மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 12

This entry is part of 57 in the series 20060317_Issue

ஜோதிர்லதா கிரிஜா


தன்னை மறந்த நிலையில் தலை தெறிக்க ஓடிக்கொண்டிருந்த பங்கஜத்துக்கு அந்தக் காலை மந்த வெயில் நேரத்தில் வேர்த்துக்கொண்டிருந்தது. தன் கையில் கொள்ளிக்கட்டை இருந்ததும், அதிலிருந்து தீப்பொறிகள் பறந்துகொண்டிருந்ததும் அவள் உணர்வில் உறைக்கவே யில்லை! எதிர்ப்பட்ட மனிதர்களின் முகங்களும் அவளது மூளையில் பதியவே இல்லை. ஆனால் அவள் ஓடத் தொடங்கி ஐந்து நிமிடங்கள் கழித்து எதிர்ப்பட்ட வயதான ஒரு மனிதர், “அய்யோ! அந்தப் பெண்ணுக்குப் பைத்தியமா!” என்று தம்மை மறந்து கூவியதும்தான் அவளுக்குக் கொஞ்சம் நிதானம் வந்தது.

அவள் நின்றாள். தன் வலக்கையில் இருந்த கொள்ளிக்கட்டை அப்போதுதான் அவள் மூளையில் உறைத்தது. அவளுள் அவமானமும் வெட்கமும் பெருகின. அவள் சுற்றுமுற்றும் கவனித்தாள். தனக்குப் பின்னால் நின்றுகொண்டு சிலர் தன்னைக் காட்டி ஏதோ தமக்குள் பேசிக்கொண்டிருந்ததும் கூட அதன் பிறகுதான் அவளுள் பதிந்தன. அந்தக் கொள்ளிக்கட்டையைத் தெரு மண்ணில் குத்தித் தட்டி நெருப்பை யணைத்த பின் அதை ஓர் ஒரமாய்த் தூக்கிப் போட்டுவிட்டுத் தனது நடையைத் தொடர்ந்தாள். இப்போது அவளது நடையின் விரைவு குறைந்திருந்தது.

‘அடியம்மா! எப்பேர்ப்பட்ட ஆபத்திலிருந்தும் அசம்பாவிதத்திலிருந்தும் இன்றைக்கு நான் தப்பி வந்திருக்கிறேன்! என்னால் தப்ப முடியாமல் போய், அவனும் என்னிடம் தப்பாக நடந்து அதன் விளைவும் என் வயிற்றில் தோன்றி விட்டிருந்தால் நான் என்ன கதியாவேன்! அப்பா தூக்குப் போட்டுக்கொண்டு செத்துப் போவார். நானும் உசிரை எப்படியாவது விட்டிருப்பேன். . .. கடன்காரன்! ஏழேழு ஜென்மத்துக்கும் அவன் சாக்கடைப் புழுவாய்ப் பிறப்பான்.. .. சண்டாளப் பாவி! எடுத்த எடுப்பிலேயே அவன் சுயரூபம் தெரிந்து போனதும் நல்லதுக்குத்தான். இல்லாவிட்டால், நல்லவன் போல் நடித்து நயவஞ்சகமாய் நாடகம் போட்டு என்னை ஏமாற்றி யிருப்பான். தப்பினேன்!.. ..’

வத்தலப்பாளையத்துக்கும் செங்கல்பாளையத்துக்குமிடையே கொாஞ்சத்தொலைவே இருந்த போதிலும், வழியில் இடைப்பட்டி என்கிற குக்கிராமமும் இருந்ததால், வழியெங்கும் மனிதர்கள் எதிர்ப்பட்டவாறா யிருந்தார்கள். அவள் அதிகாலை வேளையில் பக்கத்து ஊருக்குச் சென்று வேலை செய்ய இணங்கியதே இடையிலும் ஓர் ஊர் இருந்ததும் எப்போதும் மூன்று சிற்றூர்களுக் கிடையேயும் ஆள் நடமாட்டம் உண்டென்பதை அவள் அறிந்திருந்ததும் தான். வழி எங்கணும் வயல்காடுகள் இருந்தன. குடியானவர்களும் அவர்களின் குடும்பத்துப் பெண்களும் மரங்களின் நிழல்களில் தென்பட்டவண்ணம் இருந்தனர்.

‘தாங்கள் உண்டு தங்கள் சோலி உண்டு’ என்றிருக்கும் அந்த ஏழை மனிதர்களைப் பார்த்த போது, ‘எவ்வளவு நல்லவர்கள் இந்த மனிதர்கள்! அந்தப் படித்த குரங்கு நாகலிங்கத்தை இவர்களின் கால்களில் கட்டி அடிக்கவேண்டும்!’ என்று பங்கஜத்துக்குத் தோன்றியது.

‘அப்பாவுக்கு என்னவென்று சொல்ல ?.. .. நடந்ததைச் சொல்லித்தானாக வேண்டும். பாகீரதி மாமிக்கும் கூடச் சொல்லித்தானாக வேண்டும். கண், காது, மூக்கு வைத்து மிகையான சேதியை அவள் பரப்பக்கூடும்தான். ஆனால் அதற்கு என்ன செய்ய முடியும் ? அவன் என்னைத் தொடுவதற்கு முன்னால் நான் தப்பிவிட்டதைப் பாகீரதி மாமி நம்ப வேண்டுமே ?… .. எப்படியானாலும், ஏதோ ஒரு விதத்தில் நான் அபவாதத்துக்கு ஆளாகத்தான் போகிறேன். பகவானே! இது என்ன சோதனை! ஏழைகளுக்கு ஏன் இப்படி யெல்லாம் கஷ்டம் கொடுக்கிறாய் ? அதிலும் யாருக்கும் எந்தக் கெடுதியும் செய்யாதவர்களுக்கு ? இது நியாயமா ? .. ..’

ஒரு மணி நேர நடைக்குப் பின் பங்கஜம் தன் வீட்டை யடைந்தாள். திண்ணையில் உட்கார்ந்து விசிறிக் காம்பால் முதுகு சொறிந்துகொண்டிருந்த பஞ்சாட்சரம் போன சுருக்கில் மகள் திரும்பிவிட்டதைப் பார்த்து வியப்புற்றார். ஏதோ விபரீதம் என்று அவருக்குத் தோன்றிவிட்டது.

வீட்டுக்குள் விடுவிடுவென்று சென்ற அவளைப் பின் தொடர்ந்த அவர், “என்னம்மா ? அதுக்குள்ள வந்துட்டே ?” என்றார்.

“வாசல் கதவைச் சாத்திட்டு வாங்கோப்பா,” என்ற அவள் அவர் அவ்வாறே செய்துவிட்டு வந்ததும் அந்தச் சிறிய கூடத்தில் உட்கார்ந்து அழத் தொடங்கினாள்.

பஞ்சாட்சரம் பதறிப்போனார். நடக்கக்கூடாதது என்னவோ நடந்துவிட்டிருந்திருக்க வேன்டும் என்று நினைத்தார். இன்னதென்று ஊகிக்க முடியாவிட்டாலும், பங்கஜம் பொங்கிப் பொங்கி அழுததால் விபரீதமான விஷயமாய்த்தான் இருக்க வேண்டும் என்கிற அளவுக்குப் புரிந்துகொண்டு அவளுக்கு எதிரே உட்கார்ந்தார்.

“என்னம்மா நடந்தது ? எதுக்கு இப்பிடி அழறே ? சொல்லிட்டு அழு, பங்கஜம். நீ இப்பிடி விக்கி விக்கி அழறதைப் பாத்தா என்னை என்னமோ பண்றதும்மா!”

பங்கஜம் புடைவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டபின், தரையில் விழிகளைப் பதித்தவாறே சொன்னாள்: “அந்தக் காமாட்சியோட ஆம்படையான் சரி யில்லேப்பா. அதான் கெளம்பி வந்துட்டேன்.”

அவர் திகிலடைந்து போய் அவளை அகலமாய் ஏறிட்டார்.

“என்னம்மா சொல்றே ? ஏதானும் எக்குத் தப்பா நடந்துண்டானா ? விபரீதாமா ஒண்ணுமில்லியே ?”

