மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 21

This entry is part of 48 in the series 20060519_Issue

ஜோதிர்லதா கிரிஜா


சென்னையில் குடித்தனம் நடத்தத் தொடங்கிய பின் ஓர் ஆண்டு வரையில் அதன் விளைவு ஏதுமற்றிருந்த பிறகு, பங்கஜம் கருத்தரித்தாள். இந்த இடைக்காலத்தில் சாமிநாதன் இரு முறை ஊருக்குப் போய்த் தாயைப் பார்த்துவிட்டு

வந்திருந்தான். முதல் தடவை பங்கஜம் பற்றிப் பேச்சு வந்த போது, அப்பாவையும் இழந்து அநாதையாகிவிட்ட நிலையில் அவள் எங்கேயாவது சென்று உயிரை விட்டிருக்க வேண்டும் என்று ஊரில் ஒரு வதந்தி நிலவுவதாகத் தங்கம்மா அவனிடம் கூறினாள். அவன் மெல்லப் பேச்சை மாற்றினான். எனினும், தான் எந்த எதிரொலியும் காட்டாதது தங்கம்மாவை வியப்பில் ஆழ்த்திவிட்டது புரிந்தது. எனவே, ஒப்புக்காக, ‘பாவம் அந்தப் பொண்ணு’ என்ரு சொல்லி வைத்தான்.

தேச விடுதலைப் போராட்டத் தீவிரவாதக் கும்பலில் ஒருவனா யிருந்ததால், சாமிநாதன் அடிக்கடி சென்னையைவிட்டு அயலூர்களுக்குச் செல்லும்படி நேர்ந்தது. முக்கியமாய்ப் பாண்டிச்சேரிப் பக்கம் அடிக்கடி போவான். அப்போதெல்லாம் பங்கஜம் தனியா யிருக்க நேர்ந்தது. பட்டணத்துக்கு வந்த பிறகு, சாமிநாதனின் பயிற்சி முறைகளால் அவளுக்குத் துணிவும் தன்னம்பிக்கை யும் பெரிய அளவில் ஏற்பட்டிருந்தன. முன்பு போலின்றிப் பிழையற்ற தமிழில் விரைவாக எழுத அவள் கற்றுக்கொண்டுவிட்டாள். இன்னும் சில நாள்களில் ஆங்கிலத்திலும் அவளைக் குறைந்த பட்சத் தேர்ச்சியேனும் உள்ளவளாக ஆக்கிவிடவேண்டும் என்பது அவனது குறிக்கோளா யிருந்தது.

‘இங்கிலீஷ் படிச்சு நான் பெரிசா என்ன குப்பைகொட்டப் போறேன்?’ என்று அவள் சொல்லிச் சிரித்ததை அவன் வலுவாக மறுத்துவிட்டான். ‘இத பாரு, பங்கஜம்! நம்ம தேசம் பல விதத்துலேயும் மாறப் போறது. இப்பவே மாற ஆரம்பிச்சாச்சு. அதுக்கான அறிகுறிகள்ளாம் அங்கங்கே தெரியத் தொடங்கி யிருக்கு. ஒரு சமயம் நான் கடையத்துக்குப் போயிருந்தப்போ, அங்கே சுப்ரமணிய பாரதின்னு ஒரு பெரிய தேசபக்தரைத் தற்செயலாச் சந்திச்சேன். நிறைய தேசபக்திப் பாட்டுகள் எழுதி யிருக்கார். நம்ம தேசம் விடுதலையே அடைஞ்சுட்டதாக் கற்பனை பண்ணி அதுக்கான பாடல்களையும் எழுதியிருக்கார். பொண்ணுகளைப் பத்தி, அவா அடிமைகளா யிருக்கிறதைப் பத்தி – அவாளுக்குத் தனிச் சட்டங்கள் போட்டு ஆம்பளைகள் அவாளுக்கு அநியாயம் பண்ணி வெச்சிருக்கிறதைப் பத்தி, அவா இனிமே தைரியமா ஆம்பளைகளை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் பத்தி, அவா கல்வியறிவு பெற வேண்டிய அவசியம் பத்தி யெல்லாம் என்னமாப் பேசறார் மனுஷன்! நம்ம தேசம், நம்ம மனுஷா, நம்ம தேசத்துப் பொண்ணுகளோட நெலைமை – சுருக்கமாச் சொல்லணும்னா ஒரு சமுதாய அக்கறை – நேக்கு வந்ததே அவரோட பாட்டையும் பேச்சையும் கேட்டதுனாலதான். காந்திக்கும் அப்படி ஒரு சிந்தனை உண்டுதான். நான் இல்லேங்கல்லே. ஆனா பாரதியார் என்னை ரொம்பவே பாதிச்சுட்டார். .. .. பெண் விடுதலை, அது இதுன்னு பெரிய லட்சியவாதியாட்டமா மனசுக்குள்ள மட்டும் ஒரு மனுஷன் இருந்தாப் போறுமா, பங்கஜம்? என்னோட பொண்டாட்டியை நான் ஒரு கட்டுப்பெட்டியா வெச்சுட்டு, ஊர்ல இருக்கிற பொம்மனாட்டிகள் மேல ரொம்பவும்தான் அக்கறை மாதிரிப் பேசினா அது நியாயமா? நீயே சொல்லு. ஆணும் பெண்ணும் ஒரு சமுதாயத்தோட ரெண்டு கண்களாட்டாமான்னு சுப்ரமணிய பாரதியார் சொல்லியிருக்கார். ‘ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால், அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம், பூணு நல்லறத்தோடிங்குப் பெண்ணுருப் போந்து நிற்பது தாய் சிவசக்தியாம், நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம், ஞான நல்லறம், வீர சுதந்திரம், பேணும் நற்குடிப் பெண்ணின் குணங்களாம், பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ?’ அப்படினு பாடியிருக்கார்! ‘

‘நாணம்கிறது பொண்ணுகளுக்குக் கண்டிப்பா யிருக்கணும்னா! அச்சமும் இருக்கணும்!’

‘நாணம்னு அவர் சொன்னது நீ நினைக்கிறபடியான நாணமில்லே, பங்கஜம்! பெண்களோ, ஆண்களோ எதுக்கு வெக்கப்படணுமோ அதுக்கு வெக்கப்பட்டா போறும். .. .. இப்ப உன்னையே எடுத்துக்கோ. ரொம்பவும் அஞ்சி யிருந்தியானா, நீ என்னோட கெளம்பி வரச் சம்மதிச்சிருந்திருக்கவே மாட்டே! இல்லியா? நமக்கு நியாயமாக் கிடைக்க வேண்டியதுக்குப் போராட்றதுக்கு அச்சமோ, கூச்சமோ வரவே கூடாது!”’

‘இப்ப நீங்க சொல்ற வியாக்கியானம் வேணாச் சரியா யிருக்கலாம். ஆனா, வெக்கம்கிறது பொண்ணுகளுக்கு இருக்கணும்னா! இல்லேன்னா, அவாளுக்குத்தான் கெடுதல். ஆம்பளைகள் அவாளை இன்னும் நன்னாவே வேட்டை யாடிடுவா! ஆணும் பொண்ணும் சமம்கிறதை நான் ஒத்துக்க மாட்டேன். தங்களிட்ட சரீர பலம் அதிகமாயிருக்குன்றதால, புருஷா பொண்ணுகளை அநியாயமா அடக்கி யாளவோ அக்கிரமங்கள் பண்ணவோ கூடாதுன்னு வேணாச் சொல்லுங்கோ. இவா கிட்ட சிலது இருக்கு. அவா கிட்ட சிலது இருக்கு. ஒருத்தர் கிட்ட இல்லாததை மத்தவா இட்டு நிரப்பி, ஈடு செய்யறா. அப்படித்தான் நேக்குத் தோண்றது!’

சாமிநாதன் சிரித்துக் கைதட்டினான்: ‘அட! நன்னாத்தான் பிரசங்கம் பண்றே! நிறையப் படிச்சிருந்தா என்னை வித்து வெல்லம் வாங்கித் தின்னுடுவே போலேருக்கே!’

‘யோசிக்கிறதுக்குப் படிச்சிருக்கணுமா என்ன! எங்களோட யோசனைகளையெல்லாம் நாங்க வாய்விட்டு வெளியில சொல்லிக்கிறதில்லே. ஏன்னா, எதுவும் எடுபடாதுன்னு எங்களுக்குத் தெரியும். அதை வெச்சு எங்களுக்கு யோசிக்கவே தெரியாதுன்னுட்றதா என்ன?’

‘அட!’ என்று சாமிநாதன் உண்மையாகவே தன் வியப்பை வெளிப்படுத்தினான்:

‘கிட்டத்தட்ட அதையே தான் நானும் சொல்றேன், பங்கஜம்! பொண்ணுகள்ளாம் படிச்சா நிச்சியமா இன்னும் அதிகமாவே யோசிப்பா. யோசனைகளை வெளியிட்றதுக்கு உண்டான தைரியமும் அவாளுக்கு வரும். அது வந்தாத்தான் நல்லது. இல்லேன்னா, இன்னும் பல நூறு வருஷங்களுக்குப் பொண்ணுகளுக்கு விமோசனமே இல்லே! இப்ப பாரு. நீ தைரியமா என்னோட கெளம்பி வந்தே. உன்னை மாதிரி எல்லாப் பொண்ணுகளும் துணிஞ்சா, அவா ஒரு மூலையில உக்காந்துண்டு மூக்கைச் சிந்திண்டிருக்க வேண்டாம், பாரு! பொண்டாட்டி செத்தா அந்தப் புருஷன் மறு வருஷமே புது மாப்பிள்ளை. ஆனா, பொண்ணு? இதென்ன நியாயம்? இப்ப உன்னோட விஷயத்தையே எடுத்துக்கோ. வரிசையாப் பொண்ணாவே பொறந்துதுன்னு உன்னை அவன் தள்ளி வெச்சான். அது பொண்ணோட ஒடம்பு வாகா, இல்லே, புருஷனோட ஒடம்பு வாகான்னு யாருக்குத் தெரியும்? .. .. .. அது இருக்கட்டும், நீ எப்ப என்னை அப்பாவாக்கப் போறே?”

பங்கஜத்தின் முகம் அவள் பெயருக்கேற்பத் தாமரை போன்றே சிவந்து மலர்ந்து போயிற்று.: ‘இன்னும் எட்டே மாசத்துலே!’

.. .. .. சாமிநாதன் முகமலர்ச்சியுடன் இவ்வுரையாடலை யெல்லாம் ரெயில் பெட்டியில் பயணம் செய்தபடி நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். ‘அம்மாவுக்கு இது எவ்வளவு பெரிய அதிர்ச்சியா யிருக்கும்! ’

பங்கஜத்தையும் தன்னுடன் அழைத்துச் செல்ல அவன் பெரிதும் அவாவினான். ஆனால், அவள் அதற்கு இணங்கவே யில்லை. எவ்வளவோ வாதாடிப் பார்த்தும், அவள் கொஞ்சங்கூட மசியவில்லை. உண்மையில், அவனுக்கே அந்தத் துணிச்சல் முழுமையாக வரவில்லை. பயந்து நடுங்கிக்கொண்டேதான் பயணம் செய்துகொண்டிருந்தான். ஓர் ஆண்பிள்ளையாகிய தன்னிடம் கூட இல்லாத துணிச்சலைப் பட்டிக்காட்டுப் பெண்ணான பங்கஜத்திடம் எப்படி எதிர்பார்க்க முடியும் என்றெணிப் பெருமூச்சுவிட்டான். அம்மாவைச் சமாதானப் படுத்தவோ சமாளிக்கவோ தன்னால் முடியுமா என்கிற ஐயத்தில் அவன் கலங்கித்தான் போயிருந்தான்.

.. .. .. போய்ச் சேர்ந்த அன்றே பிற்பகலில் சாமிநாதன் பேச்சைத் தொடங்கினான்: “அம்மா! உங்கிட்ட ரொம்ப முக்கியமான ஒரு விஷயம் சொல்லணும். அதைக் கேட்டுட்டு நீ பதறக்கூடாது. ஏன்னா, கொஞ்சம் அதிர்ச்சியான விஷயம்.”

தங்கம்மா விரிந்த விழிகளால் அவனை ஏறிட்டாள்: “என்னடா சொல்ப்போறே? கல்யாணம் வேண்டாம், காட்சி வேண்டாம்னு சொல்லிண்டு நீ தனிமரமா நின்னுண்டிருக்கியே அந்த அதிர்ச்சியையும் மனக்கஷ்டத்தையும் விடவா பெரிய அதிர்ச்சி இன்னொண்ணு இருக்கப் போறது?”

“இஇஇ.. .. ..இல்லேம்மா.. .. இது ரொம்பவே அதிர்ச்சியான விஷயம்.. .. “

“சொல்லு.”

“ .. .. .. .. .”

“சொல்லுடா!”

“.. .. அம்மா! நீயும் இந்த ஊர்க்காராளும் நினைச்சிண்டிருக்கிற மாதிரி, பங்கஜம் கொளம், குட்டை எதிலேயும் விழிந்து உசிரை விடல்லே.”

தங்கம்மாவின் முகத்தில் ஒரு வெண்மை கணத்துள் பரவியது. பயங்கரமான – தன்னால் சற்றும் செரித்துக்கொள்ள முடியாத – அந்த உண்மையைச் சரியாகவே ஊகித்துவிட்ட பொருள் ததும்பிய பார்வையை அவன் மீது பதித்தபடி, அவள், “அப்பிடின்னா?” என்றாள்.

“பங்கஜம் என்கூடத்தான் இருந்திண்டிருக்காம்மா!”

“என்னது! உங்கூட இருக்காளா! என்னடா சொல்றே நீ? அப்படின்னா, அவளை நீ வெச்.. .. வெ.ச்சிண்டா இருக்கே?”

சாமிநாதனுக்கு முகம் சிவப்பேறிப் போயிற்று. அவன் தலை தாழ்ந்தது. ஆனால், மறு நொடியே சமாளித்துக்கொண்டு, தலை உயர்த்தி நேராகத் தங்கம்மாவை நோக்கினான்: “அப்படியெல்லாம் அசிங்கமாப் பேசாதேம்மா. அவளுக்கு நான் முறையாத் தாலிகட்டி யிருக்கேன். இப்ப அவன் என் பொண்டாட்டி.”

தங்கம்மாவின் கண்கள் உடனேயே நிறைந்து அவற்றின் விளிபுகளைத் தாண்டிக் கண்ணீர் பெருகி வழியலாயிற்று.

“அம்மா! இப்ப என்ன நடந்துடுத்து?”

“ இன்னும் என்னடா நடக்கணும்? நம்ம ஜாதியென்ன? குலமென்ன? கோத்திரமென்ன? பழக்கவழக்கமென்ன? இப்படி ஒரு தகாத காரியம் பண்ணிட்டு வந்து அதைப் பத்தின கூச்சமே இல்லாம என் எதிர்ல நின்னுண்டு அதை உன் வாயாலெயே சொல்லவேற செய்யறியே! தூ! நோக்கு வெக்கமாயில்லே? அன்னிக்கு அந்தத் தடிச் சிறுக்கியை நீ நம்மாத்துல வேலைக்கு வெச்சுக்கலாம்னு சொன்னப்பவே நேக்கு லேசா நெருடித்து. என்ன சொக்குப் பொடி போட்டாளோ அந்தச் சிறுக்கி!”

“அம்மா! இத பாரு. அவ நிரபராதி. அவளை எதுவும் குத்தம் சொல்லாதே. அவ மாட்டவே மாட்டேன்னுதான் சொன்னா. நான் தான் அவளைக் கட்டாயப் படுத்தினேன்.”

“கட்டயப்படுத்தினா விழுந்துடணுமா? நல்ல பொம்மனாட்டிகள் அப்படி விழமாட்டாடா. அவ துக்கிரி ஜென்மம். ஓடுகாலி.”

