நீலக்கடல் (தொடர்) – அத்தியாயம் 9

This entry is part of 47 in the series 20040304_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


‘TOUT LE CORPS DU GENIE REDUIT A UN METIS INDIEN ‘

– LABOURDONNAIS

இரவுமுழுக்கக் கூச்சலும் குழப்பமுமாக விழித்துக்கிடந்த பிரெஞ்சுத்தீவு விடிந்த பிறகு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. கிழக்குவாசலில் கால்வைத்திருந்த சூரியனுக்கு, உள்ளே வருவதற்குத் தயக்கமிருந்தது. அன்றைய பகற்பொழுதின் சாட்சியாக இருக்க விரும்பாததே காரணம். இதுபோன்ற நாட்களில் இரவுகளில் மட்டுமல்ல பகல்களிலும்கூட, நெருப்புக் குழம்பில் முங்கித் துடிக்கும் தீவு வாழ்க்கையைப் பார்க்க நேர்வது மகாகொடுமை என்பதைச் சூரியன் அறிவான். மேகமும் மந்தாரமுமாக இறுக்கத்துடன் இருந்த வானத்திற்குத் தூறலிட ஏனோ தயக்கம். மரங்கள் காற்றின்றி அசைவற்றுத் தங்கள் பங்கிற்கு அந்த நாளினை ‘சிலுவை ‘ சுமக்கச்செய்திருந்தன. பறவைகள்கூடத் தங்கள் தினக் கடன்களில் ஆர்வம் காட்டாது கூட்டிற்குள் அடைபட்டுக் கிடக்கின்றன. நலிந்த உயிர்களை, மிருகங்களென்றால் வயிற்றுக்காகவும், மனிதர்களென்றால் வாழ்க்கைக்காகவும் வேட்டையாடுவதென்பது யுகங்களாகத் தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது. வாழ்க்கை யுத்தத்தில் மோதுவதற்குத் தந்திரசாலி சமபலமற்றவர்களையே தேர்செய்திருக்கிறான். மான்களை விரட்டிக் கவ்வி, கால்களுக்கிடையில் கிடத்தி, பற்களால் குடற்கிழித்து நிணத்தை ருசிபார்க்கும் சிறுத்தைகளாக, அப்பாவி அடிமைகளை வேட்டையாடித் தண்டனையென்கின்ற பெயரில் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி அரங்கேற்றும் காட்சிகளைக்காண ‘இயற்கை ‘க்குக்குக் கூட மனம் கொள்ளாது

கபானிலிருந்த காமாட்சி அம்மாள், தெய்வானை, கைலாசம் மூவருக்குமே நேற்றைய இரவு தூக்கமில்லை. குடும்பத்தைப் பற்றிய பொதுவான கவலைகளிருப்பினும், அவர்களுக்கெனப் பிரத்தியேகக் கவலைகளுமிருந்தன.

காமாட்சி அம்மாள் தன் பிள்ளைகளுடன் சில ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரியிலிருந்து நூற்றிருபது தமிழர்களுடன் தீவில் வந்திறங்கியபோது, அவளது எதிர்பார்ப்பு வேறாக இருந்தது. பிள்ளைகளுக்கு இந்திய மண்ணில் எங்கேயிருந்தாலும் ஆபத்துகள் தொடர்வதை அறிந்து, இவளாகத் தனக்கு வேண்டியவர்களின் உதவியுடன் தேடிக்கொண்ட தலைமறைவு வாழ்க்கையிது. பிரெஞ்சுத்தீவின்(Ile de France) கட்டுமானப்பணிகளுக்காக ஆட்கள் தேவைப்பட்டு, அழைத்துப் போகப் புதுச்சேரி வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து, தனது குடும்ப நண்பர்களின் உதவிகளுடன் தெய்வானையையும், கைலாசத்தையும் கப்பலில் ஏற்றிவிட்டு, இவளும் புறப்பட்டுவிட்டாள். தீவுக்கு வயதானவர்களைக் கம்பெனி நிர்வாகம் கூட்டிப்போவதில்லை. உழைக்கும் திறனுள்ள இளவயதினரும், சிறுவர் சிறுமியர் மட்டுமே கப்பல்களில் கொண்டு செல்லப்பட்டனர். கப்பல் மாலுமி, காமாட்சி அம்மாளை கப்பலில் ஏற்ற மறுத்தான். கைலாசமும் தெய்வானையும் தங்கள் அன்னை தங்களுடன் பயணிக்க முடியாதெனில் தாங்களும் கப்பலில் வரமுடியாதென தீர்மானமாகச் சொல்லவே வேறுவழியின்றி அனுமதித்தான். சரியாக ஒரு மாதத்தினை கடலிற் கழித்துவிட்டுத் தீவைப் பார்க்கப் பிரம்மிப்பாகவிருந்தது. கைலாசமும், தெய்வானையும் முன்னும் பின்னும் தொடர பிரெஞ்சுத் தீவில் காலடிவைத்தபோது கண்கள் நிறைய வியப்பும் மனமுழுக்க குழப்பமுமிருந்தது.

முதல் நாள் முழுக்கக் கப்பலில் வந்தவர்களைக் கிழக்கிந்திய கம்பெனியின் சிப்பந்தி ஒருவன் கடற்கரை அருகேவிருந்த பய்யோத்* ரக கசெர்னில் கொண்டுபோய் சேர்த்தான். அவர்களுக்கான பணிகளைக் கம்பெனியின் ஒரு சிப்பந்தி பிரெஞ்சில் வாசிக்க, பூர்போனிலிருந்து இதுபோன்ற பணிகளுக்காக கம்பெனியாரால் அழைத்து வரப்பட்டிருந்த வேலுப்பிள்ளை தமிழில் மொழி பெயர்த்தார். ‘இங்கே அழைத்துவந்திருப்பது உட்காரவைத்து சோறுபோடுவதற்காக அல்ல, பிரெஞ்சு முடியாட்சியை வளப்படுவதற்காகவென ‘, ஆரம்பத்திலேயே தெளிவாகச் சொல்லபட்டது. சொந்த நாட்டில் பசிக்குப் பழகியிருந்த மக்களுக்கு, ‘உழைப்புக்கு ஏற்றவகையில் மக்காச் சோளம், மரவள்ளிமா ஊதியமாக ஏற்பாடு செய்யபட்டுள்ளதோடு, இடைக்கிடை இந்தியாவிலிருந்தோ சீனாவிலிருந்தோ வருகின்ற அரிசியும் வழங்குவோமென்ற ‘ வந்த நாட்டின் வாக்குறுதி இனித்தது. இறுதியாக, ‘பணிகள் முடிந்தவுடன், இந்தியாவிற்குக் கொண்டுபோய்விட்டுவிடுவோம் எனத் தீர்வு நிர்வாகம் சத்தியஞ் செய்ய, புலம் பெயர்ந்திருந்த மக்களிடையே மகிழ்ச்சி.. அதற்கும் மறுநாள் அவரவர் மூட்டை முடிச்சுகளுடன் இது போன்ற கபான்களில் வாழப்பழகிக் கொண்டார்கள். காமாட்சியம்மாள் இதனை எதிர்பார்க்கவில்லை. தன் பிள்ளைகளை அப்படி வளர்க்கவில்லை. வாசல்,மாடி, அறைகள், தோட்டம் என்று வாழ்ந்து பார்த்தவர்கள் கைலாசமும் தெய்வானையும். ஏவலிட்டால் செய்வதற்காக அவர்களுக்கு ஆட்களிருந்திருக்கிறார்கள். தன் பிள்ளைகளை இந்தக் குச்சுக்குள் எப்படி வளர்க்கப்போகிறேன் ? என்பதை நினைத்து நினைத்து காமாட்சி அம்மாள் வருந்தாத நாட்களில்லை..

தீவில் வெள்ளையர்களைத் தவிர மற்றவர்கள் உழைத்தாக வேண்டும். சாலைகள் போடவும், துறைமுகப் பணிகளுக்கும், இராணுவத் தளவாடங்களுக்காகாவும், இராணுவத்திற்காகவும், கசெர்ன்கள் உருவாக்கப்பட்டன.. ராம்ப்பார் (Rempart) திசையில் கரும்புத் தோட்ட முதலாளிகள், கப்பல் வைத்துக் கொண்டு வாணிபம் செய்து கொண்டிருந்தவர்கள், பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனிகளில் பணி புரிந்த்வர்களுக்குமாக ‘வில்லாக்கள் ‘ எனப்படும் குடியிருப்புகள் கட்டப்பட்டன. பெரும்பாலான கட்டுமானப் பணிகளில் புதுச்சேரி தமிழர்கள் உழைத்தார்கள். அவர்களிடையே காமாட்சி அம்மாளைப் பல காரனங்களால் பிடித்துபோயிற்று. ஒப்பந்த கூலிகளுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளை காமாட்சி அம்மாள் போன்ற்வர்கள் சுலபமாகத் தீர்த்துவைக்க கம்பெனியும் வேலை நடக்கவேண்டுமென்று அனுமதித்தது. மெல்ல மெல்ல தெய்வானைக்கும், கைலாசாத்திற்கும் கூடத் தீவு வாழ்க்கை பிடித்து போனது. காமாட்சி அம்மாளுக்கு மட்டுமே சொந்த மண்னைப் பற்றிய கவலைகள் அதிகமாகயிருப்பதாகத் தோன்றியது. தன் பிள்ளைகளிடம் எதற்காகத் தீவுக்கு வந்தோம் என்பதையும், இப்படி மறைந்து வாழ்வதற்கான காரணங்களையும் சொல்லியாகவேண்டும். இனியும் எதிரிகளை இருட்டில் வைத்துக்கொண்டு பயந்து வாழ்வது தேவையற்றது. அவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரவேண்டும். எதிரிகளை இனம்கண்டு வீழ்த்தும் திறன் தெய்வானையிடம் உண்டு. அவள் அமைதியில் மீனாட்சி, ஆர்ப்பரித்தால் மகிடாசூரவர்த்தினி. கைலைசாமொரு ஒரு வீரபாகுத் தேவன். இவர்களால் எல்லாம் முடியும், எந்த இன்னல்களையும் சந்திக்கின்ற அறிவும் ஆற்றலும் இருவருக்குமேயுண்டு. காமாட்சி அம்மாள் மனம் மீண்டும் அமைதிக்குத் திரும்பியது.

தெய்வானைக்கு வேறுவிதமான கவலை. இது பெர்னார் பற்றிய கவலை. அவனுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் நல்ல விதமாக மீண்டும் தீவுக்கு வரவேண்டுமே என்கின்ற கவலை. வெள்ளையர்களின் எதிர்ப்பையும் மீறி அவன் காதலித்துக் கொண்டிருக்கிறான். குறிப்பாக ‘அபாந்தொன்னே ‘ ஆற்றருகே மேற்கு திசையில் கரும்புப் பண்ணை வைத்திருக்கும் முதலாளியின் மகன் ‘போல் பிரான்சிஸ் ‘ உடைய வன்மம் தெரிவிக்கும் முகமும் கண்கள் உமிழும் தீயினைக் காண நேரும்போதெல்லாம் உடல் நடுங்குகின்றது. ‘பெர்னாரை என்னிடம் சீக்கிரம் அழைத்துவா, மீண்டுமொருமுறை அவன் மார்பிற் சாய்ந்து கண்ணீர்விட அனுமதிப்பாயா இறைவா!, வேண்டிக் கொண்டாள் ‘. தன் கண்ணீரை எங்கே தனது அன்னையும், கைலாசமும் கவனித்துவிடுவார்களோ என்ற பதட்டதுடன், வாசலிலிருந்த தட்டியைத் திறந்து கொண்டு, வெளியே அடர்ந்திருந்த வாழைகளைத்தேடிச் சென்றாள். வாழைகளின் மறுபக்கத்தில் அவைகளின் வேரை நனைத்து, ஓசையின்றி ஓடும் நீரோடையும், அதனில் நீராடும் கோரைகளும், அவைகளுள் வெள்ளித் தகடுகளாய்த் துள்ளி மீண்டும் நீரில் மறையும் கெண்டை மீன்களும், அவளது மனதிலேற்படும் சிராய்ப்புகளுக்குக் களிம்பு

கைலாசத்தின் கவலையோ வேறு ரகம்: அவன் மனத்தில் நேற்றைய இரவு பலசுமைகளை இறக்கியிருந்தது. தனது தாயின் மீது நடந்த தாக்குதலும் அதனைத் தொடர்ந்து அவர்களது சிறிய குடும்பத்தில் ஏற்பட்டுள்ள கலக்கங்களும் போதாதென்று, நேற்றைய பின்னிரவிலிருந்து ஏற்பட்டுள்ள புதிய கவலை. மனதை எல்லாத் திசைகளிலும் பயணம் செய்வித்து அவனைத் துன்புறுத்திக்கொண்டிருந்தது. இந்தப் புதியகவலை, அவனது பழைய கவலைகளிலிருந்து விடுதலை செய்து தன்னிடம் சிறைப் படுத்திகொண்டது.

நேற்றிரவு ‘போல் ‘ என்ற வெள்ளையனுடைய கரும்புப் தோட்டத்தித்திலிருந்து தப்பியுள்ள அடிமைகளில் ஒருவனான மஸெரி, ‘போர் லூயி ‘(Port Louis)க்கருகே கடலோரம் ‘சில்வி ‘ யின் பக்கத்துக் கபானில் வசித்த குடும்பத்தவன். கைலாசத்திற்கு கடலில் நீந்தவும், றபாணா வாசிக்கவும் பழக்கியவன். கைலாசம் கொண்டுவரும் ‘மசாலாவை ‘ப் பூசிக் கடல் மீன்களை நெருப்பில் வாட்டி, கரும்புச் சாராயத்துடன் அவற்றை உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள். சில்வியைப் போலவே, மஸேரியின் குடும்பமும் தீவின் பூர்வீக இனத்தவர், கிறேயோல் மொழி பேசுகின்ற குடும்பம். வறுமையின் காரணமாக அவனது குடும்பம் ‘போல் மொரன் ‘ பண்ணையில் கொத்தடிமையாகச் சேர்ந்தது. தீவிலே மோசமான பண்ணை முதலாளிகளில் ஒருவன் எனப் பெயரெடுத்தவன் ‘போல் ‘. சில்வியும் எச்சரித்திருந்தாள். வயிறு என்று ஒன்று இருக்கிறதே. எங்கேயேனும், எவரிடமாகினும் அடிமைப்பட்டாக வேண்டும். தீவிலிருந்த குடும்பங்களில் வெள்ளையரைத் தவிர மற்றவர்கள் ஏதோவொரு வகையில் அடிமைவாழ்வைத்தான் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். எல்லோர் கழுத்திலும் கயிறுகள் உண்டு, கயிற்றின் நீளங்களில் மட்டுமே வித்தியாசங்களிருந்தன.

மேற்கத்தியர்கள் வருகைக்கு அதாவது பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்னதாகவே மொரீஷீயஸ் தீவில் தமிழர்கள் வந்துபோனதற்கான அடையாளத்தினை அகழ்வாராய்ச்சிகள் தெரிவிக்கின்றன*1. ஆனால் பதினேழாம் நூற்றாண்டிற்குப் பிறகு இந்துமாக்கடலில் உள்ள தீவுகளுக்கு அவன் வர நேர்ந்தது வயிற்றுப்பாட்டுக்காக. ‘தேவை அளிப்பை நோக்கி பயணிக்கும் ‘ என்கின்ற விதிப்பாடு புலம்பெயருதலுக்கான ‘தலைவிதி ‘ என்ற மெய்ப்பாடு உண்மையாயிற்று. இந்துமதத்தின் பேரால் புகுத்தப்பட்ட சனாதன தர்மம், உழைக்கும் கூட்டத்தை வறுமையிலும், மற்றவர்களை சோம்பேறிகளாகவும் வைத்திருக்கப் போக, எல்லோரும் பேதமின்றி வயிற்றுக்கென எளிதாக அடிமையாக முடிந்தது.

பதினேழாம் நூற்றாண்டில், எப்பொழுது புதுச்சேரித் தமிழர்கள் இங்கே வந்திருப்பார்கள் என்பதை அறியச் சரியான சான்றுகள் இல்லையென்றாலும், 1686ம் ஆண்டில் பிரெஞ்சுத் தீவிலெடுக்கபட்டக் கணக்கெடுப்பில் அங்கிருந்த 269 நபர்களில் இந்தியக் கறுப்பர்களும் அடங்குவர்(2) என்பதன் மூலம் நம்மவர்கள் இருந்ததை அறிகிறோம். 1727ல் பிரெஞ்சுத் தீவின் கவர்னராகப் பொறுப்பேற்ற துய்மா (Duma) 1728ல் புதுச்சேரி சென்றிருந்தபோது பிள்ளைபிடிக்கின்றவன்போல நூற்றுக்கணக்கில் சிறுவர் சிறுமியரை அழைத்து வந்திருக்கிறார். அப்போது தொண்ணூற்றைந்து கொத்தனார்களையும் கப்பலில் கூடவே கொண்டு வந்ததாக ஆதாரங்கள் உண்டு(3). 1735ல் பெர்ற்றாண் பிரான்சுவா மாஹே தெ லாபூர்தொனே(BERTRAND FRANCOIS MAHE DE LABOURDONNAIS)குவர்னராக பொறுப்பேற்று வந்தபோது பிரெஞ்சுத்தீவின் நிலமை அவருக்கு ஏற்புடையதாக இல்லை. நல்லதொரு துறைமுகத்தை உருவாக்குவதுடன், தீவினில் அதிக அளவு கட்டுமானப் பணிகள் மேற்கொண்டு, பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு இந்து மாக்கடலில் ‘தீவினை ‘ நல்லதொரு கேந்திரமாக மாற்றக் கனவுகண்டார். வெள்ளையர்களின் இதர ஊழியங்களுக்கு மதகாஸ்கர், கனாரித் தீவுகள் அடிமைகளைத் தவிர, தீவின் பூர்வீகமக்களும் மலிவாய் கிடைக்க, கட்டுமானப் பணிகளுக்குத்(கப்பல் கட்ட, தச்சர், கொத்தனார், கொல்லர்) தனது தாய்நாடான பிரான்சிலிருந்து அழைத்துவந்து அதிக ஊதியம் கொடுப்பதைவிட ஒப்பந்தத் தொழிலாளர்களாகக் குறைந்த ஊதியத்தில் இந்தியர்களை அமர்த்திக்கொள்வது இலாபகரமானதென்று கருதினார். தவிர, செய்யும் தொழில்களில் தமிழர்களுக்குள்ள திறனும், நேர்த்தியும் அவரை ஆச்சரியப்படுத்தியது. இவர்களது திறனை வெகுவாக கம்பெனி நிருவாகம் மதிக்கத் தொடங்கியதால், அப்பகுதி பூர்வீக மக்களான மல்காஷ், கனாரிகள், கிறேயோல் மக்களின் வாழ்க்கை மோசமான நிலைக்குத் தள்ளப் பட்டது. கரும்புப் பண்ணைகளில் இவர்களது வாழ்வு மிகப் பரிதாபமானதாக இருந்தது. மக்காச் சோளத்திற்கும் மரவள்ளிக்கிழங்கு மாவிற்குமாக, எஜமானர்களின் பிரம்படிகளுக்கு ஈடுகொடுத்து நாள் முழுக்க உழைக்கவேண்டியிருந்தது. இதிலிருந்து விமோசனங்கள் கிடையாது. தப்பிக்க நினைத்த அடிமைகளுக்குக் கருப்பர்களின் சட்டத்தின் (The Code Noir 1723) கீழ்க் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன.

கைலாசத்தின் மனம் அலைபாய்ந்தது. மஸேரிக்கு எதுவும் நடந்துவிடக்கூடாதெனக் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டான். கறுப்பர்களின் சட்டத்தின்படி கரும்புப் பண்ணையிலிருந்து தப்பிக்க முதன் முறையாக முயல்பவர்கள் பிடிபட்டவுடன் வழங்கப் படும் தண்டனை அவர்கள் இரு காதினையும் அறுத்தெறிவது. இரண்டாவது முறையும் அவர்கள் தப்பிக்க முயன்றால் மரண தண்டனை(4). என்கின்ற நிலைப்பாடு.

‘போல் கரும்புப் பண்ணையிலிருந்து தப்புபித்த கொத்தடிமைகளை,குதிரை வீரர்கள் இரவு முழுக்கக் காடுகளில் அலைந்து எப்படியோ வெள்ளி முளைத்த நேரத்தில், கடல் வழியிற் தப்ப முனைந்தபோது பிடித்திருந்த செய்தி போர்லூயி முழுக்கப் பரவி காமாட்சி அம்மாளின் குடும்பத்தை அடைய வெகு நேரமாகிவிட்டது.. கைலாசமும் தெய்வானையும் பதைபதைத்து ஓடிவந்து பார்த்தபோது வெள்ளையர்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கருகே அவர்கள் கொண்டுவரபட்டிருந்தனர். கைகளும் கால்களும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்க, கரடுமுரடான செப்பனிடப்படாத சாலைகளில் இழுத்துவரப்பட்டிருக்க அவர்கள் அணிந்திருந்த நீல டங்கரீ** சிராய்ப்புக்குள்ளாகி ஆங்காங்கே கிழிந்து இரத்தத்தில் நனைந்துகொண்டிருந்தது. சற்றுத் தள்ளிப் ‘போல் ‘ பண்னையின் முதலாளி ‘போல் அஞ்னெல் ‘ அவனது மகன் ‘போல் பிரான்சிஸ் ‘, கவர்னர் லாபூர்தொனே, இரண்டொரு கிழக்கிந்திய கம்பெனியின் சிப்பந்திகளும் நின்றுகொண்டிருக்க எதிர்த்திசையில் ஒரு சில தமிழர்களும், கிறேயோல் ஆண்களும் பெண்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

கைலாசத்தைப் பார்த்துச் சிரித்த அஞ்நெல், பக்கத்திலிருந்த கவர்னரிடம் இவனைக் காட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். கவர்னர் தமது அருகிலிருந்த குதிரைவீரனிடம் ஏதோ கட்டளை இடுவதைக் கண்டான். அக்குதிரை வீரன், குதிரையைச் செலுத்திக்கொண்டு இவனருகே வந்து நின்றான்.

‘நாளைக் காலை கவர்னர் சமூகம் நீ வரவேண்டுமென்று கட்டைளை ‘, என்றான்.

/தொடரும்/

*. விழல் வேய்ந்த கூரையுடைய தங்குமிடங்கள்

** நீண்ட காற்சராய்

1.Les Tamouls A L ‘IleMaurice-Ramoo SooriaMoorthy Page 21

2. Les Indiens A L ‘Ile de France Page 47. Port Louis 1965

3. A.Lougnon -(Correspondance du Conseil Superieur de Boubob et de la Compagne des Indes) op.cit., Page xxxviii

4.Slaves, Freedmen and Indentured Laborers in Colonial Mauritius – Richard B. Allen – Page 36

—-

Na.Krishna@wanadoo.fr

Series Navigation