மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 31

This entry is part of 31 in the series 20060728_Issue

ஜோதிர்லதா கிரிஜா


மறு நாள் மாலை ஆறு மணி யளவில் ஒரு பெண் பங்கஜத்தை ஸ்திரீ சேவா மண்டலியில் சந்திக்க வந்தாள்.

“என்னம்மா? என்ன சங்கதி? நீ யாரு?” என்று பங்கஜம் கேட்டதுதான் தாமதம், அவள் வாய்விட்டு அழத் தொடங்கினாள்.

“விஷயத்தைச் சொல்லிட்டு அழும்மா.”

“உங்களண்ட பியூனா வேலை செய்யிற மாயாண்டியோட பொஞ்சாதிம்மா, நானு.”

“அப்படியா? சரி, சொல்லு. என்ன விஷயம்? ஏதாவது குடும்பத்தகராறா?”

“ஆமாங்கம்மா. எங்களுக்கு அஞ்சு பசங்கம்மா. மூணு பொம்பளப் பிள்ளைங்க, ரெண்டு ஆம்பளப் பிள்ளைங்க. வீட்டுச் செலவுக்கு ஒரு காசு கூடத் தர்றதில்லீங்கம்மா எம்புருசன்.”

“என்ன பண்றான் எல்லாப் பணத்தையும்?”

“குடிக்கிறாரும்மா. நானும் இங்க வரவேணாம், வரவேணாம், அவரோட மருவாதியைக் கெடுக்க வேணாம்னு இத்தினி நாளும் பொறுமையா யிருந்தேம்மா. இனிமேப்பட்டுத் தாளாதுங்க. எம் பெரிய மக வயசுக்கு வந்துட்டா. அவளைக் கட்டிக் குடுக்க வேணாமாம்மா? நான் ஒண்டிக்காரி என்னங்கம்மா செய்யிறது? வர்ற மாசத்துலேர்ந்து அவரோட சம்பளப் பணத்தை ஏங்கிட்ட குடுத்துடுங்கம்மா. “

“சரி. நான் மாயாண்டி கிட்ட பேசறேன். ”

“பேசினா ஒண்ணும் பெரயோசனம் இல்லீங்கம்மா. உங்களாண்ட தலையத் தலைய ஆட்டிட்டு , அப்பால வீட்டுக்கு வந்து என்னைய அடிப்பாரு.”

“அடிக்க வேற செய்யறானா?”

“குடிகாரங்கள்ள பொஞ்சாதிய அடிக்காதவன் யாரும்மா? எங்க பேட்டையில இருக்கிற பொம்பளைங்கள்ள குடிகாரப் புருசன் கையால அடி வாங்காதவங்களே இல்லீங்கம்மா. நெதமும் குடி, நெதமும் அடி. அந்தப் பாளாப் போன குடியில அப்பிடி என்னதான் இருக்குதோ!”

“சரி, நான் மாயாண்டியோட பேசிட்டு, சம்பளப் பணத்துல பாதியை உங்கிட்ட குடுக்கிறதுக்கு அவன் கிட்ட சம்மதம் வாங்கறேன்.”

“அவரு சம்மதிக்காட்டி?”

“அவன் சம்மதிக்காட்டி என்னால எதுவும் பண்ண முடியாதும்மா. சட்டத்துல அதுக்கு எடமில்லே. ஆனாலும் மெரட்டிப் பாக்கறேன்.”

“இங்கிட்டு வந்து ஒங்களைப் பாத்ததுக்கும் சேத்து என்னைய அடிப்பாரும்மா.”

“அதுக்கும் சேத்தே மெரட்டி வெச்சு அனுப்பறேன். நீ மறுபடியும் ஒம் பொண்டாட்டி மேல கையை வெச்சதாத் தெரிஞ்சுது, போலீஸ்ல சொல்லி ஒன்னை அவங்க ஜெயில்ல போடும்படி பண்ணிடுவேன்னும் பயமுறுத்தி வெக்கிறேன். ராஸ்கல்! என்கிட்ட என்னவோ மகா யோக்கியன் மாதிரி கொழையறானே!”

“எம் புருசன் மட்டுமில்லீங்கம்மா. எங்க பேட்டையில உள்ள பொண்ணுங்க எல்லாருமே புருசங்க கிட்ட அன்னாடம் அடி வாங்கிச் சாகிறவங்கதாம்மா. எங்க பக்கத்து வீட்டு ஆளு கெட்ட சாராயம் குடிச்சுக் குடிச்சே செத்துப் போனாரு. அப்பிடியும் எவனுக்கும் புத்தி வரல்லீங்கம்மா. அந்த மனுசன் செத்த அதிர்ச்சியில இந்த மனுசனும் ரெண்டு நாளுக்குக் குடிக்காம இருந்தாரு. அம்புட்டுத்தேன். மறுபடியும் பளைய குருடி, கதவெத் தொறடி கதைதாங்க! .. .. அப்ப, நான் வரட்டும்மாம்மா? கொஞ்சம் தயவு பண்ணுங்கம்மா.”

கைகூப்பிய பின் மாயாண்டியின் மனைவி புறப்பட்டுப் போனாள்.

பங்கஜத்தின் அறையில் உடனிருந்த துர்க்கா, “பூரண மது விலக்கை ராஜாஜி அமல் பண்ணி யிருக்கார். அப்பிடி யிருந்தும் இதுகளுக்கு எங்கேருந்து கள்ளும் சாராயமும் கெடைக்கிறது? “ என்று முகஞ்சுளித்தாள்.

“திருட்டுத்தனமாக் காய்ச்சுவாளாயிருக்கும். அதுல சில சமயம் வெஷமும் கலந்துட்றது. ஒடம்புக்கு ஆகாத ஸ்பிரிட் (spirit) கள்ளாம் இருக்கே! குடிச்சுட்டுச் சாகறா. அப்பிடி என்னதான் மாயம் இருக்கோ அந்தக் குடியிலே! அந்த பகவானுக்குத்தான் வெளிச்சம். குழந்தை குட்டிகள் மேல பாசம் இருந்தா குடிக்கச் சொல்லுமோ? நாசமாப் போக! . . . ‘ராஜாஜி தான் வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுங்கிறாப்ல சொல்லிட்டாரே – ‘கெட்ட சாராயத்தைக் குடிச்சுட்டுச் செத்தாலும் சாவேனே ஒழிய, குடிக்கிறதை நிறுத்த மாட்டேன்’னு சொல்ற முட்டாள்களுக்காக நாம பூரண மதுவிலக்குங்கிற நல்ல திட்டத்தைக் கைவிட வேண்டியதில்லே. குடிச்சுட்டுச் சாகறவா சாகட்டும்’ னே சொல்லிட்டாரே!”

“என்ன சட்டம் கொண்டு வந்து என்ன! என்ன திட்டம் கொண்டு வந்துதான் என்ன! இந்த முட்டாள் ஜனங்களைத் திருத்தவே முடியாது!”

“அதுக்காக நல்ல முயற்சிகளை நாம நிறுத்தலாமா? அது பாட்டுக்கு ஒரு பக்கம் நடந்துண்டிருக்க வேண்டியதுதான். தப்புப் பண்றவா அடியோட அதை நிறுத்திட்டு ஒரே நாள்லே நல்லவாளா மாறிட மாட்டாதான். ஆனா, அவாளோட எண்ணிக்கை ரொம்பவும் அதிகமாகாமயாவது இருக்குமோல்லியோ? குறைஞ்சபட்சம் அப்பிடி எதிர்பாத்துத்தான் நம்மள மாதிரி அசடுகள் இது மாதிரியான பிரசாரங்கள்ள ஈடுபட்றா. அது மட்டுமா? கொஞ்சங் கொஞ்சமாக் கொறையறதுக்கான சாத்தியமும் கூட இருக்குமே!”

“நீங்க சொல்றது கரெக்ட்.”

“கள்ளுக்கடை மறியல் பண்ணினாளே நம்ம பொண்ணுகள், இந்தப் பக்கம் அவா மறியல் பண்ணிட்டுப் போக வேண்டியதுதான், அந்தப் பக்கமா வந்து சிரிச்சுண்டே குடிச்சுட்டுப் போறதுகள்! மனுஷாளைக் கட்டாயப் படுத்தி எதையுமே பண்ண வைக்க முடியாது. அவா தானாத் திருந்தினாத்தான் உண்டு.”

“அது சரிம்மா. ஆனா, அதுக்கான பிரசாரங்களையும் நாம இடைவிடாம சென்சுண்டே இருக்கணுமில்லியா?”

“ஆமாமா.. .. .. கொஞ்ச நாளுக்கு முந்தி ஒரு பத்திரிகையில ஒரு புத்திசாலி எழுதியிருந்தான் – குடிக்கிறது தனி மனுஷ உரிமையாம்! எப்பிடி இருக்கு? அப்ப, காலம் முழுக்க பிரும்மச்சாரியா யிருந்துடணும்! ‘கல்யாணமும் பண்ணிப்பேன்; கொழந்தை குட்டிகளும் பெத்துப்பேன். ஆனா அவாளுக்குச் சோறு கூடப் போடாம எல்லாத்தையும் குடிச்சே கரைப்பேன்’கிறது என்ன நியாயம்?”

“ஒருத்தன் பிரும்மச்சாரியாவே இருந்தாலும் கூட, குடிச்சுட்டு தேமேன்னு தன்னோட ரூம் (room) லதான் விழுந்து கெடக்கணும். அப்பிடி அவன் நடந்துண்டான்னா, அது அவனோட தனிப்பட்ட உரிமைங்கிறதை நாம் ஒத்துக்கலாம். ஆனா, குடிச்சதும் கூர் மழுங்கிப் போயிட்றதே! குடி மயக்கத்துல அவன் பாட்டுக்கு அசலாத்துப் பொண்ணு கையைப் பிடிச்சு இழுத்தன்னா, அது அவனோட தனிமனுஷ உரிமைங்கிறதா ஒத்துக்க முடியுமா! ”

“ஆ.. .. ..மா! நீயும் நானும் இப்பிடி வாய் ஓயாம தர்க்கம் பண்ணி இந்தப் பிரச்னை தீரப் போறதாக்கும்! .. .. .. அப்புறம், இன்னொரு விஷயம் உங்கிட்ட கேக்கணும். மறந்தே போயிட்டேன்.”

