(3) – தலித்துகளும் தமிழ் இலக்கியமும்

This entry is part [part not set] of 48 in the series 20110313_Issue

வெங்கட் சாமிநாதன்


நான் முன்னரே கோபாலகிருஷ்ண பாரதியாரையும் அவரது நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளையும் பற்றிச் சொன்னேன். அவரது கீர்த்தனைகளும் அந்த கீர்த்தனைகளில் சொல்லப்பட்ட நந்தன் கதையும் தான் பின் வந்த நாடகங்களுக்கும் திரைப்படங்களுக்கும் கருவாயின அவர் சொன்ன கதைதான், இன்று நாம் கேட்கும் தலித் சித்தாந்திகளின் பிரசாரத்துக்கும் உதவுகின்றன. இந்தக் கதை முன்னர் சொல்லப்படாத விவரங்களும் பாத்திர சிருஷ்டிகளும் கொண்ட கதை. கோபால கிருஷ்ண பாரதியார் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை தவிர் இன்னும் சில சைவ நாயன்மார் கதைகளையும் கீர்த்தனை வடிவத்தில் தந்திருக்கிறார். திருநீலகண்ட யாழ்ப்பாணர் சரித்திரம், காரைக்காலம்மையார் சரித்திரம், இயற்பகை நாயனார் சரித்திரம் ஆக மூன்றும் கூட. கோபால கிருஷ்ண பாரதியார் தன் கதா காலட்சேபத்துக்கு கீர்த்தனைகள் இயற்ற தேர்ந்தெடுக்கும் சரித்திரங்களிலும் கூட தன்னைத் தனித்துக் காட்டிக் கொள்கிறார். தீவிர ஆசார சீலரை, பழமையின் உருவே ஆனவரைக் கவர்வது தலித்துகள் அதிலும் ஒரு பெண்மணியின் கதையும் சேர்கிறது. இது நடப்பது நூற்றைம்பது வருடங்களுக்கு முன். தலித்துகளும் பெண்ணும் ஒரே கதாகாலட்சேப மேடையில். இன்று அரசியல் மேடைகளில் நிகழும் அதே கூட்டணி.

கோபால கிருஷ்ண பாரதி விட்ட இழையைத் தொடர்வது இன்னொரு பாரதி. சுப்பிரமணிய பாரதி (1882-1921). இந்த பாரதியாரும் அந்த பிராமண குலத்தில் பிறந்தவர் தான். இந்த பாரதி செய்த மகா பாப காரியம் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த கனகலிங்கத்திற்கு பூணூல் அணிவித்து பிராமணன் என்று பிரகடனம் செய்து, சந்தியாவந்தன மந்திரங்கள் கற்பித்து மூன்று வேளை சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் என்றும் சொன்னது.

• இந்த வரலாற்றுச் செய்தி நமக்குத் தெரிவது கனகலிங்கமே எழுதிய எனது குருநாதர் என்னும் நூலிலிருந்து தான். ஆனால் வேடிக்கை என்னவென்றால்,. பாரதியார் தான் பூணூல் அணிவதில்லை. சந்தியாவந்தனம் செய்து வந்ததாகவும் செய்திகள் இருப்பதாகத் தெரியவில்லை. அவர் பிராமண ஆசாரங்களைக் கடைப்பிடித்தவராகவும் தெரியவில்லை. அதற்கும் மேல் ஒரு கீழ்சாதிப் பையனுக்கு பூணூல் அணிவித்து சமஸ்கிருத மந்திரங்களும் கற்பித்தால், அவனைப் பிராமணன் என்றால் அவர் சமூக நிந்தனைக்கு ஆளாகாமல் தப்பிப்பது எப்படி சாத்தியம்? அவருடைய பாடல்களிலும் அவர் பிராமணர்களையும் சமூகத்தில் நிலவும் சாதி வேறுபாடுகளையும் சாடுகிறார். “பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே” என்று உரக்கவே சொல்கிறார். பிரிட்டீஷ் அரசாங்கத்திடமிருந்து தப்பி வாழ் அவர் புதுச்சேரியில் இருந்த போது ஒரு முறை வீசிய பெரும் புயலில் அங்கிருந்த குடிசைகள் வீசி எறியப்பட்டன. குடிசைகளை இழந்து தவித்துக்கொண்டிருந்தவர்களிடையே தான் அன்று இந்த நூற்றாண்டின் தலையாய கவிஞர் அக்குடிசைகளைச் சீர் செய்து திரும்பக் கட்டுவதில் அவர்களுக்கு உதவுவதில் ஈடுபட்டிருந்தார். இக்காட்சிக்கு சாட்சியாக இருந்தவர் அப்போது பத்து பதினோரு வயது சிறுமியாக இருந்த யதுகிரி அம்மாள் தான் இறக்கும் முன் எழுதிய பாரதி நினைவுகள் என்ற சிறு புத்தகத்தில் இதைப் பதிவு செய்திருக்கிறார். இச் சம்பவங்கள் நிகழ்ந்தது, இத்தகைய சிந்தனைகளை பாரதியாரிடம் நாம் காண்பது, சமுதாய சீர்த்திருத்த இயக்கம் தொடங்குவதற்கும் இச்சிந்தனைகளுக்காக போற்றப் படும் தலைவர்கள் இது பற்றி சிந்திக்கக்கூடத் தொடங்குவதற்கும் பல ஆண்டுகள் முன்னராகும். அந்தத் தலைவர்கள் பாரதிக்குப் பின்னரே இது பற்றிச் சிந்திக்கவே தொடங்கி.னார்கள் என்பது மட்டுமல்ல அவர்கள் பாரதி காலத்திலேயே கூட பாரதிக்கு வயதில் மூத்தவர்கள். பாரதி மறைந்து பல ஆண்டுகள் கழிந்த பின்னர் தான் அவர்கள் சமுதாய சீர்திருத்தங்கள் பற்றி சாதி வேறு பாடுகள் பற்றி சிந்திக்கத் தொடங்கினர். என்பது நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய வரலாற்றுத் தகவல்.

நவீன தமிழ் இலக்கியத்தில் எழுதப்பட்ட முதல் கதையே பாரதி யிடமிருந்து தான் நமக்குக் கிடைக்கிறது. அந்த முதல் கதையே தாழ்த்தப்பட்ட சாதியினரின் விடுதலையைப் பற்றிய பிரசினையைத் தான் மையமாகக் கொண்டுள்ளது. ஆறில் ஒரு பங்கு என்ற அந்தக் கதையின் தலைப்பு, மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்காக இருக்கும் தாழ்த்தப்பட்ட சாதி மக்களைக் குறிக்கும். அதில் ஒரு பிராமணப் பையன் தான் காதலிக்கும் ஹரிஜனப் பெண்ணிடம், தான் அவளை மணக்கும் முன் தான் கவனிக்க வேண்டிய பல பிரச்னைகள் இருப்பதாகவும் அதன் பின்னரே அவளை மணக்க முடியும் என்றும் சொல்கிறான். தான் ஈடுபாடு கொண்டுள்ள தேச விடுதலை இயக்கத்தின் முக்கிய அம்சம் முதலில் தாழ்த்தப்பட்டுள்ள மக்களின் விடுதலை என்று சொல்லி வங்காளம் சென்று அங்குள்ள புரட்சியாளர்களோடு சேர்ந்துகொள்கிறான். இதுதான் பாரதி எழுதிய முதல் கதை. தமிழ் இலக்கியத்திற்கும் அது தான் முதல் கதை. அந்தக் கதை தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலை பற்றியதாக இருந்தது.

மகாத்மா காந்தியும் அவரது தலைமையிலான சுதந்திரப் போராட்டமும் நவீன தமிழ் இலக்கியத்தைப் பாதித்தன. நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளான, அ.மாதவய்யா, புதுமைப் பித்தன், கு.ப.ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா எல்லோருமே தம் எழுத்துக்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் துயரங்களையும் அவர்களுக்கு சமூகம் இழைத்து வரும் அவமதிப்பையும் பற்றிப் பேசினர்.
இவர்கள் அனைவரும் பிராமணர். புதுமைப்பித்தன் உயர்குல பிள்ளைமார் குலத்தவர். எனவே அவர்கள் எழுத்து சமூகத்தில் காணும் அனுபவத்தின் பார்வையாளராகத் தான் இருக்கும். ஆனால் அவரகள் பேசிய அந்த அவலம் அவர்களது அனுபவத்தில் சேர்ந்ததே. அப்பாற்பட்டதல்ல. அவர்கள் காலத்திய தலித்துகளின் அவல நிலை, அவர்கள் கதை எழுதுவதற்கான வெறும் கதைப் பொருள் மாத்திரமாகவோ அல்லது கோஷ அட்டைகள் தாங்கி அணிவகுத்துச் செல்வதற்கான விஷயமாகவோ மாத்திரம் இருக்கவில்லை

தமிழ் நாட்டின் இடது சாரி, அல்லது திராவிட கழக சித்தாந்திகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் அவர்கள் பேசிய பிரச்சினைகள் வெறும் கோஷங்களாகவே எழுந்து அங்கேயே தங்கிவிட்டன. கழக எழுத்தாளர்களுக்கு பிராமணர்களைச் சாடுவது மாத்திரமே சாதி ஒழிப்பாகியது. சமூக நீதியாகியது. கழகத்தவர்கள் சாதி ஒழிப்பில், சாதி விடுதலையில் தலித்துகளைப் பற்றிய சிந்தனையே இல்லாததால் அவரகள் கணக்கில் அவர்கள் இடம்பெற வில்லை. முற்போக்கு எழுத்தாளர்களின் எழுத்துக்களில் தலித்துகள் இடம் பெற்றால் பாட்டாளிகளின் வர்க்கப் போராட்டத்தில் ஜாதி வேற்றுமைகள் இருந்த இடம் தெரியாது தாமே மறைந்துவிடும் என்ற கொள்கை ஆக்கிரமித்துக் கொண்டது. இது இடது சாரி முற்போக்கு எழுத்தாளர்களுக்கு அவர்களுக்கு வழிகாட்டியாக கட்சி கொடுத்த கொள்கை. தமிழ் வாழ்க்கை கொடுத்த அனுபவம் அல்ல. அவர்கள் எல்லா எழுத்துக்களிலும், முன்னரே வார்க்கப்பட்டது போன்ற சம்பவங்களும் பாத்திரங்களும், அவர்கள் முன் எதிர்ப்படும் போராட்டங்களும் அப்போராட்டங்களை எதிர்கொண்டு பெறப்படும் தீர்வுகளும், கட்சியின் கட்டளையிட்ட கட்டத்தில் அடங்கிய சித்தாந்த வாய்ப்பாடு தந்தவையாக இருக்கும் அதனால் தான் இடது சாரிகள் கட்சி தோன்றிய இந்த கிட்டத்தட்ட 80 வருட கால கட்டத்தில் ஏதும் இலக்கியம் என்று குறிப்பிட்டுச் சொல்லத்தக்க எழுத்து ஏதும் முற்போக்கு எழுத்தாளர்களிடமிருந்து வந்ததில்லை. அவர்களது சித்தாந்தமும் தமிழ் மண்ணில் வேர் கொண்டதுமில்லை. இது தமிழ் நாட்டை மாத்திரம் பொருத்த உண்மையல்ல. இந்திய நாட்டின் பரப்பு முழுதிலுமே இடது சாரிகளைப் பொறுத்த வரையில் அவர்களது சித்தாந்தமும் வேர் கொள்ளவில்லை. அவர்கள் கொடுத்த சித்தாந்தமும் ஏதும் இலக்கியத்தைச் சிருஷ்டித்துக் கொடுத்ததில்லை. அது மட்டுமல்ல. அவர்களது 80 வருடங்களூக்கும் மேலாக நீட்சி கொண்ட அவர்களது அனைத்துத் தரப்பு போராட்டங்களும், பிரசாரங்களும் இந்த சமூகத்தின் ஜாதீய கட்டமைப்பை ஏதும் செய்து விடமுடியவில்லை. கழகங்களின் சாதி ஒழிப்பும், இதே கதியைத் தான் எதிர்கொண்டு வருகிறது. காரணம், அவர்களது சாதி ஒழிப்பு பிராமணர்களைச் சாடுவது என்ற அளவிலேயே நின்றதே ஒழிய சாதி ஒழிப்பு என்ற சிந்தனையே அவர்கள் திட்டத்தில் இருந்ததில்லை. முதலும் முடிவுமாக, பிராமண துவேஷம் தான் சமூக நீதி, சாதி ஒழிப்பு என்றெல்லாம் ஒப்புக்கொள்ளப்படும் கௌரவ போர்வை போர்த்திக்கொண்டது இதில் ஏமாந்தது தலித்துகள். அவர்கள் பிராமணர் அல்லாதார் என்ற கட்டமைப்பில் வாயடைக்கப்பட்டனர், நைச்சியமாக. இதன் விளைவு தலித்துகள் இன்னும் மோசமாக ஏமாற்றப்பட்டனர், மோசமாக அல்ல பயங்கரமான விளைவுகளுக்காளாயினர். எண்ணற்ற சாதி அமைப்புகள் தோன்றி அந்தந்த சாதி ரீதியிலான பலப்படுத்தலும், தங்கள் உரிமை வலியுறுத்தலும் தான் தமிழ் சமூகத்துக்கு கழகத்தின் கொடையும் தொடர்ந்து தரும் பங்களிப்புமாக இருந்து வருகிறது. இதனால் கொடுமைப் படுத்தப் படுவது என்னவோ தலித் மக்கள் தான். இப்போது தலித் சமுகத்தின் மீது பயங்கர வன்முறை பல வடிவங்களில் கட்டவிழ்த்தப்பட்டு வருகிறது. கொலை, குடிசைக்குத் தீவைப்பு இத்யாதி.

அதிலும் சுதந்திரத்திற்குப் பிறகு நூற்றுக் கணக்கில் சாதி கலவரங்கள் வெடித்து, தலித்துகள் வாழும் குடிசைகள் தீக்கிரையாக்கப்படுகின்றன. தலித் குடும்பங்கள், பெண்களும், குழந்தைகளுமாக கொலை செய்யப்படுகின்றன அல்லது தீயில் பொசுக்கப்படுகின்றன.. இக்கலவரங்களில் தலித்துகளை கொடுமைப்படுத்துவது மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக, அரசினால் பட்டியலிடப்பட்டு அரசின் ஆதரவு பெற்ற சாதிகளைச் சேர்ந்த மக்கள் தான். அவர்களூக்கு எதிராக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்க தயங்குகிறது. கழகங்கள் தொடங்கிய சமூக நீதி எனப்பட்டதும் சாதி ஒழிப்பு எனப்பட்டதும், உண்மையிலேயே நீதியும் சாதி ஒழிப்புமாக இருந்திருப்பின், இந்த வன்முறைகள் நாளடைவில் குறைந்து வந்திருக்க வேண்டும். அல்லது அரசு உடன் தலையிட்டு இவற்றுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்திருக்கவேண்டும். ஆனால் உண்மையில் இந்த சாதி ஒழிப்பு எனப்படுவதும், சமூக நீதி எனப்படுவதும் அதன் தொடங்கப் பட்ட தினத்திலிருந்தே, கிட்டத்தட்ட 80 ஆண்டு காலமாக, ஆயிரக்கணக்கில் பிரிவு படுத்தப்பட்டிரு8க்கும் ஜாதிகளுக்கு எதிராக அல்ல, அவையெல்லாவற்றையும் பிராமன்ணல்லாதார் என்ற ஒரே லேபிளில் அணி திரட்டி பிராமணருக்கு எதிராக எழுப்பப்பட்ட துவேஷப் பிரசாரத்தின் முதலும் முடிவுமான நோக்கமே பிராமணரை அவர்கள் இருக்குமிடத்திலிருந்து கீழிறக்கி அதைத் தாம் கைப்பற்றுவது தான். ஆகவே அதன் உண்மையான லக்ஷியத்தில் அவர்கள் வெற்றியடைந்தார்கள் தான். ஆனால் அவர்களின் உரத்த கோஷங்களில் அவர்களுக்கே நம்பிக்கை இல்லாததால் அவை கோஷங்களாகவே நின்றுவிட்டன.. இப்போது தமிழ் சமூகத்தில் சுய ஜாதிப் பற்றும், ஜாதி வேற்றுமையும் முன் எப்போதையும் விட பலமடைந்திருப்பது மட்டுமல்லாமல் வன்முறையிலும் பற்றுக் கொண்டுள்ளது.
. .

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்