இரவில் கனவில் வானவில் – 2

This entry is part [part not set] of 35 in the series 20060922_Issue

எஸ். ஷங்கரநாராயணன்



அலுவலகத்தில் எல்லாரும் முதலாளி மகள் திருமணத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்கி யிருந்தார்கள். தினசரி முதலாளி அலுவலகத்தில் இருந்தபடியே கல்யாண ஏற்பாடுகளில் மட்டுமே கவனம் செலுத்தியவாறிருந்தார். தொலைபேசி அழைப்புகளில் பரபரப்பாயிருந்தார்.
கல்யாணம் பயங்கர தடபுடலாய் இருந்தது.
பார்க்கவே திகட்டியது அவளுக்கு. என்ன வெளிச்சம் அங்கே. பாலுக்குள் குதித்தாற்போல அவளுக்கு ஒரே திகைப்பு. பட்டுப்புடவைகள், கோட்டு சூட்டுகள், இதற்குப் போட்டியாக கதர் என்று வெள்ளை வெளேர் உடைகள். வைரம். பவுடர் பூச்சு. உதட்டுச் சாயம். கொண்டைகளில் ஆயிரம் ரகம். தங்கஃப்ரேம் கண்ணாடிகள்.
ஒரே சத்தம். சத்தக்காடு. சிரிப்பு. உற்சாகம் ஓரு ஆவேசத்தோடு இங்குமங்கும் நடமாடினாற் போலிருந்தது. அவர்கள் வீட்டில் இரண்டே பட்டுப்புடவைகள் இருந்தன. அவற்றில் ஒன்று பழையது. அம்மா அணிந்து கொண்டு வெளியே கல்யாணம் கார்த்திகை என்று போய்வர.
அது பழசாய்ப் போய்விட்டதில் குழந்தைகளின் நச்சரிப்பு தாளாமல் அப்பா இன்னொரு புடவை வாங்க நேர்ந்தது. ஆகவே எந்த நல்ல காரியத்துக்கு வெளியிறங்கினாலும் அந்த மூன்று பெண்களில் ஒருத்தி மட்டுமே கலந்து கொள்ள வாய்த்தது. இதுகுறித்து மற்ற இரு பெண்களுக்கும் ஆதங்கம்.
வேறு உடைகள் இருந்தால் அந்தப் பெண்களும் தன்கூட வந்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டாள்.
எப்பவும் தங்கைகளுக்காக விட்டுக் கொடுத்துப் பழகியவளுக்கு இத்தனை பெரிய கல்யாணத்திற்கு அவர்களை விட்டுவிட்டுத் தான் மாத்திரம் வர நேர்ந்ததில் உள்ளூற வருத்தம்தான்.
அலுவலகத்தில் அத்தனை பேரும் கலந்து கொள்கையில் அவளால் மட்டும் எப்படிப் போகாமல் இருக்க முடியும்?
மொய் என்று ஆளுக்கு நூறு ரூபாய் எழுதினார்கள்.
அந்தப் பட்டியல் பார்க்கவே அவளுக்குத் திகைப்பு. காலையில் அம்மா “வெண்ணெய் வாங்கிண்டு வா வரும்போது” என்று தந்தனுப்பிய பணம் விநாடியில் பறித்துக் கொள்ளப் பட்டு விட்டது.
அன்றைக்கு அலுவலகத்துக்கு விடுமுறை வேறு. அலுவலகத்தில் எல்லாரும் அங்கே ஆஜர். முதலாளி பார்வையில் நல்லபேர் எடுக்க அருமையான வாய்ப்பு. ஆண்கள் சுத்து வேலைகள் கவனிக்கலாம். பெண்களோவெனில் வரவேற்பு, மற்றும் அலுவலகத் தொடர்பு கொண்ட நபர்களை எதிர்கொண்டு அடையாளப் படுத்தி மணமக்களுக்கு அறிமுகப் படுத்துதல், சாப்பிட அழைத்தல் என்று தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்…
கல்யாணத்தின் பிரம்மாண்டத்தைப் பார்த்து மிரண்டாள் ஜானகி. இத்தனை செலவழிக்க முதலாளிக்குப் பணமிருக்கிறது. ஊழியர்கள் சம்பளம் கூடக்கேட்டால் மட்டும் முகமே சுருங்கி விகாரமாகி விடுகிறது….
