மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 5

This entry is part of 45 in the series 20060120_Issue

ஜோதிர்லதா கிரிஜா


அவள் முதுகில் விளைந்த குறுகுறுப்பின் விளைவுதான் சமையற்கட்டில் வேலையாக இருந்த பங்கஜம் தன்னையும் அறியாமல் திரும்பிப் பார்த்தது. காமாட்சியின் கணவன் ஏற்கெனவே தன் மீது தன் ஆழமான பார்வையைக் குறைந்த பட்சம் பத்து நொடிகளேனும் செலுத்தி இருந்திருக்க வேண்டும் என்பதும், அதன் விளைவே தன் முதுகுக் குறுகுறுப்பும், தான் சட்டெனத் திரும்பிப் பார்த்ததும் என்பவையும் பங்கஜத்துக்குப் புரிந்தன. தனது உள்ளுணர்வின் மீது அவளுக்கு என்றுமே அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அவனது பார்வையின் ஆழம் மட்டுமின்றி, அதிலிருந்து தெறித்துச் சிதறிய மற்றும் ஒன்றும் அவளுள் ஒரு திகிலைக் கிளர்த்தின

‘மூணு கொழந்தை பெத்தவ நான்! ஒரு ஆம்பளை இப்படிப் பார்க்கிற பார்வைக்கு என்ன அர்த்தம்னு நேக்குத் தெரியல்லேன்னா வேற யாருக்குத் தெரியும் ? இன்னும் சொல்லப் போனா இதைப் புரிஞ்சுக்கிறதுக்கு ஒரு பொண்ணு பிள்ளை பெத்திருக்கணும்கிற அவசியமே இல்லே. இந்த அறிவெல்லாம்தான் பொண்ணாப் படைச்சவாளுக்குக் கடவுள் குடுத்திருக்கிற வெகுமானம். கடவுளே! ஆறு மாசமாப் படுத்த படுக்கையா இருக்கிற பொண்ணோட புருஷன் “அது” க்கு எப்படிப் பேயா அலைவான்கிறதும் நேக்குத் தெரியும். நல்லவா எத்தனையோ பேரு விதியேன்னு பொறுத்துப்பா. ஆனா இவனைப் பாத்தா அப்படித் தெரியல்லே. கடவுளே! இந்த ஆத்துலே நேக்கு எந்தக் கெடுதியும் நேராம நீதான் காப்பாத்தணும். என்ன பாவம் பண்ணி மூணு கொழந்தைகளைப் பறி குடுத்துட்டுப் புருஷன்காரனும் இல்லாம நிக்கறேனோ! இந்தக் கொடுமை வேற நேக்கு வேண்டாம்.. .. பாகீரதி மாமி கிட்ட ஜாடையாச் சொல்லி வேற ஏதானும் எடம் தெரிஞ்சா விசாரிக்கச் சொல்லலாம்னு பாத்தா அதுவும் சரியாத் தெரியல்லே. அந்த மாமி உடனே, ‘காமாட்சியோட ஆத்துக்காரன் உன் கையைப் பிடிச்சு இழுத்துட்டானா ?’ன்னு கேப்பா. அது மட்டுமா ? ஏதோ நடந்திருக்கணும். இவ மறைக்கிறா’ அப்படின்னு அசிங்கமாவும் வேற ஊகிக்கத் தொடங்குவா. சரியான வம்புக்கார மாமி. தன் ஊகத்தை ஆத்துக்காம் போய்ப் பரப்ப வேறன்னா செய்வா!.. .. அதனால பொறுத்திருந்துதான் பாக்கணும்.. ..!’

வேலையில் சேர்ந்த முதல் நாளே- அதிலும் ஒரு மணிப் பொழுது கழிவதற்கும் முன்பாகவே- தான் இப்படியெல்லாம் யோசிக்க வேண்டிவந்த நிலை அவளைக் கவலையில் ஆழ்த்தியது. ‘என்ன செய்யறது ? ஏழைக் குடும்பத்துல பொறந்தாச்சு. பொண்ணாவும் பொறந்தாசே! இதைவிட நல்ல வாழ்வு கிடைச்சுடுமா என்ன ?’

