நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்-25

This entry is part of 47 in the series 20040624_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


….

பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி

முட்டை கொண்டு வற்புலம் சேரும்

சிறுநுண் எறும்பின் சில் ஒழுக்(கு)ஏய்ப்பச்

சோறுடைக் கையர் வீறுவீ(று) இயங்கும்

இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும்

மற்றும் மற்றும் வினவுவதும், தெற்றெனப்

பசிப்பிணி மருத்துவன் இல்லம்

அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே. (புறம் -143 – கிள்ளிவளவன்)

முதற்கோழி கூவியிருந்தது. ஊருக்கு மேற்காலே மன்னாதன் மகன் கோவிந்தன் நாயனத்தை ஊத ஆரம்பித்துவிட்டான். ஹேய்.. ஹேய் என்று மாடுகளை எவரோ ஓட்டிச் செல்லும் சத்தம். அறுவடைசெய்த கையோடு தாளடி உழவுக்கோ அல்லது களத்துமேட்டில் கிடக்கும் நெற்கட்டுகளின் பிணைக்காகவோ இருக்கலாம். கள்ளிறக்குவதற்காக, தீட்டிய அரிவாளும் குடுவையுமாக,. சோலை கிராமணி அதிகாலையிலேயே வெற்றிலை எச்சிலைத் துப்பிக்கொண்டு கனைப்புடன் செல்கிறார். சந்தியிலுள்ள, கிணற்று உருளையில் தாம்புக்கயிறுகள் இழுபடுகின்றன, பெண்கள் தண்ணீர் சேந்துகிறார்கள்.

பூங்காவனத்திற்கு ராத்திரி முழுக்க வலிகண்டிருந்தது.

அவள்மாமன் நடேசன் காலமேயே ரெட்டியார் பண்ணைக்குப் புறப்பட்டுப் போயிருந்தான். வாசற்புறம் கூடைபோட்டுக் கவிழ்த்து வைத்திருந்த கருஞ்சேவலின் முதற் ‘கொக்கரக்கோ ‘வைக் கேட்டமாத்திரத்திலே நித்திரை தெளிந்திருந்தாள்.

நேற்றுத் சின்னத்தாயி ‘பொழைப்புக்குப் போகவேணாமே ‘ என்று புத்தி சொல்லியிருந்தாள். அழுதாளும் பிள்ளை அவதானே பெத்தாகவேணும் என்கிற வசனம், பூங்காவனத்தின் சீவனத்துக்கும் பொருந்தும். என்ன பண்ணட்டும், கர்ப்பிணியென்றாலும் உழைச்சாகவேணும்.. வயிறு இருக்கிறது. குஞ்சும் குளவானுமாக நான்கு பிள்ளைகள். கூடவே இவளோடு பிறப்பெடுத்த தரித்திரமும் இருக்கிறது.

காவிளக்கை ஏற்றிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். அடிவயிற்றில் மீண்டும் வலி. பற்களைக் கடித்துக் கொண்டு, கைகளிரண்டையும் தரையில் ஊன்றி எழுந்தாள். பத்துநாளா வயிற்றில் கிடக்கும் சிசு பாடாய்ப் படுத்துகிறது. ஒவ்வொரு நாளும் ராத்திரியான அம்மிக்கல்லை விழுங்கியதுபோல வலி வந்திடும். காசாம்பு, கஸ்தூரி, பார்வதி அலமேலுண்ணு பெண்டுகளுக்கு குறைவில்லை, கூடிவிடுவார்கள். கிழவி சின்னத்தாயி பழம் புடவை, முத்துக்கொட்டை எண்னெய், மஞ்சப் பொடி, அறுகம்புல், வேப்பிலை, கருக்கரிவாள் சகிதம் வந்துப்போடுவாள். மள மளவென்று ஆக வேண்டிய வேலைகளைப் பார்ப்பாள். காத்திருப்பார்கள். சூழ்நிலையை இலகுவாக்க அவரவர் பிள்ளைபெத்த வயணங்களில் ஆரம்பித்து, புருஷமார்களின் படுக்கைச் சிலுமிஷங்கள்வரை விலாவாரியாகக் கதைப்பார்கள்..

நேற்று ராத்திரியும் காத்திருந்தார்கள். வயிற்றைத் தள்ளிக்கொண்டு பூங்காவனம் இருப்பதற்கு நடேசன் செய்த வித்தைகளைக் கற்பனை செய்து பேச, இவளுக்குக் கூச்சமாகத்தான் இருக்க நேர்ந்தது. வலியையும் மறந்து சிரித்திருந்தாள். எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை. வயிற்றிலிருந்து மண்ணில் விழமாட்டேனென சிசு அடம் பிடிக்கிறது.

இப்போதைக்கு வலி கொஞ்சம் குறைந்திருக்கிறது. மெள்ள எழுந்து எரவாணத்தில் செருகியிருந்த மத்தை எடுத்துக்கொண்டு, இந்தக் களேபரத்திற்கிடையிலும் நேற்று இராத்திரி புரைகுத்தி உறியில் வைத்திருந்த தயிர்க்குடத்தை மெல்ல இறக்கி, அடியில் பிரிமணையிட்டு தரையில் சாய்த்து, அருகில் தடுக்கினைப்போட்டு ஒருக்களித்து உட்க்கார்ந்தாள். உழக்குகளையெடுத்து தயிரை அவற்றில் ஊற்றிவைத்தாள். மிச்சமிருந்த தயிரில் மத்து விழுந்து ‘சலக் சலக் ‘கென்று புரண்டது.

அரைமணி நேரத்தில புறப்பட்டாகவேணும். புதுச்சேரி பார்ப்பாரத் தெருவிலும், செட்டித் தெருவிலும் சூரியன் தலைக்குமேலே வருவதற்குள்ளே குடத்திலிருக்கின்ற பண்டத்தை முடிந்தவரைக்கும் விற்றுப்போடணும். விற்று முடித்து, செம்படவர் குப்பத்திற்குச் சென்று அயளை மீன் வாங்கிவரவேணும். குடிசையிலே ஒரு மாகாணி அரிசி இல்லை, வரும் வழியிலே மூக்கனிடம் அரிசி வாங்கவேணும். குழம்பு கூட்ட செலவு வாங்கவேணும். இராத்திரி சாப்பாட்டுக்கு அயளை மீன்குழம்பு வேணுமென்று, நடேசன் நிர்த்தாட்சண்யமாகச் சொல்லிப்போட்டான். பானையில் இருந்த புளித்தகூழைக் கொஞ்சம் மோர் விட்டுக் கரைத்ததில் இன்னும் புளிப்பாகவிருந்தது. கண்ணை மூடிகொண்டு குடித்துவிட்டு எழுந்தாள். வலியைத் தூக்கி உடைப்பில் போடென்று முனகியவளாய்க் கொடியிற் கிடந்த புடவையை உருவி அவசரமாய்ச் சுற்றிக்கொண்டாள். கெட்ட வாடை அடித்தது. ‘ஏரியில் கொண்டுபோய், சனங்கள் இல்லாத நேரம்பார்த்துக் கசக்கிவரவேணும் ‘, நினைத்துக்கொண்டாள்.

மோர்க்குடத்தை வைக்கோலிட்ட கூடையில் பத்திரமாக எடுத்து வைத்தாள். சுற்றிலும் தயிருள்ள உழக்குகளை அடுக்கினாள். புடவை முந்தானையைச் சுருட்டி சும்மாடாகத் தலையிலிட்டுக், குடிசைக்கு வெளியே குடத்தைக் கொண்டுவந்து தலையில் வைக்கவும், இவளோடு புதுச்சேரிவரை சென்று மோர் கூவி விற்கும் மற்ற பெண்கள் தயாராகவிருந்தார்கள். மூன்றுகல் நடந்து புதுச்சேரிக்குவரச், சூரியன் பிராஞ்சுமார் கோட்டைக்கு மேலே திகுதிகுவெனக் காய்ந்துகொண்டிருந்தான். ஆளாளுக்கு ஒரு தெருவை எடுத்துக்கொண்டு கூவிச்சென்றார்கள். இன்றைக்குப் பூங்காவனத்திற்குக் கிடைத்தது நடுத்தெரு.

அபிஷேகப்பாக்கம், வெங்கிடபதி ரெட்டியார், சந்திரமதி தம்பதிக்கு ஸ்ரீமன் நாராயணன் கடாட்ஷத்தால், ஆண்மகவு பிறந்து, ஐந்துவருடம் முடிந்து ஆறாவது வருடம் துவங்கியிருக்கிறது.

பிறந்தது முதல் ரெட்டியாரின் வாரிசு பாற்சோறினைக் காட்டிலும், சூரணத்தினை உண்டே ஊர்கண்படும் அளவிற்கு வளர்ந்திருந்தான். வெங்கிடபதி ரெட்டியார் சீமந்த புத்திரனுக்கு விமரிசையாய்ப் பிறந்தநாட் கொண்டாடத் தீர்மானித்து, சகல ஏற்பாடுகளும் பண்ணியிருந்தார்.

வீட்டில் அதிகாலையிலேயே மேளச்சத்தம் ஒலிக்க, பீப்பீயென்று நாயனமும் சேர்ந்து கொண்டது. ரெட்டியார் காலமே சிங்கர் கோவில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து தரிசனம் பண்ணிக்கொண்டு வந்திருந்தார். உள்ளூர் மாரியம்மனுக்கு, பழனிப்பண்டாரத்திடம் சொல்லி பொங்கலிடச் செய்தார்.

சீமந்தபுத்திரனுக்கு ஸ்நானம் செய்வித்து, சிக்கெடுத்துத் தலைவாரி, பட்டுடுத்தி, தட்டார் வைத்து வீட்டில் செய்வித்த ஆபரணங்களைப் பூட்டி, ஊஞ்சலில் உட்காரவைத்துத் தம்பதிகள் அழகு பார்த்தார்கள். வெள்ளிக்கிண்ணத்தில் வைத்து நெய்கலந்த பருப்புச் சோறு ஊட்டினார்கள்.

ஏழைபாழைகளுக்குக் கூழ் ஊற்றினார்கள். பெரிய மனுஷர்களை வீட்டுக்கழைத்து நுங்கு, இளநீர், மோர், பானகம் கொடுத்துத் தாகசாந்தி செய்வித்தார்கள். மதியத்திற்குப் போஜனம் பண்ணுவித்தார்கள். கையீரம் காய்வதற்கு முன்பாகக் கொழுந்து வெற்றிலையும், களிப்பாக்கும் செரிமானத்திற்குக் கொடுத்துவிட்டார்கள். அவரவர் தகுதிக்கு வெகுமானம் செய்தார்கள். ஐயருக்கு ஜரிகைவேட்டி மேல் உத்தரீயம், உறவுமனிதர்களுக்கும், ஊர்ப் பெரியமனுஷர்களுக்கும் பட்டு சகலாத்து, பெண்டுகளுக்கு பட்டுப் புடவையென சகலமும் செய்வித்தார்கள்.

வீடு முழுக்கப் பெண்டுகள் பட்டுப் புடைவைகளிற் சலசலத்தார்கள். மல்லிகையும் சாமந்தியும் தலையிலிருந்து உதிர நடந்தார்கள். ஆண்கள் தூணிற் சாய்ந்து உட்கார்ந்து, நரம்பெடுத்து வெற்றிலைப் போட்டார்கள். முடிந்தவர்கள் வெளியிற் சென்றும், முடியாதவர்கள் சம்புடத்திலும் எச்சிற் துப்பினார்கள். வயிறு சரியில்லாத ஆண்கள் செம்புத் தண்ணீரும், அவிழ்த்த கோமணமுமாக தோட்டக்கால் பக்கம் ஒதுங்கினார்கள். விழாவெடுத்த வகையில் வீடுமுழுக்க சந்தணமும், பன்னீரும், சந்தோஷமும் நிறைந்து கிடக்கிறது.

உண்ட மயக்கத்தில் ரெட்டியாரும், அவரது தர்ம பத்தினியும், கொஞ்சம் கண்ணயர்ந்தது வாஸ்த்தவம். எழுந்திருந்தபோது பிள்ளை எங்கு போனானென்று தெரியவில்லை. கூடத்தைப் பார்த்தார்கள், வாசலுக்கு ஓடினார்கள், அறைஅறையாக அலசினார்கள். பின்கட்டில் தேடினார்கள். பயத்தோடு பின்வாசலிலிருந்த கிணற்றை எட்டிப் பார்த்தார்கள். அங்கே அண்டாக்கைளையும், தவலைகளையும் அடுப்பிலிட்ட கரிபோக துலக்கிக் கொண்டிருந்த ஆட்களைக் கேட்டார்கள் தொழுவத்தில் நின்றிருந்த ஆள்- அமாவாசையைக் கேட்டார்கள். எங்கு தேடியும் கிடைத்தானில்லை. எவரிடமும் பதிலில்லை. கண்ணுக்குள் பொத்திப்பொத்தி வளர்த்தபிள்ளை கானாமற் போயிருந்தான். எல்லாம் தலைகீழாய்ப்போனது. ஆளாளுக்கு அங்கலாய்த்தார்கள். ரெட்டியார் ஒரு பக்கம், ரெட்டியார் பெண்ஜாதி மறுபக்கமென மூர்ச்சையாகிவிழ, விசிறிய உறவுகள் கைநோவு கண்டார்கள்.

அன்றைக்குச் சாயங்காலம், ரெட்டியாருடைய ஏகவாரிசைக் கடத்திச் சென்ற அபிஷேகப்பாக்கம் குடியானவன், பிள்ளையின் கைகள் மற்றும் கழுத்திலிருந்தவற்ைறைக் கழட்டிய பின்னர், சிறுவனை புதுச்சேரி நடுத்தெருவில் ஒரு வீட்டில் விற்றதிற் கிடைத்த பணத்திற்கு, வரகும் கேழ்வரகும் வாங்கிவந்திருந்தான்.

வரதன் நேற்றைக்கு முன் தினம் திருவந்திபுரத்திலிருந்து புறப்பட்டுப் புதுச்சேரிக்கு வந்திருந்தான்.

கத்தரிவெயில் கடுமையாகத்தானிருக்கிறது. உடல் வியர்வையில் நனைவதும் வீசுகின்ற கடற்காற்றால் உலர்வதுமாகவிருக்க, மணக்க ஆரம்பித்துவிட்டது. உஷ்ணத்தினால் மூத்திரம் செவசெவவென்று போயிற்று.

வரதராஜ பெருமாள் திருக்குளத்தில் உடல்வலிதீரக் குளித்தான். குளித்து முடித்துப் படிகளில் ஏற, உடல்வெப்பம் பொங்கியபாலில் தண்ணீர் விட்டதுபோலே தணிந்திருந்தது. உடலிளுள்ள ஈரம் வடியட்டுமெனக் காத்திருந்தான். பிருஷ்டம்வரை தொங்கிய கேசத்தைப் பிடியில் அடக்கிக் குடுமியாக்கினான். வேட்டியை உதறி காற்றில் சடசடவென உலறவிட்டு இடுப்பிற் கட்டிக்கொண்டான். உத்தரீயத்தை விரித்து, எலும்புகள் தூக்கலாகத் தெரிந்த மார்பை மறைத்துக்கொண்டான். இவனுக்கு ரொம்ப இஷ்டமென்று, ஆம்பிடையாள் கோதை கொடுத்துவிட்ட புளியோதரையை வயிறு நிறையச் சாப்பிட்டுத் தீர்த்தம் குடித்தான்.

வரதன் புதுச்சேரிக்குப் புலம்பெயர்ந்துவர, இவனை விடமாட்டேனென்று பிடித்திருந்த தரித்திரமே காரணம். மகாமேருவை மத்தாகவும், வாசுகியைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடந்து அமுதமெடுக்க உதவிய நாராயணன், ஆழ்வார்களை சிலாகிக்கும் நம்ம தென்கலை வைணவனைக் கைமாத்து, கடன் என்று, பொழுதுக்கும் கஷ்ட சீவனமாய் வாழவேணுமாய்த் திட்டம்பண்ணிப்போட்டான். திருவந்திபுரம் மடத்து நிருவாகம் கைகளை விரிச்சுட்டுது. பரந்தாமனை நம்புவதைவிட பறங்கியரை நம்பினால், பூலோக ஷேமத்திற்கு விக்கினமில்லையெனத் தீர்மானித்து வரதன் புதுச்சேரிக்குப் புறப்பட்டு வந்திருக்கிறான்.

புதுச்சேரி கத்திரி வெயிலிலும் பிரகாசமாய் ஜொலிக்கிறது. பறங்கியர் சொல்தாக்களும் உள்ளூர் சிப்பாய்களும் அவ்வப்போது சாலைகளில் கைவீசி நடப்பதை அதிசயமாகப் பார்க்கிறான். வயிறு பெருத்த கனவான்களைப் பல்லக்குகளில் சுமந்தவாறு லொங்கு லொங்குவென்று ஓடும் மனித விலங்குகளைப் பார்க்கிறான். புடவைச் சிப்பங்களைக் கைவண்டியில் அடுக்கிக்கொண்டு கோட்டை திசைக்காய் இழுத்துச் செல்பவர்களைப் பார்க்கிறான். நவதானிய மூட்டைகளைச் சுமந்து செல்லும் மனிதர்களைப் பார்க்கிறான். பெரும்பாலான மனிதர்கள் காலில் கஞ்சியை வடித்துக்கொண்டவர்களாக ஓடுகிறார்கள். வயிற்றுக்காக ஓடுபவர்கள். இப்படியான உத்தியோகம் நிரந்தரமாகக் கிடைக்கும் பட்ஷத்தில் இவன் கூட ஓடுவான்.

‘ஐயரே ஊருக்குப் புதுசா ? ‘

கேட்டவனைப் பார்த்தான். அவனது உடையும் பார்வையும், கோட்டையில் நல்ல உத்தியோகத்தில் இருப்பதாய்ச் சொல்லிக்கொண்டன. அவனுக்குப் மறுமொழி சொல்ல நினைத்து ‘ஆமாம் ‘ என்பதைப்போன்று தலையை மேலும்கீழும் இருமுறை அசைத்தான்.

‘ஒரு உத்தியோகம் இருக்கிறது செய்வீரா ? அர்ச்சகர் வேலையோ, புரோகிதமோ அல்ல. வேறு வேலைகள். உமக்கு விருப்பமெனில், கோவிலொன்றுக்கு அர்ச்சகராகவும் வாய்ப்புண்டு. என்ன சொல்கிறீர் ‘

இப்படியானதொரு அதிர்ஷ்டம் தேடிவந்து கதவைத் தட்டுமென வரதன் எதிர்பார்க்கவில்லை. சந்தோஷமாய் தலையாட்டினான். கேட்பதற்குத் தயக்கமாகவிருந்தது. எனினும் கேட்டான்.

‘எங்கே வேலை ? ‘

‘பிரெஞ்சுத் தீவுக்குப் போகவேணும். ஐந்து வருட ஒப்பந்தம். ஒரு நாைளைக்குப் பத்து வராகன்வரை சம்பாத்தியம் உண்டு.. விருப்பமில்லையெனில் திரும்பவும் நமது தேசத்திற்கு வரலாம். விருப்பமெனில் அங்கேயே தங்கிக்கொள்ளலாம். உமது குடும்பத்தையும் கும்பெனி செலவில் அழைத்துக் கொள்ளலாம். சம்மதம்தானே ? ‘

‘என் தோப்பனாருக்கும், ஆம்படையாளுக்கும் சேதிசொல்லவேணும். ‘

‘அதனைக்குறித்து நீர் கவலைப் படாதேயும். நாங்கள் அதற்கு உத்தரவாதம். இப்போதைக்கு என்பின்னால் வாரும் ‘

சற்றுமுன்புவரை கண்டிருந்த விசனம் நொடியில் மறைந்து போனது. பூசாரியைத் தொடரும் ஆட்டுக்குட்டியைபோல, கனஜோராக வரதன் அவன்பின்னே சென்றான். சிப்பாய் அவனை, புதுச்சேரியின் வடக்கேயிருந்த நடுத்தெருவைச் சேர்ந்த வீடொன்றுக்கு அழைத்துச் சென்றான்.

ஒரு சாதாரண ஓட்டு வீடு. பின்புறம் சிறியதாய் ஒரு கிடங்கு. கிடங்கின் வாயிலிலிருந்த காவலாளி ஒருவன் வந்தவனை புரிந்து கொண்டு பூட்டைத் திறந்து, உள்ளே அழைத்துச் சென்றான்.

கிட்டங்கி இருட்டிக் கிடந்தது. இடையில் ஒரு மேசைபோட்டு அதில் பிரான்சுவாரெமியும், வேலாயுத முதலியாரும் உட்கார்ந்திருக்க அருகில் தேவராசன் நின்று கொண்டிருக்கிறான். அச்சிறிய கிட்டங்கி முழுக்க அடைத்துக்கொண்டு ஆண்களும், பெண்களும், சிறுவர்களுமாக குத்துக்காலிட்டக் கூட்டம். வெளுத்த முகங்கள், வற்றிய உடல்கள். துர்நாற்றம்.

அம்மனிதர்களைப் பார்த்த மாத்திரத்தில் வரதன் மெத்தவே பயந்து போனான். அவர்களில் சிலர் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஓரு சில வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொன்னார்கள்.

‘அழைத்து வந்தவன் வரதனைக் கொண்டுபோய் பிரான்சுவா ரெமியின் முன்னால் நிறுத்தினான். என்ன பேரு ? ‘

பிரான்சுவா ரெமி பேசிய தமிழை, வரதனால் சரியாக விளங்கிக்கொள்ள முடியவில்லை. குழப்பத்துடன் நின்றிருந்தான்.

‘பேர் தானே கேட்கிறான் சொல்லேன் ‘ தேவராசன் வரதனின் கன்னத்தில் பளீரென்று அறைந்தான்.

வரதனின் தோப்பனார் இதுவரை கைநீட்டி அடித்ததில்லை. வலித்தது. கண்கள் கலங்கிவிட்டன. திருவந்திபுரத்திலிருந்து, புதுச்சேரிக்குச் சுபவேலையிற்தான் புறப்படிருந்தான். சகுனங்கள்கூட நன்றாகவிருந்தன. யோசித்ததில்,. விதி அவனைத் தவறான திசையில் செலுத்துகிறது என்பது மட்டும் புரிந்தது

‘வரத தேசிகாச்சாரி ‘ என்று இவன் சொல்ல பிரான்சுவா ரெமி காதில் வாங்கியவனாகத் தெரியவில்லை.

‘இது ரொம்ப நீளம். வேண்டாம் தீவுல உம்முடைய பேரு ‘வரத்தா ‘ சரிதானே ? ‘ என்றான்.

ஏதோவொன்றில் எதனையோ எழுதி இவனிடம் கையொப்பம் வாங்கிக்கொண்டான். அருகிலிருந்த தேவராசனைக் காட்டிப் பேசினான்.

‘இவன் உமக்குக் கப்பலேறும் நாள் அன்றைக்கு இருபது வராகன் கொடுப்பான். அப்பணத்தில் நீர் அவனுக்கு ஐந்து பவுணைத் திருப்பிக் கொடுக்கவேணும். மற்றவர்களும் அந்தப்படிக்குத்தான் இசைந்துள்ளார்கள். ‘

பிரான்சுவா ரெமி, அடுத்துக் கூறியதெதுவும் வரதன் காதில் விழவில்லை. கன்னத்தைப் பிடித்துக்கொண்டு ‘நாராயணா ‘ வெனத் தரையில் உட்கார்ந்தான். இவனுக்கருகில் மோர்க்குடத்தோடு பூங்காவனமும், அபிஷேகப்பாக்கத்து வெங்கிடபதி ரெட்டியாரின் ஏகப்புத்திரனான ஐந்து வயதுச் சிறுவனும் அழுது ஓய்ந்து, உட்கார்ந்திருந்தார்கள்.

/தொடரும்/

Series Navigation