நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -46

This entry is part of 51 in the series 20041118_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


படமுடியா தினித்துயரம் படமுடியாதரசே

பட்டதெலாம் போதுமிந்தப் பயந்தீர்த்திப் பொழுதென்

உடலுயிரா தியவெல்லாம் நீயெடுத்துக் கொண்டுன்

உடலுயிரா தியவெல்லாம் உவந்தெனக்கே யளிப்பாய்;

– வள்ளலார்

சூரியோதயத்திற்கு இன்னும் ஐந்து நாழிகை இருக்கலாமென வைத்தியர் சபாபாதிப்படையாட்சி அபிப்ராயப்படுகிறார். நிலவு, இன்னும் காய்ந்துகொண்டிருக்கிறது. நேற்று ராத்திரி சுக்கிலபட்ஷ ஏகாதசி. ஸ்ரீரங்கம் சுவாமியைத் தரிசனம் பண்ணாமல் திருச்சினாப்பள்ளிக்குள் நுழைந்தது அசுபமாக மனதை உறுத்திக்கொண்டிருக்கிறதென்று அங்கலாய்க்கிறார். திருச்சினாப்பள்ளி தெற்கே மதுரைக்கடுத்து பெரிய பட்டணம். கண்ணில்படுகின்ற படுகைகளில் வானத்தின் விழுதுகளைப்போலத் தென்னைகள். பரவிக்கிடக்கின்ற வாழைத் தோட்டங்களில், குலை குலையாய் வாழைத்தார்கள், என்னவோ, மிச்சமிருக்கும் வைகறை இருட்டில் பருத்துச் சரிந்த மார்புகளுடன் புறப்பட்டு வந்திருக்கும் ஆயிரக்கணக்கான பூதகிகளைப்போல. அறுவடைமுடிந்த நெற்கதிர்களின் அரிகிடை தங்கரேக்குகளையொத்துக் கற்றை கற்றையாய் வயல்களில் மின்னுகின்றன. மற்றொருபுறம் சேடை கூட்டப்பட்டு நடவுக்குத் தயாராகவிருந்த வயல்களின் முகத்தில் முதலிரவுக்குக் காத்திருக்கும் பெண்களின் பூரிப்பும், எதிர்பார்ப்பும். சமயபுரத்து ஆத்தாளின் நெஞ்சில் கிடக்கும் வைரஅட்டிகை மாதிரி வளைந்தும் நெளிந்தும், வைகாசிமாதமென்பதால் ஆர்ப்பாட்டமின்றியும், அமைதியாய் சலசலக்கும் காவிரி. வைகறையில், ஆற்றில் ஸ்நானம் செய்து, கடவுளைத் தியானித்து, பக்தி சிரத்தையுடன் புறப்படும் பார்ப்பனர்கள். ஏர்கலப்பைகள், உழவுமாடுகள், அரிவாள் சகிதம் எதிர்ப்படும் விவசாய குடிகள். காவிரி, மற்றுமொரு கங்கை, கரைமுழுக்கக் கற்பகச் சோலை.

இவ்வளவு ஐஸ்வர்யங்களிருந்தும், கடந்த சில வருடங்களாகத் திருச்சினாப்பள்ளி சோபையிழந்து கிடக்கிறது. ஆடலில்லை பாடலில்லை, உற்சவங்கள் இல்லை, ஊர்வலங்கள் இல்லை, கொடியேற்றங்களில்லை, கொண்டாட்டங்களில்லை. ஊரைக் கூட்டும் தேரில்லை, உற்சாகமாய் இழுத்துவரும் சப்பறங்களில்லை, ஆடிப்பெருக்கில்லை, ஆடை அலங்காரங்களில்லை, கூடிமகிழ்தலில்லை, குடும்பம் குடும்பமாய் கூடி கூட்டாஞ்சோறும், சித்திரான்னமும் தின்று பசியாறுதலில்லை. திருமலை நாயக்கரோடு எல்லாம் முடிந்தது. மதுரை மீனாட்சியம்மன் கோயில், இராமேசுவரம் கோயில், தில்லைக்கோயிலென்று திருப்பணிகளும், காஞ்சி ஏகாம்பரநாதர் கோபுரமும், மதுரை ஆயிரங்கால் மண்டபமும் கட்டியெழுப்பிய வம்சம், நாயக்கர்வம்சம். ஆனால் அவர்கள், தளவாய், பிரதானி, மண்டலேசுவரர், இராயசம், உள்ளூர் பாைளையகாரர்கள், கர்ணம், மணியக்காரர், தலையாரி என்கிற அதிகாரிகள் ஏணியில் அவரவர் விருப்பம்போல மக்கைளைச் சுரண்ட அனுமதித்ததுதான் அழிவாக முடிந்தது.

‘ ‘திருமலை நாயக்கனுக்குப் பின்னால் பதவிக்கு வந்த முத்துவீரப்பநாயக்கன் தந்தை திருமலைநாயக்கனைவிட வீரத்தில் சிறந்தவன். இவன் ஆட்சிக்காலத்தில் மொகலாயப் பேரரசராகவிருந்த ஒளரங்கசீப் தென்னாட்டு அரசுகளின் கீழ்ப்படிதலைவேண்டித் தமது காலணிகளில் ஒன்றினை ஒருயானை மீதேற்றிப் பவனிவரச் செய்து அவ்வணிக்கு அரசர் யாவரும் வணங்குதல்வேண்டும் என்று பணிக்க அதனை அவமதித்த முத்துவீரப்பன், எமக்கு ஒரு ஜோடி செருப்புகள் வேண்டியிருக்க ஒற்றைச் செருப்பை அனுப்பியிருக்கும் உம்மன்னன் அறிவிழந்தவனோ என்று கொக்கரித்து முகம்மதிய படைகளைக் சிதறடித்துக் கொன்றதாக கதைகள் உண்டு. ஆனால் இம்முத்துவீரப்பன் ஆடம்பரம் சிற்றின்பங்ககளில் தனது உடல் நலத்தினைத் தொலைத்து சீக்கிரமே காலமானான். அவன் மகன் விசயரங்க சொக்கநாதன், பதினாறுவயதில் பட்டத்திற்கு வந்தான். வீரத்தில் தகப்பனை ஒத்திருக்காமல் போனாலும், மற்றக் குணாதிசயங்களில் தகப்பனுக்கு நிகராகவே இருந்தான். பாட்டி மங்கம்மாளிடம் வளர்ந்த முத்துவீரப்ப நாயக்கன் மகன் மிகுந்த சமயப்பற்றுடையவன். கோவில்களுக்கும் பெருந்தொகையான பூசாரிகளுக்கும் ஏராளமான நன்மைகளைச் செய்தான். அரசாங்கத்தை மதுரையிலிருந்து திருச்சிராப்பள்ளிக்குக் கொண்டுசென்றான். இவன் தகப்பன்காலத்திய தளவாய் கஸ்தூரிரங்கையன், பிரதானி வேங்கடகிருஷ்ணையன் இருவரும், இவன் பலவீனத்தைப் புரிந்துகொண்டனர்.மக்களுக்குப் பல கொடுமைகள் செய்தனர். குடிமக்களை ஏய்த்துக் கொள்ளை அடித்தனர். விசயரங்கன் ஆட்சித்திறன் அற்றவன். அரசாங்ககஜானாவைக் காலிசெய்து கோயில்களுக்கும், பல்வேறு அறக்கட்டளைகளுக்கும் செலவிட்டதோடு, ஆடம்பர வாழ்விலும் ஈடுபட்டான். அவன் ஆட்சி முழுவதும் நாட்டில் கொலை, கொள்ளை மலிந்தன. மக்கள் ஆங்காங்கே கிளர்ச்சியில் ஈடுபட்டனர். கி.பி. 1710ல் இறையிலி நிலத்துக்கு வரி விதித்ததால் எதிர்ப்பைத் தெரிவித்து ஓர் உழவன் கோபுரத்திலிருந்து பாய்ந்து உயிர்விட்டான். 1732ல் விசயரங்க சொக்கநாதன் காலமானான்.* அவனை அடுத்து கி.பி.1732முதல் அவன் மனைவி மீனாட்சியே ஆட்சிப்பொறுப்புகளை மேற்கொண்டாள். இராணி மீனாட்சியோ சுவாதீனமான அரசியாகவே நாயகத்தை ஆண்டாள். இவள் காலத்தில் மதுரை நாயக்கராட்சி தன் வலிமையை முற்றிலுமிழந்துவிட்டது….பிறகு ஆற்காடு நவாப், மராத்தியர்களென்ற கொள்ளைக்கூட்டத்திடம் சிக்குண்டு, கர்நாடகத்தின் மற்ற ராசாங்கங்களைபோலவே, திருச்சினாப்பள்ளி சீரழிந்து கிடக்கிறது. ‘ நீண்டதொரு பிரசங்கத்தை வைத்தியர் சபாபதிப் படையாட்சி மாறனிடம் நடத்திமுடித்தார்.

காவிரிக் கரையொட்டி, ஒதுக்குப்புறமாக வண்டியை நிறுத்தச் செய்து இருவரும் இறங்கிக்கொண்டார்கள். மலஜலாதி முடித்து, பல்துலக்கி, ஆற்று நீரில் குளித்து முடித்தார்கள். வண்டிக்காரன் ஏர்க்காலை உயர்த்திப்பிடித்து மாடுகளை அணைத்து, நுகத்தடித் தும்பில் பூட்ட, வைத்தியர் சபாபதி படையாட்சியும், மாறனும் பிக்பக்கமாய் ஏறி அமர்ந்துகொண்டார்கள். நகரத்தின் குறுக்காகக்கடந்து மலைக்கோட்டைக்குப் பின்புறம் அடங்கியிருந்த, வீட்டின்முன் இறங்கிக் கொண்டார்கள்.

வாசல்நடையைக் கடக்க கூடத்தில் பெண்மணியொருத்தி கட்டிலில் நார்போலப் பிராண அவஸ்தையுடன் கிடக்கிறார். அந்தப் பெண்மணியைச் சுற்றிலும் ஆணும் பெண்ணுமாக, விசனத்துடன் அமர்ந்திருந்தார்கள். அந்தக்கும்பலில் வாணியும், குமுதவல்லியையும் பிரித்து அறியமுடிகிறது. படுத்திருக்கும் பெண்மணி அருகில், அழுதழுது முகம் சிவந்து, வெற்றிலைக் கொடிபோலத் துவண்டுகிடக்கும் இளநங்கை ஆர் ? ஒருவேளை அப்படியும் இருக்குமோ ? வாணியின் முகத்தை அப்படியே கொண்டுள்ளாளே ? இவள்தான் தெய்வானையோ ? என்றவண்ணம் யோசித்தவனாய், மாறன் வைத்தியர் சபாபதிபடையாட்சியைப் பின்தொடர்த்து சென்றான். இருவரையும் பார்த்தமாத்திரத்தில், உட்கார்ந்திருந்த மனிதர்களிடத்திலேயிருந்து பெரியமனிதர் ஒருவர் இவர்களை நோக்கி எழுந்து வருகிறார்.

‘வைத்தியர் சபாபதி வாங்கோ!.. நல்ல நேரத்தில் வந்து சேர்ந்தீர்கள். அந்த அம்மாள் சரீரம் மெத்தவும் மோசமாச்சுது. உள்ளூர் வைத்தியருக்கு ஆளனுப்பிபோட்டுக் காத்திருக்கிறோம். வைகாசி மாசத்திலே சூரியோதயத்தில் நாடிபார்க்கவேணுமில்லையா ? ‘ என்றவரைப் பின் தொடர்ந்து, வைத்தியர் சபாபதி படையாட்சியும் மாறனும், படுத்திருந்த பெண்மணியண்டை நெருங்கவும், அருகிலிருந்தவர்கள் விளங்கிக் கொண்டவர்களாய், தள்ளி நின்றனர்.

வைத்தியர், கட்டிலிற் கிடந்தவர் பெண்மணி என்பதால், அவரது இடது கையினைப் பிடித்து நாடி பார்த்தார். பார்த்தவர் முகத்திலே, துக்கரேகைகள். நெருக்கமாய் அமர்ந்திருந்த பெண்கள் உணர்ந்திருக்கவேணும், மெத்தவும் விசனப்பட்டுப்போனார்கள்

வைத்தியர் குறிப்பினை முகத்தால் உணர்ந்திருந்த நாயக்கர், ‘நீண்டதூரம் வில்வண்டியிற் பயணம் செய்த அலுப்பிருக்கும், வாருங்கள் உள்ளே போகலாம். ‘ எனவழைக்க, வைத்தியரும் அவரைத் தொடர்ந்து மாறனும் சென்றர்கள்.

‘இந்தப்பிள்ளை ? ‘

‘நமக்கு மிகவும் வேண்டியவன், பெயர் மாறன். ‘

‘அப்படியா ? இந்தப்பிள்ளையாண்டானை வைத்துக்கொண்டு… ? ‘

‘வீண் கவலைகள் வேணாம். நானதற்கு உத்தரவாதம். எப்போதும்போல நீர் எம்மை நம்பலாம். ‘ என்பதாக நாயக்கருக்கு வார்த்தைபாடு கொடுத்த வைத்தியர் மாறனிடம், ‘மாறன்!…இவர் சீனுவாசநாயக்கர். விசயரங்க சொக்கநாதனிடம் கணக்கராக இருந்தவர். பிரதானி வேங்கடகிருஷ்ணனின் தில்லுமுல்லுகள் அறிந்து, உத்தியோகத்தை உதறியவர். கையிற் தொழிலிருக்க, காமாட்சி அம்மாளுக்கு ஒத்தாசையாக, பிரெஞ்சுத் தீவுக்குப் புறப்பட்டுப் போனவர், நமது தேசத்துக்கு காமாட்சி அம்மாளுடன் திரும்பவும் வந்திருக்கிறார். ‘ என நாயக்கர்மீதான வசனங்களை இரத்தினச் சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

மூவரும் உட்கூடத்து அறையொன்றிற்கு வந்திருந்தார்கள். தரையில் போட்டிருந்த பாயில் அமர்ந்தார்கள்.

வைத்தியர், முதலில் அலுப்பு தீர்வதற்கு ஏதேனும் குடியுங்கள் என்றவர், ‘ ஆரங்கே, உள்ளே பத நீர் இருக்கிறது, வார்த்துக்கொண்டுவந்து கொடுங்கள் என அதிகாரமாய்ச் சொல்ல, பெண்ணொருத்தி இரண்டு குவளைகளில் பதநீர் கொண்டு வந்தாள். மாறனும், வைத்தியரும் குடித்து முடிக்கட்டும் என்று காத்திருந்து, சீனுவாச நாயக்கர் ஆரம்பித்தார்.

‘வைத்தியரே! நாடி என்ன பேசுது ? எதையும் ஒளிக்கவேணாம். சொல்லுங்கள். ‘

‘கண்ணும் பல்லுந்தான்கறுத்து கருதுமூச்சு வாய்திறந்து

உண்ணும் வயிற்றில் சேத்துமமுமோடி மிகவேதான் நடந்தால்

பண்ணும் மருந்துபலியாது பண்பாய் சுவாசமேல்வாங்கும்

மண்ணும் விண்ணுந் தானறிய மரணமாவார் கண்டாரே.

என்பதாக யூகிமாமுனிவர் பாடுவார். கண்ணும் பல்லும் கருமையாகி, மூச்சு மூக்கின் வழியாக அல்லாமல் வாய்வழியாக மேல்நோக்கி வாங்கி உந்தியில் சிலேத்துமம் மிகுந்தால் மரணம் நிச்சயம். பகலில், காலை ஆறுமணி முதல் பத்துமணிவரை வாத நாடியும், பத்துமணியிலிருந்து பகல் இரண்டு மணிவரை பித்த நாடியும், இரண்டுமணியிலிருந்து ஆறுமணிவரை சிலேத்தும நாடியும் பேசவேணும். அவ்வாறே இரவிலும் தொடரவேணும். அதாகப்பட்டது இரவு இரண்டுமணிமுதல் காலை ஆறு மணிவரை சிலேத்தும நாடி பேசவேணும். இதில் மாற்றமேற்படும் பட்சத்தில் மரணம் ஏற்படும். ஆக, ஒளிப்பதற்கென்ன இருக்கிறது. காமாட்சி அம்மாளுக்கு மரணம் நிச்சயம். ‘

‘உண்மைதான் கடவுளெத்தனத்திலாயேயன்றி மனிதரெத்தனத்தில் என்ன இருக்கிறது ? ‘

‘நாயக்கரே!.. அந்த அம்மாள் இப்படித் திடாரென்று நோய்வாய்ப்பட்ட முகாந்திரமென்ன ? ‘

‘ஒன்றா இரண்டா ? காரணங்களுக்குக் குறைவில்லையென்றுதான் சொல்லவேணும். கைலாசத்தினைப் பிரிந்ததால் நேர்ந்த வியாகூலம், பிறகந்தக் கைலாசம் அறியாமல், தேவயானியின் ஜனனஜாதகமெழுதிய ஓலை நறுக்கினை, பெர்னார் குளோதனென்கிற வெள்ைளைகாரனிடம் கொடுத்துவிட்டானே என்கிற வியாக்கூலம். இந்த வியாக்கூலத்தோடு நீண்டதூரம், கடற்பயணம் செய்ததால் ஏற்பட்ட உடற் பலவீனத்துடன், இங்கே வந்தபிறகு நடந்திருக்கிற சம்பவங்களேதும் தமக்கு உகந்ததாக இல்லையென்கிற கஸ்தியும் சேர்ந்துகொள்ள, அந்த அம்மாள் படுக்கையில் வீழ்ந்துபோனார். ‘

‘இங்கென்ன நடந்தது ? ‘

‘நாங்கள் பிராஞ்சுத்தீவு குவர்னர் லாபூர்தொனேயை இந்த விஷயத்தில் பெரிதும் நம்பியிருந்தோம். திருச்சினாப்பள்ளி நிர்வாகத்தை மராத்தியர்களிடமிருந்து மீட்டுவிடலாமென்று நம்பினோம். பிரெஞ்சுத் தீவு குவர்னர் லாபூர்தொனே, புதுச்சேரியில் பிரான்சுவாரெமியும், அவன் மூலமாக புதுச்சேரி குவர்னர் பெண்சாதி மதாம் ழான்ன் துப்ளெக்ஸும், தேவனாம்பட்டணத்தில் துரைத்தனம் பண்ணிக்கொண்டிருக்கும் மிஸியே மோன்சோனும்(M. Monson) உதவுவார்களென்றார். இவ்விடம் வந்தால் கடவுள் சித்தம் வேறாக இருக்கிறது. ‘சென்னைப்பட்டணத்தில் துரைத்தனம் பண்ணியவன் சீமைக்குப் புறப்பட்டுப்போக, புதிதாக மிசியே மோர்ஸ்(M.Morse) என்பவனை சென்னைக்கு நியமித்திருக்கிறார்கள். அவன் என்னடாவென்றால், தனக்கு துணையாக இன்னொருவர் வேணுமென்று, தேவனாம்பட்டணத்திலிருந்த மிஸியே மோன்சோனை சின்னத்துரைத்தனத்துக்கென்று நியமித்துகொண்டான். தேவனாம்பட்டனத்திற்குப் புதிதாக மிஸியே இந்த்(M.Hind) என்பவனை நியமித்துப்போட்டார்கள். புதுச்சேரி துரைசானியோ, எங்கே அதிகமாய் பணம் பவிசுகளை பார்க்கமுடியுமோ ? அவர்களிடத்திலே சோரம்போகிற சிறுக்கி. நவாப்புகள் புதுச்சேரிகுவர்னருக்கு, வண்டிவண்டியாய் வெகுமானங்களை அனுப்பிச்சுவைப்பது நாடறிந்த சங்கதி. அவர்கள் நாயக்கர்கள் ராச்சியத்தினை அபகரிப்பதென்று ராணிமீனாட்சி காலத்திலேயே தீர்மானித்தவர்கள். பங்காருதிருமலை கூலிகொடுத்து வைத்துக்கொண்ட சூன்யம். ராணி மீனாட்சியைப் அரசு பதவியிலிருந்து துரத்துவதற்கு, துலுக்கரிடம் உதவிகேட்டு, அவர்களைச் திருச்சினாப்பள்ளி சிம்மாசனத்தில் உட்காரவைத்ததும், பிற்பாடு அவர்களைத் துரத்த மராத்தியரை அழைத்து, அவர்களிடம் ராச்சியத்தைப் பறிகொடுத்துவிட்டு ஒழிந்துபோனதும் உலகமறிந்தது. இப்போதிந்த துலுக்கர், புதுச்சேரி குவர்னர் பெண்சாதிக்கு எப்படியான வேப்பிலை அடித்தார்களோ ? அவள் நமக்குச் சாதகமாக இல்லை. நவாப் ஆசப் ஜா என்பவன், திருச்சிராப்பள்ளி மராத்தியன் முராரிராயனுக்குப் பணமும், வெகுமதியுங்கொடுத்து ஆயக்கட்டிருக்கிறான். ஆகத் திருச்சினாப்பள்ளி கோட்டை மறுபடியும் துலுக்கர் வசமாச்சுது ‘. ‘#

‘…. ‘

‘இந்தப் பெண் தேவயானி என்னடாவென்றால், தான் இந்துதேசத்துக்குப் புறப்பட்டு வந்ததே, பெர்னார் குளோதனைக் காண்பதற்கென்றும், வேறு சாம்பிராச்சிய சுகங்களெதுவும் அனுபவிப்பதற்கில்லையென்றும் சாதிக்கிறாள். பெர்னார்குளோதனை கும்பெனி அரசாங்கம் சிறையில் வைத்ததையும் பின்னை அவனைத் தீவுக்குப் பயணப்படவைக்க காரைக்கால் பட்டணதிற்கு அனுப்பி வைத்துள்ளதையும் அறியவந்ததுமுதல், ‘என் தமையனும், எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து பழகிய சனங்களும் அங்கே தீவில் இருக்கச்சே நானொருத்தி இங்கிருந்து என்ன அனுபவிக்கப்போகிறேன். என்னைக் காரைக்கால் பட்டணத்திலே கொண்டு போய் சேர்த்திடுங்கோ, நான் பெர்னாரோடு பிராஞ்சுத் தீவுக்குப் போய்ச் சேருகிறேன் என்பதாய்ப் பிதற்ற ஆரம்பித்துவிட்டாள். நானும் அந்தபடிக்குச் சம்மதித்து அவளைக் காரைக்கால் கொண்டுபோய் சேர்ப்பதாக வார்த்தைப்பாடு கொடுத்திருக்கிறேன். எல்லாம் ஈசன் செயல். கடவுள் திட்டப்படி எல்லாம் நடக்கிறது. புதுச்சேரியிலிருந்து சேதிகள் உண்டா ? தளவாய் வெங்கிடாச்சாரியின் வேறு திட்டங்கள் வைத்துள்ளானா ? மதுரைநாயக்கர் அரசுரிமை விவகாரத்தினைக் காட்டிலும், தேவயானி வேறெந்தவகையில் அவனுக்குப் பாதகமாக இருக்கிறாளென்று நினைக்கிறான் ? அறியவேணும். வைத்தியரே!, இதுவரை உம்மிடமிருந்து பெற்ற சேதிகளை வைத்துப்பார்த்தால் சில நேரங்களில் அவன் தெய்வானை விஷயத்தில் ஏதோ பந்துமித்ர குணநலத்துடனும், சில நேரங்களில் சத்ருபோலவும் நடந்துகொள்கிறான். உண்மையில் அவன் யார் ? எம்மால், காரைக்காலுக்கு இந்தப் பெண்னைப் பத்திரமாகக் கொண்டு சேர்க்கமுடியுமா ? ‘

‘உண்மையில் தளவாய் வெங்கடாச்சாரி ஆர் ? எனக்கும் குழப்பமாகத்தான் இருக்கிறது. ராஜதந்திரங்கள் அறிந்த சாணக்கியனா ? அல்லது சித்தும் யோகமும் அறிந்த இருடியா ? ‘, வைத்தியர் தனது தரப்பில் கேள்விகளைக் கேட்டு நிறுத்தவும், குழப்பமான மனத்துடனே, அண்டையிலிருந்த, மாறன் இரண்டுபேரையும் பார்க்கிறான்.

‘இந்தப் பிள்ளைக்குக் கொஞ்சம் விஷயத்தைத் தெரிவிக்கவேணும்.. நேரம் வரும்போது எல்லாவற்றையும் விளக்கிச் சொல்வதாக ஏற்கனவே கூறியிருந்தேன். நீர் உத்தரவு கொடுத்தீரென்றால் சிலதைச் சுருக்கமாகவும் சிலதை விரிவாகவும் தெரிவித்துவிட்டு, உம்முடைய கேள்விக்கு வருகிறேன். ‘

‘ சரி சரி உமது இஷ்டப்படி சொல்லும் ‘, என நாயக்கர் உத்தரவிடவும், வைத்தியர் செருமிக்கொண்டு கூற ஆரம்பித்தார்.

‘மாறா.. நீ ஏற்கனவே விசயரங்க சொக்கநாதன் இறப்பிற்குப்பிறகு, ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை அறிவாய். மறந்திருந்தால் மீண்டும் ஞாபகப் படுத்துகிறேன். கணவன் இறந்தபிறகு மீனாட்சி தன்னை ராணியாக அறிவித்துப்போட்டு, ராச்சிய பரிபாலனம் பண்ணுகிறாள். பிள்ளை இல்லாதவள் தன் வாரிசாக திருமலை நாயக்கரின் இளைய சகோதரன் குமரமுத்துவின் பேரனும் பங்காரு திருமலையின் மைந்தனுமாகிய விசயகுமாரனை சுவீகரமெடுத்துக்கொண்டு அறிவிக்கிறாள். ஆனால் பங்காருதிருமலைக்கு, ராணி மீனாட்சிய நீக்கிப்போட்டு, ராச்சியத்தினைக் அபகரிக்க எண்ணியவன், தளவாய் வெங்கடாச்சார்யாவுடன் கூட்டு சேர்ந்துகொண்டான் ‘ என்பதுவரை நீ அறிவாய். இனி நீ அறியாத பிற தகவல்களுக்கு வருகிறேன். ராணி மீனாட்சிக்கு ஆதரவாக அவளது சகோதரன் வெங்கடபெருமாள் நாயக்கர் உதவிக்கு வருகிறான். திருச்சினாப்பள்ளிக்கோட்டையைக் கைப்பற்ற நினைத்த பங்காருதிருமலையின் ஆரம்ப முயற்சி தோல்வியென்றுதான் சொல்லவேணும். ஆனாலும், இவர்களுக்குள் ஏற்பட்ட குழப்பத்தினைப் பயன்படுத்திக்கொண்டு ஆற்காடு நவாப் தன் பிள்ளை சப்தர் அலியை, தனது மருமகன் சந்தாசாகிப் துணையுடன் மதுரை, தஞ்சை அரசுகளை, நவாப் அரசாங்கத்தின் ஆணைக்குட்ப்பட்டு வரிசெலுத்தவேணுமென்று நிர்பந்திக்க அனுப்பி வைக்கிறான். திருச்சிராப்பள்ளிக் கோட்டையை முற்றுகையிடவந்த சப்தர் அலியை பங்காருதிருமலை பணங்கொடுத்து தன்பக்கம் திருப்பியபோதிலும், சப்தர் அலி தந்திரமாக மீனாட்சியையும், பங்காருதிருமலையும் பிரித்தாள சதி செய்கிறான். இவன் எண்ணத்தை ஓரளவு ஊகித்த மீனாட்சி சப்தர் அலியின் தலையீட்டினைத் தவிர்க்கிறாள். பங்காருதிருமலைக்குச் சாதகமாக நடந்து கொள்ளுமாறு சந்தாசாகிப்பிற்குச் சொல்லிவிட்டு, சப்தர் அலி திருச்சினாப்பள்ளி விவகாரத்திலிருந்து ஒதுங்கிக் கொள்கிறான். ரானி மீனாட்சி தனது நலனுக்குச் சாதகாமாக சந்தா சாகிப் நடந்துகொள்வானென்றால் ஒருகோடி ரூபாயளிப்பதாக ஒப்பந்தம் செய்துகொள்ள அவனும் குரான் மீது சத்தியம் செய்துகொடுத்தத்தாகச் சொல்லப்டுகிறது. அதற்குப்பிறகு சரியான தகவல்கள் இல்லை. கிடைத்ததெல்லாம் வதந்திகள்தான். அதிலொன்று மீனாட்சி பங்காருதிருமலையுடன் சமாதானமாகி, அவரையும், விசயகுமாரனையும் சந்தாசாகிப்பிடமிருந்து காப்பாற்றவேணுமென்கிற உத்தேசத்துடன் மதுரைக்கு அனுப்பிவைத்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் .1736ம் வருடம் திரும்பவும் திருச்சினாபள்ளிக்கு படையெடுத்துவந்த சந்தா சாகிப் ராணிமீனாட்சி சத்ருக்கள் பயமின்றி இருக்கவேணுமென்றால், அவளது எதிரிகளை நிர்மூலம் செய்யவேணுமென்கிறான். பலவீனமான நிலையிலிருந்த ரானி மீனாட்சியும் சாந்தசாகிப்பின் செயற்பாடுகளுக்கு ஒத்துப் போகிறாள். ராணிக்கு ஆதரவான கோவிந்தையா, ராவணய்யா என்பவர்கள் தலைமையில் புறப்பட்ட எண்பதினாயிரம் வீரர்களைக் கொண்ட படையொன்று மிகச் சுலபமாய்த் திண்டுக்கல்லை கைப்பற்றிய பிறகு மதுரைமீது படையெடுத்துபோகிறது. திண்டுக்கல்லில் தோற்றிருந்த பங்காரு சில பாளையக்காரர்களைத் துணைக்குச் சேர்த்துக்கொண்டு எதிர்க்க அம்மைய நாயக்கனூரில் நடந்த சண்டையிலே, மீண்டும் பங்காரு தோற்று சிவகங்கையில் ராஜாவிடம் தஞ்சம் அடைகிறான். துலுக்கர் படை மதுரையையும் கைப்பற்றுகிறது. சந்தா சாகிப்பின் சூது பிறகு தெரியவருகிறது. மீனாட்சியின் எதிரிகளை வீழ்த்துவதாகப் புறப்பட்டவன், கடைசியில் திருச்சினாபள்ளியில், மீனாட்சியையும் சிறைவைக்கிறான். சிறையில் வாடிய மீனாட்சி விஷமருந்தி உயிரை மாய்த்துக்கொண்டதாகச் சொல்லிக்கொள்ளுகிறார்கள். மீனாட்சியின் முடிவு இவ்வாறிருக்க, மராத்தியர்களைப் பங்காருதிருமலை உதவிக்கு அழைக்க, அவர்கள் சந்தா சாகிப்பை சிறைபிடித்ததோடு, திருச்சினாப்பள்ளியையும் தங்கள் வசமாக்கிகொண்டார்கள். பங்காரு திருமலையும் அன்வாருதீன் என்பவனால் கொலைசெய்யப்பட்டபிறகு, அவனது மகனும், ரானி மீனாட்சியின் சுவீகார புத்திரனுமாகிய விசயகுமாரன் தன் தகப்பனைப்போலவே சிவகங்கைக்குத் தப்பி ஓடிவிட்டான். அவனும் அவன் வழிவந்தவர்களும் சிவகங்கையில் ஒளிந்து வாழவேணும். ‘ **

‘…. ‘

‘பிறகு இந்த தளவாய் வெங்கிடாச்சாரி விஷயத்திற்கு வருவோம். பங்காருதிருமலைக்குக் கூட்டாளியாகவிருந்த இந்த மனுஷர்மீது வெகுதினங்களாக எந்தத் கபுறுமில்லை. சிலபேர் அம்மையநாயக்கனூர் போரிலேயே மோசம்போனதாகச் சொன்னார்கள், மற்றபேர், சிவகங்கையில், பங்காரு திருமலையுடன் அஞ்ஞாதவாசம் செய்து இறந்துபோட்டாரெனச் சொல்வதாகவும் கேள்வி. நாயக்கர் விஜயரங்கசொக்கநாதருக்கு அரசியல் பாத்தியதை கொண்டாடுகின்ற பெண்மகவு இருப்பதை அறிந்திருந்த தளவாய் துவக்கத்திலிருந்து எதிர்த்துவந்ததும், பங்காருதிருமலைக்கும் அவனது குடும்பத்தாருக்கும் அவர் விசுவாசமாக இருந்ததும் நாங்கள் அறிந்தததுதான். ஆனாலும், சில வருடங்களாக அவர் சம்பந்தமான சங்கதிகள் எங்களுக்கு மர்மமாய் இருந்ததென்றே சொல்லவேணும். இப்படியானதொரு சமயத்திலே, நமது நாயக்கருடைய ஆட்கள் சிவகங்கையிலிருந்து சமுசயத்துக்குரிய துறவியொருவர் அடிக்கடி புதுச்சேரி பட்டணத்திற்கு வந்துபோகிறாரென்றும், அவரது கவனம் மதுரை திருச்சினாப்பள்ளி ராஜாங்கத்தின்மீது இருப்பதாகவும் சேதி சொல்ல, அதன்பேரிலே, நான் அந்தத் துறவியண்டைபோய், அவரது உள் மனுஷர்களின் ஒருவனாக, நமது நாயக்கர் உபாயத்தின்படி சேர்ந்துகொண்டேன். நாங்கள் எதிர்பார்த்தவண்ணம் அந்தத் துறவிக்கும், பிராஞ்சு தீவுக்கும் சேர்மானமிருந்ததை அறிந்தமாத்திரத்தில் எங்கள் சந்தேகம் ஊர்ஜிதமாச்சுது.

‘ஆக உங்கள் வர்த்தமானங்களின்படி, துறவி சொக்கேசன் என்பவர்தான் தளவாய் வெங்கிடாச்சாரியோ ? ‘-மாறன்

‘ஆமாம். உன் அநுமானத்தில் தவறில்லை. துறவி சொக்கேசனும், தளவாய் வெங்கிடாச்சாரியும் ஒருவரே. அவர், இன்னும் பங்காருதிருமலையின் மகன் விசயகுமாரனுக்கோ அல்லது அவன் வாரிசுதாரர்களுக்கோ பட்ஷமாக இருக்கவேணும்.. ஆனாலும் நாயக்கர் சொல்கின்றவண்ணம், அந்த மனுஷரிடம் தளவாய் வெங்கடாச்சாரி, துறவி சொக்கேசன் அல்லாமல் மூன்றாவதாய் ஒரு நபர் இருக்கிறான். அந்த நபருக்கு இந்தப்பெண் தேவயானிமீது ஏதோ ஒருவகையில் பிரீதி இருக்கின்றது. தேவயானிக்கு எதிராக காய்கள் நகர்த்தியது வாஸ்த்துவமென்றாலும், அவனது திட்டங்களெல்லாமே அவளது சரீரத்திற்கோ, உயிருக்கோ சேதமிருக்ககூடாது என்பதாவே இருந்திருக்கின்றன. ஆம், அவன் அடி மனதில் தேவயானிமீது ஒரு தினுசான விருப்பம் நீறுபூத்த நெருப்பாக இருந்ததென்பதை அறிந்திருக்கிறேன். ஏன் ? எதற்காக ? என்பதை அந்த எம்பெருமான்தான் அறிந்திருக்கவேணும் ‘.

வைத்தியர் சொல்லிமுடித்தபோது அம்மூவர் மனத்திலும் எழுந்தகேள்வி – தளவாய் வெங்கடாச்சாரியாகவும், துறவி சொக்கேசனாகவுமாக இருக்கின்ற அம்மனிதர் உண்மையில் ஆர் ?

/தொடரும்/

# ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

* தமிழகம் -புதுவை வரலாறும் பண்பாடும் – முனைவர் சு. முல்லைவனம்

*.* History of the Nayaks of Madura – R. Sathyanatha aiyar

Series Navigation