“தப்பா நடந்துக்கப் பாத்தாம்ப்பா. நல்ல வேளை! பகவான் என் பக்கம் இருந்தார். என்கிட்ட இல்லாத துணிச்சலையும் அந்த நேரத்துல நேக்குக் குடுத்தார். சமயோசிதமா நடந்து தப்பிக்கிற வழியையும் பகவான்தான் நேக்குக் காட்டினார். அதனாலதான் அவன்கிட்ட மாட்டிக்காம தப்பிச்சிண்டு வந்துட்டேன்,” என்ற பங்கஜம் நடந்தது நடந்தபடி அவருக்குச் சொன்னாள்.

“அந்த இக்கட்டான நேரத்துல அவனை முறைச்சுக்காம செளஜன்யமாப் பேசித்தான் அவன்கிட்டேர்ந்து தப்பணும்னு நோக்குத் தோணியிருக்கே! எல்லாம் பகவானோட அனுக்கிரகம்தன்!”

“ஆமாம்ப்பா. நேக்கு எப்பிடி அப்பிடி ஒரு யோசனை தோணித்துன்னே தெரியல்லே. ஆனா, அந்தக் கடன்காரன் கிட்ட சிரிச்சு நடிச்சதை நெனைச்சா என் மேலேயே நேக்கு அருவருப்பா யிருக்குப்பா.”

“முள்ளை முள்ளாலதானேம்மா எடுத்தாகணும் ? இனிமே நீ எங்கேயும் வேலைக்குப் போகவேண்டாம். ஆத்தோடவே இரு. என்னால என்ன கொண்டுவர முடியறதோ அதை வெச்சிண்டு கால் வயிறோ அரை வயிறோ சாப்பிட்டுண்டு சிவனேன்னு கெடக்கலாம். மனுஷாளுக்கு மானம்தாம்மா பெரிசு. அதுலயும் பொம்மனாட்டிக்கு. அசம்பாவிதமா ஏதானும் நடந்துட்டா, அது அவளை வாணாள் முழுக்க உறுத்திப்பிடும்மா. நாங்க, புருஷா, அப்பிடி இல்லே. .. .. ம்! ஒரு கொழந்தையாவது தக்கி யிருக்கப்படாதோ நோக்கு ? மூணையும் வாரிண்டு போயிட்டானே பகவான்!”

“நடக்கிறதெல்லாம் நல்லதுக்குத் தாம்ப்பா. அப்படித்தான் எல்லாத்தையும் எடுத்துக்கணும்னு நீங்கதானே சொல்லுவேள் ? நம்ம இல்லாத்தனத்துல கொழந்தையை வேற எப்படிப்பா சோறு போட்டு வளக்க முடியும் ? அதையும் பட்டினி போட வேண்டி யிருக்கேன்ற உறுத்தல் தான் மிஞ்சும்!”

“நீ சொல்றதும் வாஸ்தவந்தான். ஏதோ, தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சேன்னு நாம சந்தோஷந்தான் பட்டுக்கணும்!”

“ஆமாம்ப்பா.”

சற்று நேரம் போல் இருவருக்குமிடையே மவுனம் நிலவியது.

ஒரு பெருமூச்சால் அதைக் கலைத்த பஞ்சாட்சரம், “சரி. எழுந்து போய்க் காப்பியாவது ஒரு வாய் சாப்பிடு. போம்மா!” என்றார்.

“ஆகட்டும்ப்பா. நீங்களும் ஒரு வாய் சாப்பிடுங்கோ.” – பங்கஜம் கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்தாள்.

காப்பியைக் குடித்த பின், கொஞ்ச நேரம் கழித்து, பஞ்சாட்சரம் வாசலுக்குப் போய்த் திண்ணையில் உட்கார்ந்தார். மகளுக்கு முன்னால் அவர் அடக்கிவைத்திருந்த கண்ணீர் இப்போது திமிறிக்கொண்டு புறப்பட்டது. ‘சே! லோகம் ஏன் இப்பிடிக் கெட்டுப் போயிடுத்து ? அசல் பொம்மனாட்டிகளைத் தாயாவும் ஒடன்பொறப்பாவும் நெனைக்கிற மனுஷா கொறைஞ்சுன்டே வராளே ? என்ன மனுஷா! ஏன் இப்பிடிக் கார்த்திகை மாசத்து நாயா அலையறா ? மேலாக்கு வெலகாம இழுத்துப் போத்திண்டு அடக்க ஒடுக்கமா யிருக்குற பொண்ணுகளுக்கே இந்த நெலமைன்னா, கொஞ்சம் முன்ன பின்ன இருக்குறதுகளோட கதி என்ன ? அதுலயும் நிராதரவான ஏழைப் பொண்ணுகளா வேற இருந்துட்டா, தட்டிக் கேக்குறதுக்கு நாதி யில்லேங்குற திமிர்ல, இந்த நாய்கள் இன்னும் அதிகக் கொழுப்புப் பிடிச்சுன்னா அலையும்கள் போலிருக்கு ? அட, பகவானே! இதைப் போய் யார் கிட்டவும் சொல்லவும் முடியாது. அவன் நாசமே பண்ணியிருப்பான்னுல்ல பேச ஆரம்பிப்பா வம்பு பிடிச்ச மனுஷா ?’

அப்போது எதிர்வீட்டுப் பையன் அங்கு வந்து அவரது சிந்தனைக்குத் தற்காலிக முற்றுப் புள்ளி வைத்தான்: “மாமா! இந்தாங்கோ. எங்கப்பா படிச்சாச்சு. அதனால உங்ககிட்ட குடுக்கச் சொன்னா. நீங்க படிச்சு முடிச்சதும் கொண்டுவந்து குடுக்கச் சொன்னா,” என்று அன்றைய சுதேசமித்திரனை அவரிடம் கொடுத்துச் சென்றான்.

பஞ்சாட்சரம் ஆவலுடன் அந்த நாளிதழை வாங்கிப் பிரித்துப் படிக்கத் தொடங்கினார். அதைப் படிப்பதில் கொஞ்ச நேரத்தைக் கழித்த பின், மகளின் அழைப்புக் குரல் கேட்டு உள்ளே போனார்.

“இந்தாங்கோப்பா, இன்னும் ஒரு அரை தம்ளர் காப்பி.”

“என்னம்மா, இது ? குடிச்சுக் கொஞ்ச நேரந்தானே ஆச்சு ? அதுக்குள்ளயா ?” என்று வாய் வினவினாலும் ஆவலுடன் அதை வாங்கிக்கொண்டு பஞ்சாட்சரம் பலகையில் அமர்ந்தார்.

“என்னமோ இன்னும் கொஞ்சம் குடிச்சாத் தேவலை போல இருந்தது. அதான்.”

“ .. .. .. காந்தி இப்ப பங்களூருக்கு வந்திருக்காராம்.”

பங்கஜம் தலையை மட்டும் ஆட்டிவிட்டுத் தன் காப்பியைப் பருகலானாள்.

“திரும்பிப் போறச்சே அப்படியே நம்ம பக்கமும் வருவார்னு நெனைக்கறேன்.”

பங்கஜம் காப்பியைக் குடித்தபடி வியப்புடன் அவரைப் பார்த்தாள். காந்தியைப் பற்றி அவர் அடிக்கடி பேசியது ஏற்கெனவே ஒரு வியப்பை அவளுள் ஏற்படுத்தி யிருந்தது.

“ஏம்ப்பா! காந்தி என்ன சங்கராச்சாரியார், ராமலிங்க அடிகள் மாதிரி பெரிய ஆளா ? அடிக்கடி அவரைப் பத்திப் பரவசமாப் பேசறாளே எல்லாரும் ?”

“ஆமாம்மா. அவாளை யெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுடுவார் போலேருக்கு இந்த காந்தி! எதிர்ல வந்த புலையனைத் தள்ளிப் போன்னு ஆதி சங்கரர் சொன்னப்போ, ‘உயிரைத்தள்ளிப் போகச் சொல்றியா, ஒடம்பைத் தள்ளிப் போகச் சொல்றியா, இல்லேன்னா ஆத்மாவைத் தள்ளிப் போகச் சொல்றியா’ அப்படின்னு கேட்டு, அவரை அசத்தி, அவரோட அஞ்ஞானத்தைப் போக்கினாரே அந்த சாட்சாத் பரமேஸ்வரன், அவரோட மறு அவதாரம் மாதிரி இப்ப வந்திருக்கார்ம்மா, காந்தி! அவாளை யெல்லாம் தீண்டத்தகாதவான்னு ஒதுக்கிவைக்கக் கூடாது, கோவிலுக்குள்ள விடணும், கொளம் குட்டைகளை அவாளும் நம்ம மாதிரியே உபயோகப் படுத்த விடணும்னெல்லாம் கூட்டங்கள்ள பிரசங்கம் பண்ணிண்டும், பத்திரிகைகள்ள எழுதிண்டும் வரார். இன்னிக்கு சுதேசமித்திரன்ல கூடப் போட்டிருக்கு!”

“அதெல்லாம் நடக்குமாப்பா ? காந்தி சொல்றதெல்லாம் சரிங்கறேளாப்பா ?”

“பின்ன ? .. .. ஆனா. நான் இப்பிடி ஒரு அபிப்பிராயம் உள்ளவன்னு தெரிஞ்சாலே போறும், அக்கிரகாரத்துக்காரா ஒண்ணு கூடித் தீர்மானம் போட்டு என்னை ஜாதிப் பிரஷ்டம் பண்ணிடுவா அடுத்த நிமிஷமே! நம்ம வேத சாஸ்திரங்களை ஒழுங்காப் படிச்சவா தீண்டமைங்கிறதா ஒண்ணு இருக்கணும்கிறதை ஒத்துக்கவே மாட்டா. ஏத்துக்கவும் மாட்டாம்மா. “

“பின்ன, சாஸ்திரத்துல அப்படிச் சொல்லியிருக்கு, இப்படிச் சொல்லியிருக்குன்னு பீத்திண்டாப்ல ஆச்சா ? நெஜ வாழ்க்கையில அதை எல்லாம் நாம கடைப் பிடிக்கிறோமாங்கிறதை வெச்சுத்தானே நாம அதைப் பத்திப் பெருமைப் பட்டுப் பீத்திக்கமுடியும் ?”

வாயைத் துடைத்துக்கொண்டே காப்பித் தம்ளரைக் கீழே வைத்த பஞ்சாட்சரம், “ரொம்ப சரியாச் சொன்னேம்மா! அதையேதான் அம்பேத்கர்ங்கிற அவாளோட தலைவரும் கேக்கறார்.”

“எவாளோட தலைவர்ப்பா ? அம்பேத்கர்ங்கிறது யாரு ? நான் கேள்விப்பட்டதே இல்லியே ?”

பஞ்சாட்சரத்துக்குச் சிரிப்பு வந்தது. “பத்திரிகை படிக்கிறவாளுக்குத்தானே அதெல்லாம் தெரியும் ? நாம ‘பறையாள்’னு -அதாவது பறை அடிக்கிறவாளானதால அவாளுக்கு அப்படிப் பேரு- நாம தொடக்கூடதவான்னு சொல்லி ஒதுக்கி வெச்சிருக்குற பாவப்பட்ட ஜனங்களைக் காந்தி ஹரிஜன்னு சொல்றார். அதாவது ‘கடவுளுக்குப் பிடிச்ச மனுஷா’ன்னு அதுக்கு அர்த்தம். அவா பட்ற துன்பங்களைக் கண்டு பொங்கிப் போய், அவாளுக்காகச் சண்டை போட்டு உரிமைகளை வாங்கிக் குடுக்கிறதுக்கோசரம் இந்த அம்பேத்கர் மெனக்கெட்டுண்டிருக்கார். ஏன்னா, ஒரு ஹரிஜனக் குடும்பத்துல பொறந்ததால ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கார் அந்த மனுஷர். ஆனாலும் பாரு, அவரைப் படிக்க வெச்சு ஆளாக்கினவர் ஒரு பிராமணர்தான்!”

“அப்ப, நீங்க சொல்ற மாதிரி நம்ம சாஸ்திரங்களை ஒழுங்காப் படிச்சுப் புரிஞ்சுண்டவரா யிருக்கணும் அந்தப் பிராமணர்!”

