மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 4

This entry is part of 34 in the series 20060113_Issue

ஜோதிர்லதா கிரிஜா


பத்மநாபனும் காவேரியும் அன்றிரவு முழுவதையும் கிட்டத்தட்ட உறங்காமலே கழித்தார்கள் என்று சொல்லலாம். அப்போதுஅவர்களிடையே நடந்த உரையாடல்கள் வத்தலப்பாளையத்துக்குப் போய்ச் சம்பந்தம் பேசிவிட்டு வந்து விட்டாற்போலவும், எல்லாம் கூடி வந்து விட்டாற்போலவும், திருமணநாள் குறிக்கவேண்டியதுதான் பாக்கி என்பது போலவும் ஒரு மாயத்தைத் தோற்றுவித்துக்கொண்டிருந்தன. எல்லாம் முடிவாகிவிட்டது மாதிரிப் பேசிக்கொண்டிருந்தாலும், இடையிடையே, ‘என்னமோ எல்லாம் முடிவாயிட்ட மாதிரித் திட்டம் போட்டுண்டு இருக்கோமேன்னா ? அந்தப் பிராமணன் சம்மதிக்கணுமே ? அதுக்கு அப்புறந்தானே இந்தப் பேச்செல்லாம் ?’ என்று காவேரியும், ‘எள்ளுப் பிராமணன்* கதை மாதிரி அசட்டுப் பிசட்டுன்னு பேசிண்டிருக்கோம்! இன்னும் அவாளைப் போய்ப் பார்க்கவே இல்லே. அதுக்குள்ள கணக்கு, வழக்கு, சீர் செனத்தின்னு பினாத்திண்டு கிடக்கோமே!’ என்று அவரும் அவ்வப்போது மாற்றி மாற்றிச் சொல்லிக் கொள்ளவும் தவறவில்லை.

“ஏன்னா! ரொம்பப் பணக்காரான்னா எக்கச்சக்கமாக் கேப்பாளோ ?”

“கேக்கத்தான் செய்வா. அதுலயும் நமக்கு இருக்கிறது ஒரே பொண்ணுங்கிறதுனால, மத்தவா கிட்ட கேக்கிறதை விட நெறையவே கேட்டாலும் கேப்பா. ஆசை யாரை விட்டுது ? எது எப்படி யானாலும், இந்த இடம் ரொம்ப நல்ல இடம்டி காவேரி. அந்த தேவராஜ அய்யர் தான தர்மமெல்லாம் பண்றவர்னு கேள்விப்பட்டிருக்கேன். தானதர்மம் பண்ற மனசு இருக்கணும்னா அவா நல்லவாளாத்தானே இருக்கணும் ? மனுஷத்தனம் நிறையவே இருக்கும் அவா கிட்ட. இல்லியா ?”

“ஆமாமா. நீங்க சொல்றது சரியாத்தான் இருக்கும். ஆனா ஒண்ணு. கல்யாணத்துலேயே எல்லாப் பணத்தையும் வேட்டு விட்டுடக் கூடாதுன்னா! கல்யாணத்தோட போயிடுமா ? அப்புறம், ஆடி, ஆறாம் மாசம், தலை தீபாவளி, லொட்டு லொசுக்குன்னு இன்னும் எத்தனையோ இருக்கே! அதுக் கெல்லாமும் ஒதுக்கி வெச்சுட்டு பாக்கியைத்தான் கல்யாணத்துல செலவழிக்கணும். என்ன நான் சொல்றது ?”

“நீ சொல்றது ரொம்ப சரி. நானே அப்படித்தான் நினைச்சுண்டிருக்கேண்டி, காவேரி. எடுத்த எடுப்பிலேயே தாம்தூம்னு எல்லாத்தையும் செலவழிச்சுடக்கூடாது.”

“ஆமா ? அவா எவ்வளவு பணக்காரான்னு உத்தேசமா ஏதாவது தெரியுமோ உங்களுக்கு ?”

“நான் கேள்விப்பட்ட வரையிலே வத்தலப்பாளையத்துலே அவர்தான் பெரிய பணக்காரர். அஞ்சாறு சொந்த வீடுகள் இருக்காம் அவருக்கு. எல்லாம் பெரிய பெரிய வீடுகள். நன்செய், புன்செய்னு ஏகப்பட்ட நெலம் வேற இருக்காம். நிறைய ரொக்கச் சேமிப்பும் இருக்குன்னு கேள்வி.”

“அப்ப, இந்த இடம் திகைஞ்சுதுன்னா, நம்ம துர்க்கா அதிருஷ்டக்காரிதான்.”

“ஆமா. வேற யாரும் போய்க் கேக்கறதுக்கு முன்னால நாம முந்திக்கணும். அதான் நாளைக்கே கெளம்பலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. .. அது சரி, துர்க்காவுக்குத் தெரியுமா இந்த விஷயம் ?”

“லேசாச் சொல்லி வெச்சிருக்கேன். பக்கத்து ஊருக்கு நீங்க அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க நாளைக்குப் போறதா இருக்கேள்னு மட்டும் சொன்னேன். யாரு, என்னங்கிறதெல்லாம் அவளுக்குத் தெரியாது.”

“அவ பொல்லாதவடி, காவேரி. சாஸ்திரிகள் சொன்னதை யெல்லாம் கவனிச்சுக் கேட்டுண்டிருந்திருப்ப.”

“ஆமாமா. பொல்லாதவதான்! வள்ளியைப் பத்தி அவளுக்கு ஏதோ குறுகுறுப்புன்னு தோண்றது.”

“ஏன் ? ஏதானும் கேட்டாளா என்ன ?”

“ஆமா”.

“என்கிட்ட கூட ஏதோ கேக்க ஆரம்பிச்சா. நாந்தான் ஒரு அதட்டல் போட்டு கேக்கவே விடாம பண்ணிட்டேன். அது சரி, என்ன கேட்டா வள்ளியைப் பத்தி ?”

“ .. .. ‘அந்த வள்ளி எதுக்கும்மா நம்மாத்துக்கு வந்து வந்து பணம் வாங்கிண்டு போறா ? அவதான் இங்க வேலை கூடச் செய்யறதில்லையே ? அவளுக்கு நாம எதுக்குப் பணம் குடுக்கணும் ?’ அப்படினு கேட்டா.”

“அதுக்கு நீ என்ன சொன்னே ?”

“ .. .. ‘ரொம்ப நாளுக்குமுந்தி, உங்க பாட்டி காலத்துல அவ இந்தாத்துல வேலை செஞ்சவ. நான் வந்தப்புறம் வேலைக்காரியை நிறுத்திட்டா உங்க பாட்டி. எப்பவோ வேலை செஞ்சதை வச்சுண்டு இப்படி அடிக்கடி வந்து தொந்தரவு பண்றா’ அப்படின்னேன். ‘எப்பவோ வேலை செஞ்சதுக்கு இப்ப எதுக்கு நாம பணம் தரணும் ?’னு கேட்டா. ‘உங்கப்பாவைப் போய்க் கேட்டுக்கோ’ன்னுட்டேன். உங்க கிட்ட எதுவும் கேக்கல்லியே ?”

“இல்லே. கேக்கல்லே.”

“அப்புறம் இன்னொண்ணு. நம்ம கிட்ட நகைகளுக்குப் பஞ்சமே இல்லேன்னா. அந்தக் காலத்து நகைகள். எல்லாமே கெழங்கு கெழங்கா இருக்கு. நெத்திச் சுட்டியிலேர்ந்து கால் கொலுசு வரைக்கும் சகலமும் இருக்கு. காசு மாலை இருக்கு, ஒட்டியாணம் கூட இருக்கு.”

“ஆனா, எல்லாத்தையும் குடுத்துடக் கூடாதுடி, காவேரி. உனக்குன்னு கொஞ்சம் வெச்சுக்கணும் நீ!”

“அதெப்படி வெச்சுக்க முடியும் ? கழுத்துல ஒரு சங்கிலி, கையில நாலு வளையல்னு கொஞ்சமாத்தான் வெச்சுக்க முடியும். எல்லா வித நகைகளும் நாம போடணும்னு அவா எதிர்பாப்பாளேன்னா ? அப்ப குடுத்துத்தானே ஆகணும் ?”

“உன்னோடதுகளை அழிச்சுப் புதுசாப் பண்ண வேண்டி வருமோல்லியோ ? அப்ப எடை குறைச்சலாப் பண்ணிட்டாத் தீந்துது.”

“நகைகள்ளாம் எவ்வளவு எடையில இருக்கணும்னு அவாளே கண்டிஷன் போடுவாளோ என்னமோ!”

“பாக்கலாம். மொத்தம் இத்தனை பவுன்னுதானே சொல்லுவா ? அதுக்கு ஏத்த மாதிரி நாம பண்ணிட்டாப் போச்சு.”

“என்னோட நகைகள்ளாமே மொத்தமும் அம்பது பவுன்தான் தேறும். எழுபது எம்பதுன்னு கேட்டா ?’

“அப்ப யோசிக்கலாம்.”

“ஏன்னா~! நமக்குச் சொந்த மனுஷா அவ்வளவாக் கிடையாது. அதனால அவாத்துக் கூட்டந்தான் இருக்கும்.”

“நம்ம ஊர் அக்கிரகாரத்துக் கூட்டத்தை விட்டுட்டியே ?”

“அக்கிரகாரத்துக் கூட்டம் மட்டுந்தானா ? இந்த ஊர் முழுக்கவும் சாப்பாடு போட வேண்டாமா ?”

“ஆமாமா. போடத்தான் வேணும். அய்யர் வீட்டுக் கல்யாணம்னுட்டு எல்லாப் பசங்களும் நாக்கைத் தீட்டிண்டு காத்துண்டுன்னா இருப்பா! அவாளை ஏமாத்தலாமா ? பாவம். ஏழை ஜனங்கள். அதுகளுக்குச் சாப்பாடு போட்டா நமக்கும் புண்ணியந்தானேடி, காவேரி ? சின்னஊ ர்தானே ? மிஞ்சி மிஞ்சிப் போனா எரநூறு குடும்பங்கள் இருக்கும். சாப்பிட்டுட்டுப் போகட்டும்டி, காவேரி.”

“தாராளமா! நான் ஒண்ணும் வேணாங்கல்லியே!”

“அப்புறம் துர்க்காக் குட்டிக்கு கல்யாணம்னா என்ன, ஏதுங்கிற விவரமெல்லாம் நாசூக்காச் சொல்லிவை. அக்கம் பக்கத்துல யார் கூடவும் நாம அவளைப் பழக விட்றதில்லே. பொத்திப் பொத்தியே வளத்துட்டோம். மத்தப் பொண்ணுகளோட சகவாசமும் அவ்வளவா இல்லே.”

“ஏன் இல்லாம ? இவ வெளியில போகல்லேங்கிறதுனால சகவாசம் இல்லேன்னு ஆயிடுமா ? அதான் இவளைத் தேடிண்டு வருதுகளே குட்டிகள் ?”

“அப்படியா ?”

“ஆமா. ராமசுப்பையர் பொண்ணு நீலா வறா. அப்புறம் சேஷாத்திரி அய்யங்காரோட பொண்ணு வைதேகி வறா. ரெண்டும் இவளை விட ஒரு வயசு பெரிசுகள். மூணும் உக்காந்துண்டு கூடிக் கூடிப் பேசறதுகளே! ஒண்ணுக்கொண்ணு எல்லாம் பேசிக்கும்களாயிருக்கும்!”

“எதுக்கும் நீயும் லேசாச் சொல்லி வை. அப்புறம், உன்னாட்டமா நிரட்சரகுட்சியா இருந்து அந்தப் பையனை படுத்தி வைக்கப்போறா!”

“சரி, சரி. இப்ப எதுக்கு அதெல்லாம் ?”

பத்மநாபன் சத்தம் போட்டுச் சிரித்தார்.

‘நடு ராத்திரி பன்னண்டு மணி ஆறது. இத்தருவாயில எதுக்கு இப்படி அவுட்டுச் சிரிப்புச் சிரிக்கிறேள் ? போறும் பேசினது. காலம்பர சீக்கிரம் எழுந்திருக்கணும். அடைமாவு மீந்திருக்கு. அதுல உப்புமாக் கிளறிக் குடுத்துட்றேன். நீங்க சாப்பிட்டுட்டு எட்டு மணி வாக்கில கெளம்பினா சரியா யிருக்கும்.”

