அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்து மூன்று

This entry is part of 36 in the series 20030911_Issue

இரா முருகன்


23

சாஸ்தா ப்ரீதி கழிந்து இலையும், பூவும் பழமும் மஞ்சள் அட்சதையுமாக இரைபட்ட கூடத்தில் சங்கரன் காத்திருந்தான். ஓரமாக அதிரசத் துணுக்கை இழுத்துப் போன கட்டெறும்பும், தூரத்தில் கொல்லையில் மரத்துக்கு மரம் தாவும் குரங்கும், நேரம் தப்பிக் கள்ளுக் குடித்த யாரோ உரக்கப் பாடிக் கொண்டு அந்தப் பக்கம் நடந்து போனதுமாக மதியப் பொழுது ஊர்ந்து கொண்டிருந்தது.

நேற்றைக்கே இங்கே வந்தாகி விட்டது. தெலுங்கர் வீட்டு மச்சில் சங்கரனுக்கு எல்லாச் செளகரியங்களோடும் இருப்பிடம் ஒழித்துக் கொடுத்தார்கள். சுப்பிரமணிய அய்யர் சகலரோடும் மலையாளத்தில் பேசப் பிரயத்தனப் பட்டுக் கொண்டு அந்த வாசல் திண்ணையில் குற்றாலத் துண்டைக் காற்றாடப் போர்த்திக் கொண்டு உட்கார்ந்திருந்தார். கல்யாணி அம்மாள், தெலுங்கு மாமியின் கீர்த்தனங்களைக் கேட்கவும், கூடவே மெல்லிய குரலில் பாடவும் ஆரம்பித்தது இன்னும் ஓயவில்லை.

சுந்தர கனபாடிகள், சுப்பம்மாள், ஜோசியர் அய்யங்கார் என்று ஒரு பெரிய பட்டாளமே அங்கங்கே தூரத்து, நெருக்கத்துச் சொந்தக் காரர்கள் வீட்டில் இவர்கள் வருவதற்கு இரண்டு நாள் முன்னாலேயே வந்து தங்கியிருந்தார்கள்.

எல்லோரும் இதோ வந்து கொண்டிருக்கிறார்கள்.

எதற்காக இந்தப் பெண் பார்த்தல் என்று சங்கரனுக்குப் புரியவில்லை. முந்தாநாள் சாயந்திரம் தெலுங்குக் கார வீட்டு மாடியில் வைத்துப் பரசுராமனிடம் பேசிக் கொண்டிருந்தபோதே பகவதிக் குட்டியைப் பார்த்தாகி விட்டது.

பாட்டு சொல்லிக் கொள்ள மூக்கும் முழியுமாக வந்த அவளை யார் என்று யாரும் சொல்லாமலேயே சங்கரனுக்குப் புரிந்து போனது.

அவர்கள் பேசிக்கொண்டிருந்த இடத்திலிருந்து பக்கவாட்டுத் தோற்றத்தில் பகவதிக் குட்டி தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்து தம்பூரா மீட்டிக் கொண்டிருந்தது தெரிந்த போது இருட்டு கவிய ஆரம்பித்து விட்டது.

அவள் குரலையாவது கொஞ்சம் கேட்கலாம் என்றால், பாட்டு வாத்தியார் தான் விடாமல் பாடிக் கொண்டே இருந்தார். அந்த அழகான பெண்ணுக்கு யுத்தத்துக்குப் போக சகல முஸ்தீபும் செய்து கொடுப்பது போல் என்னத்துக்கு அவர் அடாணா ராகத்தைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார் என்று சங்கரனுக்குப் புரியவில்லை. சாயந்திரத்துக்குப் பொருத்தமாக ஒரு வசந்தா, தாபத்தோடு கெஞ்சி அழைக்கும் ஒரு கமாஸ், கம்பீரமான குதிரை பாய்வது போல ஒரு கல்யாணி. எல்லாமே சங்கரனுக்குப் பிடித்த ராகம் தான்.

அடாணா பிடிக்காது என்றில்லை. பால கனகமய பாடினால் சீராம நவமியும் பானக நைவேத்தியமும் தான் நினைவு வருகிறது. கன்னத்தில் போட்டுக் கொண்டு தரையில் நெற்றிபடக் கும்பிட்டு எழ மட்டுமா சங்கீதம் ?

கொட்டகுடித் தாசி கூளப்ப நாயக்கன் காதல் கிரந்தத்துக்கு எல்லாம் நூதனமாக மெட்டமைத்து அபிநயம் பிடிக்கிறாளாம். சங்கரனுக்கு அதெல்லாம் காணக் கொடுத்து வைக்கவில்லை. நாலு தெருவும், செம்மண் பொட்டலும் கடந்து, உடையான் அம்பலம் ஊருணிக்கரை மேட்டில் ஏறி அந்தப் பக்கம் இறங்கினால் கொட்டகுடி. எல்லோரும் போகலாம். சங்கரனும் தான். ஆனாலும் புகையிலைக்கடை அய்யன் என்னத்துக்குத் தாசி குடில் பக்கம் வருகிறான் என்று பேச்சு எழும்.

நாலு காசு கொடுத்துப் புகையிலை வாங்குகிறவன் தூர்த்தனாக இருக்கலாம். துன்மார்க்கனாக இருக்கலாம். கொட்டகுடித் தாசி ஸ்தனம் தோளில் இடிக்கும்படி நெருங்கி உட்கார்ந்து அவள் கொக்கோகத்தை இலை மறை காயாகவோ இல்லாமலோ அபிநயம் பிடிக்கும்போது அவள் ரவிக்கையின் வியர்வை வட்டங்களையும், வெற்றிலையால் சிவந்த உதடுகளையும் முலைக் குவட்டையும் உன்னிப்பாகப் பார்த்து ரசிக்கலாம். அப்புறம் சங்கரன் கடைக்கு வந்து ஒன்றுக்குப் பத்தாக தான் ரசித்ததைப் பகிர்ந்து கொள்ளலாம்.

சங்கரன் அதையெல்லாம் கேட்டுக் கொண்டு அனுபவிக்கிறதாகவும் தெரியாமல், வேண்டாம் என்று ஒதுக்கியதும் தெரியாமல் தன் பாட்டுக்கு வேலையைப் பார்க்க வேண்டும். அப்போது தான் அந்தஸ்து.

அவன் வந்தவனோடு தோளில் கை போட்டுக் கொண்டு கொட்டகுடித் தாசி வீட்டுக்குள் நுழைந்தால், நாளைக்குப் புகையிலை வாங்க வரும்போது மரியாதையில்லாமல் நிற்பான். எல்லா உரிமையோடும் கடன் சொல்லிப் போவான்.

ஜாகை எல்லாம் வசதியா இருக்கா ?

துரைசாமி அய்யன் யாரையோ கேட்கிறான். சங்கரன் கொட்டகுடித் தாசி பற்றிக் கடன்காரன் வாய் வார்த்தை சொல்வதைக் கவனித்துக் கொண்டிருக்கிறான்.

உங்களுக்குத்தான் ரொம்ப அலைச்சல். க்ஷீணம்.

அதெல்லாம் ஒண்ணுமில்லே. இங்கே சவுகரியத்துக்கு என்ன குறைச்சல் ? ராஜ உபசாரம் கெட்டது போங்கோ.

சுப்பிரமணிய அய்யர் சங்கரனின் மடியில் மெல்லத் தட்டி அவனை சுயநினைவுக்குக் கொண்டு வந்தபடி, பெண்வீட்டாரோடு பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

சங்கரன் ஒரு வினாடி திகைத்து அப்புறம் எல்லோரையும் பார்த்துப் பொதுவாகச் சிரித்து வைத்தான். கொட்டகுடித் தாசியை இத்தனை தூரம் கட்டியிழுத்துக் கொண்டு வந்திருக்க வேண்டாம்.

ஒவ்வொருவராக வந்து சேரக் கூடம் நிறைந்து களைகட்டிக் கொண்டிருந்தது. தெலுங்கு மாமி ரா ரா ராஜகோபாலா என்று தேனாகப் பாட ஆரம்பித்திருந்தாள்.

இப்பவே கல்யாணக் களை வந்துட்ட மாதிரி இருக்கு.

பரசுராமனிடம் ஜோசியர் ஐயங்கார் சொன்னபடி பஞ்சாங்கச் சுவடிகளை மடியில் எடுத்து வைத்துக் கொண்டார்.

எல்லாம் ஒரு சம்பிரதாயத்துக்குத்தான். சபையில் ஜாதகப் பரிவர்த்தனையாகி, எல்லாம் பொருந்தியிருக்கிறது என்று அவர் அறிவித்தபிறகு தான் மற்ற சுபகாரியம் எல்லாம் தொடங்கும்.

பொண்ணை அழச்சுண்டு வரலாமே.

சுப்பம்மாள் சொன்னாள். சுந்தர கனபாடிகளின் அகத்துக்காரி ராகுகாலம் கழிஞ்சாச்சோ என்று கேட்டாள்.

அது போய் ஒரு நாழிகை ஆச்சே.

ஜோசியர் சொன்னபோது, சிநேகாம்பாளும், விசாலாட்சியும் கூடத்திலிருந்து மெல்ல எழுந்து உள்ளறைக்குப் போனார்கள். பகவதிக்குத் தலையில் தாழம்பூ வைத்துப் பின்னி, உச்சந்தலையில் சூடாமணி வைத்து நேர்த்தியாகச் சிங்காரம் செய்து கொண்டிருந்த அண்டை அயல் பெண்டுகள் முகம் பார்க்கும் கண்ணாடியை எல்லாத் திசையிலும் திருப்பி அவளுக்குக் காட்டிக் கொண்டிருந்தர்கள்.

ஆச்சாம்மாடி எச்சுமி ? ஏண்டி கோமதி, பொண்ணை சபைக்கு அழைச்சுண்டு போகலாமா ?

கொஞ்சம் பொறுங்கோ சாலாச்சி மன்னி. சின்னதா ஒரு சாந்துப்பொட்டு கன்னத்திலே வச்சுட்டாப் போதும். காவிலே யட்சிதான். எங்க கண்ணே பட்டு திருஷ்டி விழுந்துடும் போல இருக்கு.

ஐயோ, ஒண்ணும் வேணாம்டா. ஏற்கனவே நான் கோரம். இதுலே கன்னத்துலேயும் மூக்கிலேயும் எல்லா வர்ணத்தையும் ஈஷிண்டு போய் நின்னா வந்தவா எல்லாம் ஒரே சாட்டமா ஊரைப் பாக்கப் போயிடுவா.

பகவதி சிரிக்கும்போது விசாலாட்சிக்குக் குழந்தை போல் தெரிந்தாள். அவள் கல்யாணம் கழிந்து வந்தபோது செப்பு வைத்து விளையாடுவதை நிறுத்திச் சிற்றாடைக்கு வந்த குழந்தை. அப்புறம் விசாலாட்சிக்கு வயதானாலும், பகவதி இன்னும் அப்படியே தான் குழந்தையாகவே இருக்கிறாள்.

பாவாடை தாவணி இல்லாமல், முதல் தடவையாக ஜரிகைப் புடவையைக் கட்டியிருந்த பகவதி நிமிஷத்துக்கு ஒரு தடவை கொசுவத்தை இழுத்துச் சரிபார்த்துக் கொண்டாள். இது இடுப்பில் சரியாக இருக்க, கூடத்துக்குப் போய் எல்லோரையும் நமஸ்கரிக்க வேண்டும். அப்புறம் ஓரமாக உட்கார்ந்து, அவர்கள் வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கும்போது தரையைப் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும். ஏதாவது பாடும்மா என்று சொன்னதும் நன்னு பாலிம்ப பாட வேணும்.

பகவதிக்கு ஓமனத் திங்கள் கிடாவோ பாட வலிய இஷ்டம். இறையும்மன் தம்பி என்கிற கொட்டாரக்காரன் பாடின கிருஷ்ணனாட்டப் பாடல் அது. நிறுத்தி நிதானமாகப் பாடும்போது நேரம் உறைந்து போகும். வாழ்க்கை முழுக்க அதைப் பாடிக் கொண்டு, கேட்டுக் கொண்டு, சாயந்திரம் அக்ஷர ஸ்லோகம் சொல்லிக் கூட்டுக்காரிகளோடு விளையாடிக் கொண்டு, க்ஷேத்ரத்தில் ஆட்டக்களி பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும்.

அதெல்லாம் முடியாது. பாண்டிச் சீமையில் எங்கோ ஒரு அடுப்படியில் ஒதுங்க சீக்கிரம் வேளை வாய்க்கப் போகிறது.

மூத்ரம் ஒழிக்கணும்னா ஒழிச்சுட்டு வந்துடுடா கொழந்தே. அப்புறம் மணிக்கூறுக்கு ஏந்திருக்க முடியாது.

விசாலாட்சி அவள் கன்னத்தை வருடியபடியே சொன்னாள்.

பகவதி வேண்டாம் என்று தலையாட்டினாள்.

கிளம்பலாமா ?

சிநேகாம்பாள் கீச்சுக் குரலை அடக்கிக் கொண்டு கேட்டது என்னமோ மாதிரி பிசிறிட்டுச் சிதறியது.

சிநேகா அக்கா, நீங்க எப்பவும் போல கீச்சிடுங்கோ. அதுதான் சுபாவமா இருக்கு. இப்படிக் குரலை மாத்திண்டு பேசினாக் குழந்தை பேடிச்சுப் போய் அரையை நனைச்சுண்டுடுவா. அப்புறம் பொடவை வேறே மாத்தியாகணும்.

பகவதி எச்சுமியின் முதுகில் பலமாக ஒன்று வைத்தாள்.

உக்காந்து சாப்பிட்டுச் சாப்பிட்டுக் குந்தமா ஆகிட்டேடி நீ. வலி பிராணன் போறது கடன்காரி.

எச்சுமி சந்தோஷமாகச் சிரித்து அவளைத் தோளைப் பிடித்து எழுப்பி விட்டாள்.

மெல்ல அடி வச்சு வாடி குழந்தே. பொடவை தடுக்கறதுன்னா கொஞ்சமா உசத்திப் பிடிச்சுக்கோ.

அதுக்காகத் தொடை தெரிய ஒரேயடியா வழிச்சுக்காதேடி பகவதி. அதெல்லாம் ஆம்படையான் பாத்தாப் போதும்.

கூட்டுக்காரியைச் செல்லமாக அடிக்கப் பகவதி கை ஓங்க, அவள் சிரித்துக் கொண்டு பின்கட்டுக்கு ஓடினாள்.

ஒழிக்கறவா எல்லாம் எனக்குப் பின்னாலே வாங்கோ.

கலகலப்பாக ஒரு கூட்டம் கூடத்தை நோக்கி நகர்ந்தது. மத்தியில் பகவதிக் குட்டி.

சங்கரன் நிமிர்ந்து பார்க்க, பகவதிக் குட்டியின் மை தீட்டின கண்கள் சுவாதீனமாக மனதுக்குள் நுழைந்து அங்கே இருந்த புகையிலைச் சிப்பங்களையும், கணக்குப் பேரேட்டையும் ஒதுக்கித் தள்ளின. கொட்டகுடித் தாசி இன்னும் உள்ளறைக்குள் கள்ளத்தனமாகச் சிரித்துக் கொண்டே போனாள்.

மாமாவை நமஸ்காரம் பண்ணிக்கோ அம்மா.

வரிசையாகக் கால்கள். நகம் பிளந்தும், பித்த வெடிப்போடும், மஞ்சள் ஏறியும், ஆணிக்குத்து புறப்பட்டுப் புரையோடியும்.

ஒரு ஜதை வயிரம் பாய்ந்த கருத்த கால்களும் அங்கே உண்டு. அந்த ஆகிருதிக்குச் சரியான தோளும், கடுக்கனும், கட்டுக் குடுமியுமாக இருக்கப்பட்ட மனுஷ்யன்.

பகவதிக் குட்டிக்கென்று விதிக்கப்பட்டவன். பட்டவர்.

எல்லோருக்கும் பொதுவாக நமஸ்காரம் செய்தாள் பகவதி.

தனாரோ தன்னாரோ தன தனாரோ தன்னாரோ

சுப்பம்மாள் கன குஷியாக ஆரம்பிக்க, ஜோசியர் அகத்துக்காரியும் கல்யாணி அம்மாளும் அவள் வாயை அவசரமாக வெள்ளைத் துணி கொண்டு பொத்தினார்கள்.

பெண்ணகத்துப் பெண்டுகள் கொஞ்சம் மிரண்டு கொஞ்சம் சிரித்து கொஞ்சம் விலகி உட்கார, ஜோசியர் கை காட்டி அமர்த்தினார்.

மாமி நித்ய சுமங்கலி. இவா பரம்பரையிலே ஏழு தலைமுறை சுமங்கலிகள் அவளோட சதா இருக்கா. எல்லோரையும் அனுக்ரஹிக்கறது தான் அவாளோட ஜோலி. அப்பப்ப அவாளுக்கும் சந்தோஷம் எல்லையில்லாமக் கரை புரண்டு போயிடும். தீர்க்க சுமங்கலிகள் சந்தோஷப் படறதை விட கிரஹத்துக்கு சகல செளபாக்கியமும் கொடுக்கற விஷயம் வேறே உண்டா என்ன ?

சுப்பம்மாள் இப்போது வாய்க்கட்டை நெகிழ்த்தி விட்டுக் கொண்டு வாரணமாயிரம் பாட ஆரம்பித்தாள். ஸ்மார்த்தர்கள் வீட்டில் பாடும் வழக்கம் இல்லை இந்தப் பாசுரம் எல்லாம். ஆனாலும் மூத்த குடிப்பெண்டுகளுக்குப் பிடித்த பாட்டு. எல்லோருக்கும் அது பிடித்துத் தலையாட்ட வைக்க அதிக நேரம் செல்லவில்லை.

கனாக் கண்டேன் தோழி நான்.

சுப்பம்மாள் குரல் இழைந்தபோது விசாலாட்சி மனதில் தேக்கி வைத்த எல்லாச் சுமையும் கரையக் கண்ணீர் விட்டுக் கொண்டு நின்றாள். பகவதிக்கு வேறு ஏதோ உலகத்தில் அடியெடுத்து வைத்தது போல் இருந்தது. அவளுக்குப் புரிந்த பாஷையில் அவளுக்குப் புரிந்த வார்த்தைகளை நயமாகக் கோர்த்த அந்தப் பாட்டு நாள்ப்பட்ட சிநேகிதி போல் அவளை இழுத்து அணைத்துக் கொண்டது.

பொண்ணு ஒரு பாட்டுப் பாடினா கேக்கலாம்.

சுந்தர கனபாடிகள் ஒற்றைத் தும்மலைச் சிரமத்தோடு ரெட்டையாக்கியபடி சொன்னார்.

மாடியிலிருந்து வயசன் மிதந்து கொண்டு தெருத் தாண்டிப் போனபோது பகவதிக் குட்டி நன்னு பாலிம்ப பாட ஆரம்பித்திருந்தாள்.

(தொடரும்)

eramurukan@yahoo.com

Series Navigation