அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தொன்பது

This entry is part of 42 in the series 20031023_Issue

இரா முருகன்


விடிகாலையிலேயே வந்துவிடுவான் என்று சொன்னார்கள்.ராஜா காத்துக் கொண்டிருக்கிறார். எழவெடுப்பான் வரும் வழியாகக் காணோம் இன்னும்.

நடுச் சாமத்திலிருந்து தூக்கம் போனது ராஜாவுக்கு. ராணியோடு சீமை தேசங்களிலெதிலோ யாத்திரையாகிறது போல சொப்பனம். தழையத் தழைய உடுத்த துரைகளும் துரைசானிகளும் சாரட்டிலேறிச் சடுதியில் போய்க் கொண்டிருக்கிறார்கள். வீதி முழுக்க உப்பைக் கொட்டி வைத்தது போல் பனி உறைந்து கிடக்கிறது. ஆனாலும் குளிரவில்லை.

நடந்து போகிற மாதிரி யாரையும் இங்கே காணோமே.

ராஜா முணுமுணுக்கும்போது கிழட்டு வெள்ளைக்காரன் ஒருத்தன் கண்ணை மறைக்கும் தொப்பியும் நீளச் சராயும் காலில் தோல் பாதரட்சையுமாக எதிரே வருகிறான்.

சாமி தரும தொரெ.

ராணி உரக்கக் கூவுகிறாள். ராஜா பயபக்தியோடு முன்னால் நீட்டிய மூத்திரச் சட்டியில் வெள்ளைக்காரன் ஒரு தம்பிடி போட்டுவிட்டு நாற்றமடிக்கிறது என்று முகத்தைச் சுளித்தபடி போகிறான்.

தேகம் விதிர்த்து நடுங்கக் கண் விழித்தார் ராஜா. அப்போது கலைந்து போன தூக்கம் போனது தான். அதையும் இதையும் யோசித்துக் கொண்டு வாசலுக்கும் முற்றத்துக்கும் உலாவிக் கொண்டிருந்தார் மீதி ராத்திரி முழுக்க அவர்.

வாரிசு இல்லாமல் போனதைக் காரணம் காட்டிப் பெரிய சமஸ்தானங்களை எல்லாம் துரைத்தனத்தார் பிடுங்கிக் கொண்டு தம்பிடி கொடுக்காமல் அந்தப்புரத்து ஸ்திரிகளைத் தெருவில் துரத்தி விட்டதாக வடக்கு தேசத்திலிருந்து தகவல் வந்த மணியமாயிருக்கிறது.

இன்னும் காபூல் என்று ஒரு பட்டணம். அங்கே இருந்து கற்கண்டாகத் தித்திக்கும் உலர்ந்த திராட்சை வரத்து உண்டு என்பது ராஜாவுக்குத் தெரியும். யாராவது எப்போதாவது காணிக்கை வைக்கிற வழக்கம் உண்டுதான். அந்தப் பட்டணத்திற்குப் மலைப்பாதை வழியாகப் படை நடத்திப் போன துரைத்தனத்தார் பத்தாயிரம் இருபதாயிரம் கணக்கில் உயிர்ச் சேதமாகிக் குற்றுயிரும் குலையுயிருமாகத் திரும்பி வந்திருப்பதாகவும் அங்கே கோட்டை விட்டதை எல்லாம் தெற்குத் தேசத்தில் வாரிச் சுருட்ட முஸ்தீபோடு கிளம்பி இருக்கிறார்கள் என்றும் கூடத் தகவல்.

வரப் போகிற துரை ராஜாவுக்கு சந்ததி விருத்தியாக இன்னும் தேகத்தில் பெலமிருக்கிறதா என்று பரிசோதித்துப் போக வந்திருக்கிறானா இல்லை கஜானாவில் இருந்து எதையாவது அதிகாரமாகப் பிடுங்கி எடுத்துக் கொண்டு போகக் கிளம்பியவனா என்று தெரியவில்லை.

எப்படி இருந்தாலும் இவன் வரவு உபத்திரமானதாகவே பட்டது ராஜாவுக்கு. ஆனாலும் என்ன செய்ய முடியும் ? வரேன் என்றால் வராதே என்று ஓலை அனுப முடியுமா ? அதுவும் மானியம் அளக்கிற ராஜதானிப் பிரபுவின் பாத்யைக்குட்பட்ட ஊழியனுக்கு ?

அதுதான் இப்படிக் காத்திருக்க வேண்டிப் போனது.

இதோ வந்தாச்சு என்று கண்ணைச் சுழற்றுகிறது தூக்கம். அடைப்பக்காரன் உருட்டித் தரும் லேகிய உருண்டை இல்லாமலேயே நிதானம் ஒழிந்துபோய் மேலே மிதக்கிறது போல் ஒரு நினைப்பு. காலையில் கழிவு சரியாக வெளிக்கு இறங்காமல் மல பந்தமாகி வயிறு நோகிறது. அது தரைக்குப் பிடித்து இழுக்கிறது உடம்பையும் மனதையும்.

என்ன தேகமடா இது ? ராஜாவுக்குச் சொல்ல முடியாத கோபம் ஏற்பட்டது. ஒரு நாள் காலைக் கிரியை கழிக்க முடியாமல் போனால் குடி முழுகிப் போனது போல் ஒரு தளர்ச்சி. எரிச்சல். எதையும் எதிர் கொள்ள முடியாத நடுக்கம். தீனியில் தீவிரமாக இல்லாமல், வைத்தியன் சொல்வது போல் மூணு வேளையும் கீரையும், மிளகுத் தண்ணீரும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தால் இந்தத் தொல்லை எல்லாம் இருக்காது. மூணு வேளையும் கீரை சாப்பிடுகிற மகாராஜா இந்தப் பூவுலகத்தில் எங்கேயேனும் இருக்கானா என்ன ? இருந்தால் அவனுக்குப் பசுமாடு போல் மூஞ்சியும் குதமும் ஆகிப் போயிருக்கும்.

சமையல்காரனிடம் இன்னொரு கரண்டி வல்லாரை லேகியமும், நாக்கைப் பொத்துப் போக வைக்கும் சூடுமாக வென்னீரும் கொண்டு வரச் சொல்லலாமா என்று யோசித்தார் ராஜா.

துரை சட்டமாக வந்து இறங்கும் நாளிலேயா இப்படி திரேகம் ஒத்துழைக்காமல் உசிரெடுக்க வேணும் ?

இந்த ஆடி மாதம் பிறந்ததிலிருந்தே இப்படித்தான் இருக்கிறது. எல்லாம் அந்தப் புகையிலைக்காரப் பார்ப்பான் வீட்டில் தீப்பிடித்து எரிந்து போனதில் தொடங்கியது. அதற்கு அப்புறம் இரண்டு நாளுக்கு ஒருமுறை மலபந்தம், நீர்க்கடுப்பு அப்புறம் மார்ச்சளி என்று உடம்பு தொடர்ந்து படுத்திப் போடுகிறது.

அய்யன் சாபம் கொடுத்திருப்பானோ ? வீட்டோடு வெந்து கருகிய அந்தப் பிராமணப் பிள்ளை ? அவன் ஏன் ராஜாவை சபிக்க வேண்டும் ? அதுவும் கிரமமாக மலம் கழியாது போக வேண்டி.

புகையிலைக் கடைக்காரர்களின் வீடு தீயோடு போனதற்கு ராஜா காரணம் என்று யாரும் நினைக்கவில்லைதான். ஊரிலும் பேச்சு அந்தத் தரத்திலேயே அடிபடுவதாகக் காரியஸ்தன் வந்து சொன்னான். கடைத் தெருவிலும், அய்யன் சாமி கோவில் பிரகாரத்திலும் குடியானவத் தெருவிலும் எல்லாம் பேசிக் கொள்வது இந்த ராஜா மனுஷன் இவ்வளவு பக்கத்தில் இருந்தும் நெருப்பை அணைக்க ஒரு துரும்பையும் நகர்த்தி அப்பால் போடவில்லையே என்ற பிரஸ்தாபமே ஒழிய வேறு ஒன்றும் இல்லை.

ஆனாலும் புகையிலைப் பார்ப்பான் வீடு பற்றி எரிந்தது குறித்து அக்கிரகாரத்தில் சந்தோஷம் நிலவுவதாகவும் தெரியவந்தது. கண்ட கருமாந்தரத்தையும் வித்துக் காசை அள்ளிக் குவிச்சான். சீமந்த புத்திரனும் சீமை ஓடு போட்ட வீடுமா எல்லாம் நாசமாப் போச்சா. போகட்டும் என்னை விட்டா உண்டோன்னு பிருஷ்டம் பெருத்து நடந்தானே. பகவானே பார்த்து நீ இம்புட்டுத்தாண்டான்னுட்டார்.

இப்படிப் பேச்சு அங்கே அடிபட்டதாக அந்தக் கொச்சையை முடிந்தவரை அபிநயித்துக் காரியஸ்தன் சொன்னபோது ராஜாவுக்கு அவன் மேல் முழு நம்பிக்கை வராவிட்டாலும் இரண்டு வசவைப் பொதுவாக உதிர்த்தர். அவருக்கு என்னமோ புகையிலை அய்யன் மேல் பரிதாபம் ஏற்பட்டது.

ஜீவனோபாயமாக அவனவன் ஏதேதோ செய்து பிழைக்க வேண்டியிருக்கிற காலமில்லையா இது. நம்மைத்தான் ராஜா என்றோ, ஜமீந்தார் என்றோ நாமகரணம் செய்து இங்கே பெருச்சாளி குழி பறிக்கும் பழைய அரண்மனையில் வெறுந்தடியனாக உட்கார வைத்துவிட்டது தலைவிதி. கொட்டகுடித் தாசிக்குக் கூத்தும் பாட்டும், அண்ணாசாமி அய்யங்காருக்குச் சோழி உருட்டி ஜோசியமும், அடைப்பக்காரனுக்கு எச்சில் படிக்கம் ஏந்துவதும், இந்த அய்யனுக்கு நாற்றப் புகையிலை விற்கவுமாக நாலு காசு சம்பாதித்துக் குடும்பம் நடத்தி பந்து மித்திரர்களை சம்ரட்சிக்க வாய்த்திருக்கிறது. ராஜா போல் மூத்திரப் பாத்திரத்தில் போட்ட பிச்சைக் காசாக எத்தனை சல்லி துரைத்தனத்துப் பணம் வருமென்று நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு காத்திருக்க வேண்டிய புடுங்கி உத்தியோகம் இல்லை அதெல்லாம்.

ஊரில் வரியும் கிஸ்தியும் வசூலிக்கிற அதிகாரத்தையும் விடாமல் பிடுங்கிக் கொண்டு போனார்கள் வெள்ளைக்காரத் தாயோளிகள். கண்மாய்க் கரைப் பொட்டல்காட்டில் குத்த வைக்கிறவர்களுக்கு ஒரு சல்லி வரி விதித்தால் கூட ராஜா நிம்மதியாக சாப்பிட முடியும். விட்டால்தானே ?

மூணு நாள் முன்பு காரியஸ்தன் துரைத்தனத்து லிகிதத்தோடு மத்தியானப் போஜன வேளையில் நுழைந்தபோதே சாப்பாட்டில் புத்தி போகவில்லை. இத்தனைக்கும் வெகு ருசியாகக் கருவாட்டுக் குழம்பு வைத்திருந்தான் சமையல்காரன்.

என்ன சமாச்சாரம் எழுதியிருக்கிறான் துரை ? அவனுக்கு விதைக்கொட்டை இறங்கிப்போய் அதை உயர்த்திப் பிடிக்க வரச்சொல்லி இருக்கிறானா ?

ராஜா உரைத்த நாக்கிலே நெய்யை ஏகத்துக்கு அடக்கிக் கொண்டே பார்வையால் விசாரித்தார்.

அதெல்லாம் இல்லையாம். துரைத்தனத்து உத்தியோகஸ்தன் ஒருத்தன் இங்கே மேற்பார்வைக்கு வரப்போகிறானாம்.

மேற்பார்வைக்கும் கீழ்ப்பார்வைக்கும் அரசூர் அரண்மனையில் என்ன இருக்கு ? நானே சிங்கியடித்துக் கொண்டிருக்கிறேன். நேரம் கெட்ட நேரத்தில் புஸ்தி மீசைக் கிழவன் வேறே போய்ச் சேர்ந்து சகலருக்கும் தெண்டம் அழுதாகி விட்டது.

அதிலும் அந்த ஜோசியக்கார அய்யன் வகையில் இரண்டு வராகன் ஒரு பிரயோசனமுமின்றிப் போனது. பட்டுக் கோவணமும், ஜாதிபத்திரியும் கொண்டு போய் மாமனாரைக் கரையேற்று என்று சொன்னதற்கு ஒன்றும், பக்கத்து வீட்டில் இருந்து வந்து நம்முடைய பெரிசுக்களோடு பழகிக் கொண்டிருக்கும் பாப்பாத்தியம்மாளின் பிசாசையோ வேறு எந்த இழவையோ எல்லை தாண்டி வராமல் நிறுத்திப்போட இன்னொன்றுமாக அவன் ஏதோ தந்திர வார்த்தை சொல்லிப் பிடுங்கிப் போய்விட்டான்.

யந்திரம் செய்து அரண்மனைத் தோட்டத்தில் நிறுத்தப் போகிறானாம். என்னத்துக்கு அதெல்லாம் இனிமேல் ? வாங்கின காசுக்கு ஜோசியக் கார அய்யனையே நித்தியப்படிக்கு வந்து ஒற்றைக் காலில் அங்கே நாள் முழுக்க நிற்கச் சொல்லலாம்.

அந்த அய்யன் எக்கேடும் கெட்டுப் போகட்டும். கணக்கு வழக்கெல்லாம் கொண்டா என்று கேட்டுப் பிடுங்கியெடுப்பான் வரப் போகிற கிழங்குத் துரை. அவனை எங்கே நிறுத்த ?

துரை தான் வருகிறானோ இல்லை துபாஷி அய்யன் அவனுக்குப் பதிலாக வந்து நிற்பானோ ? அதென்னமோ துரைத்தனமும் அய்யமாரும் நெருங்கிவிட்டார்கள். மற்றக் கருப்பனை எல்லாம் அண்ட விடாமல் விரட்டி அடிக்கிற துரைகள் இவர்களை ஒரு அடி இடைவெளியில் இருந்து தண்டனிட அனுமதித்திருக்கிறார்கள். சிவப்புத் தோல் என்றால் இன்னும் விசேஷம். வெள்ளைக்காரன் காலைத் தொட்டுத் தொட்டுக் கும்பிட்டு சதா அவிடமே விழுந்து கிடக்கச் சம்பளமும் சலுகையும் உண்டாம்.

அடே மூடா பழைய துரைக்குப் பின்னால் துடைத்துவிட்டு ஊழியம் செய்த மயிரான் பட்டணக்கரைக்கு வெகு அருகே, ஜீவநாடி ஒடுங்கி, போகிற நாளை எதிர்பார்த்துக் கொண்டு பெரிய வளைவில் சாய்வு நாற்காலியே கெதியாகச் சுக்கு வென்னீரோடு கிடக்கிறதும் அவனுடைய சந்ததியினர் மூக்குத் தூள்கடை வைத்து ஊரெல்லாம் பிரக்யாதியும், தெருவுக்கு ஒரு கூத்தியுமாயிருக்கிறதும் தெரியாதோ ?

முன்னோர்கள். ராஜாவின் மர நாற்காலிக்கு இரண்டு பக்கமும் வந்து நின்றார்கள். பொழுது போகாமல் இறங்கி வந்து வார்த்தை சொல்லிக் கொண்டிருக்க எல்லோருக்கும் ஒருமித்த விருப்பம் இருப்பதாகத் தெரிந்தது.

சரி இப்ப என்ன அதுக்கு ? அவன் இல்லாவிட்டால் உச்சிக் குடுமியும் காதிலே வைரக் கடுக்கனுமாக இன்னொரு துபாஷி.

ராஜா எங்கேயோ பார்த்துக் கொண்டு முணுமுணுத்தார்.

துரை வரும்போது இவர்கள் என்னத்துக்குத் தொந்தரவாக ? அவன் ஏதாவது எக்குத்தப்பாகக் கேட்டு மண்டி போடச் சொன்னால் ராஜா வயிறு நோகக் குனியும்போது இவர்களால் ஒரு உபகாரமும் செய்ய முடியாது. வேடிக்கை பார்ப்பார்கள். அமாவாசைக்கு சாராயம் ஊற்றச் சொல்லுவார்கள்.

அதெல்லாம் ஒரு பிரியத்துலே கேக்கறதப்பா, இப்ப நீ ஏன் இப்படிப் பயந்து பயந்து சாகிறே ? நீ தான் ஒரு தப்பும் பண்ணலியே.

புஸ்தி மீசைக் கிழவன் முன்னால் வந்து கேட்டான். இரண்டு மணிக்கட்டிலும் மல்லிகைப்பூச் சுற்றிக் கொண்டு சதிராட்டம் காணப் புறப்பட்டவன் போல் இருந்தான் அவன். முகத்தில் நிம்மதியும் சந்தோஷமுமாக இருந்த அவனைப் பார்த்தபோது ராஜாவுக்குப் பொறாமையாக இருந்தது. இவன் சுகமாக மலம் கழித்திருப்பானோ ?

அதெல்லாம் உன்னய மாதிரி நாறப் பயபுள்ளைங்களுக்குத்தான். எங்களுக்கு எந்த நோக்காடும் வராது.

புஸ்திமீசையான் கோபப்படாமல் சிரித்தான்.

மருதையனை உக்காத்தி வச்சு எடுத்தானுகளே அந்தக் களவாணிப் பசங்க. வந்துடுச்சா படம் எல்லாம் ?

இன்னொரு பெரிசு கேட்டது.

என்ன கோலாகலமா நாக்காலியிலே கட்டி வச்சபடிக்கு இருந்தே மருதையா. காணக் கண் கோடி போதாதே.

வேறு யாரோ சொல்ல எல்லோரும் கூட்டமாகச் சிரிக்கும் சத்தம். புஸ்திமீசைக் கிழவன் புதுப் பெண் போல் நாணிக் கூட்டத்துக்குப் பின்னால் போய்விட்டான்.

எங்கேயோ இருந்து ஒரு வெளவால் பறந்து வந்து ராஜாவின் மாரில் மோதி அப்புறம் சுவரிலும் மோதியது. அது தரையில் விழுந்து துடித்தபோது முன்னோர்கள் மெளனமாக இருந்தார்கள்.

இதுக்கும் சிரியுங்கோ. எல்லோரும் சிரியுங்கோ. வீட்டோட எரிச்சாச்சு இல்லே.

இந்தப் பெண்ணை ராஜா பார்த்ததில்லை இதற்கு முன். ஒற்றைநாடியாக நெடுநெடுவென்று மாநிறமும் முகத்தில் தீட்சண்யமுமாக யாரவள் ?

பாப்பாத்தியம்மா என்னமோ நடந்தது நடந்து போச்சு. நம்ம குளந்தைக்கும் புத்தி போயிருக்க வேணாம்தான். நாங்க வேணுமானா மன்னாப்புக் கேட்டுக்கறோம்.

முன்னால் பேசிய முப்பாட்டன் அவளைத் தெண்டனிட்டு நமஸ்கரித்துச் சொன்னான்.

ஐயோ நீங்கள்ளாம் பெரியவா. எனக்கு நமஸ்காரம் பண்றதாவது. நான் பீடை. அசுத்த வஸ்து. எல்லாம் பறிகொடுத்துட்டு நிக்கறவ. சாமாவையும் கூட்டிண்டு போய்ட்டா.

யாரு மாமா இந்தம்மா ?

ராஜா புஸ்தி மீசைக் கிழவனைக் கேட்டார். இது சுவாரசியமான ஏதோ விவகாரம் என்று மனம் சொன்னாலும், துரை வரும் நேரத்தில் இந்தக் கூத்தெல்லாம் என்னத்துக்கு என்று தோன்றியது.

நீ பழுக்காத் தட்டுப் பாட்டுக் கேப்பியே. அந்த அய்யரு சம்சாரம்.

பெரியவா கோபிச்சுக்கப்படாது. நீங்க சொன்னது கோர்வையா இல்லே.

அந்தப் பெண் ராஜா பக்கத்தில் வந்தாள். ராஜா தன்னை அறியாமல் எழுந்து நின்றார்.

உமக்குப் பிடிச்ச சங்கீதம். தினசரி பக்கத்து வீட்டுலேருந்து வருதான்னு காத்துண்டிருப்பேளே ? நூதன வாகனத்திலே ஜோடியா வர மனுஷா கொடுத்துட்டுப் போன பழுக்காத்தட்டுலேருந்து வர்ற சங்கீதம்.

ஆமா. அதெக் கேட்டே எத்தனை காலமாகிப் போனது ?

அமாவாசைக்கு அடுத்த திரிதியை. அது போய்ப் பவுர்ணமி கழிஞ்சு இன்னிக்கு அஷ்டமி. இருபத்துரெண்டு நாள்.

பாப்பாத்தியம்மாள் கணக்குச் சுத்தமாக ஜோசியக்கார அய்யர் மாதிரிச் சொன்னாள்.

சாமா வச்ச சங்கீதம் அது.

அவள் அழ ஆரம்பித்தாள். ராஜாவுக்கு வயிறு இளகிக் கொண்டிருந்தது. இந்த வர்த்தமானம் அப்படியே இருக்கக் கொல்லைக்கு ஒரு நடை போக வேண்டியதுதான்.

உங்க வீட்டு அய்யரு எங்கே ?

புஸ்தி மீசைக் கிழவன் வம்பு விசாரித்தபோது ராஜா சந்தோஷமாக வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டார்.

அவாத்துக்காரா மந்திரம் சொல்லிப் பிண்டம் பிடிச்சு வச்சு அவனைப் பெரியவாளோடு கலக்க வச்சுட்டா. நான் மட்டும் இன்னும் அநாதையா அலைஞ்சுண்டு இருக்கேன். அங்கே போனா விரட்டறா. எங்கப்பாவும் அண்ணாவுமே போடி போடின்னு அனுப்பியாறது. இங்கே வந்தா சாமாவும் கிடையாது.

பெரிய கூட்டமாக யாரோ வந்து கொண்டிருந்ததை முதுகுக்குப் பின் உணர்ந்தபடி ராஜா வேட்டியைத் தழைத்துக் கொண்டு கொண்டு நடந்தார்.

சாமா சாமா நில்லு நானும் வரேன்.

இன்னிக்கு இவனுக்கு மாசியம். அதான் கூட்டிண்டு போறோம். நீ அங்கெல்லாம் வரப்படாது. பிரஷ்டை. போயிடு.

ஒரு பெரிய அலையாக மந்திர உச்சாடனம் கேட்க ஆரம்பித்தபோது ராஜா சந்தோஷமாக மலம் கழித்துக் கொண்டிருந்தார்.

காதில் விழுந்து நகர்ந்துபோன சத்தத்தை அவர் கிரகிக்கவில்லை. வெள்ளைக்காரன் என்ன அவனுடைய வைப்பாட்டி மகன் வந்தாலும் அவர் இன்றைக்கு நின்று சமாளிப்பார். உடம்பு சொன்னபடி கேட்கப் போகிறது.

தொரே. தொரே.

காரியஸ்தனின் குரலில் அவசரம் தெரிந்தது.

என்ன ?

ராஜா உள்ளேயிருந்தபடியே கேட்டார்.

ஊருக்கு மூணு காதத்துலே வந்துட்டிருக்காங்களாம்.

அந்த இருப்பு வாளியிலே தண்ணியிருக்கான்னு பார்த்து உள்ளே நகர்த்தி வச்சுட்டுப் போ.

ராஜா கம்பீரமாகச் சொன்னார்.

(தொடரும்)

Series Navigation