“என்னம்மா?”

“இன்னைக்கு மத்தியானம் நம்ம கேர்டேக்கர் (caretaker) சிவமணியோட பொண்டாட்டியும் வந்திருந்தா என்னைப் பாக்கிறதுக்கு. அப்ப நீ சேத்துப்பட்டு ப்ராஞ்சுக்குப் போயிருந்தே. .. அவ சொன்ன விஷயம் ரொம்ப பயங்கரம்.”

“அப்படி என்னம்மா பயங்கரமான விஷயம்?”

“அவனுக்கும் கல்யாண வயசில ஒரு பொண்ணு இருக்கா. அந்தப் பொண்ணை அவன் யாருக்கோ வித்துட்டானாம் – முன்னூறு ரூவாக்கி!”

“அடப் பாவி! அவளுக்குத் தெரிஞ்சேவா பண்னியிருக்கான் இப்பிடி ஒரு காரியம்?”

“இல்லேல்லே. ரகசியமாத்தான் பண்ணியிருக்கான். ஆனா யார் மூலமாப் பண்ணினானோ அந்த ·ப்ரண்டோட பொஞ்சாதிக்கு அது தெரிய வந்து இவ கிட்ட வந்து விஷயத்தைச் சொல்லிட்டா ரகசியமா.”

“பெத்த பொண்ணை விக்கும்படியா அப்பிடி என்ன பணமொடையாம்? எவ்வளவுதான் பண நெருக்கடியா யிருக்கட்டுமே? அதுக்காக தான் பெத்த பொண்ணை எவனாவது விப்பானோ? நம்பவே முடியல்லியே!”

“வித்திருக்கானே! நம்பாம என்ன பண்றது?”

“அப்புறம்?”

“அப்புறமென்ன, அப்புறம்? அவ்வளவுதான்.. .. ..அந்தாளு வடக்கத்திக்காரனாம். பொண்ணைக் கூட்டிண்டு போயே போயிட்டான். கெழவன் வேற. ஹிந்தி பேசற சேட்டாம்.”

“சிவமணியோட பொண்டாட்டி போலீஸ்ல கம்ப்ளெய்ன் பண்ண நாம ஏற்பாடு பண்ணினா என்னம்மா?”

“கூடவே கூடாதுன்னு அழு அழுன்னு அழறாளே! சிவமணி அவளை அடிச்சே கொன்னுடுவானாம். கேர்டேக்கருக்கு நல்ல மொரட்டு ஆளா யிருந்தா நல்லதுன்னுதானே அவனைத் தேடிப் பிடிச்சு வேலைக்கு வெச்சோம்? அவன் ரிடைர் (retire) ஆறதுக்கு இன்னும் பத்து வருஷம் இருக்கே, துர்க்கா?”

“அவனை வேலையை விட்டு நிறுத்திடலாம்மா.”

“அதுவும் கூடாதாம், அவனோட பதிபக்திப் பொண்டாட்டிக்கு! ஆனா அவனைக் கூப்பிட்டு மெரட்டி மட்டும் வெக்கச் சொன்னா. ஏன்னா, அவளுக்கு இன்னொரு பொண்ணு இருக்காளாம்.”

“அப்ப மட்டும் அவன் அவளை அடிச்சுக்கொல்ல மாட்டானாமா?”

“அடிப்பான்தான். ஆனா போலீசுக்கு அவ போய்ச் சொன்னா இன்னும் மோசமான்னா அடிச்சுக் கொல்லுவான்? ஒண்ணு பண்ணலாம். அவனை மெரட்டலாம். அவன் பொண்டாட்டியை அடிச்சான்னா, நாமளே போலீசுக்குப் போவோம்னு சொல்லலாம். இல்லேன்னா, வேலையை விட்டு நிறுத்திடுவோம்னு சொல்லலாம். அந்தப் பொண்ணுக்கும் அப்பிடி ஒரு கதி வராம காப்பாத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கில்லையா? இப்பவே அவனைக் கூப்பிட்டு மெரட்டலாம்.”

“இப்ப அவன் இருக்க மாட்டாம்மா. வீட்டுக்குப் போயிருப்பான். அவனுக்குத் தெரியாம அவன் பொண்டாட்டி எப்பிடி வந்து உங்களைப் பாத்தா?”

“அவன் இன்னிக்குக் காலம்பர அரை நாள் லீவ் போட்டிருந்தான். அது தெரிஞ்சு வந்துட்டுப் போனா.”

“அன்னிக்கு ஒரு நாள் நாம பேசிண்ட மாதிரி, மகாபாரதக் காலமும், பழக்க வழக்கங்களும் இன்னும் மாறவே இல்லே. தாலி கட்டின பொண்டாட்டின்றவளை ஒரு அ·றிணைப் பண்டம் – சொந்தச் சொத்து – அவளை என்ன வேணாலும் பண்ணலாம் – யாருக்கும் தட்டிக் கேக்கற அதிகாரம் கெடையாது -அப்பிடின்னுதான் புருஷா நெனைக்கிறதாத் தோண்றது.”

“ம்! .. .. பாக்கலாம். சுதந்திரம் கூடிய சீக்கிரம் கிடைச்சுடும்னு பட்றது. அதுக்கு அப்புறம் காந்தி என்ன பதவியிலயா ஒக்காரப் போறார்? ஏற்கெனவே செஞ்சிண்டிருக்கிற சமுதாய சீர்திருத்த வேலைகளைத்தான் இன்னும் அதிக மும்முரமாத் தொடர்ந்து செய்வார். படிப்படியா, அப்ப, இந்தக் கேடுகள்ளாம் கொறையாதா என்ன? ஒரே யடியா மறையாட்டாலும், கொறையவாவது கொறையு மோல்லியோ?”

“பாக்காலாம்.. .. ..”

.. .. .. மறு நாளே மாயாண்டியைக் கூப்பிட்டு மிரட்டிய பங்கஜம் அவனது சம்பளத்தில் முக்கால் பங்கை அவன் மனைவியிடம் தானே கொடுத்துவிட அவனிடமிருந்து எழுத்து மூலமான ஒப்புதலைப் பெற்றுக்கொண்டாள்.

அடுத்து, கட்டடக் காப்பாளன் சிவமணியைக் கூப்பிட்டு அனுப்பிப் பேசினாள்: “சிவமணி! உன்னோட மூத்த மகளுக்கு என்ன வயசு ஆகுது?”

“பதி.. பதி.. பதினாலு வயசு ஆவுதும்மா.”

“பதினாலா? அப்ப உங்க வழக்கப்படி கலியாணம் பண்ணணுமில்ல?”

“ஆஆஆ.. .. ஆமாங்கம்மா.”

“சொந்தத்துலெ மொறை மாப்பிள்ளை யாராவது இருக்காங்களா?”

“இ இ இ.. .. .. இல்லீங்கம்மா.”

“எனக்குத் தெரிஞ்ச பையன் ஒருத்தன் இருக்கான். உங்க ஜாதிதான். ஆனாலும் படிச்சிருக்கான். பத்தாவது வரையில. நான் சொன்னா உம் பொண்ணைக் கலியாணம் பண்ணிக்கச் சம்மதிப்பான். என்ன சொல்றே?”

“.. .. மன்னிச்சுக்குங்கம்மா. எனக்கு சொல்றதுக்கே அசிங்கமா யிருக்கு. அது ஓடிப் போயிறுச்சு.”

“என்னது! ஓடிப் போயிறுச்சா! எப்போ?”

“முந்தாநேத்தும்மா. .. .. எ எ எ .. .. எவன் கூடவோ ஓடிப் போயிறுச்சு. கிரிச கெட்ட களுத.”

“யாரவன்?”

“எ எ எ .. ..எங்க பேட்டையில இருக்குற ஆளுதான்.”

“ அவனையும் காணோமா?”

“ஆமாம்மா.”

“அவன் பேரேன்ன? விலாசம் சொல்லு. மைனர்ப் பொண்ணைக் கடத்தக் கூடாதுன்னு சட்டம். மத்த விவரமெல்லாம் சொல்லு. நான் போலீஸ்ல சொல்லிக் கண்டுபிடிக்க ஏற்பாடு பண்றேன்.”

“வேணாங்க. அவனோட அப்பன்காரன் பெரிய ரவுடி. “

“சிவமணி! என்ன இதெல்லாம்? கதையா சொல்றே? நீயே உம் பொண்ணை அழைச்சுட்டுப் போயி வயசான எந்த வடக்கத்திக் காரனோடவோ சென்ட்ரல் ஸ்டேஷன்ல ரெயிலேத்தினதைப் பாத்ததுக்கு சாட்சியெல்லாம் இருக்கு. நம்ம ஹோம் ஆளுங்களே பாத்திருக்காங்க. உள்ளது உள்ளபடி சொல்றியா, இல்லே, நானே உம் பொண்ணைக் காணோம்னு புகார் குடுத்துட்டு, இப்ப நான் சொன்னதையெல்லாமும் போலீஸ்ல சொல்லவா?.. .. .. என்ன பேசாம இருக்கே? .. .. உம் பொஞ்சாதியை வரச் சொல்லு. நான் அவ கூடப் பேசணும். என்ன ஒண்ணுமே சொல்லாம இருக்கே? வாயில என்ன கொழக்கட்டையா அதக்கிண்டிருக்கே?”

“நானேதாம்மா ஒரு சேட்டோட அதை பம்பாய்க்கு அனுப்பி வெச்சேன்.”

“எதுக்கு? அந்தப் பொண்ணு அழுதுண்டே இருந்ததா வேற எனக்குத் தகவல். அவளோட உன்னையும் சேத்துப் பாத்ததால, எங்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டுப் புகார் பண்ணணும்னு அதைக் கவனிச்ச ஆளுங்க நினைச்சிருக்காங்க. நீ இங்கே வேலை செய்யறது தெரிஞ்ச ஆளுங்களா அவங்க இருந்ததால தப்பிச்சே. இல்லாட்டி அப்பவே உன் கையில விலங்கு மாட்டும்படி ஆயிருக்கும். அது சரி, எதுக்கு அனுப்பினே?”

“அ அ அந்தாளோட பொஞ்சாதியாத்தான்.”

“அந்த சேட் வயசானவனாமே? தவிர, ஒழுங்கா மொறையாக் கல்யாணம் பண்ணி அனுப்பாம வெறுமன அனுப்பினா நாளைக்கு உம்பொண்ணோட கதி என்னவாகும்னு நெனைச்சுப் பாத்தியா?.. .. .. சிவமணி! தலை நிமிந்து என்னைப் பாரு. நீ பொய் சொல்றே.. .. .. எனக்கு என்ன தோணுதுன்னா, அந்த சேட் உனக்குப் பணம் குடுத்திருக்கான். நீ உன் மகளை அவனுக்குக் குடுத்துட்டே – அதாவது, வித்துட்டே.”

“இ இ இ…ல்லீங்க, சிஸ்டர்.. .. ..”

“நான் கண்டு பிடிச்சாச்சு, சிவமணி! உண்மையை நீயா ஒத்துக்கப் போறியா, இல்லியா? பொலீஸ் இதுல மூக்கை நொழைச்சாங்கன்னா உன்னோட கதி என்னவாகும்னு நெனைச்சுப் பாரு. அதனால, அந்த சேட்டோட விலாசத்தைக் குடு. நான் அவளைத் திருப்பிக் கூட்டிண்டு வர ஏற்பாடு பண்றேன்.. .. ..”

கடைசியில், அவன் சேட்டின் பம்பாய் முகவரியைச் சொல்ல, பங்கஜம் எழுதிவைத்துக்கொண்டாள்.

“சரி. நான் ஹிந்தியில ஒரு லெட்டர் எழுதி ஒரு ஆள் கிட்ட குடுத்து அனுப்பறேன். அவனுக்கு நிச்சியமா ஒரு ·போன் (phone) இருக்கும். அதுக்கு இடையில அதைக் கண்டுபிடிச்சு அந்த சேட்டொட நானே பேசறேன். . . . ஆமா? நீ பண்ணியிருக்கிற அக்கிரமம் உன் பொஞ்சாதிக்கு தெரியுமா?”

“தெரியாதுங்க. ஆனா என் செநேகிதன் ஒருத்தனுக்குத் தெரியும். அவன் தான் இதுக்கு ஏற்பாடு பண்ணினவன். வேற யாருக்கும் தெரியாதுங்க.”

“சரி, நீ போ. இனிமே இப்பிடி ஒரு காரியத்தைப் பண்ணாதே.”

சிவமணி தலையைக் குனிந்துகொண்டு வெளியேறினான்.

.. .. ..1946 ஆம் ஆண்டில், ஜனவரி 21 ஆம் நாளிலிருந்து 31 ஆம் நாள் வரை காந்தியடிகள் மதராசுக்கு வந்து தங்கிப் பல்வேறு சமுதாய நிகழ்ச்சிகளிலும், விழாக்களிலும் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். அவற்றில் முக்கியமானவை தென் இந்திய ஹிந்துஸ்தானி பிரசார் சபாவின் வெள்ளி விழாவும், எழுத்தாளர்கள், ஓவியர்கள் ஆகியோரின் கூட்டமும்.

எழுத்தாளர்களுக்கும் ஓவியர்களுக்கும் தஙகள் படைப்புகளில் ஆபாசத்தையும் பாலுணர்வுத் தூண்டுதலையும் தவிர்க்குமாறு அவர் அறிவுரை கூறினார். ‘பெண்ணை வர்ணிக்கும் போது உங்கள் தாயை நினைத்துக்கொள்ளுங்கள். பாலுணர்வைத் தூண்டும் வண்ணமோ கொச்சையாகவோ ஒரு சொல் கூட உங்கள் எழுத்தில் வந்து விழாது. எழுத்தாளர்கள் தங்கள் எழுதுகோல்களின் மூலம் பெரும் சாதனைகளைப் புரிய முடியும். சமுதாயக் குறைபாடுகளை நீக்கும் திசையிலும், அநீதிகளைக் களையும் வழியிலும் உங்கள் எழுதுகோல்கள் நகரட்டும்’ என்று எழுத்தாளர்களைக் காந்தியடிகள் கேட்டுக்கொண்டார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பட்டணத்தை ஒரு கலக்குக் கலக்கிவிட்டு, மகாத்மா காந்தி புறப்பட்டுப் போனார்.

.. .. .. 1947 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், பதினைந்தாம் நாள் விடியலில் -அதாவது சரியாக நள்ளிரவில் – இந்தியா – முஸ்லிம்கள் பெரும்பாலாக வாழ்ந்த பகுதிகளை அவர்களுக்குப் பாகிஸ்தான் எனும் பெயரில் காங்கிரஸ் இழக்கச் சம்மதித்த பின் – சுதந்தரம் அடைந்தது. அதற்கு அடுத்த ஆண்டில், மகாத்மா காந்தி ஓர் இந்து மத வெறியனால் சுடப்பட்டு இறந்தார். பாகிஸ்தான் எனும் பெயரில் தங்களுக்கென்று ஒரு தனி நாட்டுக்காகக் கலகம் செய்து வந்த முஸ்லிம்களைத் தம் செல்லப் பிள்ளைகளாய்க் கருதி மகாத்மா காந்தி அவர்களுக்கு அடி பணிந்தார் என்கிற எண்ணத்தால் சில தீவிர இந்துக்களிடம் விளைந்த ஆத்திரமே அதற்குக் காரணம். இந்தியாவின் பிரிவினைக்கு ஒப்புக்கொள்ளாவிட்டால், பாகிஸ்தானை அடைந்தே தீரும் பிடிவாதத்தில் இருந்தவர்களின் வன்முறைச் செயல்களால் நாட்டில் இந்துக்கள், முஸ்லிம்கள் ஆகிய இரு தரப்பாருடையவும் இரத்த ஆறுகள் ஓடுவதோடு, எந்தத் தவறும் செய்யாத இரு தரப்புப் பெண்களும் வன்னுகர்வுக்கு ஆளாவார்கள், பிஞ்சுக் குழந்தைகளும், செயலற்ற முதியோர்களும் அல்லலுறுவார்கள் என்பதாலேயே, பிரிவினைக்குத் துளியும் விருப்பமற்ற நிலையிலும் அரை மனத்துடன் காந்தி அதை ஏற்க வேண்டியதாயிற்று என்பதை மத உணர்வுகள் அற்ற இந்துக்கள், இஸ்லாமியர்கள் ஆகிய இரு தரப்பாருமே எளிதில் புரிந்துகொண்டார்கள். காந்தி தாயுள்ளம் படைத்தவர். அவருக்குத் தம் பிள்ளைகளில் எவருமே இரத்தம் சிந்தக்கூடாது என்கிற உயர்ந்த உள்ளம். அதனால்தான் தமக்கே உடன்பாடில்லாத ஓர் ஏற்பாட்டுக்கு அவர் இணங்க வேண்டியதாயிற்று.

.. .. .. கொள்ளை யடித்துக்கொண்டிருந்த வெள்ளைக்காரனிடமிருந்து நாடு விடுபட்டுவிட்டதால், இனி நாட்டில் பாலும் தேனும் ஆறாக ஓடப் போகின்றனவென்று கனவு கண்டு கொண்டிருந்தவர்களின் வாய்களில் காலப்போக்கில் மண்தான் வந்து விழுந்தது. சுருக்கமாய்ச் சொல்ல வேண்டுமானால், அயல் நாட்டுக் கொள்ளையர்களிடமிருந்து விடுபட்ட இந்தியா உள்ளூர்க் கொள்ளையரிடம் சிக்கியது.

பங்கஜம் போன்ற பெண்விடுதலை ஆர்வலர்கள் சுதந்திர இந்தியாவில் பெண்களின் நிலை இனிக் கண்டிப்பாக உயரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள். அந்த எதிர்பார்த்தலிலும் மண் விழுந்தது – பெண்களின் முன்னேற்றம் ஆமை வேகத்தில் அசைந்து நகர்ந்ததால்.

விடுதலைக்குப் பின் பங்கஜத்தின் சமுதாய சேவை மையங்களுடன் தொடர்பு கொண்டு சாமிநாதன் நடுத்தர வயது கடந்துவிட்ட நிலையில் தன்னளவில் கணிசமான சேவையைச் செய்யத் தொடங்கி யிருந்தார்.

சொந்தமாக ஒரு விழிப்பு உணர்வுப் பத்திரிகை தொடங்க வேண்டுமென்கிற ஆவல் ஏற்கெனவே அவருக்கு இருந்ததால், அந்தத் துறையில் பயிற்சி பெறும் நோக்கத்துடன் ஒரு நாளிதழில் அவர் வேலையில் சேர்ந்தார்.

நாள்கள் செல்லச்செல்ல, வெள்ளைக்காரர்களே உள்ளூர்க் கொள்ளக்காரர்களை விடவும் பரவாயில்லையோ எனும் எண்ணம் மக்கள் மனங்களில் உதிக்கும் வண்ணம் இந்திய அரசியல்வாதிகள் நடந்து கொள்ளலானார்கள். ஏனெனில் வெள்ளையர்களின் ஆட்சியின் போது லஞ்சம் எனும் பேய் இவ்வளவு மோசமாய் ஒரு போதும் தலை விரித்தாட வில்லை. தேசபக்தி நிறைந்த ஒரு பெரிய விடுதலைப் போராட்ட வீரர், “ . . . ‘வெள்ளைக்காரன் ஆட்சியே ஆயிரம் மடங்குகள் மேலாக இருந்தது ’ என்று பொதுமக்களில் பலர் பெருமூச்சுடன் பேசுவதைக் கேட்கிற போதெல்லாம் எனக்கு ஏற்படுகிற அவமானத்தில் பூமிக்கு அடியில் என்னைப் புதைத்துக்கொண்டுவிடலாம் போல் இருக்கிறது!” என்று பாராளுமன்றத்தில் பேசினார். (பேசியவர் – பிரஜா சோஷலிஸ்ட் கட்சித் தலைவர், ஆச்சார்யா கிருபளானி; அப்போதைய ப்¢ரதமர் – ஜவாஹர்லால் நேரு)

