திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -20)

This entry is part of 52 in the series 20040422_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


பகுதி பதிமூன்று – தொ ட ர் ச் சி

—-

நாட்கள் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தன. அச்சகத்தில் விடுப்பு கிடைக்கிற வழியாய் இல்லை. அவனுக்கு வருத்தமாய் இருந்தது. தள்ளிப் போய்க்கொண்டே இருந்ததால் அன்னையின் வளாகத்தில் தன்னை… தன் மனதை முடிந்த வெறுமையில் நிறுத்திக் கொண்டு புதிய காற்றை நிரப்பிக் கொள்கிற நிலையில் கவனக் குவிப்புடன் காத்து நிற்கிற அந்த உணர்வுக்கு மனசு ஏங்க ஆரம்பித்ததை உணர்ந்தான்.

அச்சகத்தில் அவனுக்கு நேர் எதிர்ச்சுவரில் அன்னையின் – பகவான் ஸ்ரீ அரவிந்தரின் படங்கள். தனித் தெம்பைத் தந்தன அவை. தான் தனியே இல்லை என்கிற உணர்வு மனிதனுக்கு எத்தனை ஆறுதலாய் இருக்கிறது. நான் தனியே இல்லை என்கிற உணர்வு வாழ்வின் நம்பிக்கையை வளர்த்துமாயின், அதைப் பரிமாறுவதும் நல்லம்சம்தானே ?… ஒரு புன்னகையுடன் அது எத்தனை எளிமையாய்ச் சாத்தியப் படுகிறது… சக மனிதனை, நீ தனியே இல்லை என ஒரு புன்னகை சொல்லி விடுகிறது அல்லவா ?

நாம் தனியே இல்லை… உனக்கு நான் துணை. அவ்வண்ணமே எனக்கு நீ துணை.

அதைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள அன்னை கண்ட எளிய வழி… கூட்டுப் பிரார்த்தனை!

போக்குவரத்து நெரிசலில், கூட்டம் கூடும் இடங்களில் அமைதியுறாத மனம்… கூட வருகிற நபரை- சக மனிதனைக் கண்டு கொள்ளாத மனம்… ஆனால் அன்னையின் வளாகத்தில் முறைப்படுத்தப் பட்ட அமைதியில் எத்தனை அழகாகப் பயிற்சி பெறுகிறது.

அன்னையின் திருச் சந்நிதியில் ஜாதி- மொழி- இன- மத- நாடு அளவில் கூட மாறுபட்ட… ஆனால் மனிதர்கள் மத்தியில் மனதை ஒன்று குவித்தல் என்பது அன்னையால் நடைமுறைப் படுத்தப் படுகிறது. தானும் பங்குபெற உள்ளார்வம் பெருகிக் கொண்டே வந்தது அவனில். சந்தர்ப்பத்துக்குத் தவிக்க ஆரம்பித்தது மனசு.

எந்த மதம் சார்ந்தும்- இசம் சார்ந்தும் இயங்காத ஸ்ரீ அரவிந்தரின் – அன்னையின் அணுகுமுறைகள்… வாழ்வுக்கே புதிய உந்துதலும் விளக்கமும் தந்தன. புதிய அர்த்த அழுத்த வீர்யங்களை அறிமுகப் படுத்தின. அதை உணர்ந்த கணம் அதன் ஈர்ப்புசக்தியோ அபாரமாய் இருந்தது.

—-

விரைவில் அந்த வாய்ப்பு வந்தது!

சில விஷயங்களை விளங்கிக் கொள்ள வாய்க்கிறதே யில்லை. கடையை மூடுகிற ஓர் இரவில், தன் தனிமையில் ஒரு வேடிக்கை போல அவன் அந்தப் படத்தை வணங்கினான். அவனுக்கே ஆச்சரியம்- அவன் இதுவரை எந்த உருவப்படத்தையும் வணங்க முன்வந்ததே யில்லை. கோவிலுக்குப் போனாலுங் கூட விக்கிரக ஆராதனை என்கிற அளவில் அவன் பரவச அனுபவம் கண்டவன் அல்ல. எனக்கு இதைத் தா… அதைச் செய்வி… என வேண்டிக் கொண்டவனும் அல்ல.

என்னவோ மனம் ஒரு வேண்டுகோள் போல அந்தப் படத்தின் முன் தன்னை நிறுத்திக் கொள்கிறது- அன்னை என்னை அழைத்துக் கொள். நான் உன்னைச் சந்திக்க வேணும். உன் வளாகத்தில் என்னை நிறுத்திக் கொள்ள வேணும். உன் காற்றை நான் சுவாசிக்க வேணும்…. அன்னை என்னை அழைத்துக் கொள்.

—-

சாவியைத் தர மாடியேறிப் போனான் அவன். முதலாளி தாயுமானவன் என்னவோ எழுத்து மும்முரமாய் இருக்கிறார். விஷயமே தெரியாது அவனுக்கு. அவனைப் பார்த்ததும் ‘ ‘ஏ வா… ‘ ‘ என்று சிரித்தார். அவனுக்கே ஆச்சரியம் அவரது சிரிப்பு.

அவரது மகன் சிவகுமார். பஜார்ப் பக்கம் டூ-வீலர் பழுது பார்க்கும் கடை போட்டிருக்கிறான். எப்போதும் தலை நிமிர்கையில் சற்று விலுக்கென நிமிர்வான்- நடிகன் அர்ஜுன்போல அவன் இருப்பதாக நண்பர்கள் கதை கட்டிவிட அதை அப்படியே நம்பி, அர்ஜுன் மாதிரியே வசனம் பேசுவதைப் போலப் பேசுவான்.

அர்ஜுனைவிட இவன் நெட்டை… இருந்தாலும் அவனே மாதிரி கூனி நடப்பான். உதட்டு மீசை நடுப்புறம் அர்ஜுனுக்கு முடியிராது. இவனும் அதேபாணியில் முடியெடுக்கச் சொல்லி சலுானில் வெறுப்பேத்துவான்.

‘ ‘என்ன முதலாளி ரொம்ப சந்தோசமா இருக்கீங்க ? ‘ ‘ என்கிறான் தனுஷ்கோடி.

‘ ‘பிள்ளைக்குக் கல்யாணம்டா… ‘ ‘ என்கிறார் தாயுமானவன்.

‘ ‘ரொம்ப சந்தோசம் முதலாளி… பொண்ணு உள்ளூரா அசலுாரா ? ‘ ‘

‘ ‘என்னத்த அசலுாரு… உள்ளூர்த்தான். பக்கத்துத் தெரு. லவ்வு கிவ்வுன்றான். என்னடா இதுன்னா… என்னென்னவோ வசனம் பேசறான்… ‘ ‘ என்றார் தாயுமானவன்.

எந்த அர்ஜுன் படத்து வசனமோ, என்று தனுஷ்கோடி நினைத்துக் கொண்டான்.

கல்யாணப் பத்திரிகையின் எழுத்துப் பிரதியை அவனிடம் நீட்டுகிறார் முதலாளி. ‘ ‘காலைல சரவணன் வந்தா dtp-க்குக் குடுத்துரு. இந்த மொகரைக் கட்டைக்கு அவளையும் அவனையும் கல்யாணப் பத்திரிகைல ஃபோட்டோ போடணுமாம்… ‘ ‘

‘ ‘போடுங்க முதலாளி. அவங்க நண்பர்கள்லாம் ஒரு பத்து போஸ்டர் பெரிய போஸ்டர் அடிச்சித் தெருவுல ஒட்டுவாங்களே… அதில்லையா ? ‘ ‘ என்றான் சிரிக்காமல்.

‘ ‘அந்தக் கண்றாவி வேற உண்டு. தப்புந் தவறுமா எழுதி… போஸ்டர் எழுதக் குடுத்திருக்கான்… மொத வரி என்ன தெரியும்ல ? உடல் மண்ணுக்கு உயிர் அர்ஜுனுக்கு… ‘ ‘

‘ ‘அப்ப அந்தப் பெண்ணுக்கு எதைக் குடுக்கப் போறான் மொதலாளி… ‘ ‘

‘ ‘தெர்ல ‘ ‘ என்று சிரித்தார் முதலாளி.

தெருவில் போஸ்டர்- அதும் தன் பெயரைப் பெரிதாய் எழுதி அச்சடித்துப் பார்ப்பதில் சென்னை நகரவாசிகளுக்குப் பெரும் ஆவேசம். எவனாவது செத்துட்டாக்கூட கண்நீர் அன்சளி – ஓவராக் கண்ணீர் விட்டா சளி பிடிச்சிக்கும்லய்யா… சுவரொட்டி அடிச்சிர்றாங்க. அதில் பெரிசாய்ப் பேர் தன் பெயரைப் போட்டுக் கொள்கிற அவசரத்தில்… அஸ்வத்தாமா செத்தான் என்று சத்தமாய்ப் போரில் பிரகடனம் பண்ணி விட்டு, சின்னதாய் யானை… என முடித்தாற் போல பாரதக்கதை உண்டே… அந்த ரேன்ஜில் திரு அன்பரசன் அவர்கள் என்று போட்டு கீழே அவர்களது தாயார் மரகதம் அம்மாள் மரணம்… என சுவரொட்டி. ஊர்ல பாதிப்பேர் அன்பரசன் செத்திட்டதா நினைச்சிட்டான்யா பாவம்! காலம் அப்டிக் கெடக்கு.

எடேய் சிவா… உடல் மண்ணுக்கு உயிர் அர்ஜுனுக்குன்றியே… உன் வருங்காலப் பெண்டாட்டி உடல் அர்ஜுனுக்குன்னு போஸ்டர் அடிச்சாள்னா நீ தாங்குவியாடா மாப்ளே ? பதறிற மாட்டே ?… என நினைத்துச் சிரித்துக் கொண்டான் தனுஷ்கோடி.

சிவகுமார் கல்யாணம் என்று வீடே அல்லோல கல்லோலப் படுகிறது. நண்பர்கள் தண்ணியடிச்சிட்டு ஒருவித கிறுகிறுப்புடன் அலைகிறார்கள்.

ஆ… அதைச் சொல். தனுஷ்கோடிக்கு எதிர்பாராமல் ரெண்டு நாள் விடுப்பு கிடைத்தது.

உயிர் முதலாளிக்கு… என்று அவன் போஸ்டர் அடிக்காமலேயே எடுத்துக் கொண்டவர் தாயுமானவன். அவர் உயிரைத் திருப்பித் தந்தது அருமையான விஷயமாச்சே!

அவன் நினைத்துக் கொண்டான்- அன்னையை வேண்டிக் கொண்ட முகூர்த்தமா இது ? ஆச்சர்யமாய் இருந்தது.

பாண்டிச்சேரி வருவதாக நாதன் சாரிடம் தொலைபேசியில் பேசினான். இப்போதுதான் தமிழ்நாட்டுக்குள் ஐந்நுாறு கிலோமீட்டர் அளவில் 95 போட்டுப் பேசலாம் அல்லவா ? முதலாளி தொலைபேசியிலேயே அவர் அசந்த நேரம் பேசினான். 95413 ….

‘ ‘வாய்யா வா வா… ‘ ‘ என்றார் நாறும்பூநாதன் உற்சாகமாய். ‘ ‘அன்னை உன்னைக் கூப்பிடறாய்யா ‘ ‘ என்றார். ‘ ‘அன்னையை நம்புய்யா. அப்பறம் உன் வாழ்வின் மாறுதல்களைப் பார்… ‘ ‘ என்றார்.

தொலைபேசியை வைத்து விட்டுத் தலை நிமிர்ந்தால் அன்னையின் படம். அவனைப் பார்த்துச் சிறு சிரிப்புடன் அவனை வரவேற்பதாக பிரமை தட்டியது. மனசுக்கு… சிறகு விரிக்கிற கற்பனைகள் வேண்டித்தான் இருக்கிறது.

அவனுக்கே தோன்றியது, எப்படி தெரியாது. அன்னை வளாகத்தில் ஒரு புதிய அனுபவம் காத்திருக்கிறது….

—-

/தொ ட ரு ம்/

sankarfam@vsnl.net

Series Navigation