எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:4, காட்சி:1)[முன்வாரத் தொடர்ச்சி]

This entry is part of 36 in the series 20061006_Issue

சி. ஜெயபாரதன், கனடா


பூரிப்பு அடைகிறேன் எனது
வலுவற்றச் சொற்கள் தீப்பற்ற வைத்தன,
புரூட்டஸ் நெஞ்சிலே!

காஸ்ஸியஸ்

பருத்த உடல் கொண்டோர் என் பக்கத்தில் வரட்டும்,
மென்மை மூளையும், ஓய்வும் எடுப்போர்!
அதோ பார் ஆண்டனி!
பசித்த பார்வையும், மெலிந்த மேனியும்
படைத்திட்ட காஸ்ஸியஸ்!
ஆழ்ந்து உளவிடும் அத்தகை மாந்தர்
அபாய மனிதர்கள்!

ஜூலியஸ் சீஸர்

என்ன சாதித்து விட்டார் சீஸர்?
எந்த வெற்றியோடு ரோமுக்கு வருகிறார்?
அறிவில்லா மூடர்களே! கல் நெஞ்சர்களே!
பாம்ப்பியை நினைவில்லையா?
பாம்ப்பியின் புதல்வரைக் கொன்று, சீஸர்
ரோமுக்கு மீள்கிறார்!
மரத்தின் மீதும், வீட்டின் மீதும் ஏறி
மாவீரர் பாம்ப்பி வந்ததைப் பார்த்தீர்!
இரதத்தில் அவர் சென்ற போது,
தைபர் நதி தாளமிட வில்லையா?
புத்தாடை அணிந்து சீஸரை வரவேற்பதா?
விடுமுறை என அறிவித்துப்
பாம்பியின் குருதியில் மிதித்த
பாவி மனிதர் சீஸரை வரவேற்பதா?
பாதை யெல்லாம் வண்ணமலர் வீசுவதா?
ஒழிந்து போவீர்! ஓடிச் செல்வீர்!
உமது வீட்டில்
மண்டி யிட்டு மன்னிப்புக் கேட்பீர்!

[மாருல்லஸ் -பாம்ப்பின் அனுதாபி]

ஓடுமின்! கூடுமின்! நல்லோரே!
நாடுமின் தைபர் நதிக்கரை!
கண்ணீர் விடுமின், நதியில் கலந்திட,
ஆறாய்ப் பெருகிச் சங்கமம் அடைய!
நிறுத்துமின் சீஸரை வரவேற்கும்
தெரு விழாக்களை!
சீஸர் சிலைக்குப் பொன்னாடையா?
நீக்குமின் சீக்கிரம்!
முளைத் தெழும் சீஸரின் சிறகைக்
கிழித்து எடுமின்!
கீழே விழட்டும் ஈசல்!
அடிமையாய் நாம் உழல
ஆகாயத்தில் எப்படிப் பறப்பார் சீஸர்?

[·பிளாவியஸ் -பாம்ப்பின் அனுதாபி]

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]
Fig. 1
Julius Caesar Arrives in Rome

கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!

முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.

நாடகப் பாத்திரங்கள்:
Fig 2
Caesar & Calpurnia

எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:

ஜூலியஸ் சீஸர்: ரோமானியப் போர்த் தளபதி [52 வயது]
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி [20 வயது]
டாலமி XIV: கிளியோபாத்ராவின் தனயன் (கணவன்), எகிப்தின் மன்னன் [15 வயது]
பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா [45 வயது]
கிளியோபாத்ராவின் மகன் [வயது ஒன்று]
போதினஸ்: டாலமியின் பாதுகாப்பாளன் [50 வயது]
தியோடோடஸ்: டாலமியின் ஆசிரியர் [45 வயது]
அக்கில்லாஸ்: டாலமியின் போர்த் தளபதி [53 வயது]
பிரிட்டானஸ்: சீசரின் அரசாங்கச் செயலாளர் [40 வயது]
ரூ·பியோ: சீஸரின் லெ·ப்டினன்ட் [40 வயது]
லூசியஸ் ஸெப்டிமியஸ்: ரோமானிய இராணுவ அதிகாரி [50 வயது]
அபெல்லோடோரஸ்: ஸிசிலியன் கம்பள வாணிகன்.
சீஸரின் சதிகாரர்கள்.
பாம்ப்பியின் அனுதாபிகள்.

ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்கள்.

