மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 13

This entry is part of 42 in the series 20060324_Issue

ஜோதிர்லதா கிரிஜா


ஜோசியர் பஞ்சாட்சரத்தின் வீடு என்று சொல்லிச் சிவராமன் காட்டிய அந்தச்சிறு வீடு தன்னுள் அப்படி ஒரு படபடப்பை உண்டாக்குவானேன் என்று எண்ணித் தன்னைப்பற்றிய வியப்பில் சாமிநாதன் மூழ்கிப்போனான். தனக்கு ஏதோ ஆகிக்கொண்டிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. தனது கட்டுப்பாடு, கொள்கை ஆகியவற்றுக்கு அப்பால் ஏதோ ஒரு சக்தி தன்னை ஆட்டிவைப்பதாக உணர்ந்து அவன் உள்ளுக்குள் சற்றே நடுங்கலானான். ‘செலுத்தப்படுவது போல் நான் இயங்கத் தொடங்கியுள்ள இந்த நிலை என்னை எங்கே கொண்டுசெல்லப் போகிறதோ, தெரியவில்லையே! எனக்கு என்ன ஆயிற்று ? நான் ஏன் இப்படி நடந்துகொள்ளுகிறேன் ? அந்தப் பெண் கணவனால் தள்ளிவைக்கப்பட்டிருப்பவள் என்பது தெரிந்தும்- அவளுடன் என்னால் பழகமுடியாது என்பதும் திட்டவட்டமாய்த் தெரிந்தும்- அவளைப் பார்க்கும் பொருட்டு, ஜோசியம் பார்க்க வந்தவன் போன்று, அவளது ஊருக்கு நான் வேலைமெனக்கெட்டு வந்திருப்பதன் உட்கிடைதான் என்ன ? என் பிரும்மசரிய மெல்லாம் என்ன வாயிற்று ? கணம் போல் முகம் பார்த்த ஒரு பெண்ணின் மேல் இப்படி ஒரு காதல் வருமா ? மனத்தைப் பைத்தியாமாய்க் கிறங்க அடிக்கிற – அவள் முகத்தைத் தவிர வேறெதுவுமே மனத் திரையில் தோன்றாத அளவுக்கான – உன்மத்தம் ஒருவனை ஆட்டிப்படைக்குமா! அதிலும், அது கூடாக்காதல்- கைகூடாக் காதலும் கூட -என்பது தெரிந்த பின்னரும் மனம் இப்படிப் பித்தாகிப் போகுமா! கட்டுக்கு அடங்காமல் அலைபாயுமா ?‘

“என்னடா யோசிக்கிறே ?.. .. அது சரி. யாருக்கு என்ன பிரச்னை ? எதுக்கு ஜோசியம் பாக்கப் போறேன்றதை நான் தெரிஞ்சுக்கலாமா ?”

“நேக்குத் தெரிஞ்ச மெட்றாஸ் ஃப்ரண்ட் ஒருத்தனுக்காக வந்தேண்டா. “

“மெட்றாஸ்ல இல்லாத ஜோசியராடா இந்தக் குக்கிராமத்துல ?”

“அப்படின்னுட்டு இல்லே. இவர்கிட்டவும் கேட்டுப் பாக்கலாமேன்னு ஒரு அஞ்ஞானம் -எனக்கில்லே- அவனுக்கு. தட்ட முடியல்லே. அதான். .. அப்ப, நான் வரட்டுமா ? ரொம்ப தேங்க்ஸ்டா நோக்கு!”

சாமிநாதன் கழற்றிக்கொள்ள விரும்பியது புரிய, “ரைட். அப்புறம் பாப்போம். ஆனா, நீ பொய் சொல்றேன்னு தோண்றது. உன் விஷயமா ஏதோ கேக்கறதுக்கோசரம்தான் வந்திருக்கேன்னு நான் நெனைக்கறேன்!” என்று சிவராமன் சிரித்தான்.

“இதுல என்னடா பொய் வேண்டிக்கிடக்கு ? .. அப்ப நான் வரட்டுமா ?”

“சரி.. ..”

சிவராமன் தன் வீடு நோக்கிச் செல்ல, சாமிநாதன் அந்தச் சின்ன வீட்டை நோக்கிக் கால்களை எட்டிப் போட்டான்.

வீட்டு வாசலில் ஒரு கணம் தயங்கி நின்ற பின், தாழிடப் பட்டிருந்த கதவில் மெதுவாய்த் தட்டினான்.

“யாரு ?” என்ற பெண்ணின் இனிய குரலும் சன்னமான தப்படி யோசையும் இன்னிசையாய் அவன் செவிகளுள் புகுந்தன. அவனுக்கு நெஞ்சு அடித்துக்கொண்டது. அழகிய அந்த முகத்தையும், அதில் மிதக்கும் சோகமான பெரிய விழிகளையும் தரிசிக்கப் போகும் ஆவலில் நெஞ்சம் துடிக்க அவன் தன் விழிகளை மலர்த்திக்கொண்டு கதவையே பார்த்தான்.

வந்து கதவு திறந்தவள் அந்தப் பெண்தான். இருவர் பார்வைகளும் கலந்தன. தனக்குத் தெரிந்த ஒருத்தியைப் பார்ப்பது போன்ற ஓர் ஆழத்துடன் புலப்பட்ட அந்தப் பார்வையைக் கணம் போல் எதிர்கொண்டபின் அவள் சட்டென்று உள்ளே போனாள்.

“அப்பா! யாரோ வந்திருக்கா. போய்ப் பாருங்கோ!” என்று அவள் அவசரமாய்ச் சொன்னது அவன் காதுகளில் விழுந்தது.

சில நொடிகளுக்கெல்லாம் பஞ்சாட்சரம் மெல்ல நடந்து வந்தார்.

“யாருப்பா நீ ?”

“நேக்குப் பக்கத்து ஊர்தான். வத்தலப்பாளையம்.”

“அப்படியா ? என்ன விஷயமா வந்திருக்கே ? “

“உள்ள போய்ப் பேசலாமா ?”

“எதானும் அந்தரங்கமான விஷயமா ?”

“அப்படின்னு இல்லே.. .. இருந்தாலும்.. ..”

“சரி, சரி. வா, வா. “

செருப்புகளை உதறி நீக்கி வாசலில் போட்ட பின் அவன் அவரைப் பின் தொடர்ந்து உள்ளே போனான்.

“உக்காருப்பா.”

கதவிடுக்கு வழியாய்ப் பங்கஜம் கவனித்தாள்.

“அதோ, அந்த ஓலைத் தடுக்கை எடுத்துப் போட்டுண்டு உக்காருப்பா.”

“தடுக்கெல்லாம் வேண்டாம், மாமா. நான் இப்பிடி தரையிலயே உக்காந்துக்கறேன். வெறுந்தரையே நன்னாத்தான் இருக்கு.”

“சரி. சொல்லுப்பா. ஜாதகம் ஏதாவது பாத்துச் சொல்லணுமா ?”

“அதொண்ணுமில்லே, மாமா. இது வேற விஷயம்.”

“வேற விஷயமா ? அப்படின்னா ?”

காமாட்சியின் அகமுடையானிடம் அகப்படாமல் பங்கஜம் தப்பி ஓடி வந்த விஷயம்தான் பஞ்சாட்சரத்துக்கு உடனே ஞாபகம் வந்தது.

“நீங்க ஒண்ணும் தப்பா எடுத்துக்கல்லேன்னாத்தான் என்னால அந்தப் பேச்சையே எடுக்க முடியும், மாமா.”

“என்ன சொல்றேப்பா நீ ? புதிர் போட்ற மாதிரிப் பேசினா எப்படிப் புரிஞ்சுக்குறது ? விண்டு பேசுப்பா.”

“பேசத்தான் போறேன். ஆனா நீங்க தப்பா எடுத்துக்காம இருக்கணுமேன்னு நேக்கு பயமாயிருக்கு, மாமா.”

‘இது நிச்சயமாப் பங்கஜத்துக்கு இன்னிக்குக் காலங்கார்த்தால நடந்தது பத்தின விஷயந்தான்! ஆனா, இவன் யாரு ? அதுல, என்னைப் பாத்துப் பேசறதுக்கு என்ன இருக்க முடியும் ? ஒருக்கா, இவன்தான் அந்தக் காமாட்சியோட ஆம்படையானோ ? ‘பங்கஜம் தப்பாப் புரிஞ்சுண்டு ஓடி வந்துட்டா. அப்படி யெல்லாம் ஒண்ணுமில்லே’ன்னு சொல்லி மறுபடியும் வேலைக்கு வரச் சொல்லிக் கூப்பிட்றதுக்கோசரம் வந்திருக்கானோ ? . .. ஆனா, பங்கஜம், ‘யாரோ வந்திருக்கா’ ன்னு சொன்னாளே ? ஒருக்கா, வந்தவனை அவ சரியாக் கவனிக்கல்லையோ ?’

அவரது பார்வை அவரையும் அறியாமல் அடுக்களைப் பக்கம் சென்றது: “சட்னு விஷயத்தைச் சொல்லுப்பா. இப்பிடி பூடகமாவே எவ்வளவு நேரம்தான் பேசிண்டிருக்கப் போறே ?”

இரன்டே விநாடிப் பொழுது தயங்கியபின் சாமிநாதன் தொண்டையைச் செருமினான்: “இன்னிக்கு உங்க பொண்ணு அந்த நாகலிங்கம் கிட்டேருந்து தப்பிச்சுண்டு கொள்ளிக்கட்டையும் கையுமா ஓடினதை நான் பக்கத்தாத்து மொட்டை மாடியிலேர்ந்து பாத்தேன்.. .. “

பஞ்சாட்சரத்தின் விழிகள் விரிந்துகொண்டன.

“ஆனா, நான் பாத்தது உங்க பொண்ணுக்குத் தெரியாது. உங்க பொண்ணோட வாழ்க்கையைப் பத்தின விஷய மெல்லாம் கேள்விப்பட்டேன். உங்க குடும்பத்துக்கு என்னாலான உதவியைச் செய்யணும்னு தோணித்து. அதான் வந்திருக்கேன். நம்ம நெலமையாவது பரவாயில்லே. நம்மள விடவும் கீழ் மட்டத்துல இருக்காளே, அவாளோட நெலமை இன்னும் மோசம். நம்ம ஜாதிக்காராளுக்காவது ஒண்டிக்கிறதுக்குக் காரை வீடு மாதிரி ஏதோ ஒண்ணு இருக்கு. ஆனா குப்பத்து ஜனங்களுக்கெல்லாம் -குறிப்பா பொண்களுக்கு – எந்தப் பாதுகாப்பும் இல்லே. தட்டிக்கதவுதான். மேல் கூரை வெறும் தென்னங்கீத்துதான். ஆம்படையானோ, மத்தப் புருஷாளோ குடிசையில இல்லாத நேரம் பாத்து எவன் வேணா, எப்ப வேணா உள்ள பூந்து பொம்மனாட்டிகள் கிட்ட தப்பா நடந்துட முடியும். அவா நெலமை அவ்வளவு மோசம். அவா இனத்துப் பொண்களுக்கெல்லாம் தெனமும் இந்தக் கொடுமை நடந்துண்டிருக்கு. எக்ஸ்ட்ரீமா (extremely) .. .. அதாவது.. ..”

“புரியறது. நான் மெட்ரிக் வரை படிச்சவன். ஆனா பரீட்சை எழுத முடியல்ல. .. நீங்க முழுக்க முழுக்க இங்கிலீஷ்லயே பேசினாலும் புரிஞ்சுப்பேன்!”

புன்னகை செய்தபின் சாமிநாதன் தொடர்ந்தான்: “திடார்னு என்னை என்னத்துக்கு ‘நீங்க’ ன்னு மரியாதையாப் பேசறேள் ? ‘நீ’ ன்னே பேசலாம். நேக்கு முப்பது வயசுதான் ஆறது. பை த வே (By the way) குப்பத்துப் பொண்களுக்கு நடக்கிற அநியாயம் வாய்விட்டுச் சொல்ல முடியாதது. இது மாதிரி விஷயங்கள்லாம் பத்திரிகைகள்ள வர்றதில்லே.”

“ஆமாமா. வெளியில தெரிய வந்தாத்தானே பத்திரிகைக்காரனும் போடுவான் ? இப்பல்லாம் ஹிண்டு பேப்பர்லயும் சுதேசமித்திரன்லேயும்தான் நம்ம காங்கிரஸ் பத்தின சேதிகளும், காந்தி பத்தின சேதிகளும் நிறைய வருது.”

“ஆமாமா. .. .. நான் என்ன சொல்ல வந்தேன்னா.. .. நீங்க ஒண்ணும் தப்பா எடுத்துக்கல்லேன்னா – உங்க பொண்ணுக்கு என்னால ஒதவி பண்ண முடியும். இப்பிடிக் கண்ட எடத்துக்கும் வேலைக்குப் போய் வயித்துல நெருப்பைக் கட்டிண்டு அலைய வேண்டாம்.”

“நீங்க என்ன சொல்ல வறேள் ? உங்களால என்ன ஒதவி செய்ய முடியும் ? அது சரி, நீங்க என்ன பண்ணிண்டிருக்கேள் ? வெவசாயமா ?”

“ஆமா. வெவசாயந்தான். நேக்கு அப்பா கிடையாது. என்னோட சின்ன வயசிலயே தவறிப் போயிட்டார். அம்மா இருக்கா. நான் பீ.ஏ. பாஸ் பண்ணியிருக்கேன். அதனால நேக்கு வத்தலப்பாளையத்துலெ பீ.ஏ. சாமிநாதன்னே பேரு. வத்தலப் பாளையத்துல வேற யாரும் படிச்சுப் பட்டம் வாங்கல்லே. அதனாலதான் நேக்கு அப்படி ஒரு பேரு. .. .. நான் அப்பப்ப அசலூர்களுக்குப் போயிடுவேன். ஆத்துல தங்கறது வருஷத்துக்கு அஞ்சாாறு மாசந்தான். நேக்கு இன்னும் கல்யாணம் ஆகல்லே.”

“என்னது! கல்யாணம் ஆகல்லியா! முப்பது வயசுங்கறேள் ?”

“ஆமா. அதாவது, நான் கல்யாணம் பண்ணிக்கல்லே. பிரும்மசாரியாவே வாணாள் முழுக்க இருந்துடணும்னு ஒரு விரதம் வெச்சிண்டிருக்கேன். “

பஞ்சாட்சரம் வாய்விட்டுச் சிரித்தார்: “உங்களுக்கு இருக்கிற ஞானம் எங்களுக் கெல்லாம் இருந்திருந்தா, இப்படி அவதிப்படும்படி ஆயிருக்காது.”

சாமிநாதனும் புன்னகை செய்துவிட்டுப் பேச்சைத் தொடர்ந்தான்: “எங்கம்மா கெட்டிக்காரி. அதனால வெவசாயத்தை ஆள் வெச்சுத் தானே சமாளிக்கிறா. எங்க பெரியம்மா பிள்ளை ஒருத்தன் இருக்கான். அவன் எங்கம்மாவுக்குக் கொஞ்சம் ஒத்தாசையா யிருந்துண்டிருக்கான்.”

“அது சரி.. அஞ்சாறு மாசந்தான் ஊர்ல இருப்பேன்கறேள் ? அப்படின்னா.. ..”

“அடிக்கடி மெட்றாஸ், பாண்டிச்சேரின்னு போயிடுவேன்.”

“அந்த ஊர்கள்ளே ஏதானும் பிசினிஸ் கிசினெஸ்னு.. ..”

“ஆமா. அச்சாஃபீஸ்கள் நடத்தறேன் – ரெண்டு ஊர்கள்லேயும்.”

