அரசூர் வம்சம் – அத்தியாயம் பனிரெண்டு

This entry is part of 42 in the series 20030626_Issue

இரா முருகன்


சுப்பம்மா அத்தை, என்ன ஆச்சு ?

கல்யாணி அம்மாள் அலறலில் பகல் தூக்கத்தில் இருந்த வீடே விழித்துக் கொண்டது.

மலங்க மலங்க விழித்துக் கொண்டு சுப்பம்மாள் மாடியிலிருந்து வந்து உக்கிராண நிலைப்படிப் பக்கம் சாய்ந்து உட்கார்ந்தாள். அவள் தேகம் நடுங்கிக் கொண்டிருந்தது. பின்னாலும் முன்னாலுமாக யாரோ அவளை உதைத்து நசித்துக் கொன்று போட வருவது போலவும் அது வேண்டாம் என்று மன்றாடுவது போலவும் அவள் கையைக் கூப்பி எல்லாத் திக்கும் தொழுதபடிக்கு யாருக்கும் புரியாத எதையோ தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாள்.

அம்பி மூர்க்கமா நடந்துண்டானா ? அடிச்சு மிதிச்சு ரகளை பண்ணிட்டானா ?

சுப்பிரமணிய அய்யர் விசாரித்தார்.

சாமிநாதன் உபத்திரவம் வரவர அதிகமாகிக் கொண்டே போகிறதே ஒழியக் குறையவில்லை. மாதம் ஒரு விசை பவுர்ணமிக்கு என்று இருந்தது மற்ற நாளிலும் அவ்வப்போது தலையைக் காட்டித் தொலைக்கிறது.

அவனை இழுத்துக் கொண்டு ஒரு நடை ராமேசுவரம் போய் வர வேண்டும். அப்புறம் குணசீலத்தில் பனிரெண்டு பெளர்ணமிக்குக் கோயில் பிரகாரத்தில் உட்கார்த்தி, பிரசாதங்கள் மட்டும் தின்னக் கொடுத்துத் திருக்குளத்தில் ஸ்நானம் செய்வித்துத் தொழுது வர வைக்க வேண்டும்.

சோட்டாணிக்கர பகவதி அம்பலத்திலே ஒரு மண்டலம் இரும்புச் சங்கலையாலே கட்டி வெச்சு பிரதி ராத்திரி குருதி பூஜைக்கு சந்நிதிக்கு அழைச்சுப் போனா ஸ்வஸ்தமாயிடும். பிராந்து பிடிச்சதைச் சரியாக்கறதுக்குன்னே ஏற்பட்ட நம்பூத்திரி மனையுண்டு. நாரணத்துப் பிராந்தன் வழி வந்தவா. அங்கே போனா தைலம் புரட்டி, பிழிச்சை நடத்தி, கஷாயம் குடிக்கக் கொடுத்து ரெண்டு மூணு மாசத்துலே சரியாக்கிடுவா.

அம்பலப்புழையில் இருந்து சங்கரனுக்குச் சம்பந்தம் பேச வந்திருந்தவர்கள் சொன்னது நினைவு இருக்கிறது சுப்பிரமணிய அய்யருக்கு.

இதற்கெல்லாம் யாராவது பொறுப்பாகக் கூட்டிப் போய் அழைத்து வரவேண்டும். தனக்கானால் வயதாகிக் கொண்டிருப்பதால் இதற்கான சக்தி இல்லை. வியாபாரம் மும்முரத்தில் இருப்பதால் சங்கரனைத் தொந்தரவு படுத்த முடியாது.

சாமிநாதன் கூட சோட்டாணிக்கரைக்கு சுப்பம்மாக் கிழவியையும் கூடமாட ஒத்தாசைக்கு ஐயணையையும் அனுப்பி வைக்கலாம் என்று யோசித்து வைத்திருந்தார் ஐயர்.

பார்த்தால் அவள் இப்படி நொந்து நூலாகி வந்து நிற்கிறாள்.

என்ன பண்ணினான் சாமிநாதன் ? தலையை எட்டிப் பிடித்துச் சுவரில் மோதினானோ ? அதுதான் கிழவிக்குத் தலைமுடி இப்படி குத்திட்டு நிற்கிறதோ ? அவள் இடுப்புக்குக் கீழே ஓங்கி உதைத்தானோ ? அடிக்கடி இவள் இடுப்புக்குக் கீழே பொத்திக் கொண்டு விம்மி விதிர்த்துப் போகிறாளே ?