“ஆமாமா. .. .. தான் பொறந்த ஜாதிக்காராள்ளாம் இனித் துன்பப்படக் கூடாதுங்கிறதுக்கோசரம் அவர் அவாளுக்காகப் போராடிண்டிருக்கார். ‘பறையாளும் இந்துக்கள்தானே ? இந்துக் கோவில்களுக்குள்ள நுழையவிடாம அவாளைத் தடுக்கறேளே, நியாயமா’ ன்னு கேக்கறார். இப்பிடி நம்ம மதக் காராளையெல்லாம் நாமளே தொடக்கூடாதவான்னு பிரஷ்டம் பண்ணி வெச்சா அவாள்ளாம் கிறிஸ்தவாளாயிடுவா! இல்லியா ?”

“ஆனா ஆகட்டுமேப்பா! அதுல என்ன வந்தது ? எங்க அவாளுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கறதோ அங்க அவா போறா. போகட்டுமே ? கிறிஸ்தவாளா மாறினா, அவாளுக்குச் சாப்பாடு, துணிமணி, படிப்பு இதெல்லாம் கிறிஸ்துவ மத குருமார்கள் தராளாமே ?”

“ஆமாம்மா. அது ஒரு வித லஞ்சம்தானே ?”

“நான் ஒத்துக்க மாட்டேன். அப்படியே, அதை லஞ்சம்னே வெச்சுண்டாலும், அதை அவா வாங்கிக்கிறதுல என்ன தப்பு இருக்கு ? நாம அவாளைக் கோவிலுக்குள்ள விடமாட்டோம், தொடக்கூட மாட்டோம். தப்பித் தவறித் தொட்டுட்டாலோ, பட்டுட்டாலோ தீட்டுன்னு சொல்லிண்டு ஆத்துல முங்குவோம். இல்லேன்னா, ஆத்துக்கு வந்ததும் குளிப்போம்! இதுமாதிரியான அவமானங்களை யெல்லாம் செய்யாத ஒரு மதத்துக்கு அவா மாறிக்கிறதுல என்ன தப்பு இருக்காம் ? தவிர, ஏழைகளுக்குச் சோறு கண்ட எடம் தானே சொர்க்கலோகம் ? சோறும் மரியாதையும் கிடைக்கிற மதத்துக்கு அவா போறா! என்ன சொல்றேள் ?”

பஞ்சாட்சரம் அளவுகடந்த திகைப்புடன் மகளை வெறித்து நோக்கினார். பங்கஜம் அந்த அளவுக்குப் பேசியது அவரை அயர்த்தியது.

“ஒரு விதத்துல, நீ சொல்றது வாஸ்தவந்தாம்மா.”

“ஒரு விதத்துல இல்லேப்பா – பல விதத்துலேயும்! இப்ப நம்மளையே எடுத்துக்குங்கோ. உங்களுக்கு வயசாயிடுத்து. உழைச்சுச் சம்பாதிக்க முடியல்லே. அலைஞ்சு திரிஞ்சு அஞ்சும் பத்துமாக் கொண்டுவறேள். நானும் கொஞ்சம் சம்பாத்ிச்சு உங்க சொமையைக் கொறைக்கலாம்னு கெளம்பிப் போன கதைதான் ரெண்டாவது நாள்லயே சிரிப்பாச் சிரிச்சுடுத்தே ! என்னை மாதிரி சின்னவாளுக்குப் பாதுகாப்பும் இல்லே. அதனால நாம கூடக் கிறிஸ்தவாளா மாறிக்கலாம். ஒண்ணும் தப்பே இல்லேன்னுதான் தோண்றது!”

“சிவ சிவா! அப்படியெல்லாம் வாயில வந்ததைப் பேசாதேம்மா. நம்ம மதத்தோட அருமையும் பெருமையும் தெரியாதவாதாம்மா வேற மதத்துக்கு மாறுவா. இன்னும் சொல்லப் போனா, நம்ம மதம் ஒரு மதமே இல்லேம்மா. அது ஒரு தர்மம். ஒரு நெறி. மனுஷாளுக்கு வழி காட்ற ஒரு மார்க்கம். ஒரு வாழ்க்கை முறை. யாரு இந்த தர்மத்தை ஸ்தாபிச்சா, எப்ப அது ஏற்பட்டுதுங்கிற எதுவுமே யாருக்குமே தெரியாதும்மா. அதை ‘மதம்’கிற பேராலேயே அழைச்சாலும், அதுதாம்மா உலகத்துலயே ஆதிமதம். இன்னொண்ணு. எந்த மதமுமே மனுஷாளைக் கெட்டவாளா யிருங்கோன்னு சொல்லவே இல்லே. நல்லவாளா யிருங்கோன்னுதான் படிச்சுப் படிச்சு எல்லா மதங்களும் சொல்றது. நாம அதைக் கேக்காததோ, தப்பாப் புரிஞ்சுக்குறதோ நாம செய்யற தப்பும்மா. அது அந்த மதத்தோட தப்பில்லே.”

“ .. .. ‘என் மதத்தும்மேல நான் வெச்சிருக்குற பிரியம் என்னைப் பட்டினி போட்றது. தள்ளி வேற வைக்கிறது. எந்த மதத்துக்காரா மனுஷத்தனத்தோட நேக்குச் சோறு போட்றாளோ அந்த மதத்துக்கு மாறிக்கலாம்’ அப்படின்னு சிலர் நினைச்சா அதைத் தப்புன்னு எப்படிப்பா சொல்லுவேள் ?”

பஞ்சாட்சரம் மிகவும் திடுக்கிட்டுப் போனார். ‘பங்கஜமா இப்படி வாதிடுகிறாள் ? இப்படி எல்லாம் வாதாட இவள் எங்கே கற்றாள் ?’ என்று அவருக்குள் வியப்பான வியப்புப் பரவியது. அவர் தம் திடுக்கீட்டிலிருந்து உடனே விடுபட முடியாமல் சில நொடிகளுக்கு வாய் மூடிப்போனார். அவர் வாய்மூடிப் போனமைக்கு அவளது அதிரடிப் பேச்சு விளைவித்த வியப்பு மட்டுமே காரணமன்று. அவள் எழுப்பிய கேள்விகளுக்கு அவரால் உரிய பதிலைச் சொல்ல முடியாமற் போனதும் கூடத்தான்!

“என்னம்மா இது! என்னென்னமோ சொல்றே ? அவாவா மதத்துலதாம்மா அவாவா இருக்கணும். நீ இப்படி யெல்லாம் தர்க்கம் பண்றதைக் கேட்டா நேக்கு பயமா யிருக்கும்மா!”

பங்கஜம் கலீர் என்று சத்தம் போட்டுச் சிரித்தாள். “நீங்க வேற! அப்படி யெல்லாம் எதுவும் பண்ணிட மாட்டேம்ப்ப்ா. உங்களுக்கு என்னால ஏற்பட்ட கவலைகள் போறும். இதுக்கு வேற நீங்க கவலைப் படாதங்கோ. நானாவது வேற மதத்துக்குப் போறதாவது! என்னோட சாமிகள் எப்பவுமே சிவன், விஷ்ணு, பார்வதி, லக்ஷ்மி, முருகன், ராமன், கிருஷ்ணன் இவாள்ளாம்தான்! பிள்ளையாரை விட்டுட்டேனே! .. .. அது இருக்கட்டும், பாகீரதி மாமி கேட்டா என்னன்னு சொல்லட்டும் ?”

“உள்ளது உள்ளபடியே சொல்லிடு. கூட்டவும் வேண்டாம், கொறைக்கவும் வேண்டாம்.”

“அந்த மாமி கண், காது, மூக்குன்னு சேத்துண்டு என்னத்தையாவது வேற மாதிரிப் பரப்பினான்னா ?”

“அதுக்கு நாம என்ன பண்ண முடியும் ? அவா வாய்க்குப் பூட்டா போடமுடியும் ?”

“சரிப்பா. அப்ப நான் சமையக்கட்டுக்குப் போய் என் வேலையைப் பாக்கறேன்,” என்றவாறு பங்கஜம் காப்பித் தம்ளர்களுடன் எழுந்து அடுக்களைக்குப் போனாள்.

