மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 11

This entry is part of 29 in the series 20060303_Issue

ஜோதிர்லதா கிரிஜா


இரண்டிரண்டு படிகாளய்த் தாவித் தாவி மாடியிலிருந்து கீழே இறங்கிய சாமிநாதன் அவசர நடையில் வாசலுக்குப் போய் நின்றான். தெருத் திருப்பத்தில் அந்தப் பெண் தன் கையில் பிடித்திருந்த எரியும் கொள்ளிக்கட்டையுடன் ஓடிக்கொண்டிருந்ததை அவன் கண்டான். கொள்ளிக்கட்டையைக் கீழே வீசிப் போடாமல் அவள் இன்னமும் அதைப் பிடித்தவாறு ஓடிக்கொண்டிருந்ததிலிருந்து அவளது பதற்றம் துளியும் குறைந்திருக்கவில்லை என்பதை அவன் புரிந்துகொண்டான். அந்தக் காலை வேளையில் தெருவில் சென்றுகொண்டிருந்த சிலர் வியந்து நின்றனர்.

பக்கத்து வீட்டு நாகலிங்கமும் வாசலுக்கு வந்து நின்று கவனித்ததையும் அவன் பார்த்தான். தற்செயலாய்த் தலை திருப்பிய அவனது முகத்தில் தன்னைக் கண்டதால் விளைந்த அசட்டுக்களையையும் கவனிக்கச் சாமிநாதன் தவறவில்லை. கணத்துக்கும் குறைவான நேரத்துள் அவன் தன் பார்வையை அகற்றிக்கொண்டதையும் கண்டு அவன் தனக்குள் சிரித்துக்கொண்டான்.

நாகலிங்கத்தைப் பற்றி அவன் ஏற்கெனவே தெரிந்து வைத்திருந்தான். அதனால்தான், இன்னது நடந்திருக்கும் என்பதை ஊகிப்பது அவனுக்குச் சாத்தியமாக இருந்தது. ஆனால், சாமிநாதன் தன் வீட்டுக்குள் திரும்பிச் செல்லாமல் தெருக்கோடிப் பக்கம் பார்த்துக்கொண்டே நின்றான்.

ஒரே இணைப்புச் சுவரைக்கொண்ட பக்கத்து வீடாதலால், அவனுக்கும் நாகலிங்கத்துக்குமிடையே மிகக் குறுகிய இடைவெளியே இருந்தது.

பங்கஜம் தன் பார்வையிலிருந்து மறைந்ததும், “யாரு, சார், அந்தப் பொண்ணு ?” என்று நாகலிங்கத்தின் புறம் பார்த்து மிக இயல்பாக அவன் விசாரித்தான்.

அந்தக் கணத்தில் தன் வீட்டுக்குள் போகத் திரும்பியிருந்த அவன், திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்து, “கொள்ளிக்கட்டையும் கையுமா ஓடிண்டிருந்தாளே, அவளைத்தானே சொல்றேள் ?” என்று வலியத் தோற்றுவித்துக்கொண்ட புன்சிரிப்புடன் வினவினான்.

“ஆமா. அந்தப் பொண்ணைப் பத்தித்தான் கேக்கறேன். உங்காத்துக் கொல்லைக்கதவைத் தொறந்துண்டு ஓடினதை எங்காத்து மொட்டை மாடியிலேலர்ந்து பாத்ததாலதான் உங்களைக் கேக்கறேன், சார்!”

“எங்காத்துக்குப் புதுசா சமையல் வேலைக்கு வந்திருக்குற பொண்ணு, சார். நேத்துத்தான் வேலைக்கு வந்தா. நேத்தே கூடப் பாதியில போயிட்டா. இன்னைக்குக் காப்பி அடுப்பு மூட்டினவ திடார்னு கொள்ளிக்கட்டையை எடுத்துண்டு ஓட்றா! எங்களுக்கு ஒண்ணுமே புரியல்லே. பைத்தியம்னு தோண்றது. நன்னா விசாரிக்காம வேளைக்கு வெச்சுட்டோம்.”

“யாரு அந்தப் பொண்ணு ? இந்த ஊர்ப் பொண்ணாத் தெரியல்லியே ?”

“நீங்க பாத்தேளா அவளை ?” என்று கேட்ட நாகலிங்கத்துக்குக் கடுப்பாக இருந்தது. ‘கல்யாணமே பண்ணிக்கப் போறதில்லே. காலம் முழுக்கப் பிரும்மச்சாரியாவே இருந்துடப் போறேன்னு சொல்லிண்டு ஊர்ல இருக்கிற பொண்ணுகளை யெல்லாம் யாராருன்னு நன்னாப் பாத்து வெச்சிருக்கானே! இல்லேன்னா, அவ இந்த ஊர்ப் பொண்ணு இல்லேன்னு இவனுக்கு எப்படித் தெரியும் ?’

“ஆமா. பக்கத்து ஊர்ப் பொண்ணு.”

“பக்கத்து ஊர்னா ?”

“செங்கல்பாளையம்,” என்று பதில் சொல்லிவிட்டு, மேற்கொண்டு பேச்சைத் தவிர்க்க விரும்பியவனைப் போல், நாகலிங்கம் அவசர நடையில் வீட்டுக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டதைக் கண்டு சாமிநாதன் தன்னுள் சிரித்துக்கொண்டான். பின்னர், மொட்டைமாடிக்குப் போய் மறுபடியும் புத்தகமும் கையுமாய் உலாவத் தொடங்கினான்.

படிப்பில் கவனம் செல்ல மறுத்தது. ‘என்ன அழகு அந்தப் பொண்ணு! யாராயிருக்கும் ?’

சாமிநாதனுக்குப் பெண்களைக் கூர்ந்து பார்த்து அவர்களது அழகை ரசிக்கிற பழக்க மெல்லாம் கிடையாது. நாகலிங்கம் சற்று முன்னர் அவனைப் பற்றிக் கேவலமாக நினைத்துத் தனக்குள் விமர்சித்தமைக்கு மாறாக அவன் துப்புரவானவன்தான். உண்மையிலேயே திருமணத்தில் நாட்டம் இல்லாதவன்தான். பிரும்மச்சரிய விரதம் பூண்டவன்தான். ஆனால் பக்கத்து வீட்டுக் கொல்லைக் கதவை நோக்கிக் கையில் கொள்ளிக்கட்டையோடு ஓடி அதைத் திறந்த அவளை அவன் தற்செயலாய்க் கவனிக்க நேர்ந்தது. கதவின் தாழ்ப்பாள் உயரே இருந்ததால் அதைத் திறக்க அவள் தன் முகத்தை உயர்த்தியதுதான் அந்த வாய்ப்பை அவனுக்கு அளித்தது.

அந்த முகம் என்ன காரணத்தாலோ அவனுள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது. கண்டதும் காதல் என்பது போன்ற எந்த எண்ணமும் அவனுக்கு வரவில்லைதான். ஆனால் அவளது மேலெழுந்தவாரியான முகத்தழகைக் கடந்த ஓர் ஆன்மீக அழகு- அகத்தின் அழகு- தன் மனத்தில் பதிந்து தன்னை ஈர்த்ததை மட்டும் அவனால் மறுத்துக்கொள்ள முடியவில்லை. அவனுக்கு ஒரு மாதிரியாய்ப் புல்லரித்தது. ‘சேச்சே!’ என்று சொல்லிக்கொண்டான். அந்தச் சொல் தன் வாயில் வந்தது ஏன் என்று அடுத்த கணமே கேள்வி எழுப்பிக்கொண்ட அவன் எச்சில் விழுங்கினான். ‘என்னதான் பிரும்மசரிய விரதம் என்று பூண்டிருந்தாலும், அழகை ஆராதிக்கிற ரசனைதான்’ என்று தனக்குத் தானே விளக்கம் கொடுத்துச் சமாதானமுற்றான்.

அவள் கொள்ளிக்கட்டையும் கையுமாய் ஓடத் தொடங்கியது பற்றிய வியப்பில் அவன் இருந்தபோது, இரண்டே நிமிடங்களுக்குள் நாகலிங்கம் ஓட்டமாக ஓடிக் கொல்லைப்புறத்துக்கு வந்து, திறந்துகிடந்த கதவை நெருங்கி வெளியே எட்டிப் பார்த்ததைக் கவனித்ததும் அவனுக்கு எல்லாமே புரிந்து போயிற்று. ‘யார் அவள் ? இருபத்தைந்து வயதுக்கு மேல் இருக்காது என்று தோன்றுகிறது. என்ன குடும்பக் கஷ்டமோ! அதனால் வேலைக்கு வந்தவளாய்த்தான் இருக்க வேண்டும். ‘ – சட்டென்று அவனது சிந்தனை நின்றது.

செங்கல்பாளையத்தில் அவனுக்கு ஒரு நண்பன் இருந்தான். அவனைப் பார்க்கிற சாக்கில் அங்கே போய் அவள் யார் என்பதை நாசூக்காய் விசாரித்து அறிந்து கொள்ள அவன் அவாவினான். தன் எண்ணங்கள் ஓடிய விரைவைக்கண்டு அவனுக்கே தன் மீது வியப்பு ஏற்பட்டது. ‘அவள் யாராயிருந்தால் என்ன ? அதைக் கண்டுபிடித்து ஆகப் போவதென்ன ? நானோ பிரும்மச்சரிய விரதம் பூண்டிருப்பவன். அர்த்தமே இல்லை!’ – இப்படி எண்ணித் தன் மனக்குதிரைக்கு லகான் போட அவன் முற்பட்டாலும் அது அடங்க மறுத்தது.

அவனுடைய அம்மா குளித்துக்கொண்டிருந்தான். ஒருகால் தன் அம்மா அவளைப் பார்த்திருக்கக்கூடும் என்று அவன் எண்ணினான். குளித்து விட்டு அம்மா வந்ததும் அது பற்றிக் கேட்கவேண்டும் என்று நினைத்தான். கையில் பற்றியிருந்த புத்தகத்தில் கவனம் செல்லாமல் அவன் யோசித்தபடியே நடந்தான்.

‘நாகலிங்கத்தின் மனைவிக்கு அவன் அந்தப் பெண்ணிடம் தப்பாக நடந்துகொள்ள முயன்றது தெரிந்திருக்குமா ?’ – அவனது பார்வை நாகலிங்கத்தின் வீட்டுக் கொல்லைப்பக்கம் கவனித்தது. இப்போது கொல்லைக்கதவு சாத்தித் தாழிடப்பட்டிருந்தது. அந்த வீட்டில் எப்போதும் கேட்கும் குழந்தைச் சத்தம் கேட்கவில்லை. அவன் மனைவி விழித்துக் கொண்டிருந்ததற்கான எந்த அரவமும் கேட்கவில்லை. சாதாரணமாக அவளது குரல் மொட்டை மாடியில் கேட்கும். அவள் முடக்கு வாதத்தால் குறைந்தபட்ச உடல் அசைவுகளுடன், படுத்த படுக்கையில் இருப்பவள் என்பதைத் தன் அம்மா மூலம் அவன் அறிந்திருந்தான். இன்று வீடே அமைதியில் ஆழ்ந்திருந்த விநோதம் ஏதோ நடந்திருக்கிறது என்று அவனை ஊகிக்க வைத்தது. என்னவென்பதுதான் புரியவில்லை. அவன் மனைவியும் குழந்தையும் அமைதிப்படுத்தப்பட்டிருந்தார்கள் என்பது மட்டும் புரிந்தாது. ‘அந்த வீட்டுக்குள் ஓர் அறையில் இருவரையும் அவன் ஒருகால் அடைத்து வைத்திருந்திருப்பானோ ? வாயில் துணியைச் சுருட்டி அடைத்துக் காமாட்சி குரலெழுப்ப் முடியாதபடிப் பண்ணிவிட்டிருந்திருப்பானோ ? .. .. சே! இதென்ன வீண் ஆராய்ச்சி ? யாரோ எப்படியோ தொலையட்டும்!.. ..’

இனித் தன்னால் படிப்பதில் ஆழமுடியாது என்பது திட்டவட்டமாய்த் தெரிந்து போனதில், சாமிநாதன் அதிருப்தியுடன் படியிறங்கினான். குளித்து முடித்து வெளிவந்திருந்த அவன் அம்மா தங்கம்மா ஏதோ சுலோகத்தை முணுமுணுத்தவாறு அடுப்புப் பற்ற்வைத்துக்கொண்டிருந்தாள்.

புத்தகத்தை அலமாரிக்குள் வைத்துவிட்டு அவன் மெதுவாகச் சமையலறைக்குள் எட்டிப் பார்த்தான்.

“என்ன, சாமிநாதா ? காப்பிதானே ? இதோ ஆயிடுத்து. பத்தே நிமிஷம்!.. ..”என்றவாறு தங்கம்மா அவனது காலடியோசை கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

“அதுக்கில்லேம்மா.. .. ஆமா ? நாகலிங்கத்தாத்துக்குப் புதுசா ஒரு சமையல்காரப் பொண்ணு வந்திருக்காளா என்ன ?”

சாமிநாதன் இப்படியெல்லாம் பேசக் கூடியவன் அல்லன் என்பதால் தங்கம்மா வியப்புடன் அவனை ஏறிட்டாள்.

“ஆமா. நேத்துலேர்ந்து வேலைக்கு வந்திண்டிருக்கா. ஏன் ? அவளுக்கு என்ன ?” என்று வினவிய தங்கம்மாவின் பார்வை அவன் மீது ஆழமாய்ப் படிந்தது.

பின்னர், அவனிடமிருந்து பதில் வருமுன், “பாவம்! சின்ன வயசிலேயே அவளோட ஆம்படையான் அவளைத் தள்ளிவெச்சுட்டானாம்!” என்றாள் அவசரமாக.

சாமிநாதன் கணம் போல் தயங்கினான். தான் கண்டதையும், தனது ஊகத்தையும் தாயிடம் சொல்லலாமா வேண்டாமா என்றுதான். ஆனால், தெருவில் நடந்துகொண்டிருந்த சிலரே அந்தப் பெண் கொள்ளிக்கட்டையைப் பிடித்தபடி ஓடிக்கொண்டிருந்ததைப் பார்த்திருக்கையில், தானும் அப்படி அவளைப் பார்த்ததை அம்மாவிடம் தெரிவிப்பதில் எந்தத் தவறுமில்லை என்று அவன் உடனே முடிவுசெய்தான். தன் அம்மாவால் மட்டுமே அந்தச் செய்தி ஊரில் பரவப் போவதில்லை என்று தன்னைச் சமாதானப்படுத்திக்கொண்டபின் உண்மையைச் சொல்லிவிட்டான்.

“அட கஷ்டகாலாமே! அந்த நாகலிங்கக் கட்டேல போறவன் பார்வையே சரியில்லே. வயசான பொம்மனாட்டிகளைக்கூட விட்டுவைக்காத பார்வை அவனுக்கு. பொண்டாட்டி நடமாடிண்டிருந்தப்பவே அவனுக்கு நடத்தை சரியில்லே. இப்ப கேக்கணுமா ? அதான் அந்தப் பொண்ணுகிட்ட வாலாட்டிப் பாத்திருக்கான். செங்கல்பாளையத்துப் பொண்ணு அது. அவ அப்பா ஜோசியராம். இருந்த ஒரே வீட்டையும் அவ கல்யாணத்துக்கோசரம் வித்துட்டு இப்ப நடுத் தெருவில நிக்கறார் பொண்ணோட. அம்மா கிடையாது. யாரோ ஒரு செட்டியார்- அந்த வீட்டை வாங்கினவர்- அவாளை வெரட்டாம அதுலயே அவா குடியிருந்துக்கச் சம்மதிச்சிருக்காராம். .. ..”

“இதெல்லாம் நோக்கு எப்படித் தெரியும் ?”

“நேத்து காமாட்சியைப் பாக்கப் போனேன். அப்ப சொன்னா.”

‘அடியம்மா! இந்தப் பொம்மனாட்டிகளுக்கு வேற வேலையே கிடையாது. அல்லு அசல் மனுஷா தும்மினாக்கூட, என்ன, ஏதுன்னு விசாரிக்கிற வம்பு! எழுதப் படிக்கத் தெரிஞ்சா அக்கடான்னு உக்காந்துண்டு ஒரு புஸ்தகத்தையோ பத்திரிகையையோ வாசிக்கத் தோணும். கல்வியோட அவதாரமே சரஸ்வதிதேவின்னு சொல்லிண்டு ஏன் தான் இந்த தேசம் பொண்ணுகளைப் படிக்கக் கூடாதுன்னும் சொல்லிண்டு கிடக்கோ ? அதனாலதான் காந்தி தலைதலையா அடிச்சுக்கறார். யங் இண்டியாவில பக்கம் பக்கமா எழுதறார்.. ..’

“என்னடா யோசனை ?”

“வேற ஒண்ணுமில்லேம்மா. படிக்கத் தெரிஞ்சா இந்தப் பொம்மனாட்டிகள் அவா பாட்டை அவாளே பாத்துப்பாளோல்லியோ ?”

“என்னடா சொல்றே ? புரியல்லே.”

“வெள்ளக்காரா தேசத்துல யெல்லாம் பொண்ணுகள் படிச்சுட்டு வேலைக்கெல்லாம் போறாளாம். அதை நெனைச்சுண்டேன்.. .. ஆமா ? அந்தப் பொண்ணு கொஞ்சமவது படிச்சிருக்காளாமா ?”

“அதை யாரு கண்டா ? விசாரிச்சாத் தெரியும்.. .. ஆமா ? நீ என்ன இவ்வளவு கவலைப் பட்றே அந்தப் பொண்ணப்பத்தி ? விட்டா, அவ படிக்காதவன்னு தெரிஞ்சா, நீயே கூப்பிட்டு அவளுக்குப் படிப்புச் சொல்லிக் குடுப்பே போலிருக்கே ?” என்று சிரித்து விட்டு, காப்பிவடிகட்டியில் பொடியைப் போட்ட தங்கம்மா கொதிக்கிற நீரை அதில் ஊற்றினாள்.

அவன் முகம் சிவந்தது: “என்னம்மா நீ ? அதெல்லாம் இந்தக் குக்கிராமத்துல நடக்குற காரியமா ? புருஷன் வேற தள்ளி வெச்சிருக்கான்கறே. செங்கல்பாளைத்துல பொறந்து வளந்தவளா யிருந்தா அவ எங்கே படிச்சிருக்கப் போறா ? படிச்சிருந்தா ஒரு டாச்சர், நர்ஸ்னு ட்ரெய்னிங் எடுத்துண்டுட்டு வேலைக்குப் போலாம். அது அவாளுக்கு ஒரு பாதுகாப்புத்தானே ?”

“என்னடா பெரிய பாதுகாப்பு ? இப்ப பாரு. சமையல் வேலைக்கு வந்த எடத்துல அந்தக் கட்டேல போறவன் அவ கையைப் பிடிச்சு இழுத்திருக்கான். அதே மாதிரி வெளியில போய் வேலை பாக்கற எடங்கள்ள இருக்குற புருஷா பொம்மனாட்டிகள் கையைப் பிடிச்சு இழுக்க மாட்டாங்கிறது என்ன நிச்சியம் ?”

பொங்கிய பாலை அடுப்பிலிருந்து இறக்கியபடியே தங்கம்மா இவ்வாறு கேட்டதும், “ நீ கேக்கற கேள்வி நியாயமானதுதான். ஆனா, அம்மா, நேர்ல இருந்து பாத்த மாதிரி ‘கையப் பிடிச்சு இழுத்தான்’ னெல்லாம் சொல்லாதே. நீயும் கண்ணால பாக்கல்லே. நானும் பாக்கல்லே. ஒரு ஊகமாக் கூட இப்படியெல்லாம் பேசக்கூடாது!”

“சரிதாண்டா. சும்மாரு. ஊர்ல இருக்கிறவாளுக் கெல்லாம் பரிஞ்சுண்டு வந்துடுவன். அவன் ஏதோ தப்பா நடந்திருக்கக்கொண்டுதானே அந்தப் பொண்ணு கொல்லை வழியாக் கொள்ளிக் கட்டையோட ஓடியிருக்கா ?”

“ரைட்டும்மா. ஆனா, அதுக்காகக் கையைப் பிடிச்சு இழுத்தான் னெல்லாம் சொல்லிட முடியாதும்மா. அவன் வாய் வார்த்தையா ஏதாவது அசிங்கமாப் பேசியிருந்தாலே கூட, அவனோட அடுக்க நடவடிக்கையைத் தடுத்துட்டுத் தானும் தப்பறதுக்காக அந்தப் பொண்ணு ஓடியிருக்கலாமில்லையா ? என்ன நடந்ததுங்கிறது அதுல சம்பந்தப்பட்ட அந்த ரெண்டு பேருக்கு மட்டுந்தான் தெரியும். நாம பாட்டுக்கு இஷ்டத்துக்குக் கற்பனை பண்ணிக்கப்படாது!”

“சரிதாண்டா. இந்தா. காப்பியை எடுத்துக்கோ!” என்ற தங்கம்மா திகைப்பில் ஆழ்ந்தாள். சாமிநாதன் பட்டணத்துக்குப் போய் பீ.ஏ. (B.A.) பட்டம் பெற்றுவிட்டு வந்தாலும் சர்க்கார் உத்தியோகம் எதிலும் அமராமல் வெட்டியாய்க் காலம் கழித்துக்கொண்டிருக்கிறான் என்கிற மனக்குறை அவளுக்கு மிக நிறைய இருந்தது. அதையும் விட, தான் கலியாணமே செய்துகொள்ளாமல் ஆயுள் முழுவதும் பிரும்மசாரியா யிருக்கப் போவதாய் அவன் சொல்லிக்கொண்டிருந்ததோ அதையும் காட்டிலும் அதிக வருத்தத்தில் அவளை ஆழ்த்தி யிருந்தது. பெண் என்கிற சொல்லை உச்சரிக்கக் கூடத் தயங்குபவன் போல் அதுகாறும் நடந்துவந்துள்ள சாமிநாதன் முன்பின் தான் அறியாத ஒருத்தியைப் பற்றிப் பேசியதும் கவலைப்பட்டதும் அவளை வியப்பில் ஆழ்த்திவிட்டன.

‘வருகிற தை மாதத்தில் இவனுக்கு முப்பது வயது முடிந்துவிடும். எனக்கோ இவனை விட்டால் வேறு யாருமே இல்லை. ஒரே பிள்ளையா யிருந்தும் இப்படி பிரும்மசரியம், மகாத்மா காந்தி, தேசவிடுதலை என்றெல்லாம் சொல்லிக்கொண்டு அவ்வப்போது அசலூர்களுக்குப் போய் மாதக்கணக்கில் தங்கிவிட்டுவரும் இவனை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. எப்போது அசலூருக்குப் போய்விட்டு வந்தாலும், ஒரு பை நிறைய ஏதேதோ புஸ்தகங்களைக் கொண்டுவந்து அலமாரியில் அடுக்குகிறான். என்ன புஸ்தகங்களோ, என்ன இழவோ! யாருக்குத் தெரிகிறது ? யோகாசனப் படங்கள் போட்ட ஒரே ஒரு புஸ்தகத்தை மட்டும்தான் அது இன்னதென்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. மற்றவை எல்லாமே இங்கிலீஷ். தமிழில் இருந்தால் மட்டும் தெரியப் போகிறதா என்ன! என் பேரை எழுதுவதற்கு மட்டும்தான் சொல்லிக் கொடுத்தார்கள். வேறென்ன தெரியும் எனக்கு ? அசலூர்களிலிருந்து இவன் எழுதிகிற தமிழ்க் கடிதங்களைக் கூட நான் எதிர் அகத்துச் சுப்புணியைக் கூப்பிட்டுப் படிக்கச் சொல்லித்தான் தெரிந்துகொள்ள வேண்டி யிருக்கிறது. அதைப் பார்க்கையில், தமிழாவது பொம்மனாட்டிகளுக்குத் தெரிந்திருக்கவேண்டும் என்றுதான் தோன்றுகிறது.. .. போனதரம் பட்டணத்திலிருந்து வந்தபோது கூட எனக்கு எழுதப் படிக்கச் சொல்லித் தருகிறேன் என்று ஒற்றைக் காலில் நின்றான். நான் தான் முடியாதென்று சொல்லிவிட்டேன். ஐம்பது வயசுக்கு அப்புறம் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டு நான் என்ன கிழிக்கப் போகிறேன் ?.. .. ..”

காப்பியைக் குடித்துக்கொண்டே அம்மாவும் பிள்ளையும் மவுனமாக இருந்தார்கள்.

அப்போது, பக்கத்து வீட்டிலிருந்து அந்தப் பெருங்குரல் எழுந்து அவர்களைத் திகைப்பில் ஆழ்த்தியது.

“காமாட்சியோட கொரல் மாதிரி இல்லே ?” என்று சாமிநாதன் கேட்டதும், தங்கம்மா மீதிக் காப்பியை அப்படியே வைத்துவிட்டுக் கொல்லைப் பக்கம் ஓடினாள்.

“போய் நின்னு ஒட்டுக் கேக்கல்லேன்னா நோக்கு மண்டை வெடிச்சுடுமே!” என்று சாமிநாதன் வாய்விட்டுச் சிரித்தபடி காப்பித் தம்ளரைத் தொட்டிமுற்றத்தில் போட்டான்.

சற்றுப் பொறுத்துத் திரும்பிய தங்கம்மா, “காமாட்சிதான்! ஆம்படையானோட சண்டை போட்றா. தெரிஞ்சுடுத்து போல இருக்கு விஷயம்! உருப்படியா ஒண்ணும் காதுல விழல்லே. ஆனா, ‘நீங்க ஏதோ தப்பா நடந்திருக்கேள்’னு அவ கத்தினது மட்டும் தெளிவாக் காதுல விழுந்தது. ஏன்னா, அதை மட்டும் காமாட்சி ரொம்பவே கூச்சல் போட்டுப் பேசினா!” என்று சாமிநாதனிடம் தெரிவித்தாள்.

– தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation