எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-4)

This entry is part of 39 in the series 20060609_Issue

சி. ஜெயபாரதன், கனடா“கிளியோபாத்ரா நடை, உடை, பாவனைகளில் தென்படும் அவளது பண்பு நளினம், மாந்தரைச் சந்திக்கும் போது உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில் மெச்சும்படிப் பிரமிக்க வைக்கும். அவளது பேச ஆரம்பித்தால் பேச்சுக் குரலினிதாகிக் கேட்போரைக் கவர்ந்து விடும்”.

சிஸெரோ [Cicero, on Cleopatra’s Death, First Century B.C]

அவளது கண்கள் தீவிரக் கவர்ச்சி வாய்ந்தவை!
அணங்கின் வனப்பிற்கும் அப்பாற் பட்டவை!
வான்வெளி நிலவையும் வசீகரம் செய்பவை!
வாக்கு வன்மையில் நெகிழ வைப்பவள்!
பேசத் துவங்கின் கேட்போர் எவரும்
பகலிரவு மாறுவம் அறியாமல் போவார்!
கவர்ச்சி மொழியாள்! காந்த விழியாள்!
வயது மலரும் அவள் வளமையில் செழித்து!
பொங்கிடு மிளமை அங்க மனைத்தும்!
அவள் சிரித்தால், ஆலயப் பட்டரும்
வைத்தகண் வாங்காது சிலையாய் நிற்பார்!

ஜான் டிரைடென் [John Dryden, Drama: All for Love]

வயது ஏறினும் வதங்காது அவள் மேனி!
வழக்க மரபுகளால் ஒருபோதும் குலையாது
வரம்பிலா விதவித வனப்பு வேறுபாடு!

வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]

கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரைத் தனியாகச் சந்தித்தாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் கள்ளத் தனமாக நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ள வில்லை!

முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் அண்டனி, அக்டேவியன், ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்கு வந்த அண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. அண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சினத்தையும், வெறுப்பையும் மார்க் அண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை அண்டனி மீது போர் தொடுத்து வெற்றியும் அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன அண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்.

அங்கம்: 2 பாகம்: 4

நாடகப் பாத்திரங்கள்:

ஜூலியஸ் சீஸர்: ரோமானியப் போர்த் தளபதி [52 வயது]
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி [20 வயது]
டாலமி XIV: கிளியோபாத்ராவின் தனயன் (கணவன்), எகிப்தின் மன்னன் [15 வயது]
பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா [45 வயது]
போதினஸ்: டாலமியின் பாதுகாப்பாளன் [50 வயது]
தியோடோடஸ்: டாலமியின் ஆசிரியர் [45 வயது]
அக்கில்லாஸ்: டாலமியின் போர்த் தளபதி [53 வயது]
பிரிட்டானஸ்: சீசரின் அரசாங்கச் செயலாளர் [40 வயது]
ரூ·பியோ: சீஸரின் லெ·ப்டினன்ட் [40 வயது]
லூசியஸ் செப்டிமியஸ்: ரோமானிய இராணுவ அதிகாரி [50 வயது]
அபெல்லோடோரஸ்: ஸிசிலியன்

மற்றும்:
பெல்ஸானர்: கிளியோபாத்ராவின் காவலர் காப்டன் [35 வயது]
பெல் அ·ப்பிரிஸ்: மெம்·பிஸ் ரா தேவாலயத்தின் மதாதிபதி.
ரோமானியப் படையாளிகள்.
கிளியோபாத்ராவின் அடிமைச் சேடிகள்.
எகிப்தின் படையாளிகள்

நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. ·பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: பால்ய அரசன் டாலமி, போதினஸ், தியோடோடஸ், அக்கில்லஸ், ஜூலியஸ் சீஸர், ரூபியோ, ரோமானியக் காவலர், எகிப்தின் படையினர்.

காட்சி அமைப்பு: பதினைந்து வயது பால்ய அரசன் டாலமி, [கிளியோபட்ராவின் தமையன் (கணவன்)] பல படிகள் உள்ள பீடத்தின் உயரத்தில் பாதுகாப்பாளர் போதினஸ் அருகில் வர அரச ஆசனத்தை நோக்கிப் படிகளில் ஏறுகிறான். டாலமியின் பயிற்சியாளர் தியோடோடஸ் வலது புறம் படி ஏறுகிறார். படைத் தளபதி அக்கில்லஸ் இடது புறத்தில் இருக்கிறார். மற்ற அரண்மனை அதிகாரிகள், காவலர் சற்று தூரத்தில் கூடி யுள்ளனர். அனைவரும் எழுந்து நின்று மன்னர் டாலமிக்கு வணக்கம் தெரிவித்த பிறகு, அரசன் அமர்ந்த பின் தாமும் உட்காருகின்றனர்.

போதினஸ்: [எழுந்து நின்று] அமைதி! அமைதி! எகிப்த் மன்னர் உங்களுக்கு ஓர் உரையாற்றப் போகிறார்! அமைதி! அமைதி! அவர் பேசுவதைக் கேளுங்கள். [அமர்கிறார்]

தியோடோடஸ்: [எழுந்து] அரசர் முக்கியமான செய்தியை அறிவிக்கப் போகிறார். எல்லோரும் கேளுங்கள். [அமர்கிறார். அவையில் அரவம் ஒடுங்குகிறது]

டாலமி: [எழுந்து நின்றதும், அவையில் பூரண அமைதி நிலவுகிறது] எல்லோரும் கேளுங்கள். நான் அறிவிக்கப் போகும் தகவல் உங்களுக்கு! காது கொடுத்துக் கேளுங்கள். கவனமாகக் கேளுங்கள். நான்தான் உங்கள் மன்னர் ஐயூலெடஸின் முதல் மைந்தன். எனது மூத்த சகோதரி பெரினிஸ் தந்தையைக் காட்டுக்குத் துறத்தி விட்டு நாட்டை ஆண்டு வந்தார். அது மன்னருக் கிழைத்த மாபெரும் அநீதி! … அடுத்து நான் என்ன சொல்ல வேண்டும் …. மறந்து விட்டேனே! [தியோடோஸையும், போதினஸையும் மாறி மாறிப் பார்க்கிறான்]

போதினஸ்: [துணியில் எழுதப்பட்ட தகவலைப் பார்த்து] ஆனால் கடவுள்கள் வேதனைப்படக் கூடாது!

டாலமி: ஆமாம். கடவுகள்கள் வேதனைப் படக் கூடாது! … (மெல்லிய குரலில்) எந்தக் கடவுள்? .. என்ன எனக்கே புரியவில்லை! … [போதினஸைப் பார்த்து] எந்தக் கடவுள் வேதனைப் படக் கூடாது? … சொல்லுங்கள். எனக்கே குழப்பம் உண்டாகுது!

தியோடோடஸ்: அரசரின் பாதுகாவளர் போதினஸ் அரசரின் சார்பாகப் பேசுவார். தொடர்வார்.

டாலமி: ஆமாம். போதினஸே பேசட்டும். கிளிப்பிள்ளை மாதிரி நான் புரியாமல் பேசக் கூடாது. தொடருங்கள் போதினாஸ். [டாலமி ஆசத்தில் அமர்கிறான்]

போதினஸ்: [மெதுவாகத் தயக்கமுடன் எழுந்து தகவலைப் பார்த்து] மன்னர் உங்களுக்குச் சொல்ல விரும்புவது இதுதான். நான் அரசர் கூற்றுக்குச் சற்று விளக்கம் சொல்கிறேன். ·பரோ மன்னர் நமக்குக் கடவுள். ஆகவேதான் கடவுள்கள் வேதனைப்படக் கூடாது என்றார் மன்னர். அதாவது தந்தையைக் காட்டுக்கு அனுப்பி வேதனைப்பட விட்டு, தமக்கை நாட்டை ஆண்டதைக் குறிப்பிடுகிறார். தமக்கை தண்டிக்கப் படவேண்டும் என்றும் கருதுகிறார்.

டாலமி: [சட்டென எழுந்து வேகமாக] இப்போது ஞாபகம் வருகிறது எனக்கு. .. அறிக்கையை நான் தொடர்கிறேன். … ஆமாம், கடவுள்கள் வேதனைப்படக் கூடாது! அந்த வேதனையைத் தவிர்க்க நமது சூரியக் கடவுள் ரோமிலிருந்து மார்க் அண்டோனியை எகிப்துக்கு அனுப்பி வைக்கிறார்.

போதினஸ்: [மெதுவாக டாலமி காதுக்குள்] மார்க் அண்டனி யில்லை, ஜூலியஸ் சீஸர் என்று சொல்லுங்கள். எகிப்துக்கு வந்திருப்பது ஜூலியஸ் சீஸர்.

டாலமி: ஆம்… மார்க் அண்டனி வரவில்லை. .. ரோமிலிருந்து ஜூலியஸ் சீஸர் எகிப்துக்கு அனுப்பப் பட்டிருக்கிறார். ரோமானியர் உதவியால்தான் மீண்டும் என் தந்தை மன்னரானார். தமக்கையின் தலை துண்டிக்கப் பட்டது. தந்தை மரணத்துக்குப் பிறகு மற்றுமோர் தமக்கை, கிளியோபாத்ரா எனக்குப் போட்டியாக வந்தாள். எகிப்தை என்னிடமிருந்து கைப்பற்ற முனைந்தாள்! எப்படி? என்னைக் கவிழ்த்தி விட்டு என் ஆசனத்தில் ஏற முற்பட்டாள்! என்னை யாரும் எளிதில் ஏமாற்ற முடியாது! இரவுக்கு இரவே அவள் தூங்கும் போது அவளைச் சிறைப் பிடித்து, நாடு கடத்தி விட்டேன்! நல்லவேளை, அவளைக் கொல்லாது அவிழ்த்து விட்டேன்! பாலைவனத்தை ஆளும்படி ஆணையிட்டேன்! பாவம் கிளியோபாத்ரா! பாம்புகளும், தேள்களும் நடமாடும் பாலைவனத்தில் வாழ வேண்டும்! பருவ மங்கை சாவாளா அல்லது பிழைப்பாளா, யார் அறிவார்? அவளுக்குத் துணையிருக்கக் காவலரை அளித்தேன். பாவம் கிளியோபாத்ரா! என்னருமை மனைவி அல்லவா அவள்? திருமணத்துக்கு முன்பு அவள் என் தமக்கை! திருமணத்துக்குப் பின்பு அவள் என் தாரம்! அவளைக் கொல்ல மனமில்லை.

போதினஸ்: மகா மன்னரே! உங்களுக்கு பரிவு மிகுதி! கிளியோபாத்ராவை உயிரோடு விட்டது நம் தவறு! மீண்டும் வந்து உங்களைத் தாக்க மாட்டாள் என்பதில் என்ன உறுதி உள்ளது? தமக்கையானாலும் அஞ்சாமல் உங்களைத் தாக்குவாள்! மனைவியானாலும் கணவனைக் கொல்லத் துணிபவள் கிளியோபாத்ரா!

டாலமி: கவலைப் பாடாதே போதினஸ்! அவள் என்னைக் கொல்ல மாட்டாள். நான் அறிவேன் அவளை. பாலை வனத்தில் எந்தப் பாம்பு தீண்டியதோ? எத்தனைத் தேள்கள் கொட்டினவோ? உறுதியாகச் சொல்கிறேன், அவள் உயிருடன் இல்லை! நம் ஒற்றர் கண்களுக்குத் தப்பி அவள் நடமாட முடியாது! உயிரோடு தப்பிவந்து அவள் எகிப்தில் தடம் வைத்தால், தலையைத் துண்டிக்குமாறு ஆணையிட்டிருக்கிறேன்.

அக்கில்லஸ்: தெய்வ மன்னரே! கிளியோபாத்ரா உயிரோடிருக்கிறாள். என் காதில் விழுந்த செய்தி இதுதான்! கிளியோபத்ரா பாலைவனத்தில் சாகவில்லை! சிரியாவில் உயிரோடிருப்பதாக நான் அறிகிறேன். மந்திரக்காரி பிதாதீதா திறமையால், கிளியோபாத்ரா ஜூலியஸ் சீஸரைத் தன்வசப் படுத்தி விடுவாள்! ரோமானியப் படை உதவியால் உங்களைக் கவிழ்த்தி, எகிப்தின் ஏகமகா ராணியாகப் பட்டம் சூட்டிக் கொள்வாள்! அப்படிப் பேசியதாகக் கேள்விப் பட்டேன்.

போதினஸ்: [கோபத்துடன் சட்டென எழுந்து] தேவ மன்னரே! ஓர் அன்னியத் தளபதி உங்கள் ஆசனத்தைப் பறிக்க நாம் விடக் கூடாது! ஜூலியஸ் சீஸரைக் கிளியோபாத்ரா தன்வசப் படுத்துவதற்கு முன்பு, நாம் அவளைப் பிடிக்க வேண்டும்! அவளது மூத்த தமக்கை போன உலகுக்கு அவளையும் அனுப்ப வேண்டும்! அக்கில்லஸ்! சொல்லுங்கள்! எத்தனை ரோமானியப் படை வீரர்கள் எகிப்தில் தங்கி யிருக்கிறார்? எத்தனை ரோமானியக் குதிரைப் படை வீரர்கள் இருக்கிறார்?

அக்கில்லஸ்: ஜூலியஸ் சீஸருக்குப் பின்னால் மூவாயிரம் காற்படைகளும், ஓராயிரத்துக்கும் குறைவான குதிரைப் படைகளும் உள்ளன.

[அதிகாரிகள் ஆரவாரம் செய்து கைதட்டுகிறார். திடீரென சங்கநாதம் முழங்க, வாத்தியங்கள் சத்தமிட ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸர் வருகை அறிவிக்கப் படுகிறது! முதலில் ரோமானிய லெ·ப்டினென்ட் ரூ·பியோ கம்பீர நடையில் அரண்மனைக்குள் நுழைகிறார். பின்னால் அணிவகுத்து ரோமனியக் காற்படை
வீரர்கள் பின் வருகிறார்.]

ரூ·பியோ: வருகிறார், வருகிறார் ரோமாபுரித் தளபதி ஜூலியஸ் சீஸர் வருகிறார். [ஓசை அடங்குகிறது]

[டாலமி மன்னரைத் தவிர அரண்மனையில் யாவரும் எழுந்து ஜூலியஸ் சீஸருக்கு மரியாதை செய்கிறார்.]

தியோடோடஸ்: [எழுந்து நிமிர்ந்து] மன்னாதி மன்னர் டாலமி ரோமானியத் தளபதியை வரவேற்கிறார்.

[ராணுவ உடையில் ஜூலியஸ் சீஸர் நிமிர்ந்த நடையுடன் நுழைகிறார். தலை வழுக்கை தெரிவதை மலர் வலையத்தால் சீஸர் மறைத்துள்ளது தெரிகிறது. அவருக்கருகில் நாற்பது வயதுச் செயலாளர் பிரிட்டானஸ் நிற்கிறார். ஜூலியஸ் சீஸர் டாலமியை நெருங்கி, போதினஸை உற்றுப் பார்க்கிறார்.]

ஜூலியஸ் சீஸர்: [டாலமி, போதினஸை மாறி மாறிப் பார்த்து] யார் மன்னர்? பால்யப் பையனா? அல்லது பக்கத்தில் நிற்கும் மனிதரா?

போதினஸ்: நான் போதினஸ். என் பிரபுவின் உயிர்க் காவலன். [டால்மியைக் காட்டி] மகா மன்னர் டாலமிக்கு அருகில் நிற்பவன்.

[டாலமி உட்கார்ந்து கொண்டே சிரிக்கிறான்]

ஜூலியஸ் சீஸர்: [கனிவுடன் டாலமியின் முதுகைத் தட்டி] மெச்சுகிறேன் டாலமி! உலகமறிந்த வீரருக்குக் கிடைக்காத உன்னத பதவி உமக்குக் கிடைத்திருக்கிறது! என் தமையனின் மகன் அக்டேவியன் போல் நீ இருக்கிறாய்! அவனுக்கும் உன்னைப் போல் உலக அனுபவ மில்லை! நீ எகிப்தின் வேந்தன்! அவன் ரோமாபுரியின் வீரன்! ஆனால் பிற்கால வேந்தன்! இல்லை, பிற்காலத் தளபதி! ரோமானியருக்கு ஏனோவேந்தர்களைப் பிடிக்காது!

டாலமி: எகிப்தின் மன்னர், கடவுளுக்கு நிகரான கடவுளை சீஸருக்குப் பிடிக்குமா?

ஜூலியஸ் சீஸர்: சீஸருக்குப் பிடிக்காமலா, சீஸர் எகிப்துக்கு வருகிறார்? எனக்கு டாலமியைப் பிடிக்கும். கிளியோபாத்ராவையும் பிடிக்கும்!

டாலமி: எனக்கு கிளியோபாத்ராவை அறவே பிடிக்காது! சொல்லுங்கள் சீஸரே! நீங்கள்தான் ரோமாபுரியின் மன்னாதி மன்னரா?

ஜூலியஸ் சீஸர்: டாலமி! சிறிது நேரத்துக்கு முந்திதான் சொன்னேன்! ரோமானியருக்கு மன்னர் என்னும் சொல்லே காதில் படக் கூடாது! நான் ரோமாபுரியின் முதன்மையான போர்த் தளபதி!

டாலமி: [ஏளனமாய்க் கேலியுடன்] அட! நீங்கள் கோழிச் சண்டைத் தளபதியா? அதோ என் போர்த் தளபதி அக்கில்லஸ்! அவர்தான் உங்களுக்கு நிகரானவர்!

ஜூலியஸ் சீஸர்: டாலமி! கடவுள் உமக்கு ஆசனம் மட்டும் அளித்து அனுபவத்தை எப்போது கொடுப்பாரே? நான் கோழிச் சண்டைக்குத் தளபதி அல்லன்! ரோமாபுரிச் சாம்ராஜியத்தின் தலைவிதியை நிர்ணயம் செய்யும் பராக்கிரமசாலி! நான் ரோமானியச் சக்கிரவர்த்தி!

டாலமி: [மெதுவாக தியோடோடஸ் காதில்] அதென்ன வர்த்தி? சக்கிர… சக்கிரவர்த்தி?

தியோடோடஸ்: அதாவது ரோமனியப் பெருமன்னர் என்று அர்த்தம்! சீஸர்தான் ரோமாபுரியின் மகா மன்னர்! அப்படி அழைக்கப்படா விட்டாலும், அவர்தான் மகா வேந்தருக்கு நிகரானவர்!

டாலமி: அப்படியா [எழுந்து நின்று சீஸரின் கைகளைக் குலுக்குகிறான்] மகாமன்னர் ஜூலியஸ் சீஸருக்கு எகிப்த் நாடு வந்தனம் கூறி வரவேற்கிறது! வாருங்கள், வாருங்கள் வந்து அமருங்கள் ஆசனத்தில்.

[ஜூலியஸ் சீஸர் டாலமிக்கு அருகில் உள்ள ஆசனத்தில் அமர்கிறார்.]

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1968]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan June 7, 2006]

Series Navigation