நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் – 52

This entry is part of 44 in the series 20041230_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


பொன்னி வளைத்த புனல்சூழ் நிலவிப் பொலிபுலியூர்

வன்னி வளைத்த வளர்சடை யோனை வணங்கலர்போல்

துன்னி வளைத்தநம் தோன்றற்குப் பாசறை தோன்றுங் கொலோ

மின்னி வளைத்து விரிநீர் கவரும் வியன்முகிலே.

-(திருக்கோவையார்)- மாணிக்கவாசகர்

நிதானமாக, யாழினை வாசித்தவண்ணம் பாடுகிறாள். பாடலில் மாத்திரமல்ல யாழினை மீட்டுகின்ற விரல்களிலும், விரல்வழிபிறந்த யாழின் சுருதியிலும் சோகம் பிசைந்திருக்கின்றது. காதல் அனுபவமற்ற மானுடம் உணரவொண்ணா சோகம். கண்களிளிலிருந்த நீர்முத்துக்கள், கன்னக் கதுப்புகளில் உதிர்ந்து ஈரத்தினை மெழுகுகிறது. அதனை உலர்த்தும்வண்ணம், நெஞ்சத்திலிருந்து பந்தாய் எழுந்த அக்கினிமூச்சு, அவளை யாகக் குண்டத்திலிட்டு, தீ நாக்குகளாய்த் தகிக்கிறது.

அந்திவேளை, வானம் இருண்டு கருநீலவண்ணத்திலிருக்கிறது. கறுத்த மேகங்கள் கண்ணுக்கெட்டியவரை திரண்டிருக்க, கூட்டத்தினின்று தனித்த பறவையாக இருக்கவேண்டும், மெதுவாய்த் தெற்கு வடக்காகப் பறக்கின்றது. தேவயானிக்குப் பறக்கும் வரம்கிடைத்தால் அதன் ஏகாந்தத்தைத் தவிர்த்து உடன் பறக்கலாம், மனதை அழுத்தும் பாரத்துடன், வரம் கிடைத்தாலும் பறக்க இயலுமாவென்கிற ஐயம். குளிர் காற்று வீச ஆரம்பித்தது. மரங்கள் யோசனைக்குப்பின் தலையை அசைக்கின்றன. கார்காலம் தொடங்கியிருக்கிறது. மேகத்தைக் கண்ட ஆனந்தத்தில் கிணற்றருகே ஆண்மயில்கள் தோகை விரிக்க ஆரம்பித்துவிட்டன. பெண்மயில்கள் அகவிக்கொண்டு அங்குமிங்குமாக ஓடி தங்கள் காதலைத் தெரிவிக்கின்றன. அக்காட்சியை விரும்பாதவள்போல, கையிலிருந்த யாழினை ஓர் ஓரமாகச் சுவற்றில் சாத்திய தேவயானி, குடிலைவிட்டு வெளியேறி மயில்களை ‘சோ ‘ ‘சோ ‘ வென்று துரத்துகிறாள். குளிர்காற்றில் உடலைச் சிலிர்த்தவண்ணம் இருந்த மானொன்றை மெல்ல நெருங்கிப் பார்த்திபேந்திரன் நினைவில் அணைத்துக்கொள்கிறாள்.

‘தேவயானி..உன்னுடைய சொக்கேசன் வந்திருக்கிறேன் ‘, குனிந்து அவளைச் சொக்கேசன் தீண்டினான். அத்தீண்டலைச் சகியாதவள்போலத் தேவயானியின் சரீரம் ஒரு முறை குலுங்கிச் சில நாழிகைகள் அதிர்ந்தது. பார்த்திபேந்திரனுடனான கனவுகளிற் கலந்த, அவளது மயக்க நிலையை கலைத்துப்போடும் வன்மத்துடன் வார்த்தைகள் வந்தன:

‘சண்டாளன் பார்த்திபேந்திரனுக்காக, ‘கருமாறிப் பாய்வதற்கு விரதமிருப்பதாக அறிந்தேன். உப்பில்லாமல் உண்டு நோன்பு இருக்கின்றாயாமே ? காமகோட்டம் மேல்நிலையிலையினின்று சக்கர தீர்த்தத்தில் விழுந்து உயிரைவிடத் துணிந்திருக்கும் உனது கடுமையான விரதத்திற்கு, அவன் உகந்தவனென்றா நினைக்கிறாய். ‘

‘…. ‘

‘உன் தந்தை என்னிடம் எவ்வளவு வருத்தப்பட்டார் தெரியுமா ? ‘சிவஞான பானு ‘, ‘மகாகவி, ‘ ‘ஞான பண்டிதர் ‘, என்று இக்காஞ்சி மாநகரமே அவரைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது, கந்தபுராணத்தின் அரங்கேற்ற தினத்தை எதிர்பார்த்து, தமிழ்ப் புலவர்களும், கல்விமான்களும் காத்திருக்கிறார்கள். இப்படியான நேரத்தில், அவர் மனம் வருந்தும்படியான காரியங்களைச் செய்யலாமா ? ம்… ‘

‘…. ‘

‘எழுந்திரு! சீதளக்காற்றில் இருப்பது சரீரத்திற்கு நல்லதல்ல. மழைவருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன, குடிலுக்குத் திரும்பலாம். ‘ சொக்கேசன் மீண்டும் அவளிடம் கைகளைக் கொண்டு சென்றான். தேவயானி ஆவேசமுற்றவளாய், அவனது கரங்களை அவசரமாய் விலக்கினாள்.

‘பெண்ணே!..கணவன் இறந்தபின்பு தீப்பாய்ந்து உயிர்விடத் துணிவதும், துணியாதவர்கள் பருக்கைக்கற்களால் அடுக்கப்பட்ட படுக்கையில், பாய்கூடப் போடாமல் படுத்துக் கைம்மை நோன்பு நோற்பதும் பத்தினிப் பெண்கள் காட்டும் வழி. வேதமுறைப்படி உன்னை விவாகம்பண்ணிக்கொண்டவன் உயிரும் உடலுமாக இருக்கிறேன். கற்புடைப் பெண்களுக்குக் கணவன் மீதான காதல் மிகப்பெரிதென்பதை நமது சாஸ்திரங்களும் வற்புறுத்துகின்றன. நடவாததை நடக்குமென்று கற்பனைசெய்து, வதைபடுவது பேதமை. உனக்கும் பார்த்திபேந்திரனுக்கும் காதலுள்ளதை ஊர் நம்புகிறது. உன் தந்தை சந்தேகிக்கிறார். பார்த்திபேந்திரனுடைய சிநேகிதன் பேசும்பெருமாள் மெய்யென்கிறான். எனக்கு நம்பிக்கை இல்லை. மதங்க முனிவரின் புத்ரியை ஒப்ப, கச்சியப்பர் தவப்பயனாய் பிறந்திருப்பவள் நீ. புத்தியில் மேன்மையும், இனிமையான வாக்கு சாதுரியமும் வரமாகப் பெற்றிருக்கிறாய். எல்லா வித்தைகளையும் ஓதாது உணர்ந்தவள். ஒருபோதும், சிவாச்சாரியாருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் செயல்களைச் செய்யமாட்டாய். நீயொரு பத்தினிப்பெண் என்பதை மனதிற்கொண்டு என்னிடம் வார்த்தை கொடு. பார்த்திபேந்திரன்மீது உனக்கேதும் பிரேமையில்லை என்பதுதானே உண்மை ? ‘

சொக்கேசன் கால்களிற் தேவயானி தடாலென்று விழுந்தாள், ‘சுவாமி! என்னை மன்னித்தருள வேண்டும். பார்த்திபேந்திரனையன்றி வேறொரு புருஷரை, என் நெஞ்சத்தில் நிறுத்த மனம் பதறுகிறது, உடல் நடுக்கமுறுகிறது. என்னுள் அவரும், அவருள் நானும் ஆத்மாவும், சரீரமுமாய் அவதாரமெடுக்கிறோம். எங்கள் ஆத்மாவுக்கு விடுதலை கிடைக்கும்வரை, எனக்கு அவர் சரீரமென்றும் அவருக்கு நான் சரீரமென்றும் விதிக்கப்பட்டிருக்கிறது. ‘

‘தேவயானி!..பதிவிரதா நெறியை மீறுகிறாய். வேண்டாமடி, இது தர்மமல்ல. உனக்கு நினைவிருக்கிறதா ? அக்கினி சாட்சியாய், பெற்றோர் மடியில் அமர்ந்து ஸ்ரீமான் சொக்கேசனான எனக்கும், செளபாக்கியவதி தேவயானியான உனக்கும் கலியாணம் நடந்தபோது, எனக்கு ஆறு வயது, உனக்கு நான்கு வயது. நாம் சிறு பிள்ளைகளாக இருந்தகாலத்தில் நடந்தவைகள் எனது இதயத்தில் கல்லின்மேல் செதுக்கிய எழுத்துகளாகப் பதிந்துள்ளன, என் நினைவு சாளரத்தை திறக்கின்றபொழுது, எதிர்ப்படும் படிமங்கள் தேவயானியென்கின்றன. நீயும் நானும் பதியமிட்ட மல்லிகைக்கொடி முதல்மொட்டு விட்டபோது, ஓடிச் சென்று நீ பார்த்தது அம்மொக்கினை. நான் பார்த்து ஆனந்தித்தது உனது முகத்திற் படிந்த சந்தோஷத்தை. கறந்த பாலை திருட்டுத் தனமாக நீ பருகியிருக்க, உன் தந்தையிடம் என்னைக் குற்றவாளியாக ஒப்புக்கொண்டது நினைவிருக்கிறதா ? நீ ஆசைப்பட்ட மாங்கனிக்கு ஆரூரார் மாந்தோப்பில், கள்ளத்தனமாக நுழைந்ததும், நீ அடம்பிடித்த தாமரை மொக்கொன்றிற்காக, குளத்திலிறங்கி தாமரைக்கொடிகளிற் சிக்குண்டு உயிர் பிழைத்ததுங்கூட உனக்காகத்தான் பெண்ணே. வைகறையில் எழுந்திருந்து திண்ணைப் பள்ளிக்கு நீ முந்தி நான் முந்தியென்று ஓடியது, குமரகோட்டக் கோபுரவாசலில் கண்களைக் கட்டிக்கொண்டு உன்னைத் தேடியது, சோமஸ்கந்தனின் திருக்கல்யாண உற்சவத்தில் சடங்குகளை வரிசை மாறாமல் மனதிற்பதித்து, சினேகிதர்கள் படை சூழ உலகாணித் தீர்த்தத்துப் படித்துறையில், நீயும் நானுமாய் மாலைமாற்றிகொண்டது, பூக்குடலையைச் சுமந்துகொண்டு நாமிருவரும் ஓடிப் பிடித்து விளையாடியது, ஆலயப் பூங்காவனத்திலிருந்து முல்லை, மல்லிகை, திரு ஆத்தி முதலியவற்றைப் பறித்து மாலை செய்து சூடிக்கொண்டது, மணல்வீடு கட்டி மகிழ்ந்தது, அதிரசத்தையும், தினை அடையையும் புன்னை மரத்தடியில் உண்டு மகிழ்ந்ததென்று இன்னும் எத்தனை எத்தனையோ. ‘

‘இல்லை சுவாமி. என்னை மன்னிக்கவேணும், பார்த்திபேந்திரன் மாத்திரமே என் நெஞ்சத்தில் வியாபித்திருக்கிறார். வேறு ஞாபகங்கள் இல்லை. ‘

‘பாதகி, பொய் சொல்லுகிறாய். பத்தினிப் பெண்களின் வார்த்தைகளல்ல அவை. பாபத்தை விலை கொடுத்து வாங்குகிறாய். உன்னைப் போன்ற கணவனை வஞ்சிக்கும் பெண்கள் கண்ணிழந்து வருந்தும்படியாக, மூன்றாம்வகை நரகமான அந்ததாமிச்ரம் நகரம் – வாய்க்குமென்று நமது புராணங்கள் சொல்கின்றன. வேண்டாம், அப்படியான எண்ணத்தை விட்டுவிடு. கெளதமர் அகலிகைக் கதை மறந்துவிட்டதா ? வித்தையும், விவேகமும் பெற, வடதேசங்களுக்கு நான் சென்றிருந்த நேரத்தில், இங்கே பார்த்திபேந்திரனென்கிற இந்திரனும் அப்படித்தான் தன் பைசாச விருப்பத்திற்காக உனக்குத் தூண்டிலிட்டிருக்கிறான். நல்லவேளை, தகாதெதுவும் நடப்பதற்கு முன்பாக வந்திருக்கிறேன். ‘

‘முருகா! ‘ காதுகள் இரண்டையும் அவசரமாகப் பொத்திக்கொண்டாள். கண்கள் சிவக்க, துர்க்கைபோல முகம் இறுகியது. ‘இப்படியான வார்த்தைகளைக் கூற நீங்கள் மனம் துணியலாமா ? ‘. எனக் குரலை உயர்த்தியவள் தணிந்தவளாக, ‘அகலிகைக்கு நேர்ந்த அனுபவங்களுக்கு கெளதமரும் பொறுப்பல்லவா ? தேசாந்தரம் போய்விட்டுத் திரும்பிவந்து கேட்பதற்கு நானொன்றும் உடமை அல்லவே, எலும்பும், தசையும், இரத்தமும், நரம்பும் கொண்ட உயிர். எனக்கு பார்த்திபேந்திரனோடு நேர்ந்திருப்பது உயிரனுபவம். அவை ஒன்றிரண்டு அல்ல உரித்து எடுப்பதற்கு, பல படிமங்களாக மடிந்து கிடக்கிறது, அதன் முறையான நிரல்களை, வேத சாட்சியங்களைக்கொண்டு சிக்கலாக்க எண்ணுகிறீர்கள். தங்களைப் போன்ற முனிபுங்கவர்களுக்குக் காத்திருக்க பழகிய ரிஷிபத்தினிகளுக்கா இந்தத் தேசத்தில் பஞ்சம். அப்படியானப் பெண்கள், பாலாற்றங்கரைக்கு அதிகாலை நேரத்தில் கக்கத்தில் குடத்துடன் நீராடவருவார்கள், அவசரமென்றால் காஞ்சி மாநகரிலேயே அர்ச்சகர் குடில்களில்கூட முயற்சி செய்யலாம்.. ‘

‘தேவயானி! எனது பொறுமையை சோதிக்கிறாய். உனக்கும் எனக்குமான விவாகத்தை எவர் தீர்மானித்தார்கள் என்று நினைக்கிறாய் ? நீ சற்றுமுன் நாமகரணம் சூட்டிய விதியல்லவா ? அவ்விதியை மாற்றி எழுதுவேண்டுமென்று நினப்பது புத்தியீனமடி. பார்த்திபேந்திரனும் நீயும் ஆத்மாவும் சரீரமும் என்கிறாயே எப்படி முடியும் ? உனக்கு மாங்கல்யம் கட்டியவன் என்ற வகையில் உன் ஆத்மாவாகிய பசுவுக்கு, பாசமும் பதியும் நானன்றி, வேறெவர் ? ‘

‘…. ‘

நீயும் நானும் மேலானவர்கள். பூவுலகில் மேலான மக்கள் சந்ததிகளை விருத்தி செய்யப் படைக்கப்பட்டவர்கள். தாந்திரிகத்து பரப்பிரம்மமே பூரணமானது, மேலானது, ஈடற்றது. சிவனும் சக்தியுமாக ஒன்றிணைந்து பெறவேண்டியது. நான் கற்ற யோக நெறியும் தியானமும், பருவுடலின் வழி செல்வது. நாயகன் நாயகி மார்க்கம். பேரின்பம் பெறுவதற்கான எளியவழி. நாம் அறிந்தவற்றிலிருந்து அறியாதவற்றினை அடையும் வழி. அதற்குப் பொருத்தமானவள் உன்னையன்றி வேறொருத்தி இருக்க முடியுமா ? உன்னைத் துணையாகக்கொண்டே தாந்திரிகத்தில், நான் ஜெயிக்க வேண்டும். ‘

‘…. ‘

‘நாமிருவரும் வைகறையில் எழுந்திருக்கவேண்டும், புனித நீராடவேண்டும். மண்குடத்தில் நீரும், துடைப்பமும், குடைலை வழியப் பூக்களுமாக நமது மனவாலயத்திற்குள் புகவேண்டும், அதுவே தியானம்: அங்கே என்னயிருக்குமென்று நினைக்கிறாய், ஆண்டுகள் பலவாக அகற்றமறந்த குப்பைகள், நல்லவை தீயவையென நமது மனப்பக்குவத்தின்படி தீர்மானித்தவை:உறவு, பாசம், விருப்பு, வெறுப்பு, ஆசை, அகங்காரம்….தூசும் தும்புமாகப் படிந்திருக்கின்றன. அவற்றைக் கூட்டி ஒழித்தாகவேண்டும். அவற்றின் விளைவுகள்குறித்து எச்சரித்த குரலை, நரவாழ்வில் நமக்கு வைக்கப்படும் கண்ணிகளை இனம் காட்டிய குரலை உதாசீனம் செய்திருக்கிறோம்; இனியாகிலும் கேட்க வேண்டும். அதனை இருவருமாக செய்யவேண்டும். இருவரென்றால் சிவனும் சக்தியுமாய், நீயும் நானுமாய், எதிருமாய் புதிருமாய், கேள்வியும் பதிலுமாய், சொக்கேசன் தேவயாணியாய், ஒருவர் மற்றவரை ஆலீங்கனம் செய்தவண்ணம் பூர்த்திசெய்யப்போகிறோம், பேரின்பத்தைப் பெறப்போகிறோம். ‘

‘சுவாமி, நீங்கள் கூறிய வார்த்தைகளேதும் எனக்கு விளங்கவில்லை. இச் ஜென்மத்திற்கு மாத்திரமல்ல, இனியெடுக்கின்ற ஜென்மங்களிலும் பார்த்திமேந்திரனையன்றி வேறொருவர் மணாளனாக வரிப்பதில்லையென தீர்மானித்திருக்கிறேன். பார்த்திபேந்திரன் வெற்றி வாகையுடன் மீண்டும் வருவார். எனக்கு மாலை சூடுவார், நம்பிக்கை இருக்கிறது ‘

‘ ‘ஆவது விதியெனில் அனைத்தும் ஆயிடும் / போவது விதியெனில் எவையும் போகுமால்/ தேவருக்கு ஆயினும் தீர்க்க தக்கதோ/ ஏவரும் அறியொணா ஈசற்கு அல்லதே ? ‘ நான் சொல்லவில்லை, உன் தந்தை கச்சியப்பர் கச்சியப்பர் சொல்வது. உனது விதி மாத்திரமல்ல எனது விதியும் பார்த்திபேந்திரன் விதியும் அவ்வாறே எழுதப்பட்டிருக்கவேண்டும். அவ்வாறில்லையெனில் உன் முடிவில் இவ்வளவு பிடிவாதம் காட்டுவாயா ? அவன் வெற்றியுடன் திரும்ப, நீ உயிரை மாய்த்துகொள்வேன் என்பதும், இறந்த உனக்கு மாலை சூடுவான் என்பதும் விநோதமாக இல்லை. நீ இறந்த பிறகு, அவன் மாலைசூட வருவானென்பது எதற்கென்று யோசித்தாயா ? ஒருவேளை வரும் பிறவியிலா ? ஹஹ்ஹா…பெண்ணே எத்தனை பிறவிகளென்றாலும், நானும் வருவேன், உன் அறிவு மயக்கத்தை தெளியவைப்பேன். உன்னை ஆட்கொள்ளுவது நானாகவே இருக்கமுடியும்.. ‘

அமானுஷ்யக் குரலில், கண்களைப் பெரிதாக்கிக்கொண்டு, சொக்கேசன் விட்டு விட்டுச் சிரிக்கிறான். மாறாக, உக்கிரமுற்றவள்போல தேவயானி கால்களை அழுந்தப்பதித்து அசையாமல் நிற்கிறாள். காத்திருந்தது போல வானம் பேரிரைச்சலிட்டுக் கொண்டு முழங்கியது. கீழ்வானில் மின்னல்கள் வெட்டி ஒளிர்ந்தன. மரங்கள் வேரோடு பெயர்ந்துவிடுவதுபோல ‘உய் ‘ ‘உய் ‘யென்று தலையை அசைத்து சண்டமாருதம் புரிந்தன. சடசடவென பெய்ய ஆரம்பித்த மழை, பூமியை கரைத்துவிடத் துணிந்ததுபோல அருவியாய்க் கொட்டி ஊழித்தாண்டவத்தை நினைவூட்டியது.

/தொடரும்/

Na.Krishna@wanadoo.fr

Series Navigation