அரசூர் வம்சம் – அத்தியாயம் ஐந்து

This entry is part of 47 in the series 20030510_Issue

இரா முருகன்


சங்கரன் சிரித்தான்.

வியாபாரத்துலே சகுனமாவது ஒண்ணாவது.

உள்ளே இருந்து ஐயணை உமி எடுத்துவந்து கணக்குப் புத்தகத்தில் தூவினான்.

வேறே பக்கத்துலே எழுதுங்க சாமி.

இவனை அனுப்பிவிட்டு ஒரு தூக்கம் போடலாம் என்று நினைத்தான் சங்கரன்.

முப்பது சிப்பம் உள்ளே தனியா இருக்கு. எடுத்திட்டுப் போய் தொண்டிக்கு ஏத்தி அனுப்பிடு.

நாலு பக்கம் தள்ளிப் புதுக் கணக்காக சிப்பத்துக்கு ஒண்ணே காலணா வீதம் பதிந்து எழுதினான்.

ராவன்னாமானா தெக்கூர் வகையில் பற்று ரெண்டு ரூபா ஐந்து அணா ஆறு காசு. முன்பணம் வாங்கிய வகையில் ஒரு ரூபா எட்டணா. நிலுவை.

கூட்டெழுத்து. இவன் எழுதியது புரியாமல் போன வாரம் பரசுராமன் எழுத்துக் கூட்டிப் படிக்க முயற்சி செய்து சிரித்தது நினைவு வந்தது.

அம்பலப்புழையில் இருந்து வந்தவன் அவன். சுப்பிரமணிய அய்யரின் தமக்கை மகன்.

அம்மாஞ்சி. என்னடா இது. அம்மாஞ்சிக் கணக்கா இருக்கேடா. இப்படி எழுதியா இங்கே ஒப்பேத்தறேள் ?

அம்பலப்புழையில் மலையாளத்தில் நிறுத்தி நிதானமாக எழுதிக் கணக்கு வழக்கு வைக்க நாயர்கள் உண்டாம். ரூபாய் அணா பேச்சே இல்லை. சக்கரம் தான் எல்லாம்.

அவன் நம்பூத்திரி போல, தரவாட்டு நாயர் போல எல்லாம் பேசிக்காட்டினான். ஹ ஹ என்று புரண்டு வர மாப்பிள்ளைமார் என்ற துருக்கர்கள் பேசும் மலைப்பிரதேச மலையாளத்தையும் வெகு வினோதமாக உச்சரித்தான்.

சாமி. ஆச்சு முப்பது சிப்பமும் வண்டியேத்தியாச்சு. வீட்டுலே விசேசம்னாரு அய்யா. வெத்திலை பாக்கு வாங்கிட்டு ஓடிவந்துடறேன்.

ஐயணை வேகுவேகுவென்று தலையில் முண்டாசை இறுக்கிக் கொண்டு நடந்தான்.

உதிரியாக இனிமேல் யாராவது புகையிலை வாங்க வரலாம். வெய்யில் நேரத்தில் வருவது குறைச்சல் தான். வெய்யில் தாழ்ந்து விளக்கு வைக்கும் நேரத்தில் கடையில் கூட்டம் இருக்கும்.

சங்கரன் கணக்கு மேசைக்குப் பக்கமாக மல்லாக்கப் படுத்தான். அவன் மாரில் கவிழ்ந்தவள் அவனை விட வயதானவள். கண்ணும் மாருமாக கை இரண்டும் அவளை வளைக்க எழுந்தன.

கண்ணில் தூக்கம் கவிந்து வந்தது.

புகையிலை வாடையும் தேயிலைத் தோட்ட வாடையுமாக சுற்றிச் சூழ்ந்தது.

யாழ்ப்பாணத்தில் சபேசய்யரோடு கடையில் உட்கார்ந்திருப்பது போல் பிரமை சங்கரனுக்கு.

அவன் படகேறி அங்கே போய்த் திரும்பி இந்த ஆவணி அவிட்டத்துக்கு ஒரு வருடம் ஆகி விட்டது.

ஏட்டுப் பள்ளிக்கூடத்தில் தரையைத் தேய்த்து சங்கரனுக்குப் பதிமூன்று வயதானபோது சுப்பிரமணிய அய்யர் அவனை யாழ்ப்பாணத்துக்குத் தன் தம்பி சபேசய்யர் வசம் இருந்து வியாபாரம் பழக அனுப்பி வைத்தார்.

சபேசய்யரும் புகையிலை வியாபாரத்தில் தான் மும்முரமாக இருந்தார். இரண்டாம் தலைமுறைப் புகையிலை வியாபாரிகள் அடுத்த தலைமுறையைத் தயார்ப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம்.

சபேசய்யர் தன்னை சபேசன் பிள்ளை என்று கடல் கடந்த இடத்தில் சொல்லிக் கொண்டார். பூணூலைக் கழற்றி வைத்ததோடு அவனையும் கழற்றச் சொன்னார். அவன் சங்கரலிங்கமானான்.

பிராமணர்கள் சைவப்பிள்ளைமார்களுக்குக் காரியஸ்தர்களாக இருந்த பிரதேசம் அது. அவர்கள் பேச்சிலும் பிராமணக் கொச்சை அழிந்துபோய் ஊர்ப் பேச்சோடு ஒன்றாகப் போயிருந்தார்கள்.

சங்கரய்யரை விட சங்கரலிங்கம் எல்லா விதத்திலும் தோதாக இருக்கும் என்று யோசனை சொன்ன சபேசய்யரால் அவன் பேசுகிற விதத்தை மட்டும் கடைசிவரை மாற்ற முடியவில்லை.

அவரோடு மலைப் பிரதேசத்துக்குப் பிரயாணப்பட வேண்டி வந்தது.

பசுமை விரிக்கும் தேயிலைத் தோட்டங்கள். குடியேறி வந்த இந்தப் பக்கத்துக் காரர்கள். வெற்றிலை மென்று துப்பும் பழக்கத்திலிருந்து மீளாதவர்கள். உழைத்த களைப்புத் தெரியாமல் இருக்க கள்ளை மாந்திப் போதை தலைக்கேற ஏற்றப்பாட்டு பாடுகிறவர்கள். ஏற்றமும் கமலையும் வயலும் இனி ஆயுசுக்கும் அவர்களுக்குத் திரும்ப அனுபவமாகாது என்று சங்கரனுக்குப் பட்டபோது அவனுக்கு மனக் கஷ்டமாக இருந்தது.

ஆனாலும் அவன் புகையிலை விற்க வந்தவன். இருக்கிற பழக்கம் போதாதென்று இதுவேறே. வாயில் அடக்கிப் பழகினால் திரும்பத் திரும்ப அதக்கி மென்று சாறை விழுங்கி லகரி ஏற்றி ஆசுவாசத்தைத் தரக்கூடிய வஸ்து.

சிப்பம் சிப்பமாக விற்றான். கங்காணிகளோடு உடன்பாடு செய்துகொண்டு அவர்கள் மூலம் நிரந்தரமாக வருமானத்துக்கு வழிசெய்து விட்டுத் திரும்பினான்.

சங்கரலிங்கம் பிள்ளைவாள். சபாஷ்.

சபேசன் பிள்ளை அவன் முதுகில் தட்டிக் கொடுத்து நாலு வருஷம் சென்று ஊருக்கு அனுப்பியபோது இங்கே புதுவீடு எழும்பி இருந்தது.

பக்கத்திலே ஜமீந்தார் கிரஹத்தை இக்கினியூண்டாக்கிவிட்டுச் சடசடவென்று உயர்ந்த காரைக் கட்டடம். நீள நெடுக வெள்ளைச் சுண்ணாம்பும் செம்மண் காவியுமாக அந்தஸ்தாக நின்ற வீடு.

ஜமீந்தார் மாளிகையின் கருங்கல் வனப்பு இல்லாவிட்டாலும் உயரம் காரை வீட்டை எடுப்பாக்கிக் காட்டியது.

சுப்பிரமணிய அய்யர் அக்ரஹாரத்தில் இருந்த பழைய வீட்டை வேதபாடசாலை ஆக்கி இருந்தார். லாஹிரி வஸ்து விற்றுக் காசு சேர்ப்பதற்குப் பிராயச்சித்தமாக அதைச் செய்திருந்தார்.

வீடு முழுக்கச் சுற்றி வந்து மாடிக்கு வந்தான் சங்கரன்.

பெரியம்பி உள்ளே இருக்கான். பார்த்துட்டு வா. மத்த நாள்னா நன்னாப் பேசுவான். பழகுவான். அவனைப் பார்க்க முன்னூறு நானூறு வருஷம் கழிச்சு இருக்கப்பட்டவன் எல்லாம் வருவான். வாசல்லே இருந்து மாடிக்குப் போறதுக்கு தனிப் படிக்கட்டே அவனுக்காகத்தான். ஆனா இன்னிக்குப் பவுர்ணமி. யாரும் வரமாட்டா. நீ போய்ப் பாரு. என்ன, கொஞ்சம் அவஸ்தையா நடந்துப்பான். அவன் போக்குலே விட்டுடு. நாளைக்குச் சரியாயிடுவான்.

சுப்பிரமணிய அய்யர் அவன் மாடிப்படி ஏறும்போது சொன்னார்.

தமையன் சாமிநாதனா அது ? சாமிநாத ஸ்ரெளதிகளாகக் கம்பீரமான குரலில் ருத்ரமும் சமகமும் சொல்லிக் கொண்டு மடத்தில் வேதவித்தாக இருக்க வேண்டியவன் ஒட்டி உலர்ந்த தேகமும் குத்திருமலுமாக இருட்டு அறைக்கு நடுவே நக்னமாக நின்று சுயமைதுனம் செய்தபடி சிரிக்கிறான். பின்னால் ஒரு வினோதமான பெட்டியிலிருந்து ஒப்பாரி ஒலிக்கிறது.

வம்சமே அழியறது பாருடா அம்பி.

தரையில் விந்துத் துளிகளைக் காலால் மிதித்து அரைத்து அரைத்துத் தேய்த்தபடி சாமிநாதன் நகர்ந்துவர, சங்கரன் அவசரமாக வெளியே வந்து கதவை மூடித் தாழ்ப்பாள் போட்டான்.

அவனுக்கு மனம் முழுக்க வேதனை கவிந்து வந்தது. அடைத்த அறைக்குள்ளிருந்து இன்னும் சத்தமாக ஒப்பாரிப் பாட்டு வந்தபோது பெருங்குரலெடுத்துக் கூடவே அழ வேண்டும் என்று தோன்றியது.

சங்கரனைப் போல் சராசரி இல்லை சாமிநாதன். ஞான சூரியன் என்பார் சுப்பிரமணிய அய்யர் தன் சீமந்த புத்திரனைப் பற்றிப் பெருமையாக.

சாம வேதத்தை ஊன்றிப் படித்துக் கிரஹித்து ஸ்ருதி மாறாமல் ஓதி ஸ்ரெளதிகளாக அங்கீகாரம் வர ஒரு மாதம் இருக்கும்போது அவனுக்கு மனம் புரண்டு போனது.

சங்கரன் ஏட்டுப் பள்ளிக்கூடத்துக்குச் சுவடி தூக்கிப் போன கடைசி வருடம் அது.

வீட்டு விசேஷத்துக்காக இறங்கி வந்த மூத்த குடிப் பெண்டுகளில் கன்னி கழியாமலே இறந்து போயிருந்த யாரையோ சாமிநாதன் மந்திரத்தால் கட்டிப் பகல் நேரத்தில் கூடியதால் சாபம் ஏற்பட்டதாக சுப்பம்மாக் கிழவி ஒருதடவை பாடியபோது வீட்டில் எல்லோரும் அதை நிறுத்தச் சொன்னார்கள்.

பாதி புரிந்தும் புரியாமலும் சங்கரன் படகேறி சபேசய்யரைத் தேடிப் போனான் அப்புறம்.

கன்னி கழிந்த அந்த மூத்தகுடிப் பெண் வீட்டில் நடந்த அடுத்த விசேஷத்தின் போது, சுப்பம்மாள் நாக்கில் இருந்து எல்லோரையும் காதுகேட்கச் சகிக்காத வார்த்தைகளால் வைது தீர்த்து இறங்கிப் போனதோடு வீட்டையும் மாற்றி இங்கே வந்து விட்டார் சுப்பிரமணிய அய்யர்.

இந்த வீட்டிலும் அந்த மூத்த குடிப்பெண்ணின் சாபம் சூழ்ந்திருந்ததாகத் தோன்ற மற்ற முன்னோர்களைக் கூப்பிட்டுப் பேசி அவள் அடுத்த ஜன்மம் எடுத்து இதையெல்லாம் மறக்க நடவடிக்கை எடுத்தாள் அவர்.

அந்தப் பெண்ணின் கர்ப்பத்தில் இருந்த சிசுவுக்கும் சேர்த்து இந்தக் கடைத்தேற்றுதலைச் செய்ய வேண்டி வந்ததால் பத்து இருபது நாள் தொடர்ந்து நீண்ட சடங்குகள் காரணமாக ஏகமாகச் செலவானதாகச் சபேசய்யர் சங்கரனிடம் ஒருதடவை சொன்னார்.

மூத்தகுடிப் பெண்ணின் உபத்திரவம் இல்லாமல் போனதோடு சாமிநாதனுக்கு அவள் ஆசிர்வாதத்தால் வெள்ளைக்கார தேசத் தர்க்கம், தத்துவம், விஞ்ஞானம் என்று எல்லாம் கூடி வந்தது. ஆனாலும் அவள் கருவில் இருந்து அழிந்த சிசு சபித்துப் போட்டதில் பவுர்ணமிகளில் அவன் ஸ்திதி மோசமாகி விடும்.

திரும்பி வந்த தினத்தில் சாமிநாதனைப் பார்த்துவிட்டு சங்கரன் வெளியே வர, எதிரே புகையிலை அடைத்த இருண்ட அறை. கதவைத் திறந்து உள்ளே போனான்.

ஈரமும், வாடை கவிந்தும் இருந்த இருட்டில் தேயிலைத் தோட்டங்களை நினைத்துக் கொண்டான் சங்கரன். அங்கே கேட்ட ஏற்றப்பாட்டுக்களை நினைவில் கொண்டு வர முயன்றபடி அறையில் மேற்கு வசத்தில் இன்னொரு கதவு மூலம் வெளியே வந்தான்.

முன்னால் நிமிர்ந்து பார்க்க கூரை வேயாத மொட்டைமாடி உசரமாக நின்றது.

வேட்டியைத் தார்ப்பாய்ச்சிக் கட்டிக் கொண்டு கைப்பிடிச் சுவரைப் பிடித்து ஏறினான்.

குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ.

குனிந்து பார்க்கலாமோ.

பார்த்தான்.

அந்தக் கண் இரண்டும் சங்கரனின் மார்பைத் துளைத்துப் போனதுபோல் இருந்தது.

கழுத்தில் தாலி இருக்கிறது. கல்யாணமான ஸ்திரி. தன்னை விட வயதானவளாக இருக்கக் கூடும்.

அவள் கண்ணைத் தாழ்த்திக் கொண்டாள். சங்கரன் அவசரமாகக் கீழே இறங்கியபோது மை தீற்றிய அந்தக் கண்களும் கூடவே வந்தன.

இது நித்தியப்படி வழக்கமாகிப் போனது.

அதாவது மாதத்தில் மூன்று நாள் சங்கரன் மாடி ஏறுவதில்லை. மற்றப்படி கடைக்குப் போகிற நேரத்தை இதை உத்தேசித்துக் கவனமாக மாற்றிக் கொண்டான் சங்கரன்.

என்ன, ஒரு அரை மணிக்கூறு தாமதித்தால் என்ன போச்சு ? ராத்திரி திரும்பி வர நேரம் பிடிக்கிறதில்லையா ?

குனிந்து பார்க்கலாமோ. பெண்டுகள்.

அம்பி வெய்யில்லே மொட்டை மாடியிலே என்ன பண்ணிண்டு இருக்கே ? ஜபம் பண்றியா ?

சங்கரன் பார்த்துக் கொண்டிருந்தபோது பரசுராமனும் கைப்பிடிச் சுவர் ஏறி மேலே வந்தான் போன வாரம். அன்றைக்குப் பகலில் அவன் அம்பலப்புழை திரும்ப உத்தேசித்திருந்தான்.

மேலே இருந்து இரண்டு ஜோடிக் கண்கள் பார்த்தது தெரிந்த ராணி அப்புறம் பார்வையை உயர்த்தவே இல்லை.

அம்பி, நீ அம்பலப்புழைக்கு வாயேன்.

பாதித் தூக்கத்தில் பரசுராமன் கூப்பிடுகிற மாதிரி இருந்தது.

போகலாம். அங்கே மாடி இருக்குமோ.

(தொடரும்)

eramurug@yahoo.com

Series Navigation