பொங்குவதற்கு இருந்த பாலை- தன்னுணர்வு வந்து- புடைவைத் தலைப்பால் கீழே இறக்கிவைத்த பங்கஜம், ‘நல்ல வேளை! மொத நாளே பாலைப் பொங்க விடாம இருந்தேனே! அதுவும் கடவுளோட அனுக்கிரகம்தான். இல்லேன்னா, அச்சானியம்னு சொல்லி என்னை இன்னைக்கே அந்தக் காமாட்சி கழுத்தைப் பிடிச்சு வெளியில தள்ளினாலும் தள்ளியிருப்பா,’ என்று எண்ணித் தன் துரதிருஷ்டத்திலும் இருந்த ஓர் அதிருஷ்டத்துக்காகக் கொஞ்சம் மகிழ்ச்சியடைந்தாள்.

ஒருகால், காமாட்சியின் வீட்டிலிருந்து நின்றுகொள்ளும் கட்டாயம் நேர்ந்தால் தனது வருங்காலம் என்னவாகும் எனும் கேள்வியை அவள் தன்னுள் எழுப்பிக்கொண்டபோது அவளுக்குத் திக்கென்றது. செங்கல்பாளையத்தில் எதிர்ச்சாரியில் நான்கு வீடுகள் தள்ளிக் குடியிருந்த தெலுங்குக் குடும்பம் பற்றிய ஞாபகம் அவளையும் மீறி அவளுக்கு வந்தது.

அந்தப் பெண் வந்தனாவும் அப்படித்தான். தலைதீபாவளிச் சீர் சரியாகச் செய்யவில்லை என்பதற்காகக் கணவனால் தள்ளிவைக்கப்பட்டு விட்டாள். அவள்தான் எவ்வளவு அழகான பெண்! இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கலாம். பங்கஜத்தைப் போன்றே அவளுக்கும் ஓர் அப்பா இருந்தார். தள்ளாத வயது. இவளுக்காவது அம்மா இல்லை. அவளுக்கு அம்மாவும் இருந்தாள். இரண்டு பேரும் தள்ளாதவர்களாக இருந்ததால், எந்த வேலையும் செய்து சம்பாதிக்க முடியாத நிலை. வந்தனா -படிக்காத பெண்- இவளைப் போல் எடுபிடி வேலைக்குத்தான் போனாள். சென்ற இடங்களிலெல்லாம் அவளுக்குத் தொந்தரவுதான் ஏற்பட்டது. அவளது அழகே அவளுக்கு எமனாயிருந்தது.

அவள் வேலை செய்த ஒரு வீட்டின் எசமானனே அவளை ‘நாசம்’ செய்ததால், பிள்ளை உண்டாகி, எதையோ சாப்பிட்டு அதை அழித்துக் கொண்டதாய் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஊர் முழுக்க வம்பு. இரண்டு வீடுகளில் இப்படி ஆயிற்றாம். அதனால் ஏற்பட்ட கசப்பிலும், மரத்துப் போய்விட்ட மனநிலையிலும் அவளே ஒரு பலகை மாட்டித் தொங்கவிடாத குறையாகத் தன் வீட்டை “அந்த இடமாக” ஆக்கிக்கொண்டாளாம். இன்றைக்கும் அவர்கள் வீட்டுக் கொல்லைப் புற வழியாக இரவு பதினொரு மணிக்குப் பிறகு பலதரப்பட்ட ஆண்கள் வந்து போவதாய்ச் சொல்லுவார்கள். உண்மையில் அவளையும் அவள் பெற்றோரையும் அந்த அக்கிரகாரம் ஜாதிப் பிரஷ்டம் எனும் தண்டனையால் விலக்கி வைத்திருந்தது.

‘ரெண்டு தரம் எவனுகளுக்கோ கர்ப்பம் சுமந்தாச்சு. இனிமேயும் போற எடங்கள்ளே யெல்லாம் தொல்லைதான். இதுக்கு மேல என்னடி இருக்கு ?’ என்று தாயே மகளை அப்படி ஓர் இழிதொழிலைச் செய்யத் தூண்டிவிட்டதாகவும் கூட ஊரில் ஒரு பேச்சு அடிபட்டுக்கொண்டிருந்தது. வந்தனாவின் அப்பா வாசல் திண்ணையே கதியாய்க் கிடந்தார். தாயின் ஒத்தாசையுடன் மகள் அப்படி ஒரு தொழிலைச் செய்துகொண்டிருந்தது அவருக்கு வெகு நாள் வரையில் தெரியவில்லையாம்.

பிறகு ஒருநாள் எப்படியோ அவருக்கு விஷயம் தெரிந்து போய்விட்டதாம். அவ்வளவுதான்! ‘அட, சண்டாளிகளா! இப்படி ஒரு பாவத் தொழிலைப் பண்ணியா நேக்குச் சோறு போட்டுண்டிருந்தேள் ?’ என்றவர் அப்படியே சாய்ந்தவர் சாய்ந்தவர்தானாம். அதன் பிறகு அவர் கண்விழித்துப் பார்க்கவே இல்லையாம்.

இதைப் பற்றிய ஞாபகங்கள் பங்கஜத்தின் மனத்தில் அவளையும் அறியாது எழுந்தன. அவளுக்குத் திடுக்கென்றது. ‘கடவுளே! அப்படி யெல்லாம் ஒரு சோதனையான வாழ்க்கையை நேக்குக் குடுத்துடாதே. அதை விட நான் எங்கேயாவது கெணத்துலயோ கொளத்துலயோ விழுந்து உசிரை விட்டுடுவேன்!’

“என்னம்மா! காப்பி ரெடியா ?” எனும் கட்டைக்குரல் அவளை இவ்வுலக நினைவுக்குக் கொண்டுவர, அவள் திடுக்கிட்டுத் தலைதிருப்பினாள். காமாட்சி தன் கட்டிலுக்குத் திரும்பி யிருந்தாள். அவன் சமையலறை வாசற்படியில் நின்றுகொண்டிருந்தான்.

“இதோ. கலந்து எடுத்துண்டு வறேன். நீங்க திரும்பி வர்றதுக்காகக் காத்திண்டிருந்தேன்!” என்ற பங்கஜம் காப்பியைக் கலக்க முற்பட்டாள்.

“நீங்க இங்க வாங்கோன்னா! அவ எதிர்ல போய் நிக்காதங்கோ. புதுசா வேலைக்கு வந்தவாளுக்கு அப்புறம் கையும் ஓடாது, காலும் ஓடாது!” என்று காமாட்சி குரல் கொடுத்த பிறகு அவன் கூடத்துக்குப் போனான். அவளுக்கு அப்பாடா என்றிருந்தது. உண்மையில் அவளுக்குக் கை,கால்களில் சின்னதாய் ஒரு நடுக்கம் ஏற்பட்டிருந்தது. ஆறடி உயரத்துக்கு நின்ற அவ்னது ஆஜானுபாகுத் தோற்றமும், அவன் அடுக்களை வாசலை அடைத்துக்கொண்டு, கால்களைப் பரப்பி நின்ற நிலையும் -முக்கியமாய் அவன் கண்களில் தெரிந்த மொழியும், அந்தக் கண்கள் அவள் உடல் மீது தகாத முறையில் படிந்திருந்த விதமும் தான்- அதற்குக் காரணங்கள். ஒரு வழியாய்க் காப்பியைக் கலந்து இரண்டு தம்ளர்களில் வட்டைகளுடன் எடுத்துக்கொண்டு அவள் கூடத்துக்குப் போனான்.

முதலில் காமாட்சிக்குக் காப்பியைக் கொடுத்தாள். அங்கே குட்டையான மேசையோ, முக்காலியோ எதுவும் தென்படவில்லை. காமாட்சியின் கணவனின் கையில் காப்பியைக் கொடுக்க அவள் விரும்பவில்லை. எனவே தரையில் வட்டையையும் தம்ளரையும் வைத்துவிட்டுத் திரும்பினாள். அவன் கையை நீட்டிக்கொண்டிருந்ததைக் கவனியாதவள் போல் அவள் அப்பால் போகத் திரும்பினாள்.

“என்னது! கையில குடுக்காம தரையில் வைக்கிறேள் ? எடுத்துக் கையில குடுங்கோ!”

நல்ல வேளையாகக் காமாட்சி இடைமறித்தாள்: “சிலர் அசல் புருஷா கையில எதையும் தரமாட்டான்னா! ஒரு கூச்சம் இருக்குமோல்லியோ ? நீங்களே எடுத்துக்குங்கோ”

கணம் போல் திகைத்து நின்ற பின், ‘அதுதான் சாக்கு’ என்று, பங்கஜம் அடுக்களைக்குள் புகுந்துகொண்டாள். காமாட்சி தன் கணவன் மேல் ‘தன்னுரிமை’ கொண்டாடுபவள் என்பது அவனை, ‘அவ எதிர்ல போய் நிக்காதங்கோ. புதுசா வேலைக்கு வந்தவாளுக்கு அப்புறம் கையும் ஓடாது, காலும் ஓடாது’ என்று சொன்னதிலிருந்து ஏற்கெனவே அவளுக்குப் புரிந்திருக்க, இப்போது அந்தப் புரிதல் இன்னும் வலுப்பெற்றது. கணவனின் மீது அவ்வளவாக நம்பிக்கை இல்லாதவள்- அல்லது அவளது நம்பிக்கைக்கு உகந்தவனாக அவன் இருப்பதில்லை- என்கிற உண்மையும் அவளுக்குப் புரிந்து போயிற்று. எனவே, காமாட்சி அவனிடமிருந்தான தனது பாதுகாப்புக்குக் கட்டாயம் உத்தரவாதம் அளிப்பாள் எனும் நம்பிக்கையும் நிம்மதியும் அவளுக்கு ஏற்பட்டன. எனினும், எத்தனை நாள் தாக்குப் பிடிக்க முடியும் எனும் அச்சமும் அவளுக்கு வந்தது.

பங்கஜம் அடுக்களைத் தொட்டிமுற்றத்துக்கு அருகே நின்று தானும் காப்பி குடித்தாள். ‘நல்ல காப்பி குடித்து எத்தனை நாளாயிற்று!’ என்று தனக்குள் திருப்தியுற்றாள்.

“காமாட்சி! அவாளுக்கு எல்லாம் விவரமாச் சொல்லி யிருக்கியோல்லியோ ?”

“எதை பத்தின்னா ?”

“பத்து மணிக்கு நான் சாப்பிட்டுட்டுக் கெளம்பிடுவேன்னு ?”

“சொல்லி யிருக்கேன்.. .. இத பாரு, பங்கஜம்! ரசம், கொழம்புன்னு ரெண்டும் பண்ணவேண்டாம். ஏதாவது ஒண்ணு பண்ணினாப் போறும். கூட, ஒரு கறியோ, கூட்டோ பண்ணிடு. சாதாரணச் சமையல்தான். ஒண்ணும் கஷ்டமே இல்லே.. ..”

“சரி, மா.. சரி!”

“என்ன சமையல் பண்றதாயிருக்கே ?”

“நீங்க எப்படிச் சொல்றேளோ, அப்படி.”

“தக்காளி ரசம் பண்ணி உருளைக்கிழங்குக் காரக்கறி பண்ணிடு. அப்பளம் பொரிச்சுடு.”

“சரி.”

“எந்தெந்த சாமான் எதெதுல இருக்குன்னு அவாளுக்குத் தெரியவேண்டாமா ?”

“எல்லாம் அவளே பாத்துப்பா.”

“எதுக்கும் நானே சொல்லிட்றேன். தேட்றதுல நேரம் வீண்தானே ஆகும் ?”

அவன் சட்டென்று அடுக்களைக்குள் வந்துவிட்டான். உள்ளே வந்த பிறகு வேட்டியைத் துக்கிக் கட்டிக்கொண்டான். பெண்களுக்கு எதிரில் வேட்டியை இறக்கிக்கொள்ளும் ஆடவர்களைத்தான் அவள் அறிந்திருந்தாள். தழையத் தழைய இருந்த வேட்டியைத் தொடைக்கு மேல் உயர்த்திக் கட்டிக்கொண்டு- ஆனால் காமாட்சியின் பார்வையில் படாதபடி ஒதுக்கமாய்- அவன் நின்றது பங்கஜத்தின் மனத்தில் அச்சத்தையும் அருவருப்பையும் கிளர்த்தியது.

“நான் மொதல்ல எல்லாத்தையும் தொறந்து காட்றேன்.”

அவள் துணுக்குற்று, நெஞ்சு அடித்துக்கொள்ள நகர்ந்து, கூடத்தில் படுத்தபடி அடுக்களைப் பக்கமே பார்த்துக்கொண்டிருந்த காமாட்சியின் பார்வைக்குத் தான் தென்படும்படி நுழைவாயில் பக்கமாக நின்றுகொண்டாள்

“இதோ, இதுல துவரம் பருப்பு இருக்கு. இதுல கடலைப் பருப்பு. இதுல பயத்தம் பருப்பு. இது தட்டைப்பயறு.. .. ஏண்டி, காமாட்சி! கறிவடாம் தீந்து போச்சுன்னு நினைக்கறேன். நாலஞ்சுதான் இருக்கு டப்பாவில. துடைச்சு வைக்க வேண்டாம்னு கொஞ்சம் மிச்சம் வெச்சேன். இப்ப வெயில் காயறது. இதுதான் வடாம் எட்ற சீசன்.. .. கொஞ்சம் வடாம் இட்டு வெச்சுடுங்கோ. என்ன ?”

பங்கஜம், ஈனக் குரலில், “சரி,” என்றாள்.

“நம்மாத்து மொட்டை மாடியிலேயே எடலாம். உளுத்தம் பருப்பு இதோ இந்த டப்பாவில இருக்கு, பாருங்கோ. ஒண்ணரை வீசை இருக்கு. நேத்துதான் வாங்கிண்டு வந்தேன். ரெண்டு ஒழக்கு நனைச்சேள்னா சரியாயிருக்கும்.. மத்தப்படி அஞ்சரைப் பெட்டியில கடுகு, மெளகு, சீரகம், வெந்தயம் இதெல்லாம் போட்டு வெச்சிருக்கேன்.. இவ படுத்துண்டதிலேர்ந்து நாந்தான் இந்தாத்து நளன்! நானே சமைச்சு சமைச்சுச் சாப்பிட்டுண்டு இருந்ததுல நாக்கே செத்துப் போயிடுத்து. நீங்க எப்படி ? நன்னாச் சமைப்பேள்தானே ? நான் ரொம்பப் பசியோட இருக்கேன்! இவ படுகிடையா விழுந்த அன்னிக்கு ஆரம்பிச்ச பசி!”

கடைசி வாக்கியத்தை மட்டும் அவன் தன் குரலைத் தணித்துக்கொண்டு சொன்னதில் துல்லியமான விரசம் தெறித்தது.

பங்கஜம் எச்சில் விழுங்கினாள்: ‘கடங்காரா! கட்டேல போக! எச்சல் நாயே! பொண்டாட்டி ஆறு மாசம் படுத்துட்டா இப்பிடியா லோலோன்னு அலைவா மனுஷா! புருஷா படுத்துட்டா பொம்மனாட்டிகள்ளாம் இப்பிடியா அலையறா ? சீ! இந்தாத்துலேர்ந்து உருப்படியா மீளுவேனோ நான் ? கடவுளே! காப்பாத்து!’

“நீங்க இங்க வாங்கோன்னா. எல்லாம் அவ பாத்துப்பா..”

“முக்கியமானதை விட்டுட்டேனே. அரிசி மட்டும் கூடத்துல நெல்லுக் குலுக்கையில இருக்கு. சின்னக் குலுக்கை. அப்பப்ப ஒரு வாரத்துக்கு வேண்டியதை எடுத்து அதோ அந்தத் தகர டின்ல வெச்சுண்டுட்டா நல்லது. இப்ப சத்தியா டின்லதான் போட்டு வெச்சிருக்கேன். இட்லிக்குப் புழுங்கலரிசி அதோ அந்தத் தவலையில் இருக்கு. ரைட், நான் வறேன்.”

‘ரைட்டா ? நீ “ராங்”டா! நீ வரவே வேண்டாண்டா, ராஸ்கல்! போய்த்தொலை.’

“சரி” எனும் ஒற்றைச் சொல் ஈனக்குரலில் பங்கஜத்திடமிருந்து உதிர்ந்தது.

காமாட்சியின் பார்வையில் படுவதற்கு முன்னால் வேட்டியைத் தழைத்துக் கணுக்கால் வரை தொங்கவிட்டுக்கொண்டான். அவன் வெளியேற மிகவும் அப்பால் நகர்ந்து வழி விட்ட பங்கஜம் ஓரத்து விழிகளால் கூடத்துப் பக்கம் கவனித்தாள். காமாட்சியின் முகம் சிடுசிடுவென்று இருந்தது தெரிந்தது. ஒரு வகையில் பங்கஜத்துக்கு நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. ‘நாளைக்கு ஏதாவது தப்புத் தண்டா நடந்தாலும்- என்னோட ஜாக்கிரதையை மீறி ஏதாவது அசம்பாவிதம் நடந்தாலும்-ஆனா, நடக்க விடக்கூடாது- இவ என்னைச் சந்தேகப்படமாட்டா! அது போறுமே! ஆம்படையானோட லட்சணம் நன்னாவே தெரிஞ்சிருக்கு இவளுக்கு!’

சமையல் ஒன்றரை மணி நேரத்தில் முடிந்துவிட்டது.. அப்பளம் தேங்காய் எண்ணெய்யில் பொரிந்துகொண்டிருந்த வாசனையிலிருந்து அது முடிந்து விட்டதைப் புரிந்துகொண்ட நாகலிங்கம், திண்ணையில் இருந்தபடியே, “என்ன! சாப்பிட வரலாமா ?” என்று கூவினான்.

“வரலாம்னு சொல்றேளா ?” என்று பங்கஜம் காமாட்சியைக் கேட்டாள்.

“வரலான்னா! வாங்கோ.”

பங்கஜம் அடுப்பை அணைத்தாள்.

“பங்கஜம்! இப்படி, கூடத்துலேயே எலையைப் போட்டுடு.”

பங்கஜம், ‘நல்லவேளை. அடுக்களையிலேயே வந்து அது உக்காருமோன்னு பயந்து செத்துண்டு இருந்தேன்,’ என்றெண்ணியவளாய், அவசரமாய் இரண்டு இலைகளை எடுத்துவந்து போட்டாள்.

“என்னை மெதுவாப் பிடிச்சுப் பலகையில உக்கார வெச்சுடு.”

“சரி!”

காமாட்சி உட்கார்ந்த நேரத்தில் நாகலிங்கம் வந்தான்.

“இதென்ன, புதுசா கூடத்தில நேக்கும் சேத்து எலை போட்டிருக்கு ?”

“நாந்தான் கூடத்துல போடு, அடுக்களையில வேண்டாம்னேன். அங்கே எங்கே தாராளமா எடமிருக்கு ?”

“என்ன, காமாட்சி இது! நான் சாப்பிட்டுண்டு இருக்கச்சே யாராவது வருவா.”

“போது போனா போது விடிஞ்சா யாராவது வந்துண்டுதானே இருக்கா!!” என்று, ‘இதென்ன பொய் ?’ என்கிற நக்கல் தொனிக்கப் பதிலிறுத்த காமாட்சி, “எல்லாம் இங்கேயே சாப்பிடலாம். கூடத்துக்கும் அடுக்களைக்குமா நடந்து பரிமாறிண்டிருக்க வேண்டாம். அப்படி யாராவது வந்தா திண்ணையில உக்காந்துக்கறா. அவ்வளவுதானே ?”

பங்கஜம் பரிமாறத் தொடங்கினாள். ஓரத்து விழிகளால் நாகலிங்கத்தின் முகக் கடுப்பைக் கவனித்தாள். இருவரும் தனித் தனியாகத்தான் சாப்பிடுவது வழக்கம் என்பதையும், இன்று அவனுக்கு அவள் தனியாகப் பரிமாறுவதைத் தவிர்க்கும் பொருட்டே அவளும் அவனுடன் சாப்பிட உட்கார்ந்துவிட்டாள் என்பதையும் புரிந்துகொண்ட பங்கஜம் மனத்துள் சிரித்துக்கொண்டாள்.

‘இப்படிப்பட்ட ஆம்படையானை ஆத்துல வேணாக் கட்டிக் காப்பாத்தலாம். “வெளியில’” போனா இவளால எப்படிக் கண்டுபிடிக்க முடியும் ? இல்லே, கண்டே பிடிச்சாலும், என்ன செய்ய முடியும் ?’

நாகலிங்கம் தன் முகக் கடுப்பை மறைத்துக்கொள்ளாமலே இலை முன் அமர்ந்தான். இலையில் முதலில் விழுந்த உருளைக் கிழங்குக் கறியிலிருந்து ஒரு துண்டத்தை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு, “பிரமாதம்!” என்றான்.

பங்கஜம் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் சட்டெனத் தலையைக் குனிந்துகொண்டு உள்ளே போனாள்.

“சித்த சும்மாருங்களேன். அவ ரொம்பக் கூச்சப்பட்றா. அசல் புருஷா புகழ்ந்தா சில பொம்மனாட்டிகளுக்குப் பிடிக்காது !”

“இதென்னடி வம்பாயிருக்கு ? சமையல் நன்னாருந்தாக் கூட ஒரு நல்ல வார்த்தை சொல்லக் கூடாதா ? அது ஒரு தப்பா ?”

“பெரிய தப்புன்னுட்டு இல்லேன்னா. அசலாத்துப் புருஷா புகழ்ந்தா ஒரு பொண்ணுக்கு- அதுலயும் இப்படி ஆயிட்டவளுக்கு- ஒரு கூச்சம் வருமோன்னோ ?”

“நீ வேற. நான் ஏதோ அவளோட தமையன் மாதிரிப் பேசினா, அதைக் கூடத் தப்புங்கறே!”

“சரி, சரி.”

அப்போது வாசல் கதவை யாரோ தட்ட, பங்கஜம் குரல் கொடுத்தபடி எழுந்து போய்க் கதவைத் திறந்தாள். வெளியே இருளடித்த முகத்துடன் பாகீரதி மாமி நின்றுகொண்டிருந்தாள்.

“என்ன, மாமி ? இப்படி வெய்யில்ல வந்திருக்கேள் ?” என்று கேட்ட பங்கஜம் அவள் வந்திருந்தது தனக்கான ஏதோ அவசரச் சேதியுடன்தான் என்பதைப் புரிந்துகொண்டு விழிகள் விரிய நின்று போனாள்.

-தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation