This entry is part of 47 in the series 20040304_Issue


—-

ம ை ழ

எஸ். ஷங்கரநாராயணன்

—-

ஜனங்கள் தண்ணீர் லாரிக்குக் காத்திருக்கிறபோதும், பலசரக்குக் கடைகள், சலுான், டாக்கடை என்று சந்திக்கிறபோதும் மழை பற்றிப் பேச ஆரம்பித்திருந்தார்கள். கோடை விலகிப் போகிறதாய் இருந்தது- அவர்கள் மனதில் இருந்து.

ஆனாலும் வெளிச்சூடு அசாத்தியமாய் இருந்தது. மனுச மக்களை வாட்டி வதைத்தது வெயில். என்ன உக்கிரக் கோபம்டா இது. இயற்கைன்னா ஜனங்களுக்கு பெத்த தாய் மாதிரியில்லையா ? அம்மாவே இப்டி வேத்துமுகம் காட்டினால் ஜனங்க என்ன செய்யும் பாவம்.

வயித்துப் பிள்ளைக்காரி நிறைசூலி ராசாத்தி. பொய்வலி கண்டாச்சி. நேரா நிக்க முடியாமல் சற்று முன்சாய்ந்து நிற்கிறாள் தண்ணீர் லாரியை எதிர்பார்த்தபடி. காலகட்டிச் சிறுநடை. வயித்தில் சுமையுமாய் தண்ணீர் பிடித்துக் கொண்டு இடப்புறம் குடத்தின் அதிகச்சுமையை ஏந்தி அவள் வீடுதிரும்புவாள். அவள் வீட்டுக் கிணறு துப்புரவா தண்ணியில்லாமல் வத்திவிட்டது. புருசங்காரன் வேத்துார். வார இறுதி நாட்களில் ஓடோடி வருவான். வந்தால் சைக்கிளில் துாரம்வரை போய் ரெண்டு பக்கமும் குடமெடுத்துக் கட்டிக்கொண்டு எங்கிருந்தாவது தண்ணீர் கொண்டு வருவான். மத்தபடி அவளேதான் வீட்டுப்பாடுகள் பார்த்துக் கொள்ள வேண்டிவந்தது.

‘ ‘மழை வந்தா நல்லதுதான… யாரு வேண்டான்னாங்க… மழைப்பேறும் மகப்பேறும் எப்பன்னு யாரு கண்டாங்க ? ‘ ‘ என்றாள் ராசாத்தி வலியும் களைப்புமான புன்னகையுடன்.

‘ ‘உன் வயித்துப்பானை முழுசா இருக்கு. தண்ணிப்பானை காலியாக் கெடக்குடி ‘ ‘ என்றாள் சுலோச்சனா சிரிப்புடன். நிகழ்காலக் கலவரங்களுக்கு மத்தியில் அவர்கள் சிரிக்க விரும்பினார்கள்.

தண்ணீர் லாரி வரவில்லை. நேற்றே வந்திருக்க வேணும். ஜனங்கள் நேற்றிலிருந்தே காத்திருந்தார்கள். வழியில் திரும்பி எங்காவது அதிகத் துட்டுக்குத் தண்ணியை அவன் விற்றிருக்கக் கூடும் எனவும் அவர்களில் பேச்சின் நடுவே பரிமாறிக் கொண்டார்கள். வரும் வழியில் டாக்கடைகள் நிறைய. கூடவே டிபனும் விற்கிறார்கள். கையேந்தி பவன்கள் கூட பெரும் தார்ப்பீப்பாய்களில் தண்ணீர் லாரித்துண்ணீரை வழிமறித்து நிரப்பிக் கொள்கிறார்கள். ழுழுலாரியாய்ப் போய்ச்சேர வேண்டிய லாரி குறைகுடம் கூத்தாடும் என்பதைப்போல தெருவெங்கும் வண்டிமாட்டு மூத்திரமாய்த் தண்ணீரைச் சிந்தியபடி போய்ச்சேர்வதற்கும் அதற்கும்… ஜனங்களின் திண்டாட்டத்துக்கு விமோசனங் கிடையாது என்றாகி விட்டது. குடிகார டிரைவர். அவனிடம் கேள்வி கேட்கவே பெண்கள் பயப்பட்டார்கள். பெரிய மீசைக்காரன். தண்ணி பத்திக் கேட்டால் ஆளுங்கட்சின்றான். சங்கம்ன்றான். நாளை லாரி வராதுன்றான். தண்ணீர் பத்தி மட்டும் அவனிடம் பதில் இல்லை.

ஜனங்களுக்கு முன்பெல்லாம் செய்திகளில் வாசிக்கும் பெண்ணின் புடவையுடுத்தலும் அலங்காரயெடுப்பும் பேச்சாய்க் கிடந்தது. கார்கிலில் நம்மாளுங்கள் செத்தால் ச் என்பார்கள். சிலபேர் செய்தியறிக்கை நேரம் சேனல் மாற்றி விடுகிறதும் உண்டு. அப்படியாப் பட்டவர்களே இப்போது முழு செய்தியும் கேட்டார்கள். கோபி அன்னன் – எல்லாருக்கும் அண்ணன் அவர் – கைகொடுத்துக் கொண்டே இருக்கிறார் யார் யாருக்கோ… எல்லாப் பயலுவளும் கைகுலுக்குறானுங்களே தவிர எவன் மதிக்கிறான் அவரை ? பாவம்… அவரோடு அதிகம் கைகொடுத்தவரே ஜார்ஜ்புஷ்தான்! – ஜனங்களுக்கு அதெல்லாம் புரியவில்லை. பின்லேடன் சதாம் ஹுசேன் பத்திக் கேள்விப் பட்டிருந்தார்கள்- ஆனால் ரெண்டுபேரும் என்ன ஆனார்கள் தெரியாது. அவர்களுக்கு இன்டர்நேஷனல் லெவலில் ஒரு வீரப்பன் இந்த பின்லேடனும் சதாமும்….

ஆனாலும் செய்தியறிக்கை முழுசும் பார்த்தார்கள். செய்தி முடியும் தருணத்தில் ஒரு சுரிதார்போட்ட சின்னப்பெண் வாத்திச்சிபோல நீளக்குச்சியை மேப்பில் காட்டி நாளை மழைபெய்யும் என்று சோசியம் சொன்னால் ஜனங்களுக்கு அதில் ஒரு சந்தோசம்… மவராசி வாய்முகூர்த்தம் பலிக்கட்டும்.

தமிழ்நாடு மனுசமுகமாட்டம் இருந்தது மேப்பில். அதன்மேல் மேகம்… கர்ச்சீபால் துடைத்துக் கொள்வதுபோல… தொலைக்காட்சியில் காட்டினால் மழைவரும்.

காற்று முகம்மாறி சிறுகுளிர் வந்தாலே ஜனங்கள் ஆர்வக் கொந்தளிப்பாகி வாசலுக்கு வந்து வானம் பார்த்தார்கள். வெயில் உள்மூச்சு வாங்கிட்டது. மேகமற்றுக் கிடந்தது வானம். ஆனால் காற்று சற்று சிலிர்ப்பா யிருந்தது. கிட்டத்தில் எங்கோ மழை பெய்கிறது போல. இங்கே வரவேண்டிய மேகலாரி… வழியில் பஞ்சராகி மழைத் தண்ணீரை வழியில் ஊற்றி விட்டதா ?

ஆனாலும் கோடைவெயில் வருஷா வருஷம் எகிறிக் கொண்டே போகிறது. நிலத்தடியில் நீர் வேறு இல்லை. குழி குழியாய்க் கிடந்தன வீட்டுக் கிணறுகள். சிலர் தினசரி கும்பிடும் சாமிக்கு பதில் மாத்துசாமி – ஸ்பெசலிஸ்ட் டாக்டர் மாதிரி – தேடி விமோசனத்துக்கு அலைந்தார்கள். ஆழ்குழாய்க் கிணறுகள் தெருவெங்கும் அஜீரண மாட்டுச்சாணிபோல சகதியிறைத்தன. அத்தனை ஆழம் இறங்கியும் தண்ணி சுத்தத்தண்ணிக்கு வகையில்லை. இரும்புவாடையாய்க் கலங்கலாய் வந்தது. வாய்கொப்பளிக்கக் கூட முடியாத தண்ணீர். இவனை ரிசல்ட் பார்த்துக் கொண்டு பக்கத்து வீட்டுக்காரனும் குழாய்க்கிணறெடுக்க நினைத்தது…

‘ ‘நல்ல வேளை. நம்ம துட்டு மிச்சம் ‘ ‘ என்றான் வீட்டுப் பொம்பளையிடம்.

‘ ‘கிணத்தில் தண்ணியில்லை. என்னத்த நல்லவேளைன்றீங்க, லுாசுப்பிறவி ‘ ‘ என அவள் சலித்துக் கொண்டாள். கணவனை அடிக்கடி லுாசு எனச் சொல்வதில் அலாதிப் பிரியக்காரி. எப்படியாவது அவனும் அவளுக்கு வாய்ப்பு தந்துகொண்டே யிருக்கிறான் விடாமல்.

நேற்று பாதிராத்திரியில் தெருச்சத்தங் கேட்டு அவன் பெண்டாட்டியை எழுப்பினான். ‘ ‘ஏட்டி தண்ணிலாரி போல… எந்திரி எந்திரி… ‘ ‘ பாதகத்தி பக்கத்து வீட்டின் கிணத்தில் இருந்து தண்ணி ஒருகுடம்… கிணத்துத் தண்ணி எடுத்துவந்து கைகால் கழுவ வெச்சிருந்தவ அதை அப்டியே கொட்டிட்டு வாசலுக்கு வந்தாள். பார்த்தா லாரியுங் காணம் கீரியும் காணம். பத்து வீடு தள்ளி ஆட்டோக்காரன் ஒருவன்… குடியிருக்கிறவன்… வீடு திரும்பினான். சத்தம் அவன் ஆட்டோ சத்தம். வெஞ்சினமா

உள்ள வந்து பாத்தா இவாள் அதற்குள் சிறுகுறட்டை யெடுப்புடன் துாங்கியாச்!… பொழுது முச்சூடும் துாங்குவதில் மனுசனுக்கு நிகரே கிடையாது.

இவளுக்கு கையிருப்பில் இருந்த குடத்துத் தண்ணியும் போச்சில்ல ?

காலையில் அர்ச்சனை இருக்குது ஐயாவுக்கு. அதுந் தெரியாத உறக்கம். என்ன குறட்டைடா இது. கிணற்றில் ஜகடை சுற்றுகிறாப் போல… கயிறெங்கே ? வாளியெங்கே அட தண்ணீர் எங்கே ? வெறும் ஜகடைக் கடகடப்பு.

திருஷ்டிப் பொட்டெடுத்த பெண்பிள்ளையும், முகப்பவுடர் பூச்சும் நல்லபுடவைக் கட்டலுமாய் பானு நடந்து போகிறாள். பக்கத்தெரு. அம்மாவீட்டுக்கா தெரியவில்லை. உற்சாகத் துள்ளல் நடை.

‘ ‘தண்ணி பிடிச்சிட்டியாக்கும். ஜாலியாக் கிளம்பிட்டே ? ‘ ‘ என்கிறாள் கோமதி.

மூர்த்தி நேற்றே குளிக்காமல் அலுவலகம் கிளம்ப வேண்டியதாயிற்று. இன்னிக்கும் குளிக்கா விட்டால் எப்படி ? துவைக்காத உடைகள் வேறு. அந்த உடைகளை மாட்டிக் கொள்ள அவனுக்கே தாளவில்லை. சாதாரணமாகவே மகாவியர்வைக்காரன். துஷ்டனைக் கண்டால் துார விலகு… என்பதைப் போல ஜனங்கள் அவனைக் கண்டு விலகி ஒதுங்கினார்கள்… வெயில் எல்லாரையும் துஷ்டர்களாக ஆக்கி விடுகிறது… ஆளும் சொறிகிற மண்டையும் தொடையிடுக்குப் புண்ணும் உதடு ஓரத்தில் வெள்ளையுமாய்… அவனை அவனுக்கே பிடிக்கவில்லை.

ஜனங்களில் சிலர் அலுவலகத்தில் சீக்கிரம்வந்து குளிக்க ஆரம்பித்தார்கள். குடிதண்ணீர் டிரம்களில் இருந்து பாட்டில்களில் பிடித்து சிலர் வீட்டுக்கு எடுத்துப் போனார்கள்.

லார்டு லபக்தாஸ் என்று பட்டப்பேர் கொண்ட சிகாமணி. திருட்டில் டிகிரி வாங்கியவன். பூட்டாத சைக்கிள் என்றால் ஏனோ அது அவனுக்கு அவன்சைக்கிள் மாதிரியே தோணி விடுகிறது. சிலசமயம் பூட்டிய சைக்கிள் கூட. பார்ட்டி உஷார்னாக் கூட அவன் வழி தனி. சைக்கிளை உரிமையாய் இரவல் கேட்டு – ஒரு எமர்ஜென்சி சார்… சைக்கிள் குடுங்க – வாங்கிக் கொண்போய் அடகு வைத்து சாராயங் குடித்து விடுவான்.

தண்ணீர்க்குட வரிசை லாரிக்கு தனித்துக் காத்துக் கிடந்தால் ஒவ்வொன்றும் அவன் வீட்டுக் குடமாகவே அடையாளம் தோணுகிறது. லார்டு லபக்தாசின் மனைவி சீதம்மா இத்தனை கொடுமைக்காரி அல்ல- தண்ணீர் பிடித்து வைத்துவிட்டு கைவேலை உள்வேலையாய் வீட்டில் எவளாவது இருந்தால் சீதம்மா அரவமில்லாமல் குடத்தை எடுத்துப் போய் தன்வீட்டில் தண்ணீரைக் கொட்டிக் கொண்டு குடத்தை பத்திரமாய்க் கொண்டுவந்து வைத்து விடுகிறாள்.

தெருவில் கிடக்கும் குடவரிசை விநோதக் கலவையாய்க் கிடந்தது. பிளாஸ்டிக் வகையறாக்கள். அவற்றில் புத்தம் புதியவை அநேகம்… அந்த வீடுகளில் சமீபத்தில் கிணறு வற்றியிருக்கலாம். எவர்சில்வர் குடங்கள் என்றாலும் அவையும் காத்திருக்கின்றன. நிலம் எல்லாருக்கும் ஒன்று என்கிறாப்போல. குடத்துக்கு பதில் டப்பாக்கள் கல் அடையாளங்களும் உண்டு.

கைவாகு கண்டு உள்ளொடுங்கிய குடங்கள் நடுப் பெருத்த இடுப்புப் பகுதியில் உதடுபோலும் நெளிசல் கண்டிருந்தன சில. அவற்றை எடுத்துப் போக சிறு பிள்ளைகள் மட்டுமே அமைந்திருக்க… கனந் தாங்கவொண்ணாமல் அவற்றை அவை கீழே போட்டிருக்கலாம்.

கல்யாண மொய்யாக வந்த குடங்களில் சில உபயதாரர் பேர் கண்டிருந்தன.

எத்தனை கத்தியும் வரிசை போட்டும் தண்ணீர் ஊற்ற ஆரம்பித்ததும் அந்த வரிசை காணாமல் போய்விடுகிறது. அதுவரை சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவர்கள் பேன்பார்த்துக் கொண்டிருந்தவர்கள் குரங்குகள் போல உக்கிரப்பட்டார்கள். கண்சிவக்க சண்டையிட்டார்கள். வாய்கூசாமல் கெட்ட வார்த்தை பரிமாறிக் கொண்டார்கள்.

வார்த்தை பொறாதவர்களும் அப்பாவி மக்களும் ஒதுங்கி மிரண்டுபோய் நின்றார்கள். தண்ணீர் அவர்கள் முறைவரை வருமா என்று கவலையாய் இருந்தது. சின்னவாளிகள் குடங்கள் என்று வைத்தவர்கள் கூட அதைக் காட்டிவிட்டு பெரும் அண்டாக்களை வைத்துத் தண்ணீர் பிடித்துப் போனார்கள்.

வீட்டில் பொம்பளையாள் இல்லாத ஆண்கள் பிஸ்கெட் கடை நாய் மாதிரி நின்றிருந்தார்கள். எவளாவது தன் வரிசையில் முன்னிடம் தர மாட்டாளா என அவர்கள் நேர்முகம் பார்த்த பெண்களையெல்லாம் பார்த்து அசட்டுப் புன்னகை பிரிந்தார்கள்.

‘ ‘அம்மா ஃபோன் வந்திருக்கு… ‘ ‘

‘ ‘யாரு ? ‘ன்னு கேட்டு, வெச்சிருடி. அப்றமா வந்துபேசறேன். தண்ணி பிடிச்சிட்டிருக்கேன்ல… ‘ ‘

‘ ‘பேசிட்டு வாம்மா. உன்முறை வரும்போது நான் தண்ணி பிடிச்சி வைக்கிறேன்… ‘ ‘ என்று சொன்ன சீதம்மாவை முறைக்கிறாள் அம்மா.

தண்ணீர்ச் சண்டை என்று வந்தால் சமாதானப் படுத்த புதிய ஆட்கள் முளைத்தார்கள்…. அவர்கள் வீட்டுக்கு அன்றைக்கு மேலதிகம் தண்ணீர் கிடைத்தது…

கஞ்சிபோட்டு வெளுத்து விரைத்த போலிஸ்காரக் காக்கிச் சட்டைகள் இப்போது அழுக்கும் வியர்வைப் பிசுக்குமாய் பஸ் கண்டக்டரின் சில்லரைப்பை போல ஆகியிருந்தது.

தண்ணீர் பிடிக்க என்று பித்தளைக் குடங்களும் எவர்சில்வர் குடங்களும் மோதிக்கொண்டது சரித்திரகால வாள்ச்சண்டைச் சத்தமாய் இருந்தது.

பத்திரிகைகள் கவர்ச்சிப் படங்கள் அதிகம் வெளியிட்டு ஜனங்களைக் குளிரப்பண்ண முயன்றன.

இதற்கெல்லாம் விடிவுகாலமே கிடையாதா ? கத்திரிக்கு வராதா கத்திரி – சென்சார்- எனக் காத்துத் தவித்துக் கிடந்த ஜனங்கள் காத்துக் குளிர்ச்சியில் காதுமடல் கிளர்ந்தார்கள். தெருவிலும் மொட்டைமாடியிலும் படுத்துக் கொண்டு காற்றின் மாற்றத்தை அவர்கள் உணர்ந்தார்களே…

லார்டு லபக்தாசுக்கு தன் சைக்கிள் அடையாளம் தெரிய வந்துவிடுமாய் இருந்தது. கெட்ட வார்த்தை பரிமாறிக் கொண்ட பெண்கள் அக்கா என்றும் தங்கை என்றும் உணர்ந்து ஒண்ணாய் அமர்ந்து சினிமாக்கதை பேசியபடியே பேன் எடுத்துக் கொண்டார்கள் ஒருவருக்கொருவர்.

ஆனால் தலையில் பேன்கள் குறைந்திருந்தன.

அடியப்பா என்னவெல்லாம் திருடு போய்க் கொண்டிருந்தது. திறந்திருந்த ஜன்னல்வழியே கைவிட்டு எது கிடைத்தாலும் லவட்டிக்கிட்டு ஓடிய படுபாவிப் பய காலமாய் இருந்ததே…

ஆண்கள் திரும்ப கூச்சப்பட்டு சட்டை அணிய ஆரம்பிக்கிறார்கள். பெண்கள் தலைக்குக் குளிக்க ஆரம்பிக்கிறார்கள். காற்று எதோ பேச செடிகள் தலையாட்டின.

ஊர்ப் பைத்தியம் புதிய காற்றில் யாரோ கிச்சு கிச்சு மூட்டினாப்போல தனக்குத் தானே சிரித்துக் கொண்டு அலைகிறது.

வெயில் குறைய ஆரம்பிக்கிறது. செய்தியறிக்கை குச்சி வாத்திச்சி முகத்தில் புன்னகை அதிகரித்திருந்தது. அவள் நாலுதடவை சொன்னால் ஒருதடவை பலிக்கிறது. மழையில் நனைந்து தமிழ்நாட்டு மனிதமுக மேப்மனிதனுக்கு ஜலதோஷக் கோளாறு. அடிக்கடி அவன் மேகக் கைக்குட்டை உபயோகிப்பதைக் காட்டினார்கள் தொலைக்காட்சிப் பெட்டியில்…

‘ ‘நாட்ல திருட்டுத்தனம் இனி குறைஞ்சிரும்லக்கா… ‘ ‘ என்றாள் கோமதி.

‘ ‘ஆமடி ஆமா… ‘ ‘ என்று புன்னகைத்தாள் சீதம்மா. லார்ட் லபக்தாசின் பெண்டாட்டி.

அவள் வாய் முகூர்த்தம் பலித்தது.

அன்றிரவு நல்ல மழை. பேக்டரி சீருடை நனைய மக்கள் வீடு திரும்பினார்கள்.

—-

storysankar@rediffmail.com

s shankaranarayanan new no 240 old 2/82 mugappair west chennai 600037

phones/res 26258289 26521944

Series Navigation