திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -15)

This entry is part of 47 in the series 20040304_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


/8/

பறவை உயர்திணை. மனிதர் அஃறிணை.

மனிதர் பறவைகளைச் சுட்டு வீழ்த்துவதில் கண்ணுங் கருத்துமாய்த் திரிகிறார்களே…

ராபின் பறவைகள் அழிந்தே போயினவே…

பறவை

அலைகிறது

மரத்தைத் தேடி.

சற்று அழகானதோர் இளம் பெண்ணுக்கு தனியே வாழ இங்கே எத்தனை நெருக்கடிகள்… நெருப்புக் கடிகள்… அவள் சூடுகள் கண்ட பூனை.

அவள் சுடர். அவளை அணைக்க முயன்ற ஆண்கள் எனும் வேட்டைநாய் வெறிக் கூட்டம்.

சுடரே சுட்டெரிக்கப் பட்ட கதை சோகக்கதை.

திசையெங்கிலும் அவள் வழிமறிக்கப் பட்டிருந்தாள்… வேலிகள் பாதுகாப்புக்காக அல்ல. அவள் வெளியேறி விடக்கூடாது என்பதாய் அமைந்த நிலை.

சற்று அழுவாள். துயர் உதறி திரும்பி எழுவாள். அவள் எழுந்து கொண்டாக வேண்டியிருந்தது.

தசையினைத் தீ சுடினும் இனி அழக்கூடாது என உறுதியெடுத்த கணம் உலகம் வேறு மாதிரியாய்த் தோணியது… அழுவதாவது… அழுகை பலவீனப் படுத்தி விடுகிறது ஆளை.

தற்செயலாகச் சாப்பிட ஒதுங்கிய ஒரு ஹோட்டலில் தற்செயலாக அவள் கவனித்தாள். அங்கே அனைவரும் பெண்கள். நிர்வாகம் முதல் சமையலறையிலும் பரிமாறவும் எல்லாருமே பெண்கள். ஆச்சரியமாய் இருந்தது. அவள் இதுவரை கண்டிராத விஷயம் இது. வாழ்க்கை பெரும் மிரட்டல் மிரட்டுகையில் ஆண்கள் ஹோட்டல் எடுபிடியாகி விடுகிறார்கள். சாப்பாடு… குறிப்பாக தங்குமிடம் சேர்ந்து சொற்ப சம்பளமும் தருகிற வசதி ஹோட்டல்களுக்கே உண்டு. இந்த அமைப்பு ஒரு பெண்ணுக்கு தனியே திகைக்கிற ஆணைவிட பெண்ணுக்கு… எத்தனை பெரிய பாதுகாப்பான விஷயம்.

‘நானும் இங்கே வேலைக்கு வந்து விடலாமா ? ‘ என்று கேட்டாள் சுடர். கல்லாவில் அமர்ந்திருந்த வயதான அம்மையார் வரியோடிய கண்ணில் சிரிப்புடன் அவளைப் பார்த்தாள்.

‘வீட்ல கோவிச்சுக்கிட்டு வந்திட்டியாம்மா ? ‘

‘இல்லை ‘ எனத் தலையாட்டினாள் சுடர். ‘நான் ஓர் அநாதை ‘ என்கிறாள்.

‘அடடா… ‘ என்று அந்த அம்மாள் வருத்தப் பட்டது எத்தனை பஞ்சொத்தடமாய் இருக்கிறது. அவளையிட்டு வருத்தப்படவும் நாட்டில் சிலர் இருக்கிறார்கள்…

‘இங்கே எல்லார் பின்னணியிலும் பெரும் சோக சம்பவங்கள் குவிந்து கிடக்கின்றன… என்னிடம் உட்பட… ‘ என்கிறார் பெரியம்மா.

‘உன் பெயரென்ன ? ‘ என்று கேட்கிறார்.

‘சுடர்… சுடர்மணி ‘

‘இப்போதிருந்து நீ வேலைக்குச் சேர்ந்தாற் போல… ‘

சுடருக்கு நம்பவே முடியவில்லை. வாழ்க்கை இத்தனை சுலபமான அளவில் பாதுகாப்பு பெறும் என அவள் எதிர்பார்க்கவேயில்லை….

இது ஆண்களின் உலகம் அல்லவா ? ஆணாதிக்க உலகம் அல்லவா… இங்கே பெண்கள் ஆண்களின் சொத்து எனவும் வேட்டைப்பிராணி எனவும் ஆகிப் போன நிலையில் இவர்கள் எப்படிச் சமாளித்துக் கொள்கிறார்கள் ?

அந்த உணவு விடுதி பெண்கள் காவல் நிலையத்தின் அருகில் அமைந்திருப்பதை கவனித்தாள் அவள். நல்ல விஷயம் அது. தவிரவும் இந்த முயற்சியை ஊக்குவித்ததே ஒரு ஐபியெஸ் பெண்போலிஸ் அதிகாரி எனவும் அறிந்தாள்… அவளுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.

காலப்போக்கில் – பெண்களும் வேலைக்குப் போகிற தற்கால நடைமுறையில் இப்படி முழுதும்-பெண்களே என்றான அலுவலகங்களும் சகஜமாகி விடும், சமூகப் பாதுகாப்பு அவர்களுக்கும் கிடைத்துவிடும் என நம்பிக்கை வந்தது அவளுக்கு.

வெகுகாலங் கழித்து அன்று நிம்மதியாய் உறக்கம் வந்தது.

—-

/தொ ட ரு ம்/

Series Navigation