எல்லாரும் வேலைகளைத் தாங்களே புதிது புதிதாய்க் கண்டுபிடித்து பரபரப்பாய் இருப்பவர்கள் போல் நடமாடினார்கள். சிரித்துக் கொண்டே யிருந்தார்கள். எல்லாரிடமும் எப்படியோ ஒரு சகஜபாவனை இருந்தது.
அவளுக்கு அது ஆச்சரியமாய் இருந்தது.
அவர்கள் தங்கள் வீட்டுக் கல்யாணம் போலவே வளைய வந்தாற் போலவும், உற்சாகப் பட்டாற் போலவும், அங்கே சகஜப் பட்டிருந்தார்கள்.
அவளுக்குக் கூச்சமாய் இருந்தது. தான் மாத்திரம் தனித்து விடப்பட்ட அந்தத் திகைப்பை உதற முடியவில்லை. அவள் சிரிக்க முயன்றால் கூட உதடு லேசாய் நடுங்கியது.
அவளது பக்கத்து நாற்காலிக்காரி சுலோச்சனா… வரவேற்பில் நின்றபடி, உள்ளே நுழைகிற ஆட்களுக்குப் பன்னீர் தெளித்துக் கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்ததும் “ஏய், ஜானகி…. வா வா…. நம்மாளுகள்லா இப்பதான் வர்றதா?” என்று கையைப் பிடித்து வரவேற்றாள்.
பதில் எதுவும் சொல்லாமல் சந்தனம் எடுத்துக் கழுத்தில் பூசிக்கொண்டு உள்ளே வந்தாள் ஜானகி.
அத்தனை வண்ணப்பேரலையில், தனது எளிய புடவை தனக்கே என்னமோ போலிருந்தது.
பேச ஆட்களும் இல்லை. இருந்தாலும் என்ன பேசிவிட முடியும் என்றிருந்தது. அந்தமட்டுக்கு சுலோச்சனா பரவாயில்லை. எங்கிருந்தோ பூ கொண்டு வந்து கொடுத்தாள். அப்போதுதான் இவளுக்கு, அடாடா, வரும்போது வழியில் ஒருமுழம் பூ வாங்கி வைத்துக் கொண்டு வந்திருக்கலாம் என்று பட்டது.
சம்பிரதாய சாஸ்திரப்படி எல்லாம் விமரிசையாய் நடந்து கொண்டிருந்தன. கல்யாண வேடிக்கைகளில் முதலாளி பார்வையில் படும்படியாய் உற்சாகமாய்க் கலந்து கொள்ள சலோச்சனா ஆர்வப்பட்டதை கவனித்தாள் ஜானகி.
அவள் “வா மணமக்கள் மாலை மாத்திக்கறாங்க” என்று கண் நிறையச் சிரிப்புடன் அவளையும் கூடப் பார்க்க வரும்படி கையைப் பிடித்து இழுத்துப் போனாள்.
வேணாம், என்று தோன்றினாலும், இங்கே தனியே கொட்டு கொட்டென்று உட்கார்ந்திருப்பதற்கு, அங்கேயாவது போய் சுலோச்சனாவோடு நிற்பது மேல் என்று கூச்சத்துடன் எழுந்து கொண்டாள்.
இருக்கிற வெளிச்சம் போதாது என்று ஜெயிலின் செர்ச்ଭலைட் மாதிரி வீடியோ வெளிச்சம் வேறு அவ்வப்போது கண்ணைக் கூசச் செய்தது.
மாப்பிள்ளை பார்த்தாலே பெரிய இடம் என்று தெரிகிற அளவில் களையான முகம். மீசையின்றி பச்சைப் பசேலென்று தினசரி ஷேவெடுத்த முகம்.
பெண்ணுக்குக் காலையிலேயே மேக்-அப் பண்ணிவிட என்று பிரத்யேகமாய் ஆள் வந்திருந்தார்கள் போலிருக்கிறது. புருவத்திற்கு மேல் வில்போல சிவப்பு வெள்ளை, சிவப்பு வெள்ளை என்று மாற்றி மாற்றிப் புள்ளிகள் எடுப்பாய் இருந்தன அவளுக்கு.
மாலை மாற்றுதல் போன்ற வைபவங்களுக்கு அங்கே ஒரே பரபரப்பு. சிரிப்புச் சத்தம் அவ்வப்போது ஒரு அலைபோல ஓங்கரித்து அடங்கியது.
யாரோ பாடினார்கள்.
திடீரென்று சுலோச்சனா அவளை உலுக்கி “ஏண்டி நீ ஒரு பாட்டு பாடு” என்றாள்.
எதிர்பார்க்கவே இல்லை. திடுமென்று தாக்கப் பட்டாற் போல திகைப்பாய்ப் போயிற்று.
முதலாளி வாய் வெற்றிலையுடன் குறுஞ்சிரிப்புடன் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார். தன் ஜாதிக்காரி என்று அவருக்கு எப்பவுமே ஜானகியைப் பிடிக்கும். ஜானகி குடும்பத்தோடு வரவேண்டும், என்று அவர் கூப்பிட்டது மனப்பூர்வமானதுதான் என்று ஜானகிக்குத் தெரியும்.
சுலோச்சனா முதலாளியைப் பார்த்து “நம்ப ஜானகி ரொம்ப சூப்பரா பாடுவா சார்” என்றாள் சிரிப்புடன். முதலாளி வெற்றிலை சிவந்த உதடு விரியத் தலையாட்டினார்.
ஜானகி தான் பாடுவது தவிர வேறு மார்க்கமில்லை என நிலைமை ஆகிவிட்டதை உணர்ந்தாள். நிலைமை அவள் கட்டுக்குள் இல்லை. அட பாடினால்தான் என்ன, என்றும் உள்ளே ஒரு ஆசை அவளுக்கு இல்லாமல் இல்லை.
ஜானகி “ஸ்ரீ சக்ரராஜ….” என்று ஆரம்பித்தாள்.
அவள் பாடுமுன் கிடைத்த அமைதியில் மாப்பிள்ளையே அவளை கவனிக்க ஆரம்பித்திருந்தார்.
முதலில் வெட்கமாய் இருந்தாலும் ஜானகி சுதாரித்துக் கொண்டாள். அது அவளுக்கு மிகவும் பிடித்த பாடல். ரசித்துப் பாடுவாள்.
அவள் பாடுவாள், என்று சுலோச்சனா சொன்னாலும் இத்தனை ஜோராய் எடுப்பாள் என்பதை முதலாளியே எதிர்பார்க்கவில்லை.
கல்யாணத்திற்கே களையாய் அமைந்து விட்டது அந்தப் பாடல்.
அதுவரை சளசளவென்று பேசிக் கொண்டிருந்தவர்கள் கூட பேச்சை நிறுத்தி அவளை கவனிக்க நேர்ந்து விட்டது. அறையெங்கும் ஊதுபத்திப் புகை போல நிறைந்தது பாடலின் மணம்.
தனக்கே திருப்தி தருகிறாற் போலப் பாடினாள் ஜானகி.
பாடி முடித்ததும் யாரோ ஒரு மாமி வந்து ரொம்பப் பழகியவள் போல அவள் கையைப் பிடித்துக் கொண்டாள். “யார்ட்டக் கத்துக்கறே நீ?” என்று புன்னகையுடன் கேட்டாள்.
“எல்லாம் கேள்வி ஞானம்தான் மாமி” என்றாள் ஜானகி கூச்சத்துடன்.
திடீரென்று தான் அந்தக் கூட்டத்தில் முக்கியஸ்தராக, பிரபலஸ்தராக ஆகிவிட்டதை ஜானகி உணர்ந்தாள்.
ஒரு விதத்தில் கூச்சமாய் இருந்தாலும், அந்தமட்டுக்கு வெறிச்சென்று மனிதக் கடலின் நடுவே, தனிப் பாறையாய் உறைந்து கிடப்பதற்கு இது தேவலை, என்றுதான் அப்போது பட்டது.
கூச்சமாய்த்தான் இருக்கிறது, பரவாயில்லை. அது பெண்ணோடு கூடப் பிறந்த விஷயம். அது தனியே அசட்டுத்தனம்போலத் தெரியாதல்லவா?
முதலாளி முன்னால் தன் வருகையும், பங்களிப்பும் சரியாய்ப் பதிவாகி யிருக்கும் என்ற திருப்தியும் அவளுக்கு ஏற்பட்டது. தயக்கமும் சங்கடமான உள்ப்புழுக்கமும் சற்று அடங்கி அவளுக்குள்ளும் ஆசுவாசமாய் இருந்தது. உள்ளூற ஆசை அவளுக்கு – யாராவது இன்னொரு பாடல் பாடச்சொல்ல மாட்டார்களா என்று.
இப்படி நினைக்கையிலேயே தனக்குள் வெட்கம் பூத்து முகம் சிவந்தது.
எப்படியும் இந்தக் காலங்களில், கல்யாணங்களில் முகூர்த்த நேரத்திலும், மற்றும் சம்பிரதாயங்களில் இடைப்பட்ட மௌன நிமிடங்களிலும் பாட ஆட்கள் குறைந்துதான் விட்டார்கள்.
யாராவது பாடினால் நன்றாய்த்தான் இருக்கிறது. அப்போது கல்யாணங்கள் களைகட்டி விடுகின்றன. அது தேவையாயும் இருக்கிறது.
இன்னொரு பாடல் தேவை ஏற்பட்டபோது முதலாளியே “எங்க நம்ப ஜானகி? கூப்பிடுங்கோ அவளை….” என்று தேட ஆரம்பித்தது அவளுக்கே வேடிக்கையாய் இருந்தது.
வேறு எப்படியும் அங்கே இத்தனை சிறப்பாய் அறியப்பட முடியாதுதான்….
ஜானகிக்கும் அந்த உற்சாகம் தொற்றிக் கொண்டது. அவள் உடுத்தி யிருந்த பழைய மங்கிய புடவையோ, எளிய அலங்காரமோ ஒரு பொருட்டே அல்ல இப்போது.
அங்கே குழுமி யிருந்த இதர ஜனங்களோடு அவளுக்கும் ஒரு ஸ்தானம் மரியாதை ஸதாபிக்கப் பட்டுவிட்டது.
உற்சாகமாய் ஜானகி பாட சபை நிறைந்தது அவள் குரலால்.
“பொன்னூஞ்சலாடினார்….” என்று எடுத்தாள் ஜானகி. அவள் எடுக்க எடுக்க நாதசுரக்காரன் இசைப்பாட்டு பின்பாட்டு வாசிக்கிறான். நிறுத்தி ஒரு அலை ஓய இன்னொரு அலை போல.
அவளுக்கு அந்த-ஜானகி பாடும் “சிங்கார வேலனே தேவா….” ஞாபகம் வந்தது.
தன்னை ஒருஜோடி வாலிபக் கண்கள் ஆவலோடு கவனிப்பதை சட்டென்று உணர்ந்தாள் அவள்.
அது தெரிந்த விநாடி உள்ளெங்கும் பரவசமாய் ஒரு வெப்பம்…..
ஆ அந்த முகம்தான் எத்தனை வசீகரமானது. பெரிய இடத்துப் பிள்ளைதான். நல்ல நெடிதுயர்ந்த உருவம். கோட்-சூட் அணிந்து தோரணையாய் வந்திருந்தான்.
சாதாரணமாகவே சிரிக்கிறாற் போலிருந்தது அந்த முகம். சாதுவான அமெரிக்கையான பொலிவான முகம்….
அட, முற்றிலும் தெரியாததோர் ஆணைப்பற்றி என்னவெல்லாம் நினைப்பு ஓடுகிறது என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். அவனைப் பார்த்தும் பார்க்காதது மாதிரி பாவனை செய்ய முயன்றாள்.
அவளுக்கு தன் அப்பா சொன்ன அந்த “சொர்க்கவாசல்” சம்பவம் நினைவுக்கு வந்தது.
என்ன இன்றைக்கு மனசெங்கும் குறும்பும் சிரிப்புமாகவே ததும்புகிறது தெரியவில்லை. அவளுக்கே புதுசாய் இருந்தது.
மனசில் தேவையற்ற கூச்சம் இல்லவே இல்லை.
இங்கே உள்ளே நுழையும்போது புதிய வீட்டிற்குள் பூனையாய் நுழைந்த ஜானகி. இப்போது பாடத் தெரிந்த ஜானகி… முற்றிலும் அந்தஸ்து பெற்ற ஜானகி….
பாடும்போது தனக்கே ஒரு தெம்பு. மனம் விடுபட்ட நிலை. கனவுகளை அப்போது பட்டமாய் சுதந்திரமாய்ப் பறக்கவிட முடிந்தது அருமையான விஷயம்.
வாசலில் கோலம் போடுதல், பாடுதல், சில பெண்களுக்கோ துணிகளில் ஆயில்வண்ண ஓவியம் எழுதுதல் அல்லது எம்பிராய்டரி போடுதல், வயர்க்கூடை பின்னுதல்…
பெண்களின் கனவுகளில்தான் எத்தனை விதம்.
இந்தக் கல்யாணத்துக்கு வர வேண்டாம் என நினைத்ததை நினைத்துப் பார்த்துக் கொண்டாள்… அந்த வாலிபக் கண்கள் தன்னைத் தொடர்வது அவளுக்குப் புரிகிறது.
இதுநாள் வரை அவளை யார் யாரோ கவனித்திருக்கலாம், என்றாலும் திரும்ப அவள் பார்வை யால் எதிர்கொள்ளாமல், ஒரு படபடப்புடன் தயக்கமாய் ஒதுங்கி, தலைகவிழ்ந்து, விலகிக் கொள்வதே அவள் வழக்கம்.
இது ଭ தனது இந்த நிலை – அவளுக்கு சிரிப்பாய், வேடிக்கையாய்க்கூட இருந்தது…. ஹ, என்ன சுவாரஸ்யமான நாள் இது. மனசில் ஊறிய தெம்புக்கும் அதற்கும், அவனை தைரியமாய் எதிர்ப்பார்வையும், குறுஞ்சிரிப்புடனான சிறு அங்கீகாரமும் ஒரு வேடிக்கைபோல அளிக்க முடிந்தது அவளால்.
தன்னில் சொர்க்கவாசல் திறந்து விட்டதா என்ன?
அவளைக் காண அவனில் உற்சாகம் தாளாமல் அவன் கண்களில் பிரகாசம் கூடியது.
எங்கே எப்படி அவள் பதுங்கியோ ஒதுங்கியோ நின்றாலும், அவள் பார்வையில் படும்படி அவன் பார்த்துக் கொண்டான். அவளைத் தொடர்ந்து அவன் பார்த்துக்கொண்டே இருக்கவும் விரும்பினான்.
மனசில் இன்னொரு பாடல் – மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன…. என அவள் மனம் மீட்டியது.
அட, ஆனாலும் அப்பா சொன்ன சொர்க்கவாசல் மருந்தென உள்ளே நன்றாய்த்தான் உள்முடிச்சுகளை முடிகிறது….
இந்தக் கணங்கள் பொற்கணங்கள். அவளுக்கே, அவள் அந்தரங்கத்துக்கே சொந்தமான கணங்கள். பொத்திப் பாதுகாக்க வேண்டிய தருணங்கள் இவை.
வெளி வெளிச்சம் இப்போது அவளுக்கு ஒரு பொருட்டாய் இல்லை. அவளுள்ளேயே இருந்தது வெளிச்சம். ஏராளமான வெளிச்சம்.
சிறு காலை வெளிச்சம் துவங்கி இப்போது வெளிச்சம் பூ திறந்தா மாதிரி அவளுள் வெடித்திருந்தது.
பாராட்டுக்கள் பல மட்டங்களிலிருந்தும் எழுந்தபோது கூச்சம் இல்லாமல் அதை அங்கீகரித்துத் தலையாட்ட முடிந்தது. அது கர்வமான தலையாட்டலாக இல்லாமல் பார்த்துக் கொண்டாள்.
ஐயோ இப்போது அம்மா அப்பாவோ, தங்கைகளோ கூட இருந்தால் எத்தனை சந்தோஷப் படுவார்கள்.
தனியே வீட்டுக்குப் போய்த் தானே இந்தக் கதையெல்லாம் சொல்ல வேண்டுமே என்றிருந்தது.
அவள் எதிர்பாராமல் ஒரு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது அவளுக்கு.
