ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 4 – சென்ற இதழ் தொடர்ச்சி
நாகரத்தினம் கிருஷ்ணா
1994ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ந்தேதி காலை மணி பத்து……
இன்றைய தேதியில் தமிழகக் கிராமங்களில் உள்ள உயிரினங்களை பிராணிகள், அப்பிரானிகளென இரண்டுவகையாகக் கொள்ளலாம். பிராணிகள்பாடு தேவலாம். கோடையில் பசியாறுவதற்குப் பதிலாக கோரைப் புற்களின் கட்டைகளில் முகத்தைச் சொறிந்துகொண்டு திரும்ப முடியும். அப்பிராணிகளுக்கு அதுவுமில்லை. தரித்திரத்தில் பிறந்து, தரித்திரத்தில் வாழ்ந்து, தரித்திரத்தில் சாகும் இப்பாரத ஜந்துக்களுக்கு அயோத்தியில் கட்டவிருக்கும் இராமர்கோவில் பற்றிய சுதேசி அறிவோ, அப்துல் கலாமின் கனவுகளோ, குறைந்தது ‘தமிழக அரசு ‘ முதலிடத்தை நோக்கிப் பயணம் செல்வதைப் பற்றியோ அக்கறையேதுமில்லை.. இவர்ளது அக்கறைகள் அனைத்தும் நடந்ததும், நடப்பதுமே. நடக்கப்போவதைப் பற்றியதல்ல. அது புளியேப்ப மனிதர்களுடையது. விபத்தில் செத்துப்போன பார்வதியின் புருஷன் ராமசமினுடைய பாட்டன் கோவிந்தசாமிக்கு சுதந்திரத்திற்கு முன்னே தன் குடிசையைக் கொஞ்சம் ‘தூலக்கட்டு ‘ வீடாக ‘ பார்க்க ஆசையிருந்தது, அவருடைய மகன் சின்னசாமிக்கும் சுதந்திரத்திற்குப் பின்னே அந்த ஆசைவந்தது. அவருக்குப் பின்னே கோவிந்தசாமியின் பேரன் ராமசாமிக்கும் இந்தியா சுதந்திரத்தின் வெள்ளிவிழா காணும்போது குடிசையைப் கொஞ்சம் பெரிதாகக் கட்டவேண்டுமென கனவுகண்டு விபத்தில் போய்ச் சேர்ந்துவிட்டான். இஇனி ராமசாமியின் வம்சாவழியினரில் எவரேனும் ஒருவருக்கு, இந்தியச் சுதந்திரத்தின் வைரவிழாவின் போது இந்த ஆசை வரலாம். அந்த நேரத்திலும் இருக்க இடமில்லாமல் தவிக்கும் ஏதோவொரு கடவுளுக்கு கோவில் கட்டத் தலைவர்கள் முஸ்தீபு செய்யலாம். ஆனாலிங்கே, கிராமத்து அப்பிராணி ராமசாமிகளுக்கு குடிசையைப் பெரிதாக்கிக் கொள்ளும் வாய்ப்புகள்மட்டும் கடைசிவரை வரப்போவதில்லை.
பார்வதி புருஷன் ராமசாமி பிணமாக போனபோது பார்வதியிடமிருந்த துக்கடா ஐஸ்வரியங்களும் துணைக்கு அவனோடு போய்விட்டன. பெரிய செலவுகளுக்கு கடன் கொடுத்து உதவிய காசாம்புமுதலி பார்வதியிடமிருந்த அரை ஏக்கர் நஞ்சையில் குறிவைத்திருந்தான். உதிரி செலவுகளுக்கு வாங்கிய கடனுக்கு உழவு மாடுகளையும், இருந்த நான்கு வெள்ளாட்டினையும் ஓட்டிச் சென்றனர். தாலி இழவு முடிந்த அன்றே, பக்கத்து கிராமங்களுக்குச் சென்று நெல் வாங்கிவந்து அவித்து, மூன்றுகல் நடந்து சென்று ரைஸ்மில்லில் அரைத்து, கடற்கரை குப்பங்களுக்குச் சென்று விற்று பிழைப்பை நடத்தவேண்டிய கட்டாயம்.. அன்ைறைக்கு குடிசைவாசலில் ‘சாணம் தெளிக்க ‘ எழுந்தவள் அப்படியே உட்கார்ந்துவிட்டாள். தலைவலி மண்டையைப் பிளந்தது. சுக்குக் கஷாயம் குடித்து, பாயைப் போட்டு கட்டையை நீட்டியிருந்தாள். ஜெயத்தின் புருஷன் தணிகாசலம் வீடுதேடி வந்தான்.
‘பார்வதி…. ‘
தணிகாசலத்தின் குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்து, பாயைச் சுருட்டி ஓர் ஓரமாகவைத்துவிட்டு அவனுக்கொரு மணையைப் போட்டாள்.
‘வாங்கண்ணா.. குந்துங்க. என்ன சேதி ? ‘
‘உன்னைதாம்மா பார்க்க வந்திருக்கேன். ‘
‘ சொல்லுங்க ‘
‘நம்ம காசாம்பு முதலி விஷயமா வந்திருக்கேன். முடைக்கு உதவியிருக்கான். நாமளும் வாக்குத் தவறக்கூடாது. அவனுக்கு நாம சொன்னபடி ஏரி நஞ்சைக்கு போக்கியப் பத்திரம் எழுதிடணும். ‘
‘நான் சொல்றதுக்கு என்ன இருக்குது ? இருப்பது அரை ஏக்கரு. அதையும் கொடுத்திட்டு என்ன பண்ணுவதுண்ணு யோசிக்கிறேன். வேற வழியே இல்லையாண்ணே ? ‘
‘வழியென்ன வழி. கொடுத்தப் பணத்தைத் தூக்கிப் போட்டா மூதி ஒழியறான். நமக்கு ஆகணுமே. ‘
‘ரெண்டு பொட்டை புள்ளைகளை வச்சிருக்கேன். எல்லாத்தையும் வாரிகொடுத்துட்டு நான் என்ன செய்யப்போறேன். எவ்வளவு நாளைக்கு வாழப்போறேன். ‘
‘பார்வதி! ஏம்மா இப்படி பேசற ? இந்த மாதிரி சமயத்துல மனசைத் தளரவிடக்கூடாது. நாளைக்கு ராமசாமி கேஸு ஜெயிச்சுதுனா மீட்டுக்கப்போற. ஓம்பிள்ளைங்க முகத்தைப் பார்க்கணுமில்ல ‘.
‘ அண்ணே உங்களுக்குத் தெரியாதா ? எங்களுக்குண்ணு இருப்பது ஏதோ கொஞ்சம் உள்ளங்கை நிலம். அதையுமிப்ப புருஷன் எழவு முடிஞ்ச கையோடு தொலைக்கனும்னா மனசு கேக்கலை. ‘
‘ என்னம்மா புரியாதவளாயிருக்கிற ? பணம் கொடுத்தவனுக்கு வேறு என்ன வழி இருக்குது ? அவன் கடன் கொடுத்தது உன் நஞ்சையை குறிவைத்துதான். அன்றைக்கு இந்த ஊர்ல ஒரு பேமானிப்பய, காச முடிஞ்சுகிட்டு வரலை. அவன் வந்தான். அவ்வளவு ஏன் ? ஒன் சொந்தக்காரபய ஒருபய எட்டிபார்த்திருப்பானா ? என்னமோ பேசற! எந்த யோசனையும் பண்ணாம காசாம்பு முதலிக்கு போக்கியத்தை எழுதிக் கொடு. அடுத்த புதன்கிழமை ஒரு கேசு விஷயமா என் வக்கீல பார்க்கலாம்னு போறேன். கையோட ஆக்சிடெண்ட் கேசையும் அவர் கிட்டேயே கொடுத்திடலாம். என்ன சொல்றே ? ‘
‘ இல்லாத கொடுமை, எதை எதையோ பேசுறேன். மனசுல ஒண்ணூம் வச்சிக்காதண்ணே ‘ சொல்லிய பார்வதி தன் முகத்தினைத் திருப்பி முந்தானை முனையால் கண்களைத் துடைத்துக்கொண்டு, மூக்கைச் சிந்தி சுவற்றிலிட்டாள்.