கைகள் வேலை செய்துகொண்டிருந்தனவே ஒழிய, என்ன முயன்றும் அன்று காலை காமாட்சியின் வீட்டில் நடந்ததையே அவள் மனம் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தது.

அப்படி ஒரு சமயோசித அறிவுடன் நடந்துகொண்டு தப்ப முடிந்ததை எண்ணிப் பார்த்த அவளுள் தன்னைப் பற்றிய வியப்புப் பெருகியது. அவளால் துளியும் நம்ப முடியவில்லை. அவனுக்கு அனுசரணையாய்ப் பேசுபவள் போல் தான் நடித்துச் சிரித்ததை எண்ணி அவளுள் மறுபடியும் அருவருப்புக் கிளர்ந்தது.

.. .. .. “வாப்பா, பீ.ஏ. சாமிநாதா! “ என்று சிரித்தபடி சிவராமன் சாமிநாதனை வரவேற்றான்.

“எப்படிப்பா இருக்கே ? இன்னும் தனி மரந்தானா ? “ என்றவாறு தான் ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டு அவனையும் அமரப் பணித்த சிவராமன், “ஏய்! இங்க கொஞ்சம் வந்துட்டுப் போடி!” என்று உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தான்.

“அதென்ன பொண்டாட்டியை ‘ஏய்’னு மாடு மேய்க்கிறவன் மாதிரி கூப்பிட்றே ? பேரைத்தான் சொல்லிக் கூப்பிட்றது! “டா” வேற போட்றே ?”

“நீ ஒரு கல்யாணத்தைப் பண்ணிண்டுட்டு அதைச் செய்டா! நேக்கு இப்படியே பழக்கமாயிடுத்து.”

அவன் மனைவி சங்கரி, “என்னன்னா!” என்று தலையை மட்டும் கதவுக்கு வெளியே நீட்டியபடி குரல் கொடுத்தாள்.

“ரெண்டு காப்பி கொண்டா. “

“சரி.”

இருவரும் பேசத் தொடங்கினார்கள். இருவரும் வத்தலப்பாளையம் உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாய்ப் படித்தவர்கள். எப்போதாவது சந்தித்துக்கொள்ளுவார்கள். ஆனால், தற்செயலாய்ச் சந்தித்துக்கொண்டதுண்டே தவிர, ஒருவருடைய வீட்டுக்கு மற்றவர் வந்து அளவளவுவது கிடையாது. எனவே, சாமிநாதன் ஏதோ ஒரு நோக்கத்துடன் வந்திருப்பதாகச் சிவராமனுக்குத் தோன்றியது.

காப்பியைக் குடித்து முடித்ததும், சாமிநாதன், “கொஞ்சம் வெளியே போய் நடந்துண்டே பேசலாமா, சிவராமா ?” என்றான்.

“ஓ. அதுக்கென்ன ?” என்ற சிவராமன் சங்கரியிடம் சொல்லிக்கொண்டு நண்பனுடன் படியிறங்கினான்.

“ஏதானும் அந்தரங்கமான பேச்சாடா ?”

“அய்யே! நீ வேற. அந்தரங்கமும் இல்லே, ஒரு மண்ணும் இல்லே. பாத்து ரொம்ப நாளாச்சேன்னு வந்தேன். .. .. இந்த ஊர்ல பஞ்சாட்சரம்னு ஒரு ஜோசியர் இருக்காரில்ல ?”

“ஆமா ? அதுக்கென்ன ? ஜோசியம் பாக்கறதுக்கா ? நோக்கு அதுல யெல்லாம் நம்பிகை இருக்கா என்ன ?”

“ஏன் இல்லாம ? அதுக்குத்தான் வந்தேன். அப்படியே உன்னையும் பாத்துட்டுப் போலாமேன்னு வந்தேன். இனிமேதான் அவர் வீட்டுக்குப் போகணும்.. .. அவர் வீடு எங்க இருக்கு ?”

“இதே தெருதான். அதோ, அந்தச் சின்ன வீடு.”

சாமிநாதன் படபடப்பாக உணர்ந்தான்.

– தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation