவில்லை சிசெரோ! கிரீட்டத்தை சீஸர் புறக்கணிக்கும் போது ஆரவாரம் செய்ய வில்லை! ஆதலால் சிசெரோ மனதில் என்ன நினைத்தார் என்பது தெரியாது எனக்கு!

காஸ்ஸியஸ்: காஸ்கா! என் வீட்டுக்கு இன்றிரவில் வருவாயா? என்னுடன் விருந்துண்ண வருவாயா? உன்னுடன் பேச வேண்டும் நான்.

காஸ்கா: உணவருந்த வருகிறேன்! உயிரோடிருந்தால் வருகிறேன்! உம்மில்ல உணவு அறுசுவையோடிருந்தால் வருவேன்!

காஸ்ஸியஸ்: நாங்கள் வீட்டில் காத்திருப்போம் உனக்கு.

காஸ்கா: போய் வருகிறேன், புரூட்டஸ்! காஸ்ஸியஸ்! [போகிறான்]

புரூட்டஸ்: என்ன கேலித்தனமாய்ப் பேசுகிறான், இந்த காஸ்கா! வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று மொட்டையாக அல்லவா பேசுகிறான் காஸ்கா! எந்தக் காட்டுப் பள்ளியில் படித்தவன் இந்த காஸ்கா! பண்பில்லாமல் உளறுகிறான்! உயிரோடிருந்தால் வருவானாம்! உணவு அறுசுவையாய் இருந்தால் வருவானாம்! கோமாளி மாதிரி அல்லவா பிதற்றுகிறான்!

காஸ்ஸியஸ்: காஸ்கா எப்போதும் அப்படித்தான் யாரையும், தன்னையும் ஏளனம் செய்வான். முக்கியமான ஒரு திட்டத்தைப் பற்றிப் பேச வேண்டும், புரூட்டஸ்! விருந்தில் நீங்களும் கலந்து கொள்வீரா?

புரூட்டஸ்: முக்கியமான திட்ட மென்றால் நீ என் வீட்டுக்கு வா! நான் பலரது முன்பாக ரகசியம் பேசுபவன் அல்லன். நீயும் நானும் என்னிலத்தில் பேசுவோம். எதை வேண்டுமானாலும் பேசலாம்! எத்தனை நேரமானாலும் பேசலாம்! நாளைக்கு வருகிறாயா? நானிப்போது போயாக வேண்டும். போய் வருகிறேன், காஸ்ஸியஸ்!

காஸ்ஸியஸ்: நல்லது புரூட்டஸ்! நாளை இரவில் வருவேன் உன்னிலத்துக்கு. நானும் காஸ்காவும் இன்றிரவு பேசுவோம்! முக்கியத் திட்டம் என்பதை விட ரகசியத் திட்டம் என்பது தகுதியான தலைப்பு! …. போய் வருவீர், புரூட்டஸ்! பேய் உலகைப் பற்றிச் சிந்திப்பீர்! பேய்கள் நம்மைத் தின்பதற்கு முன்பு, நாம் பேய்களை ஓட்ட வேண்டும்!

[புரூட்டஸ் வெளியேறுகிறார்]

காஸ்ஸியஸ்: நல்லது புரூட்டஸ்! நீ ஒரு பண்பாளன்! அரசியல் சந்தையில் மந்தை ஆடுகள் குழிக்குள் விழுப் போவதை அறியாதவன் நீ! ஆட்டிடையன் அரசனாக ஆவப் போவதையும் அறியாதவன் நீ! சீஸர் புரூட்டஸை மிகவும் நேசிக்கிறார்! புரூட்டஸ் சீஸர் மீது தீராத மதிப்பை வைத்துள்ளார். அந்த பிணைப்புச் சங்கிலியை உடைப்பது எப்படி? சீஸர் மீதுள்ள பாசத் தீயில் புரூட்டஸ் என்னை உருக்கி விடக் கூடாது! என் வைர நெஞ்சை மாற்றி விடக் கூடாது! பேராசைக்காரன் சீஸர்! அவரது இறக்கைகளை நறுக்கப் போவது உறுதி! அவரது கொடி ரோமாபுரியில் பறப்பப் போவதில்லை! எவர் தடுப்பினும் நில்லேன், அஞ்சேன்! சீஸர் ஆசனத்தில் அதிபதியாய் அமர்வதை ரோமாபுரி காணப் போவதில்லை!

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan October 18, 2006]

Series Navigation