‘ என்ன செய்யறது அனுபவிக்க வேண்டியதை அனுபவச்சிதான ஆகணும். நான் காசாம்பு முதலியைப் பார்த்து விஷயத்தைத் சொல்றேன் வரட்டுமா ‘. தணிகாசலம் எழுந்து கொண்டான்.
1994ம் ஆண்டு பிப்ரவரிமாதம் 20ந்தேதி காலை மணி பதினொன்று….
தணிகாசலம், ஜெயத்தையும் பார்வதியையும் அழைத்துக் கொண்டு திண்டிவனத்தில் வக்கீல் சடகோபாச்சாரியைப் பார்க்கச் சென்றபோது, குடையை விரித்துக் கொண்டு வெளியே பயணிக்கவிருந்தார். கட்சிகாரனைப் பார்த்த சந்தோஷத்தை குடையில் மறைத்து வரவேற்றார்.
‘வாய்யா.. தணிகாசலம். எங்கே காணலையேன்னு பார்த்தேன். உனக்குக் கடுதாசி எழுதியிருந்தேனே கிடைச்சுதா ? அது என்ன வாழைத்தாரா ? உள்ளே குமாஸ்தா நிக்கறான் பாரு. அவங்கிட்ட கொடுத்திடு. சரி இவா யாரு சொல்லலையே ?
‘ நம்ம கிராமந்தான். எதிர்த்த வீடு. கிட்டத்துல ஆக்சிடெண்ட்ல, இவங்க புருஷன் செத்துட்டாரு. அந்தக் கேஸ் விஷயமா உங்களைப் பார்க்கலாம்னு கூட்டிக்கிட்டு வந்தேன். ‘
‘அப்படியா ? நான் மோட்டார் விபத்து கேசுகள் எல்லாம் எடுக்கறதில்லை; அதற்கென்றே வக்கீலுங்க இருக்காங்க; பொதுவா பீஸ் எதுவும் வாங்கறதில்லை; ஜெயிச்ச பிறகு பர்செண்டேஜ் கணக்கு. உங்க பக்கத்துப் பையன். பேரு ஏகாம்பரம். இந்த மாதிரி கேசெல்லாம் ஒழுங்கா செய்யறாண்ணு கேள்வி. நம்ம குமாஸ்தாவைக் கேளுங்க. விபரமாச் சொல்வான். கொடுக்க வேண்டியதையும் கொடுத்துட்டுப் போங்க. நான் கொஞ்சம் வெளியே போகணும். ‘
‘அப்ப நம்ம குமாஸ்தாவை பார்த்துட்டுப் போறோமுங்க ‘
‘ செய்! அடுத்த மாதம் உன்னோட ஹியரிங் வருது. தேதி ஞாபகமில்லை. குமாஸ்தாவிடம் தேதியை மறக்காம குறிச்சு வாங்கிட்டுப் போ. சாட்சிகளை நான் சொன்னமாதிரி ஏற்பாடு செய்திருக்கணும்.. ஞாபகமிருக்கட்டும்.
1994ம் ஆண்டு அக்டோபர் மாதம் பதினைந்தாம்தேதி…..
திண்டிவனம் பெருமாள்கோவில் தெருவில் இருந்தான் இவக்கீல் ஏகாம்பரம். ஆப்பிரம்பட்டு மாசிலாமணிகவுண்டர் மகன். வீட்டு விசேஷங்களுக்கு பத்திரிகையடித்தால் மிராசுதார் எனப் வார்த்தைப் பிரயோகம் செய்யும் அளவுக்கு நிலபுலங்கள். கிராமத்தில் மாசிலாமணிக்கு அந்தஸ்திற்குத் தகுந்தார்போல பஞ்சாயத்து போர்டு எலெக்ஷன் பிரச்சினை, ஊர்த் திருவிழா, வரப்புச் சண்டை, பங்காளிச் சண்டையென ஊரை இரண்டாகப் பிரித்து முனிசீப் கோர்ட்டிலிருந்து ஹைகோர்ட்வரை ஏதேதோ ரூபத்தில் வருடத்தின் பெரும்பான்மையான நாட்களில் வழக்குகளிருந்தன. அவரே ஒரு வக்கீல் அளவுக்கு வளர்ந்திருந்தார். சட்டங்கள்பற்றிய மேலெழுந்தவாரியான சங்கதிகள் தெரியும். வருடத்திற்கு முன்னூறு மூட்டை நெல், ஐம்பது மூட்டை மணிலா, இலட்ச இலட்சமாக சவுக்கு விற்கின்ற பணம் என்கின்ற இத்யாதி தகுதிகளுடன் வக்கீல்கள் வீட்டில் காத்துக் கிடக்கவேண்டியிருக்கிறதே என அதிகமாகவே வருந்தியிருந்தார். இந்த வக்கீல்களுக்கு பேரேடு வைத்துக் கொண்டு கொடுக்கும் ‘ஃபீசையும் ‘ கணக்கிட்டு மலைத்துவிட்டார். விளைவு, வீட்டில் ஓரளவு படித்த மகனை வக்கீலாக்கிவிட்டு, பெருமாள் கோவில் தெருவில் ஒரு வீட்டினையும் வாங்கிப் போட்டர். ஏகாம்பரம் வக்கீல் தொழிலை ஓய்வாகவும் அரசியலைத் முழுநேரத் தொழிலாவும் செய்துவந்தான்.
அரசியலும், சட்டமும் சேர்ந்தே உபயோகத்திலிருக்கும் அலுவலகம். வழக்கம்போல எல்லா வக்கீல்களிடமும் இருக்கின்ற அரிச்சுவடி சுட்டப் புத்தகங்கள் தவிர பைண்ட் செய்யபட்ட பன்சால் மற்றும் பட்நாகர் எழுதிய மோட்டார் ஆக்ஸிடெண்ட் பற்றிய புத்தகங்கள். பார்வதி இரண்டாவது முறையாக தன் புருஷன் கேஸ் விஷயமாக அவனிடம் வந்திருக்கிறாள். அறைமுழுக்க அவனது அரசியல் கட்சிக்காரர்கள் அடைத்துக்கொண்டிருந்ததால் இவள் தயங்கி நின்றாள்.
‘வணக்கம்ய்யா ‘
‘வாம்மா..! எங்க வந்த ? என்ன விஷயம் சொல்லு ? ‘
‘எங்கேசு பத்திய தகவல் தெரிஞ்சிதுங்களா ? ‘
‘அதைத்தான் சொல்லவந்தேன். ஒங்கேசுல எதுவும் சரியில்லை. போலீஸ்காருங்க எஃப்..ஐ.ஆர் போடலை. சம்பந்தபட்ட வேன் டில்லி ரிஜிஸ்றேஷனாம். ‘
‘ஐயா!.. இப்படி சொன்னா எப்படிய்யா ? இரண்டு பொட்டை புள்ளைங்களை வச்சுகிட்டு நடுத்தெருவுல நிக்கிறன். இந்த கேசைத்தான் மலைபோல நம்பியிருந்தேன். ‘
இங்க பாரும்மா. இதுமாதிரில்லாம் இங்க புலம்பக் கூடாது. என்னை முழுசாச் சொல்லவிடு. அவசரப்டாத. பிரச்சினையில்லாம செக்ஷன் 140ல பிக்சட் காம்பன்சேஷன் ஏற்பாடு செய்யலாம்னுதான் இருந்தேன். ஆனால் எதிரிங்கக்கிட்ட ஒரு எழவும் இல்லையாமே. நாளைக்கு ஜட்ஜ்மெண்ட் வாங்கிட்டு நாக்கையா வழிச்சுகிறது. சொன்னாப் புரிஞ்சிக்கணும். அவனுங்கள நைஸா காம்ப்ரமைஸுக்குக் கொண்டுவந்து முடிஞ்சமட்டும் கறக்கறதுதான் புத்திசாலித்தனம் ‘
‘ஐயா.. எம்புருஷன் போன கையோட எங்களுக்குண்ணு இருந்த அரை ஏக்கர் நஞ்செயும் இப்ப போக்கியத்துல நிக்குது. அதை
மீட்கறதுக்கு வழித் பொறந்தா மாரியாத்தா புண்ணியத்துல நீங்க நல்லாயிருப்பீங்க ‘
‘வருத்தப்பாடாதம்மா. உன்னோட நிலத்தை போக்கியத்திலிருந்து மீட்கறதுக்கு நானாச்சி. அடுத்த வாரத்துல அவனுங்களை வரச்சொல்லி நான் பேசறேன். பிறகு நான் சொல்றமாதிரி நடந்துக்கோ. இரண்டுவாரம் கழித்து தணிகாசலத்தோட வந்து பாரு. இப்பத் தரியமா போயிட்டுவா. ‘
பார்வதி வக்கீல் ஏகாம்பரம் வீட்டைவிட்டு வெளியேறியபோது அவள் புருஷன் ராமசாமியை விபத்துக்குள்ளாக்கின வேனுக்குச் சொந்தக்காரன் உள்ளே நுழைந்துகொண்டிருந்தான்.
மீண்டும் அடுத்த வெள்ளிக்கு…
Na.Krishna@wanadoo.fr
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தாறு
- குறிப்புகள் சில அக்டோபர் 2, 2003 ( கனாடா, மருந்துகள்,அறிவுசார் சொத்துரிமை-அமெரிக்க அரசும் ஒபன் சோர்ஸ் குறித்த சர்ச்சையும்- சமூக
- கருத்தும். சுதந்திரமும்.
- வாரபலன் – இந்த வாரம் (பி.ஏ) கிருஷ்ண ஜெயந்தி
- நூல் வெளியீட்டுவிழா
- குமரிஉலா 5
- தமிழ்ச் சினிமா – இன்னும் சில குறிப்புகள்
- கல்யாண வினாயகர் (கல்லூரிக் காலம்-2)
- கடிதங்கள்
- பயணம் – ஒரு மைக்ரோ கதை
- ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 4 – சென்ற இதழ் தொடர்ச்சி
- இன்னுமொரு உலகம்…….
- கனடாவில் நாகம்மா
- வடிகால்
- விடியும்! நாவல் – (16)
- முடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை [தொடர்ச்சி ]
- ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ – 4
- பட்டாபிஷேகம் நடக்கிறது…
- பஸ்கால் கிஞ்ஞார் (Pascal Qignard)
- நியூயார்க்கில் இந்திய இலக்கியச் சந்திப்புகள்
- தேவை இன்னும் கொஞ்சம் தாகம்
- அடையாளத் தழும்புகள் (சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ் கெளதமன் – நாவல் அறிமுகம்)
- மனத்தில் படியும் ஞாபகங்கள் – சுரேஷ்குமார் இந்திரஜித்தின் ‘அலையும் சிறகுகள் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 79)
- சூரியனைச் சுற்றி வந்து தகவல் அனுப்பும் யுலிஸிஸ் விண்ணாய்வுச் சிமிழ் [Ulysses Spacecraft Exploring the Sun (1990-2007)]
- மெளனம் பற்றி ஏறி
- இணையக் காவடிச் சிந்து
- மாயமான்.
- ‘யார் ? ‘என்றா கேட்கின்றாய் ?
- வலை
- வைரமுத்துக்களின் வானம்-4 (குமுதம் 29-9-03 இதழ்)
- சில சீனத் திறமைகள்