நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -28

This entry is part of 50 in the series 20040715_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி

எடுத்த கருமங்கள் ஆகா – தொடுத்த

உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்

பருவத்தால் அன்றிப் பழா .

(-மூதுரை) -ஒளவையார்.

இரவு நான்காம் ஜாமத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலானா உயிர்கள் மட்டுமல்ல, இரவுகூட ஓய்வெடுக்கின்ற நேரம். ஆழமான புன்னகையை முகத்திற் கண்டதையொாத்த சுக்கிலபட்ஷ நிலவு. பிறை நிலவில் உட்காரமுயன்று ஒதுங்கிப்போகும் இலவம்பஞ்சு மேகம். இருட்டில் கறைபடிந்ததுபோல நிலவொளி திட்டுத்திட்டாய்க் கிடக்கிறது. நட்சத்திரங்கள் தைத்த வெல்வெட்டு இருட்டு அடிவானம். கோடைமழையில் குளிர்ந்திருந்தது பூமி. இரவுக்கெனப் படைக்கப்பட்ட உயிர்கள் எழுப்புகிற ‘உம் ‘ ஓசை. உற்றுக்கேட்டு ஓசையைப்பகுத்தால், இந்த உம்மிலும், ஓங்காரத்தின் உள்ளடக்கமுண்டு.

புதரிலிருந்து வெளிப்பட்டுப் பாதையில் நின்ற குள்ளநரியொன்று, நடுநிசியில் தனித்து ஒலித்த குதிரையின் குளம்படி கேட்டு மீண்டும் புதருக்குத் திரும்புகிறது. வயல் எலியொன்றை வாய்கொள்ளக் கவ்வித் திரும்பிய ஆந்தை, குதிரையுடைய கனைப்பின் அதிர்ச்சியில் இரையை நழுவவிட்டு ஏமாற்றத்துடன் பொந்திற்குத் திரும்பி எட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறது. பகல் முழுதும் காத்திருந்து, காக்கைக் கூட்டினிற் புகுந்த நாகத்திற்குக் காதில் குதிரையின் குளம்படி இடியாய் விழுந்திருக்கவேண்டும், மரத்தினடியில் சுருண்டு விழுகிறது. பாதையின் குறுக்கே தாழ்வாக இருகண்கள் தனியே நிற்பதைப்போன்றத் தோற்றம். குதிரையின் கால்கள் நெருங்க, அவை ஓடி மறைகின்றன. அது காட்டுப் பூனையாக இருக்கலாம். ஒன்றையொன்று துரத்திக்கொண்டு பரபரவென்ற ஓசையெழுப்பி ஓடும் உடும்புகள், அடுத்துச் சில நாழிகைகளில் போன இடம் தெரியவில்லை. புற்றிலிருந்து அடை அடையாய் ஈசல் பறப்பதும், தங்கள் இறக்கைகள் உதிர மண்ணில் விழுவதுமாக இருக்கின்றன. அவற்றைத் தேடி உண்பதற்காக இரட்டை நாக்குடன் அலையும் பாம்புகள், அழுங்குகள்.

இருபுறமும் உயர்ந்த பனைமரங்கள், தொடர்ச்சியாய் நிற்க, இடையில் வண்டித்தடமொத்த பாட்டை. அதிலொரு தடத்தைக் தேர்வுசெய்து, மாறனது குதிரை வில்லியனூர் திசைக்காய் ஓடிக் கொண்டிருக்கிறது. குதிரையில் நமக்கு வேண்டிய மாறன். மாறன் முதுகினை ஒட்டிக்கொண்டிருப்பவன், சன்னாசி. துபாஷ் பலராம்பிள்ளையின் நம்பிக்கைக்குரிய ஒற்றன். இரவு நேரமென்பதாலும், மாறனை ஒட்டி உட்கார்ந்திருப்பதாலும், நாம் அவனை அடையாளம் காண்பதில் சிரமம் இருக்கின்றது. ஆனால் காதுகளிரண்டிலும் இருக்கின்ற கடுக்கனும், கொத்தமல்லிக் கத்தைக் குடுமியும், கழுத்திற் கிடந்த சிவப்பு உருமாலை, முண்டாசாகவும் ஞாபகப்படுத்தினோமென்றால், இவன் கடந்த மூன்று நாட்களாக வேலாயுத முதலியாரை வேவுபார்த்துவருபவன் என்பதை நாம் அறிவோம்.

கடந்த அரைமணிநேரமாகக் குதிரையை விரட்டிக்கொண்டு வந்திருந்ததால், இனி எவரும் இந்த அகாலநேரத்திற் தங்களைத் துரத்திவர வாய்ப்பில்லை என்கின்ற முடிவுக்கு மாறன் வந்திருந்தான். குதிரையில் கடிவாளத்தினைச் சற்று இழுத்துப் பிடித்து பின்னர் பிடியைத் தளர்த்தினான். குதிரை நின்று மெதுவாக ஓடியது.

‘மாறன் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம். ? ‘ சன்னாசி.

‘வில்லியனூர்த் திசைக்காய் என்று நினைக்கிறேன். அங்கே பார்த்தாயா ? தீப்பந்தத்துடன் வேடர்கள் புற்றீசல் பிடிக்கின்றார்கள். அவர்கைளைக் கேட்போமென்றால் தெளிவான பதில் கிடைக்கும். ‘

மாறன் முடிக்கவும், வேடர்களை அவர்களை நெருங்கியிருந்தார்கள். நள்ளிரவில் குதிரையுடன், இரு மனிதர்களை எதிர்பார்க்கவில்லை என்பது அவர்கள் முகத்தில் தெரிந்தது.

‘ஆரப்பா அது ? இந்தப் பாட்டை வில்லியனூர் போகுமா ?

‘ஆமுங்க.. நேரே போனால், கள்ளுக்கடையும். அங்கிருந்து கூப்பிடு தூரத்தில் சாவடியும் வரும். ‘

‘நன்றிடாப்பா ‘ என்று, அவர்களிடம் சொல்லிக்கொண்டு, மாறனும் சன்னாசியும் தொடர்ந்து சென்றார்கள்.

‘மாறன் அபிஷேகப்பாக்கத்தில் எம்மை விட்டுவிட்டுப் போவீரா ? என் குடும்பத்தவரைப்பார்த்து மூன்று நாட்களுக்குமேலாகின்றன. நான் நாளைக்குச் சாயங்காலம் முதல்ஜாமம் முடியும் நேரத்தில் ஐயாவைப் பார்க்க வருவதாகச் சொல்லிப்போடும்.

‘வாஸ்தவம். நீர் சொல்லுவதும் ஒருவிதத்தில் நல்ல யோசனைதான். நானும் வில்லியனூரில் வைத்தியரில்லம்வரை செல்லவேணும். வாணியண்டை சிலவிபரங்களை அறியவேணும். அப்படியில்லையெனில் எனது தொண்டைமானத்தம் பயணத்திற்கு அர்த்தமில்லாமற் போய்விடும். எமது பேரிலே பெர்னார் குளோதன் அபரிதமான பிரீதிகொண்டிருக்கிறான். அவனது மனதினைச் நோகடிக்க விருப்பமில்லை. ஆனால் இப்படியான இரவில், துலுக்கப் படைகளால் ஆங்காங்கே தொந்தரை இருக்கின்ற நேரத்தில், தொடர்ந்து பயணம் செய்வது அவசியமாவெனவும் யோசிக்கவேணும். வில்லியனூர் சாவடிக் காவலரைக் கேட்டு, இரவை சாவடித் திண்ணையில் கழித்துவிட்டு, அதிகாலையில், சூரியோதயத்திற்குப் பிறகு இரண்டு மூன்று நாழிகைக்குள் புறப்பட்டோமெனில் அபிஷேகப்பாக்கம் போய்ச்சேரலாம். வழியில் வில்லியனூரில் வைத்தியரில்லத்தில் ஆகவேண்டிய காரியங்களைப் பார்த்துவிட்டுப் புதுச்சேரி போய்ச்சேருவேன். மாலை நீர் புறப்பட்டு பெர்னார்குளோதன் இல்லம் வந்துவிடும். என்ன சொல்கிறீிர் ? ‘

குதிரை இருவரையும் சுமந்துகொண்டு கள்ளுக்கடை வாசலை அடைந்திருந்தது உள்ளே எரிந்துகொண்டிருந்த விளக்கும், உரையாடல்களின் கதம்ப ஒலியும் உள்ளே மனிதர்கள் இருப்பதைச் சொன்னது.

கள்ளுக்கடையைப் பார்த்ததும், சன்னாசியின் நாக்கு ஊறியது.

‘மாறன்! நீர் சொல்வதும் ஒருவகையில் சரியே. அபிஷேப்பாக்கத்திற்கு நாளைக்குக் காத்தாலே போய்க்கொள்ளலாம். நான் சரியாகச் சாப்பிட்டு மூன்று நாட்களுக்கு மேலாகிறது. உடலசதி வேறு. கடையுள்ளே ஆட்கள் அரவம் கேட்கிறது. உள்ளே சென்று வரலாமே ?. அங்கே ஏதேனும் தீனியும் கிடைக்கலாம். ‘

‘உமக்கு இருக்கின்ற இந்தச் சபலம் வேவு பார்க்கின்ற மனிதர்களுக்கானதல்லவே. கவனமாயிரும். சரி சரி.. இந்த நேரத்தில் அங்கே என்ன கிடைக்கும். சட்டிகளையெல்லாம் துடைத்து வைத்திருப்பார்களே. போய்ப் பார்க்கலாம். இதனை நடத்துபவன் எமக்குத் தெரிந்தவன் – நொண்டிகிராமணி. ‘

சாவடி எதிரேயிருந்த பூவரச மரத்தடியில் குதிரை நிறுத்தியபோதுதான். அங்கு வேறு இரண்டு குதிரைகள் வேரில் பிணைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தான். அதிலொன்று முதல் ஜாமத்தில் அரியாங்குப்பம் ஆற்றினை ஒட்டிய வளவெதிரேக் கண்டதை ஒத்திருந்தது. அருகிற் சென்று பார்த்தான். மரத்தினடியில் அடர்ந்திருந்த இருட்டில் குதிரையினை அடையாளம் காண்பதென்பது இயலாதென்ற முடிவுக்கு வந்தான். தவிரச் சற்று முன்புவரை இல்லாத பசிமயக்கம் சன்னாசியின் பேச்சால் இவனிடமும் ஏற்பட்டிருக்கக் கண்கள் சோர்ந்திருந்தன. மாறன் முன்னே செல்ல, சன்னாசி பின்தொடர இருவருமாகக் கள்ளுக்கடையில் நுழைந்தார்கள்.

கள்ளுப்பானையிற் குனிந்துகொண்டிருந்த நொண்டிக் கிராமணி ஆள் அரவம் கேட்க வாசலைப் பார்த்தான்.

நொண்டிக்கிராமணி எனவழைக்கபடும் சுப்பு கிராமணிக்கும் பூர்வீகம் மாறனைப்போலவே முத்திரைப்பாைளையம். இவனைப் போல விவசாயக் குடும்பம் அல்ல. மரம் ஏறிக் கள்ளிறக்கும் குடும்பம். மாறனின் தகப்பனாருக்கு ‘ஒருமரத்து கள் ‘ தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். எப்போதாவது இவர்கள் வீட்டில் ஆப்பம் போட்டாலோ, சாற்சோறு என்றாலோ சுப்பு கிராமணி வீட்டிலிருந்தே, கள்ளும், சாறும் வந்துவிடும். மாங்காயென்றும், தேங்காயென்றும், அவர்கள் வீட்டிற்குச் தவறாமல் பதிலுக்கு இவர்கள் வீட்டிலிருந்து, போய்ச் சேரும். கும்பெனி அரசாங்கம், கள் வியாபாரத்தையும், சாராய வியாபாரத்தையும் புதுச்சேரி மண்ணில் தடைசெய்திருந்தபோது., மாறன் குடும்பம், தானியம் தவிசென்று கொடுத்துக் அவனதுக் குடும்பத்தை கஷ்ட ஜீவிதத்திலிருந்து காப்பாற்றி இருந்தது. கும்பெனி மறுபடியும் புதுச்சேரி மண்ணில் கள், சாராயம் விற்கலாமெனத் தமுக்கடிக்கப்போக, சுப்புகிராமணி வீட்டில் நிலைமைத் தற்சமயம் சீரடைந்துள்ளது.

‘என்னடாப்பா மாறன். இந்த அகாலவேளையில் வில்வநல்லூர் வந்த சேதியென்ன ? தாசி அபரஞ்சிதத்தைத் தேடி வந்தவனோ ? ‘

‘உமது புத்திக்கு வேறு காரணங்கள் தோன்றாதோ ? இதுபோன்ற வில்லங்கத்தனமான கதைகள் பேசுவதை நீர் எப்போதுதான் நிறுத்துவீரோ ? அது சரி இந்த நேரத்தில் காவிளக்கு ஏற்றிக்கொண்டு வியாபாரம் செய்வது கும்பெனிக்குத் தெரிந்தால் என்ன நடக்கும் தெரியுமோ ? ‘

‘ஆக்கினையும் அபராதமும் உண்டென்று அறிந்துதானிருக்கிறேன். இராத்திரி பத்துமணிக்குமேல் ஒருத்தரும் வெளியே புறப்படலாகெதென்றும், அப்படி புறப்பட்டால் அவர்களைச் சாவடியில் வைத்து தண்டனையும் அபராதமும் விதிக்கப்படுமென்றுகூடத்தான் தண்டோரா போட்டுள்ளார்கள். சித்தே முன்னே இவர்கள் வந்து கடை திறக்கவேணுமாய் சண்டித்தனம் பண்ணினால் என்னைப் போன்ற பயந்தகுடிகள் பணிந்துதானே போகவேணும். ‘

‘ஆரடா இவன் ஒப்பாரி வைக்கிறவன் ‘ அவர்களை வெளியிலே நிறுத்திப் படலைப் போடு. ‘ கலயத்தை உறிஞ்சிகொண்டிருந்தவன் நொண்டி கிராமணியைப் பார்த்துக் கூச்சலிட்டான்.

‘மாமா.. ஆரவர்கள் ? – கண்கள் செருகியநிலையில் எழுந்து நின்ற மற்றவன் இவர்கள் திசையில் கை நீட்டிவிட்டு, மீண்டும் அங்கிருந்த விசுப்பலகையில் விழுந்தான்.

‘மாறன் கொஞ்சம் இப்படிக்காய் வரவேணும்.. ‘ ?

‘ஏன் என்ன செய்தி ? ‘

‘இவர்கள் இரண்டுபேரும், அரியாங்குப்பத்தில் முன்னிரவு நடந்த கூட்டத்திற்குக் காவலிருந்தவர்களாய் இருக்கவேணும். ‘

‘அப்படியா ? நல்லவேளை குடிமயக்கம் அவர்கள் கண்ணை மறைத்திருக்கவேணும். சுப்பு!.. தட்டியின் பின்புறம் போகலாமா ? ஏதாவது மிச்சசொச்சம் இருக்கிறதா. ?

‘இல்லாமலென்ன ? கள் கொஞ்சம் அதிகமாய் புளித்திருக்கும். பக்கத்தீனியாக என் பெண்ஜாதி, எனக்கென்று கொடுத்துவிட்ட வறுத்த குரவை மீன் துண்டங்கள் உள்ளன. நீங்கள் உள்ளே போங்கள். இந்தத் தடியர்களை அனுப்பிவிட்டு வருகிறேன் ‘, என்றவன் போன வேகத்தில் திரும்பி வந்தான்.

‘ஏன் என்ன விஷயம் ? ‘

‘அவர்களிருவரும் பிணம்போலக் கிடக்கிறார்கள். இனி என்ன நடந்தாலும் அவர்கள் எழுந்திருக்கமாட்டார்கள் போலிருக்கிறது. நீங்கள் வாருங்கள். ‘

‘இந்த நேரத்தில் நீங்கள் இருவரும் எங்கே இருந்து வருகிறீர்கள் ? ‘

‘அது ரகசியம், உமக்கு அவசியமற்றது ? ‘

‘ஏன் தாசி வீட்டிற்குப் போய்வருகின்றீர்களோ ?

‘என்ன சுப்பு, உனக்கு மறுபடியும் புத்தி ஏனிப்படி போகின்றது. உன்னிடம் சொல்லவேண்டிய நேரம் வரும், சொல்கிறேன். ‘

‘இல்லையென்றால் வாணியைச் சந்தித்துவிட்டு வருகிறாயா. சாயங்காலம் தேள்க்கடிக்காக ஒருவன் வைத்தியர் சபாபதி படையாட்சியைத் தேடிக்கொண்டு போயிருக்கிறான். அவரில்லையாம். அவரது புத்ரி, வாணிதான் சிகிச்சைச் செய்து அனுப்பியிருக்கிறாள் ‘

‘அப்படியா ? ‘

‘ஆக நீ அங்கும் போகவில்லை ? ‘

‘சுப்பு, நாங்கள் முதலிற் பசிக்கு ஏதேனும் பரிகாரம் பண்ணவேணும். முடிந்தால் உதவி செய். முடியாதென்றால் சொல்லிவிடு, சாவடித் திண்ணைக்கு நாங்கள் திரும்புவோம். துண்டை விரித்துத் தூங்குவோம். ‘

‘பசி வந்திட பத்தும் பறந்திடுமெனச் சொல்லக் கேட்டிருக்கிறேன். நொண்டிக் கிராமணியும் அதில் அடக்கமென்று எவரும் சொன்னதில்லை. ‘

‘உண்மையில், இங்கு வரும்வரை எனக்குப் பசியில்லை. இவருக்காகத்தான் இங்கே நுழைந்தேன். நண்பர் நிலை எமக்குத் தெரியாது ஆனாலினிச் சற்றுத் தாமதித்தாலும், உன்னையே எடுத்து விழுங்கிவிடுவேன். காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்றால், எதையாவது எங்களுக்குக் உடனே கொடுத்தாகவேண்டும். ‘

‘வேணாண்டாப்பா. உனக்கேதும் கால் கட்டில்லை. என் நிலைமை வேறு.. என்னை நம்பி மூன்று சீவன்களிருக்குது. ஆளை விடு. புதுச்சேரி கெட்டுக் கிடக்கிறதே என்று கேட்டேன். ஆண்பிள்ளையானாலும் இந்த அகால நேரத்தில் வெளியேச் சென்று வம்பை விலைகொடுத்து வாங்குவானேன் ? ஆனானப் பட்ட கனகராய முதலியாருக்கு நேர்ந்தது மறந்து போச்சுதா. எவனோவொரு சாயபுவைக்கண்டு

பேசி வரச்சே, நாற்பது ஐம்பது குதிரைக்காரர்கள் அவரை வழிமறிச்சதும், இவர் நாவெழாமல் மூத்திரம்போய், அலங்கோலப்பட்டதும் ஊரறிஞ்ச சேதியாச்சுதே. அவரைக் காப்பாற்ற கும்பெனி இருக்குது. நீ பார்க்கும் உத்தியோகத்தால் அப்படி முடியுமா ? சரி சரி உள்ளே போங்கள் ‘..

நொண்டிக் கிராமணி, தட்டியின் பின்னாலிருந்த மற்றொரு காவிளக்கை ஏற்றினான். அங்கிருந்த பானையிலிருந்து ஆளுக்கொரு கலயம் புளித்தக் கள்ளை ஊற்றிக்கொடுத்தான். மீசை நனைய நனைய மாறனும் சன்னாசியும் அடுத்தடுத்த மிடறுகளாகக் கலையத்தை முழுவதுமாகக் குடித்து முடித்தார்கள். இடைக்கிடை ஆளுக்கொன்றாய் குரவைமீன் துண்டை முள்நீக்கி மிளகாய்ச் சாந்துடன் உள்ளே தள்ளினார்கள். புளித்தக் கள்ளுக்குப் பொருத்தமாக தூக்கலான காரம். சுகமாகவிருந்தது. இருவர் நாக்கும் மேலும் கீழுமாக உதடுகளில் விளையாடிவிட்டுக் காத்திருந்தன. இருவர் கண்களும் நொண்டிக் கிராமணித் திசைக்காய் சுழன்று நின்றன. புரிந்தவனாய் இருவரது கலயத்தையும் மறுமுறையும் நிரப்பி நீட்டினான். மூண்றாவது கலயம் கைமாறியபோது இருவருமே அவற்றைத் தவறவிட்டனர். மயங்கி விழுந்து குறட்டைவிட்டவர்களை,

கீற்றோலைகளில் கிடத்திவிட்டு, காவிளக்குகள் இரண்டையும் நொண்டிக்கிராமணி அணைத்தான். துண்டை விரித்துப் படுத்தான்.

மறுநாட்காலை சூரியன் உதித்த இருநாழிகைகளில் மாறனுக்கு விழிப்பு வந்தபோது, இருண்ட கிடங்கொன்றில் அடைபட்டுக் கிடக்கிறான்.. உத்திரத்தில் துறிஞ்சல்கள், இரண்டொரு எலிகளின் சுதந்திர நடமாட்டம். கழிவுகளின் வாடை..

இங்கே எப்படி வந்தான் ? நேற்றிரவு என்ன நடந்தது ? வலதுபுறம், சன்னாசியும் நொண்டிக்கிராமணியும் அருகருகே கிடக்கின்றார்கள். தான் காண்பது கனவோ என்று சந்தேகம் வந்தது. அவர்களைத் தொட்டு எழுப்பிப் பார்த்தான். இப்போதைக்கு நித்திரை கலைந்து எழுந்திருப்பதாகத் தெரியவில்லை.

அவர்களருகே நாமம் இட்டிருந்த ஈர்க்குச்சி வைணவன் சிகையை பிரித்து குடுமியாக்கிவிட்டு இவனையேப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனருகே, பானை வயிறும் முனகலுமாக ஒருபெண்மணி, இரண்டு சிறுவர்கள், நான்கைந்து இளைஞர்கள். வைணவன் ஏதோ வாயசைத்து சொல்ல முயன்று, சோர்வுற்று தரையில் விழுகிறான்.

உத்திரத்திலிருந்து சொட்டும் திரவத்தினைத் துடைக்கவேண்டுமென நினைத்து, கையைக் கொண்டுபோக எத்தனித்தபோது, பின்புறம் அவை பிணைக்கபட்டிருக்கிறதென்பதை உணருகிறான். தலையை உயர்த்தி மேலே பார்க்கிறான். எதையோ விழுங்கி ஊர்வதற்குமுடியாமல் ஒட்டிக்கிடக்கும் பெரியபல்லி. கண்களை மூடி மூடித் திறந்து எந்த நேரத்திலும் உம்மீது விழுந்துவைப்பேன் என மாறனை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.

‘இங்கிருந்து நாம் தப்பித்தாக வேண்டும் ‘, மாறனுக்கு இடதுபுறமிருந்து ஒருகுரல். பழகிய குரல். அவசரமாய்த் திரும்பிப் பார்க்கிறான் அங்கே, துபாஷ் பலராம்பிள்ளை.

அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

/தொடரும்/

Series Navigation