ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! (இலக்கிய நாடகம் – பகுதி 5.)

This entry is part of 29 in the series 20060303_Issue

கரு.திருவரசு


காட்சி – 5

காட்சியில் வருவோர்: அரசன் உதயணன், அரசி வாசவதத்தை, அரசியின் தோழி மானனீகை.

காட்சி நிகழும் இடம். அரண்மனை அந்தப்புரத்தை அடுத்த ஆடுகளம், விளையாட்டுக்களம்.

காட்சி நிலை. வாசவத்தையையும் தோழியர் சிலரும் கூடிப் பந்தடித்து விளையாடுகின்றனர். அக் காட்சியைக் கண்ட அரசன் உதயணன், அந்தப் பெண்மான்கள் கூட்டத்திலே ஒரு புதிய பொன்மான் பந்தாடியது கண்டு அவளைக்காணவும் பேசவும் விரும்புகிறான். உதயணன் நாட்டமறிந்து, அந்தச் சந்திப்பைத் தவிர்க்க முயல்கிறாள் அவள் மனைவி வாசவதத்தை.

உதயணன்- வாசவதத்தை! இன்று உன்னோடு பந்தடித்த பூச்செண்டுகளில் ஒரு புதிய மலரும் ஆடியது கண்டேன். அவளை நான் பார்த்துப் பேசவேண்டுமே! கொஞ்சம் ஏற்பாடு செய்யமுடியுமா ?

வாசவதத்தை- யாரவள் ? அப்படியாரையும் புதிதாகச் சேர்த்துக்கொள்ளவில்லையே!

உதய- என் அன்புக்குரிய வாசமே! இந்த உதயணனின் கண்களை யாரால் ஏமாற்றமுடியும்! என்னைத் தெரியாதா உனக்கு ? மானனீகை என்னும் பெயர் கொண்ட மங்கையைத்தான் சொல்கிறேன்!

வாச- ஓ, அவளா! உண்மையிலேயே நீங்கள் மன்னரதான்! அவளோடு என்ன அப்படிப் பேசவேண்டும் ?

உதய- அவள் பாஞ்சால மன்னனிடம் பணிசெய்தவள் என்று அமைச்சர் கூறினார். அவளிடம் பேசிக் கொஞ்சம் அரசியல் செய்திகளை அறிந்துகொள்ள எண்ணினேன். வேறொன்றுமில்லை!

வாச- அவ்வளவுதானா! நான் என்னவோ ஏதோவென்று… அவள் இங்கேதான் இருக்கிறாள், நான் உடனே அழைக்கிறேன்.(அழைக்கின்றாள்) மானனீகை! மானனீகை!

மானனீகை- இதோ வந்துவிட்டேன் அரசியாரே! என்ன செய்தி ?

உதய- மானனீகை, நான்தான் உன்னை அழைக்கச்சொன்னேன். நீ பாஞ்சால மன்னனிடம் பணி செய்ததாக அறிந்தேன். அங்கு நீ என்ன பணியில் இருந்தாய் என நான் தெரிந்துகொள்ளலாமா!

மான- அரசே, நான் முன்னர் கோசல நாட்டிலே இருந்தேன். அங்கே நான் அரசதேவியின் தோழியாகப் பணியிலிருந்தேன். பாஞ்சால மன்னன் கோசலத்தின் மீது படையெடுத்து வெற்றிகொண்டபோது என்னையும் பற்றிச் சென்று தன் தேவிக்கு அதாவது அரசிக்கு என்னை வண்ணமகள் ஆக்கினார். அவ்வளவுதான். அதுதவிர அரசியல் நடப்புகள் எதுவும் நான் அறியேன்.

உதய- ஓ!.. நீ வண்ணமகளா! ஒப்பனைப்பெண்! அப்படியானால் நீ ஒப்பனைக் கலையிலே கைதேர்ந்தவள் என்று சொல்.

மான- ஆம், அரசே! ஒப்பரிய ஒப்பனைக் கலையிலே கொஞ்சம் தேர்ச்சியுண்டு.

உதய- நல்லதாயிற்று! இன்றுமுதல் என் வாசவதத்தைக்கு வண்ணமகளாக உன்னைப் பணியமர்த்தம் செய்கிறேன், இன்றென்ன, இப்பொழுதே உன்னை அமர்த்துகிறேன். கெளசாம்பி நாட்டின் பேரரசியான என் மாதரசி வாசவதத்தைக்கு நீ வண்ணமகள், மானனீகை வண்ணமகள்! மானனீகை வண்ணமகள்!

(என்று சொல்லிக்கொண்டே செல்கின்றான்) (காட்சி நிறைவு)

காட்சி 6.

காட்சியில் வருவோர்: அரசன் உதயணன், அரசி வாசவதத்தை, மானனீகை.

காட்சி நிகழும் இடம். அரண்மனை அந்தப்புரம்.

காட்சி நிலை. (அரசி வாசவதத்தை, வண்ணமகள் மானனீகை தன் முகத்திலே எழுதிப் புனைந்த புதுக்கோலத்துடன் உதயணன்முன் வந்து நிற்கிறாள்.)

வாசவதத்தை- நான் எப்படி இருக்கிறேன் அத்தான் ? என் முகத்தைப் பாருங்கள்!

உதயணன்- ஆ! ஓ!… என் முன்னே வந்து நிற்பது என் வாசம்தானா! வாசவதத்தை! ஓ, என்ன அழகு, என்ன அழகு!

வாச- நான்தான் அரசே! இது மானனீகையின் கலைத்திறன். அவள் உண்மையிலேயே சிறந்த வண்ணமகள்தான். அவள் புனைந்த புனைவுதான் இந்தப் புதுக்கோலம். உங்களுக்குப் பிடித்திருக்கிறதா இந்த ஒப்பனை!

உதய- பிடித்திருக்கிறதா! என்னைப் பிடித்திழுக்கிறது உன்பால்! அழகாக, அளவாக அவள் செய்திருக்கும் இந்தப் புனைவு என் நினைவுகளை எங்கோ, எங்கோ இழுத்துப்போகிறது. வா! இன்னும் கொஞ்சம் அருகில் வா! உன் நெற்றிக்கோலம் இதுவரை நான் பார்த்திராத புதுமை, ஆம் புதுமையான புனைவு.

வாச- இந்தப் புனைவு உங்களுக்கு அழகாய் இருந்தால் எனக்கு மகிழ்ச்சிதான்!

உதய- மகிழ்ச்சி வாசமே!…( சிறிது சிந்தித்துவிட்டு) இந்த நெற்றிக் கோலத்திலே நான் ஒரு சிறு திருத்தம் செய்கிறேன். நீ அதை அந்த வண்ணமகளிடம் காட்டு, நான் செய்யும் திருத்தத்தால் தோன்றும் மேலழகு அவழுக்குத் திகைப்பைத் தருவதை நீ காண்பாய்! இதோ, இதோ திருத்துகிறேன்!

(என்று உதயணன், வண்ணக் குழம்பினால் மிகவும் நுணுக்கமாக அவள் நெற்றியிலே தன் காதலை, மானனீகைக்குத் தெரிந்த யவன மொழியிலே கோலமாக எழுதி முடிக்கிறான். அரங்கு அப்படியே இருளாகிறது. ஓர் ஒளிவட்டம் அவளைமட்டும் தொடர வாசவதத்தை மெதுவாக நடந்து அரங்கின் மறு கோடிக்கு வருகிறாள். அங்கே அந்த ஒளிவட்டத்துக்குள் மானனீகையும் வந்து சேர்கிறாள். காட்சி தொடர்கிறது.)

வாச- மானனீகை, உன் வண்ணப்புனைவை மன்னர் மிகவும் பாராட்டினார். அவரும் புனைவுக்கலையிலே வல்லவர் என்பதைக் காட்டுவதற்காக நீ என் நெற்றியில் செய்த அழகில் சிறு திருத்தம் செய்தார். அவர்செய்த திருத்தம் சரிதானா என்று நீ கொஞ்சம் பாரேன்!

மானனீகை- திருத்தமா! எங்கே காட்டுங்கள் பார்க்கலாம்! (திடுக்கிட்டுச் சமாளித்துக்கொண்டு) என்ன இது அநியாயம் ?

(திருத்தமென்ற பெயரால் யவன மொழியில் எழுதப்பட்ட செய்தியைத் தனக்குள்ளே படிக்கிறாள், அது அரங்கில் எதிரொலிக்கிறது)

‘மானனீகை என்னும் மானே, உன்னை நான் காதலிக்கிறேன்! ‘

(வாசவதத்தையிடம்) திருத்தம் பொருத்தமாகத்தான் இருக்கிறது அரசியாரே! ஆனால், அவர் மன்னர் என்பதால் எதையும் செய்யலாம் என்ற துணிச்சல் அதிலே தெரிகிறது. அதைமட்டும் கொஞ்சம் நான் தூரிகையால் சரிசெய்துவிடுகிறேன். இதோ, இதோ!…(என்று அவள் அரசியின் நெற்றியிலே எழுதுகிறாள்.)

(வாசவதத்தை மறுகோடிக்கு நடக்கிறாள், அவளோடு ஒளிவட்டமும் தொடர்கிறது. அங்கே மன்னன் உதயணன் நிற்கிறான்)

உதய- வாசவதத்தை, என் பேரரசி! என் திருத்தத்தைப் பார்த்து என்ன சொன்னாள் அந்த வண்ணமகள் மானனீகை ?

வாச- உங்கள் திருத்தத்தைப் புகழ்ந்தாள் மன்னவரே! இருந்தாலும் திருத்தத்தில் ஒரு திருத்தம் செய்தாள் அவள். அது சரிதானா என்று பாருங்கள்! என் முகத்தைப் பாருங்கள்!

உதய- எங்கே! அந்த நிலவு முகத்தை என் கையிலே கொடு.

(என்று அவள் முகத்தைக் கையிலேந்தி, வந்த மறுமொழியை ஆவலோடு மனத்துக்குள் படிக்கிறான். அது மானனீகை குரலில் எதிரொலிக்கிறது)

மான- ‘அரசர் ஓர் அடிமைமேல் காதல் கொள்ளலாமா! அரசர் ஓர் அடிமைமேல் காதல் கொள்ளலாமா! ‘

(அரங்கம் இருளால் நிறைகிறது. இந்த நெற்றிவிடு தூது சிலநாள் தொடர்கிறது என்பதற்கு அடையாளமாக அந்த உதயணன், மானனீகை இருவரின் உரையாடலும் எதிரொலியாகவே தொடர்கிறது.)

உதய – மானனீகை என்னும் மானே! அரசன் அடிமையெல்லாம் காதல் தேசத்திலே ஏது ? அரசன் உதயணன் அடிமையின் அடிமையாகிவிட்டான் கண்ணே!

மான- அரசிக்குத் தெரிந்தால் என் நிலைமை என்ன ஆகும் மன்னவரே!

உதய- உம்… நான் உன்னையும் அரசியாக்கிவிடுகிறேன் மானே!

மான- ஒரு வண்ணமகள், வெறும் ஒப்பனைக்காரி அரசியாக முடியுமா ?

உதய- ஏன் முடியாது! என் எண்ணத்தில் இடம் கிடைத்த மறுநொடியே அந்த மகுடம் உனக்காகக் காத்திருக்கிறது, உன் சம்மதத்துக்காக அது காத்திருக்கிறது.

மான- மன்னவரே! இந்த ஏழையை என்னதான் செய்யச் சொல்லுகிறீர்கள்!

உதய- மானனீகை மானே! நான் உன்னை அடையாவிடால் என்னுயிரே ஏழையாகி இறந்தேபோகும். நான் உன்னைச் சந்தித்தே ஆகவேண்டும்.

மான- அப்படியா ? அப்படியானால், இன்றிரவு நான் நம் கூத்தப்பள்ளியின் அருகே காத்திருக்கிறேன் மன்னவரே!

உதய- நன்றி கண்ணே, இரவு நாம் சந்திப்போம்!

(காட்சி நிறைவு)

காட்சி -7

காட்சியில் வருவோர். அரசி வாசவதத்தை, அரசியின் தோழி காஞ்சனமாலை.

காட்சி நிகழும் இடம். அரண்மனை அந்தப்புரம்.

காஞ்சனமாலை- (வந்துகொண்டே) என்னை, என்னை அழைத்தீர்களா அரசி!

வாசவதத்தை- ஆமாம் காஞ்சனமாலை. எனக்கு ஓர் ஐயம் பிறந்திருக்கிறது. அது துலங்க நீதான் உதவவேண்டும்.

காஞ்- சொல்லுங்கள் அரசி, என்ன சந்தேகம்! அதற்கு நான் என்ன செய்யவேண்டும் ?

வாச- மன்னரும் அந்த மானனீகையும் சில நாட்களாக ஒரு நாடகம் நடத்துவதாக நான் ஐயப்படுகிறேன். அவர்களின் காதல் நாடகத்துக்கு என்னையே ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார்களோ என்றும் ஐயப்படுகிறேன்!

காஞ்- காதல் நாடகம், அதற்குத் தாங்களே கருவியா! அதெப்படி முடியும் ?

வாச- அந்த வண்ணமகள் எனக்கு அழகு செய்ய, நான் அதனுடன் மன்னரைப் பார்க்கும்போதெல்லாம் என் முகத்திலே அழகுத்திருத்தம் செய்வதாகச் சொல்லி ஏதோ கிறுக்கி அனுப்புகிறார். அவள் எனக்கு அழகு செய்யவும், இவர் அதிலே திருத்தம் செய்யவுமாக ஏதோ ஒன்று நடப்பதாக நான் ஐயப்படுகிறேன். அதை நீதான் என்னவெனக் கண்டுபிடித்து உதவவேண்டும்.

காஞ்- நானும் அந்த ஓவியத்தூதைக் கவனித்துவிட்டேன், அது என்னவென்றும் கண்டுபிடித்துவிட்டேன் அரசி. உங்களுக்குச் சந்தேகமே ஏற்படாதபோது நான் அதைச் சொன்னால் என் கண்டுபிடிப்பு வீணாகிவிடும் என்றுதான் காத்திருந்தேன்.

வாச- என்ன அது, என்ன கண்டுபிடித்தாய் ? அது ஒரு காதல் நாடகமா ?

காஞ்- ஆமாம் அரசியாரே! நம் அரசர்தான் அதில் பேரரசராயிற்றே! மன்னரும் மானனீகையும் அவர்கள் காதலைப் பேசிக்கொள்ளும் முறை இருக்கிறதே, அது எனக்குத் தெரிந்தவரை எங்கும் நடக்காத புதுமை! புதுமை!

வாச- என்ன, காதலைப் பேசிக்கொள்கிறார்களா!…

காஞ்- ஆமாம், இருவருக்கும் யவனமொழி எழுதப் படிக்கத் தெரிந்திருக்கிறது. அரசர் அவர் ஆசை மனைவியின் முகத்திலே, அதாவது உங்கள் முகத்திலே தன் காதலை அவளுக்கு எழுதுகிறார். அவளும் உங்கள் முகத்திலேயே அதற்கு மறுமொழி எழுதி அனுப்புகிறாள். இப்படி ஒரு மனைவிவிடு தூது இதற்குமுன் எங்கும் நடந்ததாக நான் கேள்விப்பட்டதே இல்லை.

வாச- எனக்கு அவர்கள்மேல் சந்தேகம் வந்தது. ஆனால், அது என்ன, எப்படி என்றுதான் எனக்குப் புரியவில்லை. கொடுமை, கொடுமை! ஆமாம். இதெப்படி உனக்குத் தெரிந்தது ?

உனக்கு அந்த மொழி தெரியுமா ?

காஞ்- கொஞ்சம் தெரியுமம்மா!

வாச- அந்தக் கொடுமையான தூதின் கடைசி நிலவரம்தான் என்ன காஞ்சனமாலை ?

காஞ்- ஆகக் கடைசியாக அந்த வண்ணமகள், இல்லை இல்லை, அந்த வஞ்சமகள் எழுதியது என்ன தெரியுமா அம்மா ? ‘இன்றிரவு நான் நம் கூத்தப்பள்ளியின் அருகே காத்திருக்கிறேன் மன்னவரே! ‘

வாச- (கோபமாக) ‘கூத்தப்பள்ளியின் அருகே, இன்றிரவு காத்திருக்கிறேன். ‘ நீ சொன்னது

போல அந்த வஞ்சமகளை… நான் என்ன செய்கிறேன் பார்!

(காட்சி நிறைவு)

thiru36@streamyx.com

Series Navigation