திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -5)
எஸ். ஷங்கரநாராயணன்
இரண்டாம் பகுதி – தொடர்ச்சி
—-
பின்னாட்களில் சுடர் விவேகமாய் பஜார்ப்பக்கம் பெஞ்சுபோட்டு பூக்கடை போட்டாள். மலர்களை விலையெடுத்து சுடர் வீட்டுக்கு வாங்கி வருவாள். வீட்டில் வைத்து அவளும் அம்மாவுமாய், நனைத்த நாரில் தொடுப்பார்கள். நேரே பஜாரில் அவளே தொடுத்துக் கொள்ளலாம் என்றாலும் சுடருக்கு சிறு அளவிலேனும் ஒத்தாசை செய்ய அம்மா தவித்தாள். ஒரு கால் மடக்கி ஒரு கால் நீட்டி அமர்ந்தபடி முன்கொட்டிய பூ குவியலில் இருந்து மொட்டு மொட்டாய் நாரில் சேர்த்து முடிபோடும் அம்மாவின் துரித விரல்களை இன்னும் ஞாபகம் இருக்கிறது. எப்போ பேசினாலும் அம்மா பேச்சில் கவிதை அலங்காரம் இருந்தது ஆச்சரியம்… இந்த முடிச்சை நீ போடற. எவன் உன் கழுத்தில் முடிச்சு போடறானோ ?… என அலுத்துக் கொள்ளும் அம்மா. குள்ளக் கத்தரிக்காய்ச் சிற்றுடம்பு அப்பாவுக்கு எப்படி இந்த மகாசரீர அம்மா அமைந்தாள் தெரியவில்லை. அதை நினைக்க சுடருக்கு எப்போதுமே வெளிப்படையாகவே புன்னகை வரும். ஒருவேளை கல்யாண சமயத்தில் அம்மா ஒல்லியாய் இருந்திருக்கலாம்… என நினைத்து மேலும் சிரித்துக் கொள்வாள்.
‘ ‘ஆமாம். அது நிஜந்தான். அப்ப நான் ஒல்லியா இருந்தேன். ஆனா உங்கப்பா செம குண்டு ‘ ‘ என்றாள் அம்மா.
உதைபந்தளவில் பாதியளவுக்கு பூக்கட்டியதும் சுடர் கடைக்குக் கிளம்பி விடுவாள். அலுமினியத் தட்டில் ஈரத் துண்டில் பரப்பி பூவெடுத்து வருவாள். மீதியை வியாபாரத்தை கவனித்தபடியே கட்டிக் கொண்டிருப்பாள். பூ கேட்டு கைகள் நீள நீள வியாபாரம் சூடுபிடிக்கும். அல்லது குளுமை தட்டும்… நீளும் கையில் ஆயிரம் விதம். நல்லகை. பணிந்து வாங்கும் கை. அவளைத் தீண்டும் ருசிகொண்ட நாகக்கை…
நீளும் கையின் தன்மை பொறுத்தே அந்தப் பூக்களும் எட்டிச் சேரும் இடங்களும் அமைகின்றன. கோவிலை எட்டுகிற, மனைவிகளை எட்டுகிற, விபச்சாரிகளை எட்டுகிற, பிணத்தை எட்டுகிற மலர்கள்.
விசேஷ நாட்களில் அந்த பெஞ்சு பிரத்யேகமான அதிகப்படியான மலர்வகைகளை ஏந்திச் சிரித்தன. நாகலிங்கப் பூ. தாமரை. காலை நேரங்களிலோவெனில் ரோஜா. கனகாம்பரம். டிசம்பர். அதையிட்டே பூப்பந்துகளும் வெள்ளை, மஞ்சள். கதம்பச் சரம் எனக் கலவை கொள்ளும்…
அம்மா இறந்து போனது. இரவில் காலித்தட்டுடன் அவள் வீட்டுக்கு வந்தால் வீடு விளக்கேற்றப் படாமல் கிடந்ததைப் பார்க்கவே உள்ளே ரயில் தள்ளாட ஆரம்பித்து விட்டது. அடாடா என்று நடை விரைந்தது… இரு அறைகளுக்கு நடுவே அம்மா கிடக்கிறாள். கடைசி கட்ட தாகத்தில், தண்ணீர் குடிக்க, தானே எழுந்துகொள்ள என போராடி யிருப்பாள் போலும். சுடர் அரிக்கன் விளக்கை ஏற்றிக்கொண்டு கிட்டேபோய்க் குனிந்து பார்த்தாள். கண்கள் வெறித்திருந்தன. உயிர் கண்வழியே வெளியேறும் என்கிறார்கள்… என நினைத்துக் கொண்டாள்.
ராத்திரி தனியே அம்மாவுடன் கழிக்க முதன் முதலாக பயமாய் இருந்தது. அம்மாவிடம் நிறைய பேசும்-சுவாரஸ்யமான விஷயங்கள் இருந்தன. அம்மா எதாவது பேசேன்… என அந்த உடம்பைப் பார்த்தாள். கண் வெறித்துக் கிடந்தன அவை. கதைகளை வெளியேற்றிய பார்வை. அந்தக் கண்களை மூடினாள்.
இரவுக் காவலாய் கூட குளத்துசாமி. அவர்கள் விடியக் காத்திருந்தார்கள்.
பிறகு-
தாமரை பறித்து வருகிற மாசிலாமணியோடு சிநேகங் கண்டது. டப்பாக்கட்டு லுங்கி. தலையில் சுற்றிய துண்டு. பல்குத்தியபடியே பேசுவான். என்ன பழக்கம் இது என்றிருக்கும். மாடுகளில் பால்கறந்து கோவாப்ரேடிவ் சொசைட்டியில் ஊற்றுவான். அதிகாலை வெளிச்சக் கிரணம் புறப்படுமுன் கிளம்பி விடுவான். பாத்திரத்தில் நுரைக்க நுரைக்க காலைகள் விடியும் அவனுக்கு…
நல்ல டியெம்மெஸ் குரல் அவனுக்கு. பால் போணியில் தானே தட்டிக் கொள்வான். தன்னுற்சாகத்துக்குக் குறைவில்லை. குளித்தபடி திடாரெனப் பாட ஆரம்பிப்பான். வீட்டு டிரான்சிஸ்டரில் பாட்டு கேட்பான். நிகழ்ச்சி முடிய, அதை அணைத்த பின்னும் அவன் மனசில் பாட்டு ஓடிக் கொண்டிருந்தது. பாட்டை… முதல் வரியை அல்ல… நடுவில் இருந்து எடுப்பான்….
மேடையில் பாட அவனுக்கு ரொம்ப ஆசை. ஆனால் மைக்கில் அவன் குரல் எடுபடவில்லை. விநோதமாய் ஒரு கீச்சொலி பிசிறு தட்டியது. அத்தோடு நமக்கு இது லாயக் படாது என்று விட்டு விட்டான்.
தனித்த ஒரு பொழுதில் இரவில் அவன் சைக்கிளில் அவர்கள் வீடு திரும்புகையில் அவன் தந்த முத்தத்தில் முகஞ் சுளித்தாள். – குடிக்கிறான்… எதிர்பார்க்கவே இல்லை!
குடி அவளுக்குப் புதியது. ‘எய்யா குடிப்பியா ? ‘ என்றாள் பயந்து. அதுநாள்வரை வெற்றிலை போடுகிற அளவிலேயே அவனை அறிந்திருந்தாள். விகாரமாய்ச் சிரிக்கிறான் மாசிலாமணி. ‘வேணாய்யா. நல்ல நல்ல பூ கொண்டு வரே நீ. பூத்தரம் தெரிஞ்ச மனுசன் நீ. நீ குடிக்கலாமா ? உனக்கு நல்ல வாசனைக்கும் கெட்ட வாசனைக்கும் தரம் பிரிக்கத் தெரியண்டாமா ? ‘ – என்றாள்.
‘நிறுத்திர்றேண்டி என் கண்மணி ‘ என்று கொஞ்சினான். அவளுக்கு மிதக்கிறாப் போல இருந்தது. சொன்னபடி சுத்தபத்தமாய் ஆளே மாறிவிட்டான். ஒரு மாதம் அப்படியே இருந்த மாதிரித்தான் இருந்தது. தன்-சிறப்பாய்க் கண்ட கணங்கள் அவை. சைக்கிளில் அவனுடன் ரெண்டாவது ஆட்டம் சினிமா போய்வருவது வரை சகஜப்பட்டாள் அவள். வீடுவரை கொண்டு விடுவான். போய்விடுவான். பெருமையாய் இருக்கும்.
பக்கத்துவீட்டு கோவிந்தம்மா அவர்களிடையேயான வயசு வித்தியாசம் பற்றிக் குரல் எடுத்தபோது அவள் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. கழுத்தில் சிறு மஞ்சக் கயிறு என்றாலும் அது தரும் சமூகப் பாதுகாப்பு அலாதியானது…
கோவில் கல்யாணம். அப்பா இல்லாததில் பெரிதும் விசனமாய் இருந்தது. அப்பா இருந்திருந்தால் தமிழ் படித்து பெரிய அளவில் ஓரியன்டல் கோர்ஸ் முடித்து புலவர் பட்டம் வாங்கி பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் வேலை என எங்காவது ஒதுங்கிக் கொள்ளலாம் என்று கண்ட கனவு நனவாகி யிருக்கும்… சரி அதைப் பற்றி என்ன ?… அவள் வாழ்க்கையோ – உலகம் தாண்டி உலகம் – எனக் கடப்பதாகத் தோற்றம் தருவதாய் இருந்தது. சிலரது பிறப்பம்சம் அப்படி. என்ன செய்ய ?
மாசிலாமணி கையெழுத்துப் போடவே திண்டாடிப் போனான். கடைசி எழுத்து ணி போடுமுன் கை இழுத்துக் கொண்டு போனது எங்கோ. அவனே தன் வாழ்க்கையை காற்றில் இழுத்துப் போகிற உதிர்ந்த இலையெனவே கண்டான். நித்தியப்படி என அவளது வருமானம் என்ற கணக்கில் குடும்பம் ஓடியபோது அவன் நித்தியப்படி என்று பூவெடுக்கப் போவதே கூட நாளாவட்டத்தில் குறைந்தடங்கிப் போனது.
துாக்கம் துாக்கம் என சோம்பல் ஆட்டுவிக்க, காலைகளில் எழும்ப முடியாமல் கிடந்தான் அவன். அவள் எழுப்ப எழுப்ப அவன் காலாவட்டத்தில் எரிச்சல் கொள்வதும், அவள் வியாபாரத்துக்கு நேரமாகி விட்ட பதட்டத்துடன் தட்டிக் கதவைச் சார்த்தி விட்டு ஓடுவதுமாய் இருந்த காலங்கள்.
மீண்டும் அவன் குடிக்க ஆரம்பித்திருந்தான். வேலை என வெளியிறங்குவதை சம்பாதிப்பதை அடியோடு நிறுத்தி யிருந்தான், ஷோக் செய்து கொண்டு சைக்கிளில் கிளம்புகிறானே யொழிய எங்கே போகிறான் வருகிறான் எதுவுமே கலந்து கொள்கிறா னில்லை.
சண்டைகள்-
அவனிடம் வாங்கிய முதல் அடி. அப்பா நல்லவேளை இதையெல்லாம் பார்க்க உயிருடன் இல்லை. இருந்தால் எப்படி துடித்துப் போயிருப்பார்.
சீட்டாட்டப் பழக்கம் வேறு வந்திருந்தது. குடிக்க- புகையிலை வெத்திலை என்று குஷால் பண்ண- பிறகு இப்போது சீட்டாட… பணம் அவனுக்குத் தேவைப்பட்டுக் கொண்டே யிருந்தது. விவரங்கள் புரிந்தபோது… பறித்த தாமரை என அவளே அவனிடம் மாட்டிக் கொண்டதை உணர்ந்தாள். கொடிபோலும் அவள் கால்களைச் சுற்றிப் படர்ந்து வளைத்துக் கிடந்தன தடைகள். காலம் அவளையே வெற்றிலை என வாய்க்குள் சுருட்டி ஒதுக்கிக் கொண்டாற் போலிருந்தது. மயக்கமாய் இருந்தது.
அவன் அவளைத் துட்டு கேட்டு அடிக்க ஆரம்பித்தான்.
அடிகள் சகஜமாக ஆரம்பித்தன.
மூர்க்கமாக ரம்பித்தன.
பிடிவாதத்தோடு மறுத்து அவள் பஜார்ப்பக்கம் கடைக்கு வந்தால் கடைக்கே வந்தான். குடித்துத் தள்ளாடி வந்து தொந்தரவு தர ஆரம்பித்தான். பெருங் குரலெடுத்து நச்சரித்து சச்சரவுகள். வாயில் இன்ன வசை என்றில்லை…
தேவாரங் கேட்ட அவளது காதுகள் திகைத்தன…
அது நல்ல சேதியா கெட்ட சேதியா தெரியவில்லை. திடாரென்று அவனைக் காணவில்லை.
அவள் முடிந்த எல்லைவரை வரை தேடிப் பார்த்தாள். நாட்களில் அவனைப் பற்றி துப்பு கிடைத்தது.
எல்லைக்கல் தாண்டி வேறொரு சுந்தரியுடன் சினிமாத் தியேட்டரில் அவனைப் பார்த்ததாய்ப் பேச்சு வந்து சேர்ந்தது- எஜமானில்லாமல் காட்டில் இருந்து வந்து சேர்ந்த குதிரை. காற்றோடு வந்து சேர்ந்த செய்திக் குதிரை.
மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு அழத்தான் முடிந்தது.
அப்பாவை நினைத்தபடி அழுதாள். அம்மாவை மனசாரக் கட்டிக் கொண்டு அழுதாள். போய்ப் பார்ப்பமா என்றுகூடத் தோணியது. பார்த்து ?… என வழி மறித்து மேல்க் கேள்வி போட்டது யோசனை. திரும்ப துட்டு கேட்டு நெருக்குவான். வாங்கிக் கொண்டு எல்லை தாண்டுவான்… அடிப்பான். அவனை அவள் அறிவாள்.
ஆண்கள்!…
பெண்களை எத்தனை சுலபமாக அவர்கள் வீழ்த்தி விடுகிறார்கள். கண்ணைத் துடைத்துக் கொண்டபோது சிறு தெளிவு வந்திருந்தது.
துாங்க ஆரம்பித்தாள்.
காலை விடியல் அவளுக்கு வேறு மாதிரியாய் இருந்தது. வேறு உலகத்துக்கு அவளை அழைத்து வந்திருந்தது அது.
—-
/தொ ட ரு ம்/
- மானிடக் கவியான பாரதி ஒரு மகாகவியே [1882-1921]
- வலுக்கும் எதிர்ப்பு
- பாரம்பரிய இந்தியக் கல்வி: 19-ம் நூற்றாண்டில்
- உத்தரவிடு பணிகிறேன்
- ‘காய்கறிக்காரி ‘(என்னுடைய அம்மா அவர்களின் நினைவாக)
- நீலக்கடல் – புதினம் ( தொடர் ) – முன்னுரை
- எமன் – அக்காள்- கழுதை
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -5)
- ஆசாரப் பூசைப் பெட்டி
- பிச்சிப்பூ
- விடியும்!(நாவல் – 29))
- வாரபலன் – ஆலப்புழைக்கருகில் – பணிமுடக்கு – தமிழை இசைக்க மறந்த தமிழ்நாடு
- கலைச்சொற்கள்,இன்றைய தமிழ்- சில கேள்விகளும்,குறிப்புகளும்
- அடங்கோ… அடங்கு!
- காவு , மெளனத்தின் குரல் , நிலைப்பாடு
- குப்பைத்தொட்டி கவிதைகள்
- எழுதாக் கவிதை
- அன்புடன் இதயம் – 1
- அன்பே மருந்தானால்…
- மரக்கொலைகள்
- புத்தாண்டே வருகவே
- ‘ஆர்.எஸ்.எஸ் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது ‘
- முன்னேற்றமா! சீரழிவா!!
- கடிதங்கள் – 01 ஜனவரி,2004
- கலைச்சொற்கள்,இன்றைய தமிழ்- சில கேள்விகளும்,குறிப்புகளும்
- டாக்டர் மொஹம்மது மொஸாடெக்- ஈரானிய தேசிய இயக்கத்தின் தலைவர்
- கடவுள் போருக்குப் போகும்போது
- ஸ்தலபுரம்
- சிறந்த குறும்படங்களுக்குப் பரிசு-சக்தி 2003 இலக்கிய விருது
- நாற்பது வருட தாபம்
- பூரணி அம்மாளும் இண்டெர்நெட்டும்
- மாலதி மைத்ரியின் ‘சங்கராபரணி ‘ கவிதைகள் – ஒரு வாசக ரசனைப் பதிவு
- கனவும் குரூர யதார்த்தமும் – ஜெயமோகனின் புதிய நாவல் ‘காடு ‘
- மனத்தின் மறுபக்கம்-த்வீபா -கன்னடப்படத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்
- கதைமொழியும் மொழிபெயர்ப்பும்- (மெளனப்பனி ரகசியப்பனி-மொழிபெயர்ப்புக் கதைத்தொகுதி அறிமுகம்)
- பூரணி,க்ருஷாங்கினி,நீரஜா நாகராஜன் :மூன்று தலைமுறைப் பெண்கள் படைப்பு வெளியீட்டு நிகழ்ச்சி
- கலைஞருக்குக் கடிதம் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
- எனக்குப் பிடித்த கதைகள் – 92 -மனிதர்களை மதிப்பிடும் கலை -கல்கியின் ‘கேதாரியின் தாயார் ‘
- சி. மணி பற்றிய சில கனிந்த நினைவுகள்
- விளக்கு விருது – சி மணிக்கு வழங்கும் நிகழ்ச்சி
- ‘எனக்குள் இப்படியொரு கிராமத்தானா ? ‘ – ‘ஸண்டியர் ‘ கமல்
- வரம் கொடு தாயே!..
- பல சமயம் நம் வீடு
- இரயில் நிறுத்தமும், கடைசி இருக்கையும்.
- எனக்கு வேண்டும் வரம்
- நதி
- நிழல்கள்.
- இறைவா..எனக்கொன்றும் புரியவில்லை..!
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தொன்பது