நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -15

This entry is part of 72 in the series 20040415_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


நீல நிறனுடை நேரிழை யாளொடுஞ்

சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு

ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்

பாலனுமாவர் பராநந்தி ஆணையே

– திருமூலர் (திருமந்திரம்)

தை மாதம். பெளர்ணமி சந்திரன் கிழக்கிலுமில்லாமல், மேற்கிலுமில்லாமல் வானில் கிடக்கிறான். வெள்ளிநிலவின் கீழ் அழகும் அமைதியும் போகத்திலிருந்தன. அருகிலிருந்த பனந்தோப்பிலிருந்து ‘குக்கூ ‘வென்று மெல்ல எழுந்த குயிலோசை கொஞ்ச கொஞ்சமாய் உயர்ந்து, பரவி அப்பிரதேசமெங்கும் நிறைந்து திடுமென்று அறுபட்டு அமைதி அச்சம்.. அமைதி அச்சம் அமைதி அச்…. தெற்கில் கீழ்வானில், சந்திரன் ஒளியிற் சவமாய்க் கிடந்தவொரு நட்சத்திரம் திடாரென்று இடம் பெயர்கின்றது. கண் சிமிட்டும் நேரம், பிரகாசமாய் ஒளிர்ந்து, வடக்குத் திசைக்காய் வானவெளியில் ஜிவ்வென்று பிரயாணம் செய்து அடுத்த கணம் காாணமற்போகிறது. மீண்டும் மயான அமைதி. இதைப் பார்க்கின்ற நமக்கு, முதுகுத் தண்டினைப் பயமுறுத்தும் சிலிர்ப்பென்று சொல்லலாமோ ? சொல்லலாம். கூடுதலாக நடுங்கவைக்குங் குளிர்.

விடிவதற்கு இரண்டு சாமம் இருக்கிறது..கள்ளர்களுக்கும், காரியங்களில் அழுக்கினைக் கொண்டவர்களுக்கும் உகந்த நேரம்.

பைராகித் தோற்றம். அரையிலிருந்த நனைந்த நாலுமுழவேட்டி காற்றில் உலர ஆரம்பித்திருந்தது. சடைவிழுந்து அசைவற்றுக் கிடந்த தலைமுடி. குளவிகளாய் நிலவொளியில் மின்னும் கண்கள்.

ஆற்றுத் திசையை நோக்கி அந்த நேரத்தில் அவர்(ன்) தனியே நடந்து கொண்டிருந்தார்(ன்). பாதங்களைக் கவனிக்க நேர்ந்தால் நீங்கள் மூர்ச்சையாகக்கூடும். அவை பூமியில் பதிவதாகச் சொல்லமுடியாது. பறப்பதாய்ச் சொல்லவேண்டும்.

அர்த்தசாமத்திலிருந்து முற்றிலும் விலகாத இரவு. ஊசிகளாய்க் குத்துகின்ற பனி, பகல்வெப்பத்தை முற்றிலுமாகத் தணித்து சீதளபூமியாக ஆக்கியிருந்தது. சாலையோரப் பூவரசமர இலைகளிலிருந்து எப்போதாவது சொட்டுகின்ற பனிநீர், மண்ணிற் கிடந்த பழுத்த இலைகள் மீது விழுந்து இரவின் நிம்மதியைக் குலைத்துக் கொண்டிருக்கிறது.

தெற்கில் வரிசையாய் வளர்ந்திருந்த பனைமரங்களைக் குறிவைத்து நடந்தார்(ன்).

சுவற்றுக்கோழியின் ஓசையோ, பெண்ணை ஆற்றினையொட்டிய தோப்பிலிருந்து இடைக்கிடை எழுகின்ற குயிலோசையோ, ஆந்தையின் அலறலோ அவர(ன)து கவனத்தினைத் தீண்டக் காணோம். பெண்ணை ஆற்றங்கரையினை இப்போது அடைந்திருந்தார்(ன்).

ஆறு உயிர்ப்பின்றிக் கிடக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓடிப் பிடித்து விளையாடும் நீர்த்தாரைகள். முழு நிலவின் ஒளியில், பனியில் நனைந்திருந்த வெள்ளிப்பொடிகளாக மணற்துகள்கள்.. ஈரமணலில் கட்டுவிரியன் ஒன்று புரண்டுபுரண்டு, சட்டையை உரிக்கிறது. எச்சமிட்டுக்கொண்டு நகரும் நத்தைகள். அவற்றை அவசர அவசரமாய் ஓடும் சதையுமாய் மென்று விழுங்கும் குள்ளநரி. குதித்தோடும் குழிமுயல்கள். அவற்றைச் துரத்தித் செல்லும் உடும்பு. கரையை ஒட்டிய நாணற் புதர்களிலிருந்து மகிழம்பூ வாசம். சாரைப்பாம்பும் நல்லபாம்புமோ அல்லது சாரைப்பாம்பும் கொம்பேறிமூக்கனோ கூடுவதாற் பிறப்பதென நம்பப்படும் வாசம். நமதுடல் நடுங்க, குப்பென்று நாசிகளை அடைக்கின்ற வகையிற் வீசும் தாழம்பூவின் மணம்….

வறட்டுக்குளிரில், இப்போது பிறந்த மேனியாய்த் தோற்றம். உருவத்திற்குப் பொருந்தாத சிறிய தலை. முகத்திற்பாதியைத் தாடிக்கும் மீசைக்கும் தாரைவார்த்ததுபோக, எஞ்சிய பகுதிகளில்: அடர்ந்த புருவங்களினின்று வெளிப்பட்டிருந்தச் சிவந்த பெரியகண்கள். ஒட்டிய கன்னம். பெரிய மூக்கு. எலும்புக்கூட்டில் மெழுகிய பொலிவற்ற உடல். சுவாசிப்பின்போது எழுந்தடங்கும் மார்பெலும்பு. உடனசையும் உலர்ந்து சூம்பியகைகள். உளுத்த மூங்கிலொத்த நீண்ட கால்கள். இடைவிடாமல் கீழ்த்தாடை பக்கவாட்டில் அசைத்துகொண்டிருக்க, நாக்கு அபினுருண்டையை உருட்டி விளையாடுகிறது.

கிழக்கு நோக்கிப் பத்மாசனமிட்டு உட்கார்ந்தார்(ன்). சுக்கிரனை நினைத்தார்(ன்).

சுக்கிரன் பிருகுவின் புதல்வன். காதலின் பிரதிநிதி. கற்பனையின் பிரதி. களிப்பூட்டுபவன். மணமும் அவன். மலரும் அவன். மங்கை அவன். அன்பு அவன். ஆசையும் அவனே. கண்களைப் பிரதிபலிப்பான். ஜனன உறுப்புகளைக் காப்பவன். சிற்றின்பத்தை நுகரவைப்பவன். ஒரு பெண்ணின் இளம் வயதில் யோகமுள்ள சுக்கிரனின் அருள் கிட்டுமானால் அவள் ஒளிர்வாள். ஓர் ஆணின் வாலிபப்பருவத்தில் சுக்கிரனின் ஆட்சி நடந்தால், அவன் கவர்ச்சியால் எல்லா இன்பங்கைளையும் நுகர்வான். ஆடவருக்குப் பெண்டிரின் கூட்டுறவை அளிப்பான். காதலிலே வெற்றி தருவான். ராஜஸ குணத்தோன். சுக்கிரனின் யோகபலம் இருந்தால், அவனை அழைக்கமுடியுமானால், உடலை வருத்தினால் எல்லா இன்பங்களும் தேடி வரும். சுக்கிரன் உடலில் வீரியம். பஞ்சபூதங்களில் நீர். வெள்ளியும் இவனே! வைரமும் இவனே!

ஹேமகுந்த ம்ருணாலாபம் தைத்யானும் ப்ரமம் குரும்

ஸர்வ ஸாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாய!

பனி முல்லை, தாமரைபோன்ற வெண்மையான நிறமுடையவன். அசுரர்களின் குரு. எல்லா சாஸ்திரங்களையும் உரைப்பவனவன், பிருகுவின் புதல்வன், அந்தச் சுக்கிரனை வணங்குகிறேன். வணங்கினார்(ன்).

வாயில் அதக்கிக்கொண்டிருந்த அபினைத் துப்பிவிட்டுப், பரவிக் கிடக்கும் ஈரமான ஆற்றுமணலில் கால்கள் புதைய நடந்தார்(ன்). விழுகின்ற பனியோடு, காற்றும் கலந்து ஹோவென்று இரைச்சலுடன் இவனை அல்லது இவரை தீண்டிக் கடக்கின்றது.

ஆற்றைக் கடந்து வடதிசைக்கு வந்திருந்தார்(ன்). தனித்துக் கரையில்நின்ற வேப்பமரம், பேய்பிடித்த பெண்போலக் காற்றில் அசைந்து சூழலை அசாதரணப்படுத்திக்கொண்டிருந்தது.

வேப்ப மரத்தைப் பைராகி அடைந்திருந்தார்(ன்). இவரு(னு)க்காகக் காத்திருப்பதுபோல பசுஞ் சாணியிற் பரப்பிய சிறிய மேடை. செம்மண் சாயத்தில் கோலம். செப்புத் தகட்டில் ஓம், க்ரீம், ஐயும், கிலியும், சவ்வும், டவ்வும் எழுதப்பட்ட மகா யந்திரம். அந்த மகா யந்திரத்தைச் சுற்றி ஆவாரம்பூ, எருக்கம்பூ, பட்டிப்பூ போன்ற மலர்வகைகள் இறைந்து கிடந்தன.

மீண்டும் பத்மாசனமிட்டு உட்கார்ந்தார்(ன்). தியானத்தில் ஆழ்ந்து தன்னைச் சுருக்கினார்(ன்). மூச்சை அடக்கினார்(ன்). உதடுகள் இறந்தவர்களை அழைக்கும் அமிர்த சஞ்சீவி மந்திரத்தை உச்சரித்தன.

சித்தம் சிறிது சிறிதாக சிற்றின்பப் போகத்திற்குச் சித்தமாகிறது. அவ(ர்)ன் மனத்திலிருந்த பெண்ணை எண்ணி சிறிதுசிறிதாகத் தனது உடலை அணுத் துகள்களாகமாற்றிப் பிரபஞ்சத்துடன் கலக்கிறான்.

உடல் சிதறிப்போகிறது.. ஆத்ம சொரூபமாய் யோக நிலையினின்று விலகியெழுந்தார்(ன்). எதிர்பார்த்து நின்றா(ர்)ன்.

வடமேற்கு திசையிலிருந்து அவள் வருகிறாள். நெருங்கநெருங்க மல்லிகையும் முல்லையும் கலந்த மணம். இலவம்பஞ்சைத் திரட்டி விதைநீக்கிச் செய்த உடல். கால்களென்றேதுமில்லை ஆனாலும் நடையில் நளினம் – நடையில் நளினம் ஆனாலும் நடுக்கம் – நடுக்கம் ஆனாலும் இவரை(னை)நோக்கி ஈர்க்கப்பட்டு வருகிறாள். அந்நடைக்கேற்ப பெரிய இடையின் பின்புறத்தில் வலமும் இடமுமாக புரளும் நீண்ட சடை.. கொழுந்துட்டெரியும் தீயையும் குளிரவைக்கும் முகம் – ஆனாலும் பைராகியின் ஆத்மசொரூபம் தேடுகின்ற மோகன முறுவல் அங்கில்லை.

‘வந்து விட்டாயா பெண்ணே வா.. அருகில்வா. என் சூட்ஷும உடலின் சொந்தம் நீ. அதன் மோகத்தைத் தணிக்க உன்னால் மட்டுமே முடியும் ‘

‘ தள்ளிநில்.. யார் நீ ? ‘..

‘ தேவயானி! உன்னுடைய சொக்கேசனடி. . நீ .இரண்யலோகத்திலிருந்து என் மந்திர உச்சாடனத்திற்குக் கட்டுண்டு இறங்கிவந்திருக்கிறாய். என்னைச் சோதிக்காதே!. வா!..வா!.. அருகில் வா.. காதல் சுரத்தில் என் தேகம் கொதிக்கிறது பார்.. ‘

‘பாதகா நீயா ? நான் உனக்கென்ன தீங்கிழைத்தேன் ? இப்படி ஒவ்வொரு பெளர்ணமியன்றும் இறந்த என்னைக் கட்டிவைத்து மந்திரத்தால் மீளவழைக்கும் நோக்கமென்ன ? என்னை விட்டுவிடு ‘

‘சண்டாளி…. யோசித்துபார். ஒவ்வொருமுறையும் அலுக்காமல் இக்கேள்வியைக் கேழ்க்கிறாய். நானும் அலுக்காமல் பதிலுரைக்கிறேன். உன்னுடைய இடைவாசலுக்காக மடைவாசலில் காத்திருக்கும் கொக்கடி.. எந்தவர்த்தமானத்தைச் சொல்ல ? என்னோடு வா.. உனக்கும் எனக்குமுள்ள அந்தமில்லா ஆதியைக் காட்டுகிறேன். அருகில் வா..யுகங்கள்தோறும் உன் கூடலுக்காகத் தவமிருக்கும் எனது இந்திரியங்களை பொய் என்றிடாதே.. வா..! நான் யாரென்று உனக்கு விளங்கவில்லையா ? நீ..பொய்யுரைக்கிறாய்!… உனக்காகப் பெளர்ணமி நிலவுக்குக் காத்திருந்து, களப கஸ்தூரி பூசி, தாம்பூலந் தரித்துவிட்டு வந்திருக்கிறேன். அருகில் வா. எச்சிற்படுத்து! ‘..

‘காமாந்தகா.. அருகில் வராதே! என்ன பிதற்றுகிறாய் ? எதற்காக நான் பொய்யுரைக்கவேண்டும் ?

‘பெண்ணே.. என் கண்களைப்பார்… .உனக்கும் எனக்குமுள்ள யுகவரலாறு அதில் எழுதப் பட்டிருக்கிறது பார்! வாசி. அன்றேல் என் உடலைத் தீண்டு, கட்டி அணை.. எல்லாம் புரியும். உன்னுடைய யெளவன புருஷனடி.நான்! .வடக்கேயுள்ள காஞ்சிமாநகரம் நினைவிருக்கின்றதா ? விண்ணுயர் கோபுரங்கள், வேத முழக்கம், சர்வக்ஞ பீடம், புண்ணிய நகரம் எனவறிந்திருந்த காஞ்சிபுரத்தை ஞாபகமில்லையா ? குமரக்கோட்டம் ? கோபுரமொட்டிய அர்ச்சகரில்லங்கள் நினைவிலுண்டா ? நந்தவனங்கள் ? ம்… பூக்குடலையைச் சுமந்துகொண்டு நாமிருவரும் ஓடிப் பிடித்து விளையாடியது ? ஆலயப் பூங்காவனத்திலிருந்து முல்லை, மல்லிகை, திரு ஆத்தி முதலியவற்றைப் பறித்து மாலை செய்து சூடிக்கொண்டது ? மணல்வீடு கட்டி, இடித்து மகிழ்ந்தது ? அதிரசத்தையும், தினை அடையையும் புன்னை மரத்தடியில் இருவரும் உண்டு மகிழ்ந்தது ? ஏதாவதொன்றை ஞாபகத்திற் கொண்டுவா.. சிக்கல் அவிழ்ந்துவிடும்.. மீண்டும் திரும்பிவா.. ‘

‘இல்லை சொக்கேசா ஞாபகமில்லை. நான் முடிந்து போனவள். ‘

‘உன் தகப்பன் கச்சியப்பன் நீ எனக்கானவளென்று நாம் மரப்பாச்சியோடு விளையாடியபோதே சத்தியஞ் செய்தவன். நீ அரசிலையுடன் நடைவண்டி பழகியபோது கைதட்டி மகிழ்ந்தவனடி. ஏக தடல்புடலாய் பெற்றோர் மடியில் உட்கார்ந்து ஸ்ரீமான் சொக்கேசனான எனக்கும், செளபாக்கியவதி தேவயானியான உனக்கும் கலியாணம் நடந்தபோது, எனக்கு ஆறு வயது, உனக்கு நான்கு வயது. புரியாத வயதுவரை உடனிருந்தாய்.. பிறகு பிறகு…அவன் வந்தான். பார்த்திபேந்திரன் என்றான். உனக்கும் அவனுக்கும் காதலென்றார்கள்..நான் நம்பமறுக்கிறேன். நீ என் காலில் விழுந்து ‘சுவாமி! உண்மையென்கிறாய் ‘. பதிவிரதா தருமத்தை மீறுகிறாய்.அவனை நினைத்து ‘கருமாறிப் பாயப்போவதாய் விரதமிருக்கிறேன் என்கிறாய். . வேண்டாமடி இது தர்மமல்ல யோசித்துப்பார் என்கிறேன். நீ பிடிவாதமாய் மறுத்தாய் தேவயானி.. எப்படி தேவயானி ? எனக்கு நீயென்று நான் நினைத்திருக்க இப்படியொரு துரோகத்தை… எப்படி ?.. எப்படி ? ‘

‘சொக்கேசா!.. நீ சொல்வதெதுவும் எனக்கு விளங்கவில்லை.. ‘

‘சொக்கேசன் .. சொக்கேசன் என்கின்ற என்பெயரை மட்டும் இவ்வளவு தெளிவாக எப்படி உன்னாற் சொல்லமுடிகிறது ?. முடிந்துபோனவளென யார் தீர்மானிப்பது. மற்றவர்களுக்கு நீ முடிந்து போனவள். உன் தந்தைக்கு, பார்த்திபேந்திரனுக்கு. உனது பந்துக்களுக்கு, ஆக எல்லோருக்கும் நீ முடிந்து போனவள். ஆனால் எனக்கல்ல. ‘

‘சொக்கேசா உன்னை நீயே ஏமாற்றிக்கொள்கிறாய். ஈசன் எழுதியபடிதான் எல்லாம் நடக்கும். பால்ய விவாகத்திற்கு நானெப்படிப் பொறுப்பாகமுடியும். வேண்டாம் இனியும் இப்படி என்னை அழைப்பதன் மூலம் உன் ஊழ்மவினைகளைப் பெருக்கிக்கொள்ள மேலும் மேலும் பாவங்களைச் செய்கிறாய். என்னை இனியும் அழைக்காதே. நீ கற்ற வித்தையை நல்வழியில் செலுத்து. என்னை விட்டுவிடு ‘

‘தேவயானி…உன்னையா நானா ? ஹஹ்ஹா.. விடுவேனா ?; பிறவிகள்தோறும் தொடருவேன். என் ஸ்தூல உடல் உன் ஸ்தூல உடலை ஸ்பர்சிக்கும் வரை நான் உயிர்வாழ்வேன். பேதைப்பெண்ணே நான் நித்யமானவன். எனக்கு அழிவில்லை. பார்த்திபேந்திரனும் நீயும் அநித்யமானவர்கள். அற்ப மானுடர்கள். உங்களுக்குப் பிறப்புண்டு, இறப்புண்டு. நான் அப்படியல்ல காலத்தைவென்றவன். காலனை வெல்வதற்குரிய உபாயம் அறிந்தவன். உடம்பை வளர்க்கும் உபாயமறிந்து உயிரையும் வளர்ப்பவன், சுயம்பு. என்னை நம்பு. என்னால் மட்டுமே உன் பிறவியை முடிவுக்குக் கொண்டுவரமுடியும். நான் சித்தன். நீர்மேல் நடப்பவன். நெருப்பிலே படுப்பவன். அழிவில்லாதவன். வா.. அருகில்வா. என் மோகத்தைத் தணிப்பாயாக! ‘

‘அற்பனே கர்வம் கொள்ளாதே. பெண்பாவம் சும்மாவிடாது.. நீ பொய்.மாயை. உன்னையே ஏமாற்றிக்கொள்கிறாய். ‘

‘அசட்டுப்பெண்ணே! அட்டமா சித்திகளை அறிந்திருக்கிறாயா ? அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, பிராகாம்யம், ஈசத்துவம், வசித்வம் அனைத்தும் பெற்றவன். என்னிடம் என் தவவலிமையையும் யோகவலிமையையும் அலட்சியம் செய்து அற்பன் பார்த்திபேந்திரனிடம் ஆசைகொண்டவளே.! இன்னும் ஏனடி விலகிப் போகிறாய்.. வா.. அருகில் வா.. நாம் சம்போகிக்கும் வேளை நெருங்குகிறது பார்.. ‘

‘ சொக்கேசா.. சரியான வகையில் செலுத்தவில்லையெனில் தர்சன சாத்திரத்தால் என்ன பயன் ? வைணவத்திற் சொல்வதுபோன்று நீயொரு விரோதிஸ்வரூபன். சாஸ்திரவிரோதி. ‘

‘சத்தியமடி பெண்ணே!.. நான் தேடும் முடிவில்லா இன்பம் – புருஷார்த்த ஸ்வரூபம்.. தேவயானி.. அவளே என் பரஸ்வரூபம்.. அதுவரை..நீ வேண்டும். வா.. ‘

பைராகி நெருங்குகிறான். குளவிக்கண்களில் திகு திகுவென்று காமம் பற்றிக்கொண்டு எரிகிறது. இரண்யலோகத்துப்பெண் அச்சத்துடன் ஒதுங்கிறாள். நீண்ட கைகள், எட்டி அவள் கூந்தலைப் பற்றி இழுத்தணைக்கிறது. முகமற்ற பெண்ணின் இதழ்களை குறிவைத்து, ஹஹ்ஹாவென்ற பேய்ச் சிரிப்புடன், ஊளையிட்டுக்கொண்டு, தன் உதடுகளைக் கொண்டு செல்கிறான். எங்கிருந்து அவளுக்குப் பலம் வந்ததோ அவனை உதறி நின்றாள். அவள் மனதோடு உடல் ஒத்துழைக்காமற் தயக்கம் காட்டுகிறது. விலக்க முடியாத அன்னியன். விறைத்த முலைக்காம்புகளும், சுரந்து நின்ற யோனியும், அவனது சல்லாபத்திற்குக் காத்திருக்கின்றன.

நிலவை மறைத்துக் கருமேகம் அழைத்துக்கொள்ள, ஆற்றுப் படுகை இருளில் மூழ்குகிறது. கொள்ளிவாய்ப் பிசாசுகள் குதித்து மகிழ்கின்றன. கிழக்கில் மின்னல் வெட்டி ஓய்கிறது. தொடர்ந்து விழுந்த இடியில் ஒற்றைப் பனைமரமொன்று தீப் பிடித்து எரிகிறது. வானம் பிளந்து நீரைக்கொட்ட, காற்று. ஹோ ஹோ வென்ற பேரிரைச்சலுடன் சுழன்று அடித்தது…

அவள் அச்சத்துடன் பின்வாங்கினாள், இவர்(ன்) நெருங்கினார்(ன்). ஓடினாள். இவர்(ன்) தொடர்ந்தார்(ன்). இவ்விளையாட்டு ஒரு சில நாழிகைகள் தொடர்ந்தன. இவர(ன)துத் தீண்டலில் மயக்கமுற்றுச் சாய்ந்தாள். ஆரத் தழுவினார்(ன்). அருகில் மணலிற் சுருண்டுக்கிடந்த கட்டுவிரியனைப் பற்களால் கடித்து, வலது கையில் பிடித்துத் தூக்கி எறிந்தார்(ன்). அதுவொரு குழிமுயல் மீது விழ, அது வெருண்டு பாய்ந்தோடியது. இவர்(ன்) சவமாய்க்கிடந்த அரூபப் பெண்ணின் முலைகளில் முகம் பதித்து முத்தமிட்டு மகிழ்ந்தார்(ன்). அவள் கால்கள் அளவாய்ப் பிரிந்து கிடக்க அதனழகில் கிளர்ச்சியுண்டு வேகமாய்ச் செயல்பட்டார்(ன்).

அவர்(ன்) உதடுகளுக்கிடையான காற்றில் மந்திரம் ஒலித்து அடங்கியது. சுக்கிலம் நீங்கி சுரோணிதத்துடன் கலந்தது. ஆத்ம சொரூபம்

மீண்டும் கூட்டிற்குத் திரும்பியது. யோக நிலையிலிருந்து பைராகி விதிர் விதிர்த்து, வியர்த்து மீண்டார்(ன்)

மின்னலில்லை.. இடியில்லை.. மழையில்லை.. காற்றில்லை…

மீண்டும் பெண்ணை நதி இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தது. முன்புபோலவே மீண்டும் அங்கே, ஓடிப் பிடித்து விளையாடும் நீர்த்தாரைகள். மீண்டும்..முழு நிலவின் ஒளியில், பனியில் நனைந்திருந்த வெள்ளிப்பொடிகளாக மணற்துகள்கள்..

மீண்டும்..ஈரமணலில் கட்டுவிரியன் ஒன்று புரண்டுபுரண்டு, சட்டையை உரிக்கிறது. மீண்டும்.. எச்சமிட்டுக்கொண்டு நகரும் நத்தைகள், அவற்றை அவசர அவசரமாய் ஓடும் சதையுமாய் மென்று விழுங்கும் குள்ளநரி.

மீண்டுமங்கே குதித்தோடும் குழிமுயல்கள், அவற்றைச் துரத்தித் செல்லும் உடும்பு. கரையை ஒட்டிய நாணற் புதர்களிலிருந்து மகிழம்பூ வாசம். சாரைப்பாம்பும் நல்லபாம்புமோ அல்லது சாரைப்பாம்பும் கொம்பேறிமூக்கனோ கூடுவதாற் பிறப்பதென நம்பப்படும் வாசம்.

மீண்டுமங்கே தாழம்பூவின் மணம்…. வானில் பெளர்ணமி சந்திரன்….பனந்தோப்பிலிருந்து ‘குக்கூ ‘வென்று மெல்ல எழும் குயிலோசை….

பைராகி சாவாகாசமாய்த் தெற்குத்திசை நோக்கி நடக்கிறான்..

/தொடரும்/

Na.Krishna@wanadoo.fr

Series Navigation