அங்கம்:4 காட்சி:1

அங்கம்:4 காட்சி:1

நேரம், இடம்: பகல் வேளை. செனட் மாளிகைக்கு அருகில் ரோமாபுரியின் பெருவீதி.

நாடகப் பாத்திரங்கள்: ஜூலியஸ் சீஸர், படை வீரர்கள், தெருவின் இருபுறமும் வரவேற்கும் பொதுமக்கள்

காட்சி அமைப்பு: ரோமாபுரியில் ஒரு பொதுத்தளம். நகர மக்கள் ஆரவாரம் செய்ய, படையினர் வாத்தியங்கள் முழங்க ஜூலியஸ் சீஸர் கையை உயர்த்தி அசைத்துக் கொண்டு குதிரை வாகனத்தில் ரோமாபுரிக்குத் திரும்பி வருகிறார். ஒரு ஓரத்தில் பாம்ப்பியின் அனுதாபிகள் சீஸருக்கு எதிராக உரையாற்றி விழாக்களைத் தடை செய்து வருகிறார்கள். சீஸரின் பகைவர் மற்றும் செனட்டர் சிலர் அடுத்தொரு பகுதியில் சீஸர் வரவேற்பைத் தடை செய்து வருகிறார்கள். ஜோதிடன் ஒருவன் வரப் போகும் அபாயத்தை சீஸருக்கு எச்சரிக்கை செய்கிறான். கல்பூரினியா, ஆண்டனி, புரூடஸ், காஸ்ஸியஸ், காஸ்கா ஆகியோர் கூட்டத்தில் காணப் படுகிறார். சீஸர் இரதத்திலிருந்து கீழிறங்கி கல்பூர்ணியாவிடம் வருகிறார்.

Fig 3
Caesar, Antony, Calpurnia

ஜூலியஸ் சீஸர்: [கனிவுடன், கைகளை நீட்டி] கண்ணே! கல்பூர்ணியா! உன்னைக் காண வந்து விட்டேன். உன்னைப் பிரிந்து எத்தனை ஆண்டுகள் கடந்து விட்டன? எனக்கே மறந்து விட்டது.

கல்பூர்ணியா: [சீஸரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, கண்ணீர் பெருக] என்னை மறந்து எத்தனை ஆண்டுகள் ஆயின என்பது எப்படி நினைவில் இருக்கும், உங்களுக்கு? நான் புறக்கணிக்கப் பட்ட மாது! உங்களுக்கோ அடுத்தடுத்துப் பல போர்கள்! அடுத்தடுத்து பல நாடுகள்! அடுத்தடுத்துப் பல மாதர்கள்! என்னை எப்படி நினைவிருக்கும் உங்களுக்கு? நாளும், கிழமையும் நினைவில் தங்காத உங்களுக்கு எப்படி மாதம், வருடம் ஞாபகம் இருக்கும்? மெலிந்து போன என் உடம்பு கூட உங்களுக்குத் தெரிவில்லை!
நீங்களோ தலை வழுக்கையாகி வயதான வாலிபராய்க் காணப்படுகிறீர்!

ஜூலியஸ் சீஸர்: வயதான வாலிபரா நான்? நல்ல கணிப்பு, கல்பூர்ணியா! .. சரி சரி! பார் ஆடவர் நிர்வாணப் பந்தயம் தொடங்குகிறது! அதோ ஆண்டனி ஓடிவரும் பாதையில் நில்! … ஆண்டனி! என்னைப் பார்!

ஆண்டனி: அழைத்தீரா என் மதிப்புக்குரிய அதிபதி அவர்களே?

ஜூலியஸ் சீஸர்: ஆமாம் ஆண்டனி! ஓடிவரும் வேகத்தில் உனது கை, கல்பூர்ணியா மீது படட்டும்! நம் மூதாதையரின் பண்டை நடப்புப்படி, நிர்வாண ஆடவர் புனித விரட்டலின் போது மலடியர் மீது கரங்கள் பட்டால், அவரது மலடு நீங்கிச் சாபம் ஒழிந்து போய்விடும்!

கல்பூர்ணியா: [உரத்த குரலில் சினத்துடன்] பல்லாண்டுகளுக்குப் பிறகும் என்னை மலடியெனப் பழி சுமத்தும் உங்கள் பழக்கம் இன்னும் போக வில்லையே! ரோமானியர் முன்பாக என்னை மீண்டும் மலடி என்று முரசடிக்கலாமா? [அழுகிறாள்]. .. ஆண்டனி! என்னருகில் வராதே! உன் கையால் என்னைத் தொடாதே! என் மலட்டுத் தன்மை உன் முரட்டுக் கரங்கள் படுவதால் நீங்காது! போதும் உமது மூட நம்பிக்கை! [சீஸரிடமிருந்து விலகிக் கொள்கிறாள்]

ஆண்டனி: [முறுவலுடன்] என் அதிபதி சீஸர் சொல்லி விட்டார். அதை நிறைவேற்றுவது என் பணி!
Fig. 4
Caesar & Calpurnia in Rome

[கூட்டத்திலிருந்து சீஸர், சீஸர் என்றோர் உரத்த குரல் கேட்கிறது]

ஜூலியஸ் சீஸர்: [காதைத் திருப்பி, கவனமுடன்] யாரென் பெயரைச் சொல்லி அழைப்பது?

காஸ்கா: நிசப்தம்! அமைதி! யாரோ அழைக்கிறார், சீஸரை? அமைதி! அமைதி!

ஜூலியஸ் சீஸர்: கூட்டத்தில் யாரென்னைக் கூப்பிடுகிறார்? குரலில் ஏதோ சோகத் தொனி ஒலிக்கிறது! யாரங்கே? அவரை என் முன்னே அழைத்து வா!

ஜோதிடன்: எச்சரிக்கை உமக்கு! வருகிற மார்ச் 15 ஆம் தேதி!

ஜூலியஸ் சீஸர்: நீ என்ன சொல்கிறாய்? சரியாகக் காதில் விழவில்லை! மீண்டும் ஒருமுறை சொல்!

ஜோதிடன்: கவனம், வருகிற மார்ச் 15 ஆம் தேதி! எச்சரிக்கை உமக்கு!

ஜூலியஸ் சீஸர்: [புறக்கணிப்புடன்] அவன் கனவு காண்பவன்! ஒதுக்கித் தள்ளுங்கள் அவனை!

காஸ்ஸியஸ்: புரூட்டஸ்! மலடிப் பெண்களை நிர்வாண வாலிபர் அடிக்கும் வேடிக்கையை நீங்கள் பார்க்கப் போக வில்லையா?

புரூட்டஸ்: அந்தக் கோமாளித்தனத்தை நான் பார்க்கப் போவதில்லை! எனக்கு வேலைப் பளு மிகுதி. சீஸரை நான் வரவேற்று நேராக உரையாட வேண்டும்.

காஸ்ஸியஸ்: நீங்கள் முன்போல் இல்லை இப்போது! உங்களிடமிருந்த பரிவும், பாசமும் தற்போது மைத்துனன் என்மீதில்லை! நீங்கள் ஒதுங்கிச் செல்வதை நான் பார்த்தேன். என்னைப் புறக்கணிக்கக் காரணம் என்ன, புரூட்டஸ்?
Fig. 5
Soothsayer in the Crowd


புரூட்டஸ்: காஸ்ஸியஸ்! நீ ஒரு பயங்கரவாதி! என்னை நீ அண்டுவதே ஏதோ ஒரு சுயநலத் தேவைக்கு! எனக்குத் தெரியும் அது! ஆனால் உன் உள்மனதை அறிவது கடினம். என்ன வினை புரிய என்னை வசப்படுத்துகிறாய்?

காஸ்ஸியஸ்: புரூட்டஸ், பேரதிபதி சீஸர் ரோமாபுரிக்கு வந்திருப்பது ஏனென்று தெரியுமா? ரோம் ஏகாதிபத்தியத்துக்குச் சக்கரவர்த்தியாக! நம்மை யெல்லாம் அடிமையாக்க! ரோமை ஏகாதிபத்திய நாடாக்க!

[அப்போது சீஸரைச் சுற்றிலும் நிற்கும் கூட்டத்தின் ஆரவாரம் கேட்கிறது]

புரூட்டஸ்: [சட்டெனத் திரும்பி] என்ன கூக்குரல் அது? ரோமானியர் சீஸரை வேந்தராக்கத் தேர்ந்தெடுக்கிறார் என்று ஓர் அச்சம் எழுகிறது எனக்கு.

காஸ்ஸியஸ்: அப்படியானால் அதை நாம் தடுக்க வேண்டும் புரூட்டஸ்! சீஸர் வேந்தராவது உங்களுக்கும் பிடிக்க வில்லை என்று தெரிகிறது எனக்கு! என்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது! எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ராவைத் திருமணம் புரிந்தபின், சீஸர் ·பாரோ மன்னர் பரம்பரையாகி விட்டார்! ·பாரோ மன்னர் போல் கடவுள்களில் ஒருவராகி விட்டார்! மேலும் ·பாரோ பரம்பரையில் ஓர் ஆண்மகவைப் பெற்றுக் கொண்டு விட்டார்! தற்போது ரோமாபுரியில் அவரைக் கடவுளாகவே வணங்கி வருகிறார்! நான் குனித்து வளைந்து அந்த சீஸருக்கு வணக்கம் செய்ய வேண்டும்! சீஸர் நீட்டி நிமிர்ந்து தலை அசைத்து என்னை ஆசீர்வதிப்பார்! எனக்குத் தெரியும் அவரது நோயைப் பற்றி! ஸ்பெயினில் போரிடும் போது காக்கா வலிப்பு வந்து வாயில் நுரை தள்ளி, அந்த கடவுள் தரையில் வீழ்ந்தார்! துடித்தார்! புரண்டார்! மனிதர் மடிந்தாரா? அதுதான் கிடையாது. விழுந்தும், விழாமலும், மடிந்தும் மாளாமலும் வாழும் நோயாளி சீஸர். நோயாளி சீஸரா நமக்கு தேவன்? நமக்கு வேந்தன்?

[மறுபடியும் கூட்டத்தின் ஆரவாரமும், கைதட்டலும் கேட்கின்றன]
Fig. 6
Brutus & Cassius in
Discussions

புரூட்டஸ்: மீண்டும் ஆரவாரம், கைதட்டல்! சீஸருக்குப் புதுப்புது விருதுகள் கிடைக்கின்றன என்று நினைக்கிறேன். பாராட்டுகிறேன் அவரை! நேசிக்கிறேன் அவரை!

காஸ்ஸியஸ்: பரிசுக்கும், பதவிக்கும் உயிரைக் கொடுப்பவர் சீஸர்! ரோமாபுரிக்கு ஏகாந்த வேந்தனாவதே அவரது குறிக்கோள்! சீஸரின் பிரதமச் சீடர் ஆண்டனி அதைத்தான் செய்வார்! ஆண்டனியின் உன்னத அதிபதி சீஸர் அதைத்தான் நாடி வருகிறார்! புரூட்டஸ்! அதை நான் தடுப்பேன்! நிச்சயம் தடுப்பேன்! அதை நீங்களும் தடுப்பீரா? சீஸர் என்னும் பூத மனிதர் நம்மை எல்லாம் மிதிக்க இடம் கொடுக்கலாமா?

புரூட்டஸ்: மெய்யாக நீ என்னை நேசிப்பது தெரிகிறது எனக்கு! மெய்யாக என் உதவியை நீ நாடுவது புரிகிறது எனக்கு! நீ சொல்லியதில் உண்மை இருக்கிறது! சீஸரின் போக்கு வரவேற்கத் தக்கதாக இல்லை! ஆனாலும் அவரை நான் நேசிக்கிறேன்! கிரேக்க வீரர் மகா அலெக்ஸாண்டருக்கு நிகராக ரோமாபுரியில் தோன்றியவர் சீஸர்! அவருக்கு இணை அவரே! அவரை ரோமாபுரியின் அதிபதியாகப் பெற்றதில் நான் பெருமைப் படுகிறேன். உனது கருத்துக்களைப் பற்றி நான் சிந்திக்க வேண்டும். உனது கூற்றுக்களை ஒருவர் ஒதுக்கவும் முடியாது! அதுபோல் ஒப்புக் கொள்ளவும் முடியாது! எனக்கு அவகாசம் தேவை!

காஸ்ஸியஸ்: மிக்க மகிழ்ச்சி புரூட்டஸ்! எனது வலுவற்ற சொற்கள் உங்கள் வைர நெஞ்சில் தீப்பொறி உண்டாக்கியதே போதும். ஆனால் அந்த தீப்பொறி அணைந்து விடாமல் பார்த்துக் கொள்வீர். பண்பு மிகும் புரூட்டஸ்! சீக்கிரம் முடிவு செய்யுங்கள்! சீஸர் முடிசூடி ரோமின் வேந்தனாய் ஆசனத்தில் அமரக் கூடாது! நாம் அதைத் தடுக்க வேண்டும்! உடனே நிறுத்த வேண்டும்! நாமெல்லாம் அதற்கு உறுதிமொழி எடுக்க வேண்டும்.
Fig. 7
The Lonely Cleopatra in
Egypt

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan October 3, 2006]

Series Navigation