இல்லை, வயது வித்தியாசம், உறவு முறை பாராமல்.

சேச்சே அதெல்லாம் ஒண்ணும் இருக்காது. சாமிநாதன் அந்த ஒரு நாள் தவிர வேறெப்போதும் சரீர சுகம் விஷயமாகப் புத்தி கெட்டுப் போனது கிடையாது. அவன் படித்த படிப்பென்ன ? கிரகித்த வேதமும் வேதாந்தமும் பிரம்ம சூத்ரமும் பாஷ்யமும் தான் என்ன ? ஜன்ம வாசனையாகக் கொஞ்சம் போலவாவது புத்தியில் ஒட்டிக் கொண்டு எந்த துர்வழிக்கும் போகாதபடி இனியாவது அதெல்லாம் காப்பாற்றும்.

சாமா ஒண்ணும் பண்ணலை. அது என் குழந்தை. என் கையாலே ஊட்டி விட்டேன். சமர்த்தாச் சாப்பிட்டு ரெண்டு சிராங்காய் தீர்த்தம் வாங்கிக் குடிச்சுட்டு அவன் பாட்டுக்குப் பசு மாதிரி தூங்கிட்டான். நான் கீழே தரையிலே கட்டையைச் சாய்ச்சேனா.

சுப்பம்மாக் கிழவி திரும்ப அலறினாள்.

சட்டென்று அவள் குரல் மாறியது.

நானும் என்னாத்துக்காரரும் இங்கே தான் இருப்போம். வயசாவது தலைமுறையாவது. அவர் புருஷர். நான் அவருக்குன்னு விதிக்கப்பட்ட பொம்மனாட்டி. பஞ்சம் பிழைக்கப் போன இடத்திலே பாழும் கிணத்திலே விழுந்ததெல்லாம் போறும். இனி மேல்கொண்டு எங்கேயும் போறதா உத்தேசம் இல்லே. இங்கே தான் எல்லாம். மாமிசம் சாப்பிடப் பழகிண்டாச்சு. பஞ்சமும் ஆச்சு ஒண்ணுக்குப் போற எடத்துலே சிகையுமாச்சு. காடை கெளதாரி இருந்தா வறுத்து எடுத்துக் கொண்டு வாங்கோ. வெளவால் கிடச்சா இன்னும் விசேஷம். சாப்பிட்டுட்டு சாமா என்னை இங்கே தொட்டு இப்படி விரிச்சு.

சுப்பிரமணிய அய்யர் தலையை அந்தப் பக்கம் திருப்பிக் கொண்டார். கல்யாணி அம்மாள் சுப்பம்மா நெகிழ்த்திய உடையை அவசர அவசரமாகச் சரி செய்தாள்.

வீட்டு விசேஷத்துக்கு வந்து வேனல் சூடு காரணமாக நாள் கணக்குத் தப்பி மாதவிலக்கு உண்டாகி இங்கே தங்கி இருக்க வேண்டி வந்த அல்லூர் உறவுப் பெண் ஒருத்தி பூஜையறையில் இருந்து கங்கா ஜலத்தோடு ஓடி வந்தாள்.

இதென்ன கிரகசாரம். அத்தை பாட்டியும் ஆத்திலே இல்லே போலே இருக்கே.

சுப்பம்மா அரைக்கட்டு நனைய அதைத் தெளித்தபோது அந்தப் பெண் உதிர வாடை பிடித்தபடி சொன்னாள்.

நாசமாப் போச்சு. இது வேறேயா ?

பட்டப் பகலில் சாமிநாதன் கட்டிலுக்குக் கூப்பிட்ட மூத்த குடிப் பெண்ணை ஏகமாகப் பணத்தை இரைத்துப் புறத்தாக்கினது எல்லாம் என்ன ஆச்சு ?

இனிமேல் அவளுக்கு ஜன்மம் கடைத்தேறி இன்னொரு பிறவி எடுப்பாள். அவள் உபத்திரவம் எல்லாம் தீரும் என்று சுப்பா சாஸ்திரிகள் இடுப்பில் காசை முடிந்து வைத்தபடி சொன்னதெல்லாம் காற்றோடு போச்சோ ?

அவள் அனுக்ரஹித்துத் தானே சாமிநாதன் நாலு மிலேச்ச பாஷை படிக்கவும், காலத்தில் பின்னால் இருந்து வருகிறவர்களோடு புரிபடாத சாஸ்திரங்களை எல்லாம் தர்க்கிக்கவும் பிரசங்கம் செய்யவும் சுவாதீனமானது ?

நிலாக்கால ராத்திரிகளில் மாடியில் கதவைத் திறந்து வைத்து நின்றபடி அவன் பிரசிங்கிக்கும் அழகை அவர் ஒளிந்திருந்து பார்த்திருக்கிறார்.

வெள்ளைக்காரன் கேட்டால் கொண்டாடுவான். பரங்கி உடுப்பு உடுத்திக் கொள்ளக் கொடுத்து லண்டன் பட்டணத்துக்குக் கப்பலில் கூட்டிப் போவான். ஆனால், என்ன செய்ய, கொடுப்பினை இல்லை அதற்கெல்லாம் என்று நினைத்திருக்கிறார்.

சாமிநாதன் கூடிக் கலந்த அந்த மூத்தகுடிப் பெண் போவது போல் போய்த் திரும்ப வந்து விட்டாளா ?

என்ன செய்து அவளைத் திரும்ப அனுப்பி வைப்பது ? மற்ற மூத்த குடிப் பெண்டுகளிடம் சுப்பம்மாக் கிழவி மூலம் பிரார்த்தித்துப் பார்க்கலாமா ? அவர்கள் ஒதுங்கிப் போன நேரத்தில் இல்லையோ இந்த சண்டாளி கிழவி மேல் படர்ந்திருக்கிறாள் ?

ஆண்களான பித்ருக்களிடம் திவசத்துக்கு வரும்போது சொல்லலாமா ? இதெல்லாம் பொம்மனாட்டி காரியம் என்று அப்பம் வடையை உறிஞ்சி விட்டு அவர்கள் பாட்டுக்குப் போய்விடுவார்கள்.

சுப்பிரமணிய அய்யர் யோசித்தபடி வெளியே நடக்கும்போது உள்ளே பாட்டு சத்தம் கேட்டது.

சுப்பம்மாக் கிழவிதான். சகஜமாகி இருக்கிறாள் மறுபடியும். அவளைப் பிடித்த சிறுக்கி விட்டு விட்டு இறங்கி விட்டாள்.

அவளோடு கூட இருக்கும் நித்ய சுமங்கலிகளாகிய மூத்த குடிப் பெண்களூக்கு எல்லா நமஸ்காரங்களையும் சுப்பிரமணிய அய்யர் தெரிவித்துக் கொண்டார்.

நீங்கள் எப்போதும் இங்கே சர்வ சுதந்திரமாகச் சுற்றி வாருங்கள். துராத்மாக்கள் யாரும் இந்த கிரஹத்தில் பிரவேசிக்க இனியும் அனுமதிக்காதீர்கள்.

அவர் வேண்டிக் கொண்டார்.

பட்டப் பகலில் கதவை எல்லாம் மட்ட மல்லாக்கத் திறந்து வைத்துக் கொண்டு கயிற்றுக் கட்டிலை இழுத்துப் போட்டுக் கவிழ்ந்து படுத்துக் கலவி செய்யும்போது கட்டில் கால் முறிவது பற்றி சுப்பம்மாக் கிழவி பாடிக் கொண்டிருந்தது உள்ளே இருந்து கேட்டது.

அத்தை. நலுங்கு பாடுங்கோ. சாயந்திரத்திலே இதெல்லாம் வேண்டாம். வாங்கோ. பின்னாலே தொழுவத்துக்குப் போகலாம்.

சுப்பிரமணிய அய்யர் திரும்ப உள்ளே தலையைத் திருப்பிப் பார்த்தபோது, கல்யாணி அம்மாள் உக்கிராணத் தரையில் உட்கார்ந்திருந்த சுப்பம்மாளின் கையைப் பற்றி இழுத்தபடி சொல்லிக் கொண்டிருந்தாள்.

தூரமீனா உள்ளுக்கு எல்லாம் நான் வரமாட்டேன். இங்கேயே உட்கார்ந்து நலுங்கு பாடறேன் கேளு. வட்டமாய் முகமும் அதின்மேல் பொட்டித்த அப்பளமும் சட்டி போல்.

வாங்கோ வெளியிலே காத்தாட உக்காந்து பாடலாம். காமாட்சி. கொஞ்சம் பசுஞ்சாணி கொண்டு வந்து இங்கே தரையை மெழுகு. உலை வைக்கணும். சங்கரன் ராச்சாப்பாட்டுக்கு வந்துடுவான்.

கல்யாணி அம்மாள் வலுவாகப் பற்றி இழுத்த பிடிக்கு வளைந்து கொடுத்தபடி, உரக்கச் சிரித்துக் கொண்டு சுப்பம்மாள் அவள் கூடத் தொழுவத்துப் பக்கம் நடந்தாள்.

சுப்பிரமணிய அய்யர் இடுப்பில் சேலம் குண்டஞ்சியை நேராக்கி இறுக்கிக் கொண்டார். தட்டுச் சுற்று வேட்டி தான். மேலே துண்டு கூட இல்லை.

சாதாரணமாக வெளியே போகிறபோது பஞ்ச கச்சமும், மேலே சரிகை அங்கவஸ்திரமுமாக நடந்துதான் பழக்கம். உத்தியோகஸ்தர்களை வியாபார நிமித்தம் சந்திக்கப் போகும்போதும், வியாபாரத்தை விருத்தியாக்க பெரிய தனவைசியப் பிரபுக்களைப் பார்த்துப் பேசி வரப் பிரயாணப்படும் போதும் தலையில் அல்பாக்கா தலைப்பாகையும் காலில் ஜோடும் ஏறும்.

அதெல்லாம் இப்போது ஒன்றும் இல்லை. ஒற்றை வேட்டியோடு நடக்கிறது ஆசாரஹீனம் இல்லையா என்று அவர் மனம் துக்கப்பட்டது.

கெளபீனத்தைச் சேர்த்தால் இரண்டு வஸ்திரம். அது தான் கணக்கு.

இன்னொரு மூலையில் தர்க்க புத்தி சமாதானம் சொன்னது.

இந்த ஊருக்கு இதுவே எதேஷ்டம். இங்கே அவரையும் தெரியும். அவர் பணத்தையும் தெரியும். கெளபீனத்தோடு நடந்தாலும் சாதாரணமாகத் தான் பார்ப்பார்கள். கண்ணில் தெரியாத வஸ்திரமாக உடம்பு முழுக்கப் பணம் மறைக்கிறபோது மற்றதெல்லாம் எதுக்கு ?

ஐயர் தெருவைப் பாதி அடைத்து நின்ற பக்கத்து அரண்மனை வளாகத்தை ஒரு தடவை நிமிர்ந்து பார்த்தார்.

பழசாகிக் கொண்டிருக்கும் கல்லுக் கட்டிடம். உள்ளே ஒரு காசுக்கும் பிரயோஜனமில்லாத ஒருத்தன் ஜமீந்தார் என்று பெயர் பண்ணிக் கொண்டு ஷீணித்துப் போய் உட்கார்ந்திருக்கிறான். ஐயரின் வயசு தான் அவனுக்கும். பாடை மாதிரி ஒரு பல்லக்கில் படுத்தபடி போன மாதம் ஒரு நாள் ராத்திரியில் அவனைத் தூக்கிக் கொண்டு பந்தம் பிடித்துக்கொண்டு ஓடினார்கள். அது வெளியிலிருந்து அரண்மனைக்குள் ஓடியது என்பதை நினைக்க சுப்பிரமணிய அய்யருக்குப் பொறுக்க மாட்டாமல் சிரிப்பு வந்தது.

துரைத்தனம் வந்த பிற்பாடு இருக்கப்பட்ட ஜமீந்தார், மிட்டாதார், மகாராஜா எல்லாம் செல்லாக் காசாகிப் போனார்கள். இவன் இன்னும் விசேஷம். உள்ளபடிக்கே ஏதுமில்லாமல் இரண்டு தலைமுறை முன்னால் திவாலான சமஸ்தானம். இப்போது நித்தியப்படிக்கே சர்க்கார் மானியத்துக்குக் கையேந்தி நின்று சவரட்சணை நடத்த வேண்டி இருக்கிறது. ஊரில் ஒருத்தனும் மதிக்கிறது இல்லை.

இந்த அரண்மனை வளாகத்தை வாடகைக்குக் கொடுத்தால் ஐயர் அதில் புகையிலை அடைத்து வைத்து சென்னைப் பட்டிணத்துக்கும் குண்டூருக்கும் புணேக்கும் நாகபுரிக்கும் இன்னும் தூர தேசத்துக்கும் எல்லாம் அனுப்பி வைத்து வியாபாரத்தை மேலும் விருத்தியாக்குவார். ஜமீந்தாருக்கு வேண்டுமானால் நித்தியப்படி ஒரு சேர் புகையிலை இனாமாகக் கொடுக்கவும் அவர் தயார் தான்.

அய்யர் வீட்டில் மாடியறை இரண்டும் புகையிலையால் நிரம்பி வழிகின்றன. பழைய வீட்டில் வேதபாடசாலையைக் காலி செய்யச் சொல்லி விட்டு அங்கேயும் புகையில் அடைத்து வைக்கலாம் தான். பித்ருக்கள் வந்து பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிக் கலகம் செய்வார்கள். அவர்களை அனுசரித்துக் கொண்டு போவதே உத்தமம். இந்தச் சிறுக்கி வேறு திரும்ப வந்து தொலைத்திருக்கிறாள். அவர்கள் அனுக்கிரஹம் அவசியம் தேவை.

அப்பா, நான் பட்டணத்துக்கு ஒரு விசை போய்ட்டு வரேன். மூக்குத் தூள் அங்கே பிரசித்தமாயிண்டு இருக்குன்னு ராவுத்தர் சொன்னாரே. அதுவும் விநியோகிக்கக் குத்தகைக்கு எடுத்தா நன்னா இருக்கும்.

போன வாரம் தான் சங்கரன் சொன்னான்.

சுப்பிரமணிய அய்யருக்கு மூக்குத்தூள் மேல் அப்படி ஒன்றும் பெரிய தோதில் ப்ரீதி இல்லை.

புகையிலை சரக்குப் பிடிக்க வந்த பெங்களூர்ப் பட்டிணக்காரனும் வெகு நாளாக வியாபாரத்தில் நகமும் சதையுமாக இழைகிறவனுமான பிச்சை ராவுத்தன் போன பொங்கல் சமயம் ஒரு டப்பி நிறையக் கொண்டு வந்து ஐயருக்கு இனாமாகக் கொடுத்து பரீட்சித்துப் பார்க்கச் சொன்னான்.

பட்டணத்துக்கு எல்லாம் வாப்பாவான லண்டன் பட்டணத்துலே புகையிலையை பொடிச்சு வாசனாதி திரவியம் சகலமானதும் கலந்து இதைப் பண்றான் மேரா தோஸ்த். மூக்கிலே ஏத்திப் பாரு. சொர்க்கமே தெரியும். ஜின் எல்லாம் இறங்கி வந்து குஷியா இருக்கியான்னு விசாரிக்கும். இன்னும் நாலஞ்சு வருஷத்துலே எல்லாரும் இதுக்காகப் பைத்தியமா அலையப் போறான். சொல்றேன் கேளு. என்னண்டை இதை வாங்கிட்டு, நீ எனக்கு ஹோகசெப்பு அதாம்பா பொகயிலெ கொடு. ரெண்டு பேருக்கும் லாபம்.

மூக்கில் ஏற்றியதும் மண்டைக்குள் சுர் என்ற் ஏறிப் படர்ந்து கண்ணில் ஜலத்தை வரவழைத்தது அந்தத் தூள். அடுக்கடுக்காகத் தும்மல் போட்டு அங்கவஸ்திரத்தில் துடைத்துக் கொள்ள பழுப்பாகப் பொடிக் கரை அதில் ஏறி இருந்து இளித்தது.

இதையெல்லாம் கூறு கெட்ட வெள்ளைக்காரன் தான் உண்டாக்கி உபயோகிப்பான். பனியும் குளிரும் மிகுந்த அவன் நாட்டில் போகமும், குடியும் தவிர நூதனமாக ஏதாவது அவ்வப்போது செய்து வியாபாரம் பண்ணிக் காசு பார்க்க ஏகப்பட்ட பேர் உண்டு.

அவர்களைப் பார்த்து அதே ரீதியில் ஜீவிக்கப் பழகிக் கொள்ள வேணும் என்று இங்கேயும் பலபேர் பித்தம் பிடித்து அலைகிறார்கள்.

அலையட்டும். அதனால் நாலு அணா கூடுதலாகத் தனம் கிட்டினால் ஐயருக்குக் கசக்கவா போகிறது ? மூக்குத் தூளுக்கு பண வாசனை கூடுதலாக இருக்கும் பட்சத்தில் அவருக்கு அந்த வாடையும் லட்சுமிகரம் தான்.

சங்கரனை அடுத்த வாரம் சென்னைப் பட்டணம் போய்ப் பார்த்து விட்டு வரச் சொல்லலாமா ?

அம்பலப்புழையில் இருந்து வந்த விவாக ஆலோசனை குதிர்ந்து கொண்டு இருக்கிறது. வது, வரன் ஜாதகம் இரண்டிலும் எல்லாப் பொருத்தமும் அமர்க்களமாக அமைந்திருப்பதாக பஞ்சாங்கம் ராகவ அய்யங்கார் சுபச் செய்தி சொல்லி முழுசாக ஒரு ரூபா தட்சணை வாங்கிக் கொண்டு போனதற்குப் பிற்பாடு வீட்டில் சுபகாரியம் நடக்கத் தொடக்கமாக சுமங்கலிப் பிரார்த்தனையும் நல்லபடி நடந்தேறியாகி விட்டது.

அடுத்த மாதம் முகூர்த்தத்தை வைத்துக் கொள்ளலாம் என்கிறார் சம்பந்தி பிராமணன். நிச்சியதார்த்தத்துக்கு எப்போ வரட்டும் என்று லிகிதம் மேல் லிகிதமாக அனுப்பிக் கொண்டிருக்கிறார் அவர்.

சங்கரன் கல்யாணம் முடிந்து அவனைச் சென்னைப் பட்டணத்துக்கு அனுப்பலாமா ?

மூக்குத்தூள் வியாபாரம் ஆரம்பித்தால் அதற்காக வேறு கடை எடுக்க வேண்டி வருமோ ? தூளை அடைத்து வைக்க எங்கே இடம் பிடிப்பது ?

இந்தக் கூறுகெட்ட ஜமீந்தார் சரியென்றால் நீ ஒரு பக்கம் இருந்துக்கோ நான் இந்தப் பக்கமாக பொடித்தூளை அடைத்து வைத்து எடுத்துப் போகிறேன் என்று கேட்டுப் பார்க்கலாமா ? அவனுக்கும் நாலு காசு கிடைக்கும் என்றால் வேணாம் என்றா சொல்லப் போகிறான் ?

வேண்டாம். போலி கெளரவம் பார்க்கிற ஜந்து அது. பாம்போ பழுதையோ ராஜவம்ச ரத்தம் ஒரு உத்திருணியாவது ஓடும் அவனுக்குள். விலகி இருப்பதே உத்தமம். பொடி அடைக்க அக்ரஹாரத்தில் இன்னொரு வீட்டை சித்தம் பண்ணிவிட வேண்டியதுதான்.

இந்த சுப்பம்மாக் கிழவி வீட்டோடு தங்கி இருக்க சம்மதிக்கும் பட்சத்தில் அவள் வீட்டையே எடுத்துக் கொள்ளலாம். காசியில் இருந்து அவள் வீட்டுக்காரன் வரப் போவதில்லை. சாமிநாதனை முழுநேரம் கவனித்துக் கொள்ள அவளால் மட்டுமே முடியும்.

கிழவிக்கெல்லாம் தூரத்துணி தோச்சுக் கொடுக்கவா எங்கப்பா என்னை இங்கே வாழப் படுத்தினார் ?

கல்யாணியம்மாள் இடுப்பில் கையை வைத்துக் கொண்டு கேட்க, கடை வந்திருந்தது.

(தொடரும்)

eramurug@yahoo.com

Series Navigation