அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தெட்டு
இரா முருகன்
இன்னுமா கிட்டன் வரலே ? எங்கே போனான் இன்னிக்குன்னு பாத்து ? கொஞ்சம் கூட.
குப்புசாமி அய்யன் விசாலாட்சியிடம் இரைய ஆரம்பித்தது வைத்தியநாதன் பெண்டாட்டி கோமதி அழுகிற பிள்ளையைக் கையைப் பிடித்துக் கொண்டு உக்கிராணத்தில் வடை பண்ணியாகிவிட்டதா என்று பார்க்க வந்தபோது நடுவார்த்தையில் நின்றது.
விருந்து சமைத்துக் கொண்டிருந்தவர்கள் இலை நறுக்கில் வைத்துக் கொடுத்த நாலு ஆமவடையோடு அவள் திரும்பும்போது விசாலாட்சி போதுமோ பொண்ணே இன்னும் நாலு எடுத்துக்கறதுதானே. குழந்தை பாவம் பசி பொறுக்க மாட்டாமக் கரையறது போலிருக்கு என்றாள்.
காலம்பற ஆகாரம் சாப்பிடமாட்டேன்னு விளையாடிண்டே இருந்துட்டான் அக்கா. இங்கே தோப்பும் துரவுமா இருக்கோ இல்லியோ ? பட்டணத்துலே இதெல்லாம் எங்கே கிடைக்கறது எங்களுக்கு ? சமுத்திரக் காத்தும் சம்பளமும் இல்லாட்ட மனுஷா இருப்பாளோ அங்கே ?
கோமதி குழந்தைக்கு வடையை விண்டு, சூடாற ஊதி ஊதிக் கொடுத்தபடி சொன்னாள்.
காசியாத்திரை அவசரமாக முடித்துத் திரும்பி வந்திருந்த சங்கரன் மண்டபத்தில் ஊஞ்சலாடி முடித்து, சுமங்கலிகள் சிவப்பும் மஞ்சளுமான சாத உருண்டைகளை வீசி எறிந்தது காலில் ஒட்டப் பந்தலுக்குள் போயிருந்தான். கோத்ரமும், நாலு தலைமுறை விவரமுமாக இரண்டு பக்கத்துக்கும் வம்சாவளி சொல்லிக் கல்யாணத்துக்கு சம்மதம் பெறும் பிரவரம் நடந்து கொண்டிருந்தது பந்தலில்.
குப்புசாமி அய்யனின் சிறிய தகப்பனாரும் பெண்டாட்டியும் பகவதியைத் தாரை வார்த்துச் சங்கரனுக்குத் தர ஆயத்தமாக உட்கார்ந்திருந்தார்கள்.
என்ன, பொண்ணாத்துக்காராளும் பிள்ளையாத்துக்காராளுமா எல்லோரும் இங்கே உக்ராணப் பக்கத்துலே மேற்பார்வை பாத்துண்டு நிக்கறேள் ? பந்தலுக்கு வந்தாத்தானே மத்ததெல்லாம் நடத்தி மங்களகரமா முடிக்க முடியும் ?
ஜோசியர் அண்ணாசாமி அய்யங்கார் பட்டு வேஷ்டியும், மேலே வழிய வழியச் சரிகை உத்தரியமும், நெற்றியில் பளிச்சென்று நாமமுமாக வெகு உற்சாகமாக வந்தவர் குப்புசாமி அய்யனையும் கோமதியையும் மாறி மாறிப் பார்த்துக் கேட்டார்.
அவருக்கு சுடக்கெடுத்து விட்டாற்போல் நேற்று ராத்திரியே உடம்பு நேராகி விட்டிருந்தது. சதிர்க் கச்சேரியின் போது ஜல் ஜல் என்று சலங்கை ஒலிக்க, அவர் தூக்கத்திலேயே எழுந்து உட்கார்ந்து கொட்டகுடித் தாசியை எழுப்பி அரண்மனைக்குச் செலுத்திக் கொண்டிருந்தபோது பிஷாரடி வைத்தியரும் மற்றவர்களும் தாசியாட்டத்தில் மூழ்கியிருந்தார்கள்.
அவர்கள் நடுராத்திரிக்குத் திரும்பி வந்தபோது சத்தம் கேட்டுக் கண் விழித்துப் பார்த்த ஜோசியர் யந்திரம் திரும்பச் சரியாக வந்துவிட்டதாக அறிவித்துவிட்டு மறுபடி நிம்மதியாக நித்திரை போய்விட்டார்.
தான் பக்கத்தில் இல்லாதபோது தனியாகவே ஜோசியர் அதை சாதித்ததில் பிஷாரடி வைத்தியருக்குக் கொஞ்சம் வருத்தம் என்றாலும், நினைப்பைச் செலுத்தி இன்னொருத்தரை இயங்க வைப்பது நடக்கக் கூடிய காரியம் என்று நிரூபணமானதில் மகிழ்ச்சி. அவரும் யுக்திவாதிகள் குழுவும் முழுத் திருப்தியோடு கல்யாணப் பந்தலில் காலையிலேயே வந்து சேர்ந்து எல்லோரோடும் வேடிக்கை விநோதம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
மகாவிஷ்ணு போன்ற யுவனே, சுவர்ணப் பதுமை போன்ற என் புத்ரியை, இன்னும் விளையாட்டுத்தனம் போகாத இந்தச் சிறுமியை உன்னிடம் ஒப்படைக்கிறேன். இவள் இனி உன் பத்னியாவாள். இவள் மூலம் சந்தானம் செழிக்க வம்சவிருத்தி செய்து தேவர்கள் விதித்த கடமைகளை தினமும் குறைவில்லாமல் நிறைவேற்றி செழித்து வாழ்வாயாக.
புரோகிதனின் குரல் ஓங்கி ஒலித்தது.
தாரை வார்க்கற நேரம். வாங்கோ.
அண்ணாசாமி அய்யங்கார் கோமதியின் குழந்தையைத் தூக்கிக் கொண்டு பந்தலுக்கு ஓட, மாமா வேண்டாம். அவன் குண்டோதரன். கீழே போட்டுடப் போறேள் என்று கோமதியும் பின்னாலேயே ஓடினாள்.
வாங்கோ போகலாம். நம்மளையும் தேடுவா இங்கேயே இருந்தா.
விசாலாட்சி கையைப் பிடித்து இழுத்துக் கூப்பிட குப்புசாமி அய்யன் குழப்பத்தோடு திரும்பவும் கிட்டன் ஏன் இன்னும் வரல்லே என்றபடி அவளோடு நடந்தான்.
சூர்ய பகவானின் ஆசிகளோடும் அனுமதியோடும், அசுவினி தேவர்கள் பாதுகாக்கும் என் கரங்களால் நீங்கள் வார்த்த நீரை வாங்கி அதோடு இந்தப் பெண்ணையும் என் மனைவியாக ஏற்றுக் கொள்கிறேன்.
சங்கரன் மந்திரத்தைக் கூடவே சொன்னபோது, பகவதி அவன் முகத்தை ஒரு வினாடி ஏறிட்டுப் பார்த்துவிட்டுக் குனிந்து கொண்டாள்.
பொண்ணாத்துக்காரா அழணும் இப்போ சாஸ்திரப் பிரகாரம்.
ஆலப்பாட்டிலிருந்து வந்திருந்த நாகலட்சுமியின் தமையன் அகத்துக்காரி சொல்ல, சுந்தர கனபாடிகளின் பெண்டாட்டி குறுக்கிட்டாள்.
கல்யாண வீட்டுலே அழறதாவது. அந்த அச்சானியமான பழக்கமெல்லாம் எங்க பக்கத்துலே கிடையாது.
விசாலாட்சி மன்னி, ஓரகத்தி சிநேகாம்பாள் உட்கார்ந்திருந்த மூலையை நோக்கிப் போனாள். அவள் சுவரில் சாய்ந்து கண்கலங்கியபடி இருந்தது கண்ணில் பட்டது விசாலாட்சிக்கு.
ஏண்டி சிநேகா, எங்கே போனார் உங்களவர் ? ஏன் அழறே ?
ஒண்ணுமில்லே மன்னி. வந்துடுவார்.
சிநேகாம்பாள் கண்ணைத் துடைத்துக் கொண்டாள். சிரிக்கவும் முயற்சி செய்தாள். அதையும் மீறி முகம் இருளோ என்று கிடந்தது.
கர்ப்பிணிப் பொண்ணு. எதுக்கும் கலங்காதே. சிசுவுக்கு ஆகாது.
விசாலாட்சி கரிசனமாகச் சொல்லியபடி அவள் கன்னத்தைத் தட்டிவிட்டுப் பந்தலில் முன்னால் இருக்க நடந்தாள்.
மாமிக்கு வேண்டாம்னா நாங்க எங்காத்து வழக்கப்படி அழறதை நிறுத்த முடியுமா என்ன ?
பகவதிக்கு நேர் மூத்த சகோதரி அலமேலு உரக்கச் சொல்ல, அண்ணா குப்புசாமி அய்யன் அவளை அடக்கினபோது விசாலாட்சி அவனோடு சேர்ந்து நின்றாள்.
அலமு, அவா வேண்டாம்னா அப்படியே இருந்துட்டுப் போகட்டுமே. நம்ம சம்பிரதாயத்தை நாளைக்கு உன் பொண்ணு கல்யாணத்துக்கு வச்சுக்கோயேண்டி.
ஆமா, அதுக்கு இன்னும் எத்தனை நாள் காத்துண்டு இருக்கணுமோ ?
அலமேலு இழுத்தபோது, அவளுக்கு மூத்தவள் லட்சுமி அவள் இடுப்பில் கிள்ளினாள்.
ஏண்டி, உங்காத்துக்காரர் என்ன உத்தேசிச்சிருக்காரோ அதப் பதுக்கத் தெரியப்படுத்து. நாள் நட்சத்திரம் சரியாக் கணக்குப் போட்டுச் சொல்றேன் எப்போன்னு.
பந்தலில் எழுந்த சிரிப்பு திரும்ப எல்லோரையும் சகஜமாக இருக்க வைக்க, அலமேலு வீட்டுக்காரன் சோமநாதன் மனையில் இருந்த பகவதிக்குட்டியை விட அதிகமாக வெட்கப்பட்டான்.
பிராமணோத்தமர்களே, இறப்பாலும், அசுத்தத்தாலும் மாசடையாத தண்ணீரை எனக்குக் கொடுங்கள். தெய்வங்கள் குடிக்கும் நீர். நடுவே அக்னி பொதிந்த நிர்மலமான அந்தத் தண்ணீரின் துளிகள் இந்தப் பெண் தலையில் விழுந்து இவளையும், இவளுக்கு நான் அளிக்கப் போகும் புத்திர பாக்கியங்களையும் பாதுகாக்கட்டும். எல்லா தேவதைகளின் ஆசியோடும் இவள் என் மனையில் அரசியாக வலம் வரட்டும். பசுக்களையும் குதிரைகளையும் பேணிக் காக்கட்டும். என் பெற்றோருக்கும் மற்றோருக்கும் அன்பும் ஆதரவுமாக இருந்து குடும்பத்தை நடத்திப் போகட்டும்.
சங்கரன் சொன்ன மந்திரங்களின் பொருள் சுந்தர கனபாடிகளின் காது வழியே மனதில் போய்த் தட்டிக் கொண்டிருந்தது. இதெல்லாம் உனக்கு அன்னியமானவை. பித்ருக்களைக் கடைத்தேற்றுவதைத் தவிர வேறு எதுவும் பொருட்டில்லை என்று அவர் குரு கூடவே சொல்லிக் கொண்டிருந்தார்.
கூறைப் புடவை உடுத்த பகவதி உள்ளே போனபோது விசாலாட்சி மன்னியும், கோமதியும், அலமேலுவும், பகவதியின் தோழி நாணிக்குட்டியும் உள்ளே ஓடினார்கள். கூடப் போகத் தோன்றினாலும் அசைவே இல்லாமல் சுவரில் சாய்ந்தவண்ணம் சிநேகாம்பாள் அதைப் பார்த்தபடிக்கு இருந்தாள்.
கிட்டாவய்யன் சாவக்காட்டாரை இன்று காலை அவசியமாகக் கண்டே தீர வேண்டும் என்று கிளம்பிப் போனபோது, கல்யாணம் முடிந்து போகலாமே என்றாள் அவள்.
போகாட்ட, பணம் கிடைக்காது. இன்னிக்கு நாள் திவ்யமா இருக்காம். பாதிரியும் வந்து மந்திரிச்சுக் கொடுப்பாராம். எல்லாம் நல்லபடிக்குப் பொங்கிப் பெருகி வருமாம். கொல்லத்துலே சீக்கிரமே சாப்பாட்டுக்கடை ஆரம்பிச்சுடலாம்.
அதுக்காக ஆத்துலே கல்யாணத்தை வச்சுண்டு இறங்கிப் போகணுமா ?
ஒரு மணிக்கூர் கூட ஆகாது. ஊர்க் கோடியிலே சாவக்காட்டார் அனுப்பின வண்டி நிக்கும். ஏறிப்போய் அதிலேயே பணத்தோட திரும்பி வந்துட வேண்டியதுதான். மாங்கலிய தாரணம் ஆறதுக்குள்ளே வந்துடறேன். கவலைப்படாதே.
வண்டியை நாளைக்கு வரச் சொல்லக்கூடாதா ? தோழிப் பொங்கலும், மரவணையுமா அமர்க்களப்படும்போது நீங்க இல்லாததை யாரும் கவனிக்கமாட்டா. இப்போப் போய்க் கிளம்பினா.
ஆமாண்டி. சாப்பாட்டுக் கடை வைச்சுச் செழிக்கணும்னு மனசெல்லாம் ஆக்ரஹம். அதுக்கு இதைப் பண்ணு அதைப் பண்ணு அங்கே போ இவனைப் பாருன்னு ஒரு விரட்டல். பணமும் கிடச்சு அதுவும் வட்டி ஆகக் குறைவாக் கிட்டி வரபோது இன்னிக்கு வேணாம் நாளைக்குப் போன்னு காலைப் பிடிச்சு இழுத்தாறது.
நடுப்பகலுக்குக் கொஞ்சம் முன்னால் தானே மாங்கலிய தாரணம். அதுக்குள்ளே வந்துடுவேனே.
எல்லா நம்பிக்கையும் கொடுத்து விடிகாலை ஸ்நானம் செய்ய வெளியே போகிறதுபோல் கிட்டாவய்யன் கிளம்பிப் போனான்.
பொண்ணை அழச்சுண்டு வாங்கோ. பொண்ணை அழச்சுண்டு வாங்கோ.
கரம்பங்காடு கிருஷ்ணய்யரும், கச்சேரி ராமநாதய்யரும் நல்ல நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று உணர்ந்தவர்களாக அவசரப்பட்டார்கள்.
சின்ன எம்பிராந்திரியின் சிநேகிதன் ஒரு துணிப்பொதியோடு ஜோசியரை நெருங்கி, ஸ்வாமி, இதைப் பத்திரமா வச்சுக்குங்கோ. நாளைக்கு மரவணைக்கு வேணும்னார் குப்புசாமி அய்யர் என்றான்.
அதென்னடா குழந்தை மரவணை ? மரப் பலகையா இல்லே தகடா என்று விசாரித்தார் ஜோசியர்.
அவர் நினைப்பு முழுக்கக் கையோடு கொண்டு வந்திருந்த யந்திரத்தில் இருந்தது. எல்லாக் கோலாகலமும் முடிந்தபிறகு குப்புசாமி அய்யனிடம் தட்சணை வாங்கிக் கொண்டு இந்த வீட்டில் வாசல் பக்கமோ இல்லை தோட்டத்திலோ அதை ஸ்தாபித்து விட்டு நாளை மறுநாள் ஊரைப் பார்க்கக் கிளம்ப வேண்டியதுதான்.
மரவணை தெரியாதா ? கெட்டது போங்கோ. நாளைக்கு மறுநாள் பொண்ணு மாப்பிள்ளை ஊருக்குக் கிளம்பற முன்னாடி வேஷம் கட்டி ஆடணுமே ? அதுக்குத்தான்.
அவன் துணிப்பொதியிலிருந்து ஒரு ஒட்டு மீசையை எடுத்து அய்யங்காரின் நெற்றியில் வைத்து அழகு பார்த்தான்.
இதை யாருடா ஒட்டிப்பா ?
ஜோசியர் கேட்கும்போது பகவதி கூறைப் புடவையோடு பந்தலுக்குள் திரும்ப வந்துகொண்டிருந்தாள்.
பாட்டித் தள்ளை யாராவது ஆம்பளை வேஷம் கட்டுவா. உங்களை மாதிரி வயசன் புடவை கட்டிண்டு ஆடுவார்.
ஜோசியர் அண்ணாசாமி அய்யங்கார் சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருக்க, அவர் காலை மிதித்துக் கொண்டு குப்புசாமி அய்யன் பந்தல் ஓரம் போனான்.
சிநேகா, எங்கேம்மா உங்காத்துக்காரன் ? உன்னண்டை சொல்லிக்காம எங்கேயும் போகமாட்டானே ? இந்தக் கல்யாணத்துலே இஷ்டம் இல்லியா அவனுக்கு ? இப்படி எல்லாரும் கூடியிருக்கிற நேரத்துலே பிராணனை வாங்கிண்டு.
அவள் அழ ஆரம்பிப்பதற்குள் நாதசுவரமும் மேளமும் திரும்ப உச்சத்துக்கு முழங்கின. வாசலில் கிட்டாவய்யன் வந்து கொண்டிருந்தான்.
அதோ வந்துட்டான் கிட்டன். அழாதே நீ.
குப்புசாமி சந்தோஷமாகக் கூச்சலிட்டான்.
கிட்டாவய்யன் மடியில் முடிந்து வைத்த குரிசு வெளியில் தெரியாமல் வேஷ்டி முனையை இடுப்பைச் சுற்றி இறுக்கிக் கொண்டான்.
அவன் ஒரு மணி நேரம் முன்னால் பாதிரி சொன்னபடிக்கு, சாவக்காட்டான் முன்னிலையில் வேதத்தில் ஏறி இருந்தான்.
(தொடரும்)
- சிறகுகள்
- வாரபலன் – மார்ச் 4,2004 – காலங்கள் தோறும் – வல்லம்பர் சங்கம் – வந்ததா வரவில்லையா ? – கணையாழித் தொகுதி – ரங்கா டியர்
- முதன் முதலாய்
- நீலக்கடல் (தொடர்) – அத்தியாயம் 9
- விடியும்!- நாவல் – (38)
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -15)
- வாப்பாக்காக…
- பாதை எங்கே ?
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தெட்டு
- பாஜக ஒளிர்கிறதா ?
- கண்ணகி கதை இலக்கியமா ?
- சுற்றுச்சூழல் அழிவால் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பவளப்பாறைகள் அழிவை எதிர்நோக்குகின்றன.
- பூகோளச் சுழற்சியால் அசுர ஹரிக்கேன்களை உருவாக்கும் கொரியோலிஸ் விளைவு (Coriolis Effect)
- தனிமை விரும்பிகள் ரேடியோ அலைவரிசை (RFID) தொழில்நுட்பத்ததை ஏன் எதிர்க்கிறார்கள் ?
- அன்னை
- கரும்பும் கசந்த கதை
- ஐம்பூதங்களின் அழுகுரல்
- நெருடல்களற்ற சுகம்
- திரிசங்கு சொர்க்கம்
- புத்த களமா ? யுத்த களமா ?
- நாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 2
- கோஷா முறை
- மறு வாசிப்பில் திருப்புகழ்
- கடிதம் மார்ச் 4,2004
- கடிதம் 4, மார்ச் 2004
- கடிதம் – மார்ச் 4,2004
- கடிதம் – மார்ச் 4,2004
- கடிதம் – மார்ச் 4,2004 – இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும் – இன்னும் சில சந்தேகங்கள்
- கடிதம் – மார்ச் 3,2004
- Frontend – Backend
- யுகபாரதியின் ‘தெப்பக்கட்டை ‘
- முயன்று வரலாற்றைப் படித்தல் வேண்டும்
- இலக்கியத்தில் வாழ்வின் தரிசனங்கள் :எனக்குப் பிடித்த கதைகள் -வாசிப்பனுவபம்
- திசைகள் மின்னிதழ் அரும்பு சொல் வெளிஇணைந்து வழங்கும்
- நிராகரிப்பு
- எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி!
- ‘கானா ‘ தாலாட்டு
- வேண்டாம்.. வேண்டாம்..ஆனால்..
- முடிவுக்காலமே வைட்டமின்
- சூட்சும சொப்னம்
- எல்லாம் சுகமே..
- என்னால் முடியும்
- பூ வண்ணம்
- பாசமே நீ எங்கே ?
- அருகிருக்கும் மெளனம்
- பிளாஸ்டிக்