.. .. .. ஆண்டுகள் உருண்டன. வரிசையாய்த் தேசபக்தர்கள் பிரதம மந்திரிப் பதவியில் அமர்ந்து நாட்டை யாண்ட போதிலும் – பெண்ணாதரவுச் சட்டங்கள் இயற்றப்பட்ட போதிலும் – பெண்களின் முன்னேற்றம் என்பது கிராமங்களைப் பொறுத்த வரையில் கனவாகவே இருந்தது. பட்டணங்களில் உயர்குடிப் பெண்களும், நடுத்தர இனத்துப் பெண்களும் படித்துப் பட்டங்கள் பெற்றதும், சில உயர் பதவிகளில் அமர்ந்ததும், அரசியலில் ஈடுபட்டதும் இந்தியாவில் பெண்கள் பெரிய அளவில் முன்னேறி விட்டார்கள் என்கிற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இந்திய அரசைப் பொய்யானதொரு பெருமையில் ஆழ்த்தின. ‘இந்தியாவின் ஆன்மா அதன் ஏழு லட்சங்களுக்கும் அதிகமான கிராமங்களில்தான் இருக்கிறது, ஏழு நகரங்களில் அன்று’ என்று காந்தியடிகள் சொன்னதைக் கண்ணோட்டமாக வைத்துப் பார்த்தால், கிராமங்கள் முன்னேறாத நிலையில் – அது பெண் விடுதலையோ அல்லது வேறு எதுவோ- இந்தியா முன்னேறிவிட்டதாகப் பெருமைப்படுவது அபத்தம் என்றே சாமிநாதன் போன்றவர்கள் நினைத்தார்கள். ஏழைமை பெரும்பாலராக இருந்த நிலையில் ஒரு நாடு முன்னேறி விட்டதாக எவ்வாறு கருத முடியும் என்பதே பெரும்பான்மையினரா யிருந்த ஏழை மக்களின் பொருமலாக இருந்தது. (இன்னமும் இருக்கிறது.)

. . . பங்கஜத்துக்கு ரொம்ப வயதாகிவிட்டது. சாமிநாதனுக்கும்தன். எனவே எல்லாப் பொறுப்புகளும் துர்க்காவின் தலை மீது ஏறின. நம்பகமான உதவியாளர்களின் ஒத்துழைப்போடு துர்க்கா மாநிலந்தோறும் பெண்விடுதலை இயக்கங்களை நடத்தினாள். சென்னையில் அவள் நிறுவிய அகில இந்திய மகளிர் முன்னேற்ற மன்றம் கப்பும் கிளையுமாகப் பரவி எத்தனையோ பெண்களின் துயர் துடைத்துக் கொண்டிருந்த போதிலும், ஆண்களில் பெரும்பாலோர் நியாய உணர்வு கொள்ளத் தவறும் ஒரு சமுதாயத்தில் பெண்களின் இந்த இயக்கங்களால் விளையும் பயன் மிகக் குறைவே என்று துர்க்காவும் நினைக்கத் தலைப்பட்டாள்.

நூற்றோடு நூற்றொன்று என்றில்லாமல், சாமிநாதன் தொடங்கிய வார இதழ் இலட்சக் கணக்கில் விற்பனையாகா விட்டாலும், பரவலாக மக்களைச் சென்றடைந்த ஒன்றாயிற்று. மிகவும் அலோசித்ததன் பின்னர், சாமிநாதன் அதற்கு “மகாபாரதம்” என்று பெயர் சூட்டினார்.

துர்க்கா அதன் ஆசிரியர் ஆனாள். மற்ற புலனாய்வு இதழ்கள் பல்வேறு பரபரப்புச் செய்திகளை வெளியிட்ட நேரத்தில், “மகா பாரதம்” பெண்கள் பற்றிய செய்திகளுக்கு முதலிடம் கொடுத்தது. இருப்பினும் தாழ்த்தப் பட்டோர் பற்றிய பிற செய்திகளும் – ஆண்-பெண் பாகுபாடின்றி -அதில் வந்தன. அதன் பக்கங்களை ஒன்று விடாமல் படிக்கும் எவர்க்கும் நாட்டில் நல்லவர்களே அற்றுப் போனார்களோ என்கிற வேதனைதான் வரும். அத்தகைய மோசமான இன்னல்களுக்குப் பெண்கள் ஆட்பட்ட செய்திகள் அதில் நிறைய வந்தன. அந்த வேதனையின் மிகமோசமான அம்சம் பெண்களைப் பாதுகாக்க வேண்டியவர்களே அவர்களைத் துன்புறுத்தி இழிவும் செய்தனர் என்பதுதான்!

விசாரணை என்னும் பெயரால் ஆண் குற்றவாளிகளின் – அல்லது ஐயத்தின் பேரில் குற்றம் சுமத்தப்பட்ட ஆண்களின் – வீட்டுப் பெண்கள் தேவை சிறிதுமற்றுக் காவல் நிலையங்களுக்கு அழைக்கப்பட்டு அங்கே கொடுமையாக நடத்தப் பெற்றனர். காவல் நிலையம் என்றாலே, கற்பழிப்பு ஞாபகம் வருகிற அளவுக்கு அதிர்ச்சியான செய்திகள் வெளிவரலாயின.

தொலைக்காட்சியில், ஒரு திடீர் நேர்முகப் பேட்டியின் போது, சென்னையின் காவல் துறை உயர் அதிகாரியை அவரது முகத்துக்கு நேராக அகில இந்திய மகளிர் முன்னேற்ற மன்றத்தின் தலைவி துர்க்கா கேட்ட “தர்மசங்கடக் கேள்விகள்” அவரை நெளிய வைத்தன. அந்தப் பேட்டி பார்வையாளர்க்கு ஒரு விருந்தாக அமைந்தது.

‘பெண்கள் காவல் நிலையத்துக்குப் போகத் தேவை இல்லை என்பதையும், விசாரணையை அந்தப் பெண்ணின் ஆண் உறவினர் முன்னிலையில் அவளது வீட்டில்தான் நடத்த வேண்டும் என்பதையும் பிரபல ஏடுகளில் விளம்பரங்களின் மூலமும், தொலைக்காட்சி, வானொலி போன்ற பிற ஊடகங்களின் மூலமும் காவல் துறை ஏன் பெண்களுக்குச் சொல்லிவைப்பதில்லை? இவ்வாறு செய்வதன் வாயிலாகக் காவல் நிலையக் கற்பழிப்புகளைத் தடுக்கலாமே! அபலைப் பெண்களைக் கூட்டி வந்து கற்பழிக்கிற அளவுக்குக் காவல் துறையினர் தரம் கெட்டுப் போனதேன்? பெண்களைக் காப்பாற்ற வேண்டியவர்களே இப்படிச் செய்வது பற்றிய செய்திகள் அடிக்கடி வருகின்றனவே? ஏனிப்படி? .. .. ..’ என்கிற, ஆணித்தரமான வினாக்களுக்குரிய திட்டவட்டமான பதில்களைச் சொல்ல முடியாமல் அந்த உயர் அதிகாரி திணறிப் போய் மென்று விழுங்கியது காவல் துறை மீதிருந்த தவற்றை மக்களுக்கு மேலும் தெளிவாக எடுத்துக்காட்டியது.

வரதட்சிணைச் சாவுகள் பற்றிய புகார்களைக் கொடுக்க வரும் தகப்பன்மார்களின் பல சமயங்களில் புகார்கள் ஏற்கப்பட்டுப் பதிவு செய்யப் படுவதில்லை எனும் பரவலான குற்றச்சாட்டுக்கு என்ன காரணம் என்கிற கேள்விக்கும் திருப்திகரமான பதிலை அவர் சொல்லவில்லை. இவையும், மக்களிடமிருந்து “மகா பாரத”த்துக்கு வந்துகொண்டிருந்த கடிதங்களும் பெண்களின் இயக்கம் வலுப்பெற்றுப் பெண்கள் மேலும் போராட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துபவையாகவே எப்போதும் இருக்கலாயின.

.. .. .. 1980 இல் பங்கஜமும், 1982 இல் சாமிநாதனும் காலமாயினர். இயக்கத்தினுடையவும், சமூக அமைப்புகளுடையவும் அனைத்துப் பொறுப்புகளும் இதன் விளைவாகத் துர்க்காவின் தோள்கள் மீது விழுந்தன.

இந்த நெடிய இடைக்காலத்தில், உற்சாகம் மிக்க பெண்மணிகள் பலர் பங்கஜம் தொடங்கிவைத்திருந்த மகளிர் மன்றத்தின் கிளைகளை நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தினர். எனவே, அது நாடு தழுவிய ஓர் இயக்கமாக மலர்ந்தது. நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கூடத் தட்டிக் கேட்கிற வசதியை அதனால் அனைத்து இந்தியாவிலும் பெண்கள் பெற்றனர்.

துர்க்கா நடத்திக்கொண்டிருந்த இயக்கத் தொடர்பான பரபரப்பு நிகழ்ச்சிகள் அன்றாடம் நடந்த வண்ணமாக இருந்தனவே தவிர, மற்றப்படி அவளது சொந்த வாழ்க்கை எந்த மாற்றமோ பரபரப்போ இன்றி ஒரே சீரான லயத்தோடு ஓடிக்கொண்டிருந்தது. மறுமணம் பற்றி நினைக்காததாலும், குழந்தைகள் இல்லாமையாலும் தன் வாணாள் முழுவதையும் பெண்கள் முன்னேற்ற இயக்கத்துக்கு அவளால் அர்ப்பணிக்க முடிந்தது.

பிற புலனாய்வு இதழ்களிலும் சரி, அவள் நடத்திக்கொண்டிருந்த “மகா பாரத”த்திலும் சரி, பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் பற்றி வந்துகொண்டிருந்த செய்திகள் இதயம் உள்ளவர்களின் கண்களை நனைக்கக்கூடியவை. நாடு தழுவிய மகளிர் மன்றத்தின் வாயிலாக, அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களில் பலருக்கு நிவாரணம் பெற்றுத் தர முடிந்தது எனும் ஓர் ஆறுதல்தான் துர்க்காவுக்கு!

.. .. .. நாள்கள் பறந்துகொண்டிருந்தன.

1995 ஆம் ஆண்டில், ஜூன் மாதம் முதல் வாரத்தில், மகளிர் மன்றத்தின் மாநாட்டைச் சென்னையில் நடத்துவதென்று முடிவாகியது.

தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation