நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்-17

This entry is part of 60 in the series 20040429_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


Save yourselves from depot wallahs

it is not a service but pure deception

They take you overseas

They are not colonies but jails

– A phamphlet distributed in India (at the end of 19th century)

அடர்ந்திருந்த மரங்களுக்குட் புகுந்து ஓடினான்.

ஓட ஓட விருத்தியாய், முன்பொருமுறை மார்கழிமாசத்திலே மேற்காலே கண்ட வால்முளைத்த நட்சத்திரம் மாதிரி அடர்த்தியானமரங்கள், முட்புதர்கள், மூங்கிறபுதர்களென இவனுக்குமுன்னே ஓடிக்கொண்டிருக்கின்றன..

இப்படி ஓடுவதென்பது அவனுக்குப் புதிதல்ல. வெறும்வயிற்றோடு ஓடுவதால், பார்வைபடுமிடங்களில் பூச்சிகள் பறக்கின்றன. வியர்வையில்

நனைந்த உடல். சோர்வு தட்டுகிறது. முடிந்தவரை ஓடவேணும். பண்ணை ஆட்களிடம் பிடிபடாமல் ஓடவேணும். மூத்திரம் பெய்து முடித்த பத்தாவது நாழிகையில், கங்காணி கறுப்பன் இவனில்லாததைக் கவனித்திருப்பான். நாய்களும், பண்ணை ஆட்களும், குதிரை வீரர்களும் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்துவிட்டுக் காடுகளை நோக்கியே ஓடிவருவார்கள். இப்போதைக்கு ஓடவேணும். குறியில்லாமல் ஓடுகிறான். எங்கே ? எவ்விடத்திற்கு ? யோசிக்கும் நேரமா இது ? சாவு நெருங்கும்வரை ஓடவேணும். சித்திரைவதைகளைச் சந்திக்காமல் செத்துப்போகவேணும். இப்போதைக்கு அவனது புத்தி ஓடச் சொல்லிவற்புறுத்துகிறது. கால்கள் பின்புறம் இடிபட, தலைதெறிக்க ஓடுகிறான். பெரிய வேரொன்று, பூமியிலிருந்து நன்கு பெயர்ந்து குறுக்காக நீண்டிருக்கிறது. காத்தமுத்துமேல், அதற்கு என்ன வன்மமோ, வேகமாய்ப் பதிந்த கால்களை இடறுகிறது, அடுத்தகணம் இடப்புறம் அடர்ந்திருந்த முட்புதரில் தலைகுப்புற, விழுந்திருந்தான்.

சாவு நிர்பாக்கியமாய் சம்பவிக்கவேண்டுமென்று அவன் மனது கேழ்க்கிறது. ஆனால் அதற்கான தைரியம் காணாமலிருந்தான்..

சாவு எந்தப்படிக்கு வேண்டுமானாலும் இருக்கலாம்: விழிகள் பிதுங்க, நாக்கைத் தொங்கவிட்டு, கழுத்து புடைக்க, தாம்புக் கயிற்றில் புளியமரத்தில் ஈமொய்க்கத் தொங்கிய வீராச்சாமியும், ஒர் உச்சிவேளையில் மூன்றுமுலை மலையின் அடிவாரத்திலிருந்த நீர்ப்படுகையில் குதித்து நான்கு நாட்களுக்குப் பிறகு வெளுத்து உப்புசம்கண்டு மிதந்த கதிரேசனும், ஞாபகத்தில் வந்துபோனார்கள்..

ஏன் ?துரைத்தனம் பண்ணிய கறுப்பனை, கரும்பு வெட்டும் சூரிக்கத்தியால் சாய்த்துப்போட்டு, தப்பித்து ஓடி, பிடிப்பட்ட மரூன் மஸெரியின் முடிவுகூட ஒரு வகையிலே, தற்கொலை என்றுதான் கொள்ளவேணும்..

காத்தமுத்துக்கு எப்போது தீவுக்கு வந்தோமென்று ஞாபகமில்லை. ஆனால் வந்த வயணமும் அனுபவமும் மனதுல கல்லுல செதுக்கினமாதிரிக் கிடக்கிறது.

காற்றுமழையின் காரணமாக, துறைபிடிக்க முடியாமல் இவன் வந்த கப்பல், நாலஞ்சு நாள் தாமதிச்சு நங்கூரம் போட்டிருந்தார்கள். கப்பல்கள் பாயெடுக்கும்போதும், துறைபிடிக்கும்போதும் குண்டுகள் போடுவார்களெனக் கிராமத்தில்வைத்துக் கேட்டிருக்கிறான். புதுச்சேரியில் இவனது கப்பல் பாயெடுத்தபோது குண்டுபோட்டிருக்கலாம்.. இவனையும் மற்றவர்களையும் சரக்குக்கட்டுகளோடு ஏற்றியிருந்ததால் குண்டுபோட்டது கேட்கவில்லை.

கடல் சீர்பட்டபிறகு, புதுச்சேரியி கண்ட சலங்குமாதிரியான படகொன்றில், இவனையும் சேர்த்து, பத்துநபர்களை முன்னே தள்ளி… ‘வீத்.. வீத் ‘ (சீக்கிரம்.. சீக்கிரம்..)என்று கூச்சலிட்டுக் கொண்டுபோய் கடற்கரை ஐய்யாமாரிடம் சேர்த்துபோட்டார்கள்.

காத்தமுத்துவும் மற்றவர்களும் ஒன்றைரைமாத கடல்யாத்திரையில் ஆரோக்கியத்தைத் தொலைத்திருந்தார்கள். எலிப்புழுக்கை மிதந்த சோற்றுக்கஞ்சியைக் குடிக்காமல் பாதி நாட்கள் குலைப் பட்டினிக் கிடந்திருக்கிறான். மற்றவர்களின் நிலமையையும் அந்தப்படிக்கென்றுதான் சொல்லவேணும். கடலலைகளின் இரைச்சலும், பூதாகாரமாய் நின்றிருந்த மலைகளும், நிழலாய் அடர்ந்திருந்த மரங்களும் கொண்டிருந்த காட்டேரித்தனமான இருட்டு அவனை மிகவும் பயமுறுத்திப் போட்டதென்றே சொல்லவேணும்.

அங்கிருந்து, இராத்திரியோடு ராத்திரியாக ஒரு மாட்டுவண்டியில் இவர்களை வாரிப்போட்டுக்கொண்டு வரும்வழியில், இவனோடு வண்டியிலேற்றப்பட்ட ஒரு பெண்மணி மார்பிலும் தலையிலும் அடித்துக் கொண்டு, ‘எம்மவளைக் காணோம், எம்மவளைக் காணோம், வண்டியை நிறுத்தவேணும் சாமி.. தயவுபண்ணவேணும் சாமி என்று ஒப்பாரிவைக்கிறாள். வண்டியோட்டியும், வண்டியிலிருந்த இரண்டு கறுப்புமனிதர்களும்

நிர்ச்சிந்தையாய் இருக்கின்றார்கள். காத்தமுத்துக்கு மட்டும் மனத்திற்குள் அவளது வியாகூலம் தொற்றிக்கொள்கிறது. ஒரு கட்டத்தில் அப்பெண்மணி வண்டியினின்று குதிக்க எத்தனித்தபோது, இவந்தான் அவளைத் தடுத்தான். வண்டியோட்டி, ‘உமதுபெண் கப்பலியே இருக்கவேணும், கரைவரை வந்திருந்தால் நமது வண்டியில் வந்திருக்கவேணுமென ‘ வார்த்தைபாடு சொன்னபோதும் அவள் புலம்பல் ஓயவில்லை. வழிமுழுக்க அழுது கொண்டிருந்தாள்.

வண்டியில், நான்குகல் கிழக்காக காட்டுப் பாதையைக் கடந்து, ஒரு கொட்டடியை அடைந்தார்கள். பாகூர்ல உடையார் வீட்டுத் தொழுவத்தைவிட பெரியதாய் இருந்தக் கொட்டடி.

அர்த்தராத்திரியைக் கலைக்கின்ற வகையில் இரட்டைக்கதவுகள் ஊளையிட்டுக்கொண்டு திறந்துகொள்ள அதனுள்ளே தள்ளிப்போட்டு,

மீண்டும் ‘வீத்..வீத் ‘ என கூச்சலிடும் முரட்டு மனிதர்கள். கருப்பஞ் சோலைகளும் கோரைப்புற்களும் இறைந்துகிடந்தன. திடாரென்று லாந்தர் விளக்கொன்றினைப் பிடித்தவனின் சிவந்த கண்கள். கொட்டடி முழுக்கப் பொதிகள், சிப்பங்கள்.. இவர்களைக் கண்ட மாத்திரத்தில் பொதிகளும் சிப்பங்களும் சனங்கள் சலகருமாக, குஞ்சு குளவான்களுடன் எழுந்து உட்காருகிறார்கள். கிழிந்த ஆடைகள், அழுக்கு முகங்கள்,

பீளைவழியும் கண்கள், எச்சிலொழுகிய வாய்கள்; ஊத்தை மனிதர்களாய் இவனது தமிழினம்.

லாந்தல் பிடித்தவன் மீண்டும் இவனுக்குப் புரியாத தொரைத்தனத்தார் பாஷையில் என்னவோ சொல்கிறான். இரு கைகளைத் தட்டி என்னவோ புரியவைக்கிறான். பழைய உயிர்கள் வந்த உயிர்களைப் பார்க்கின்றன. காத்தமுத்துவும்,,பெண்மணியும், மற்றவர்களும் அவர்களை நெருங்குகிறார்கள். இனி, இரு தரப்பினரும், ஒருவர் மற்றொருவருக்குத் தாய் தகப்பன், பந்து சனங்கள், தம்பி, தமையன், உடன்பிறந்தார் என்று விளங்கிக் கொண்டான்.

இவனது விதி, கூடவே வந்திருக்கவேணும் என்று புரிந்தது. எப்படி எப்போது தூங்கிப்போனான் என்று தெரியாது. பயணக்காலமும், பயணம் செய்த வகையும், அடிச்சுப் போட்ட களைப்பில் குறட்டைவிட்டுத் தூங்கிப் போனான்.

அதிகாலையிலே காத்தமுத்துவும், பெண்மணியும் மற்றவர்களும் எழுப்பப்பட்டார்கள்.

அதற்கப்புறம் பக்கத்திலேயே, கரும்புப் பண்ணையிலே வேலையென்று அழைத்துச் செல்கிறார்கள். நாலுமுழவேட்டியை அவிழ்த்துவிட்டு அவர்கள் கொடுத்த நீலநிற நீண்ட காற்சராயைப் போட்டுக்கொண்டு பாதங்களில் துணியைச் சுற்றிக்கொண்டு, கரும்புகளை வெட்ட ஆரம்பித்தபோது, சுலபமாகத்தானிருந்தது. ஆனால் சுணங்காமல் தொடர்ந்து வெட்டவேண்டும் என்றொருவன் காட்டுக் கூச்சலிட்டபோது இடுப்பிலும், தோளிலும் விண் விண்ணென்ற வலி. நிமிர்ந்தான். முதுகில் சுளீரெனச் சாட்டையடி. வலி பொறுக்கமுடியாமல் கீழேவிழுந்தவனை, எழுந்திருக்க வைத்து, கறுப்புக் கங்காணி மீண்டும் சாட்டையைச் சொடுக்கினான். பக்கத்திலிருந்தவர்கள் எதுவுமே நடாவாததுபோல் கரும்பு வெட்டிக்கொண்டிருக்கிறார்கள். தூரத்திலிருந்த பறங்கியன் சிரிக்கிறான். கருப்பங்கழிகளை பிடித்து ஓய்ந்திருந்த இடதுகை எரிந்தது. உள்ளங்கையைப் பார்க்கிறான். கரும்பின் அடிக்கட்டைச் சோலைகளும், கணுக்களும் கிழித்ததில் தசைப் பிசிறுகளுடன் இரத்த வரிகளை இட்டிருக்கின்றன. மீண்டும் முதுகில் சுளீரென்று அடி. இம்முறை சில்லென்று ஆரம்பித்து,பிறகு உஷ்ணத்துடன் திரவம் பரவுகிறது. முதுகிலும் இரத்தமாக இருக்கலாம்

சொந்த மண்ணுல, தன்னோட கிராமத்துல, உடையார் ஆண்டை எப்போதும் இப்படி அடிச்சதில்லை. அடிக்கின்ற இடங்கள்ல சில நேரங்கள்ல வீங்கியிருக்கு. மஞ்சளை இழைச்சு, வீரம்மா பத்து போட்டா, மறுநாள் காணாமப் போயிடும். ஆனால் இங்கே சாட்டையில் அடிவாங்குவதுபோல இரண்டொரு முறைவாங்கியதாகவும் ஞாபகம்.

முதல் முறை ஒரு சித்திரையில, பதினெட்டாம் போர் தெருக்கூத்தை விடிய விடிய பார்த்துட்டு, குடிசையிலே கொஞ்சம் கூடுதலாகத் தூங்கப்போக, வீட்டெதிரே இருந்த தென்னை மரத்துல கட்டி வச்சு உடையார் அடிச்சதா ஞாபகம். இரண்டாவது முறை, மூத்த மவன் ஏகாம்பரம் சரீர சொஸ்தமிலாமல் பிராண அவஸ்தை கண்டு, மல ஜலம் படுக்கையிற் போக, உள்ளூர் வைத்தியர் ஐயா, ‘கோழி கொண்டுவந்து சுத்தியும், சோறு சுத்திப்போட்டும் கழிப்பு கழிக்கிறதென்று சொல்லி, ஒரு கவுளி வெத்திலையும் அரை பலம் பாக்கும், ஒத்தை பணமும் ‘ கொண்டுவாடான்னு சொன்னபோது, ஆபத்துக்குப் பாவமில்லைண்ணு உடையார் ஆண்டையிடம் சொல்லாம பக்கத்துப் பண்ணைக்கு, ‘அண்டை ‘ வெட்டப் போயிருந்தான்.. பொழுதுசாஞ்சதும், கூலியாகக் கிடைத்த கேழ்வரகைத் தலையிற் கட்டியிருந்த கைத்தறிதுண்டில் முடிந்துகொண்டு, வழியிலிருந்த கள்ளுக்கடையில் இரண்டு மொந்தைக் கள்ளைக் குடித்த தெம்போடு குடிசைக்குத் திரும்பினால், ‘ ‘ பெரிய ஆண்டை, உன்னை உடனே வரச்சொன்னாருன்னு ‘ ‘ வீரம்மா, புகையிலைச் சாற்றைத் துப்பியபடி சொல்கிறாள். பண்ணையார் வீட்டுக்குக் கோமணத்தோட ஓடிய அன்றைக்கும் இப்படித்தான் அடிபட்டிருக்கான்.

கண்காணாத தேசத்துல இருந்த, அவனது பெண்ஜாதி வீரம்மா ஞாபகத்திற்குவந்தாள். புதுச்சேரி வெள்ளைக்காரன்கிட்ட பஞ்சத்திற்கு விற்றிருந்த, பிள்ளைகள் ஞாபகத்திற்கு வந்தார்கள். தான் ‘படியாளாக ‘விருந்த, கம்பத்துக்காரர் உடையார் ஞாபகத்திற்கு வந்தார். அவர் சகதர்மிணி மனோரஞ்சிதம் அம்மாள் ஞாபகத்திற்குவந்தாள். கடைசியாக சேரியின் கோடியிலிருக்கும் சிவந்த முகமும், பெரிய கண்களும், தலையில் பத்துத்தலை நாகத்தை குடையாகவும் கொண்ட, மஞ்சள் துணியை உடலின் குறுக்காகப் போட்டிருந்த மாரியாத்தாள் ஞாபகத்திற்கு வந்தாள். திரும்பவும் அவர்களையெல்லாம் பார்ப்போமா ? என்று நினைத்து அழுதான். அழுகிறான்.. .

‘தீீவில் சாதியில்லை, எஜமான், பண்ணையாள்னு பாகுபாடு கிடையாது. இந்த ஊர்லதான் வேதத்துல விழுந்தவங்ககூட வித்தியாசங் காட்டறாங்க. அங்கபோனா எல்லோரும் சமமாம், வயிற்றுக்குச் சாப்பாடு, கட்டிக்கத் துணி எல்லாத்தையும் குடுத்து கவுர்தையாய் நடத்தறாங்களாம் ‘, தொரைமாருங்கக் கிட்ட சேவகம் பண்ணும் தேவராசன் சொன்னா சத்தியவாக்காதான் இருக்கும்னு மனசு சொல்லுது. கூரைவாரையில் ஒட்டியிருந்த கெவுளி ‘நச் நச் ‘ன்னு நாக்கை அண்ணத்திற் தட்டி ஆமாம் போட்டுச்சுது..

ஆனால் வீரம்மாவுக்கு விருப்பமில்லை. அவள் யோசனையைக் கேட்டு, கூழோ கஞ்சியோ ஊத்தறதைக் குடிச்சிட்டு தொழுவ சாணியும், ஏரும் கலப்பையுமா அவனுடைய முப்பாட்டன் வழியில் உடையார் ஆண்டை காலில் விழுந்து கிடந்திருக்கலாம். ஆடிமாசத்துல உள்ளூர் மாரியம்மனுக்குக் கூழு, புதுச்சேரி மாசிமகம், மயிலத்துல பங்குனி உத்திரம்னு வருஷம் ஓடியிருக்கும். வந்திருக்க வேண்டாம். வரும்படியான சந்தர்ப்பம் ஏற்பட்டுப்போச்சுது.

காத்தமுத்துக்கு பூர்வீகம், புதுச்சேரிக்கிட்ட பத்து பதினைஞ்சு கல் தள்ளியுள்ள பாகூர். தலைமுறை தலைமுறையா உடையார் வீீட்டுல சேவகம்.

வெள்ளி முளைக்கும் வேளையில், மற்ற சேரிவாசிகளைப் போலவே புருஷனும் பொண்டாட்டியும் கம்பத்து வேலைக்கு வந்தாகணும். காத்தமுத்து தும்பை அவிழ்த்து மாடுகளை இடம்மாற்றிக் கட்டிவிட்டு, உடையார் வீட்டு நஞ்செய்க்கோ புஞ்செய்க்கோ காத்திருக்கின்ற வேலைக்குப் பேகவேணும். பெண்ஜாதி வீரம்மா, சாணி நிலைகளைக் கூடையில் வாரிக்கொண்டுபோய், குப்பையில் சேர்த்துவிட்டு, மாட்டுமூத்திரமும், சாணமும் கலந்த புழுதியைப் பெருக்க ஆரம்பித்து விடுவாள். நெய் மணக்கச் சோறும் கறியுமா, போஜனம் முடித்த வாழை இலைகளைப் பின்வாசல் வழியாக வெளியே எறிந்து ஓய்வெடுக்கும் நேரங்களில், உடையார் சம்சாரம் மனோரஞ்சிதம் அம்மாளுக்கு, வீரம்மா ஞாபகம் வந்தால் குடத்தில் எஞ்சியிருக்கும் கம்பங் கூழையோ, கேழ்வரகுக் கூழையோ காந்தலுடன் கொண்டுவந்து, பனைமட்டையில் ஊற்றுவாள். மிச்சமிருப்பதை காத்தமுத்துக்கான பல்லாவில் ஊற்ற, வீரம்மாள் ஓட்டமும் நடையுமாக தலைச்சும்மாடில் கொண்டுவந்து, இவன் வரப்பில் உட்கார்ந்து கொண்டு பசியாறும் அழகை, கட்டெறும்புக் கடிகளுடன் பக்கத்திலிருந்து ரசிப்பாள்.

பால் பிடிக்காத கதிர்மாதிரி காத்தமுத்து வெளுக்க ஆரம்பிச்சான். வழக்கம்போல உள்ளூர் வைத்தியர், வேப்பிலையால மந்திரிச்சுட்டு, விளக்கு வச்சுப் பார்த்ததில, ‘உருமத்துல கன்னிமார் அறைஞ்சிருக்கிறா, பொங்கவச்சி கழிப்பு எடுக்கணும், வெடைகோழி காவு கொடுக்கவேணும். ‘.என்று சொல்லிப்போட்டு தட்சணை கேட்கிறார்.

காத்தமுத்துவ அறைஞ்சிருப்பது, கன்னிமார் சாமி இல்லை மனோரஞ்சிதம் சாமின்னு வீரம்மாவுக்குந் தெரியும், சேரிக்குந் தெரியும், உள்ளூர் சாமியாடி வைத்தியனுக்குந் தெரியும். அவன் பிழைக்க வேணாமா ?

மனோரஞ்சிதம்அம்மாளுடன் காத்தமுத்து சந்தைக்கும், புதுச்சேரி, கூடலூர், வில்லியனூரென அவள் போகவேண்டுமென்று நினைக்கின்ற ஊர்களுக்கும் வில் வண்டியைக் கட்டிக் கொண்டு போய்வருபவன் என்பது ஊரறிந்த சேதி. வண்டியை வழியில் நிறுத்தி பசியாற உட்கார்ந்த வேளைகளில், அந்த அம்மாள், காத்தமுத்துவை அழைத்துச் சோற்றுருண்டைகளை உருட்டிப் போட்டு உரச ஆரம்பித்தாள். அவளுக்கு நெய்ச்சோறு கண்ட உடம்பு.. இருட்டு நேரங்களில் ஓடைவெளி, வைக்கோல் போர், மாட்டுத் தொழுவம் எனஇருவரும் ஒதுங்கியது போக, உடையார் இல்லாத நேரங்களில் சகல சம்பிரமத்துடன் எதிர்கொண்டு, கூடத்தில் அழைத்து பாயையும் விரிப்பாள். மனோரஞ்சிதம் அம்மாள் உடலுக்கு இட்டதைவிட வயிற்றுக்கு இட்டது ருசியாகவிருக்க, காத்தமுத்து வயிற்றுப் பசி தீர்ந்த பிறகாலே, மனோரஞ்சிதம் உடலைக் கூடுதலாவே மேய ஆரம்பித்தான்.

இந்த விவகாரம் சேரியில் புகைய ஆரம்பிக்க, வீரம்மாளுக்குப் பீதி கண்டது.

‘வேணாம் சாமி.. நமக்கு ஏன் பெரிய இடத்துப் பொல்லாப்பு. அவ ஏதோ குண்டி கொழுத்து அலையறான்னா, நீயும் கார்த்திகை மாசத்து நாய்மாதிரி நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு போற.. நாைளைக்கு அந்தாளுக்குச் தெரிஞ்சா வகுந்துடுவான். பெரிய குடும்பத்துக்காரனெல்லாம் ஒண்ணா சேந்துடுவாங்க. புதுச்சேரி தொரமாருங்க கோன்சேல் ஆக்கினை வயணம், சனங்கள் பார்க்க தூக்கில் போடுவார்கள். நான் ரெண்டு புள்ளைகைளை வச்சிட்டு என்ன செய்வேன். வேணும்னா நாம்ப புதுச்சேரிக்குப்போய், தொரைமாருங்கக் கிட்டச் சேர்ந்து பொழைச்சிகலாம்யா ‘…

வீரம்மாள் புலம்பலில் நியாயம் இருந்தது. ஆனாலும், தினைச் சோறும், புளிக்குழம்பும், மனோரஞ்சிதம் அம்மாளின் மீசைமுளைத்த கருஞ்சிவப்பு உதடுகளும், வீரம்மாளுக்கில்லாத மார்பும், பெரிய இடுப்பும் அவன் மனதிற் பாரதக் கூத்தில் பார்த்த, சந்தனு மகாராஜா, செம்படவப் பெண்ணிடம் கொண்டிருந்த பிரேமையை ஏற்படுத்தலாச்சுது..

இந்தக் கூத்தெல்லாம் ஒரு பங்குனி மாசத்திலே முடிவுக்கு வந்தததென்று சொல்லவேணும்.

பக்கத்து ஊருலே அங்காளம்மன் திருவிழா. அன்றைக்குப் பார்வதி, வல்லாள கண்டிக்குப் பிரசவம் பார்க்கிறேனென்று, காளியா அவதாரமெடுத்து வல்லாள கண்டியின் வயிற்றைக் கிழித்து அரக்கர்குல வாரிசைக் கொன்று, குடலைப் பிடுங்கி மாலையாகப் போட்டுக்கொண்டு முறமெடுத்து ஆடிவருவருவாள். கிராமவாசிகள், காளியாகவும், காட்டேரிகளாவும் பம்பைக்கும், பறைக்கும் உடன் ஆடிவருவார்கள். உடையாருடைய கிழக்குவெளிக் கார்த்திகைசம்பா நெல் அறுவடைமுடிந்து கட்டுகளாகக் களத்துமேட்டில் கிடக்கிறது.

‘கோட்டை அழிப்பைப் பார்த்துட்டுச் சடுதியிற் திரும்பலாம் ‘ என்ற எண்ணத்திற் கிளம்பியவனை, தோட்டக்கால் பக்கம் தடுத்து நிறுத்தியவள், மனோரஞ்சிதம் அம்மாளின் எடுபிடி, அம்புஜம். ‘அம்மா வரச்சொன்னாங்க ‘ என்று ஒரு வார்த்தையில் ஆக்ஞை பண்ணிப்போட்டு, மறைந்து போனாள்..

மனோரஞ்சிதம் அம்மாளைத் தேடிப்போனவனுக்கு, உடையார் வாங்கிவந்திருந்த காரைக்கால் அல்வாவும், அவள் கைப்படச் செய்த எண்ணை பணியாரமும் கிடைத்தது. ஆசைநாயகன் தின்று முடிக்கவேண்டுமென காத்திருந்ததுபோல, மனோரஞ்சிதம் அவசரப்பட்டாள். இவனது எண்ணமெல்லாம் முறமெடுத்து ஆடும் காளிமீதும், களத்துமேட்டில் உள்ள கட்டுப்போரிலும் கிடந்தது. ஆர்வமில்லாமலே தழுவினான். சில நாழிகைகள் கடந்திருக்கும். இவர்கள் சேர்ந்திருந்த அறையின் கதவு, எட்டி உதைக்கப்பட, படாரென்று திறந்துகொள்கிறது. நிலைப்படியை அடைத்தவாறு வேட்டியை மடித்துக்கொண்டு உடையார்.

‘ எச்சில் நாயே.. ‘ என்பதைத் தொடந்து என்னென்னவோ வசவுகள்.. அவரைப் பிடித்துக் கீழே தள்ளிவிட்டு ஓடியவன்.. புதுச்சேரியில் விடிவதற்கு ஒரு சாமமிருக்கையில், சாவடித் தெருவிலிருந்த தேவராசன் இல்லத்தைக் கண்டுபிடித்துக் காலில் விழுந்தான்.

நடந்த வர்த்தமானங்களை முழுவதுமாகத் தேவராசனிடம் தெரிவித்து, ‘அண்ணே.. நான் எங்கனா கண்காணாத தேசத்துக்குப் போகவேணும். நீர் தயவுபண்ணித் தீரவேண்டும் ‘ என்று மிகுதியும் வருந்திக்கொண்டு சொன்ன விதத்திலே, தேவராசன் அனுகூலம் செய்வானென்று காத்தமுத்து மெத்தவும் நம்பிக்கைவைத்தான்.

‘ நாளைக் காலமே.. பாகூர் உடையார் புதுச்சேரியிலதான் நிற்பார். அவருக்கிங்கு பெத்ரோ கனகராய முதலியார், ஆனந்தரங்கப்பிள்ளை, சுங்கு சேஷாசல செட்டியென இன்னும்பல வேண்டப்பட்ட பெரிய மனுஷர்கள் உண்டு.. உன்னை ஏதாவொரு கோட்டைவாயில்ல தூக்கிலிட்டாலும் ஆச்சரியமில்லை. இந்த இக்கட்டுலேயிருந்து தப்பிக்கவேண்டுமென்றால், அடுத்தகிழமை கப்பல் ஏறவேணும். ஆனால் அடுத்த வாரக் கப்பலுக்கு ஆட்கள் இருக்கிறாங்க. உன்னை ஏத்த முடியுமென்று நான் நம்பவில்லை. ‘

‘அப்படிச் சொல்லவேணாம் சாமி. காலத்துக்கும் உனக்கு அடிமையாக் கிடப்பேன். எப்பாடுபட்டாவது ஏத்திடவேணும். ‘

‘நீ ஒரு மாசத்திற்கு முன்னே சொன்னால் ஒரு பிரயாசையுமில்லை. இப்போது எனக்கு ரொம்ப பிரயாசை இருக்கிறது. உனக்குக் கிடைக்கும் இருபது வராகனில் என்பங்காகப் பத்து வராகன் கணக்குத் தீர்த்தால், உன்னை மஸ்கரேஞ்ஞுக்கு (Mascareignes) போகின்றக் கப்பலில் ஏற்பாடு பண்ணலாம் ‘

‘நீங்க பிரயாசைப்பட நன்றி நான் மறக்கிறதில்லை. அதறிந்து நடந்து கொள்வேன் ‘ என்று உபசாரமாய்க் காத்தமுத்து சொல்லிப்போட அன்றிரவே ஒரு துரைமார் வீட்டுல கொண்டுபோய் தேவராசன் சேர்த்தான். அங்கு ஒருவாரம் இவனை வேறு சிலரோடு அடைத்துவைத்து, ஒரு நாள் ராத்திரி, இரண்டு சாமத்திற்குப் பிறகு, சலங்கில் இவர்களை ஏற்றிக்கொண்டுபோய், புடவைக் கட்டுகள் ஏற்றின கப்பலில் அடைத்து, அங்கிருந்து மாஹே சென்று மிளகு ஏத்திக்கொண்டு சீமைக்குச் செல்லும் வழியில், இவர்களைப் பிரெஞ்சுத் தீவில் இறக்கிச் சென்றார்கள்.

இங்கே, வந்ததிலிருந்து காலையிலிருந்து மாலைவரை நின்றால், உட்கார்ந்தால், வேலையில் சுணக்கமென்றால் முதுகில் சுளீர் சுளீரென சாட்டை அடிகள் விழ அவற்றைத் தாங்குவதற்கு இனியும் அவனுடலிற்குத் தெம்பில்லை. ஒரு முறை உடையார் உழவுமாடுகளை, பக்கத்துப் பண்ணை நைனார், விளைச்சலை நாசம்பண்ணிப்போட்டதாகக் பிணையில்கட்டி அடிக்க, அவரைக் காத்தமுத்து தூஷணமாகப் பேசிபோட்டான். உடையார், நைனாரிடம் இவன் சார்பில், சமாதான வார்த்தை சொல்லப்போச்சுது..

இவனருகில் கரும்பு வெட்டிக்கொண்டிருந்த மற்ற ஆட்களுக்குச் சாட்டை அடிகள் பழகியிருந்தன. அவர்கள் வேக வேகமாகக் கருமினைக் வெட்டிக்கொண்டிருக்கிறார்கள். இவனுக்கு இடுப்பில் முள் குத்துவதுபோல வலியெடுக்கத் தொடங்கி,, முதுகுத்தண்டில் சிவ்வென்று மேல் நோக்கி நகர்ந்து முதுகு முழுக்கப் பரவியிருந்தது. உட்கார்ந்து விட்டான். பார்த்துவிட்ட கறுப்பன் – கங்காணி ஓடிவந்தான்.

சாட்டையைச் சுளீரென சொடுக்கினான். கயிற்றில் நுணியில் இறுக்கியிருந்த தோற் பின்னல் இவனது முதுகுப்பரப்பில் முடிந்தவரை ஓடி மீண்டது. சுருண்டுவிழுந்தான்.

‘ஏய் மலபார்.. மற்றவர்கள் ஒரு நாள் செய்யும் வேலைக்கு நீ இரண்டு நாள் எடுத்துக் கொள்ளுகிறாய், இப்படியே போனால். இந்தவாரத்திற்கு கூலி கிடையாது. தவிர நீ பட்டினி கிடந்து சாகவேண்டியதுத்தான் ‘.

கறுப்பன் கங்காணிக்கு, தமிழர்களைப் பறங்கியர்களைப் போலவே மலபார்கள் என்றே அழைத்துப் பழகியிருந்தான். காத்தமுத்துக்கு அவன்பாத்தாளை கேவலபடுத்திப் பேசவேண்டும் போல இருந்தது. முணுமுணுத்தான்.

‘என்ன யோசனை ? நான் மறுபடியும் வந்து பார்க்கும்போது இந்தப் பகுதி முழுவதையும் நீ வெட்டியிருக்கவேணும் ‘. வளர்ந்து வீழ்ந்துக்கிடந்த கரும்புகளைக் காட்டிவிட்டு ஓடினான்.

அவன் ஓடுவது, எதற்காகவென்று காத்தமுத்து அறிவான். மற்ற அடிமைகளும் அறிவார்கள். மூத்திரம் வரும்போதெல்லாம் இப்படித்தான் பதறிக்கொண்டு ஓடுவான். தீட்டுப்பட்டபெண்ணிடம் படுத்து அவதிப்படுவதாகப் பண்ணை முழுக்கப்பேச்சு. மூத்திரம்பேய கணக்க நேரம் எடுத்துக்கெள்வான். அவனுக்குச் சுலபத்தில் மூத்திரம் வராது, என்று சொல்ல கேட்டிருக்கிறான். காத்தமுத்து இதற்காத்தான் காத்திருந்தான். அவன் மறையும்வரைக் காத்திருந்தான். பாவாடைராயன், அங்காளம்மா, மாரியாத்தா, காத்தவராயனென கிராமத்தில் அவன் நெருங்கி பொங்கவைக்க முடிஞ்ச சாமிகளை நேர்ந்துகொண்டான். மேலே கழுகொன்று பறந்து கொண்டிருக்கிறது.

வெட்டப்படாத கரும்புத் தோட்டத்திற்குள் புகுந்தான், மேற்கு திசையைக் குறிவத்து ஓடினான். முதுகைக், காய்ந்திருந்த கருப்பங்கழிகள் கிழிக்கத் தொடங்கின. சாட்டை அடிகளுக்கு இது தேவலாம் என்றிருந்தது. ஓடிமுடிக்க இடப்புறம் மரங்கள் அடர்ந்திருந்தன. நிம்மதியாய் நின்று மூச்சுவாங்கிக்கொண்டான். அடர்ந்திருந்த மரங்களுக்குட் புகுந்து ஓடினான். ஓட ஓட விருத்தியாய், முன்பொருமுறை மார்கழிமாசத்திலே மேற்காலே கண்ட வால்முளைத்த நட்சத்திரம் மாதிரி அடர்த்தியானமரங்கள், முட் புதர்கள் மூங்கிறபுதர்கள் என இவனுக்குமுன்னே ஓடிக்கொண்டிருக்கின்றன..

/தொடரும்/

Series Navigation