“இங்கயே பக்கத்துல மதுரை, திண்டுக்கல்னு எங்கேயாவது நடத்தலாமே ? அடிக்கடி வரலாம். ரெயில் செலவும் கம்மி.”

“எங்கம்மாவும் அதையேதான் சொல்றா. ஆனா, அதென்னமோ மெட்றாஸ் மேல ஒரு மோகம். அங்க ஒரு தரம் போனேன். தற்செயலா ஒரு சிநேகிதனோட கூட்டுச் சேந்துண்டு ப்ரெஸ்ஸை ஆரம்பிச்சேன். நன்னா ஓடத் தொடங்கிடுத்து. அதை விட்டுட்டுப் புதுசா வேற ஒண்ணை இந்தப் பக்கத்துல ஆரம்பிக்கிறதுக்கு மனசு வரமாட்டேங்கறது. ஆனா, அதான் அப்பப்ப வறேனே- அம்மாவைப் பாத்துட்டு அவாளோட இருந்துட்டும் போறதுக்கு ?”

“.. .. இன்னும் நீங்க விஷயத்தைச் சொல்லவே இல்லே. ஏதோ எம்பொண்ணுக்கு ஒதவி பண்ண முடியும்னேள். என்ன மாதிரியான ஒதவிங்கிறதைச் சொல்லவே இல்லே இன்னும்!”

“சொல்றேன், சொல்றேன்.. .. உங்க பொண்ணுக்கு எழுதப் படிக்கத் தெரியுமா ? எது வரைக்கும் படிச்சிருக்கா ? என்ன வயசு ஆறதுஅவாளுக்கு ?”

“பொண் கொழந்தைகளை நாம எங்கே படிக்க வெக்கறோம் ? கல்விக்கடவுளே ஒரு ஸ்திரீதான் அப்படி இப்படின்னு சொல்றோமே ஒழிய, அவாளை அடுப்படியில போட்டுத்தானே பொசுக்கறோம் ? ஆனா எம் பொண்ணுக்குத் தமிழ் நன்னாவே வாசிக்கக் கத்துக் குடுத்திருக்கேன். எழுதறதுதான் கொஞ்சம் ஸ்லோ! (slow) ஏ.பி.சி.டி. அல்ஃபபெட்ஸ் (ABCD alphabets) தெரியும். கேட், மேட், ரேட் னு (cat, mat, rat) ஏதோ கொஞ்சம் வோார்ட்ஸ் (words) தெரியும். அவசியமான சில இங்கிலீஷ் வாக்கியங்களும் சொல்லிக் குடுத்திருக்கேன். ஆனா இங்கிலீஷைத் தமிழை விடவும் ரொம்ப மெதுவா எழுதுவா! அப்புறம் ஒரு வீட்டை நிர்வாகம் பண்ற அளவுக்குக் கணக்கு வழக்குகள் தெரியும். கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல்னு. ஏன் ? எதுக்குக் கேக்கறேள் ? மெட்றாஸ்ல உங்க ப்ரெஸ்ல கம்பாசிட்டர் (compositor) வேலை குடுக்கலாம்னா ?”

“இல்லேல்லே. மெட்றாஸ்க்கெல்லாம் நீங்க வரமாட்டேள்னு நேக்குத் தெரியும். அங்கேயெல்லாம் செலவு அதிகமா யிருக்கும். சமாளிக்கிறது ரொம்பக் கஷ்டம். ஆனா, சமாளிச்சுப்பேள்னு தோணினா நீங்க ரெண்டு பேரும் பேஷா மெட்றஸ்க்கு வரலாம்!”

“அதான் நீங்களே சொல்லிட்டேளே – சமாளிக்கிறது கஷ்டம்னு! ஆனா நீங்க வேற ஏதோ ஐடியாவோடதானே வந்திருக்கேள் ? அதைச் சொல்லுங்கோ.”

“எங்கம்மாவுக்கு வயசாயிண்டிருக்கு. முன்ன மாதிரியான ஆரோக்கியம் இப்பல்லாம் இல்லே. ஆத்துல அவாளுக்கு ஒத்தாசையா சமையலுக்கு ஆள் போடாலாம்னு என்னோட எண்ணம்.”

கதவிடுக்கு வழியாகப் பார்த்துக்கொண்டும் இருவரும் பேசியதைக் கேட்டுக்கொண்டும் இருந்த பங்கஜத்துக்கு நெஞ்சு அடித்துக்கொள்ளத் தொடங்கியது. ‘அய்யோ! அந்த நாகலிங்கக் கட்டேல போறவன் ஆத்துக்கு அடுத்தாகம் (அடுத்த அகம்) கறாரே! அங்கேயா வேலைக்குப் போறது ? வேண்டவே வேண்டாம்.. .. ஜென்மத்துக்கும் வேண்டாம்.. ..கை நிறைய சம்பளம்னாலும் வேண்டாம்.. ..’

அவள் நினைத்ததையே பஞ்சாட்சரமும் சொன்னார்: “அய்யய்யோ! அந்தப் போக்கிரியோட ஆத்துக்கு அடுத்தாகம்கறேளே! அங்க எம்பொண்ணு வேலைக்கு வர்றது சரியா யிருக்காதேப்பா ? எம்பொண்ணு மேல வன்மம் வெச்சிண்டு காத்துண்டுன்னா கெடப்பான் அந்த அயோக்கியன் ?”

அவனது பார்வை கதவுப் பக்கம் கணம் போல் வந்து பின் நகர்ந்ததைப் பங்கஜம் கவனித்தாள். அவன் கதவுப்பக்கம் திரும்பிய போதுதான் அவன் முகம் அவள் பார்வைக்கு நேரெதிராய்த் தெரிந்தது. அது வரையில் அவனது பக்கவாட்டு முகத் தோற்றமே தெரிந்துகொண்டிருந்தது. அவனுடைய பெரிய விழிகள் கருமை கொண்டிருந்ததையும் மூக்கு எடுப்பாக இருந்ததையும் அவள் கவனித்தாள். மாநிறந்தான். ஆனாலும் ஆரோக்கியமாகத் தெரிந்தான். கிராப்புத் தலை சுருள் சுருளாய், அடர்த்தியாய் இருந்தது. முகவாயின் முடிவில் ஒரு சின்ன வெட்டு இருந்தது. உதடுகள் சிவப்பா யிருந்தன. மொத்தத்தில் விவேகானந்தரின் முகம் அவளுக்கு ஞாபகம் வந்தது: ‘என்ன இது! நேக்கு என்ன ஆச்சு ? நான் ஏன் இப்படி அவரை அணுஅணுவாப் பாக்கறேன் ? சே! தப்பில்லையோ இது ?’ – பங்கஜம் கண நேரம் தன் பார்வையை அகற்றினாலும், மறுபடியும் கதவிடுக்கு வழியே அது பயணம் செய்தது. அவள் எண்ணங்களும் மறுபடியும் கிளர்ந்தன.

‘நல்ல லட்சணமான முகம். கொணமும் நன்னாத்தான் இருக்கும்னு முகத்தைப் பார்க்கிறச்சயே தெரியறது.. .. அய்யோ ! மறுபடியும் இப்படி யோசிக்கிறதே மனசு ? தப்பில்லையோ ? நான் கல்யாணம் ஆனவ. இப்பிடி அசல் புருஷனைப் பாத்து, ‘இவன் அழகா யிருக்கான்னு நினைக்கிறது அபசாரமில்லையோ ? பகவானே! என்னை மன்னிச்சுடு!’ – பங்கஜம் கதவுக்குப் பின்புறத்திலிருந்து வலுக்கட்டாயாமாய்த் தன்னை நகர்த்திக்கொண்டாள்.

“எங்களுக்கு வத்தலப் பாளையத்துலயே இன்னொரு வீடு இருக்கு. அதை நாங்க வாடகைக்கு விட்டிருக்கோம். அந்த வீட்டுக்கு நாங்க மாறிண்டா, அந்த ராஸ்கல் கிட்டேர்ந்து விலகி யிருக்க முடியும். நாங்க ரெண்டு பேர்தானே ? அதனால, சாமான்கள் அதிகம் கிடையாது. எல்லாத்தையும் ஒரே கட்டை வண்டியில ரெண்டே நடையில கொண்டுபோயிடலாம். ஒண்ணும் சிரமம் இல்லே.”

பஞ்சாட்சரத்தின் விழிகள் பெரிதாயின. அவரால் நம்பமுடியவில்லை.

“உங்கம்மா இதுக்கெல்லாம் சரின்னுட்டாளா ?”

சாமிநாதன் இரைந்து சிரித்தான். அப்போது தற்செயலாய்த் தன்னையும் மீறிக் கதவிடுக்கு வழியாய்ப் பார்த்த பங்கஜத்தால், ‘எவ்வளவு அழகான பல்வரிசை!’ என்று நினைக்காம லிருக்க முடியவில்லை. மறுபடியும் அவளுக்குத் தன் மீது எரிச்சல் வந்தது. தலையில் ஓங்கிக் குட்டிக்கொண்டாள்.

“எங்கம்மா கிட்ட அதைப்பத்தி இன்னும் நான் பேசல்லே. இனிமேதான் பேசணும். மொதல்ல உங்க அபிப்பிராயம், செளகரியம் ரெண்டையும் தெரிஞ்சுக்கணு மில்லியா ? அதுக்குத்தான் இப்ப வந்திருக்கேன்.”

வியப்பினூடே பஞ்சாட்சரத்துக்குச் சின்னதாய் ஒரு கலக்கம் வந்தது. ‘முன்ன பின்ன தெரியாத ஒரு பொண்ணுக்காக இந்தப் பிள்ளை இந்த அளவுக்கு உருகுவானேன் ? மெனக்கெடுவானேன் ?’

“மாமா! நேக்கு எந்த உள் நோக்கமும் கிடையாது. ஒரு ஏழைப் பொண்ணு என் கண் முன்னால தன்னைக் காப்பாத்திக்கிறதுக்கோசரம் எரிஞ்சிண்டிருந்த வெறகோட தெருவில ஓடினதை என்னால தாங்க முடியல்லே.. .. அது மட்டுந்தான் காரணம். ஏதோ நான் என்னைப் பத்திப் பீத்திக்கிறதா நீங்க நினைச்சுக்கக் கூடாது. நான் காந்தி பக்தன். பெண்கள் மேல அவர் கொண்டிருக்குற பரிவு இவ்வளவு அவ்வளவு இல்லே. உங்களுக்கே தெரியும். அதை வெளிப்படுத்தி அவரே ஆசிரியரா யிருக்குற யங் இண்டியா (Young India) பத்திரிகையில நிறைய ஆர்ட்டிகிள்ஸ் (articles) எழுதி யிருக்கார். இன்னமும் எழுதிண்டிருக்கார். அதையெல்லாம் வாசிச்சதோட விளைவுதான் இந்த என்னோட கரிசனம். மத்தப்படி எதுவும் தப்பா நினைச்சுடக் கூடாது. வேற எத்தனையோ ஏழைப் பொண்கள் இருக்கிறச்சே உங்க பொண்ணு மேல ஏன் இவ்வளவு கரிசனம்னு உங்களுக்குக் கேக்கத் தோணலாம்.. .. அதுக்குக் காரணம் என் கண்ணால அவாளோட கஷ்டத்தை நான் பாத்ததுதான். மத்தவாளைத் தேடிண்டு போய் நான் ஒதவி செய்ய முடியாதில்லையா ?”

பஞ்சாட்சரம் மவுனமாக இருந்தார்.

“எதுக்கும் நீங்க உங்க பொண்ணை ஒரு வார்த்தை கேட்டுடுங்கோ. கேட்டுட்டே பதில் சொல்லுங்கோ. நான் ஒரு அரை மணி கழிச்சு மறுபடியும் வறேன்.”

எழுந்த அவனை அவர் கையமர்த்தினார்.

– தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation