சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா எழுதிய செயின்ட் ஜோன் நாடகத்தைத் தழுவியது)
சி. ஜெயபாரதன், கனடா
‘கடவுளின் மகளே! செல்! முன்னே செல்! முன்னேறிச் செல்! எனது உதவி உனக்குக் கிடைக்கும்! முன்னேறிச் செல்! இந்த அசரீரி குரலைக் கேட்டதும், எப்போதும் அக்குரலைக் கேட்க வேண்டுமென்று என் உள்ளத்தில் ஆனந்த பொங்கித் துடிக்கிறது! ‘
ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431)
‘ஜோன் ஆஃப் ஆர்க் சாதாரண மனிதத் தரத்திலிருந்து மிகவும் உயர்ந்த ஒரு மானிடப் பிறவி. அவளுக்கு இணையான மனிதப் பிறவி ஓராயிரம் ஆண்டுகளிலும் உதிக்கப் போவதில்லை! ‘
வின்ஸ்டன் சர்ச்சில் (1874-1965)
கதைச்சுருக்கம்: பதினைந்தாம் நூற்றாண்டில் விடுதலை வேட்கை கொண்டு நூறாண்டுப் போரில் பிரிட்டனுடன் போரிட்டு, அடிமை நாடாக இருந்த பிரான்ஸை விடுவித்த 19 வயது ஜோன் ஆஃப் ஆர்க் வீராங்கனையைச் சூனியக்காரி என்று குற்றம் சாற்றி உயிரோடு எரித்தது, கோரமான வரலாற்று நிகழ்ச்சியாகும். அவளது குறுகிய வாழ்வின் தீவிரக் கதை மெய்யாக நிகழ்ந்த ஒன்று. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லொர்ரேன் ஷாம்பெயின் எல்லைப் பகுதியில் உள்ள டோம்ரெமி கிராமத்தில் 1412 ஆம் ஆண்டு ஜனவரி 6 இல் ஜோன் ஆஃப் ஆர்க் பிறந்தவள். வைர நெஞ்சமும், மன வைராக்கியமும் படைத்த ஜோன் பிரான்ஸின் விடுதலையைக் கனவாகக் கண்டு, சிறுவயதிலேயே கடவுளால் ஏவப் பட்டவள். கல்வி கற்காத கிராமத்து எளிய நங்கை ஆயினும் அவள் கொண்டிருந்த ஆழ்ந்த மத நம்பிக்கையும், கூரிய சிந்தனா சக்தியும், தளராத மன உறுதியும் மக்களை முன்னடத்திச் சென்று, அவளது குறிக்கோளான பிரான்ஸின் விடுதலைக்குக் காரணமாயின. மக்களை ஒன்று திரட்டிப் போரிட முன்வழி நடத்தும் திறமை ஜோன் ஆஃப் ஆர்க் கொண்டிருந்தது, தெளஃபின் சார்லஸ் மன்னனாக மகுடம் சூட உதவியது. மேலும் பிரான்ஸின் பல பகுதிகளை ஆண்டு வந்த அன்னிய ஆங்கிலேய ஆட்சியை எதிர்க்க மக்களைத் தூண்டியது. ஆயினும் பட்டம் சூடிய சார்லஸ் மன்னன், ஜோன் ஆஃப் ஆர்க்கின் போர்ச் சூழ்ச்சிக்கு மாறாகத் தன் விருப்புத் திட்டங்களில் முனைந்தது, அவளுக்கு வினையாகி அவளது மரணப் பாதைக்கு வழி வகுத்தது!
பிரான்ஸின் கிறித்துமத ஆலயம் ஜோனைக் கைது செய்து, சூனியக்காரி என்று குற்றம் சாட்டி வழக்கு விசாரணைக்குக் கொண்டு வந்தது. சார்லஸைப் பட்டம் சூட வைத்த அவளது அசையாத, அழுத்தமான மத நம்பிக்கைகளே குற்றங்களாக எடுத்துக் கொள்ளப் பட்டன. சூனியக்காரி என்றும், மந்திர வித்தைக்காரி என்றும், கிறித்துவ திருச்சபைக் குருவை எதிர்த்தவள் என்றும் பிரான்ஸை ஆக்கிரமித்திருந்த பிரிட்டாஷ் அதிகார வர்க்கம் பழிசுமத்தி 1430 மே மாதம் 30 ஆம் தேதி கம்பத்தில் கட்டி, ஜோன் ஆஃப் ஆர்க் உயிருடன் எரிக்கப்பட்டாள். ஜோன் மறைந்து 500 ஆண்டுகள் கழித்து, இருபதாம் நூற்றாண்டில் கிறித்துவ திருச்சபை 1920 ஆம் ஆண்டில் ‘புனித அணங்கு ‘ என்று கெளரவத்தை அளித்தது!
முதல் காட்சி
காலம்: கி.பி.1429
இடம்: வெளகோலர் கோட்டை (Castle of Vaucouleurs)
நேரம்: காலை
நாடகத்தில் பங்கு கொள்வோர்:
1. ராபர்ட் ஆஃப் பெளட்ரிகோர்ட் (Robert De Baudricourt) இராணுவக் காப்டன்
2. ஜோன் ஆஃப் ஆர்க் (பதினெட்டு வயது கிராம இள நங்கை)
3. பெர்டிராண்டு ஆஃப் பெளலஞ்சி [(Bertrand De Poulengey) Polly] 36 வயது பிரென்ச் இராணுவ அதிகாரி
4. ராபர்டின் பணியாள் 20-25 வயது.
அரங்க அமைப்பு: கோட்டை அறையில் இராணுவக் காப்டன் ராபர்ட் காலை உணவு அருந்திட நாற்காலியில் அமர்ந்துள்ளான்.
ராபர்ட்: (மேஜையைத் தட்டி) எப்படித் தின்பது இதை ? முட்டை யில்லை! உன் தலையில் இடி விழ! முட்டை யில்லை என்று நீ சொல்வது எனக்குப் புரியவில்லை.
பணியாள்: காப்டன் ஸார்! முட்டை யில்லை என்பது என் தவறில்லை! கடவுள் செய்த தப்பு!
ராபர்ட்: நீ முட்டை இல்லை என்று சொல்லிப் பழியைக் கடவுள் மீது ஏன் போடுகிறாய் ?
பணியாள்: ஸார்! முட்டை கிடையாது. என்னால் முட்டை இட முடியாது! முட்டை கிடைத்தால் சமைப்பேன்.
ராபர்ட்: முட்டாள். யார் உன்னை முட்டையிட வேண்டினார்கள் ?
பணியாள்: யாரும் சொல்லவில்லை ஸார்! உண்மையாகக் கடவுளுக்குத்தான் தெரியும். உங்களைப் போல் எங்களுக்கும் இன்று முட்டை கிடையாது! கோழிகள் இன்றைக்கு வேலை நிறுத்தம்! அவை முட்டையிடப் போவதில்லை!
ராபர்ட்: சொல்வதைக் கேள்! முதலில் நான் யார் தெரியுமா ? ராபர்ட் ஆஃப் பெளடிரிகோர்ட்! இந்தக் கோட்டையின் தளபதி! நீ யார் தெரியுமா ?
பணியாள்: ஸார்! இங்கே அரசரை விடப் பெரியவர் நீங்கள்! வெறும் வேலைக்காரன் நான்! என் கடன் தொண்டு செய்வது! என் பெருமை, உங்களுக்கு ஊழியம் செய்வது!
ராபர்ட்: போதும் பெருமையைப் பீற்றிக் கொள்ளாதே! பிரான்சிலே உன்னைப் போன்று வேலை சரிவரத் தெரியாத முட்டாள் வேறு ஒருவன் கிடையாது! முட்டை இல்லை என்று பொய் சொல்கிறாய்! கொழுத்த கோழிகள் நான்கு இருக்கும் போது, அவை இட்ட முட்டைகள் எங்கே போயின ? யார் திருடினார் அவற்றை ? சொல்லடா! சொல்! முட்டைகள் களவு போயிற்றா ? அல்லது கைச் செலவுக்கு விற்று விட்டாயா ? கழுத்தைப் பிடித்து உன்னை வெளியே தள்ளுவதற்கு முன் உண்மையைச் சொல்! நேற்றுப் பாலும் குறைவாக இருந்தது! பாலைப் பூனை குடித்ததா ? அல்லது நீ குடித்தாயா ? என்ன நடக்கிறது உன் சமையல் புரியில் ?
பணியாள்: இல்லை ஸார்! யாரும் பாலைக் குடிக்கவும் இல்லை! யாரும் முட்டையைத் திருடவும் இல்லை! நம் கோட்டை மேல் ஏதோ ஒரு சூனிய வசியம் உள்ளது!
ராபர்ட்: அப்பனே! அந்தக் கதை இங்கு அரங்கேறாது! காப்டன் ராபர்ட் மாந்திரீகரை எரித்திடுவான்! திருடரைத் தூக்கிலிடுவான்! போ! ஓடிப் போ! நான்கு டஜன் முட்டைகளும், இரண்டு காலன் பாலும், இங்கு பகலுக்குள் கொண்டு வர வேண்டும்! இல்லாவிட்டால் உன் முதுகு எலும்பை முறித்து விடுவேன்! என்னை முட்டாளாக்குவதற்கு உனக்குப் பாடம் கற்பிக்கிறேன்!
பணியாள்: ஸார்! நான் சொல்கிறேன், முட்டையே இல்லை! உங்களைக் கும்பிடுகிறேன்! என்னைக் கொன்று போட்டாலும் சரி சொல்கிறேன், முட்டையே கிடைக்காது …. கோட்டை வாசலில் அந்த பணிமாது நிற்கும் வரை!
ராபர்ட்: பணிமாதா ? எந்தப் பணிமாது ? நீ என்னப்பா சொல்கிறாய் ? விளக்கமாய்ச் சொல்!
பணியாள்: ஸார்! அந்த இள நங்கை லொரேன் நகரைச் சேர்ந்தவள். டோம்ரெமி கிராமத்துக்காரி.
ராபர்ட்: ஆயிரம் இடி விழட்டும் உன் தலையில்! ஆயிரம் பேய்கள் எழட்டும் உன் படுக்கை அறையில்! முரட்டுப் பிடிவாதமாய் என்னைப் பார்க்க வேண்டும் என்று இரண்டு நாள் முன்பு வந்த அந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணை சொல்கிறாயா ? நான் அவளை இழுத்துக் கொண்டு போய் அவள் அப்பனிடம் ஒப்படைக்கச் சொல்லி யிருந்தேன். அவளைக் குடிசையில் ஒளித்து வைக்கும்படி உத்தரவு இட்டிருந்தேன்! அவளா இன்னும் இங்கு காத்திருக்கிறாள் ?
பணியாள்: அவளைப் போகச் சொன்னேன். அவள் போக மறுக்கிறாள் ஸார்! நான் என்ன செய்யட்டும் ?
ராபர்ட்: அவளைப் போகச் சொல்லி நான் கட்டளை இடவில்லை! அவளைத் தூக்கி வெளியே எறியத்தான் உத்தரவிட்டேன்! ஐம்பது காலாட் படைகள், ஒரு டஜன் வேலைக்காரத் தடியன்கள் இருந்தும், என் உத்தரவு என்ன ஆயிற்று ? அத்தனை பேரும் அந்தப் பிடாரிக்குப் பயப்பட்டுகிறார்களா ?
பணியாள்: ஸார்! நிச்சயம் உங்களைக் காண வேண்டும் என்று கற்தூண் போல் கால் வலிக்க நிற்கிறாள்! நைந்த நங்கை போல் தோன்றினாலும், நம்மை விட உறுதியோடு இருக்கிறாள். அவளை தூக்கி எறிய என்னால் முடியாது! உங்களால் ஒருவேளை முடியலாம்! அவளைப் பயமுறுத்திப் பாருங்கள் ஸார்!
ராபர்ட்: எங்கே இருக்கிறாள் அந்தப் பிடிவாதக்காரி ?
பணியாள்: காவல் படையினருடன் பேசிக் கொண்டே இருக்கிறாள், பிரார்த்திக்கும் நேரத்தைத் தவிர!
ராபர்ட்: பிரார்த்தனை வேறா பிடிவாதக்காரி செய்கிறாள் ? முட்டாள்! அவள் பிரார்த்தனையை நம்புகிறாயா ? இந்த மாதிரி மந்திரக்காரிகளை எனக்குத் தெரியும்! போ! அழைத்து வா அவளை! இல்லை! அவளைத் தூக்கிப் போடுங்கள் என் முன்னால்!
பணியாள்: [முணங்கிக் கொண்டே போகிறான்] ஸார்! பெண் பிறவியா அது ? அவளுக்குப் படையில் சேர்ந்து போரிட ஆசை! படைகள் அணியும் உடைகள், நீங்கள் தர வேண்டுமாம் அவளுக்கு! உடற் கவசம், ஒரு போர்வாள் வேறு வேண்டுமாம்! அடாடா! ஆணாய்ப் பிறக்க வேண்டிய பெண்! பெண்ணாய்ப் பிறந்து ஆணாக மாற இங்கு வந்திருக்கிறாள்! இதோ அழைத்து வருகிறேன் ஸார்! [கோட்டைக் கதவைத் திறந்து வெளியே செல்கிறான்]
[18 வயதுடைய கிராமத்து நங்கை ஒருத்தி உள்ளே நுழைகிறாள். சிவப்பு நிற உடையை ஒழுக்கமாக அணிந்திருக்கிறாள். அசாதாரண முகம். கூர்மையான நோக்கு. நிமிர்ந்த பார்வை. அகன்று அமைந்த கண்கள். அம்சமான மூக்கு. அகன்ற நெற்றி. எடுப்பான தோற்றம். ஆண்கள் போன்று கம்பீரமான நடை. பார்த்தாலே ஆடவரும், பாவைகளும் மதிக்கும் தோற்றம்.]
ஜோன்: [முகத்தில் புன்முறுவலுடன் வணங்கி, அழுத்தமாக] மதிப்புக்குரிய காப்டன் அவர்களே! வந்தனம்! ஒரு குதிரை, ஒரு கவசம், சில காலாட் படையினரை எனக்குக் கொடுத்து, என்னை நீங்கள் மன்னர் தெளஃபின் அரண்மனைக்கு அனுப்ப வேண்டும். எனது பிரபு உங்களுக்கு அளித்த உத்தரவு அது!
ராபர்ட்: [கோபப்பட்டு] உனது பிரபுவிடமிருந்து எனக்குக் கட்டளையா ? .. நீ பிரபு என்று சொல்லும் அந்தப் பிடாரன் யார் ? அவனிடம் போய் இதைச் சொல்! அவன் கட்டளை யிடும் காலாட் படை அல்லன் நான்! அரசனைத் தவிர வேறு யாருடைய உத்தரவையும் ஏற்றுக் கொள்ள மாட்டான் இந்த ராபர்ட்!
ஜோன்: [அழுத்தமுடன்] அதுசரி காப்டன் ஸார்! எனது பிரபும் ஓர் அரசனே! மேல் உலகத்தின் அரசன்!
ராபர்ட்: (தலையில் கையை வைத்து) இவள் ஒரு பைத்திகாரி! [பணியாளைப் பார்த்து] களிமண் தலையா! இதை ஏன் எனக்கு முன்பே சொல்லவில்லை!
பணியாள்: ஸார்! அவளைக் கோபப் படுத்த வேண்டாம்! கேட்டதைக் கொடுத்து விடுங்கள்!
ஜோன்: [பொறுமை இழந்து நட்புடன்] நான் சொல்லும் முக்கிய செய்தியைக் கேட்காத வரை, அவர்களும் என்னைப் பைத்தியம் என்றுதான் சொன்னார்கள். ஆனால் பாருங்கள் ஸார்! கடவுள் என்னிடம் கூறியபடிதான் நீங்கள் செய்ய வேண்டும் என்பது கடவுளின் விதி!
ராபர்ட்: இல்லை பெண்ணே! கடவுளின் கட்டளை, உன்னை உன் அப்பனிடம் மீண்டும் சேர்ப்பது! உன்னை
வீட்டுக்குள் தள்ளி கதைவைப் பூட்டி, உன் பைத்தியத்தை தெளிய வைப்பது! அதற்கு என்ன சொல்கிறாய் பெண்ணே ?
ஜோன்: அப்படிக் கட்டளை என்பது உங்கள் விளக்கம்! எப்படி நடக்கும் என்பது எனக்குத் தெரியும்! என் முகத்தைப் பார்க்க மாட்டேன் என்று முதலில் மறுத்தீர்! என்ன ஆயிற்று ? இப்போது நான் உங்கள் முன்பாக நிற்கிறேன்! எப்படி மாறிவிட்டது பார்த்தீர்களா, காப்டன் ஸார்!
பணியாள்: [முந்திக் கொண்டு] பார்த்தீர்களா! அவள் உங்களை மடக்கிப் போடுவதை! என்ன சாமர்த்தியம்! அடடா! .. இவள் பெண்ணல்ல! ஆணே தான்! ஆணு மில்லை! பெண்ணுருவில் ஆணை விடப் பெரியவள்!
ராபர்ட்: [கோபமாக] வாயை மூடுடா! அதிகப் பிரசங்கி! [ஜோனிடம்] சரி இப்போது சொல்வதைக் கேள். நான் என்ன செய்யலாம் என்று பண மதிப்பீடு செய்கிறேன்.
ஜோன்: [வேகமாக] செய்யுங்கள் காப்டன் ஸார்! குதிரை வாங்க 16 பிராங்க் தேவைப்படும். அதுவே மிகையான பணம்! எனக்குகந்த உங்கள் காலாட் படையின் கவசத்தைத் தாருங்கள் கடனாக. அதிக படைகள் எனக்குத் தேவையில்லை. ஆர்லியன்ஸ் கோட்டையை முற்றுகையிடப் போதுமான படை
வீரர்களை நான் தெளஃபின் அரசரிடம் பெற்றுக் கொள்கிறேன்.
ராபர்ட்: [அதிர்ச்சி அடைந்து] என்ன ? ஆர்லியன்ஸ் கோட்டையைப் பிடிக்கப் போகிறாயா ? அவ்வளவு பெரிய திட்டமா ? (முணுமுணுப்புடன்) … பெரிய பைத்தியமாகத் தெரிகிறது!
ஜோன்: [எளிதாகப் பேசி] ஆம் காப்டன் ஸார்! அதற்குத் தான் கடவுள் என்னை அனுப்புகிறார்! மூன்று வீரர்கள் போதும், உறுதியானவர்கள், என்மீது கனிவுள்ளவர்கள். அப்படி என்னுடன் வரச் சிலர் ஒப்புக் கொண்டுள்ளனர். … பாலி, ஜாக் போன்றவர்!
ராபர்ட்: [சினத்துடன்] என்ன அவமரியாதை உனக்கு ? பாலி என்றா விளிக்கிறாய் ? பாலி யார் தெரியுமா ? படைத் தளபதி பெட்ரெண்டு ஆஃப் பெளலின்ஜி அவர்களையா பாலி என்று சொன்னாய் ?
ஜோன்: [சாதாரணமாக] எல்லாரும் அவரைப் பாலி என்றுதான் அழைக்கிறார்! அவருக்கு வேறு பெயர் இருப்பது எனக்குத் தெரியாது! … காப்டன் ஸார்! அடுத்தவர் ஜாக். அவருக்கு வேறு பெயர் என்ன ?
ராபர்ட்: மறுபடியும் பெயரைச் சுருக்காதே! திருவாளர் ஜான் ஆஃப் மெட்ஸ் தான் அவர் என்று நினைக்கிறேன்.
ஜோன்: ஆம் காப்டன் ஸார்! ஜாக் நிரம்ப நல்லவர். கனிவும் இரக்கமும் கொண்டவர். ஏழை எளியவருக்குக் கொடுக்க எனக்குப் பண உதவி செய்பவர். … அப்புறம், ஜான் காட்சேவ் என்னுடன் வருவார்; மேலும் வில்வீரர் ரிச்சர்டு, அவரது வேலைக்காரர் ஜான் ஆஃப் ஹோனிகோர்ட், ஜூலியன் அனைவரும் என் பின்னால் வருவார்கள்.
ராபர்ட்: [முணுமுணுத்து] .. எல்லாரையும் வசப்படுத்தி முன்பே பிடித்து விட்டாயா ? .. என் கோட்டை கெட்டுப் போச்சு! எனக்கு வேலை போயிடும்! … எனக்குத் தெரியாமல் என் படை ஆட்களை இவள் எப்படி மயக்கினாள் ? அவள் பின்னே வருவார்கள் என்று என்ன அழுத்தமாகச் சொல்கிறாள்! [மனதிற்குள்] .. அடி! சூனியக்காரி!
(முதல் காட்சி தொடரும் அடுத்த வாரத் திண்ணை வெளியீட்டில்)
தகவல்:
1. Saint Joan, A Play By: Bernard Shaw, Penguin Plays (1971)
2. Saint Joan of Arc Encyclopaedia of Britannica (1978)
3. Saint Joan of Arc (1412-1431) Chambers Encyclopaedia (1968)
4. Britannica Concise Encyclopedia (2003)
****
jayabarat@tnt21.com [S. Jayabarathan April 18, 2005]
- வாரம் ஒரு குறுங்கதை – ஈசல்கள்
- பெரியபுராணம்-37
- 21 ஆம் நூற்றாண்டு மரபணுவியலும் 18 ஆம் நூற்றாண்டு இனக்கட்டுமானங்களும்
- பாவேந்தரின் பதறல்கள்!
- கடந்த வரலாறும் கண்முன் விரியும் வரலாறும்:பயங்கரவாதம் வரிக்கும் சமாதானப் பாயிற் படுப்பவரெல்லாம் பாடையிற்போவர்! ( பகுதி:4)
- மீனம் போய் மேடம்
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – யாஸர் அராஃபாட்- பாகம் 1
- அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஆண்களே காரணம்
- கடப்பாரை
- அவர்கள் வரவில்லை
- மழலைச்சொல் கேளாதவர் ( அறிவியல் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)
- கிருஸ்ணபிள்ளை
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா எழுதிய செயின்ட் ஜோன் நாடகத்தைத் தழுவியது)
- மரண வாக்குமூலம்
- நெடுந்தீவு ஆச்சிக்கு
- சிறுவாயளைந்த அமிர்தம்
- தூங்கலாமா தம்பி தூங்கலாமா… பேருந்தில்
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-7
- பிரக்ஞையின் தளங்கள் : மாண்டூக்ய உபநிடதமும் யூத கபாலாவும்
- டென்மார்க்கின் தனிப்பெரும் இலக்கியவாதி கிாிஸ்ாியன் அண்டர்சன்
- தன்னலக் குரலின் எதிரொலி
- சருகுகளோடு கொஞ்ச துாரம்
- சந்திரமுகி க(வ)லையா ? – அறியா விஷயம் ஆயிரம் புரியும்
- மெல்லக் கொல்லும் விஷங்கள் …
- அறிந்தும் அறியாத அண்டார்க்டிகா கண்டம் (9)
- கீதாஞ்சலி (19) பேராசைப் பிடியிலிருந்து விடுவிப்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- தஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் ( வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன் ) ஆங்கில மூலம்: கரோலின்ரைட்
- மழைக்குடை மொழி
- நெருக்குவாரம் + சுவாரஸ்யம் = புனிதம்