“சரி. விடு. இந்த அளவுக்கு அவளை வெறுக்குற உங்கிட்ட இனிமே நேக்கென்ன வேலை? நான் போறேன்.. .. அவ பிள்ளை உண்டாயிருக்கா. உங்கிட்ட கொண்டுவந்து விடலாம்னு நெனச்சேன்.. .. ஆனா நீ என்னடான்னா .. ..”

“அந்தக் கண்றாவி வேற வந்துடுத்தா! ராம, ராமா! அவ இந்தாத்து வாசப்படி கூட மிதிக்க விடமாட்டேண்டா. தெரிஞ்சுதா? என் பேச்சை மீறி அவளை நீ கூட்டிண்டு கீட்டிண்டு வந்து நின்னியோ.. .. .. நான் நம்மாத்து உத்தரத்துல தொங்கிடுவேன்! இது சத்தியம்!”

அவன் திகைத்துப் போய் நின்றான்.

‘நீ இப்படி ஒரு அவலக்காரியம் பண்ணினதுக்கு, பேசாம பிரும்மசாரியாவே இருந்திருக்கலாம்டா. கண்றாவி!”

“சரிம்மா. நமக்குள்ள எதுக்கு வீண் தர்க்கம்? நான் கெளம்பறேன்.. .. ஒண்ணு மட்டும் சொல்லிட்டுப் போறேன், கேட்டுக்கோ. பிள்ளைகளோட சந்தோஷந்தான் தன்னோட சந்தோஷம்னு நினைக்கிறவதான் நிஜமான அம்மா. மத்தவாள்ளாம் சும்மா!”

“அப்படியே வெச்சுக்கோடா. உன்கிட்ட செர்ட்டிபிகேட் வாங்கறதுக்காக நான் கண்ட கழிசடைகளையும் வீட்டுக்குள்ள விட முடியாது. அன்பில்லாத அம்மாவாவே நான் இருந்துட்டுப் போறேன்.. .. என்னோட அன்பைப் பத்திப் பேசறதுக்கு நோக்கென்ன தகுதிடா இருக்கு? உன் பாஷையிலேயே நானும் பேசலாமோல்லியோ? அம்மா மனசு கோணாம நடக்கிறவன் தான் நிஜமான பிள்ளை, மத்ததெல்லாம் சள்ளைன்னு!…. போடா! போ! என்னமோ பேச வந்துட்டான், பெரிசா!”

அவன் முகத்தைப் பார்த்துக்கொண்டு நிற்கவும் பிடிக்காதவள் போல் தங்கம்மா விருட்டென்று அடுக்களைக்குள் புகுந்து கொண்டாள்.

சாமிநாதன் மனம் வெறுத்துப் போய் உடனேயே புறப்பட்டுவிட்டான்.

.. .. .. “பங்கஜம்! நீ சொன்னது சரிதான். அம்மா நம்ம வழிக்கு வரவே மாட்டா. அவாளை மசியவைக்கவே முடியாது. ஒரு வேளா நம்ம ஊர்ப்பக்கமே நாம பல காலம் தலை காட்டாமயே இருந்தா, அது சாத்தியப் படுமோ என்னமோ!”

“நேக்கு நம்பிக்கை இல்லேன்னா.. .. ஆறு மாசத்துக்கு ஒரு தரம் போய் 1500 ரூவா அம்மாகிட்டேர்ந்து வாங்கிண்டு வந்திண்டிருந்தேளே? இனிமே அது கிடைக்காது. இல்லியா?”

“ஆமா. கிடைக்காது. தவிர பணம் தான்னு எந்த மூஞ்சியெ வெச்சிண்டு நான் போய் அவா முன்னாடி நிக்கறது? .. .. நல்ல வேளையா நான் ஏதோ கொஞ்சம் சேத்து வெச்சிருந்ததால இத்தனை நாளும் வண்டி ஓடித்து. இனிமே கஷ்டந்தான். பாக்கலாம். அச்சா·பீஸ்லெ இன்னும் கொஞ்சம் அதிகமா வேலை பண்ணணும்னு நினைக்கறேன்.. ..”

“கொழந்தை வேற வரப் போறதேன்னா?”

சாமிநாதன் உடனே பதில் சொல்லவில்லை.

சற்றுப் பொறுத்து, “பங்கஜம்! நாம ரெண்டு பேரும் இனிமே நிறைய நூல் நூக்கலாம். அதுல கொஞ்சம் வருமானம் வரும். இத்தனை நாளும் கூட அதைச் செஞ்சிருக்கலாம். ஏனோ தோணாம போயிடுத்து. ஒரு ராட்டை வாங்கிடறேன். என்ன சொல்றே?” என்றான் முகமலர்ச்சியோடு.

“அதுல என்னன்னா பெரிசா வருமானம் வந்துடப் போறது?”

“அப்பிடி இல்லே, பங்கஜம். ஒண்ணுமில்லாததுக்கு ஏதோ ஒண்ணு. கொஞ்ச நளுக்கு முந்தி யங் இண்டியா பத்திரிகையில நம்ம ராஜகோபாலாச்சாரி இது பத்தி எழுதியிருந்தார். “ராட்டையில நூல் நூக்கறதுல வர சம்பாத்தியம் ரொம்ப சொற்பம்னு சிலர் சொல்றா. அப்படி கிடையாது’ ன்னு தொடங்கி, அவர் அது பத்தி விவரமாவே எழுதியிருக்கார். சேலம் ஜில்லாவில சங்கரகிரின்ற ஊர்ல ரெயில்வே தொழிலாளிகள் ஒரு நாளுக்கு, ஆம்பளையா யிருந்தா நாலனா, பொம்மனாட்டியா யிருந்தா ரெண்டணான்னு கூலி வாங்கறாளாம். ஆத்துலேர்ந்து கெளம்பற நேரம், சாப்பாட்டு இடைவேளை, வேலை செய்யற மொத்த நேரம், ரெயில்வே ஸ்டேஷன்லேர்ந்து ஆத்துக்குப் போற நேரம் எல்லாமாச் சேத்து மொத்தம் பன்னண்டு மணி யாறதாம். இந்தப் பன்னண்டு மணி நேரத்துல அவா மொத்தம் நாலணாதான் சம்பாதிக்கிறா. அத்தோட ஒப்பிட்டோம்னா, ராட்டையில சிட்டம் சிட்டமா நூல் நூத்து நாம் சம்பாதிக்கிறது அதுல முக்கால்வாசிக்கும் மேலேன்னு கணக்குப் போட்டுப் பாத்துச் சொல்றார். அதுல இன்னொரு லாபம் வேற இருக்கு. நாம வெளியில எல்லாம் போகாம, வெயில், மழைன்னு அலையாம, ஆத்து வேலையப் பாத்துண்டே, அப்பப்போ ஓய்வெடுத்துண்டே நூல் நூக்கற வேலையை நம்ம இஷ்டப்படி, வசதிப்படி செய்யலாம். ஏழைகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம்னே அவர் எழுதி யிருக்கார், பங்கஜம்.”

மறு நாளே இருவரும் நூல் நூற்கத் தொடங்கினார்கள் ஏதோ கொஞ்சம் சம்பாதிக்க முடிந்தது.

.. .. .. ஒரு தரம் பாப்பாரப்பட்டி பாரதமாதா சங்கம் நடத்திய கூட்டத்தின்போது போலீசிடம் மாட்டிக்கொள்ள இருந்த சாமிநாதன் தெய்வாதீனமாய்த் தப்பி வந்து சேர்ந்தான். அந்த நாளிலிருந்து அவன் தேச விடுதலைப் போராட்டத்திலிருந்து அறவே விலகிவிட வேண்டும் என்று பங்கஜம் அவனை நச்சரித்து வற்புறத்தலானாள்.

“பயப்படாதே, பங்கஜம்! அப்படி நேக்கு ஏதாவது ஆயிட்டா, என்னோட சிநேகிதாள்ளாம் இருக்கா. அவா உன்னைக் கைவிட்டுட மாட்டா. நான் சொல்லி வெச்சிருக்கேன். நாங்க வெச்சிருக்கிற அச்சு யந்திரம் நாங்க எல்லாருமே சேந்து மொதல் போட்டு வாங்கினது. எனக்கு ஏதாவது ஆச்சுன்னு வெச்சுக்கோ, அப்போ.. .. ..”

“வேண்டாம், வேண்டாம். சொல்லாதங்கோ. அதுக்கு மேல எதுவும் சொல்லாதங்கோ. நிறுத்துங்கோ!” – பங்கஜம் தன் காதுகளைப் பொத்திக்கொண்டு கண் கலங்கினாள்.

“அட, இரு, பங்கஜம். நான் பேசி முடிச்சுடறேன். தடுக்காம, தயவு செஞ்சு முழுக்கவும் கேட்டுக்கோ. எனக்கு ஏதாவது ஆச்சுன்னாலும், எங்கம்மா சொத்துல உனக்கு ஒரு சல்லிக்காசு கூடக் கெடைக்காது. சட்டம் அப்படி. சொத்துகள்ளேர்ந்து வர்ற வருமானம் மட்டும்தான் எங்கம்மாவுக்குச் சொந்தம். அவாளால எதையும் வித்துப் பணம் பண்ண முடியாது. என் காலத்துக்கு அப்புறம் எல்லாத்தையும் எவனாவது தாயாதிக்காரன்தான் அடிச்சுண்டு போவான்.”

சட்ட அறிவு இல்லாத பங்கஜம் கேள்விக்குறி தோன்ற அவனைப் பார்த்தாள்.

“ஆமா, பங்கஜம். ஏன்னா, நீ சட்டப்படி என்னோட பொண்டாட்டி இல்லே! அதுலேயும் வேற ஒருத்தருக்கு வாழ்க்கைப்பட்டவ. புருஷனையும் இழக்காதவ. அதாவது சட்டம் உன்னை என்னோட பொண்டாட்டின்னு ஒத்துக்காது.”

“இதை யெல்லாம் நீங்க சொல்லி வைக்கிறது நல்லதுதான். ஆனா, அப்பிடி யெல்லாம் எதுவும் நடக்காது. பகவான் அந்த அளவுக்கு நேக்குக் கஷ்டம் குடுக்க மாட்டார். வேணது ஏற்கெனவே சோதிச்சாச்சு!”

.. .. .. ஆனால், பங்கஜத்தின் நம்பிக்கை பொய்த்துத்தான் போயிற்று.

உரிய நாளில் பிறந்த ஆண் குழந்தைக்குப் பதஞ்சலி என்று பெயரிட்டார்கள். .. .. அதன் இரண்டாம் பிறந்த நாளன்று, சாமிநாதனும் அவன் நண்பர்களும் சென்னையில், சைனாபஜாரில், ஓர் அந்நியத் துணிக்கடைக்கு முன்னால் மறியல் செய்த போது போலீசார் சத்தியாக்கிரகிகள் மீது தடியடிப் பிரயோகம் செய்தார்கள்.

சாமிநாதன் கைது செய்யப்பட்டான். தப்பி வந்த அவனுடைய நண்பர்கள் சேதியைச் சொன்ன போது பங்கஜம் நடுநடுங்கிப் போய்விட்டாள். அவள் பயப்பட வேண்டாமென்றும், அவள் செலவுகளைத் தாங்கள் ஏற்பதாகவும் அந்த நண்பர்கள் அவளுக்கு ஆறுதலாய்ப் பேசினாலும், பங்கஜத்துக்கு நிம்மதியோ அமைதியோ ஏற்படவில்லை.

அந்தக் கும்பலில் சாமிநாதனைத் தவர மற்ற எல்லாருமே கலியாணம் ஆகாதவர்களா யிருந்தார்கள். ‘இது மாதிரி போராட்டத்துல ஈடுபட்றவங்கல்லாம் கலியாணம் கட்டக்கூடாதுடா. இப்ப பாரு. பாவம், அவங்க! வாழ்க்கையிலே ஏதாச்சும் ஒண்ணுக்குத்தாண்டா ஆசைப்படணும். நாம கூட அவங்களுக்கு நிரந்தரமான துணை இல்லே. நம்மளையும் எப்ப வேணக் கண்டுபிடிச்சுக் கைதும் பண்ணிடுவாங்க. அப்பால அவங்க கதி?’ என்று சாமிநாதன்பால் அதிருப்தியோடு அவர்களில் ஒருவன் முணுமுணுத்தது பங்கஜத்தின் செவிகளில் விழுந்து அவளைக் கலக்கமுறச் செய்தது. ‘அப்படி ஏதாவது ஆகிவிட்டால், குழந்தையை வைத்துக்கொண்டு நான் எப்படிக் காலத்தை ஓட்டுவேன்?’ என்கிற கவலை அவளை அன்றே அரிக்கத் தொடங்கிவிட்டது.

சிறையில் அடைக்கப்பட்ட ‘அரசாங்கக்’ கைதிகளைப் போய்ப் பார்க்க எல்லாருக்குமே தயக்கமாக இருந்தது. ஏனெனில் அவர்களையும் அரசுக்கு எதிரான நாசவேலைக்காரர்களாகவோ, விடுதலைப் போராட்ட இயக்கம் சார்ந்த காங்கிரஸ்கார்களாகவோ போலீஸ் கருதியது. சென்டிரல் ஜெயிலில் இருக்கும் சாமிநாதனைப் போய்ப் பார்ப்பது அவளுக்கு ஆபத்தையே தரும் என்று அவனுடைய நண்பர்கள் அவளுக்குப் படித்துப் படித்துச் சொல்லியிருந்தார்கள்.

எனவே, இனி அவன் விடுதலையாகி வெளியே வரும் நாள் வரையில் தாங்கள் சந்திப்பது சாத்தியமில்லை என்னும் கண்கூடான நிலை பங்கஜத்தின் துயரத்தை மேலும் அதிக மாக்கியது.

சாமிநாதன் ஏற்கெனவே கேட்டுக்கொண்டிருந்தபடி, வத்தலப்பாளையத்துக்குப் போய்வந்த அவனுடைய நண்பன் ஒருவன் மிக மோசமான செய்தியோடு பங்கஜத்தைச் சந்தித்தான். (அங்கு போவதற்கு முன் அவன் அவளிடம் தகவல் தெரிவித்திருக்கவில்லை.)

“உங்கள்லே யாருமே அவரை ஜெயில்ல போய்ப் பார்க்கிறதில்லியே? வத்தலப்பாளையத்துக்குப் போகச்சொல்லி அவர்கிட்டேர்ந்து எப்படி உங்களுக்குச் சேதி வந்துது?’ என்று அவள் வினவியபோது, “ அது அவன் ஜெயிலுக்குப் போறதுக்கும் முன்னாடியே எங்ககிட்ட சொல்லி வெச்சிருந்ததுதான்.. ..” என்று அவன் விளக்கினான்.

“சரி, சொல்லுங்கோ. எங்க மாமியாரைப் பாத்தேளா?”

“அவங்க உசிரோட இல்லேம்மா. செத்துப் போய் மூணு மாசமாச்சு. சாமிநாதனுக்குத் தகவல் சொல்லக் கூடாதுன்னும், அவன் தனக்குக் கொள்ளி வைக்கக் கூடாதுன்னும் சாகிறதுக்கு முந்தி சொல்லிட்டாங்களாம். அதனால எவனோ தாயாதிக்காரன் தான் கொள்ளி வெச்சிருக்கான். அவங்க சொத்தெல்லாம் அந்த ஆளுக்குத்தானாம்.”

காலடி நிலம் நழுவுவது போல் பங்கஜம் உணர்ந்து பொத்தென்று சுவர்ப்பக்கம் சாய்ந்து உட்கார்ந்து போனாள். கரகரவென்று கண்ணீர் பெருகிற்று.

– தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation