திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -20)

This entry is part of 72 in the series 20040415_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


/13/

தனுஷ்கோடிக்கு நாதன் சாரைச் சந்தித்தது பெரும்பொழுது என்றுதான் பட்டது.

சற்று பெரியவர் என்பதை… முதிய தலைமுறைக்காரர் எனவும் அதனாலேயே அவரை முதல்-மதிப்பீட்டிலேயே அலட்சியப் படுத்தவும் நினைத்தது எத்தனை அறிவீனம் என தனக்குள் தானே வெட்கப் பட்டான். மனிதர்களை அவர்களது இயல்பு வட்டத்தில்… அவரவரை மதித்து பரிச்சயம் கொள்வது கூட நல்ல குணாம்சம்தான். இளமையின் சுயதினவெடுப்பில் இப்படி விஷயங்கள் உறைக்கிறதே யில்லை. நிறைய இசாதிபதிகள்… தத்துவவாதிகளும் இதைக் கண்டு கொள்கிறதே யில்லை. தன் கருத்தை நிருவுதல் சரி… அதை நிர்ப்பந்திக்கிற ஜோரில் அதைப் பற்றி அழுத்தமாய்ப் பேசுதல் என்பதுகூட சரி… ஆனால் பிறர் கருத்தை அலட்சியப் படுத்திப் பேசுதல் என்பது அத்தனை முறையல்ல. அதனால் என்ன பயன் விளைந்துவிடப் போகிறது… இப்படி விஷயங்களை யாரிடம் நீங்கள் உங்கள்-கருத்து சார்ந்த உள்ளழுத்தத்துடன் பேசப் போகிறீர்கள்… எதிரணியில் நம்பிக்கை யுள்ளவரிடம்தானே ? எதிரணியை உதைபந்து போல ‘பா ‘வித்துப் பேச ஆரம்பித்தால் அவர் எப்படி நம்மை கவனிப்பார்… என அவர் சிந்திக்கிறதே யில்லை. பிறகு எப்படி அவரால் தன் கருத்தை வெற்றிகரமாய் நிருவ முடியும் ?… அல்லவா ?

ஒரு கருத்தில் நம்பிக்கையுள்ளவர் அதன்பால் ஆழங்காற்பட்ட பரிச்சயம் செய்துகொள்ள விரும்பியவராய் இருக்கிறார். அதில் அவர் அப்படி கால அளவில், சுயதேர்வு அடிப்படையில் தமது அறிவை விருத்தி செய்திருக்கவும் கூடும்… என்பதெல்லாம் நாம் புரிந்து கொண்டு அவரை அணுக வேணாமா ?

நமது வளாகத்து சிந்தனைகளைத் திணிக்கிற ஆவேசத்தில் பிற வளாகங்களை தரிசிக்க நாம் தவறியவர் ஆகிறோம். மட்டுமல்ல- நாம் கற்றுக்கொள்ளத் தவறியவராக ஆகவும்… ஒரு அழகிய சந்தர்ப்பத்தை நழுவ விடவும் வாய்ப்பு வந்து விடுகிறதே…

அரவிந்தர் சூர்ய ஒளி என்றால், அன்னையை சந்திரப் பிரகாசமாய்ச் சொல்வது சிறிய உவமை எனலாம். இது அதன் வீர்ய அளவு அல்ல- வெளியீட்டு அளவு. அரவிந்தர் வானம் என்றால், அன்னை வானத்து மழை. மானுடப் பறவை. பூமியை நேசித்து உயரப் பறந்து பூமியை ஆராய்ந்த பறவை அல்லவா அவர்.

வாழ்வின் அடுத்த கட்டம் பற்றி, சமூகத்தின் அடுத்த வளர்ச்சி பற்றி அரவிந்தர் கனவு கண்டவர். அன்னையோ நிகழ் சமூகத்தின் வழி மேன்மையை… அபிவிருத்தியை நிருவ வந்தவராகத் தன்னை முன்னிறுத்திக் கொண்டிருக்கிறார். பகவான் ஸ்ரீ அரவிந்தரின் சமூகச் செயல்வீரராக அவர் விளங்குகிறார். தமது கனவுகளின் முதல் நனவுரு என பகவான் அன்னையைக் கண்டு கொண்டது அவரது வாழ்வின் தனிச் சிறப்பு அம்சம் அல்லவா ?

The philosopher and his Prophet.

அரவிந்தரின் சிந்தனைகளும் கவிதைத் தெறிப்பான குதிரை-நனவோட்டமும் உடைத்து- ஓடுபிரித்துச் சுவைப்பது சாதாரண ஜனங்களுக்கு அத்தனை சுலபமல்ல. அவரது சொற்சுருக்கம் அபாரமானது. வெளியீட்டு வீர்யமோ அடேயப்பா… அதைப் புகட்டுகிற அளவில்… மிக மிக எளிய நிலையில்… வாழ்வுத் தடாகத்தில் குளிரக் குளிரக் குளிக்கிறதைப் போல அனுபவிக்க வழிமுறைகள்… நடைமுறைகள் கண்டவர் அன்னை அல்லவா ?

மலர்கள் இயற்கையின் கனவு. அதன்வழி தத்துவார்த்த ரீதியாய் உலகை ஊடுருவுதல் எத்தனை அற்புதமான வழிமுறை. எத்தனை எளிய அணுகுமுறை… ஆச்சர்யமாய் இருந்தது அவனுக்கு.

சடங்குகளைப் புறக்கணிக்கச் சொல்கிறார் அன்னை. புதிய சடங்குகளை நாம் அர்த்தப் படுத்திக் கொள்கிற அளவில் அவர் முன்வைக்கிறார். பழைய சடங்குகள் காலரீதியான அர்த்தவீர்யத்தை இழந்தபின் அவற்றை கல்யாணகோட் போல வெறும் நினைவம்சம் என வீட்டில் வைத்திருப்பதில் அர்த்தம் என்ன ? இன்றைய வளர்ச்சி நிலையில் நம் உடம்புக்குப் பொருந்தா உடைகள் அவை அல்லவா ?

புதிய கனவுகளை சடங்குகளை நமக்கு நிகழ்கால அளவில் அர்த்தம் புரிகிற அளவில் வைத்துக் கொள்வதே நல்லது. மனிதனைக் கொண்டாடுதல், மனிதன் தன்னைக் கொண்டாடிக் கொள்ளுதல், வீட்டிலான சிறு திருவிழா அனுபவங்கள், வைபவங்கள், கூடிக் கலத்தல்… களித்தல் எல்லாமும் மனிதனுக்கு வேண்டியிருக்கவே செய்கிறது. அதை சற்று முறைப்படுத்தி வாழ்வினை வெற்றிப் பாதையில் செலுத்த, உன் உள்-ஆவேசத்தைக் கிளர்ச்சியுறச் செய்ய அன்னை நெறிமுறைகள் காண்கிறார்.

எத்தனை வயதானால் என்ன ? பிறந்த நாளைச் சிறப்பாக மதிக்கிறார் அன்னை. மதிக்க வேண்டும் என்கிறார். அதற்கான அவரது விளக்கம்… தனுஷ்கோடி அயர்ந்து போனான்.

பிறந்தநாள் என்பதென்ன ? இந்த உடல் காற்றையும் சூரிய ஒளியையும் அனுபவிக்கத் துவங்கிய நாள் அல்லவா ? மெல்ல தாமே இவ்வுலக வாழ்க்கைக்கு அந்த உடல், அந்த அறிவு, அந்த ஆன்மா தன்னைத் தயார் செய்துகொண்ட நாள் அது. முழுக்க தன்னை முன்னிறுத்தி வாழ்வின் சவால்களை நடைமுறைகளை அறிய மூளை இயங்க ஆரம்பித்த நாள்… அதைப் போற்றுவது, அதில் இருந்து வாழ்க்கை அடுத்த சுற்றுக்கு வருகிறதாக ஒரு மனம் உணர்வது… சுயமான எத்தனை சுகமான உணர்வு… நம்பிக்கையை வளர்க்கிற, இதமான பக்குவமான அனுபவம்!

அன்னைக்கு வணக்கம்.

மூன்று மாதத்தில் அந்த சிசு இவ்வுலக நியதிகளில் தன்னியல்பாய்ப் பிடிகொள்ள ஆரம்பிக்கிறது. கண்கள் எதையும் குறிப்பாகப் பார்க்காமல் பார்வை நிலைகொள்ளாமல் இருந்த நிலை மாறி, பார்வை நிலைத்து தம்மைச் சுற்றியுள்ள உறவினரை, குறிப்பாக அம்மாவை அது ‘தானே ‘ அடையாளங் கண்டுகொண்டு சிரிக்க ஆரம்பிக்கிறது. கண்களால் வெளிச்சத்தை உணர ஆரம்பித்து விடுகிறது. சூடு- வெப்பக் கதகதப்பு போன்ற உணர்வுகளை உணர ஆரம்பிக்கிற வளர்ச்சி நிலை அது. தன் அறிவைத் தானே பயன்படுத்த ஆரம்பிக்கிற பருவம். கைகால்களை தன் குரலை அது அடையாளங் கண்டு கொள்கிற நிலை… தன் இயக்கங்களைப் புரிந்து இயங்குகிற நிலை… வாழ்வின் துவக்கத்தில் அது எப்பெரும் மகிழ்ச்சித் தடாகம் என அமைந்து விடுகிறது அந்த சிசுவுக்கு. அதன் கண்களில்தாம் எப்பெரும் ஒளி. உடம்பெங்கும் எத்தனை பூரிப்பு. சிரிப்பு. கெக் கெக்.. என்கிற சிரிப்பும், மெல்ல அது தன் குரலை சிறகு விரிச்சாப் போல வெளியே நீட்டுகிறதும் அதற்கும் – அதன் உறவினர்க்கும் பரவச அனுபவங்கள் அல்லவா ?

அறிவு மெல்ல தீட்சண்யப் பட்டு வருகிற இந்த காலங்களைப் பதிவு செய்து கொண்டால், தன்னை உற்று கவனித்தால் வருடத்தின் சில கட்டங்களில் தமது அறிவைப் பயன்படுத்தும் ஆவேசம் தன்னில் உற்றெடுப்பதை ஒருவர் கண்டுகொண்டு – எத்தனை வயதானால் என்ன ? – ஒவ்வோர் ஆண்டும் வெற்றி வாய்ப்புகளுக்கு முயல அறிவைப் பயன்படுத்தும் சரியான தருணத்தை அவரவர் நிர்ணயம் செய்து கொள்ள முடியும்… என்பது அன்னையின் கணிப்பு… வழிகாட்டுதல்.

ஒரு பிரத்யேக சுயபயிற்சியில் இந்தப் பழக்கத்தை அறிவின் வாள்வீச்சை வெற்றியை நோக்கி இயக்க… வாய்ப்புகளை நம் வசப்படுத்த நாமே வருட முழுமைக்கும் காலப்போக்கில்… வயது வளர வளர சீரமைத்துக் கொள்ள என்ன தடை ?

தானே தன்னைப் பார்த்து… தன்னை விருத்தி செய்துகொள்ளுதல் என்கிற ஸ்ரீ அரவிந்தரின் கனவினையும், அதை நடைமுறைப் படுத்தும் அளவில் அன்னையின் வழிகாட்டுதலையும் இந்த ஒரு வாழ்வம்சம் வழியேகூடப் புரிந்து கொள்ள முடியும்…

பிறந்தநாளைத் தாமே தம்-சிறப்பாக உணர்தல்… அதை அன்னை சிறப்பு வாழ்த்து அட்டைகள் மூலம் போஷித்து வளர்த்தல்… அடாடா வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்ளுதல் என்கிற விஷயமே எத்தனை உற்சாகமான அனுபவம். நற்சிந்தனை, இனியவை கூறல், வாழ்த்திக் கொள்ளுதல்… அன்றாடம் கடைப்பிடித்தல் எத்தனை ஆரோக்கியமான விஷயம்!

அன்னையின் வளாகத்தில் சற்று நின்று வணங்க வேண்டும் போலிருந்தது தனுஷ்கோடிக்கு.

—-

/தொ ட ரு ம்/

sankarfam@vsnl.net

Series Navigation