அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தொன்பது

This entry is part of 48 in the series 20040311_Issue

இரா முருகன்


நந்தவனத்திலோர் ஆண்டி.

நாதசுவரக்காரன் நிறுத்தி நிதானமாக வாசித்துக் கொண்டிருந்தான்.சுலபமாக அடி எடுத்து வைத்து ஆடுவதற்குத் தோதான பாட்டு அது. அதுவும் வயதானவர்கள் ஆடுவதற்கு.

ஆலப்பாட்டு சேஷய்யர் ஆடிக்கொண்டிருந்தார். மடிசாரும், காதில் தோடும், தலையில் தேங்காய்நார் முடியும், கண்ணில் அப்பிய மையுமாக சிநேகாம்பாளின் தகப்பனார் ஆடிக்கொண்டிருக்க அம்பலப்புழை தெருக்களூடே சங்கரனின் மரவணை ஊர்வலம் ஊர்ந்து போனது.

சாயந்திரம் ஊருக்குக் கிளம்பணும். இப்ப இப்படி ஊர்கோலம் எல்லாம் என்னத்துக்கு விடணும் என்று சங்கரன் முதலில் வேண்டாம் என்றுதான் மறுத்தான்.

நீங்க தனியாவா போகப்போறேள் ? பகவதிக்குட்டியுமில்லியோ கூட வரப்போறா ? ராத்திரிக்குப் பேசினது போகப் பேச்சு மிச்சமிருந்தா பேசிக்கலாமே வழியிலே ?

நாணிக்குட்டி விசாரித்தாள்.

அம்பர விட்டிடா நீ நாணி. ராத்ரி ஒரு வார்த்தையும் பேசியிருக்கமாட்டா. பேசறதுக்கா ராத்திரி ?

லட்சுமி அவள் காதில் ரகசியம் பேசுவதாகச் சொன்னது எட்டு ஊருக்குக் கேட்டிருக்கும்.

பகவதிக்குட்டி நேற்று ராத்திரியை விட இந்தக் காலைப் பொழுதில்தான் அதிகம் வெட்கப்பட்டதாகச் சங்கரனுக்குத் தோன்றியது.

அவனுக்கு உடம்பு வசப்பட்டிருந்தது. தன்னுடையது. அவளுடையது. இதுக்காகத்தானா இவளை வரித்தது ? இத்தனை மந்திரம் சொல்லி, ஹோமம் வளர்த்து, ஊர்கூடிக் கல்யாணக்கூத்து அடித்தது இரண்டு ராத்திரியும் இன்னும் எத்தனையோ காலமும் உடம்போடு உடம்பாக ஒடுங்கிக் கிடக்கத்தானா ?

மனம் சீக்கிரம் பிடிபட்டு விடும் இரண்டு பேருக்கும். உடம்பு அதிசயமில்லாததாகத் தோன்ற ஆரம்பிப்பதற்கும் அதற்கும் சம்பந்தம் இருக்கப்போவதில்லை என்று சங்கரன் நினைத்துக் கொண்டான். என்றாலும் ராத்திரி முழுக்கப் போகம் அனுபவித்த அசதி அவன் கண்ணிலும் பகவதி கண்ணிலும் மாறாமல் தெரிந்தது. அவள் கண்ணில் அப்பிய மையையும் மீறித் தென்பட்ட அசதி அது.

நந்தவனத்தில் ஓர் ஆண்டி. அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி.

ஆண்டியும் தோண்டியும் ஒக்கெ சரிதான். வயசன் திரிச்சுப் பறந்துடாம ஒரு கண்ணு நட்டுவை.

ஆலப்பாட்டு சேஷய்யர் ஆடும்போது தன் வீட்டு வாசலில் நின்று கவனித்த பிஷாரடி வைத்தியர் சின்ன எம்பிராந்திரியிடம் சொல்லிவிட்டுத் தலையில் தைலம் புரட்டிக் குளிக்கக் கிளம்பினார். அவர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தபடி எம்பிராந்திரியும் அண்ணாசாமி ஜோசியரும் கனபாடிகளும் மரவணை ஆட்டத்தைக் கண்டபடிக்கு இருந்தார்கள்.

வயசன் காலையில்தான் அம்பலப்புழை வந்து சேர்ந்தது. கல்யாணத்துக்கு ஆலப்பாட்டு மனையிலிருந்து சிநேகாம்பாளின் கடைசித் தம்பி மட்டும் வந்திருந்தான். நாலு இடத்தில் சாஸ்தா ப்ரீதிக்குப் போகவேண்டிப் போனதால் குடும்பத்தில் வேறு யாரும் வரமுடியவில்லை என்றான் அவன் குப்புசாமி அய்யனிடமும் விசாலாட்சியிடமும்.

திருமாங்கலிய தாரணம் கழிந்து பந்தியில் உட்கார்ந்து இலையில் சக்கப் பிரதமனும், அவியலும் பப்படமும் தொடர்ந்து சாதமும் பரிமாறி மேலே புத்துருக்கு நெய்யும் விட்டானதும் அவன் குரல்தான் முதலில் கேட்டது.

என்ன அத்திம்பேரே பரசேஷணம் செய்ய மறந்து போனதோ ? இல்லே நாளைக்குச் சாவகாசமாச் சேர்த்து வச்சுப் பண்ணிக்கலாம்னு விட்டுட்டாரா ?

கிட்டாவய்யன் சாப்பிட ஆரம்பித்திருக்க மற்றவர்கள் இலையைச் சுற்றி நீர் தெளித்துக் கொண்டிருந்தார்கள் அப்போது.

சபைக்கு நடுவிலே ஜ்யேஷ்டன் இப்படித் தன் வீட்டுக்காரனைப் பகடி செய்தது சிநேகாம்பாளுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லைதான். முதலில் சாப்பிட்டு முடித்துப் லட்டுருண்டையைப் பாவாடையில் இடுக்கிக் கொண்டு வந்து எச்சில் படுத்தித் தின்றபடி வாசலில் பராக்குப் பார்த்துக் கொண்டு நின்ற மூத்த பெண்குழந்தையை முதுகில் ஒன்று வைத்தாள் அவள். இடுப்பில் இருந்த சின்னதின் பிருஷ்டத்தில் நுள்ளி, நீயும் ஒரு பொசைகெட்டவ என்று சொல்லி நோவெடுத்து அழ வைத்தாள்.

கிட்டாவய்யனாவது இந்தச் சின்ன விஷயத்தில் எல்லாம் கொஞ்சம் சிரத்தை எடுத்துக் கொள்ளக்கூடாதா என்று அவளுக்கு ஏகக் கோபம். ஏற்கனவே கல்யாணத்தில் அவனுடைய உழைப்பு ஏதும் இல்லை என்று பேச்சுக் கிளம்பியாகிவிட்டது. எப்போதுமே இதையெல்லாம் பெரிசாக நினைக்காத விசாலாட்சி மன்னியே கூட ஒருதடவை வாயைத் திறந்து கேட்டுவிட்டாள் நேற்று. நல்ல வேளை தாலி கட்டுகிற வேளைக்காவது கிட்டாவய்யன் வந்து சேர்ந்தானோ பிழைத்தானோ ? இல்லாவிட்டால் சகலருக்கும் அவன் சத்ருவாகி இருப்பான். காமாட்சி மன்னி அடுத்த சமையல்கட்டு யுத்தத்தின் போது பிரயோகிக்க இன்னொரு பலமான அஸ்திரம் கிடைத்துவிடும். சிநேகா கர்ப்பிணி என்பதால் அவள் சண்டை வலிப்பது குறைந்துதான் போயிருக்கிறது. ஆனாலும் முழுக்க அஸ்தமிக்கவில்லை அது.

சங்கரனும் பகவதியும் சோபான ராத்திரிக்காக சயனக் கிரகத்துக்குள் போனபோது சிநேகாம்பாள் தன் தம்பியை அவசரமாகக் கூப்பிட்டாள்.

எடா, நீ உடனே கிளம்பிப்போய் மூத்தண்ணா ரெண்டு பேரையும் உடனே இங்கே கிளம்பி வரச்சொல்லு.

மளிகைப் பொருளும், அரிசியும், வெல்லமும் வெளியே எடுத்து வைத்துவிட்டு, உள்ளே கட்டில் போட்டு வைத்திருக்க, அடைத்த கதவுக்கு இந்தப்புறம் இருந்து பெண்கள் சிருங்காரப் பாடல் பாடும்போது அதில் மூழ்கியிருந்தான் சிநேகாம்பாளின் சகோதரன். நாணிக்குட்டி ஒரு அப்சரஸ் போல் வெள்ளைப் பட்டுப்புடவையும், நெற்றியில் தொட்ட சந்தனக்குறியுமாகச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தது அவன் நினைப்பை வெகுவாக அலைக்கழித்து அங்கேயே காலைக் கட்டிப் போட்டிருந்தது.

இப்பவா ? எல்லாப் பட்டியும் கூர்க்கம் வலிச்சு சுகமாய் உறங்கிக் கிடக்குமே ? எந்த வள்ளம் இருக்கும் இந்தப் பாதி ராத்திரிலே ? வண்டிதான் இருக்குமா கரைக்கு மேலே ஓட்டிப் போக ?

எல்லாம் இருக்கும். நாலு சக்கரம் கூடக் கொடுத்தா வள்ளக்காரனும் வண்டிக்காரனும் ராத்திரி முழுக்கச் சேவகம் பண்ண வந்து நிப்பா. போடா திருதியாயிட்டுக் கிளம்பி.

சிநேகா அவனிடம் துரைத்தனத்துக் காசு நாலைந்து நீட்டினாள். அதற்கு ஒரு வண்டியையோ வள்ளத்தையோ விலைக்குக்கூட வாங்கி வாசலில் நிறுத்திவிடலாம்.

கிட்டாவய்யன் சாவக்காட்டிலிருந்து கொண்டுவந்த தனத்திலிருந்து கிள்ளிக் கொடுத்தது அது. சீக்கிரம் கொல்லத்தில் சாப்பாட்டுக்கடையாகப் போகிறது மிச்சமெல்லாம்.

தண்ணிமத்தங்காய் வாடையடித்த அந்தப் பணம் அவள் கைக்குள் இதமான சூட்டோடு இருந்தது. பணம் அடைத்த பொதி கையில் இருக்கும்போது உலகத்தையே அதைக் கொண்டு ஜெயித்து விடலாம் என்று தோன்றியது சிநேகாம்பாளுக்கு. காமாட்சி ஏதொண்ணும் எடுத்துக்கட்டி நிறுத்திச் சண்டைக்கு வந்தால் இந்தப் பொதியாலே அவள் முகத்தில் அறைய வேண்டும். பணத்தின் வாடை பிடித்தால் யாருக்கும் பின்னே குரல் எழும்புமோ என்ன ? முட்டுக் குத்த வைத்து விடுமே அது, யோகியானால் என்ன போகியாய், ஆசாரம் அனுசரிக்காத தெம்மாடி போலும் இருந்தாலென்ன ?

ஒரேயடியாப் பாஷாண்டி ஆயிடற உத்தேசமா ? சந்தியும் பண்ண மறந்தாச்சா பரசேஷணம் மறந்தமாதிரி ?

கல்யாண தினத்தன்று சாயந்திரம் பணப்பொதியைக் கையில் வச்சுக் கொடுத்து கிட்டாவய்யன் திரும்ப வெளியே கிளம்பியபோது அவன் சந்தியாவந்தனம் செய்ய வேண்டி எடுத்து வைத்த பஞ்ச பாத்திரமும் வீபுதிச் சம்படமும் அப்படியே இருப்பதைக் கவனித்த சிநேகா கேட்டாள்.

கிட்டாவய்யன் சிரித்தான்.

சந்தியும் மாத்யானமும் பரசேஷணமும் எல்லாம் இனிமே இதுக்குத்தான்.

அவன் மடியிலிருந்து குரிசை எடுத்துக்காட்டி விட்டுத் திரும்ப அவசரமாக வைத்துக் கொண்டான்.

இது என்னத்துக்காக மடியிலே முடிஞ்சுண்டு இருக்கேள் ? பாதிரி ஏதாவது மந்திரிச்சுக் கொடுத்திருக்கப் போறான். வீசி எறிஞ்சுடுங்கோ.

அவள் குரலை உயர்த்தவிடாமல் வாயைப் பொத்தியபடி கிட்டாவய்யன் நெருங்கி நின்று சொன்னான் – பாதிரியார் வட்டி எதுவும் கொடுக்க வேண்டாம்னு தான் மந்திரிச்சார். எல்லாம் இதோட மகிமை. அடுத்த வாரம் கடை வைக்க இடமும் பிடிச்சுக் கொடுத்துட்டார் சாவக்காட்டார். சரி போட்டே. கதவுப் பலகை செய்ய ஆசாரிக்குப் பணம் கொடுத்துட்டு வரேன். மீதிச் செலவுக்கு நான் கேட்கறபோது கொடு. அதுவரைக்கும் பத்திரமா இருக்கட்டும்.

கிட்டாவய்யன் மடியைப் பிரியமாகத் தடவியபடி வெளியே போக சிநேகாம்பாள் இதென்ன கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதையாக பணத்தோடு வந்ததோடு மட்டுமில்லாமல் இப்படிக் கிறிஸ்தியானி போலக் குரிசையும் கொண்டு வந்திருக்கிறாரே இந்த மனுஷர் என்று நிலைகுலைந்து போனாள்.

நலங்கு நடக்கப் போறது. இங்கே நின்னு காசை எண்ணிண்டு இருக்கியே சிநேகா. வா சீக்கிரம். ஆரத்தி எடுக்கணும்.

லட்சுமி நவதம்பதிகள் உருட்டி விளையாடத் தேங்காயை எடுத்துப் போனவள் போகிற போக்கில் சொல்லி போனாள்.

சிநேகா பந்தலுக்குப் போனபோது பகவதி நலுங்கு இட வந்த சங்கரனுக்கு பரிசு கொடுத்துக் கொண்டிருந்தாள். அது ஒரு கடியாரம். ஏதோ வெள்ளைக்காரப் பட்டிணத்தில் அதை வெகு கவனமாக உண்டாக்கி அதி ஆச்சர்யமான விஷயமாக விற்பனைக்கு இறக்கியிருந்தார்கள். நீளமான சங்கிலியில் கட்டித் தொங்க விட்ட அந்த உருண்டை யந்திரம் அவ்வப்போது மணியடிக்கவும் செய்யும் என்று பிஷாரடி வைத்தியர் சொன்னார். குப்புசாமி அய்யன் அவர் மூலம் தான் திருவனந்தபுரத்திலிருந்து வரவழைத்திருந்தான் அந்தக் கடியாரத்தை.

பகவதி, இவன் உனக்கு என்ன தரான்னு கேளு.

வைத்திசார் சங்கரனின் இடுப்பில் அந்தக் கடியாரத்தைத் தொடுக்கி வைத்துவிட்டுச் சொன்னான்.

சங்கரன் நிரம்ப யோசித்து அடுத்த மாதம் பெல்ஜியம் கண்ணாடி ஒன்று வாங்கித் தருவதாக வாக்குத் தத்தம் செய்தான். அதை முன்கூட்டியே சென்னைப்பட்டணத்தில் கருத்தானிடமோ, சுலைமானிடமோ சொல்லி வைத்து வாங்கி எடுத்து வந்திருக்கலாம் என்று வெகு தாமதமாகத் தோன்றியது அவனுக்கு.

கண்ணாடியும் மூக்காடியும் வரும்போது வரட்டும் பகவதிக்குட்டி. வேறே ஏதாவது கொடுடான்னு இவனை இப்பவே மடியைப் பிடிச்சு இழுத்துக் கேளு. இல்லாட்ட வாயிலே புகையிலைக் கட்டையை அடைச்சுட்டு அவன் பாட்டுக்குப் பட்டணத்துக்குக் காசு பார்க்கக் கிளம்பிடுவான்.

வைத்திசார் தூண்ட, அதெல்லாம் எங்க மாப்பிள்ளை சொன்னா சொன்னபடிக்குத் தருவார். நீங்க ஒண்ணும் துச்சமா வார்த்தை சொல்லண்டாம் கேட்டேளா. ஏண்டி சிநேகா வாயைத் திறந்துதான் பேசேண்டி நானே மெனக்கெட்டுண்டு நிக்கறேனே என்றாள் விசாலாட்சி மன்னி ஒவ்வொரு வார்த்தைக்கும் குலுங்கிச் சிரித்தபடி.

பின்னே இல்லியா ? சாவக்காடோ, சென்னப்பட்டணமோ, ஒரு கண்ணாடி கிடைக்காதா என்ன மடியிலே பணத்தோடு இறங்கிப்போய் சிரத்திச்சுத் தேடினாக்க ?

சிநேகா ஏதோ பதில் சொன்னாள்.

அவள் முதுகுக்குப் பின்னால் என்னமோ பெரிசாக நடந்திருக்கிறது அல்லது நடக்கப் போகிறது. ஆலப்பாட்டுத் தமையன்மார் வந்தாலே அவளுக்குப் பலமாக இருக்கும்.

ஆனாலும் சிநேகாம்பாளின் தம்பி போய்ச் சேர்ந்து அனுப்பி வைத்தது அவர்களுடைய தகப்பனாரைத்தான்.

எல்லாரும் ஜோலித் தெரக்குலே இருக்கா. நான் தான் பூரணமா ஸ்வஸ்தமாயிட்டேனே. கல்யாணம் விஜாரிச்சுட்டுப் போகலாம்னு கிளம்பி வந்தேன்.

அவர் காலையில் வந்திறங்கி உற்சாகமாகச் சொன்னதற்குக் கொஞ்சம் முன்னால் தான் தோட்டத்தில் வைத்துக் கிட்டாவய்யன் சிநேகாம்பாளிடம் தான் பாதிரிகளின் மதத்தில் ஏறியதை அறிவித்தான்.

நீ ஏதொண்ணுக்கும் பயப்படாதே. நான் எல்லாம் சமாளிச்சுக்கறேன். இன்னும் பத்து இருபது நாள்லே நாம கொல்லத்துலே இருந்தாகணும். கிளம்பு.

அவன் சொன்னபோது சிநேகாம்பாள் பித்துப் பிடித்ததுபோல் இருந்தாள்.

ஜான் கிட்டாவய்யரே, வீட்டில் உம்மைக் கட்டியோள் நீர் சத்திய வார்த்தையை ஏற்றுக் கொண்டதைக் கேட்டால் மனக் கிலேசமடைந்து போவாள். அது சுபாவமானது தான். ஸ்திரியல்லவா ? அஞ்ஞானம் விலக நேரம் செல்லும். அது விலகி அவளும் நித்திய ஜீவனையும் வெளிச்சத்தையும் அடையாளம் காணும்போது எல்லாம் சரியாகி விடும். அதுவரை அவளுக்குச் சொல்ல வேண்டியது என்னவென்றால்.

சிநேகா, நான் இன்னும் ஒரு கொல்லம், மிஞ்சிப் போனா ரெண்டு கொல்லம் வேதத்துலே இருந்துட்டு அப்புறம் சாவக்காட்டான் காசை அவன் மூஞ்சியிலேயே வீசிட்டுப் பழையபடிக்கு ஆகிடுவேன்.

சிநேகாவால் நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. ஆனால், சாப்பாட்டுக்கடை நிறையப் பணத்தை வாரிச் சொரியும் தொழில். அதை வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஒருத்தர் விடாமல் விருத்தியாகி வந்திருக்கிறதாக அம்பலத்திலும் குளங்கரையிலும் பேசிக் கொள்கிறார்கள் எல்லோரும். கிட்டாவய்யன் விருச்சிக மாதம் தொடங்கி ஆறு மாசத்தில் காசு குறைச்சலில்லாமல் சம்பாதித்து சாவக்காட்டான் கடனை அடைத்துத் திரும்பியும் வீபூதி குழைத்துப் பூசிக் கொள்வான். அதற்கான சாமர்த்தியம் இருக்கப்பட்டவன் சிநேகாம்பாளின் புருஷன்.

மல்லிகைப்பூ மாலையோடு இன்னும் மாப்பிள்ளைக் கோலத்தில் இருந்த சங்கரனிடம் அவசரமாக அடுத்த கிராமம் வரை போய் இன்னும் ரெண்டு மணிக்கூரில் திரும்புவதாகத் தெரிவித்துக் கிட்டாவய்யன் கிளம்பும்போதுதான் அவன் மாமனாரான ஆலப்பாட்டு வயசன் வந்து இறங்கியது.

குளிச்சு, இலையடை நாலு சாப்பிட்டு நீங்க இங்கேயே ஊஞ்சல்லே விச்ராந்தியா இருங்கோ. நான் சுருக்கா வந்துடறேன் என்று அவரிடம் கிட்டாவய்யன் உபச்சார வார்த்தை கூறியபோது, மரவணைக்கு யார் வேஷம் கட்டிண்டு ஆடப்போறா என்று விசாரித்தார் வயசன்.

யாருமே இல்லே. ஆட்டம் இல்லாமத் தான் ஊர்வலம்.

குப்புசாமி அய்யன் வருத்தத்தோடு சொன்னது கேடு, நான் பொம்மனாட்டி வேஷம் கட்டிண்டு ஆடறேன் என்றார் அவர் உடனடியாக. உங்களால் முடியுமா என்று குப்புசாமி அய்யன் விசாரித்தபோது அவர் கோயில் கொடிமரத்தை நனைத்ததை நினைத்துக் கொண்டான்.

இப்பல்லாம் நான் பறக்கறதில்லே குப்புசாமி. தூங்கறபோது சில சமயம் படுக்கைக்கு மேலே ஒரு விரல்கடை தூரத்துலே மிதப்பேனாம். யாராவது பாத்து நடுவிலே இன்னும் ரெண்டு தென்னம்பாயை விரிச்சா சமதளம்தான்.

வயசனுக்கு எதிர்ப்பாட்டு பாடி ஆம்பிளை வேஷம் கட்டி ஆட வயசான தள்ளை ஒருத்தரும் கிடைக்காமல் சுந்தரகனபாடிகளின் பெண்டாட்டியைக் கேட்டார்கள்.

சரின்னு சொல்லுடி. நாலு நறுக்கு ஆடிட்டு வந்துடலாம். ஒரு தமாஷுக்குத்தானே.

சுப்பிரமணிய அய்யரின் குரலில் ஏறி மூத்தகுடிப் பெண்டுகள் கேட்டுக்கொள்ள அவள் அதெல்லாம் முடியாது என்று சொல்லிவிட்டாள். சுப்பம்மாளா என்ன அவள், அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் கூடவே போய் சொல்கிறபடியெல்லாம் விழுந்து விழுந்து காரியம் பார்த்துக் கொண்டு கிடக்க ? புடவைக்கு மேலே சேலம் குண்டஞ்சு வேஷ்டியை உடுத்திக்கொண்டு தய்யத் தக்கா என்று தெருவில் குதிக்க அவளுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கு ?

சுப்பிரமணிய அய்யர் சுந்தர கனபாடிகளின் பீஜபலத்தைக் கேலி செய்து பாட ஆரம்பிக்க, கச்சேரி ராமநாதய்யர் அவரை அந்தப்பக்கம் அழைத்துப் போனார். கூடவே நடந்த ஜோசியர் அண்ணாசாமி அய்யரிடம் இந்த மூத்தகுடிப் பெண்டுகளின் அட்டகாசம் தாங்கலை என்றார் அவர்.

சுப்பிரமணிய அய்யர் ஜோசியரைப் பார்த்து போடா, போய் யோனி மாதிரி யந்திரம் பண்ணிண்டு வந்து பிரதிஷ்டை பண்ணிக் கும்பிடு என்றார் பெண்குரலில்.

அதற்குள் மடிசாரும், கண்ணில் மையுமாக ஆலப்பாட்டு வயசன் ஆடியபடி வர, நாதசுவர கோஷ்டியும் பின்னால் மரவணை ஊர்வலமும் கிளம்பிவிட்டது.

நந்தவனத்தில் ஓர் ஆண்டி.

கனபாடிகள் பிஷாரடி வைத்தியர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து வயசனின் ஆட்டத்தைப் பார்த்தபடி இருந்தார். நேற்றைய சோபான ராத்திரியில் புரோகிதன் சொன்ன மந்திரம் அவர் நினைவில் சுழன்று வந்தது.

உன்னில் என்னை இட்டு நான் அரணி கடைவேன். நெருப்பாக இங்கே நமக்கு வம்சம் பெருகட்டும்.

அரணி இனி அவருக்கு வசப்படாது. வயதாகி விட்டது. எள்ளும் தர்ப்பையும் திவசமும் கூட அவருக்கு இல்லை. அவர் யந்திரங்களை நிர்மாணிக்கிறவர். நேற்று பகவதி சங்கரனுக்குக் கொடுத்தது போன்ற யந்திரங்கள். தேவதைகள் சகல திக்குகளிலும் நின்று நேரம் கடந்து போய்க் கொண்டிருக்கிறது என்று நொடிக்கொரு தடவை சொல்லி, முள்ளைச் சுழற்றி நகர்த்தும் யந்திரங்கள்.

எல்லா யந்திரங்களையும் நிர்மாணித்து முடித்த திருப்தி முகத்தில் தெரிய அவர் சுப்பிரமணிய அய்யரைப் பார்க்க, அவர் கண்ணாடிக் குடுவையில் திரவம் எதையோ கொதிக்க வைத்து அது சரியான சூட்டில் திளைப்பதைப் பார்த்தபடி நிற்கிறதாகவும், கவனத்தைக் கெடுத்துவிட வேண்டாம் என்றும் நல்ல மலையாளத்தில் சொன்னார்.

அந்த எழவெடுத்த பார்ப்பானுக்குக் கொடுத்த சவரனைப் பிடுங்கிட்டு வா என்று துரைத்தனத்துப் பாஷையில் துப்பாக்கியை உயர்த்தித் தோளுக்கு மேல் பிடித்த சிப்பாய்க்குக் கட்டளை பிறப்பித்துவிட்டுப் புகைக் குழாயை தீர்க்கமாக வலிக்கிற பிரயத்தனத்தில் இருந்தார் ஜோசியர் அண்ணாசாமி அய்யங்கார்.

சங்கரன் பகவதிக் குட்டியின் உள்ளங்கையில் கிள்ளினான்.

நீங்க கிள்ளிப் பிடுங்க இங்கே மட்டும் தான் பாக்கி இருந்தது உடம்பிலே என்றாள் மெல்லிய குரலில் பகவதி அவனிடம்.

அவளுக்கு இடுப்பை இறுக்கிப் பிடிக்கிற ஒரு துரைச்சானி பாவாடை அடுத்த தடவை பட்டணம் போகும்போது வாங்கிவந்து கொடுக்க வேண்டும். அதை உடுத்த வைத்து, அப்புறம் எடுக்க வைத்துப் பார்க்க வேண்டும். போகம் தான் எல்லாம். பழுக்காத்தட்டு சங்கீதம் கொண்டுவரச் சொல்லி அந்த நூதன வாகனக் களவாணிகளிடம் சொல்ல வேண்டும். நக்னமாக மாடியில் நின்றபடிக்கு அதைச் சுழல விட்டுக் கேட்க வேண்டும். சங்கரன் சாமவேதம் படித்தவன். அதை மறந்தவன். மனம் ஒரு நிமிடம் அவனைக் குடிமாற்ற இடுப்பில் கடியாரம் கணகணவென்று மணியடித்தது.

கரண்டிக்கார பிராமணன்

கள்ளிக்கோட்டை போனானாம்.

சாவக்காட்டான் வழிசொல்ல

சாத்திரத்தை மாத்தினானாம்..

கள்ளுச் சொட்டாக் காப்பியும்

காரவடை இட்டலியும்

வேணுமின்னா ஏறுங்கோ

வேதக்காரன் கடையிலே.

ஆலக்காட்டு வயசன் பாடியபடிக்கு மேலே கொஞ்சம் எழும்பினார். மூத்தகுடிப் பெண்டுகள் அவரைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார் கனபாடிகள் ஜோசியரிடம்.

வயசனைப் பிடித்துத் தரையிறக்க ஓடி வந்த சின்ன எம்பிராந்திரி ஜோசியரைப் பார்த்து, யோனி மாதிரி யந்திரம் செய்து என்ன பிரயோஜனம் ? அது கொண்டு விக்ஞான வளர்ச்சிக்குக் கிஞ்சித்தும் பிரயோஜனமுண்டோ என்று பிஷாரடி வைத்தியர் குரலில் விசாரித்தபடி ஓடினான்.

அவன் வாயில் அடித்த வாடை அபின் வாடை ஜோசியருக்கு இதமாக இருந்தது.

(தொடரும்)

Series Navigation