முதலாளியின் மனைவி, அவளைக் கூட அழைத்துப்போய்த் தனியே ஒரு பட்டுப்புடவை வைத்துத் தந்தபோது பதறி விட்டாள். “ஐயோ என்ன மாமி இது…” என்று திணறும்போதே கண்ணில் கண்ணீர் வந்து விட்டது. தாள முடியாமல் நெஞ்சுக்கூடு தள்ளாடியது.
“இருக்கட்டும். மாமா குடுக்கச் சொன்னா. இதை உடுத்திக்கோ. மாட்சிங் பிளவுஸ் ரெடிமேட் பிளவுஸ் சேர்த்தே சொல்லி வாங்கியிருக்கு. சீக்கிரம் வா.”
மாமி அறைக்கதவைச் சாத்திக்கொண்டு வெளியே போய்விட்டாள்.
ஆ அந்தத் தனிமை. இத்தனை நேரம் அவள் தனிமையில் இல்லை.
போய்க் கதவைத் தாளிட்டுக் கொண்டபோது அழுகை தாளவில்லை.
என்னவெல்லாம் நடந்து விட்டன சில மணிநேரங்களில்.
காலையில் இதுபற்றி, இத்தனை மகத்துவமான நாளினைப் பற்றிய துளி அறிகுறி கூட இல்லை. படபடப்பு இல்லை. இப்படி இப்போது தனியே அழ அவளுக்கு எத்தனை ஆசுவாசமாய் இருக்கிறது.
வெளியே கதவு தட்டிவிடப் போகிறார்கள்… நேரமாகி விட்டது.
புதிய பட்டுப்புடவையைப் பார்த்து சுலோச்சனா பிரமிப்பாள்.
வீட்டில் அயரப் போகிறார்கள்.
கண்ணைத் துடைத்துக் கொண்டு கண்ணாடியில் பார்த்தபடி மீண்டும் மைதீட்டி பவுடர் பூசிக் கொண்டாள். எத்தனை பாந்தமாய் அம்சமாய் இருந்தது புதுப் பட்டுப்புடவை.
வெளியே வந்தபோது வெயில் ஏறஏற பூ இன்னும் இன்னுமாய் இதழ் முற்றிலும் விரிந்தாற் போல இருந்தது அவளுக்கு.
புடவை அவளுக்கு வெகு பாந்தமாய் அமைந்து விட்டது.
வெளியே வந்த முதல் கணம் அவள் கண்கள் திருட்டுத்தனமாய் அந்த வாலிப முகத்தைத் தேடின
அவனைக் காணவில்லை. சட்டென்று அவளுக்கு அது ஏமாற்றமாய் இருந்தது.
ஒருவேளை அவன் கல்யாணப் பந்தலைவிட்டுப் போய்விட்டானோ? ஏனோ அவன் போயிருக்க மாட்டான், என்கிற அசட்டுணர்வும் எழுந்தது கூடவே.
அடிப்பெண்ணே, இன்றைக்கு என்ன ஆகிவிட்டது உனக்கு…
மனசு சோழியாடிக் கொண்டிருக்கிறது உள்ளே. வீசி வீசிப்போட அத்தனையும் நிமிர்ந்து நிமிர்ந்து நாற்பது நாற்பதாய் விழுகின்றன.
கூடப் போட்டியாய் அள்ள வேறு ஆளுமில்லை. சகோதரிகள் கூட இல்லை.
ஒரு தன்னம்பிக்கையுடன் அவள் சட்டென்று திரும்பிப் பார்க்கையில் – அவள் யூகம் சரியாய் இருந்தது.
அந்த அவன் – பந்தல் கால்களில் ஒன்றில் சாய்ந்தபடி அவளை முதுகுப்பக்கம் பார்த்து நின்றிருந்தவன், அடாடா, அவளது புதுப்புடவைக்குப் பார்வையால் ஓர் அங்கீகாரம் அளித்தான் பார்.
அதானே, என்றுதான் அப்போது கர்வம் வந்தது.
இது நானே அல்ல. வழக்கமான ஜானகியே அல்ல. அந்த சபைக்கூச்சம் எல்லாம் மாயமாய் மறைந்துபோன விந்தை அவளுக்கே வியப்பு.
இன்னொரு சந்தர்ப்பத்தில் தான் இப்படி இயங்க முடியுமா என்பதே சந்தேகம்தான்.
அவன் முதலாளியிடம் அவளைப் பற்றி எதோ கேட்கிறான். அவர் தலையாட்டிப் புன்னகைக்கிறார்.
அவளும் முகம் பொங்கிய சிரிப்புடன் அதைக் கண்டுகொள்ளாததுபோல் நடமாடினாள்.
பெண்கள் எத்தனை பாவனையுள்ளவர்களாக ஜாலமுள்ளவர்களாக தேவைப்படி நடந்து கொள்கிறார்கள்… என்று தனக்கே அப்போது புதிதாய்த் தோன்றியது.
அந்த நிகழ்ச்சிகளை விட, தனக்குள் இன்னும் என்னென்ன புதிர்கள் விடுபடுமோ என்ற சுவாரஸ்யம்தான் அதிகமாய் இருந்தது.
இன்றுமுதல் நான் வேறு ஆள். அது நிச்சயம். திணறிய அந்தச் சிறுபெண் அல்ல இப்போது – நீச்சல் நன்கு கற்றுக் கொண்டவள், அல்லது சைக்கிள் ஓட்டத் தேறியவள்….
இந்தப் புன்னகை இனி வற்றாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும், என்று நினைத்துக் கொண்டாள்.
உணவுப்பந்தியில் கூட்டமோ கூட்டம். அவளுக்குச் சாப்பிட அவசரம் ஒன்றுமில்லை என்றாலும் சுலோச்சனா, இடம் காலியாய் இருக்கிறது, என்று அழைத்துப் போனாள்.
“ஜமாய்ச்சிட்டே போ… பட்டுப்புடவையா? அடிச்சேடி நீ லக்கி பிரைஸ்” என்று சுலோச்சனா வாழ்த்தினாள் காதில். அந்த வாழ்த்தில் பொறாமை இல்லை.
சுலோச்சனாவுக்கு அவளைத் தெரியும். அவளும் தனது வீடுபற்றிய அந்தரங்கமான அநேகச் செய்திகளை சுலோச்சனாவிடம் மட்டுமே பகிர்ந்து கொள்வாள்.
பெரும் நீளமான பந்திச்சாரியில் இரண்டு இலைகள் இடையே காலியாய் இருந்தன. அதில் மாத்திரம் அமர ஆட்கள் இல்லை. வந்திருந்தவர்களில் இரண்டுபேராய் அல்லது தனியாளாய் இருவர் அமையவில்லை போலிருந்தது.
“நீ உக்காரு இவளே. பாத்துக்கலாம்…” என அவளை அமர்த்தினாள். “கூட, பக்கத்தில் நீயும் வா இவளே….” என அவளை இழுத்துக் கொள்ள முயன்றாள் ஜானகி.
“இல்ல, நீதான் காலைல லேட். நான் டிஃபன் சாப்பிட்டிருக்கேன். எனக்கு இன்னும் கொஞ்ச நேரம் ஆகணும்” என்றாள் சுலோச்சனா. பேசியபடியே யாரையோ கவனித்து “வாங்க வாங்க” என்று போய்விட்டாள் அவள்.
“யாராவது வர்றாங்களா?” என்று சென்ட் மணக்கிற கிட்டத்தில் ஒரு ஆண் குரல்.
அது சர்வ நிச்சயமாக “அவன்தான்” என்கிறது அவள் உள்ளுணர்வு-
அட, வெளியே காட்டிக் கொள்ளாவிட்டாலும் அந்த விழிப்பு, காத்திருத்தல் அவளுள் இருந்திருக்கிறது.
திரும்பிப் பார்க்காமல் “இல்லை” என்னுமுன் அவளுக்குச் சிரிப்பில் முகம் பூரித்தது. அவளது தோளுக்குக் கிட்டத்தில் அவன் கோட், அகாடின் விரிந்தாற்போல அசைந்து விலகியது.
தன் எல்லைகளை உணர்ந்தவனாய் இருந்தான் அவன். நளினமாக இதமாக “நீங்க நல்லாப் பாடினீங்க. எல்லாருமே உங்க பாட்டை ரசிச்சாங்க” என்கிற அவனது பேச்சை அவள் ரசித்தாள்.
இத்தனை தன்னம்பிக்கையை, துணிச்சலை அவளுக்கு எது தந்தது…. புதுப் பட்டுப்புடவை. அதுதான் விஷயம் என்றிருந்தது.
இடையிடையே அப்பாவின் சொர்க்கவாசல் சம்பவம் தந்த உற்சாகம் வேறு….
அதிகம் தன்னைக் காட்டிக் கொள்ளாத அளவு கவனமாய் இருந்தாள். நெஞ்சே அதிகம் துள்ளாதே, என ஓர் உள்ளுணர்வு எச்சரித்துப் படபடத்தது.
இது ஈசலின் உற்சாகம், மின்மினிப் பூச்சிகள் இருட்டை விரட்டும் கனவு காண்பது போல…. தனது வீட்டுப் பழைய சோறு – என்றைக்கும் இதுவே சாஸ்வதம், என நினைக்கவே சாப்பாடு சட்டென்று ருசியிழந்தாற் போலிருந்தது.
குபுக்கென்று கண்ணீர் கொட்டிவிடும் என்கிற பயம்.
இக்கணத்து சொர்க்கவாசல் திறந்த வெளியை சுவாசிக்கிறேன், அவ்வளவே. ஆனால்…. கனவுகள் கூட அல்ல இவை. இவை நிஜம்.
இதோ அருகே இவன்ଭ யார் அவன்? அவன் பேரென்ன? தெரியாது. அழகான குறுகுறுப்பான வாலிபன். அவனிடமிருந்து சிறு, கௌரவமான ஒரு பாராட்டு.
அது நிஜம். அது நியாயம்.
இன்றைக்கு வாய்த்த எத்தனையோ பாராட்டுகளில் இதுவும் ஒன்று. அதை நான் அங்கீகரிக்கிறேன். அவ்வளவே – என்று சமாதானப் படுத்திக்கொண்டாள்.
கல்யாணப் பந்தலை விட்டு வெளியே வந்தபோது மழை விட்டாற் போலிருந்தது. அவனை, எங்காவது தட்டுப் படுகிறானா என்று தேட முயன்ற மனதை அடக்கி, வெளியே வந்தாள்.
வெளியே வெயில் ஏறியிருந்தது. நகரம் பரபரப்பாய் இருந்தது.
இருந்த கசகசப்புக்குப் பட்டுப்புடவையைத் திரும்பவும் மாற்றிக்கொண்டு வந்திருக்கலாம் போல ஓர் எண்ணம். திரும்பவும் அவர்களிடம் அனுமதி கேட்க என்னவோ போலிருந்தது.
முதலாளியிடம் ஒரு வார்த்தை சொல்லி விடை பெற்றுக்கொண்டபோது அவர் கும்பிட்டு வழியனுப்பிய பாங்கில் தனிப் பரிவினை உணர்ந்தாள்.
“உங்களை என் காரில் இறக்கி விடட்டுமா?” என்று குரல் கேட்காதா என்று ஓர் அசட்டுத்தனமான எதிர்பார்ப்புடன் பஸ் நிலையத்தில் காத்திருந்தவள், உடனே ஓர் அதட்டல் போட்டு தன் மனதைக் கண்டித்தாள்.
சொர்க்கவாசல் திறப்பு வருடத்தில் ஓர் வைபவம்…. அவ்வளவுதான். இருந்தாலும் திரும்பி, கடைசியாய் இங்கிருந்து ஒருமுறை கல்யாண மண்டபத்தைப் பார்த்தாள்.
கனவை நனவாக்கிய கட்டடம். வெளியே மண்டபத்தின் பெயர்ப்பலகை பெரிய எழுத்தில் – ஜானகி திருமண மஹால். அட, என நினைக்கச் சிரிப்பு வந்தது.
கூட சகோதரிகளையோ, அப்பாவையோ அழைத்து வந்திருக்கலாம். அவர்கள் கிண்டலடிக்க அடிக்க வெட்கத்துடன் அங்கீகரிக்கலாம்.
எப்படியும் பட்டுப்புடவை பற்றி சுற்றி உட்கார்ந்து விசாரிப்பார்கள். தானே எல்லாம் சொல்ல வேண்டும். பரவாயில்லை.
அஞ்சு நிமிஷத்தில் அவளுடைய பஸ் வந்தது.


நன்றி – பாக்யா டாப் 1 மாத இதழ்
தொடரும்

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்