ஜனனம்

This entry is part of 31 in the series 20030525_Issue

பவளமணி பிரகாசம்


கல்யாண சந்தடியிலிருந்து விடுபட்டு, நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரது கேலிப் பேச்சுக்கள் காதுக்கெட்டாத தூரத்தில் அவனும், அவளும் அந்த மலை வாசஸ்தலத்தை அடைந்தனர். குறுகுறுப்புடன் அவளும், குதூகலத்துடன் அவனும் புதியதோர் உலகில் அடியெடுத்து வைத்தனர். புதிய பாடத்தை உவகையுடன் படிக்க ஆரம்பித்தனர். மணமேடையில் இணைந்து நின்ற போதிருந்த நெருக்கம் சுற்றியிருந்த கூட்டத்தால் கட்டுப்பாடு காத்தது. இப்போது சீசன் முடிந்திருந்த காரணத்தால் சந்தடியில்லாதிருந்த அந்த குளுகுளு நகரம் இளஞ்சிட்டுக்களின் தேனிலவுக்கு தங்குதடையற்ற சுதந்திரத்தை அள்ளி வழங்கியது. தனிமைத் தேனை அவனும், அவளும் துளித் துளியாய் சுவைத்து மகிழ்ந்தனர்.

அர்த்தமேயில்லாத பேச்சுக்கள், அர்த்தம் நிறைந்த பார்வைகள். அர்த்தமேயில்லாத சிணுங்கல்கள், அர்த்தம் நிறைந்த தேடல்கள். அர்த்தமேயில்லாத சிரிப்புகள், அர்த்தம் நிறைந்த மெளனங்கள். பறவையினங்களின் கீதத்திலே, பல வண்ண பூக்குவியலிலே, எங்கும், எதிலும் உல்லாசம். உலகமே இசைவான லயத்திலே இயங்குவதாய் உணர்ந்து கிறங்கினார்கள். சிருஷ்டியின் தேவ ரகசியத்தை உணர்ந்து சிலிர்த்தார்கள்.

நேற்றுவரை அந்நியனாய் இருந்தவனுடன் நிறமற்ற மழைநீர் செம்மண்ணில் விழுந்ததும் செம்புனலான கதையாய் தான் கலந்த விதத்தை எண்ணியெண்ணி வியந்தாள் அவள். ஆட்கொண்டவனே அடிபணிந்தவனும் ஆகும் அதிசயத்தை அனுபவித்தான் அவன்.

வருங்காலத்தின் வரைபடத்தை வார்த்தைகளில் வரைந்தார்கள்:

‘நீங்க ஆம்பளைன்னு ஆதிக்கம் பண்ணுவீங்களா அல்லது என் பேச்சை கேப்பீங்களா ? ‘

‘மகாராணி சொல்லுக்கு மறுபேச்சு கிடையாதம்மா. ‘

‘அய்யே! அடிமைத்தனமா தலையாட்டிக்கிட்டே இருந்தா எனக்கு பிடிக்காதப்பா. ‘

‘யாரும் யாருக்கும் அடிமை இல்லை. பெண் தலைமையிலேதான் மனித வர்க்கம் தலை நிமிர்ந்து நடந்ததா சரித்திரம் சொல்லுது. ‘

‘நான் சர்வாதிகாரியா மாறமாட்டேன்னு நினைக்கிறீங்களா ? ‘

‘நம்பிக்கைதான் பெண்ணே. ‘

‘ஆனாலும் இவ்வளவு நம்பிக்கை ஆகாதய்யா. ‘

‘ஆண்டவனே பெண்ணை நம்பி தன் சிருஷ்டி பெட்டகமா பெண்ணை உருவாக்கியிருக்கிறப்போ சாதாரண ஆண் நான் உன்னை நம்பக் கூடாதா ? ‘

‘ஓ! மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடவேண்டுமம்மாங்கற கவிமணியின் பாராட்டும் இதற்குத்தானோ ? ‘

புல்வெளியில் புரண்டு கொண்டு மலை முகட்டை தழுவி நழுவும் மேகக்கூட்டத்தை ரசிப்பது சுகமாய் இருந்தது.

‘மேகங்கள் ஏன் மலையுச்சியிலே உலாவுதப்பா ? ‘

‘விஞ்ஞான விளக்கம் வேண்டுமா, கவிஞனின் கண்ணால் பார்த்து சொல்லவா ? ‘

‘விஞ்ஞானியும், கவிஞனும் விரோதிகளா ? ‘

‘போடி பைத்தியமே! சத்தியத்தை, நித்தியத்தை வெவ்வேறு கோணத்தில் பார்த்தால் விரோதிகளாவார்களாடி ? ஆண்டவனின் படைப்பின் ரகசியத்தை தரிசித்த கணத்தில் உணரும் அற்புத பேருவகை ஒன்றேதான். ‘

‘ஒரு பெரிய ஏற்பாட்டின் அழகான, அளவான அங்கம்தான் ஒவ்வொரு ஜீவனும்னு விளங்குதுப்பா. ‘

கன்னத்தோடு கன்னம் உரச காதோரம் கிசுகிசுத்தான்:

‘எனக்கு உடனே ஒரு பிள்ளை வேண்டும், கண்ணே. ‘

‘ஒரு பத்து மாசம் காத்திருக்க முடியுமா, கண்ணா ? ‘

‘சொன்ன பேச்சை காப்பாற்றினா சரி. ‘

சொன்ன பேச்சை காப்பாற்றினாள். பத்து மாதத்தில் குழந்தை பிறந்தது. தவழ்ந்தது. வளர்ந்தது. பள்ளிக்கு போனது. மாலையில் தந்தை அலுவலகத்திலிருந்து வந்ததும் மடியேறி அமர்ந்து மழலை மொழியில் தன் சின்ன உலகத்து சேதியெல்லாம் செப்பியபோது மனமெல்லாம் இனித்தது.

இனிய இல்லறம் இப்படியே சென்றிருந்தால் தேவலையே. தெளிந்த வானில் மேகமூட்டம் தோன்றியது. அவள் தேகம் மெலிந்து சோகையாய் மாறிவரக் கண்டான் அவன். சீக்கிரமே களைத்துப் போனாள். மாதவிலக்கில் பிரச்சினைகள். நல்ல டாக்டரம்மாவிடம் காட்டினார்கள். பலவித பரிசோதனைகளுக்குப் பின் கர்ப்பப்பையில் கட்டி என கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

‘இனி பயமில்லை, மாமூலான வாழ்க்கை நடத்தலாம். ஆனால் மீண்டும் கருத்தரிக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டியது அவசியம், ‘ என்று எச்சரித்தார் டாக்டரம்மா. சில காலம் பிரச்சினையேதுமில்லாமல் சென்றது. மீண்டும் நோயுற்றாள் அவள். எவ்வளவோ ஜாக்கிரதையாக இருந்தும் அவள் கருவுற்றிருந்தாள். அதோடு மீண்டும் புற்று வளர்ந்து முதுகுத்தண்டை தாக்கத் துவங்கியிருந்தது. டாக்டரம்மா அவளிடம், ‘இந்த கருவை உடனடியாக கலைத்துவிட வேண்டும். அடுத்து கதிர் சிகிச்சையும், அறுவை சிகிச்சையும் செய்தால் எல்லாம் சரியாகிவிடும், ‘என்றார். அவளோ, ‘ப்ளீஸ், டாக்டரம்மா, கருவை கலைக்கச் சொல்லாதீர்கள். நீங்கள் சொல்லும் சிகிச்சைகள் வளரும் சிசுவை பாதிக்கும் வாய்ப்பிருப்பதால் அவையும் வேண்டாம். ‘

அதிர்ந்தார் டாக்டரம்மா. ‘என்னம்மா சொல்கிறாய் ? உன் உயிருக்கு ஆபத்து வந்திருப்பதை நீ உணரவில்லையா ? ‘

‘என் உயிர் பெரிசில்லை, டாக்டரம்மா. வளரும் சிசுவின் உயிர் அதைவிட முக்கியம். அதை கொல்லுவதை என்னால் நினைத்தே பார்க்க முடியாது. ‘

‘பைத்தியம் மாதிரி உளறாதே. உன் கணவரையும், உன் மூத்த குழந்தையையும் எண்ணிப் பார்த்தாயா ? அவர்களுக்காக நீ வாழ வேண்டாமா ? ‘

‘அவர்களை ஆண்டவன் பார்த்துக் கொள்வான். என் வயிற்றிலுள்ள சிசுவுக்கு நான் தான் ஆதரவு. நான் வாழும் ஒவ்வொரு நாளும் அதன் வாழ்வில் இன்னும் ஒரு நாள். ‘

‘நீ சிகிச்சை பெறாவிட்டால் நிச்சயம் இறந்து போவாய். பிறக்கப் போகும் குழந்தையும் தன் சகோதரனுடன் சேர்ந்து தாயற்ற அனாதையாய் தவிக்கும். இதையெல்லாம் நன்கு யோசித்து நல்ல முடிவெடு. ‘

‘இதில் இனிமேல் யோசிப்பதற்கு ஒன்றுமில்லை. என் முடிவில் மாற்றமில்லை. ‘

‘பலாபலன்களைப் பற்றி சிந்திக்காமல் தன்னிஷ்டமாய் செயல் படாதே. ‘

‘என்னைப் பொறுத்தவரை மரணம் சாதாரணமானது. ஆனால் ஜனனம் உன்னதமானது. ‘

ஒரே பிடிவாதமாய் இருந்தாள் அவள். அவனும் எவ்வளவோ மன்றாடினான். பயனில்லை. வலியை மறக்க அவ்வப்போது மருந்து எடுத்துக் கொண்டாள். வைராக்கியமாய் நோயோடு போராடியவள் ஒரு நாள் தாங்கமுடியாமல் ‘கோமா ‘வில் விழுந்தாள். ‘பெரிய உயிரா, சின்ன உயிரா, யாரை காப்பாற்றுவது ? ‘ என்று டாக்டர்கள் தயங்கிய போது, அவன் தீர்மானமாய் சொன்னான், சிசுவை காப்பாற்றித்தரும்படி. அல்லும், பகலும் அவள் அருகிருந்து அவள் தாய்மை தவத்தை கண்டு வியந்தவனல்லவா ? பலவீனமான ஏழு மாத சிசுவை ‘இன்குபேட்டரில் ‘ வைத்து காப்பாற்றினார்கள். புதிய ஜீவனின் பூபாளத்தில் உலகம் விழித்த வேளையில் அவள் மீளாத்துயிலில் ஆழ்ந்தாள்.

***

pavalamani_pragasam@yahoo.com

Series Navigation