(2) – தலித்துகளும் தமிழ் இலக்கியமும்

This entry is part [part not set] of 45 in the series 20110227_Issue

வெங்கட் சாமிநாதன்அன்று தமிழ் பேசும் இடமாக இருந்த காலடி என்னும் இன்றைய கேரள கிராமத்தில் பிறந்த எட்டாம் நூற்றாண்டு ஆதி சங்கரர், தனக்கும் ஒரு சண்டாளனுக்கும் இடையே நேர்ந்த ஒரு சந்திப்பில் நடந்த உரையாடலை அவரது மனிஷா பஞ்சகம் விவரிக்கிறது. காசியில் இருந்த போது சங்கரர் ஹரி காட்டுக்குச் சென்று கொண்டிருக்கிறார். வழியில் ஒரு மயானம் குறுக்கிடுகிறது. அங்கு எதிர்ப்பட்ட ஒரு சண்டாளனை நோக்கி, ”என் வழியை விட்டு ஒதுங்கி நில்” என்று சங்கரர் சொல்கிறார். அதற்கு அந்த சண்டாளன், வேதாந்தத்தையே உலகுக்கு உணர்த்திய சங்கரரை நோக்கிக் கேட்கிறான், “வேதங்களையும் உபநிஷத்துக்களையும் கற்றுணர்ந்து உலகுக்கு போதித்த ஆச்சாரியரே, நீங்கள் விலகி நிற்கச் சொல்வது யாரை? இந்த உடலையா? அல்லது இந்த உடலில் இருக்கும் ஆத்மாவையா? இந்த உடலைத் தான் விலகி இருக்கச் சொல்கிறீர்கள் என்றால், உங்கள் உடலும் என் உடலும், ஒரே மண்ணால் செய்யப்பட்ட பெரிதும் சிறிதுமான, கரியவும் சிவந்ததுமான நிறம் மட்டுமே மாறும் பானகள் போலத்தானே. ஒரே பொருளால் ஆனவை தானே. அப்படியிருக்க ஒரு உடல் இன்னொரு உடலை விலகியிருக்கச் சொல்வது எப்படி? எல்லாமே நீங்களே சொல்லியுள்ள மாயை தானே. அப்படியிருக்க ஒரு மாயை இன்னொரு மாயையை விலகி இருக்கச் சொல்வது எப்படி? மாயையின் ஒரு துண்டு இன்னொரு துண்டை ஏன் விலகச் சொல்லவேண்டும்? நீங்கள் விலகி இருக்கச் சொன்னது இவ்வுடலில் இருக்கும் ஆத்மாவை என்றாலோ, அது உங்களுக்கே தெரியும். ஆத்மா என்று சொல்லப்படுவது ஒன்றே. அது துண்டு துண்டுகளாக பிளவு படாதது. உங்கள் உடலில் இருக்கும் ஆத்மாவும், என் உடலில் இருக்கும் ஆத்மாவும், வெவ்வேறு இடங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரில் தனித்தனியாகக் பிரதிபலிக்கக் காணும் சூரியன் போல, வெவ்வேறு பானைகளில் நிரம்பியிருக்கும் தண்ணீர் போல, நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்திருக்கும் காற்றைப் போல, உங்கள் உடலிலும் என் உடலிலும் உறைந்திருக்கும் ஆத்மாவும் ஒன்றேயல்லவா? பின் எதை எதனிடமிருந்து ஒதுங்கி இருக்கச் சொல்கிறீர்கள், ஆச்சாரியரே?” என்று அந்தச் சண்டாளன் கேட்கவே சங்கரர் பிரமித்துப் போய் வாயடைத்து நின்று விடுகிறார்.

ஒரு சண்டாளன், படிப்பறியாதவன், மயானத்தில் வேலை செய்பவன், பாரததில் க்ஷீணமடைந்துள்ள ஹிந்து மதத்திற்குப் புனர்ஜீவனம் கொடுத்து வேதங்களுக்கும் உபநிஷத்துக்கும் விளக்கம் கொடுத்துள்ள தன்னை, தன்னைப்போன்ற ஒரு ஆசாரியனப் பார்த்து, தான் உலகுக்கு உபதேசித்ததையே தனக்குச் சொல்லிக்காட்டி, இப்படியெல்லாம் உபதேசித்த நீயே இப்போது இப்படிப் பேசுகிறாயே என்று தன்னை திக்கு முக்காடவைத்து விட்ட சம்பவத்தை தானே உலகறிய எழுதியும் வைக்கும் செயல், தன்னை விமர்சிக்கும், தன்னில் ஆழ்ந்து தன்னைத் திரும்பி நோக்கும் செயல் என்று தான் சொல்ல வேண்டும். தன்னையே தனக்குரைத்துக்கொள்ளும் செயல். இதெல்லாம் கட்டி விட்ட வெறும் கதை என்று சொல்பவர்கள் இருக்கக் கூடும். அப்படிச் சொல்பவர்கள், கல்வியறி வில்லாதவனும் தாழ்ந்த குலத்தவனுமான ஒரு சண்டாளன், ஆச்சாரியனான தன்னையே விசாரணக் குட்படுத்திவிட்ட ஒரு சம்பவத்தை, கற்பனை என்று சொல்லித் தட்டிக்கழிக்க முயன்றாலும்,அந்தக் கற்பனைய அவன் ஏன் தான் மேல் சுமத்திக்கொள்ள வேண்டும்? மேலும், இதுகாறும் கடந்து வந்துள்ள 13 நூற்றாண்டுகளாக அதை அழியாது காத்து வந்துள்ள சமூகம் சுய விசாரணயும் திரும்பத் திரும்ப தன்னை புதுப்பித்துக்கொள்ளும் குணம் கொண்டது மான சமூகம் இந்த ஹிந்து சமூகம் என்பதைத் தான் இன்றும் மறையாதிருக்கும் மனிஷா பஞ்சகம் சாட்சியப்படுத்துகிறது. தன் களங்கங்களையும் வெளிப்படுத்திக்கொள்ளும், தன்னை அவ்வப்போது சுய விசாரணை செய்து கொள்ளும் சமூகம் அல்லவா இது!

எந்த பழக்கங்களை, சிந்தனைகளை இந்த விசாரணை கண்டனம் செய்கிறதோ அவை இன்னும் ஜீவித்திருப்பது வாஸ்தவம் தான். ஆனால், இத்தகைய கண்டனங்களும் சுய விமர்சனங்களும் நூற்றாண்டு நூற்றாண்டுகளாக, தத்துவ தரிசிகளாலும் கவிஞர்களாலும், மகான்களாலும் தொடரப்பட்டு வந்துள்ளன. அந்த விசாரணைகள் தத்துவ நூல்களாக, கவிதைகளாக, காப்பியங்களாக, போற்றிப் பாதுகாக்கப்0பட்டு வருகின்றன என்பது மனங்கொள்ள வேண்டிய உண்மையல்லவா? அது அவ்வளவு சுலபமாகப் புறந்தள்ளப்படக்கூடும் ஒன்றல்ல.

தமிழகத்தில் ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரைய இடைப்பட்ட காலத்தில் தோன்றிய ஆழ்வார்களும் ஹிந்து மதத்தை ஜனநாயகப் படுத்த முயன்றார்கள். தெய்வத்தை மக்களுக்கு அருகே கொண்டு வந்தார்கள். மக்கள் தாமறிந்த தம் மொழியிலேயே கடவுளுடன் பேச, தொழ, காதல் செய்ய, அவ்வப்போது கோபித்துக்கொள்ளவும் மிரட்டவும் கற்றுக் கொடுத்தார்கள். சைவ சமய நாயன்மார்கள் போல, ஆழ்வார்களிலும் நாம் அரசர்களையும், வைசியர்களையும், பிராமணர்களை மட்டுமல்ல, தாழ்ந்த சாதியைனராகக் கருதப்பட்ட பாணர்களையும் காண்கிறோம். சைவ நாயன்மாரிடையே காணும் திருநீலகண்ட யாழ்ப்பாணரைப் போல ஆழ்வார்களிடையேயும் ஒரு திருப்பாணாழ்வாரும் இடம் பெற்றுள்ளார். திராவிட வேதமாகச் சிறப்பிக்கப் படும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் மொத்தம் நாலாயிரம் பாசுரங்களில், பெருந்தொகையில் 1296 பாசுரங்கள் பாடியுள்ள நம்மாழ்வார், ஆழ்வார்களிலேயே சிறப்பாகக் போற்றப்படுபவர். தத்துவார்த்த சிந்தனை கொண்டவர். எல்லோரையும் விட அதிக அளவில் பின் வந்த ஆச்சாரியர்களின் வியாக்கியானச் சிறப்புப் பெற்றவர். அந்த நம்மாழ்வாரே தன் பாசுரம் ஒன்றில் தான் தாழ்ந்தோரிலும் தாழ்ந்த ஒரு சண்டாளன், நாராயணனின் நாமத்தைப் பஜித்தாலே போதும் அந்த சண்டாளனுக்கும் அடியவனாகவே தன்னைக் கருதுவதாகச் சொல்கிறார்.

திராவிட வேதமாகப் போற்றப் படும் ஆழ்வார்கள் பாடி அருளியுள்ள நாலாயிரம் பாசுரங்களூம், பெருமாள் கோயில்களில் பிரார்த்தனையின் ஒரு இன்றியாத அங்கமாகப் பாடப்பட்டு வருகின்றன. ஆசாரியர்களிலேயே தன் ஆசார அனுஷடானங்களை கடுமையாகப் பின்பற்றுபவரான, வேதாந்த தேசிகர், பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அவருக்கு வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஆழ்வார்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஸ்தானத்தைப் பற்றி பலத்த சந்தேகங்கள் இருந்தன. அவர்கள் பிறந்த ஜாதியின் காரணமாக, அவர்கள் பூஜிக்கத் தகுந்தவர்களாவார்களா என்ற பலத்த சந்தேகம். அவர் மனதை வாட்டிக்கொண்டிருந்தது. தேசிகர் பிராமணர். அவர் தன் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கும்படி தன் குரு, பெரியவாச்சான் பிள்ளையை அணுகினார். அவர் தம் குருவும் பிராமணர் தான். தன் தினப்படி பூஜைக்கு ஏற்ற ஒரு மூர்த்தியைக் காட்டி அருளவேண்டும் என்று கேட்க, அதற்கு அவர் குரு, “உனக்கு ஏற்ற மூர்த்தி எது எனக் கண்டு கொள்ள, நீயே உன் பூஜை அறைக்குச் சென்று கண்களை இறுக மூடிக்கொண்டு, அங்குள்ள மூர்த்திகளில் ஏதாகிலும் ஒன்றைத் தொடு. உனக்கேற்ற மூர்த்தி உன் விரல்களுக்கிடையில் அகப்படும்” என்று சொல்லி அனுப்பி விடுகிறார். தெய்வமே அவருடன் விளையாடிவிடுகிறது. தன் குரு உபதேசித்தவாறே, வேதாந்த தேசிகர் தன் வீடு சென்று பூஜை அறையில் உள்ள மூர்த்திகளை கண்களை மூடித் தொட்டபோது ஆழ்வார்களிலேயே தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த திருப்பாணாழ்வார் மூர்த்தி தான் அவர் கையில் அகப்பட்டது. வைசியரோ, க்ஷத்திரியரோ கூட இல்லை. திகைத்துப் போன வேதாந்த க்தேசிகர் தன் குருவிடம் நிகழ்ந்ததைச் சொல்ல, குரு, “உன்னை அரித்துக்கொண்டிருந்த சந்தேகத்திற்கு தெய்வமே பதில் தந்துவிட்டதல்லவா? இனி நீ, திருப்பாணாழ்வாரைப் பூஜிப்பது மட்டுமல்ல, அவரது, ”அமலனாதி பிரான்,” என்று தொடங்கும் அவரது பாசுரத்திற்கே உரையெழுதும். அப்போது தான் நீர் செய்த அபசாரங்களுக்கு பெருமாளின் மன்னிப்பு கிடைக்கும். என்றும், கட்டளையிடுகிறார். தன் குருவின் கட்டளைப் படி, தேசிகாச் சாரியாரும் ‘அமலனாதிபிரான் என்று தொடங்கும் பத்துப் பாசுரங்களுக்கும் வியாக்கியானம் எழுதித் தன் குருவிடம் சமர்ப்பிக்கிறார். அது தான் முனிவாகன போகம். என்று கீர்த்தி பெற்றது. இது குருபரம்பரைப் பிரபாவத்தில் சொல்லப்படும் செய்தி.

இதே திருப்பாணாழ்வார் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப் பட்டு, காவிரிக் கரையில் நின்று கொண்டு தன் யாழை மீட்டிக்கொண்டே பெருமாளைப் பாடித் துதித்து வருவதை, பெருமாள் லோகசாரண்ய முனிவரின் கனவில்தோன்றி ”காவிரிக்கரையில் நின்று பாடிக்கொண்டிருக்கும் திருப் பாணாழ்வாரை உம் தோளில் சுமந்து கோவிலுக்கு இட்டு வாரும், யாம் அவர் பாட்டைக் கேட்க ஆவலாயிருக்கிறோம்,” என்று கட்டளையிட்ட கதையும் குரு பரம்பரைப் பிரபாவத்தில் சொல்லப்பட்டுள்ளது தான்.

பதினொன்று பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் நீண்ட காலம் வாழ்ந்த ராமானுஜாச்சாரியாரின் முயற்சியில் தான் மிகப் பெரும் எண்ணிக்கையில் தாழ்த்தப்பட்ட மக்களையும் சேர்த்து எல்லா சாதி மக்களும் வைஷ்ணவர்களாக மாற்றப்பட்டு அவர்களிடையே முன்னர் இருந்த சாதி வேறுபாடுகள் களையப்பட்டு சம அந்தஸ்து பெற்றவராயினர்.

குருபரம்பரைப் பிரபாவம் ராமானுஜர் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்ச்சிகளை வர்ணிக்கிறது. ராமானுஜர் தம் குரு திருக் கோட்டியூர் நம்பி தமக்கு உபதேசித்த திருமந்திரத்தை அவர் ஆணைப்படி ரகசியமாக தனக்குள் வைத்துக்கொள்ளாது, கோயில் கோபுரத்தின் உச்சிக்குச் சென்று கூடியிருக்கும் எல்லாமக்களும் கேட்க அந்த ரகஸ்ய திருமந்திரத்தைச் சொல்ல, திருக்கோட்டியூர் நம்பி, கோபம் கொண்டு, குருவின் ஆணையை மீறிய அபசாரத்திற்கு ராமானுஜன் நரகத்திற்குத் தான் போவார் என்று சபிக்க, அதற்கு ராமானுஜர் ” திருமந்திர உபதேசத்தைக் கேட்ட அத்தனை ஆயிரம் மக்களுக்கும் முக்தி கிடைக்குமாயின், குருவின் ஆணையை மீறியதற்கு தான் ஒருவன் நரகத்திற்குப் போனால் என்ன? அதையே தான் விரும்புவதாகச் சொன்னாராம்.” ராமானுஜரின் வாழ்க்கை முழுதிலுமே இந்த உணர்வு பரவியிருக்கப் பார்க்கிறோம்.

குரு பரம்பரைப் பிரபாவம் இது போன்ற, ராமானுஜர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் பலவற்றைச் சொல்கிறது.
திருக்கச்சி நம்பிகள் செட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர். அவர் பெருமாள் சன்னதியில் பெருமாளின் ஆணைப்படி ஆலவட்டம் வீசும் பணியை மேற்கொண்டவர். தினம் பெருமாளுடன் பேசிக்கொண்டிருந்தவர். இதன் காரணமாகவே நம்பிக்ளின் பாத தூளியை தொட்டுத் தன் உடல் முழுதும் பூசிக்கொள்வதை வழக்கமாகக் கொண்டவன் ஒருவனை நம்பிகள் ”ஏனப்பா இதென்ன செய்கிறாய்?” என்று கேட்க, அதற்கு அந்த எளியவன், “பெருமாளிடம் கேட்டுச் சொல்லுங்கள், தங்கள் பாத தூளியைத் தொட்டுப் பூசிக்கொள்ளும் எனக்கு மோக்ஷம் உண்டா, என்று” என்று கேட்கிறான். நம்பிகளும் பெருமாளிடம் கேட்டு அவனது எண்ணம் நிறைவேறும் என்று உறுதி கூற அந்தச் செய்தி சொல்லப்படுகிறது.

குரு பரம்பரை சொல்லும் இன்னொரு கதை விசேஷமானது. திருக்கச்சி நம்பிகளை தன் வீட்டிற்கு அழைத்து அவருக்கு உணவளித்து, அவர் உண்ட உணவின் மிச்சத்தை உண்பது விசேஷம் என்று எண்ணிய ராமானுஜர் திருக்கச்சி நம்பிகளிடம் தம் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுகிறார். இது வர்ணாசிரம தர்மத்துக்கு விரோதம் என்று நம்பிகள் மறுத்தும், ராமானுஜரின் பிடிவாதத்திற்கு இணங்க,,ராமானுஜர் தன் மனைவியிடம் திருக்கச்சி நம்பிகளுக்கு போஜனம் செய்விக்கச் சொல்லி கோயிலைப் பிரதக்ஷிணம் செய்து திரும்பலாம் என்று செல்கிறார். நம்பிகளுக்கு உணவளித்து அவர் உண்ட இலையை எடுத்தெறிந்து பின் அந்த தோஷ நிவர்த்திக்காக நீராடி, வேறு உடை தரித்து நிற்கிறார் அவர் மனைவி, வீடு திரும்பிய ராமானுஜர் முன். இது ராமானுஜர் தன் பத்னியின் செயலால் வேதனையடைந்த காரணங்களில் ஒன்று.

பெரியநம்பிகள் தன் பத்னியுடன் ராமானுஜர் இல்லத்தில் தங்கியிருக்க, ராமானுஜர் மனைவிக்கு இது சங்கடத்தை உண்டு பண்ணுகிறது. பிராமணர் அல்லாத பெரிய நம்பியின் தேவி கிணற்றிலிருந்து இறைத்த நீர் ராமானுஜர் தேவியின் பாத்திரத்தில் தெளிக்க அது தோஷமடைந்த கோபம் சண்டையில் முடிகிறது. வீடு திரும்பிய ராமானுஜர் என்ன விஷயம் என்று கேட்க ராமானுஜரின் பத்னி தன் [பாத்திரம் தோஷமானதைச் சொல்கிறார். அதுவே ராமானுஜர் தன் மனைவியைத் துறந்து சன்னியாசமாகக் காரணமாகிறது. முன்னர் ஒரு முறை பொறுத் தோம் இனி பொறுப்பதற்கில்லை என்று மனைவியை தன் பிறந்த வீடு போகச் சொல்லி தானும் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

இப்படியான செய்திகள் பல நமக்கு குரு பரம்பரை பிரபாவத்தில் சொல்லப்படுகின்றன. வைஷணவ கோயில்களில் தினசரி ஆராதனையாக, திவ்ய பிரபந்த பாசுரங்கள் பாடப்படுவதும், அரையர் சேவையில் தாழ்த்தப்பட்டோர் வாத்தியங்களான பறை முதலானவை பயன்படுத்தப்படுவதும், முத்துக்குறி போன்ற கிராமிய வடிவங்கள் அரையர் சேவையில் இடம் பெறுவதும்
சமூகத்தில் எழுப்பப்ட்டிருந்த ஜாதி ரீதியான வேலிகளை, அகற்றுவதில் ராமானுஜரின் வைஷ்ணவம் அவர் வாழ்ந்த காலத்திலிருந்தே தன் அணுகலாகக் கொண்டிருந்தது. திவ்ய பிரபந்தத்தை திராவிட வேதமாக்கியதும் அன்றாட ஆராதனையில் பெறச் செய்துள்ளதும் இன்றும் நாம் காண்பது.

சமூக ஏற்றத் தாழ்வுகளையும் அது ஏற்படுத்தியிருந்த கட்டமைப்புகளையும் தம் கண்டனத்திற்கு உள்ளாக்கியதில், மிகக் கடுமையான உரத்த குரலை எழுப்பியது சித்தர்களே. எந்த சமூகத்தை அவர்கள் குற்றம் சாட்டினார்களோ, அந்த சமூகத்திலிருந்து தம்மை விலக்கிக்கொண்டு அந்த சமூகத்தின் குறைகளைக் களைவதே தம் மூச்சாகக் கொண்ட. சித்தர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்தனர். சித்தர்கள் வரிசை ஐந்தாம் நூற்றாண்டு திருமூலரிடமிருந்து தொடங்குகிறது. திருமூலர் தாம் கைலாயத்திலிருந்து தமிழ் செய்ய சிவனால் அனுப்பப் பட்டவராக தம்மைச் சொல்லிக்கொள்கிறார். கைலாயம் என்று அவர் சொலவது இன்றைய கஷ்மீராக இருக்கவேண்டும். கஷ்மீரத்தின் ப்ரத்யாபிக்ஞ சைவத்தின் செல்வாக்கை திருமூலரின் சைவத்தில் காண்கிறார்கள். அவர் தம்மை இடைச் சாதியனராகச் சொல்லிக்கொண்டார். சாதாரண மக்களுடன் அவர் வாழ்ந்தாலும், எந்த ஸ்தாபனப் படுத்தலுக்கும் எதிராக அவர் பேசினாலும், அவரது திருமந்திரப் பாடல் எதுவும் சுலபமாகப் புரிந்து கொள்ளக்கூடியதல்ல. மந்திரம் என்ற பெயருக்கேற்ப அது மந்திரம் போன்று சுருக்கமாகவும் பூடகமாகவுமே தன்னை வெளிப் படுத்திக்கொள்கிறது.

சித்தர் மரபு என்றே அறியப்படும் அவர்கள் எல்லோரும் ஒரே வண்ணம் கொண்டவர்கள் அல்லர். சமூகத்தின் நிரந்தர ஏற்பாடுகளை வெறுத்து ஒதுக்கியவர்கள் என்பதைத் தவிர. சித்தர்கள் பெரும்பாலோர் பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து பதினாறாம் நூற்றாண்டு வரைய காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள்.
இவர்களில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர் சிவவாக்கியர் என்னும் சித்தர். (வேடிக்கையாக சிவ வாக்கியரையும் திருமழிசை ஆழ்வாரையும் ஒருவராகக் கருதுவாரும் உண்டு. ஒருவர் வைஷ்ணவர். மற்றவர் விக்கிரஹ ஆராதனை, கோயில் வழிபாடு, சாதி வேறுபாடு, வேதங்கள், ஆகமங்கள் என அத்தனைக்கும் எதிராக நின்றவர்

மிகக் கடுமையான வார்த்தைகளில் சிவ வாக்கியர் சொல்கிறார்:
\
பறைச்சியாவ தேதடா பனத்தியாவ தேதடா.
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கமிட்டிருக்குதோ?

உடல் உறவில் பறைச்சியும் பார்பனத்தியும் வேறு வேறாகத் தோன்றுவதில்லை. பஞ்ச பூதங்களால் ஆனது தான் இந்த உடம்பும், இந்த பிரபஞ்சம் முழுமையும். எல்லாமே பிளவுபடமுடியாத ஒரு முழுமை, இதில் சாதி என்ற வேர்றுமை எங்கிருந்து வருகிறது? என்று ஒரு சிவ வாக்கியரின் பாடல் ஒன்று கேட்கிறது

சிவ வாக்கியர் பறைச்சியையும் பார்ப்பனத்தியையும் பற்றித்தான் இருவரும் ஒன்றே என்று சொல்கிறார், அவர் தேவரையும், வன்னியரையும் கவுண்டர்களையும் இசை வேளாளரையும் பற்றி எதுவும் சொல்லவில்லை என்பதைக் கவனித்தீர்களா என்று திராவிட கழகங்கள் சார்ந்தோரும், தலித் அரசியல் வாதிகளும் சொல்லக் கூடும்.

சித்தர்களும் சரி, இங்கு பேசப்பட்ட மற்ற பெரியார்களும் சரி, பறைச்சி என்றும் பார்பனத்தி என்றும் பேசுவது உருவகங்களாகத் தான். அவர்கள் எல்லா சாதிகளையும் உள்ளடக்கித் தான் பேசுகிறார்கள். மேலும் அவர்கள் பார்வையில் சாதி மட்டுமே உறுத்தும் ஒன்றாக இருக்கவில்லை. அவர்களது பரந்த சிந்தனையில், எல்லா கொடுமைகளையும் வேறுபாடுகளையும் போலிகளையும் உள்ளடக்கிய பரந்த பார்வையில் இவையும் அடங்கியவை.

மேலும், இங்கு நான் சாதி வேற்றுமையையும் தலித்துகளைப் பற்றியுமான பாடல்களை மாத்திரமே இங்கு பேசப்படும் பொருளுக்கேற்ப நான் தொகுத்துத் தந்தாலும், இம்மாதிரியான குரல்கள் இங்கு பேசப்படும் பெரியார்கள், ஆசாரியார்கள், கவிஞர்கள், சித்த புருஷர்களோடு மாத்திரம் நிற்பதல்ல. தமிழ் இலக்கிய சரித்திரத்தின் இரண்டாயிரம் ஆண்டு கால நீட்சியில் தலித்துகளின் சாதி வேற்றுமைகளின் கொடுமைகளை மாத்திரம் பேசியவர்கள் இல்லை. உதாரணமாக, கடைசியாகப் பேசிய சிவ வாக்கியரையே எடுத்துக்கொள்ளலாமே. .

சிவவாக்கியரின் இன்னொரு மிகவும் பேசப்படும் பாடல், நம்மூர் பிராண்டு பகுத்தறிவுகள் மேற்கோள் காட்டும் பாடலின் முதல் இரண்டு அடிகள்

நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று சொல்லுமந்திரம் ஏதடா

என்று சொல்லி அத்தோடு நிறுத்திக்கொள்வார்கள். அடுத்து வரும் மூன்றாவது அடி,

நட்ட கல்லும் பேசுமோ நாதனுள்ளிருக்கையில். –

அவர்கள் உள்ளிருப்பது நாதனில்லை என்ற காரணத்தால். அவர்கள் மேற்கோள்களில், பிரசாரங்களில் இடம் பெறுவதில்லை.

உண்மையில் பார்க்கப் போனால் சிவவாக்கியர் சாடுவது போலிகளை, பொய்ம்மையை. இன்னொரு இடத்தில் அவர் சொல்கிறார்:

கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே,
கோயிலும் மனத்துளே, குளங்களும் மனத்துளே…….

தமிழ் வரலாற்றின், இலக்கிய வரலாற்றின் நீட்சி முழுதும், சமூக கட்டமைப்பில் புகுந்துள்ள ஏற்றத் தாழ்வுகளையும், சிந்தனையில் அவ்வப்போது படியும் போலிகளையும் பற்றி அவர்கள் கவலை கொண்டனர். அவற்றிற்கு எதிராக தம் குரல் எழுப்பியுள்ளனர் அதில் தலித்துகளும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையினால் இடம் பெற்றனர். அது மிகப் பிரதானமாகத் தெரிவது, அவர்கள் வாழ்க்கையில் சமூகம் இழைக்கும் கொடுமை அதன் ஒரு கோடி எல்லையை, உச்சத்தைத் தொடும் காரணத்தால் தான்.

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்