“சரி. வெங்காயம் போட்டுப் பண்ணு. அப்பதான் புளிப்பு அடங்கும். நேத்து மாவாச்சே ?”

“நாக்கும் மூக்கும் நாலு முழம் உங்களுக்கு. துர்க்காவும் உங்க மாதிரியே இருக்கா. அதுக்காகவே அவ வாக்கப்பட்ற எடம் பெரிய எடமா யிருக்கணும்னு நேக்குக் கவலை. நன்னா சாப்பிடலாமோல்லியோ ?”

“சாப்பாடும் முக்கியந்தான். ஆனா அது ஒண்ணு கிடைச்சாப் போறுமா என்ன! தாலி கட்டின புருஷன் அனுசரணையா யிருக்கணும். மாமியார்க்காரி படுத்தாதவாளா யிருக்கணும். இதெல்லாமும் சரியா அமைஞ்சாத்தான் அது நல்ல வாழ்க்கைன்னு சொல்ல முடியும். வெறுமனே நாலு வேளையும் மூக்குப் பிடிக்கச் சாப்பிட்டா மட்டும் போாறுமா! மத்ததெல்லாமும் சரியா அமையல்லேன்னா, பஞ்சபட்ச பரமான்னம் கூட வேம்பாக் கசக்குமேடி, காவேரி ?”

“நீங்க சொல்றது வாஸ்தவந்தான்னா! சாாப்பாடு, துணிமணி, நகைநட்டு இதெல்லாம் அன்பான புருஷனுக்கு அப்புறந்தான்!”

“அந்த விஷயத்துல நீ அதிருஷ்டக்காரிதாண்டி, காவேரி. அன்பான புருஷன்!”

“அதை நான்னா சொல்லணும் ? நீங்களே பீத்திக்காதங்கோ!”

“நீ சொல்ல மாட்டேன்றியே! அதான் நானே சொல்லிக்கிறேன்!”

“நீங்க வேணா அன்பான புருஷன்னு சொல்லிக்கலாம். ஆனா உங்கம்மா இருந்தாளே! அடியம்மா! ஏழேழு ஜென்மத்துக்கும் எனக்குப் போறுண்டியம்மா. நான் இப்படிச் சொல்றது பாவமா யிருக்கலாம். ஆனாலும் உண்மை அதுதான். உங்கம்மா போய்ச் சேந்ததுக்கு அப்புறந்தான் நேக்கு விடுதலை!”

பத்மநாபன் பதில் சொல்லாமல் இருந்தார். திருமணம் ஆன புதிதில் மருமகளைத் தனக்குப் பக்கத்தில் படுக்கவைத்துக்கொண்டவள் தன் அம்மா என்பதுதான் மற்ற யாவற்றுக்கும் முன்னால் அவருக்கு ஞாபகம் வந்தது. உண்மையைச் சொல்லப் போனால், காவேரியைக் காட்டிலும் அவர்தானே அதற்காக அவளை அதிக அளவில் வெறுத்தார்!

‘என்ன பொம்மனாட்டி ஜென்மங்களோப்பா! பத்து மாசம் சுமந்ததையும், உடம்பு நோகப் பெத்ததையும் சொல்லிச் சொல்லிக் காட்டியே கொழந்தைகளை வளைச்சுப் போட்ற ஜாதி!’ என்று அவருக்கு அந்த நேரத்தில் நினைக்கத் தோன்றியது. ‘மிருகங்கள் கூடத்தான் பெத்துப் போட்றதுகள். இப்படியா அதுகள்ளாம் குட்டிகளோட வாழ்க்கையை நாசமாக்குறதுகள்! கொழந்தைகள்னாலே, அடிமைகள்னு நினைக்கிற அப்பா-அம்மாக்கள்! நல்ல வேளை. காவேரியும் அப்படி இல்லே. நானும் அப்படி இல்லே.. ..’ இப்படி நினைத்ததும் அவருக்கு நெஞ்சில் சுருக்கென்று சின்னதாய் ஓர் உறுத்தல் விளைந்தது. தலையைக் குலுக்கிச் சமாளித்துக்கொண்டு, தமது சிந்தனையை வேறு புறம் நகர்த்தினார்.

“நாளைக்கு தேவராஜ அய்யராத்துக்குப் போறப்போ என்ன கொண்டு போகட்டும் ?” என்று ஒரு நிமிட இடைவெளிக்கு பிறகு அவர் வினவியதை அவர் பேச்சை மாற்றுவதாகப் பொருள் செய்துகொண்ட காவேரி, “என்ன இருந்தாலும் அவா உங்கம்மா ! செத்துப் போயிட்டவா வேற! அவாளைப் பத்தி இப்படித் துடுக்குத்தனமா நான் பேசி யிருக்கப் படாது,” என்றாள்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லே. நான் ஒண்ணும் தப்பா எடுத்துக்கல்லே. மனுஷா செத்துப் போயிட்டதால அவா பண்ணின தப்பெல்லாம் இல்லேன்னு ஆயிடுமா! .. .. அது போகட்டும், அவாத்துக்கு என்ன வாங்கிண்டு போறது ?”

“வழக்கமா எடுத்துண்டு போற வாழைப் பழந்தான். ஆனா இப்ப மாம்பழக் காலமாயிருக்கிறதால, மாம்பழமும் வாங்கிண்டு போலாம்.”

“வாழைப் பழம் மட்டும்தான் நேக்குத் தோணித்து. மாம்பழம் தோணவே இல்லே, பாரேன். ரெண்டுமே வாங்கிண்டு போறேன்.”

“சரி. தூங்குங்கோ. நானும் தலையைச் சாய்க்கிறேன்.”

இரண்டு நிமிடங்களுக் கெல்லாம் இருவரும் மாற்றி மாற்றி விட்ட குறட்டையொலி அந்தக் கூடத்தை நிறைத்தது.

.. .. .. பங்கஜம் தூங்காமல் தன் கிழிந்து போன பாயில் புரண்டுகொண்டிருந்தாள். பஞ்சாட்சரம் லொக்கு லொக்கென்று இருமிக்கொண்டிருந்த ஓசை இடைவிடாது கேட்டுக்கொண்டிருந்தது. அவள் தூங்காமல் இருந்ததற்கு அது மட்டுமே காரணமன்று. மறு நாள் வத்தலப்பாளையத்துக்கு அவள் போக வேண்டியது இருந்தது. செங்கல் பாளையத்திலிருந்து வத்தலப்பாளையம் இரண்டு கல் தொலைவில் இருந்தது. காலை எட்டு மணி அளவில் அவள் அங்கு இருக்கவேண்டும். பக்கத்து வீட்டுப் பாகீரதி மாமி சொல்லித்தான் அந்த இடத்தில் அவளை மறுநாள் சமையல் வேலைக்கு வரச் சொல்லி இருந்தார்கள். சாப்பாடு போட்டு ஏதோ கொஞ்சம் சம்பளமும் கொடுப்பதாகச் சொல்லி யிருந்தார்கள். எவ்வளவு என்பதை அவர்கள் சொல்லவில்லை என்பது பங்கஜத்தை உறுத்தியது. நேர்மையான மனிதர்களாக இருந்தால், இன்ன சம்பளம் என்பதைச் சொல்லி இருக்க மாட்டார்களா என்று தோன்றியது. புருஷனும் பெண்டாட்டியும் ஒரே ஒரு நான்கு வயதுக் குழந்தையுமாய் மூன்றே பேர்கள் அடங்கிய குடும்பம் என்று பாகீரதி மாமி சொல்லி யிருந்தாள். அதற்கு முந்திய நாள்தான் அவளை அந்த வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போய் இடத்தை மாமி காட்டி யிருந்தாள். அவள் போன நேரத்தில் புருஷன்காரன் இல்லை. படுத்த படுக்கையில் அந்தப் பெண்தான் இருந்தாள். நான்கு வயதுப் பிள்ளை கூடத்தில் தனியாக உட்கார்ந்துகொண்டு தனக்குத் தானே பேசியபடி ஒரு பொம்மையுடன் விளையாடிக்கொண்டிருந்தது.

‘நேக்கு முடக்குவாதம்மா. இன்னும் கொஞ்ச நாளாகும் நான் எழுந்து நடமாட்றதுக்கு. ஒரு வருஷமாகுமோ, இல்லே, ரெண்டு வருஷமாகுமோ, அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும். அது வரையில நீ இங்க சமையல் வேலை பண்ணலாம். நான் எழுந்து நடமாடத் தொடங்கிட்டா உன்னை நிறுத்திடுவோம். இப்பவே சொல்லிட்றேன். அப்புறம் வேலையை விட்டு திடார்னு நிறுத்திட்டதா உனக்கு எங்க மேல மனத்தாங்கல் வரக்கூடாதில்லியா ? அதான் இப்பவே சொல்றேன். கை,கால் அலம்பிக்கிறதுக் கெல்லாம் என்னைக் கையைப் பிடிச்சுக் கூட்டிண்டு போனணும். எங்க ஆத்துக்காரர் ஆத்துல இருக்கிறப்ப, அவர் பாத்துப்பார். அவர் ஆத்துல இல்லாத நேரங்கள்ள நீதான் கூட்டிண்டு போகவேண்டி யிருக்கும். அதையும் இப்பவே சொல்லிட்றேன்,’என்று காமாட்சி எனும் அந்தப் பெண் திக்கித் திக்கிப் பேசினாள். கச்சலாக இருந்தாள். உடம்பில் கிள்ளி எடுக்கவும் சதையே இல்லை. முகத்தில் விழிகள்தான் பெரியவையாக இருந்தன. அவளைப் பார்க்கவே பங்கஜத்துக்குப் பாவமாக இருந்தது

“அதைப் பத்தி என்னம்மா ? உடம்பு சரி யில்லாதவாளுக்கு உதவி பண்ணினாப் புண்ணியந்தானே ? .. .. அப்புறம் சம்பளம் எவ்வளவுன்னு.. ..’

‘குறைச்செல்லாம் குடுத்து ஏமாத்த மாட்டார்ம்மா எங்காத்துக்காரர். ஏதோ பாத்துக் குடுப்பார். நீ எந்த அளவுக்குச் செய்யறேங்கிறதைப் பொறுத்துத் தருவார். எவ்வளவுங்கிறதை நேக்கே அவர் சொல்லல்லே!’

பாகீரதி, ‘ஒத்துக்கோம்மா, இந்தப் பட்டிக் காட்டில சமையலுக்கு ஆள் வெச்சுக்கிறவாளே கிடையாது. ஏதோ உன்னோட நல்ல காலம் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. ஒத்துக்கோ. உன் ஒருத்தியோட வயித்துப்பாட்டுக்கு ஆச்சே! அதைப் பாரும்மா, மொதல்ல. அப்புறம் உங்கப்பாவைப் பத்தி யோசிக்கலாம்,’ என்று அவளைத் தூண்டினாள்.

‘சரி, மாமி.’

‘நான் ஒண்ணும் மாமி இல்லே. உன்னை விடவும் சின்னவளாத்தான் இருப்பேன்.’

‘ஆனாலும் பேரு சொல்லி எப்படிக் கூப்பிட முடியும் ? நான் வெறும் சமையல்காரி. நீங்க எனக்குச் சம்பளம் குடுக்கிறவாளாச்சே ?’

‘சரி. எப்படியோ கூப்பிடு. ஆனா நிமிஷத்துக்கு நிமிஷம் மாமி மாமிங்காதே! என்ன, தெரிஞ்சுதா ? அதுலயும் எங்காத்துக்காரர் முன்னால- முக்கியமா’

‘சரி, மா.. .. சரி!’

‘பாகீரதி மாமி எல்லாம் சொன்னா. உங்காத்துக்காரர் உன்னைத் தள்ளி வெச்சுட்டாராமே! பொறந்த கொழந்தைகளும் தவறிப் போயிடுத்துன்னு சொன்னா.’

‘ஆமா.’

‘எங்காத்துக்காரர் காலம்பர பத்து மணிக்குச் சாப்பிட்டுட்டுக் கெளம்பிப் போனார்னா, மத்தியானம் மூணு மணிக்குத்தான் திரும்புவார். அப்புறம் கூட்டாளிகளோட உக்காந்துண்டு திண்ணையில சீட்டாடுவார். காசு வெச்செல்லாம் இல்லே. சும்மா பொழுது போக்காத்தான். உண்மையைச் சொல்லிட்றேனே. என் கொழந்தை கொஞ்சம் வாலு. துறுதுறுன்னு இருப்பான். அப்படி இப்படித் திரும்புறதுக்குள்ள எதையானும் கொட்டிக் கவுத்து வெஷமம் பண்ணிடுவான். அவனைச் சமாளிக்கிறதுக்குத்தான் முக்கியமா உன்னை வெச்சிருக்கோம்னு நெனச்சுக்கயேன். மத்தப்படி இங்கே வெட்டி முறிக்கிற மாதிரியான வேலை ஒண்ணும் அவ்வளவா இருக்காது.’

‘வேலை இருந்தாத்தான் என்ன ? செய்யறதுக்குத்தானே வந்திருக்கேன் ?’

இரவெல்லாம் தங்களுக்குள் நடந்த உரையாடல் பற்றியே நினைத்துக்கொண்டிருந்த பின் பங்கஜம் பன்னிரண்டு மணிக்குப் பிறகு உறங்கிப் போனாள்.

.. .. .. அவள் அந்த வீட்டுக்குள் நுழைந்த போது காலை மணி ஏழரை. பங்கஜம் காமாட்சியிடமிருந்து குறிப்புகள் பெற்றுக் காப்பி போட முற்பட்டாள். அவள் கணவன் கொல்லைப் புறத்தில் இருந்தது தெரிந்தது. சிறிது நேரங்கழித்து அவன் ஏதோ பாட்டைச் சீழ்க்கை யடித்துக்கொண்டு கூடத்துக்கு வந்தான்.

“கொல்லைப் பக்கம் போகணும். கூட்டிண்டு போறேளா ?” என்று காமாட்சி கேட்டதும், அவன் பதில் சொல்லாமல் ‘ம்’ கொட்டியதும் பங்கஜத்தின் செவிகளில் விழுந்தன.

அவள் கழுத்தைத் திருப்பிப் பார்த்த போது, அவன் அவளைத் தாங்கினாற்போல் பிடித்து அழைத்துச் சென்றுகொண்டிருந்தது தெரிந்தது. அவனது ஆழமான பார்வை தன் மீது படிந்திருந்ததைக் கண்டதும் அவள் சட்டென்று தன் விழிகளை நகர்த்திக்கொண்டாள்.

* எள்ளுப் பிராமணன் கதை: திவசம் நடந்த ஒரு வீட்டில் அதை நடத்திவைத்த பிராமணர் சாப்பாட்டுக்குப் பிறகு அவ்வீட்டுத் திண்ணையில் சிரமபரிகாரம் செய்யப் படுத்தார். அப்போது திவசத்துக்கு உபயோகித்த சில எள்மணிகள் அவர் மீது ஒட்டியிருந்தன. அவற்றை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு அவர் கற்பனையில் ஆழ்ந்தார்: ‘இந்த அஞ்சாறு எள்ளை வெதைச்சா எள்ளுச் செடி முளைக்கும். அப்புறம் அந்தச் செடிகள் பெரிசானாவிட்டு, அதோட விதைகளை மறுபடியும் வெதைச்சா இன்னும் நிறைய செடிகள் வளரும். அப்புறமென்ன ? நான் பெரிய எள்ளுத் தோட்டத்துக்கே சொந்தக் காரனாயிடுவேன். அதுக்கு அப்புறம் ஒரு எண்ணெய் வாணியனாவும் ஆயிடுவேன். பெரிய பணக்காரனாயிட்டதுக்கு அப்புறமும் இப்பிடி திவசச் சாப்பாட்டுக்காக வீடு வீடா அலைய வேண்டாமே! ஆத்துலயே சொகுசா உக்காந்துண்டு நன்னா நாலு வேளையும் சாப்பிடலாமே! ராத்திரியானா பஞ்சு மெத்தையில இன்னும் சொகுசாப் பொரளலாமே! ஆனந்தமா நித்திரை வருமே!’ -இப்படி நினைத்தவாறு தான் படுத்துக்கொண்டிருந்த திண்னையையே மெத்தையாகப் பாவித்துப் புரண்ட பிராமணர் உருண்டு பொத்தென்று தரையில் விழுந்து மண்டையை உடைத்துக்கொண்டாராம்.

-தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation