மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 24

This entry is part of 39 in the series 20060609_Issue

ஜோதிர்லதா கிரிஜா


.. .. .. கழிவறையி லிருந்து திரும்பி வந்த பங்கஜத்தைக் கண்ணீருடன் எதிர்கொண்ட சேதுமாதவன் நடந்ததைச் சொன்னதும் அவள் பதறிப் போனாள். தலை சுழல்கிற மாதிரி இருந்தது. ஒரு பைத்தியக்காரியைப் போல் அங்கும் இங்கும் ஓடிக் குழந்தை பதஞ்சலியைத் தேடினாள். எதிர்ப்பட்டவர்களிடமெல்லாம் விசாரித்தாள். ஒரு மணி நேரத்துக்கும் மேல் தேடிப் பயனற்றுப் போன பின், காவல் நிலையத்துக்குப் போய்க் குழந்தையின் அடையாளம், வயது, நிறம் , அணிந்திருந்த உடை போன்றவற்றைத் தெரிவித்து ஒரு புகாரை எழுதிக் கொடுத்தாள். அருவி போய் கொட்டியவாறே இருந்த கண்ணீரைத் துடைத்தவாறே அவன் சேதுமாதவனுடன் தாம்பரத்துக்குப் பயணமானாள்.

வண்டித் தொடர் கிளம்பிச் சிறிது தொலைவு சென்றபின், பக்கத்துத் தண்டவாளத்தருகே ஒரு சிறு கும்பல் கூடி யிருந்ததையும் துண்டிக்கப்பட்ட குழந்தை பதஞ்சலியின் தலை அதனருகே கிடந்ததையும் கண்டு, “அய்யோ! அதோ பாருங்கோ! எங்கொழந்தை!” என்று கதறியபடி சேதுமாதவனுக்குச் சேதியைச் சொன்னபின் பங்கஜம் மயக்கமானாள். .. ..

தாம்பரம் வந்தடைந்த பிறகு, சேதுமாதவன் அக்கம்பக்கத்து மனிதர்களின் உதவியோடு அவளை ஒரு குதிரை வண்டியில் ஏற்றிக்கொண்டு ஸ்திரீ சேவா மண்டலியை அடைந்தான்.

அந்த அமைப்பின் தலைவி ஒரு காங்கிரஸ்காரர் என்பதை அறிந்திருந்ததால், நடந்து முடிந்தவற்றில் எதையும் மறைக்காது சொன்ன பின், சேதுமாதவன், “இப்ப அவா மயக்கமாயிருக்கா. அப்படியே உங்க அசோசியேஷன் டாக்டர் கிட்ட காட்டிட்டு உங்க ஹோம்லேயும் சேத்துண்டேள்னா, நன்னாருக்கும். நான் ஒரு பிரும்மசாரியா யிருக்கிறதுனால, என்னோட இவாளைக் கூட்டிண்டு போகமுடியாது. .. .. இவாளுக்கு கார்டியன்னு யாரும் கிடையாது. அதனால, இவாளை நீங்க அநாதைன்னு குறிச்சிண்டாலும் சரி, அல்லது எம்பேரையும் விலாசத்தையும் குறிச்சிண்டாலும் சரி. “

“அநாதைன்னே போட்டுக்கறேன். எதுக்கும் உங்க விலாசத்தைக் குடுங்கோ. இன்னாரால சேர்க்கப்பட்டவாங்கிறதா மட்டும் குறிச்சுக்கறேன்,” என்று அம் மண்டலியின் தலைவி டாக்டர் முத்துலட்சுமி சொன்னார்.

“ரொம்ப தேங்க்ஸ், சிஸ்டர்! நான் எந்த நேரத்திலயும் கைது செய்யப்படலாம். அதனால, இவாளைக் கொண்டுவந்து இங்க சேத்துட்டு அப்புறம் நான் இந்தப் பக்கம் எட்டிக்கூடப் பாக்கல்லேன்னு – என்னால வர முடியாம போச்சுன்னா- தயவு பண்ணி நெனைச்சுடாதீங்கோ. அப்படி நான் இங்க வந்து எதுவும் விசாரிக்கல்லேன்னா, என்னைக் கைது பண்ணி ஜெயில்ல போட்டுட்டான்னு வெச்சுக்குங்கோ, ” என்று கூறிவிட்டுச் சேதுமாதவன் விடைபெற்றான்.

மயக்கம் தெளிந்ததும், பங்கஜம், “என் கொழந்தை எப்படி அவ்வளவு தூரம் தண்டவாளத்துக்குப் பக்கத்துல போச்சு? யாரு அதைத் துக்கிண்டு போனா? கொழந்தை ஒடம்புல பொட்டுத் தங்கம் கூட இருக்கல்லையே! .. .. சேதுமாதவன் சார் எங்கே? இப்ப நான் எங்கே இருக்கேன்?” என்று ஈனக்குரலில் வினவினாள்.

அவள் அதிர்ச்சியுற்றிருந்ததால், டாக்டர் அவள் உறங்குவதற்கு ஏதோ ஊசியைப் போட்டுவிட்டுப் போனார்.

.. .. .. மறுநாள் சேதுமாதவன் வந்து பார்த்த நேரத்திலும், மயக்க ஊசியின் விளைவாய்ப் பங்கஜம் நினைவற்றுத்தான் இருந்தாள். கொஞ்ச நேரம் இருந்து பார்த்த பின் அவன் புறப்பட்டுப் போனான். மறு நாளே அவன் கைது செய்யப்பட்டுவிட்டதால், அதன் பின் அவன் அங்கு வரவில்லை.

.. .. .. தாசரதி சென்னக்கு வந்ததே தன் நண்பன் ஒருவனுடைய தம்பியின் திருமணத்துக்கு வரும் சாக்கில்தான். அப்படியே, இரண்டு மூன்று நாள்கள் போல் பட்டணத்தில் சுற்றியவாறு பங்கஜம் தென்படுகிறாளா என்று பார்க்கும் ஆசை தான் அவனது வருகைக்கு முக்கியமான காரணம். ஆனால், நிலையத்தை விட்டு வெளியே போவதற்கும் முன்னாலேயே பங்கஜம் தன் குழந்தையும் கையுமாய் அவன் கண்களில் தென்பட்டுவிட்டாள்.

திருமணம் முடிந்து ஊர் திரும்பியதும், தாசரதி தன் நண்பன் ராகவனைச் சந்தித்துத் தனது பிரதாபத்தை அவனிடம் அளந்தான். பங்கஜத்தின் மேல் தப்பு இருந்ததால்தான், தன் பக்கத்திலிருந்து எம்முயற்சியும் இன்றியே அவளைக் குழந்தையுடன் காணும் வாய்ப்பைக் கடவுள் தனக்குக் கொடுத்தார் என்றும் பீற்றிகொண்டான். ரெயில் வந்துகொண்டிருந்த வேளையில் குழந்தையின் கால்களைத் தண்டவாளத்தோடு சேர்த்துப் பிணைத்துச் சாகடித்தும் விட்ட வீரச் செயலை அவன் அளந்த போது ராகவன் திடுக்கிட்டுப் போனான். பங்கஜம் சென்னையில் இருந்தது பற்றிய சேதியைத் தான் அவனிடம் கூறியிருந்திருக்கக் கூடாது என்றெண்ணி அவன் பெரிதும் வேதனப் பட்டான். தன்னைத் தானே நொந்துகொண்டான்.

.. .. .. யாருக்கு என்ன துன்பம் வந்தாலும் சரி, இன்பம் வந்தாலும் சரி, அவற்றால் பாதிக்கப்பட்டு நிலைகுலைந்து நின்று போவதோ அல்லது விரைந்து ஓடுவதோ தனக்கு அழகன்று என்பது போல் காலம் தனது சுழற்சியைத் தாளம் தப்பாமல் ஒரே கதியில் நிகழ்த்திக்கொண்டிருந்தது.

பங்கஜம் கொஞ்சம் கொஞ்சமாய் அதிர்ச்சியிலிருந்து மீண்டு தனது இயல்புக்குத் திரும்பிக்கொண்டிருந்தாள்.

இடைவிடாது ஏதேனும் வேலையில் ஆழ்ந்து ஓடியாடிக்கொண்டிருப்பதன் வாயிலாகத்தான் தன் கவலைகளைத் தன்னால் ஓரளவுக்கேனும் மறக்க இயலும் என்பதைத் தன் அனுபவத்தின் மூலம் மிக விரைவிலேயே புரிந்துகொண்ட பங்கஜம் தான் தங்கியிருந்த அடைக்கல இல்லம் ஸ்திரீ சேவா மண்டலிக்காகத் தன்னாலான எல்லா உழைப்புகளையும் நல்கினாள். அவளது சுறுசுறுப்பையும், நன்றி உணர்ச்சியையும், சலியாத உழைப்பையும் கண்டு தலைவி முத்துலட்சுமி அவளிடம் தனி அன்பு பாராட்டத் தொடங்கினார்.

.. .. .. இதற்கிடையே, வத்தலப்பாளையத்தில் தேவராஜன் காலமானார். அவரது மறைவுக்குப் பின்னர் நடந்த பாகப் பிரிவினையில் பிள்ளைகள் மூவருக்கும் தலைக்கு இரண்டிரண்டு வீடுகள் கிடைத்தன. மழை பெய்யாது இயற்கை தொடர்ந்து சதி செய்ததில், நிலங்கள் போதுமான மகசூலின்றிச் சாவியாகிப் போனதால், வேறு சில சொத்துகளை அவர் விற்றுவிட நேர்ந்தது. அவருடைய மூத்த மகனுக்கு ஏதோ புரியாத பெரிய நோய் வந்த வகையில், மதுரைக்கு அவனைக் கூட்டிச்சென்று மருத்துவம் பார்த்ததில் அவர் நிறையவே செலவு செய்யும்படி ஆயிற்று. எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால், அவர் அனுபவித்து ஆண்டு கொண்டிருந்த நிலங்களின் பெரும் பகுதி தங்களுக்குச் சொந்தமானவை என்றும், அவருடைய தகப்பனார் செய்த மோசடியால் அவை தங்கள் கையை விட்டுப் போயின என்றும் வழக்குப் போட்டிருந்தவர்களின் பக்கம் வெற்றியாகி, நிலங்களில் பெரும்பகுதிகள் பறிபோயின. இவற்றால், தேவராஜனின் குடும்பம் பெரும் பணக்காரக் குடும்பம் என்னும் அந்தஸ்திலிருந்து பெரிதும் கீழே இறங்கிவிட்டது.

அதிலும், பாகப் பிரிவினைக்குப் பின்னர், மூன்று பிள்ளைகளின் சொத்துகளைத் தனித் தனியாக மதிப்பிடுகையில், அவர்களைக் காட்டிலும் அதிகப் பணம் படைத்தவர்கள் சிலர் அவ்வூரில் இருப்பதாக ஆகியது!

தேவராஜன் உயிரோ டிருந்த வரையில், அவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு வத்தலப்பாளையத்தில் இருந்தபடி விவசாயத்தைக் கவனித்துக்கொண்டிருந்த சிவகுரு இப்போது தனது வணிக ஆசையைச் செயல்படுத்துவதில் முனைப்பாக ஈடுபட்டான். எனவே துர்க்காவை அழைத்துக்கொண்டு சென்னைப் பட்டணத்துக்குப் புறப்பட அவன் ஆயத்தமானான். அவன் பெயருக்குத் துர்க்காவின் தகப்பனார் எழுதிக் கொடுத்திருந்த வீட்டையும் விற்றான். பார்த்துப் பார்த்துத் தம் தந்தை கட்டிய பெரிய வீட்டைத் தம் மாப்பிள்ளை விற்றுவிட்டதில் பத்மநாபனுக்குச் சொல்லி மாளாத வருத்தம்தான். அவரும் காவேரியும் சிலுக்குப்பட்டியிலேயே ஒரு சிறிய வாடகை வீட்டில் குடிபுக நேர்ந்தது. வீடு விற்கப்பட்ட அதிர்ச்சியிலும், தம் மனைவிக்கு எதுவுமே மிஞ்சவில்லை என்கிற ஏமாற்றத்தாலும் உள்ளம் உடைந்து போன பத்மநாபன் வாடகை வீட்டில் குடிபுகுந்த பின் ஒரே மாதத்துள் மாரடைப்பால் காலமானார்.

தன் அம்மா யாருமற்ற அநாதையாகி விட்டதைத் தாங்க முடியாத துர்க்கா அவளையும் பட்டணத்துக்குத் தங்களுடன் அழைத்துப் போகலாம் என்று வெளியிட்ட விருப்பத்துக்குச் சிவகுரு செவி சாய்க்கவில்லை. காவேரி கிராமத்திலேயே இருந்து கொள்ளட்டு மென்றும், மாதாமாதம் அவளுக்குத் தான் பணம் அனுப்புவதாகவும் சிவகுரு சொல்லிவிட்டான். கற்கோட்டை போலிருந்த பெரிய வீட்டை எழுதி வாங்கிக்கொண்டதோடு அதை விற்றும்விட்ட அவன் கண்டிப்பும் கறாருமாய் அவ்வாறு சொல்லிவிட்டது துர்க்காவுக்குத் தாங்க முடியாத ஆத்திரத்தை உண்டாக்கிற்று. ஆனால், அம்மா காவேரியைக் கட்டிக்கொண்டு அழுவது தவிர அவள் செய்யக்கூடியது வேறொன்றும் இல்லை!

கொஞ்ச நாள் கழிந்த பிறகு, சிவகுரு அவளை அழைத்துக்கொண்டு பட்டணத்துக்குப் புறப்படுவதற்கு முன்னால், கற்பனைக் கதைகளில் வருவது போன்ற அந்த விபரீதம் நிகழ்ந்தது.. .. ..

.. .. .. பங்கஜத்தின் குழந்தையைக் கொன்றுவிட்டு ஊருக்குத் திரும்பியிருந்த

தாசரதியின் மனம் ஒரு குரூரமான மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருந்தது. ‘சண்டாளி! தாலி கட்டின புருஷன் உயிருடன் இருக்கும் போதே இன்னொருவனுக்குத் தன்னைக் கொடுத்துப் பிள்ளையும் பெற்றுகொண்டவள்! இவளைப் போன்ற பெண்களால்தான் ஊரில் மழையே இல்லை!.. .. .. குழந்தையைப் பறிகொடுத்த வேதனை மட்டுமே அவளுக்குப் போதாது. அதைக் கொன்றவன் நான்தான் என்பது அவளுக்குத் தெரிந்தாகவேண்டும். .. .. தெரிந்தாலும், அவளால் என்னை என்ன செய்யமுடியும்? .. .. ஆனால், அவளது இருப்பிடம் தெரிந்தால்தானே அதை அவளுக்குத் தெரிவிக்க முடியும்? எனினும் விலாசம் தெரியவந்தாலும் கூட, அவளுக்குக் கடிதமெல்லாம் எழுதக் கூடாது. எழுதினால், மாட்டிக்கொள்ள நேரும். வாய் மொழியாகவோ, அல்லது வேறு வழியிலோதான் அவளுக்கு அதைத் தெரிவிக்கவேண்டும். .. .. நடத்தை கெட்ட தேவடியாள்! அவளுக்கு வேண்டும் நன்றாய்! பகவானே அவளை அப்படித் தண்டிக்க எண்ணி யிருக்கிறார்! இல்லாவிட்டால், எக்மோரில் கால் வைத்ததுமே அவள் என் கண்ணில் பட்டிருப்பாளா என்ன!’

அவள் தன் ‘கணவனுடன்’ எக்மோர் ரெயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்ததை நினைத்த போது, ‘எங்கே போவதற்காக அவர்கள் அங்கு வந்திருப்பார்கள்? அவர்கள் போன இடத்தையும், விலாசத்தையும் எப்படிக் கண்டுபிடிப்பது? .. ..’ என்னும் கேள்விகள் அவனை அலைக்கழிக்கலாயின.

.. .. .. தனது “சாதனை” பற்றித் தாசரதி அடித்துக்கொண்ட பெருமை ராகவனை அயர்த்தி யிருந்தது. பங்கஜம் இருக்கும்போதே இன்னொருத்தியை மணந்து “ஜாலி”” யாக இருக்குமாறு அவனுக்கு யோசனை சொன்னவனேயானாலும், இன்று அவனுடைய மகள் “வாழாமல்” நின்ற நிலை அவன் எண்ணங்களைச் செம்மைப்படுத்தி யிருந்தது. ‘இன்று குழந்தையைக் கொல்லத் துணிந்தவன் நாளை பங்கஜத்தையே கொன்றாலும் கொல்லுவான். எனவே, பங்கஜத்தை எப்படியாவது கண்டுபிடித்து அவளை எச்சரித்தாக வேண்டும்’ என்று தீர்மானித்த அவன் தன் பட்டணத்து நண்பனுக்குக் கடிதம் எழுதினான். பேச்சுவாக்கில் அவன்தான் பங்கஜம் பற்றி ராகவனுக்குச் சொன்னவன்.

சேதுமாதவன் என்று தனக்கு ஒரு நண்பன் இருப்பதாகவும் அவன் தான் பங்கஜத்தைப் பற்றித் தனக்குச் சொன்னதாகவும் சுப்பிரமணியம் எனும் அந்த நண்பன் அவனுக்குச் சொல்லி யிருந்தான். பங்கஜத்தின் சொந்த ஊரின் பெயர், அவள் கணவனால் தள்ளிவைக்கப்பட்டவள் ஆகிய விவரங்களுடன், அவளை மணந்துகொண்டிருக்கும் தற்போதைய கணவன் சாமிநாதன் வத்தலப்பாளையத்தைச் சேர்ந்தவன் எனும் விவரத்தையும் அவன் சொன்னதால்தான் அவள் தாசரதியின் மனைவி பங்கஜம்தான் என்பதை ராகவனால் ஊகிக்க முடிந்திருந்தது. எனவே, அவன் மூலம் அவளது தற்போதைய இருப்பிடம் தெரிந்தால் அவன் உதவியாலோ – அல்லது அந்தச் சேதுமாதவன் உதவியாலோ – அவளை எச்சரித்து வைக்கத் தோதா யிருக்குமே என்று அவன் நினைத்தான்.

அவனுக்கு மனைவி இல்லை. எனவே, தனக்குப் பிறகு தன் மகளுக்கு யார் துணையாக இருந்து பாதுகாப்புக் கொடுப்பார்கள் என்கிற கவலை அவனை அரிக்கத் தொடங்கி யிருந்தது.

சென்னையில், அபலைப் பெண்களுக்காக ‘சிஸ்டர்’ முத்துலட்சுமி என்பவரால் நடத்தப்பட்டு வந்த அடைக்கல அமைப்பைப் பற்றி அவன் கேள்விப்பட்டிருந்தான். அதைப் பற்றிய விவரங்களையும் அவன் விசாரித்தறிய விரும்பினான். அதைப் பற்றி விசாரித்துத் தான் எழுதும் கடிதத்தில் நாசூக்காகப் பங்கஜம் பற்றியும் விசாரித்துத் தெரிந்துகொள்ள அவன் முடிவுசெய்தான்.

மறு வாரமே அந்த நண்பனிடமிருந்து பதில் வந்துவிட்டது. பணக்காரக் குடும்பத்துப் பெண்ணா யிருப்பினும், ஆதரவற்றவளா யிருந்தால் சேர்த்துக் கொள்ளுவார்க ளென்றும், ஆனால் பணம் கட்ட வேண்டியது வருமென்றும், அவரவர் வசதிக்கேற்பக் கட்டணத் தொகை இருக்குமென்றும் , யாருமற்ற அநாதைகளாக இருப்பின், எந்த நிபந்தனையுமின்றி – ஒரு பைசாக் கட்டணம் கூட இல்லாமல்- சேர்த்துக்கொண்டு பராமரிப்பார்கள் என்றும் அவன் தன் கடிதத்தில் ஸ்திரீ சேவா மண்டலி பற்றி எழுதி யிருந்தான். பங்கஜம் எனும் அந்தப் பெண் தன் குடியிருப்பைக் காலி செய்துவிட்டு வேறு எங்கோ சென்று விட்டதாகவும், நண்பன் சேதுமாதவனை வெள்ளைக்காரர்களுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளுக்காகப் போலீசில் பிடித்துக்கொண்டு போய்விட்டதால் அவளைப் பற்றித் தெரிவிக்கக்கூடியவர்கள் வேறு யாருமில்லை என்றும் அவன் தெரிவித்திருந்தான்.

சிஸ்டர் முத்துலட்சுமிக்கு எழுதிக்கேட்டு, அவரிடமிருந்து பதில் வந்ததும் ராகவன் தன் மகள் சத்தியபாமாவை அழைத்துக்கொண்டு சென்னைப் பட்டணத்துக்குப் பயணமானான்.

.. .. .. ஊரிலிருந்து வந்திருந்த சின்னக்கண்ணுவை உடனழைத்துக்கொண்டு வள்ளி தன் “மைத்துனர்” பத்மநாபனின் மரணத்துக்குத் துக்கம் விசாரிப்பதற்காக அன்று செங்கல் பாளையத்துக்குப் புறப்பட்டாள். ‘துக்கம் கேக்குறதுக்குப் போறப்ப ஏங்கூட ஒரு தொணை யிருந்தா நல்லாருக்கும், சின்னக்கண்ணு! நீயும் ஏங்கூட வா,” என்று வள்ளி அவளையும் கூட்டிக்கொண்டாள்.

துர்க்காவுக்குத் திருமணம் ஆனதன் பிறகு வள்ளி பத்மநாபனின் வீட்டுக்குப் போவதைக் குறைத்துக் கொண்டிருந்தாள். அவளுடன் தாங்கள் இன்னமும் போக்குவரத்து வைத்துக்கொண்டிருப்பதாய்த் தெரிந்தால், சம்பந்தி வீட்டார் அதை ஆட்சேபிப்பதோடு, அதைச் சாக்கிட்டுத் தொல்லையும் தருவார்கள் என்று பத்மநாபனும் காவேரியும் அவளுக்குப் படித்துப் படித்துச் சொல்லியிருந்ததால், அவள் இருட்டிய பிறகே எப்போதேனும் சென்று கைச் செலவுக்குப் பணம் பெறுவதை வழக்கமாய்க் கொண்டிருந்தாள்.

பத்மநாபன் காலமாகிவிட்ட செய்தி யார் வாயிலாகவோதான் அவளுக்குத் தெரிய வந்திருந்தது. சேதி தெரிந்ததும் அவள் புறப்பட்டுவிட்டாள். அவர்கள் வீட்டிலிருந்து இனித் தனக்குப் பண உதவி ஏதும் கிடைக்காது என்று அவளுக்குத் தோன்றியது. துர்க்காவுக்குக் கலியாணம் ஆன பிற்பாடு அவர்கள் அவளுக்குக் கொடுத்துவந்த தொகையைக் குறைத்து விட்டார்கள். சம்பந்திமார்கள் பணம்பிடுங்கிகளா யிருந்ததால், வள்ளியோடு தன் அண்ணா வைத்திருந்த தொடர்பைச் சாக்கிட்டு வேறு எக்கச்சக்கமாய்ப் பணம் வாங்கிக்கொண்டு விட்டதாகவும், எல்லாவற்றையும் விற்க வேண்டிய நிலைக்குத் தாம் ஆளாகி விட்டிருந்ததாகவும் பத்மநாபன் ஏற்கெனவே அவளுக்குச் சொல்லி யிருந்தார்.

வள்ளியின் மகளுக்குத் திருமணம் நிச்சயமாகி யிருந்தது. அதற்காகத்தான் சின்னக்கண்ணு வந்திருந்தாள். திருமணம் இன்னும் மிகச் சில நாளில் நடப்பதற் கிருந்தது. அந்த இடைவெளியில் வள்ளியுடன் தங்கித் திருமணம் முடிகிற வரையில் அவளுக்கு ஒத்தாசையா யிருக்கும் பொருட்டே அவள் வந்திருந்தாள்.

பத்மநாபன் வீட்டுக்குப் போகிற வழியில் ஒரு நகைக் கடை இருந்தது. அதைப் பார்த்ததும், “வள்ளி! அந்த நகைக்கடையில என்னோட மோதிரத்துக்குப் பாலீஸ் போட்டுக்கிறலாம், வாரியா?” என்று சின்னக்கண்ணு சொல்ல, வள்ளியும் அவளும் அந்நகைக் கடைக்குள் போனார்கள்.

வேலை முடிந்ததும் பத்மநாபனின் வீட்டுக்குப் போனார்கள்.

.. .. .. . “அய்யோ! சாமி! போய்ட்டீகளா?” என்று அழத் தொடங்கிய வள்ளி அந்த வீட்டுக் கூடத்தில் குத்துக்காலிட்டு உட்கார்ந்தாள். சின்னக்கண்ணு அவளுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தாள். வள்ளியின் குரல் கேட்டு அடுக்களையிலிருந்து கூடத்துக்கு வந்த காவேரியைக் கண்டதும், சின்னக்கண்ணு வியப்பின் விளிம்புக்கே போனாள்.

“அம்மா! அன்னைக்கு ராவுல ஆத்தங்கரையில வந்து கொளந்தையை வாங்கிட்டுப் போனீங்களே, நெனப்பு இருக்கா?” என்று சின்னக்கண்ணு தன் வியப்பைக் கணமும் தாமதிக்காமல் இயல்பாய் ஓங்கிவிட்ட குரலில் வெளிப்படுத்தினாள்.

அப்போதுதான் சின்னக்கண்ணுவைச் சரியாய்க் கவனித்த காவேரிக்குப் படபடவென்று வந்தது. எச்சில் விழுங்கினாள். வாயில் விரல் வைத்துக் கண்களை மலர்த்தி, “மேலே எதுவும் பேசாதே,” என்று காவேரி சின்னக்கண்ணுவை எச்சரித்தாள்.

வள்ளி அழுவதை நிறுத்தி யிருந்தாள். அவளுக்குப் புரிந்துவிட்டது – அவர்களுடைய மகளாக வளர்ந்து திருமணமும் செய்விக்கப்பட்ட துர்க்காதான் அந்தக் குழந்தை என்பது!

“இத பாருங்கம்மா! அன்னைக்கி ராவுல நீங்க குடுத்த மோதிரம். இப்பதான் பாலீஸ் போட்டேன். வள்ளியோட மகளுக்குக் கலியாணம் நிச்சியமா யிருக்கு. அதுக்குக் குடுக்கிறதுக்குத்தான் எடுத்தாந்தேன். .. ..” என்று மிக மெல்லிய குரலில் சொல்லிவிட்டு, மடித் தலைப்பில் முடிந்து வைத்திருந்த மோதிரத்தை எடுத்து அவளிடம் சின்னக்கண்ணு நீட்டினாள். அதை வாங்கிப் பார்த்த காவேரி “கே.பி.” (K.P.) எனும் ஆங்கில எழுத்துகள் அதில் மின்னியதைப் பார்த்துவிட்டு முகம் வெளிறியவளாய் அதை அவளிடம் திருப்பிக் கொடுத்தாள்.

கூடத்து அறைக்கதவு ஒருக்களித்துச் சாத்தப் பட்டிருந்தாலும், அதனுள்ளிருந்த துர்க்கா கூடத்தில் நடந்ததை யெல்லாம் கவனித்துக்கொண்டிருந்தாள்.

– தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation