நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 42

This entry is part of 46 in the series 20041021_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


கொன்ஊர் துஞ்சினும் யாம்துஞ் சலமே;

எமில் அயலது ஏழில் உம்பர்

மயில் அடி இலைய மாக்குரல் நொச்சி

அணிமிகுமென் கொம்பு ஊழ்த்த

மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே..

– (குறுந்தொகை -138) கொல்லன் அழிசி

இரவு மூன்றாம் சாமம், தேய்பிறைக் காலம். சங்குவண்ண நிலா, காற்றில் அலையும் பஞ்சுப் பொதிகளாய் மேகங்கள், கிழக்கில் அலைபாயும் மின்னற்கொடிகள். ஈரப்பதத்துடனான மேல்காற்றில்: தூரத்தில்தெரிந்த மாந்தோப்பிலிருந்து மாங்கனிகளின் மணம், அருகில்தெரிந்த ஆட்டுப்பட்டியின் மொச்சை, புழுதி வாசம். தட்டானும், ஈசல்களும், தங்கள் ஆயுளளவு தெரியாமல் போடுகின்ற ஆட்டம். சோம்பேறித்தனதுடன் தலையசைக்கும் மரங்கள். படபடவென்று சிறகினை அடித்து அவசரமாய்ப் பறக்கும் கூகை. கோடை மழைக்கான ஏக்கத்துடன் பூமி.

மாறன் வைத்தியர் வளவிலிருந்து வெளிப்பட்டிருந்தான். சடுதியாய் வீடுபோய்ச் சேரவேணும். வாணியைப்பார்க்க நேராததால் மனதிற் பெருங்குறை.. வைத்தியர் வளவிற்கு வந்தபொழுதெல்லாம், வாணியைச் சந்தித்திருக்கிறான். வாணியைக் காணவேணுமென்கிற சிந்தையுடனேயே அநேகவிசை வைத்தியரில்லத்திற்கு வந்திருக்கிறான். இன்றைக்கு மாத்திரம், இப்படியாச்சுது. ஆனாலின்று வாணியைப் பார்க்கவேணுமென்கிற ஆர்வத்தைக்காட்டிலும், அவளது பூர்வோத்திரத்தை அறியவேணுமென்பது பிரதானமாகவிருக்க, அதற்கென்றே வந்திருந்தான், ஆனால் வாணியிடமிருந்த பிரியத்தில், புறப்பட்டுப் போவதற்கு முன்னாலே சந்திக்காமல் போகிறதில்லை என்பதாய்த் திட்டம்பண்ணியிருந்தான். வைத்தியரிடம், இரவு வெகுநாழி வார்த்தையாடியதில் நேரம் சுறுக்காய்ப் போனது. இரண்டாஞ் சாமம் முடிந்துவிட்டிருந்தது. இந்தநேரத்தில், அவளைச் சந்திப்பது உசிதமாகப் படவில்லை.

வாணியின் பிறப்பில், இவ்வளவு மர்மங்கள் இருக்குமென்று மாறன் நினைத்தவனில்லை. பறங்கி நண்பன் பெர்னார்குளோதன், வாணியை முதன் முதலாக அவளது வீட்டிற் கண்டு, ‘தெய்வானை ‘! எனவழைத்ததும், பின்னை பிரெஞ்சுத்தீவு தெய்வானைக்கும், வில்லியனூர் வாணிக்கும், இரத்தசம்பந்தமிருக்கவேணுமென்று தன்னிடம் அவன் பேசியதையும் ஞாபகம் பண்ணினான்.. வைத்தியர் கொஞ்ச நேரத்திற்குமுன்னாலே சொன்ன சேதிகள்யாவும் பெர்னார்குளோதனின் தீர்மானத்திற்கு ஒத்துபோகின்றன.

வாணியும், தெய்வானையும் தாசி குமுதவல்லிக்கும், காமாட்சி அம்மாளுக்கும் பிறந்தவர்களென்றாலும், இருவருக்குமே தகப்பன், இரண்டாம் சொக்கநாதன் எனவழைக்கப்பட்ட மதுரை நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த மன்னன் விஜயரங்க சொக்கநாதன் நாயக்கன், என்றாகிறது. வைத்தியர் சொல்கின்ற வர்த்தமானங்களை வைத்துப் பார்க்கும்போது, வாணிக்குத் தன் தகப்பன் ஆரென்கிற உண்மை மறைக்கப்பட்டிருக்கிறது என்பதாய்க் கொண்டாலும், அவளுக்குத் தொண்டைமாநத்தம் கிராமத்திலிருந்து தன்னை பார்க்க வருகின்ற பெண்மணி, ‘காமாட்சியம்மாள் அல்ல, தன்தாய் குமுதவல்லி ‘ என்கிற உண்மை தெரிந்தே இருக்கவேணும். அப்படியிருக்கெச்சே பின்னெதற்காக என்னிடம், ‘கும்பகோணம் மகாமகத்திற்குச் சென்றிருந்த வைத்தியர், காமாட்சி அம்மாள் என்கின்ற சந்தேகப் பெண்மணியை முதன்முறையாக தனது இல்லத்திற்கு அழைத்து வந்திருந்தார் ‘ என ஆரம்பத்தில் வாணி பொய்சொல்லவேணும்.

தொண்டைமாநத்தத்திற்குச் சென்றபோது, தேவராசன் இல்லத்தில் காதில் விழுந்த உரையாடலை வரிசையாய் மனதிற் கொண்டுவந்தான்:

‘என் மகளையும், மகனையும் என்னிடமே சேர்ப்பித்துவிடுங்கள். உங்களுக்குப் புண்ணியமாய் போகட்டும் ‘, வாணியின் தாயான குமுதவல்லியின் புலம்பல்.

‘அத்தை. இன்னும் கொஞ்சநாள் பொறுக்கவேணும். வலியவரும் சீதேவியை வேணாமென்று சொல்லாதே. வெண்னெய் திரண்டுவர நேரத்துலே தாழியை உடைச்சுப் போடாதே ‘ – சொன்னவன் தேவராசன்

சிறிது நேர இடைவெளிக்குப்பிறகு, ‘இப்போது உங்கள் கூச்சலை நிறுத்தவேணும். நான் சொல்வதைக் கேட்கப்போகிறீர்களா ? இல்லையா ? ‘ -வாணி.

ஆக இவர்களின் பின்னே ஒரு கூட்டத்தின் அச்சுறுத்தல் இருக்கிறது. புதுச்சேரி பட்டணத்தில் நடக்கும் தப்பான காரியங்களில் பங்கெடுக்கும் தேவராசன், இவர்கள் விஷயத்திலும் தலைகாட்டுகிறான். ஆட்கடத்தும் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களே, இங்கும் சம்பந்தவட்டவர்களா ? அல்லது இவர்கள் வேறா ? தேவராசன் திரைக்கு வெளியே இயங்குபவன், அவன் கருவி மட்டுமே. அவனுக்குப் பின்னே திரைமறைவில் இருக்கும் கர்த்தாக்கள் அல்லது கர்த்தா ஆர் ? எதற்காக அவர்கள் குமுதவல்லியை, காமாட்சி அம்மாளாக முன் வைக்கவேணும். அப்படி முன் வைப்பதால் அவர்களுக்குள்ள செளகரியங்கள் என்ன ? சாதிக்க நினைப்பது என்ன ? பிரெஞ்சுத் தீவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ள நாயக்கர் சந்தேகித்ததுபோல, மதுரை நாயக்கர் ராச்சிய உரிமையிலிருந்து தெய்வானையை அப்புறப்படுத்த நடத்தப்படும் சதியோ ? இந்தச் சதிக்குப்பின்னே..இருப்பவர்கள் மதுரை நாயக்கர் அரசுரிமைக்குப் பாத்தியதை உள்ளவர்களோ ? தொண்டைமாநத்தத்தில் தேவராசன் இல்லத்தில் வாணி, கடைசியாய் என்னிடம், ‘இப்போதைக்குத் தயவுசெய்து புறப்படவேணும். பிறகு விளக்கமாகச் சொல்வேன். ‘ எனக்கூறியதன் அர்த்தமென்ன. ஒருவேளை வைத்தியரைச் சந்திக்காமல் வாணியைச் சந்தித்திருந்தால் இது விபரம் தெரிந்திருக்குமோ ? எனப் பலவாறாகத் தனக்குள் வினாக்களை எழுப்ப, அவை பதில்களின்றி, சிக்கலிட்டுக்கொண்டு மனதில் முடிச்சுகளாய் நிறைந்தன.

மாறன் கிச்சிலிமரத்தை நெருங்கியிருந்தான். கட்டியிருந்த குதிரையை அவிழ்க்க ஆரம்பித்தான்.

‘மாறன் நில்லுங்கள்! ‘

ஒரு பெண்குரல், வாணியின் குரல். இடப்புறமிருந்த கிச்சலிமரத்தின் பின்புறமிருந்து வந்தது. குரலைத் தொடர்ந்து இருபெண்கள், ஒருவர் பின் ஒருவராக இருட்டிலிருந்து வெளிப்பட்டார்கள். ஆச்சரியமாயிருந்தது. இந்த நேரத்தில், அவளில்லத்திற்கு வெளியே, நம்புவதற்குச் சிரமமாக இருந்தது. அப்படியும் இருக்கமுடியுமா ? குழப்பமும் அதன்பின்னே குளிர்ச்சியாய் சந்தோஷமும், மனதில் இறங்கியது.

‘வாணி!நீயா ? நான் ஏதேனும் கனவுலகில் இல்லையே ? ‘

‘இல்லை. நிஜவுலகிற்தானிருக்கின்றீர்கள். ‘

‘அதற்கில்லை. உன்னைப்பற்றிய சிந்தனையில் இருக்கின்றவேளையில், இப்படி திடாரென்று என்முன்னே வந்துநின்றால், நான் என்னவென்று நினைத்துக்கொள்கிறது ? நீங்களிருவரும் மோகினிப்பிசாசாக இருக்குமோவென்று நினைத்தேன். அது சரி இந்தப் பிள்ளைப்பூச்சியை மடியிற்கட்டிக்கொண்டு எங்கே புறப்பட்டுப்போட்டாய் ? ‘

‘என் சேடிப்பெண் கமலத்தை வம்புக்கிழுக்கவில்லையென்றால், உங்களுக்குத் தூக்கம் பிடிக்காதே ‘

‘அம்மா! கள்வர்களுக்குக் காவலர்களைக் கண்டால் எரிச்சல் வரத்தானே செய்யும் ‘-வாணி

‘ஆக.. உன் எசமானியும் நீயும், நான் கள்ளனென்று முடிவுபண்ணிப் போட்டார்கள். ‘

‘அவள் சரியாய்த்தான் சொல்லியிருக்கவேணும். பின்னே! சொல்லிக்கொள்ளாமல் இருட்டில் நழுவுகின்ற மனிதர்களை என்ன பேரிட்டு அழைப்பதாம். ‘ -வாணி

‘கள்ளனுக்குரிய தொழில் தர்மமும், உம்மிடத்தில் இல்லை. எப்படி ஜீவிதம் பண்ணப்போகிறீர் ‘ -சேடிப்பெண்

‘எனக்கு விளங்கவில்லை ? ‘

‘பொன்னும் பொருளுமிருந்தும், திருடுமெத்தனமின்றி ஒரு கள்ளன் புறப்பட்டால், பரிதாபப் படாமலிருக்க முடியுமா ?

‘நான் திருடுவதற்குத் தயார். உங்களில் ஆர் பொன் ? ஆர் பொருள் ? என்று சொல்லுங்கள். வரிசைப்படுத்தித் திருடுகிறேன் ‘

‘புத்தியிலே கொஞ்சம் விஷமிருக்கிறது. சரியான பச்சிலைக் கொடுத்து முறிக்கவேணுமம்மா! இவரிடம் ஜாக்கிரதையாய்ப் பழகுங்கள். நான் புறப்படறேன். எனக்கு நித்திரைகொள்ளணும். ‘

‘பேசாமடந்தையாக இருந்தவள் நீ! இப்போதெல்லாம் நன்கு வார்த்தையாடுகிறாய். எசமானியம்மாவின் கூண்டுக்கிளியிடம் அப்பியாசம் பண்ணியதா ? ‘ அவர்களிருவரையும் தனியேவிட்டு வளவிற்குத் திரும்ப எத்தனித்த சேடிப்பெண்ணிடம் மாறன் கேட்டான்.

‘உஸ்! மெதுவாய்ப் பேசுங்கள். அப்பா காதில் விழப்போகிறது. அநேகமாக அவர் நித்திரைக்கொண்டிருக்கமாட்டார். ஆமாம்! என்ன இது ? இப்படிச் சொல்லிக்கொள்ளாமல் புறப்பட்டுவிட்டார்களே ? அப்பாவிடம் வார்த்தையாடிவிட்டு, நீங்கள் கீழே இறங்கி வரும்வரை நான் நித்திரைகொள்ளாமல் விழித்திருப்பேனென உங்களுக்குத் தோன்றவில்லையா ? ‘

‘தோன்றாமலா ? இரவாயிற்றே எனத் தவிர்த்தேன் ? ‘

‘பொய் சொல்லாதீர்கள். உங்களிடம் நிறைய பேசவேண்டியிருக்கிறது ‘

‘எனக்குந்தான். ‘

‘குதிரையைக் கட்டிவிட்டு என் பின்னால் வாருங்கள்.. ‘ சொன்னவள், மாறன் தனது குதிரையை மரத்தில் கட்டும்வரை காத்திருந்தாள். அவன் கட்டிமுடித்ததும் மீண்டும் இருவருமாக வளவிற்குள் நுழைந்தார்கள்.

இருவரும் முன்வாசல், நடை இரண்டையும் கடந்து தாழ்வாரத்தை அடைய, விழித்துக்கொண்டு, ‘மாறன் மாறன் ‘ என கிரீச்சிட்ட கிளியைத் தனது வலக்கரத்தால் கூண்டினைத் தட்டி வாணி அடக்கினாள். கிளியும் தன் எஜமானியின் கட்டளைக்குப் பணிந்து, தலையை வளைத்துத் தோளில் நிறுத்தி மெளனமானது. வலப்புறமாய்த் தாழ்வாரத்தில் நித்திரைகொண்டிருந்த சேடிப்பெண் கமலம், ‘அம்மா! நீங்களா ‘ என்றவாளாக எழுந்து உட்கார்ந்தாள். ‘கமலம் நான்தான். நீ உறங்கு. ‘ என்ற வாணியின் குரல் அவளைச் சமாதானப் படுத்தியிருக்கவேண்டும். மீண்டும் நித்திரையில் ஆழ்ந்தாள்.

வாணியும் மாறனும் முற்றத்தைக் கடந்து பின்வாசல் வழியாக, வீட்டின் பின்புறம் பரந்து கிடந்த தோட்டத்தை அடைந்திருந்தார்கள். முருங்கை, எலுமிச்சை, மா, தென்னை என எதிர்ப்பட்டவற்றைக் கடக்க, அடர்த்தியாய் வாழைமரங்கள், அவற்றுக்கருகே பெரிய கிணறொன்று இருந்தது. கிணறொட்டி போடப்பட்டிருந்த கல்லில் இருவருமாய் அமர்ந்தார்கள். கீழ்வான மின்னல் இப்போது ஓய்ந்துவிட்டது. மேகங்கள் மெலிந்திருக்க, அமரபட்ஷ நிலவு தனித்திருக்கிறது. சிலுசிலுவென்று வீசியக் காற்றிலிருந்த ஈரலிப்பு, எங்கோ மழைபெய்திருக்கவேணுமென்று சொல்கிறது.

இருவருக்கிடையிலும் ஊமைநாடகம் உருப்பெற்றிருந்தது. கொஞ்ச நேரத்திற்கு முன்னால்வரை வாணியிடமிருந்த தைரியம் ஒளிந்துகொண்டது. மங்கை பிராயத்து பாலுணர்ச்சிகள், பெண்புறாவை வாடைக்குளிரிலிட்டு வருத்தின. ஆண்புறாவின் சாடைக்குக் காத்திராமல், பிரீதியுடன் வேகமாய் மார்பிற் சாய்ந்தாள். சில நொடிகள் அமைதியாகவிருந்தவன், இறுக அணைத்து அவள் தலையில் எச்சில் படிய முத்தமிட்டான். இவனது இச்செயலுக்காகவே காத்திருந்ததுபோல வாணி விசும்பினாள்.

‘வாணி! ‘

‘ம்.. ‘

‘என்னால் நம்ப முடியவில்லை. நீயா அழுகிறாய் ? இப்போது என்ன நேர்ந்துவிட்டது ? ‘

‘எனக்குப் பயமாயிருக்கிறது… ‘

‘பைத்தியக்காரி! எதற்கு பயம் ? ‘

‘அப்பா என்னைக் குறித்த சேதிகளைச் சொன்னாரில்லையா ? ‘

‘சொன்னார். நீ ராஜவம்சத்தைத் சேர்ந்தவளென்றும் ,உனக்கொரு சகோதரியும், சகோதரன் ஒருவனும் பிராஞ்சுத் தீவிலிருப்பதாகவும் சொன்னார் ‘

‘என் சகோதரனும், நானும் தாசி குலத்தவர்கள் என்று சொல்லவில்லையா ? ‘

‘அதனாலென்ன ? மனிதர்களை, குணத்தைமாத்திரமே பார்த்து மரியாதை செய்யவேண்டுமேயன்றி, அவர்களின் குலத்தைப் பார்த்து அல்ல. சேற்றில் முளைத்திருந்தாலும், எனக்கு நீ செந்தாமரைதான். அதுவன்றி, உன் பாட்டி பவளமல்லியும், தாயார் குமுதவல்லியும் உயர்குலத்துப் பெண்மணிகளைப் போலல்லவா வாழ்ந்திருக்கிறார்கள். உன்னை நான் வெறுத்தொதுக்குவேன் என்கிற அச்சமிருந்தால், அதனைத் தவிர்த்துவிடு. பின்னையும், அரசகுலத்துப் பெண்ணென்பதால் என்னை நீ, ஒதுக்கிவிடும் அபாயமும் இருக்கிறது. ‘

‘அந்த அபாயத்தை மனதிற் கருதியே சொல்லிக்கொள்ளாமல் புறப்பட்டார்களோ ? ‘

‘அப்படியல்ல இரவில், இரண்டு சாமத்திற்குமேல், உயர்குல அந்நியபெண்களை, ஆடவர் சந்திப்பது நியாயமல்லவே ‘ என மாறன் கூறியமாத்திரத்தில், வாணி வெடுக்கென்று அவனிடமிருந்து பிரிந்து எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.

இவன் எழுந்து அவள் பின்னே ஓடவேண்டியிருந்தது.

‘வாணி…! நில்..! ஏதேனும் தப்பாய்ச் சொல்லிவிட்டேனோ ?..ம்.. என்ன சொன்னேன் ‘உயர் குல அந்நியப்பெண்களை இரவில் சந்திப்பது நியாமல்லவென்று ‘ சொன்னேன். அடடா…. இப்போது புரிகிறது, அதற்குள் இப்படியொரு அனர்த்தமிருக்குமென எனது புத்திக்கு உறைக்கவில்லை. நில்! ‘ எட்டி, அவள் கையைப் பிடித்தவன் மறுபடியும் அழைத்துவந்தான். இருவரும் கிணற்றுக்கட்டில் இம்முறை உட்கார்ந்தார்கள். வாணி பேசாமலிருந்தாள்.

‘வாணி! வீணாய் எதையாவது கற்பிதம் செய்துகொண்டு, வருந்துவது சரியல்ல. சரி வைத்தியரிடம் கேட்கவேணுமாய் நினைத்து கேட்காத சந்தேகம் ஒன்றுண்டு, சொல்..! உன் தாய் குமுதவல்லி, எதற்காகத் தன்னைக் காமாட்சிஅம்மாள் என்று கூறித் திரியவேணும் ? ‘

‘அவ்வாறாகச் சொல்லிக்கொண்டுத் திரியவேணுமென்கிற எண்ணமேதும் அம்மாவுக்கில்லை. அவரிடம் அவ்வாறு சொல்லவேணுமாய் நிர்ப்பந்தித்திருக்கிறார்கள். அவ்வாறு சொல்லாதுபோனால், மகன் கைலாசத்திற்கும், மகள் வாணிக்கும் ஆபத்து நேருமென்று பயமுறுத்தியிருக்கிறார்கள். அதுவன்றி எனக்கு நாயக்கர் அரசுரிமையை மீட்டுத் தரவிருப்பதாகச் சொல்லி அம்மாவின் மனதைக் கரைத்திருக்கிறார்கள். இதனை அம்மா மட்டுமல்ல அந்தக் கூட்டத்தில் எடுபிடியாக இருக்கும் என் மாமன்மகன் தேவராசனும் நம்புகிறான். அவனுக்கு நான் மதுரை ராணி ஆகணுமாம், அவன் ராஜாவாகணுமாம்… ‘

‘ஆக நடப்பதெல்லாம் வைத்தியர் உட்பட உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. உன் அன்னை, ஒத்துழைக்காவிடில் அவள் பிள்ளைகள் உயிருக்கு ஆபத்தேற்படும் என்பதற்குக் காரணம் இருக்கிறது. ஆனால் இந்தக் கூட்டத்திடம் வைத்தியருக்குள்ள தொடர்பு என்ன ? எதற்காக அவர் பயப்படவேணும். ‘

‘அவர் கைலாசத்தைத் தன் சொந்தமகனாகப் பாவித்து வைத்திருந்தவர். எனக்கு ஈடாக அவன் மீதும் பாசமுள்ளவர். நாங்கள் இவர்களோடு ஒத்துழைக்காவிடில் தீவில் அவன் உயிருக்கும் ஆபத்து ஏற்படுமென மிரட்டிப் பணியவைத்துள்ளார்கள். நீங்கள் தொண்டமாநத்தம் வந்திருந்த அன்றைக்கு, அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கென்றே அப்பா அரியாங்குப்பம் சென்றிருந்தார். தேவராசன்கூட தாங்கள் தொண்டைமாநத்தம் வந்து திரும்பிய சில நாழிகைகளில் அரியாங்குப்பம் புறப்பட்டுப் போனான். ‘

‘வாஸ்த்துவம். தேவராசனை அன்றைக்கு அரியாங்குப்பம்வரைத் தொடர்ந்து சென்றேன். எதிர்பாராதவிதமாக எங்களுக்கு வேண்டிய வேறொரு நபர், அக்கூட்டத்தின் நடவடிக்கைகளை அறிவதற்காகக் கலந்துகொண்டார். அவரிடமிருந்து முழுச் சேதிகளும் தெரிந்துகொள்ள சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. ஆனாலும் ஒன்றைமட்டும் உறுதியாக என்னாற் சொல்ல முடியும். அவர்கள் உன் தாயாரைக் காமாட்சியம்மாளாக முன்வைப்பது, உன்னைத் தெய்வானையாக பிரகடனபடுத்தும் முயற்சி. அப்படியெனில் உண்மையான தெய்வானைக்கு ஆபத்து ஏற்படுத்தும் முயற்சி. மதுரை நாயக்கர் அரசுரிமைக்கென்று ஏதோ சதித்திட்டம் இருக்கவேணும். இத்திட்டம், பிரெஞ்சுத் தீவுக்குப் போவதற்குமுன்னாலே சீனுவாசநாயக்கருக்கு ஏற்பட்ட அச்சத்தை நியாயப்படுத்துகிறது. ஆனால் நாயக்கருக்குக் கொடுத்துள்ள வார்த்தைப்பாட்டிற்கு மாறாக, வைத்தியர் சபாதிபடையாட்சி, அவர்கள் நடத்தும் சதி ஆலோசனைகளிலும் கலந்துகொள்வதென்றால்.. எனக்கு வியப்பை அளிக்கிறது ‘

‘…. ‘

‘வாணி!.. ஒன்றைத் தெளிவாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். உன் தாயார் குமுதவல்லியை யோசிக்கச் சொல். உண்மையில் அந்தக் கூட்டத்திற்கு நல்லெண்ணம் இருக்குமானால், இரண்டாம் சொக்கநாத நாயக்கரின் மணப்புற*மகனான கைலாசத்திற்கு முடி சூட்டிப்பார்ப்பார்களா ? என்று கேட்கச் சொல். ‘ என்றவன் அடர்த்தியாய் இருந்த வாழைகளுக்கிடையில் அசைகின்ற ஆணுருவத்தைப் பார்த்துவிட்டு, இவளுக்குச் சைகை செய்து காண்பித்தான். பார்த்தமாத்திரத்தில் அவள் எழுந்துகொண்டாள். அங்கே நின்றிருந்த உருவமும் இதைக் கவனித்திருக்கவேணும், மெல்லப் பின்வாங்கியது. கைலாசம் ஓட ஆரம்பிக்க, இப்போது அந்த ஆள் தோட்டத்திலிருந்த தட்டியைத் திறந்துகொண்டு வேகமாய் ஓடினான். அவன்பின்னே கைலாசமும் ஓடினான். வாணியின் இதயம் வேகமாய் துடித்து, அவள் கெண்டைக்காற் சதைகள்வரை பீதியை இறக்கியிருந்தது.

/தொடரும்/

*திருமண உறவு பட்டத்துராணியன்றி வேறுபெண்களுக்குப் பிறக்கும் மகன்

Na.Krishna@wanadoo.fr

Series Navigation