நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம்-51

This entry is part of 59 in the series 20041223_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


வாழும் படியொன்றும் கண்டிலம் வாழிஇம் மாம்பொழில்தேன்

சூழும் முகச்சுற்றும் பற்றின வால்தொண்டை யங்கனிவாய்

யாழின் மொழிமங்கை பங்கன்சிற் றம்பலம் ஆதரியாக்

கூழின் மலிமனம் போன்(று)இருளா நின்ற கோகிலமே.

-(திருக்கோவையார்)- மாணிக்கவாசகர்

கச்சியப்பர் சிவாச்சாரியார் இல்லத்தோடு இணைந்து கிடந்த கொல்லைப்புறம்.

மா,பலா,வாழை முக்கனிமரங்களுக்கிடையே பன்னீர், மரமல்லி, செம்பருத்தியெனக் கொத்துகொத்தாய்ப் பூத்திருக்கும் வாசமலர்கள். அவற்றின் கலவை மணம் காற்றில்கலந்து அப்பிரதேசத்தின் கற்பனை சரீரத்திற்கு வாசத்தைத் தெளித்துக்கொண்டிருக்கிறது. பூசணிக்கொடியும், சுரைக்கொடியும் சடைபோட்டுப் படர்ந்திருக்க, பச்சையும் மஞ்சளுமாய் அவற்றின் பலாபலன்கள். செடி கொடிகளில் மாத்திரமல்ல மரங்களின் கிளைகளிலும் இளந்தளிர்கள் மென்காற்றில் அசைந்தாடுவது அழகு. முற்றத்துக் கூரையிலும், கிணற்றினையொட்டியிருந்த புல்வெளியிலும் மயில்களும், புறாக்களும் அங்குமிங்குமாய் பறப்பதும், அமர்வதும், மெல்ல நடை பழுகுவதுமாயிருக்கின்றன. பார்த்திபேந்திரன் பழனிவேலன் என்கிற பெயருடன் கச்சியப்பர் சீடனாக அவதாரமெடுத்து, வேனிற்காலமும் பிறந்துவிட்டது.

பார்த்திபேந்திரனைச் சிவாச்சாரியார் ‘ஏகாந்தக்கிராஹி ‘யென வருவோர் போவோரிடம் சிலாகிக்கிறார். எந்த விஷயத்தையும் குரு ஒருமுறை உச்சரித்தால் போதும், சட்டெனப் பத்திக்கொள்ளும் கற்பூரஞானம், என்பதாய்ச் சீடனின் புத்தி குறித்து மெச்சுகிறார். பார்த்திபேந்திரன் உற்சவ காலங்களிலும், விசேட நாட்களிலும் கச்சியப்பருக்குத் துணையாகக் குமரக்கோட்ட முருகனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்கிறான். குரு, நித்திய கருமங்களை முடித்துக்கொண்டு குமரகோட்டம் சென்று வடிவேலனை வழிபட்டபின் புராணம் பாடத்தொடங்க உடனிருக்கிறான். நாளொன்றிற்கு நூறு செய்யுட்களென்று சங்கற்பம் செய்துகொண்ட கச்சியப்பர் பாடல்களைச் சொல்லச்சொல்ல எழுத்தாணிகொண்டு எழுதி முடிக்கிறான். அர்த்த ஜாம பூசைக்குப் பிறகு கந்தன் திருவடிகளில் வைக்கப்பட்டு பிழைதிருத்தப்படும் பாடல்களை மறுதினம் படியெடுத்து உதவுகிறான். ஆலயப் பூங்காவனத்திலிருந்து கண்ணி, கடம்பம்,காந்தள், குறிஞ்சி, செவ்வலரி ஆகிய முருகனுக்குகந்த மலர்களைக் குடலையிலிட்டு பூஜைக்கும்; முல்லை, மல்லிகை, திரு ஆத்தி முதலியவற்றை மாலைகள் கட்டுவதற்காக அர்ச்சகரின் அழகுமகள் தேவயானியிடமும் வழங்க, இவனது கனவு நனவாகிறது. தேவயானி பார்த்திபேந்திரனை நெஞ்சில் வைத்துப் போற்ற ஆரம்பித்துவிட்டாள். தான் பழனிவேலனல்ல பார்த்திபேந்திரன் என்று சொல்லும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறதென உள்மனம் சொல்கிறது.

சமய தீட்சைகொடுப்பதற்காகவென்று சிறிய காஞ்சிபுரம்வரை, கச்சியப்பர் சென்றிருந்தார். இடையூறற்ற சந்தோஷத்தில், காமாட்சி அம்மன் பொற்றாமரைக்குளக்கரையில் வழக்கமாகத் தாங்கள் சந்திக்கின்ற புன்னை மரத்தடியில் பார்த்திபேந்திர பல்லவரையனும், தேவயானியும் அமர்ந்திருக்கின்றார்கள். காற்றுக்குத் தன் பணிநேரம் முடிந்திருக்கவேண்டும் ஓய்ந்திருக்கிறது, இதழ்விரித்திருந்த பூக்களில் அக்கடாவென்று மதுவுண்டிருந்த வண்டுகள், எழ முடியாமல் மயக்கத்திற் கிடக்கின்றன. சில நாழிகைகளுக்கு முன்புவரை குளத்திலிருந்த வெண்நாரைகள், சற்று முன்புதான் கூட்டமாய் பறந்து போயிருந்தன. இருவர் மனதிலும் வீம்பு. இருவருக்கிடையிலும் நிலவிய மெளனத்தை அர்த்தப்படுத்துவதைப்போன்று நிசப்தம் நீண்டுகொண்டிருக்கிறது. குமரக்கோட்டத்திலிருந்து எழுந்த காண்டாமணியின் ஓசை, தடாகத்தில் அலைகளாய் கரைகிறது. அவ்வோசைக்குத் துணை சேர்ப்பதுபோல ‘உஸ் ‘ஸென்ற சத்தம். இருவரும் திடுக்கிட்டுத் திரும்புகின்றார்கள், ஆறடி நீளமுள்ள நாகம். பார்த்திபேந்திரன் சற்றும் தாமதிக்காமல் சர்ப்பத்தின் வாலைப் பிடித்து சுழற்றிப் பூமியில் அடித்துப் பின்பு தூக்கி எறிறான். தேவயானி அதிர்ச்சியில் உறைந்திருந்தாள். மீண்டும், இருவருக்கிடையிலும் மெளனம். பார்த்திபேந்திரனுக்குப் பொறுக்கவில்லை,

‘தேவயானி.. நீ நடத்தும் ஊடலுக்கு காரணமென்னவென்று அறியலாமா ? ஏன் வாய் திறக்கமாட்டேனென்கிறாய் ? என்மீது உனக்கேன் கோபம். சில தினங்களாக உன்போக்கு எனக்கு வீணான மனக்கவலையை அளிக்கிறது. நீ நடத்தும் நாடகத்தினை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. என்னைக் காணுங்கால் சிவக்கும் விழிகளும், உணவிடும் போது தட்டத்தையும், குவளையையும் வைக்கும் பாங்கும், நீ வளர்க்கும் மாடப்புறாக்களிடமும் மயில்களிடமும், காரணங்களேதுமின்றி அனல் கக்கும் வார்த்தைகளைப் பிரயோகிப்பதும் எதற்காகவென்று இன்றைக்குத் தெரிந்தாகவேண்டும். வாய் திறப்பாயா ? மாட்டாயா ? ‘

‘என் கோபம் இயற்கையானதென்று தங்கள் மனதிற்குத் தெரியாதா ? அல்லது தெரிந்திருந்தும் கேட்பதென்றால் உங்கள் வழக்கமான நாடகத்தில் இதுவுமொன்றோ என்கிற ஐயப்பாடு எழுகிறது. ? ‘

‘தேவயானி!..நான் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்காமல், என்னைக் குற்றவாளியாக்குவது எந்த விதத்தில் நியாயம் ? நானிழைத்த குற்றமென்ன ? அதைச் சொல்லிவிட்டுக் கோபித்துக்கொள். இப்படி விசாரிக்காமல் தண்டனை வழங்குவதுதான் பெண்கள் நீதியா. ‘

‘அன்பரே, எதற்காக கோபப்படுகிறேனென்று உங்கள் உள்ளம் உண்மையாய் அறியாதா ? சமீப தினங்களில் என்ன நடந்ததென்று நினைத்துப் பாருங்கள் ‘

‘கடந்த திங்களன்று, உன் கூந்தலிலிருந்து விழுந்திருந்த செம்பருத்தியொன்றை கூடத்திற் கண்டெடுத்து, நான் கண்களில் ஒற்றிக்கொண்டிருக்க, நீ வேகமாய்த் திரும்பியவள், பொய்க்கோபத்துடன் என்னிடமிருந்து அபகரித்துச் சென்றதாய் நினைவு..

செவ்வாய்கிழமை, நந்தவனத்தில் பூஜைக்கென்று மலர்களைக் கொய்துக் கொண்டிருக்கிறேன், ‘ஆ ‘ வென்று சத்தம். நான் குடலையை அங்கேயே தவறவிட்டு ஓடிவருகிறேன். நீர் சேந்தும் குடமும் கயிறும் கிணற்றில் விழுந்திருக்கிறது என்பது புரிந்தது. உன் ஆடையிலும், ஆடையின் கவனத்திலிருந்து விடுபட்டிருந்த சிவந்த பாதங்களிலும், மாருதாணி இட்டதுபோல பாசிமெழுகியிருக்கிறது. உன் தந்தை அருகிலில்லை என்கிற தைரியத்தில் உரிமையாய் தொட்டுத் தூக்க முயற்சிக்கிறேன், நீ வேண்டாமென்று தடுத்துவிட்டு வார்த்தையேதுமின்றி எழுந்தவள், என்னைத் திரும்பிப் பார்க்கவேண்டாமென்று தீர்மானித்தவளாக விடுவிடுவென்று நடந்து குடிலுக்குள் மறைந்ததாய் நினைவு.

புதனன்று வியாழனன்று நைவேத்தியப் பொங்கலென்று, தாமரை இலையில் வைத்து உன் தந்தைக்கும் எனக்குமாகக் கொடுக்கிறாய். பொங்கலில் உன் கரிய கேசமொன்று விழுந்திருப்பதைக் கண்டவுடன், உன் தந்தை அறியாவண்ணம் அவசரமாகவெடுத்து என் உத்தரீயத்தில் முடிந்துகொள்கிறேன். இலையில் நீர் முத்தொன்று விழுந்து உடையாமல் உருண்டோடுகிறது. நிமிர்ந்து பார்க்கிறேன், விழிகளில் நீர் கோர்த்திருக்கிறது. அன்றைக்கு அஞ்சனம் தீட்டவும், நீ மறந்திருந்ததாய் ஞாபகம். ‘

அனுமதித்தால், தன்னை எங்கே இன்ப சாகரத்தில் அமிழ்த்திவிடுவானோ என்கிற அச்சம், அர்ச்சகர் பெண்ணுக்கு ஏற்பட்டது. தேவயானி பற்களை நறநறவென்று கடித்து பொய்க்கோபம் காட்டினாள்.

அவள் மனம், மகுடிக்கு மயங்கிய நாகத்தின் நிலைக்கு வந்திருக்கிறது; என்பதைப் பார்த்திபேந்திரன் உணர்ந்திருந்தான் தன்னுடைய காதற்செப்பேடு வாசிப்பினை நிறுத்தும் பட்சத்தில், அவள் ‘சீறும் ‘ அபாயம் இருக்கிறது என்பதை உணர்ந்தவன், தொடர்ந்தான்.

‘கடந்த வியாழனன்று…. ‘

‘போதும்! புருஷர்களின் கபட நாடகத்தை ஸ்த்ரீகள் அறிவோம். வார்த்தை ஜாலம் செய்து, உத்தம புருஷனென்று என் மனதிற் தீட்டியுள்ள தங்கள் ஓவியத்தை மாசுபடுத்தப் பிரயத்தனம் வேண்டாம். உண்மையில் தங்களுக்கு வேறு நினைவுகள் இல்லையா ? சென்ற கிழமையில் நடந்தேறிய பங்குனி உத்திரவிழாவோ – ஊரெல்லாம் கூடி இழுத்த தேரோ- விழாக்காலங்களில் நடந்த ஒயிலாட்டமோ, வேலனாட்டமோ, நினைவில் இல்லையா ? என் தந்தை இரண்டு நாட்கள் காய்ச்சலென்று வீட்டிற் கிடந்தாரே, அதற்காக வைத்தியர் குடிலுக்கு வந்திருந்தாரே, ஞாபகத்தில் இல்லையா ? கடந்த பெளர்ணமியன்று உங்கள் தோழர் பேசும்பெருமாள் சூரியன் அஸ்தமித்த நான்கு நாழிகைக்குப் பிறகு வந்திருந்து நந்தவனத்தில் உங்களிடம் வெகுநேரம் உரையாடிச் சென்றதேனும் ஞாபகத்தில் இருக்கிறதா ? இல்லையா ? ‘

‘தெய்வானையின் இரு கைகளையும் ஒருசேரப் பற்றினான், ‘பெண்ணே! எதற்காக இப்பல்லவி ? உன் மன வருத்தத்திற்கான காரணத்தைச் சொல் ? நான்தான் காரணமென்றால், அதனைப் போக்க முயற்சி செய்கிறேன். ‘

‘சற்றுமுன், ஆறடி நீளமுள்ள சர்ப்பமொன்றை வாலைப் பிடித்து தூக்கி எறிந்ததும் எனது சந்தேகம் தீர்ந்தது. ‘

‘என்ன சந்தேகம் ? ‘

‘பெளர்ணமி தினத்தில் தங்களுக்கும், தங்கள் சினேகிதருக்கும் நடந்த உரையாடலில் சிலவற்றை நானும் கேட்க நேர்ந்தது. அப்படிக் கேட்டது தவறென்றால் என்னை நீங்கள் மன்னியுங்கள். ஆனால் அதனைக் கேட்க என உரிமையுண்டு என்று நம்பினேன். தங்கள் சிநேகிதர் பேசும்பெருமாள், உங்கள் தாயாரிடமிருந்து சேதிகளை மாத்திரம் கொண்டுவருபவரல்லர், அரசாங்க சேதிகளும் கொண்டு வருபவர் என்று அறிந்தேன். கேட்ட வசனங்களை வைத்துப் பார்க்கின்ற பொழுது, நீங்கள் ஏதோ அரசாங்க சம்பந்தமான ரகசியங்களை பறிமாறிக்கொள்கிறீர்களென்றும், சாதாரணக் குடும்பத்தைச் சார்ந்தவரல்லரென்பதும் தெளிவாயிற்று. ‘

‘தேவயானி..! இனியும் உன்னிடம் சிலஉண்மைகளை மறைப்பதில் நியாயமில்லை. அவ்வுண்மைகளை மறைத்ததும் உனக்கோ, உன் தந்தைக்கோ இன்னல்கள் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கினாலும் அல்ல. நான் அரச வம்சத்தைச் சேர்ந்தவன் என்பது உண்மை. அப்பின்புலம் நம் காதலுக்குத் தடையாகிவிடுமோ என்று அஞ்சினேன். ‘

‘உங்கள் உரையாடலில், தொண்டைமண்டலம், படையெடுப்பு என்று பேச்சு வந்ததே ? ‘

‘சொல்கிறேன் கண்ணே!. ஆனால் எனக்கொரு உறுதிமொழி தரல்வேண்டும், நான் சொல்கின்ற உண்மைகளை சிலதினங்களுக்காகினும் வேறொருவர் செவிக்கு எட்டாமல் நீ பார்த்துக்கொள்ளவேண்டும். நீ நினைப்பதுபோல நான் உத்திரமேரூர் பெருநிலக்கிழார் ஆரூரார் மைந்தன் பழனிவேலன் அல்லன். பல்லவகுலத்தைச் சேர்ந்தவன், வானவன் பல்லவரையன் திருக்குமாரன், பார்த்திபேந்திர பல்லவரையன் என் நாமம் சூடியவன். மகேந்திரர், நரசிம்மர் காலத்து பல்லவராச்சியத்தை மீண்டும் கட்டி எழுப்பவேண்டும் என்பதான என் மனோராச்சியம் நிறைவேறப்போகிறது. சங்கமச் சகோதர்கள் உருவாக்கிய விஜயநகர சாம்ராச்சியம் வடக்கே வளர்ந்து வருகின்றது. விஜய நகர சாம்ராச்சிய ஸ்தாபகர்களில் ஒருவரான புக்கர், தம்மைந்தர் ‘குமாரகம்பண்ணன் தலைமையில் அனுப்பியுள்ள பெரும்படையொன்று மதுரைக்குச் செல்லும் வழியில் எந்த நேரத்திலும் தொண்டைமண்டலத்தில் நுழையலாம் என்பதாகச் சேதிவந்துள்ளது. விஜயநகரப்படைகள் தொண்டைமண்டலத்தை இராசநாராயணச் சம்புவரையனிடமிருந்து மீட்டு என்னிடம் கைய்யளிப்பதாக வார்த்தைபாடு கொடுத்துள்ளார்கள். வருகின்ற விஜயநகர சைன்யத்துக்கு ஆதரவாக மிக ரகசியமாக, ஒரு பெரும்படையைக் காஞ்சியில் திரட்டியிருக்கிறோம். அண்டர்கள் புகழும் தொண்டை நன்னாட்டில் மீண்டும் நந்திக்கொடி பறப்பதற்கான வேளை நெருங்கிவிட்டது. நகரேஷுக் காஞ்சி மீண்டும் எனது குடைக்கீழ் தொன்னகரமாகிய நன்னகரமாக அவதாரமெடுக்கவிருக்கிறது. பார்த்திபேந்திரன் பல்லவரையன், மகாராஜனென்றும், தேவயானியை மகாராணியென்றும் இவ்வுலகம் அழைக்கப்போகிறது. குரு கச்சியப்பரின் ஆசியுடன் உன்னைத் திருமணம் செய்துக்கொள்ளப்போகிறேன். ஈரேழு புவனங்களும் எதிர்த்து நின்றாலும், என் கனவுகள் நனவாவது உறுதி; சத்தியம். ‘

ஆவேசத்துடன் பார்த்திபேந்திரன் வார்த்தைகளைப் பிணைத்துப் பேசுகிறான். சற்றுமுன்புவரை குரலில் இழைந்த குழைவும், மென்மையும், விலகிக்கொள்ள தொனியில் கம்பீரம் கலந்திருக்கிறது. திடாரென்று மஹா புருஷனாக, பரவெளிகடந்து நிற்பதைப்போல உணர்வு, தேவயானிக்கு உடல் சிலிர்க்கிறது. கருவிழிமடல்கள் படவென்று படவென்று அடித்து ஓய்ந்து இமைக்க மறந்து நிற்கின்றன. பிரம்மிப்புடன் பார்க்கிறாள். அவனது ராட்ஷஸ வாலிபம், இதற்கெனவே காத்திருந்ததுபோல தாழிடமறந்த பார்வைக்குள், மனைக்கு உரிமையாளனைப்போல அதிகாரமாய் நுழைந்து இவள் சரீரத்தினைக் கையகப்படுத்திக்கொள்கிறது. சம்பந்தர் பாடிய, ‘பிரம்மாபுரமேவிய பெம்மாவனின்றே ‘ தேவாரத்து வரி இவளுக்கு நினைவுக்கு வருகிறது. பூமியில் விழுகின்ற மழைத்துளியின் அவசரத்துடன் தேவயானி என்கிற பெண்கொடி பார்த்திபேந்திரன் என்கிற கொழுகொம்பில் சுற்றிப்படர்ந்தது.

‘தேவயானி!.. ‘ அப்பிரதேசமே நடுங்கும்படியானக் கர்ச்சனைக் குரல்.

குரலினைக்கேட்டுப் பார்த்திபேந்திரனும், தேவயானியும் தங்களை விலக்கிக்கொண்டு பதறி எழுந்தனர். குரல்வந்த திக்கில் அர்ச்சகர் கச்சியப்ப சிவாச்சாரியார்: புருவங்களை நெரித்துக்கொண்டார். கண்களிரண்டும் கோவைப்பழங்கள் போல சிவந்திருக்கின்றன. பற்களை நறநறவென்று கடித்தவண்ணம், கிடைத்தஇடைவெளிகளில் பேசத்துடிக்கிறார். அவரருகே இளம்வயது பிராமணன் ஒருவன்: ஒடிசலான தேகம்,பெண்மை முகம். வேட்டியைப் பின்புறம் வாங்கி, இடுப்பிற் சொருகி இருந்தான். தலையை முன்புறம் சிரைத்து, பின்புறமிருந்த அடர்த்தியான முடியைக் குடுமியாக்கியிருந்தான். நெற்றியிலும், ரோமமற்று வெறுமையாய்க் கிடந்த மேலுடல் முழுவதிலும் விபூதிப் பூச்சு. அடர்த்தியான புருவத்திலிருந்து வெளிப்பட்டிருந்த பெரிய கண்கள், விஷப்பார்வை.

‘பாதகி என்ன காரியம் செய்கிறாய். குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக்காம்பே. உன் நாசச் செயல்களுக்கான பலா பலன்களை யோசித்துப் பார்த்தாயா ? நீ திருமணம் ஆனவள் என்பதை மறந்துவிட்டயா ? குமரகோட்டத்துக் கடவுள், இப்பாவியின் பிரார்த்தனைக்குச் செவிசாய்க்காமற் போய்விடுவான் என்று நம்பினாயா ? இங்கே பார்! பால்ய வயதில் உன்னை விவாகம் செய்துகொண்டு தேசாந்திரம் போயிருந்த உன் புருஷன் சொக்கேசன் தேடி வந்திருக்கிறான். ‘

‘சுவாமி! ‘- நடந்தனைத்தும் அறிவேன். தேவயானி என்னிடம் விபரமாகச் சொல்லியிருக்கின்றாள். அவளது பால்யவிவாகம், அறியாவயதிற் கட்டிய மணல் வீடென்றே சொல்லவேணும். அதற்கான ஆயுள் நாழிகைக் கணக்கில் எழுதப்பட்டதென்பதை ஞானவான் உங்களுக்கு விளக்கவும் வேண்டுமா ? ‘

‘துன்மார்க்கா! பேசாதே. பழனிவேலன் என்று பொய்பகர்ந்து என் வீட்டிற்குள் நுழைந்த கருநாகமே, நீ பேசியதனைத்தும் நான் கேட்டேன், சம்புவரையர்களுக்கு மாத்திரம் சேதியனுப்பும் பட்ஷத்தில், கோட்டைவாயிலில் உன்னை, இந்தச் ஷணமே கழுவேற்றிவிடுவார்கள். போகட்டும், அதற்கென் மனம் ஒப்பவில்லை. கண் முன் நிற்காதே! தயவுசெய்! போய்விடு. ‘

‘தேவயானி! இனி நானிங்கிருப்பதால் பிரயோசனம் இல்லை. உன் தந்தை நாம் சொல்வதைக் கேட்கின்ற மனநிலையில் இல்லை. நீ அச்சமொழிந்து தைரியமாக இரு. உன்னை அவசியம் சந்திப்பேன். உனக்கு நானென்றும் எனக்கு நீயென்றும் பிரம்மாவால் எழுதபட்டிருக்கிறது. அதனை அப்பிரம்ம பிரயத்தனத்தினாற் கூட மாற்றி எழுதவதென்பது இயலாது என்கிறபோது, உன் தகப்பனாரா மாற்றி எழுதப்போகிறார் ? மீண்டும் வருவேன். அவர் ஆசியோடே உன்னைக் கைப்பிடிப்பேன். ‘ பார்த்திபேந்திரன் வேகமாகச் சென்று மறைந்தான்.

தேவயானிக்கு நடந்ததனைத்தும் கனவாக இருக்கக்கூடாதா என்றிருந்தது. தந்தை கச்சியப்பரை நோக்கினாள். விலா எலும்புகள் புடைத்துக்கொள்ளச் சிறிது நேரம் இறுமினார், சோர்ந்தார், எதையோ சொல்லவந்து மூர்ச்சையாகி விழ இருந்தவரைச் சொக்கேசன் தாங்கிப் பிடித்தான். தேவயானியிடம், இனம் புரியாத கலவரம், அண்ணத்தில் ஒட்டிய கேசத்தினைப்போன்று அருவ ஆரம்பித்து, ஒன்றோடொன்றெனப்பின்னி, சிக்கலுண்டு பந்தாய்த் திரண்டு நெஞ்சினை அடைக்கிறது.

‘தேவயானி! அருகில் வா!.. கை கொடு. உன் தந்தையைக் குடிலுக்கு அழைத்துச் சென்று ஆசுவாசப்படுத்துவோம். தேவையென்றால் வைத்தியர் ஒருவரை அழைத்துப் பார்க்கலாம். ‘ இவளைப்பார்த்துச் சொல்லியவண்னம், சொக்கேசன் கச்சியப்பரைக் கைத்தாங்கலில் மெல்ல அழைத்துச் சென்றான்.

இவள் நிலைமையைப் புரிந்துகொண்டு சொக்கேசனுக்கு உதவியாக, மறுபுறம் தன் கரத்தினைக் கொடுத்தாள். கச்சியப்பரைத் தாங்கிப் பிடித்திருந்த சொக்கேசன், இவளது கையுடன் உரிமையாக இணத்துக் கொள்ள, பதட்டத்துடன் அவன் கரத்தினைத் தட்டிவிட்டாள்.

‘ஏன் என் தீண்டலுக்கும், பார்த்திபேந்திரன் தீண்டலுக்குமிடையே வித்தியாசங்கள் ஏதேனும் இருக்கின்றனவா ? ‘ நிதானமாகக் கேட்ட சொக்கேசன் வார்த்தைகள் நஞ்சில் தோய்ந்திருக்கின்றன. இரைகண்ட வல்லூறுவைபோல நெருங்குகிறான். பூமி மெல்ல மெல்ல நழுவுகிறது. தேவயானிக்குத் தலை சுற்றுகிறது.

/தொடரும்/

—-

Na.Krishna@wanadoo.fr

Series Navigation