நினைவலைகள்

This entry is part of 20 in the series 20011202_Issue

ஸ்ரீனி.


மாலை வெய்யில் மலைகளின் பின்னே மறையும் நேரம்.

கம்பி வேலியில் கால் வைத்தபடி அந்த அஸ்தமனத்தை வெகுநேரம் வெறிக்கத் தோன்றியது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மலைதொடர்கள். காலையில் பசுமை போர்த்தி இருந்தவை, இப்போது கரும்பொன் நிறத்தில் மின்னுகின்றன. மாலை நேரங்களில் பல முரை இந்த இடத்திற்கு வந்து நின்றிருக்கிறேன். அது ஏனோ தனிமையில் கிடைக்கும் ஏகாந்தம் ஒரு சுற்றுலாவிலோ, அல்லது வேறெதிலோ கிடைப்பதில்லை. கடைக்காரன் கடையை மூடுவதற்குமுன் கணக்கு பார்ப்பதுபோல, மாலை நேரங்களில் இங்கு வந்தால் செய்த செயல்களை நினைத்து பார்க்கத்தோன்றும். கம்பி வேலிக்கும் எதிரே இருக்கும் மலைத்தொடருக்கும் இடையே உள்ள இடைவெளி ஏனோ ஒருவித தனிமையை மனதிற்குள் கொண்டு வரும். இந்த இடம் பல சமயங்களில் பல சிந்தனைகளை தோற்றுவிக்கும். வெற்று இடைவெளிக்கும் எனக்கும் ஏதோ வார்த்தை பாிமாற்றம் நடப்பதாய் மனது உணரும். நாம் சொல்வது அத்தனையும் முழுமையாய் பொறுமையுடன் கேட்கும் ஒரு நண்பனாய் மனது உணரும்.இன்னும் பலப்பல. சில நேரங்களில் ‘இன்று என்ன பொிதாகச் சாதித்தாய் ? ‘ என்று கேட்கும். இவை, சோர்வுற்று ஆறுதல் தேடும் மனதின் குழப்பங்களா, இல்லை வித்தியாசம் தேடி அலையும் மனது விரும்பிச் செல்லும் இடமா ? .. தொியாது. ஆனால் தொிந்து சில சமயங்களிலும், அறியாமல் சில சமயங்களிலும் கால்கள் என்னை இங்கே கொண்டு வந்துவிடும்.

ஒன்றல்ல இரண்டல்ல, இதுபோல் 6 ஆண்டுகள் ஓடிவிட்டன. காலத்தின் மாற்றத்தை என் தளர்ச்சி சொன்னாலும், மனது மட்டும் மாராத ஏக்கத்தோடே இன்றும் அலைகிறது. ஸ்குவாஷ் கோர்ட்டிற்குள் அடிக்கப் பட்ட பந்தாய் எல்லா திசைகளிலும் சென்று திரும்பி வரும். காரணம் மட்டும் விளங்காத ஒன்று.

‘என்ன சீனா, ாிஸல்ட் என்ன ஆச்சு ? ‘ .. பாலா கேட்டான்.

‘1073 அவுட் ஆப் 1200 ‘ ..என்றேன். ‘சூப்பர் மார்க்குடா ! கலக்கு போ! நான் 1003. ஆயிரம் எடுத்ததே பொிய விஷயம்… நீ கலக்கு ‘.

அம்மாவின் முகத்தில், நான் ஒரு தடை தாண்டியதில் மகிழ்ச்சி.

‘நீ சொன்ன மாதிாி என்டரன்ஸ்க்கு அப்ளை பண்ணிட்டோம் மா.. நானும் பாலாவும் சேர்ந்துதான் போகப்போறோம்.. ‘

ஏதோ பொருட்காட்சியை பார்க்கப் போன ஒரு மனநிலையில்தான் இருவரும் சென்றோம். எதற்கு இதை எழுதுகிறோம் என்று அப்போது நினைத்ததுண்டு. மூன்று மாதங்கள் கழித்து ாிஸல்டும் வந்தது. பாலா ஒரு தனியார் கல்லூாியில் சேர்ந்தான் முதலில். இடம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் சிறிதும் இருந்ததில்லை எனக்கு. சொல்லப்போனால் ரொம்ப இதமான நாட்கள் அவை. காலையில் மெதுவாக எழுந்து, எல்லோரும் அரக்க பறக்க ஓடுவதை வேடிக்கைப் பார்த்தபடி காபி குடிப்பதில் ஒரு தனி சுகம் இருந்தது. ஏதோ ஜெயித்த மாதிாி ஒரு நினைப்பு.

எனக்கு அப்போது D.F.T(Diploma in film Technology) செய்ய ஏதோ ஒரு மோகம். ஆனால் வீட்டில் கேட்பதற்கு ஏதோ பயம்.

கொஞ்ச நாட்களிலேயே அம்மா என்னை ஒரு கல்லூாியில் சேர்த்து விட்டாள். B.Sc Maths. படிக்க துவங்கிய 3 மாதங்களிளேயே வேறு ஒரு தனியார் பொறியியல் கல்லூாியில் இடம் கொடுத்தனர்.

தினமும் காலை 06:30 க்கு கிளம்பி இரவு 10:00 மணிக்கு திரும்பினேன். பல நாட்கள், ஓடும் ரயிலின் ஜன்னல் கம்பியின் வழியே வெளியே வெறித்தபடி ப்ரயாணித்திருக்கிறேன். ஏன் இப்படி தினமும் ஓடுகிறேன் ? எதற்காக இந்த போராட்டம் ? யாாிடம் அங்கீகாரம் தேடுகிறேன் ?

இன்னும் கேள்விகள் ஓராயிரம். வயதுக்கோளாருகளும் சேர்ந்துகொள்ள பல நேரங்களில் யாரும் அற்ற ரயில்வே ப்ளாட்பாரங்களில் தனியே அமர்ந்திருக்கிறேன். பலர் என்னை பார்ப்பதுபோல் ஒரு நினைவு தோன்றும் அப்போது.

‘உனக்கு என்ன ஹீரோன்னு நெனப்பா ? அவனவன் அவனவ வேலைய பார்த்துக்கிட்டிருகாண்டா .. சும்மா கனவுலகதுல மெதக்காதே.. ‘

கற்பனைகளில் சுகம் கண்ட பல நாட்களில், என்னை பாலா தரைக்குக் கொண்டு வந்தான்.

வருடங்கள் நான்கு, இப்படியே கழிந்தது. வித்தியாசம் என்னவென்று தொியவில்லை. ஏதேதொ கற்று கொடுத்ததாய் சொன்னார்கள்.. காசு மட்டும் தண்ணீர் போல செலவாகியது. (அப்போது இவ்வளவு தண்ணீர் பஞ்சம் இல்லை).

பட்டம் பெற்று 3 மாதங்கள் ஓடியும், வேலை ஏதும் கிடைக்கவில்லை. எழுதிய நுழைவுத் தேர்வுகளையெல்லாம் ஒன்றுமே தோன்றாமல் எழுதினேன்.

பெயர் வராதபோது சற்றும் வருத்தம் இல்லை. ஏனென்று தொியவில்லை. அந்த 6 மாதங்கள் மீண்டும் சுகமான வாழ்க்கை. உண்பதற்கும், உறங்குவதற்கும் மட்டுமே வீடு எனக்கு இடமாகியது. ஆனால் ஏனோ மிகவும் இதமான நாட்கள் அவை.

பின்னர் ஒரு கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலை கிடைத்தது. போய், 8 மணி நேரம் அமர்ந்து , திரும்பி வந்தால் நல்ல சம்பளம் கொடுத்தனர்.

இதற்கு பிறகு என்ன என்பதை யோசிக்காமல் இருந்தால் , இதைவிட சுகமான பணி இருக்க முடியாது. அது இங்கே இல்லாததால், விரைவிலேயே வழக்கம் போல் ‘ஏன் செய்கிறோம் ? ‘ என்ற கேள்வி மலர ஆரமித்தது. விடை தொியவில்லை. கேலண்டாில் நாட்கள் கிழிக்கப்பட்டுக்கொண்டே இருக்க, பயன் ஒன்றுன் தொியாமல் நாட்கள் நகர்ந்துகொண்டே போனது.

அதன் பின்னர் வேலை மாற்றத்தால் இடமாற்றம் ஏற்பட்டது. அறை முழுக்க இனிப்புக்களை வைத்து, பசியோடு இருக்கும் சிறுவனை உள்ளே விட்டால், எல்லாவற்றிலும் கொஞம் பிய்த்து தின்பான் என்பது போல ப்ல விஷயங்களில் மனது ஈர்க்கப்பட்டாலும், ஒன்றிலும் நிலைக்கவில்லை.

நம்மில் பலர் இதுபோலத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். கடமையை செய்கிறோம் என்று கூறி, நமக்கு கிடைப்பதை நம் கடமையாக்கிக் கொள்கிறோம். தினப்படி தேவைகளை பூர்த்தி செய்வதே நாம் பிறந்ததின் நோக்கமாய் நினைத்து வாழ்கிறோம். அதை தொடர்ந்து செய்பவர்களை, இந்த சமுதாயமும் மதிக்கிறது. ஆனால் அந்த சமுதாயமே இப்படிபட்டவர்களின் ஒரு கூட்டம்தான் என்பதை நாம் நினைத்து பார்ப்பதில்லை. பசியும், இடமும் ஆட்டி வைக்கும் பொம்மைகளாகி, விரும்பியதை விட்டு, கிடைத்ததை செய்து, இறுதியில் இறந்தும் போகவா நாம் இங்கே வந்தோம் ?

சில் என்று அடித்த தென்றலினால், நினைவுகள் கலைக்கப்பட்டு, நிமிர்ந்தேன். சூாியன் விடைபெற்று சென்று வெகு நேரம் ஆகிவிட்டது போலும்.

மெல்லிய தென்றலின் குளிர்ச்சி, உடலுக்குள் ஊடுறுவ, வீட்டை நோக்கி நடக்க ஆரமித்தேன். சாய்ந்திருந்த மரம், போய்வா என்பது போல மீண்டும் சாமரம் வீசி கையசைத்தது. என்னையும் அறியாமல் கையை ஆட்டினேன். மனதிற்குள் ‘ஏன் செய்கிறோம் ? ‘ என்ற கேள்வி மட்டும் கலையாமல் நின்றது. ‘மறுபடியும் வருவேன் உனக்கு தொியுமா ? ‘ எஎபது போல் மரத்தை பார்த்தேன். ஏனோ என்னை பார்த்து ஏளனமாகச் சிாிப்பதாகப்பட்டது.

Series Navigation