வடிகால்

This entry is part [part not set] of 39 in the series 20041028_Issue

க்ருஷாங்கினி


நேற்று திடாரென்று நீ கொதித்ததால் என் மனம் கடினமாகிவிட்டது. ஏமாற்றம்! ஏமாந்துவிட்டேனோ என்று முதல் முறையான தயக்கம். எதிர் பார்த்திருந்தால் அவை எதிர்பார்ப்புக்கள். ஆனால் எதிர்பாராததால் இது ஏமாற்றம்.

நீ கேட்டாயே, உன்னை என் வட்டத்திலிருந்து தள்ளிவிட்டேனோ என்ற சந்தேகத்தை; நீ இல்லாமல் எனக்கென்று வட்டமே கிடையாது. மேகங்கள் வானில் நிரம்பினால்தான் நிலவுக்கென்று கோட்டை. இல்லா விட்டால் பாதுகாப்பு இல்லாத வெறும் தனி நிலாதான். இப்போது என் மனம் வெட்டவெளியில் திறந்து விடப்பட்ட எலிதான்.

எப்போதாவது அனல் வீசியிருந்தால், அல்லது வீசலாம் என்ற நிலையிருந்தாலும் சுட்டது எதிர்பார்ப்புடன் இணைந்திருக்கும். இந்த திடார் கொதிப்பு என் மனதில் உன்பகுதியைக் கல்லாக்கித் தனியே நிற்கவைத்து விட்டது; இளகிய மனதுடன் ஒட்டாது.

குழந்தை இருவருக்குமே பொது என்ற எண்ணம் தவறோ ? உனக்கே தெரியும், நான் உன்னைச் சேர்வதற்குமுன் எனக்கு என்று இருந்த தனி இடம். திரும்பவும் அங்கே போகச் சொல்வது நியாயமா ? காலில் உறுத்திய முள்ளைக் களைந்து, நிம்மதிப்பட்டு நீண்டநாட்கள் கடந்தபின் திரும்பவும் குத்திக் கொள்ள அவர்கள் தயாராயில்லை.

‘ பணத்தை எடுத்துக்கொண்டு செல் ‘ எனக் கூறும்போது உன் பணம் என்ற எண்ணமும் சொல்லின் சூடும் என்னை உடல் முழுதும் நனையவைத்து நடுங்கி ஒரு மூலையில் நிற்கவைத்துவிட்டது. உன் சாவியில் என் எழுத்து திறந்தது. ஆனால், அது இப்படி உன்னைப்பற்றி எழுதப் பயன்பட்டு விட்டதே! தீட்டிய மரம்தான். ஆனால் வேறு வழியில்லை.

கில்லியை தாண்டு நெடுந்தூரம் கெல்லியெறிந்தால் மற்றவர்கள் மகிழ்ச்சி தான் கொள்வார்கள். அந்த அலட்சியம் என்னைமட்டும்தான் கவலை கொள்ளச் செய்யும். என்னை உன்னிடமிருந்து கத்தியால் கீறி, கையால் கொஞ்சம் தள்ளியும் வைக்கச் சொன்ன சக்தி எது என்று நான் தெரிந்து கொள்ளலாமா ?

என்னையே என்னுள் வைத்து தண்டித்திருக்கிறேன், இது மறுமுறையும் திருப்பப் படக்கூடாது என்று. அது எவ்வளவு நாட்கள் கட்டுப்படும் என்று நிச்சயம் சொல்வதற்கில்லை. எனக்கு கோபம் அடக்கத் தெரியாத ஒன்று. நீ, கோபத்தை அடக்கி வழிசெலுத்தி விடுவதாலேயே அதன் அனல் அதிகம்.

நன்றாகவே தாக்கப்பட்டேன்!

எனக்கு இந்த நிகழ்ச்சியின் பாதிப்பை அழுகையில் கரைக்கத் தெரிய வில்லை; கரையவும் மாட்டேன் என்கிறது. கையின் துணையும் கொண்டால் சிறிதளவு நிம்மதி வரும். வடிகால் இதுதான்.

ஆனால் ஒன்று, இனி எப்போது நான் ‘ அடிப்பேன் ‘ என்ற வார்த்தையை உபயோகித்தாலும் அது என் மனதை முதலில் பலமாக அடித்துவிட்டுத்தான் எதிராளியைத் தாக்கும். இதுவும் பிட்டுக்கு மண் சுமந்த பரமன் கதைதானே! இனி நான் கையை ஓங்கினால் அது முதலில் என் முதுகில் அறையும்.

உன்னுடைய பலவீனத்தை வெளிப்படுத்தி என்னிடம் பணிந்த உன் ஆண்மை உன் பலத்தையும் என்னிடமே பிரயோகிக்கட்டுமே!

—-

nagarajan63@yahoo.com

Series Navigation

க்ருஷாங்கினி

க்ருஷாங்கினி

வடிகால்

This entry is part [part not set] of 31 in the series 20031002_Issue

ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர்.


இந்த எழுபத்திநான்கு வயதில் டான் டோக் செங் மருத்துவமனையில் வாசம் எனக்கு. நோய் என்ன,சொல்லிக் கொண்டா வரும்! ? எத்தனைக்கெத்தனை, ஒரு தலை வலி என்றும் மருந்து என்றும், அறியாமல் இருந்தேனோ, அத்தனைக்கத்தனை இந்த நான்கு வருடங்களாய் சேர்த்து வைத்து, ஒன்று மாற்றி ஒன்று பட்டுக் கொண்டிருக்கிறேன். இன்னும் எத்தனை நாளோ! காமாட்சி, அதான் என் மனைவி, ஹூம் ., அவள் ஒருவரையும் கஷ்டப் படுத்தாமல் போக ஆசைப்பட்டு, அதே போல தூக்கத்திலேயே போயும் சேர்ந்து விட்டாள்.

சன்னல் வழியாக வானம் தெரிய , அதுவும் என்னைப் போல் சுறு சுறுப்பில்லாமல் மப்பும் மந்தாரமுமாய்க் காட்சி அளிக்கிறது. மழையின் அறிகுறிகளை வானம் விடாமல் துல்லியமாகக் கூறியது. மருந்து வாடை பழக இன்னும் இரண்டு நாளாகும் போலிருந்தது. வீட்டுக்கு எப்போது போவோம் என்று முதல் நாளே குழந்தையாய் மனம் அடம் பிடித்தது. இம்முறை சிகிச்சை எத்தனை நாளாகும் என்று சொல்வதற்கில்லை என்று மருத்துவர் சூசகமாகச் சொல்லி விட்டார்.

தாதி கொடுத்த மருந்தும், நினைவுகளின் தாலாட்டுமாய் எப்போது

உறங்கினேனோ தெரியவில்லை, குமாரின் குரல் கேட்டுத் தான் கண் விழித்தேன்.

‘இப்போ உடம்பு எப்படிப்பா இருக்கு ? ‘ கையில் கொண்டு வந்த பையை மேசையில் வைத்தபடியே கேட்கிறான்.

‘மருந்து தான் தராங்களேப்பா . நேத்திக்கி இருந்ததுக்கு இன்னிக்கு ரொம்பவே பரவால்லன்னு தான் சொல்லணும். ஆமா, உனக்கு வேல இந்த முறையாவது கிடைச்சிடுமா ? இன் டர் வியூல நல்லாதானேசெஞ்ச ? ஏதும் தகவல் சொன்னாங்களா ? ‘

‘இதுவும் கிடைக்கும்னு, எனக்குத் தோணலப்பா. நாளைக்கி போகப் போற

கம்பெனியாவது சரியா வருமான்னு பாக்கலாம். படிப்பு அதிகம், தகுந்த சம்பளம் தர

முடியாதுன்னு எல்லா கம்பெனியிலயும் தயங்கறாங்க. எல்லா இடத்திலேயும் பொருளாதார நெருக்கடியாத்தானே இருக்கு. அவங்களச் சொல்லியும் பயனில்ல. ‘

‘செலவுக்கெல்லாம் அப்ப என்னப்பா குமார் செய்வ ? ‘

‘அண்ணன் கொஞ்சம் பணம் கொடுத்தாருப்பா. ஒரு டையாலிஸிஸுக்கு பணம்

இருக்கு. அப்புறம் தேவைன்னாலும் இருக்கு. ஆனா, பத்தாது. இன்னும் வேணும்.

அக்காவக் கேக்கணும், என்ன செய்யறதுன்னு தெரியல. பார்ப்போம் ‘

‘உங்கக்காவுக்கு வேல இருக்கு. ஆனா மாப்பிள்ளைக்கு வேல போயி ரெண்டு

மாசமாச்சே குமார். அவங்களே எப்படிச் சமாளிக்கிறாங்களோ என்னமோ, இதுல நாம வேற எப்படி எதிர் பாக்க முடியும் ? ‘, எனக்கு கவலை அதிகமானது.

‘ம்….தெரியும்பா. இருந்தாலும் சும்மா கேட்டுப் பார்ப்பமேன்னு தான் கேட்டேன். என்னோட ஃபிரெண்டு கிட்ட கூட சொல்லி வச்சிருக்கேன்பா பணம் கிடைக்கும். நீங்க கவலப்படாதீங்க. ‘, என் முகத்தில் தெரிந்த கவலையை உணந்த குமார், ‘எப்படியும் சமாளிப்பேன். அதுக்காக நீங்க ஒண்ணும் கவலப்படாதீங்க. ‘என்கிறான். ‘டையாலிஸிஸ்னா சும்மாவா, பணம் நிறையா தான்ஆகும்.ஓரளவுக்கு மெடிசேவ் என்னோடது உபயோகிக்கலாம். ஆனா, நீங்க கவலையே படாதீங்க. நான் பார்த்துக்கறேன். இப்ப, உங்களுக்கு ஏதும் வேணும்னா சொல்லுங்க. வாங்கிட்டு வரேன். எதுவும் வேணாம்னா நா கிளம்பறேன். ‘

‘எனக்கு ஒண்ணும் வேணாம்பா. நீ போய் குளிச்சி சாப்புடு. மூஞ்சியப் பாத்தாலே களைச்சிருக்கன்னு தெரியுது.போப்பா, வீட்டுக்குப் போ, வண்டிய வேகமா ஓட்டாதே ‘, சரியென்று தலையை ஆட்டிய படியே கிளம்பிச் சென்று விடுகிறான் குமார்.

இவன் இப்படித் தனக்குக் கல்யாணம் வேண்டாம், கல்யாணம் வேண்டாம் என்று சொல்லி, நாற்பத்தியிரண்டு வயதாகியும் எதிர் காலச் சிந்தனையே இல்லாமல் இருக்கிறானே.

மருத்துவமனை வாசலில், வாகனங்களின் வரவு அதிகரித்திருக்கிறது. சர் சர் என்று ஒரே வாகன இரைச்சல்! இந்தச் சன்னல் மட்டும் வேடிக்கை பார்க்க வசதியாயிருக்கிறதால், எனக்கு நேரம் போகிறது. இல்லையென்றால் என் பாடு படுதிண்டாட்டம் தான்.

கதவு தட்டும் ஓசை, யாராயிருக்கும் என்று என்னைத் திரும்ப

வைக்க, கதவைத் திறந்த வண்ணம் என் நண்பன் பழனியப்பன், அவனுடைய

கவர்ச்சிச் சிரிப்பை உதிர்த்தபடி நுழைகிறான்.

‘வா வா பழனி, எப்படியிருக்க ? ‘, மகிழ்ச்சியில் நான் கேட்க,

‘இந்த வயசுக்கும், உனக்கு குசுபுக்கொண்ணும் கொறச்சலில்லப்பா. நா கேக்க வேண்டிய கேள்விய, நீ கேக்கறயா ? ம்…, சரி சொல்லு, நீ எப்படி இருக்க ? ‘ சிரித்தபடியே பழனியப்பன் அதிரடியாய் ஆரம்பிக்கிறான்.

‘நாளைக்கிக் காலையில டையாலிஸிஸ், ம்…குமார் உள்ளங்கையில என்னைத்

தாங்கறான். ஆஸ்பத்திரியிலயும் நல்லா கவனிக்கிறாங்க. எனக்கென்ன, நல்லாதான்

இருக்கேன். ‘

‘வாய் தான் சொல்லுது. முகத்துல ஒரு நிம்மதியையும் காணமே. ம்…….உடம்புன்னா சீக்கு வராமயேவா இருக்கும் ? மிஷினா என்ன ? சிறுநீரகமும் இத்தன வருஷம் உனக்காகவே உழைச்சு பழுதாயிருக்கு. உடம்புன்னு இருந்தா இதெல்லாம் சகஜமப்பா. நல்ல மகனப் பெத்திருக்கன்னு நெனச்சி சந்தோஷப்படு, ‘

‘ப்ச்….அதில்லப்பா, குமார நினைச்சுத் தான் கவலயெல்லாம். செலவையெல்லாம் எப்படிச் சமாளிப்பானோ, பாவம். வேலயும் இல்லையே. டையாலிஸிஸ் அது இதுன்னு ஏகத்துக்கு செலவாகும் போல இருக்கே. அவனுக்கும் வேல போயி நாலு மாசமாச்சி.ம்……. இன்னோண்ணு இன்னும் கெடச்ச பாடில்ல.

‘என்ன நீ ? உன்னோட உடம்பப் பாத்துக்காம, ம்….சும்மா கவலப் பட்டுக்கிட்டு.

குமாருக்கு மட்டுமா வேல போச்சி ? ஊரே, உலகமே நெருக்கடியில சிக்கித்

தவிச்சி கிட்டிருக்கு. நீ என்னடான்னா இதுக்குப்போயி கவல்ப்பட்டுக்கிட்டு, இதெல்லாம் சகஜம்பா. உன்னோட வயசுக்கும் அனுபவத்துக்கும் கூட

இது புரியலேன்னா, சின்னஞ்சிறுசுகளுக்கு யாரு புரிய வைக்கிறது ? ம்….இல்ல

கேக்கறேன். இந்த நெருக்கடி நிரந்தரமா ? கலைஞ்சு போகப் போகிற மேகம்பா இது.குமாருக்கென்ன, நல்ல திறமை, படிப்பு இருக்கு.நீ ஏன் தான் இந்த மாதிரி கவலப் படறையோ ? ‘

‘சரி, வேல கிடைக்கும்னே வச்சுக்குவோமே. இப்படிக் கல்யாணமே வேணாம்னு பிடிவாதம் பிடிச்சிக் கிட்டு, இந்த நாலாம் மாசம் நாப்பத்தி ரெண்டு வயசாகுது , தலையில நரைச்ச முடிய மறைக்க சாயம் போட்டா ஆச்சா ? கொஞ்சம் கூட, கல்யாணா நெனப்பேயில்லாம இருக்கறது தான் எனக்கு பெரும் கவலையா இருக்கு. அவங்கக்காவும் சொல்லிச் சொல்லி சலிச்சிட்டா. அவங்கம்மா, புண்ணியவதி தன் பங்குக்கு அழுது, சிரிச்சி படாத பாடு பட்டுட்டு, பாவம் போயும் சேர்ந்துட்டா.வேற எதுக்கில்லைனாலும், வயசான காலத்துல அவனுக்கும் ஒரு ஆதரவு வேணுமே. அவனும் பல நேரங்கள்ள, தனிமையில தவிக்கறான் தெரியுமா…..என் கண்ணு மூடறதுக்கு முன்னாடி இவனுக்கு ஒரு கல்யாணத்த…………., ‘உணர்ச்சிகள், நான் தொடங்கிய வாக்கியத்தை முடிக்கவிடாமல் வதைத்தன. கண்ணீரைக் கட்டுப்படுத்திப் பார்த்துத் தோற்றேன்.

‘அய்யோ என்னப்பா இது… கதிரேசா, வர வர ரொம்ப உணர்ச்சி வசப்படற,

ஒண்ணு மாத்தி ஒண்ணா யோசிச்சு கவலப்படறியா ? என்னப்பா நீ ? கவலப் படாதப்பா. நான் என்னோட மச்சானோட கொழுந்தியா மகளப் பத்தி வேணா அவங்கவீட்டுக் காரங்களோட பேசிப்பாக்கறேனே. அட,சும்மாப் பேசிப் பார்ப்போம். முடிஞ்சா சந்தோசம். இல்லேனா வேற இடம் இருக்கவே இருக்கு. நீ எதுக்கும்…, குமார் கிட்ட பேசி வை. இதெல்லாம் நம்ம கையில இல்லைப்பா. ஏதோ முயற்சி வேணா செய்யலாம். ஆனா ஒண்ணு, உலகத்துல நம்பவே முடியாததெல்லாம் நடக்குது. குமார் கல்யாணம் என்ன சாதாரண சுண்டக்கா விஷயம். நடத்த முடியாதா என்ன ?… ‘

‘ஹா ஹா ஹா,……சரி, சரி நீ அவங்க கிட்டக் கேளு . நானும் மெள்ளப் பேசிப் பாக்கறேன். உங்கூட பேசினதுல மனசே லேசானது போல இருக்கு,வந்ததுக்கு ரொம்ப நன்றிப்பா வாய் விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகும்னு சொல்லுவாங்க. எனக்கு இனிமேல் தினமும் நீ வந்தா டையாலிஸிஸ் செலவெல்லாம் மிச்சமாகும் போல இருக்கு ‘

‘ம், ம்……..அவசர வேல ஒண்ணு இருக்கு, வரேன்,…..ம், நாளைக்கிப் பாக்கலாமா ? ‘, என் தோளில் தட்டிபழனி ‘பிராண்டு ‘ சிரிப்பைத் தந்துவிட்டு கையை ஆட்டி விட்டு போய் விடுகிறான்.

பீடிகையெல்லாம் முடிந்து, மழை பெய்து கொண்டிருந்தது, சன்னல் வழியாகத் தெரிந்தது. இளமைக்காலத்தில், நான் ஆடிய ஆட்டங்கள் எத்தனை எத்தனை! குற்றம் கண்டு பிடிக்கவே, என் மனைவி காமாட்சியை, நான் அக்காலத்தில் சொல்லம்புகளால் எத்தனை சாடியிருக்கிறேன்.பெரும்பாலும் அறிந்தேயும், அறியாமல் கொஞ்சமும் என்று நிறைய. பின்பலமாய் என் அம்மாவும் இருக்கவே, என் ஆதிக்கம் அளவுக்கதிகமாய்த் தான் காமாட்சியைக் கஷ்டப்படுத்தி விட்டது.

தாதி வந்து சூடாகப்பால் ஒரு டம்ளாரில் கொடுத்துவிட்டுப்போய் விடுகிறார்.

பாலைக்குடித்து விட்டு சாய்ந்தவண்ணம் படுக்கையில் உட்காருகிறேன்.

நினைவுகள் நிகழ்காலத்திலிருந்து விடை பெற்றுக் கடந்த காலத்திற்குத்

தாவுவதைத் தடுக்காமல் லயிக்கிறேன். அதில் ஒரு அலாதி சுகம், எனக்கு.

முதல் இரண்டு பிள்ளைகளுக்கும் இருந்த அளவு, குமார் பிறந்தபோது

காமாட்சிக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை. எனக்கு அவளைத் துன்புறுத்த ஒரு சின்ன விஷயமே போதுமானதாய் இருந்தது. ஆகவே இதை ஒரு காரணமாக வைத்துக் கொண்டு காமாட்சியைத் துன்புறுத்த ஆரம்பித்தேன். மற்ற இருவரும் பத்து மாதம் வரை தாய்ப்பால் குடித்தனர். குமாருக்கு அவளால் மூன்று மாதம் கூடக் கொடுக்க முடியவில்லை. குமார் வயிற்றைக்கிழித்து அறுவை சிகிச்சையில் பிறந்திருந்தான். ரத்த இழப்பு அவளுக்கு அதிகமாய் இருந்தது. காமாட்சியின் உடல் நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருந்தது. சூழ் நிலை அப்படியிருந்ததே தவிர அவளுக்குத் துளியும் வஞ்சனையில்லை. அதை அறிந்திருந்தும், அவளைத் துன்புறுத்தி மகிழ்ந்து பழகிய எனக்கு புத்தி கெட்டிருந்ததே.

ஆறேழு வயதில் கணக்குப் பாடத்தில் குமார் தடுமாறியதைப் பார்த்து

மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிட்டு, ‘நீ தாய்ப்பால் கொடுக்காததால்தான் ‘ என்று

அநியாயமாய் குற்றம் சாடினேனே. மூத்தவன் கணக்கில் படு கெட்டி என்பதைக் காட்டி காமாட்சியின் மனதை நோகச் செய்தேனே. காமாட்சி எப்படித்துடித்தாள் என் ஏச்சைக்கேட்டு! நாட்கணக்கில் நினைத்து நினைத்து அழுதாள். என் குற்றச்சாட்டை, குமார் தன் நினைவில் வைத்திருந்ததை நான்அறிந்த போது, அவனுக்கு பதின்மவயது. எதிர் பாராத அதிர்ச்சி!அந்த அதிர்ச்சி தந்த குற்ற உணர்வு, கட்டை வேகும் வரை வரும் போலிருக்கிறதே!

பால் சுரப்பது தாயின் கையில் இல்லை என்பதும், பிள்ளைகளில்,

தந்தையாவது பேதம் காண்பிக்கக்கூடும், தாய் நிச்சயம் காண்பிக்க மாட்டாள்

என்று தெரியாதவன் இல்லை. அத்துடன், புத்திசாலித்தனம் என்பது

ஒவ்வொரு குழந்தைக்கும், ஒவ்வொரு வகையில் இருக்கும் என்பதையும்,

அறிந்தவன் தான். அப்போது இருந்த இளமையும் முறுக்கும் காமாட்சியை புண்படுத்திப் பார்க்கச்சொன்னது. அதற்கு இன்று வரை காரணம் என்னால் கண்டு பிடிக்க முடிந்ததில்லை.

பல முறை, மூன்று பேரில் குமார் தான் மிகவும் நன்றாகப் படிக்கப் போகிறான்

என்று கூறிக் கொள்வாள். அப்போதெல்லாம் அவளை நான் அலட்சியப் படுத்தியிருக்கிறேன். ஆனால்,அவள் வார்த்தைகளே அவனுக்கு ஆசிகளாய் அமைந்தன போலும். குமாரின் புத்திசாலித்தனம் அவளுக்கு நன்கு தெரிந்திருந்தது. அவள் தீர்க்கதரிசி!குமாரே மூவரிலும் அதிகமாகப் படித்தான்! கட்டடப் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றுச் சிறப்பாகத் தேர்ந்தான். மறக்கக்கூடிய நாளா அது!

வருடங்கள் ஓட ஓட, என் வயது ஏற ஏற எல்லாவற்றிலும் இயலாமை, அதன்

பொருட்டு கோபம் என்று அவதிப்பட்டேன். பதிலுக்கு அமைதி காத்தால் ஒரு பிரையோசனமும் இல்லை என்று உணர்ந்த காமாட்சி, மெள்ள மெள்ள எதிர்ப்பைக் காட்டப் பழகினாள். உடனே எனக்குச் சுயபச்சாத்தாபம் பிடுங்கித் தின்னும்! என்னிடம் இயல்பாகவே ஒட்டிக் கொள்ளும் குமார் தான் அச்சமயங்களில் எனக்கும், என் சுய அனுதாபத்திற்கும் வடிகால்! வடிகாலாய் நான் குமாரைத் தேர்ந்தெடுத்ததற்கு எங்களிருவருக்கும் இடையே இருந்த அன்பே காரணமாய் அமைந்தது என்று காலம் கடந்தே நான் உணர்ந்தேன். குமாரின் அன்பைத்தக்க வைக்கத் துடித்த என் துடிப்பு எனக்குத் தெரியாமலேயே கூடியது. அதன் பொருட்டு அவனது அனுதாபம் எனக்குக் கைகொடுக்கும் என்று நான் நம்பினேன். வடிகாலாய் நான் அவனிடம் கொட்டிய மனக்கசப்பெல்லாம், அவனுக்கு விளைவிக்கப் போகும் தீங்கை நான் உணரத் தவறினேன்.

அவன் வயதையும் மறந்து, காமாட்சியைப் பற்றி எல்லாக் கசப்புகளையும்

அவனிடம் கொட்டினேன். பிஞ்சு மனதில் நஞ்சை நான் என்னைஅறியாமலேயே

கலந்திருப்பதை நான் உணரும் போது காலம் தாமதமாகி விட்டிருந்ததே!

எனக்கு வடிகாலாய் இருந்த குமாருக்கு இன்று ஒரு துணையே இல்லா நிலை!

குலுங்கிக் குலுங்கி அடக்க முடியாமல் அழுகிறேன்……..இருப்பது மருத்துவமனை என்பது தெரியும் போது அழுகை கட்டுப்படுகிறது. புரண்டு மறுபுறம் படுக்கிறேன்.

இருபத்தியாறு வயதில் குமார் தனக்குத் திருமணமே வேண்டாம் என்ற

போது பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை நான். சரி ,கொஞ்ச காலம்

தனிக்காட்டு ராஜாவாகத் தான் இருக்கட்டுமே என்று நினைத்தேன்.

வேறொரு சமயம் தனிமையில் பேசும் போது தான், அவனுக்குக்

கல்யாணத்திலும், மனைவி என்ற பந்தத்தில் அறவே நம்பிக்கையே

இல்லாதது தெரிந்தது. இதற்குக் காரணமே நான் என்பது எனக்கு

மட்டுமே தெரியும். குற்ற உணர்வு என்னை வாட்ட ஆரம்பித்தது. வீட்டில் உள்ள

அனைவருமே மாறி மாறி பல விதங்களில் முயன்றும் பலனே இல்லாமல் போனது.

வருடங்கள் உருண்டோட, நம்பிக்கை தேய்ந்து, ஓய்ந்தது என்றே கூடச்சொல்லலாம். நித்திரா தேவியின் துணயுடன் நான் அமைதியான உறக்கத்தில் ஆழ்கிறேன்.

மறுநாள்…….

‘உஸ்….அப்பாடா, என்னா வெயில்,….. நேத்திக்கி தானே, அந்த மழை விடாம கொட்டிச்சி. இன்னிக்கிப்பாரு கொளுத்துது ‘,பழனியப்பன் புயலென அறையினுள் நுழைகிறான்.

‘வா பழனீ, உக்காரு.. ‘, உட்காரவில்லை பழனியப்பன். நின்றுகொண்டே, ‘கதிரேசா, அவசரமாப்போகணும், நாளைக்கி வரேன். என் மச்சானோட கொழுந்தியா மகளுக்கு, குமார விட ரெண்டர வயசு கம்மி. நீ கூடப்பாத்திருக்கியே. நெறம் கொஞ்சம் கொறவு. ஆனா, நல்ல லட்சணமா இருப்பா, நல்ல வேலைல இருக்கா. ‘

‘என்னப்பா,கால்ல கஞ்சிய ஊத்திக்கிட்டு ஓடறே ?அந்த கோகிலாவச்

சொல்றியா ? ‘

‘அதே பொண்ணு தான்பா. அறியாத வயசுல, ஏதேதோ தப்பு செஞ்சிடிச்சு. ஆனா ஒழுக்கமானவ தான். அந்தப் பழங்கதை ஒனக்குத் தான் தெரியுமே. அவங்க வீட்டுல கல்யாணம் செய்யறதாத் தான் இருக்காங்க. குமார் சரின்னு சொன்னா

மேற்கொண்டு பேசலாம். அவன் கிட்டக் கேளு. நா முக்கிய வேலையா டாபீஎஸ் வங்கிக்கி போகணும்பா. வரட்டா ? நாளைக்கி சொல்லு நா வரேன், என்ன ? ‘, பேசிக்கொண்டே ஓட்டமும் நடையுமாக பறந்து விடுகிறான். இந்த முறையாவது குமாரை, எப்படியாவது சம்மதிக்க வைக்கணும் என்று என் மனம் ஆயத்தம் ஆகிறது.

குமாரும் வர,

‘குமார் இன் டர் வியூக்கு கிளம்பிட்டியா…..நல்லா செய்யிப்பா. பசியாறிட்டியா ? ‘

‘ நா பசியாறியாச்சு. எனக்கு தெம்பனீசுக்கு போகணும்பா. அங்கிருந்து பெடோக்குக்குப் போயி , அக்கா வீட்டுக்குப் போயிட்டு வரலாம்னு இருக்கேன் ‘

‘நேத்திக்கி உங்க அண்ணனப் பாத்தியா ?என்ன சொல்றான் ? ‘

‘அவருக்கும் பணத்தட்டுப் பாடாம். ரெண்டெடத்துல கேட்டிருக்காறாம்.

பாக்கலாம்னு சொன்னாரு. பசங்கல்லாம் என்கிட்ட நின்னு கூடப் பேசலப்பா. எல்லாம் பெரிசாகுதுங்கயில்லைய, முன்னெயெல்லாம் சித்தப்பா, சித்தப்பான்னு வந்து தானா ஒட்டிக்கும். இப்பல்லாம்,ஹாய், சித்தப்பா, பாய் சித்தப்பான்னு சொல்லிட்டு ஓடுதுங்கப்பா ‘

‘ ம்..அது அப்பிடித்தான், அதுங்க அதுங்களோட அப்பனப் பாத்துக் கிட்டாலேபெரிசு. சித்தப்பன வேற பார்த்துக்குங்களா ?ம்,. நீ தான், கல்யாணப் பேச்செடுத்தாலே ‘அண்ணனோட குடும்பம் இருக்கு. பிள்ளைங்க இருக்காங்க ‘ன்ற. ஏதோ நாளு கிழமைனா கூடி இருக்கலாம் . ஆனா கூடவே இருக்க முடியாதே. உனக்கு ஒரு மகனிருந்தா செய்யிறாப் போல வருமா ? உனக்கு ஒரு துணை வேணும் குமார். எனக்காவது நீயிருக்க. என் காலம் முடிஞ்சப்புறமா, நாளைக்கி உனக்கு யாரிருக்கா ? சொல்லு. சித்தப்பன்னு மரியாதை அன்பு இருக்கும் . ஆனா அதுக்கு மேல எதிர் பார்க்க முடியுமா, சொல்லு. உறவெல்லாம் ஊறுகாய் மாதிரிதான் சேர்த்துக்க முடியுமே தவிர, ஊறுகாயையே சாதம் மாதிரியா சாப்புட முடியும் ? ‘

‘சரிப்பா ஆரம்பிச்சுட்டாங்களா,…..எனக்கு நேரமாச்சி, நா சாய்ந்திரமா

மறுபடியும் வரேன்பா.உங்களுக்கு ஏதும் வாங்கிட்டு வரணுமா ? ‘

‘எனக்கு எதுவும் வேணாம் குமார். நா சொன்னத மட்டும் யோசி. பழனியோட

மச்சானோட கொழுந்தியா மக கொகிலா இருக்கா இல்ல உனக்கு அவளப் பார்த்தா என்னானு நினைக்கிறேன் ‘ , பேசிக்கொண்டிருக்கும் போதே பதில் சொல்லாமல் அறையை விட்டுச் சென்று விடுகிறான்.

கல்யாணப்பேச்சு எடுத்தாலே, ஒரேயடியாய் ஆத்திரத்தில் கத்தி

சண்டையிடும் குமார் சாதாரணமாய் பேசியதே, எனக்கு சற்று நம்பிக்கையைக்

கொடுக்கிறது. அவனும் யோசித்திருப்பானே. இப்போதும் எம் ஆர் டா யிலும்

என்ன வேலை, யோசிக்கட்டும். என் வார்த்தைகள் அவனை யோசிக்க வைக்குமே.

அவன் யோசிக்க ஆரம்பித்து விட்டதை அவன் முகம் கிளம்பும் போது காட்டியதே! முருகா, குமாருக்கு மட்டும் கல்யாணம் நடந்தா, தை பூசத்தன்னிக்கி நிச்சயம் நா உனக்குப் பால் குடம் எடுக்கறேன்!

மாலையில் வந்த குமாரின் முகத்தில் களைப்பையும் மீறி ஒரு மகிழ்ச்சியின்

தீற்றல் தெரிகிறது. படுத்திருந்த நான் படுக்கையிலேயே பேசுவதற்கு வாகாக சாய்ந்த வண்ணம் உட்கார்ந்து கொள்கிறேன்.

‘வேல கிடைக்கிற மாதிரி இருக்கா,குமார் ? ‘

‘கிடைக்கும் போலத் தெரியுதுப்பா. சம்பளம் கொஞ்சம் கொறச்சலானாலும்

பரவாயில்லன்னு மறைமுகமா சொல்லிட்டேன். உங்களுக்கு எப்பிடியிருக்குப்பா. ‘

‘டையாலிஸிஸ் செஞ்சதுக்கப்பறம் கொஞ்சம் நல்லாவே இருக்கு குமார், ‘

‘அப்பா, அண்ணன் அண்ணி எல்லாரும் இப்ப வருவாங்கன்னு நினைக்கிறேன். அக்கா மட்டும் நாளைக்கி முடிஞ்சா வரேன்னிருக்காங்க. அக்கா உங்களுக்காக புட்டு கொடுத்தனுப்பியிருக்காங்க. இப்ப சாப்பிடுறீங்களாப்பா ? ‘

‘வையி, அப்பறமா சாப்பிட்டுக்கறேன் ‘

‘மாமாவுக்கு காய்ச்சல். அக்கா தான் ரெண்டு நாள் சம்பளமில்லாம லீவு

போட்டிருக்காங்க. ரெண்டு பேரும் சண்டையில்லாம இன்னிக்கித் தான் நா பாக்கறேன்.

‘அதான் குடும்பம். ஆயிரம் பூசல் இருந்தாலும் நல்லது கெட்டதுனா

தானாடாட்டாலும் தன் சதையாடுமேப்பா. ‘

‘அக்கா சம்பளத்துல தான் குடும்பம் நடக்குது. ரெண்டு பேர் சம்பாதிக்கறதுல உள்ள நன்மையே இது தான்னு தோணுது. ‘பெரியபிள்ளைங்க படிப்பு, இப்ப மாமாவுக்கு வைத்தியம்னு பயங்கறச் செலவுன்னு அக்கா ஒரே புலம்பல். பணம் கேக்கப் போனவன் கேக்காமலேயே திரும்பிட்டேன். ‘

‘ஏதோ ,அவ வேலையாவது நெலச்சாச் சரி. ‘

‘நீ சாப்பிட்டயா குமார் ‘

‘ அக்கா வீட்டுலயே சாப்புட்டுட்டேன்பா. ஆமா…. பழனி மாமா வந்தாரா ? ‘

‘ ம் ,..சரி தான், பையன் யோசிச்சிட்டான். என் வழிக்கு வருகிறான். அண்ணனோட பிள்ளைங்க தன்னோட பிள்ளைங்கன்னு நினைச்சிகிட்டிருந்தான் இப்போ தான் இவனுக்குப் புரியவே ஆரம்பிச்சிருக்கு போலயிருக்கு. அதெல்லாம் நிரந்தரமில்லன்னு. அந்தப் பிள்ளைங்க இப்பயே இப்பிடின்னா , நாளைக்கி கல்யாணமெல்லாம் நடந்தா அதது தன் குடும்பமாயில்ல போயிடும் ? ஒரு தலவலி காய்ச்சல்னு வந்தாலும் தன் பெண்டாட்டி பிள்ளைங்க மாதிரி வருமா ? சண்டையும் பூசலும் இல்லாமயா இருக்கும். அது பாட்டுக்கு அது. இப்பயாவது புரிஞ்சிகிட்டானே! ‘

‘ பழனி நாளைக்கி தான் வருவான். ஏன் கேக்கற ? ‘, என்று அவன் முகத்தைக்கூர்ந்து கவனித்தபடி நான் கேட்க,

‘இல்ல, சும்மா தான் ‘, என்று அவன் மழுப்ப,

‘சொல்லு குமார் ‘, என்று நான் விடாமல் வார்த்தைகளை வாங்க,

‘இல்ல அவருக்கு பதில் சொல்லணும்னு சொன்னீங்களே,..அந்த கோகிலா

எங்க வேல பாக்கராப்ல ? ‘,மெள்ளத் தயங்கியபடி கேட்கிறான். எனக்கு மகிழ்ச்சியில்

வார்த்தைகள் வரவில்லை. என் குற்றத்திற்குத் தண்டனையாய், குற்ற உணர்வில்

என்னை வாட்டியெடுத்த ஆண்டவனுக்கே போதும் என்று தோன்றி விட்டது போலும்!

‘கோகிலாவ கல்யாணம் செஞ்சிக்க, குமார் தயார்னு சொல்லிடவா ‘

‘மொதல்ல எனக்கு வேல கிடைக்கணும்….. ,அதுக்கப்பறம் தான் மத்தது எல்லாம். ‘

‘குமார், இப்பயாச்சும் என் வயத்துல பாலை வார்த்தயே . வேல கெடைச்சிடட்டும். கிடைச்சப்பறமாவே நிச்சயம் பண்ணலாம். ‘

குற்றவுணர்வே என்னைக் கொன்று விடுமோ என்று பயந்த எனக்கு குமாரின் மன மாற்றம் புதுத்தெம்பை அளித்தது. குமாருக்குக் ‘குடும்பம் தேவை ‘ என்று உணர்த்திய அந்தப் பழனி ஆண்டவனுக்கு நான் மனதுக்குள்ளேயே மகிழ்வுடன் நன்றியைத் தெரிவித்தேன். தைப்பூசத்திற்குக் பால் குடம் எடுக்கவேனும் நான் குணமாக வேண்டும். இந்த ஒரு செய்தி போதுமே எனக்கு, இனிமேல் என் ஆரோக்கியம் மேம்பட.

***

தமிழ் முரசு 27-7-02 / 3-8-02

***

sankari01sg@yahoo.com

Series Navigation

ஜெயந்தி சங்கர்

ஜெயந்தி சங்கர்

வடிகால்

This entry is part [part not set] of 30 in the series 20020610_Issue

துரைசாமி


காரணம் தெரியும் முன்பே சிலரை பிடித்து போய்விடுகிறது, அறிவிற்கு எட்டாத ஏதோ ஒன்று. அவர்களுடைய அண்மை, நெருக்கம், மோனம் எல்லாமே இனிமையாய் ஆகிவிடுகிறது. மனதின் ஏதோ ஒரு முலையில் அவர்களுடைய நினைவு விகசித்துக்கொண்டேயிருக்கிறது. ரவிக்கும் மணியை பற்றி நினைக்கும் பொழொதெல்லாம் அப்படித்தான். இந்த நான்கைந்து வருட பழக்கத்தில் அவனுடைய அண்மை இனிமையாய் சந்தோசமாய் தானிருந்திருக்கிறது, மணி செல்லும்மிடமெல்லாம் உடன் சென்று குடிபுகுந்து கொள்ளும் கலகலப்பு, சந்தோசம், ஒரு சிலருக்குத்தான் அப்படி.

சென்னையில் தங்கி வேலைபார்க்கும் பிரம்மசாரிகளுக்கு அடைக்கலம் தரும் திருவல்லிகேணி மேன்சன்களை தவிர்த்து தனியே வாடைக்கு வீடு எடுப்பதில் ஆரம்பத்தில் மணிக்கு அத்தனை விருப்பமில்லையென்றாலும், அதன் இனிமை நாட்களை ரம்யமாக்கிக்கொண்டிருந்தது. நல்ல மழை நாட்களில் போர்டிகோவின் அந்த சிமிண்ட்திண்டில் அமர்ந்திருக்கும் அந்த கணங்கள் ஒவ்வொன்றும் அவர்களுக்காகவே பிறந்துகொண்டிருப்பதாக தோன்றும். சிமிண்ட்திண்டு வரை மெல்லிதாகபரவும் மழைசாரல், தென்னைமரத்தின் ஓலையிலிருந்து சரசரவென்று மண்ணில் விழுந்து கொண்டிருக்கும் மழைதுளிகள், பொத்தல் குடையை பிடித்துக்கொண்டு நிற்பதுபோல் நிற்கும் மாமரம், தெருவோரம் மழைநீரில் ஓடும் காகித கப்பல்கள், மழை சாரலில் புடவையும் வேட்டியும் சரசரக்க வேகமாக போய்கொண்டிருக்கும் மனிதர்கள்…. இந்த ஒவ்வொரு கணங்களும், வாழ்க்கையே மூன்று எட்டு மணிநேரங்களாக சிதைந்து ஓடிக்கொண்டிருப்பதை மறக்க அடித்துவிட கூடியதாய் இருந்தது.

எட்டு மணிநேர தொழிற்சாலை வாழ்க்கை ? … பேசிபேசியே தங்களது பொருமலையும், ஆதங்கத்தையும் தீர்த்துகொள்வது என்று கங்கணம் கட்டிக்கொண்டு பேசபட்டு கொண்டிருக்கும் பேச்சுக்களும், வாரத்தில் நான்கு நாட்களே கிட்டும் – நீர்த்து போய்விட்ட இரவின் சுகமான தூக்கமும், தன்மேல் வேர்பாவி ஆலவிருட்மாக வளர்ந்துவிட்ட புகைக்கும், கெமிக்கல் வாடைக்கும் மத்தியில், சுண்டுவிரலை அழுத்திக்கொண்டிருக்கும் ஷுக்களுடனும், நசநசவென்று தோலோடு ஒட்டிக்கொண்டு பாதத்தை அன்னிய படுத்திக்கொண்டிருக்கும் காலுறைகளுடனும் கண்சிமிட்டாது…. இன்னும்….இன்னும்……போராட்டமாக நகர்ந்து கொண்டிருக்கம் எட்டு மணி நேரங்கள்….

எட்டு மணி நேரமே சிரமமென்றால், ரிலிவர் வரவில்லையென்றால் அடுத்த எட்டு மணி நேரத்தையும் சேர்த்து பார்க்க வேண்டும். தொழிற்சாலை விதிமுறைபடி மறுப்பு கூற இயலாது. மணி தனக்கு ரிலிவராக அமைந்ததில் ரவிக்கு மிகவும் செளகரியமாகயிருந்தது. முன்அறிவிப்பின்றி அவன் விடுப்பு எடுப்பதில்லை. மணியை பற்றி நினைக்கும் பொழுத்தெல்லாம் ரவிக்கு பெருமையாயிருந்தது. எந்த நேரத்திலும் தான் தானகவும் அவன் அவனாகவும் தங்காளால் கலந்திருக்க முடிந்ததில் அவனுக்கு சந்தோசம்தான். தன்னுடைய உலகத்தில் தானும், அவனுடைய உலகத்தில் அவனும், இருவரும் தங்கள் சொந்த முகங்களுடன் பொய்யின்றி சங்கோசமின்றி எப்பொழுதும் உலவிக்கொண்டிருக்க முடிந்திருக்கிறது.

அன்று உலக கால்பந்து இறுதி போட்டி, மதிய ஷிப்டில் இருப்பவர்களுக்கு ஒருமித்த கருத்துதான், மரோடான ரசிகர்கள் விளையாட்டை தியாகம் செய்துவிட்டு எட்டு மணி நேரம் இங்கு வந்து கண்விழித்துக் கொண்டிருப்பார்களாக என்று.

‘ ‘இன்னைக்கு உன்னை ரீலிவ் பண்ண மணி வந்துடுவானா ? ‘ ‘

‘ ‘….ம்…கண்டிப்பா….. ‘ ‘

இரவு பத்து மணிக்கு வந்து ரவியை விடுதலை( ?) செய்ய வேண்டிய மணி வரவில்லை. ரவியின் நடையிலும், முகத்திலும் பத்து வயது கூடிவிட்டது. ஒரு சில முகங்களை தவிர மற்றவையெல்லாம் எட்டுமணி நேரமாக பார்த்துக்கொண்டிருந்த முகங்கள், இன்னும் முழுதாக எட்டு மணி நேரம்…..ரவி அசுவாசமாக நாற்காலியில் சாய்ந்து கொண்டான்.

‘ ‘ஹேய்…உனக்கும் ஆள் வரலையா ? ‘ ‘

நமட்டு சிரிப்புடன் நகர்ந்தவனின் வார்த்தைகள் ரவிக்கு மொசமொசவென்று உள்ளுக்குள் எரிச்சலை ஏற்படுத்தியது. அவன் தலைமயிறை கொத்தாகபடித்து அவனுடைய குண்டு முக்கு சிதறிவிடும்படி ஒரு குத்துவிட வேண்டும் என்று தோன்றிய எண்ணங்களை மிகவும் சிரமப்பட்டு அடக்கிகொண்டு, முகத்தை திருப்பிக்கொண்டான். ரவிக்கு தன்னுடைய முகத்தை பார்க்கவே எரிச்சலாயிருந்தது, இனிமையும் சந்தோசமாகவும் வளையவந்துகொண்டிருந்த தன்னுடைய முகம் – மனம் எப்பொழது என்று உணர்ந்து கொள்ளும்முன்னே தன்னிடமிருந்து கழன்று போய்விட்டதை ஜீரணிப்பது சிரமமாய்யிருந்தது.

தன்னுடன் ஒன்றாய் தங்கியிருக்கும் மணி, மற்றவர்களைவிட தன்னை அதிகம் நேசிக்கும் மணி, இப்படி நம்பிக்கை சிதைய நடந்துக்கொண்டதை ஜீரணிக்க எட்டு மணி நேரம் போதுமானதாக தோன்றவில்லை. ஜிவுஜிவென்று எரிச்சலுடன் கரிக்க ஆரம்பித்துவிட்ட கண்கள், நேரம் தெரியாமல் சம்பாசனைக்கு வரும் தூக்கம், காற்றாடியை போட்டவுடன் சுளீர் என்று பனியன் போடாத மார்பை தாக்கும் குளீர், காற்று நின்றால் துணியை இலட்சியம் செய்யாமால் வந்து உடலெங்கும் அப்பிக்கொள்ளும் கொசுக்கள், மிதித்துக்கொண்டு மேலேறதுடிக்கும் மனிதர்கள், பனிமுட்டத்தில் மெலிதாக படர்ந்து நெடியை பரப்பிக்கொண்டிருக்கும் குளோரின் – இவற்றிக்கிடையே திறந்திருந்த சட்டர் கதவின் வழியே மினுங்கி கொண்டிருந்த மெர்க்குரி விளக்கையும், அதற்கு மேலே…மேலே…சிரித்துக்கொண்டிருந்த நட்சத்திரங்களையும் பார்த்தபடி அசைவற்று அசையமறந்து ரவி உட்கார்ந்திருந்தான்.

காலையில் இவன் அறைக்கு சென்றபொழுது மணி இவன் வரவை எதிர்பார்த்து வாசலிலே உட்கார்ந்துக்கொண்டிருந்தான். மணியின் அண்மை, நெருக்கம் நிறைய நேரங்களில் ரவியை சந்தோசபடுத்தியிருக்கிறது. ரவி எதுவும் பேசாமல் உள்ளே சென்றான்.

‘ ‘ டேய் நேத்து ரமேஷ் மேரேஜ் பார்ட்டி கொடுத்தான்ல, அதுக்கு போயிருந்தேன் நேரமாயிட்டு….அவசரமா கிளம்பினேன்…பஸ் மிஸ் பண்ணிட்டேன்….. ‘ ‘

‘ ‘உன் லீவு எதுக்காவது போடுவே என்கிட்ட எதுக்கு சொல்ற……. ‘ ‘

மணிக்கு முகம் சுண்டிவிட்டது. எதுவும் பேசாமல் லுங்கி மாற்றிக்கொண்டு சமையலறைக்குள் சென்ற ரவியின் பின்னே சென்றான். இருவருக்குமிடையே சகஜமான மவுனம் இன்று மிக பெரிதாய், மூர்க்கமாய் கத்தியபடியே இடைவெளியை அதிகப்படுத்திக் கொண்டிருந்தது. இரண்டு நாட்களாய் சமயல்காரம்மாள் காற்றுபடாத சமையலறை அலங்கோலமாய், புளிச்சபாலின் வீச்சமும், கழுவபடாத பாத்திரங்களும், சமையலறை தொட்டியில் குழம்பாக தேங்கியிருந்த தண்ணீரின் குமட்டல் வாடையும் – இது எதற்கும் ஒவவ்வாமல் அன்று காலையில் வாங்கி வைக்கப்பட்டிருந்த பாலும், முடிகள் அடர்ந்த வெற்று மார்புடன் நின்று கொண்டிருக்கும் மணியும் – ரவி எதுவும் பேசாமல் வெறுமனே நின்றுகொண்டிருந்தான்.

சமையலறை மேடையில் பரவிகிடந்த எச்சில் தட்டுகளையும், ஊசிபோன குழம்பிருந்த சட்டியையும், இரண்டு நாட்களுக்கு முன்னால் செய்த அவரைக்காய் பொரியல் இருந்த கிண்ணத்தையும் – தன் பலம் அத்தனையும் பிரயோகித்து இடது கையால் ஒரே தள்ளு, அத்தனை பாத்திரங்களும் தடதட வென்று சப்தத்துடன் தொட்டியில் போய்விழுந்தன. சப்தம் அடங்கும் முன் உறை கூற்றாது திரிந்து போயிருந்த பாலை அதே வேகத்துடன் திறந்திருந்த ஜன்னல் வழியே விசிரியடிக்க குப்பென்று புளிச்சவாடை சமையலறை முழுவதும் பரவ ஆரம்பித்தது. ரவியின் முகத்தில் ரெளத்திரம் பொங்கிற்று. அங்கிருந்து மறைந்து விட்ட மணியை கவனியாது போல் ரவி பால் பாத்திரத்தை கழுவிக்கொண்டிருந்தான். துருபிடித்திருந்த கம்பியில் திப்பிதிப்பியாக ஒட்டியிருந்த பால், முகம் முழுதும் பற்கள் முளைத்துவிட்ட கோரத்துடன் – மேலிருந்து சொட்டு சொட்டாக வழிந்துக்கொண்டிருக்கும் புளிச்ச பாலை ஜீரணிக்க இயலாது நின்று கொண்டிருந்தது.

பளீரென்று மின்னிக்கொண்டிருந்த பால்பாத்திரத்தையும், புளிச்ச வாடையுடன் அழுதுகொண்டிருந்த ஜன்னலையும் ரவி சிறுது நேரம் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்கு மிகவும் அசுவாசமாய், வேதனையாய் இருந்தது. ஒருபாவமும் அறியாத இந்த ஜன்னலை தான் இத்தனை கோரப்படுத்தியது அவனை பெரிதாக நிலைகுலைய அடித்ததுக்கொண்டிருந்தது. சமையலறையின் புழுக்கத்தையும், அலுப்பையும், மறக்ககூடிய ரம்மியமான தோட்டத்தை தான் எப்பொழுதும் பார்த்துக்கொண்டிருக்க உதவிய இந்த ஜன்னலை – பெரிதாக கம்பியின் நிழல் விழுந்தாலும் அறை முழுவதும் பளீரென்று வெளிச்சமயமாக ஆக்கிவிடகூடிய ஒளியை தன் இடைவெளி வழியே அனுமதித்துக்கொண்டிருந்த

ஜன்னலை – மணியை தான் இத்தனை காயப்படுத்தியது….

ரவி சிறிது நேரம் அப்படியே அடுப்படி மேடையில் சாய்ந்து கொண்டான். மணியை இயல்பாக கண்கள் தேடியது. அவன் முகத்தை எதிர்கொள்ள சஞ்சலாமாகயிருந்தது. ஊர் இன்னும் முழுதாக விழித்திருக்கவில்லை, மணி போர்க்கோவின் சிமின்ட்திண்டில் உட்கார்ந்திருந்தான். மாமரத்தில் குருவிகளின் சலசலப்பை தவிர சப்தம் எதுவுமில்லை. ரவி மணியின் அருகே அமர்ந்துக்கொண்டான்.

‘ ‘ பாலு சஸ்பெண்ட் விசயமா வக்கிலை பாக்கனுமுனு சொன்னியே எப்பபோர ? ‘ ‘ மணியிடமிருந்து வார்த்தைகள் மட்டும் வந்தன, இமைகள் மூடியேயிந்தது.

ரவி மணியின் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் பொதித்துக்கொண்டான்.

‘ ‘இப்ப கிளம்பிதான் அவர் கோர்ட்டுக்கு போரத்துக்கு முன்னால வீட்டல பார்கலாம்… ‘ ‘

மணி கைகளின் வெதுவெதுப்பு, மெல்ல பரவிய இதமான அழுத்தம்….. ரவி அப்படியே சுவரில் சாய்ந்து கொண்டான். விடியலின் அறிவிப்பாய் சாலையில் நடமாட்டம் அதிகரித்துக்கொண்டிருந்தது.

******

ttpoondi@emirates.net.ae

Series Navigation

துரைசாமி

துரைசாமி