125 வருட வயதான ஹிண்டு-வுக்கு வாழ்த்துக்கள்

This entry is part [part not set] of 41 in the series 20030904_Issue

மஞ்சுளா நவநீதன்


சுதந்திர இந்தியாவில் ஆங்கில ஏடுகள் இந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறுவதே, காலனியாதிக்கத்தின் எச்ச சொச்சமான நம் மனநிலையின் பிரதிபலிப்பு. ஒரு பொது இணைப்பு மொழி உருவாகாத அளவிற்கு, பல காரணங்களால் நாம் பிளவுண்டு நிற்கிறோம். ஆனால் ஆங்கிலத்தை வழிபடுவதால், ஆங்கிலம் அறியாத 90 சதவீதம் மக்களை நாம் அன்னியப் படுத்துகிறோம். ஆங்கில எழுத்தாளர்கள் இருக்கிறார்கள், ஆங்கில ஏடுகள் வெளியிடுகிறோம் என்று நாம் பெருமைப் படுவதில் அர்த்தமில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஆங்கில ஏடுகளும் , மொழியும் இந்திய உயர்மட்ட வாழ்வின் இணை பிரியாத அங்கமாக ஆகிவிட்டன. ஆங்கிலம் தான் உலக அறிவுக்கு வாசல் என்பது ஓரளவு உண்மை தான் என்றாலும், இந்த ஆங்கில மோகம் பெரும்பாலான மக்களைச் சென்றடைய வேண்டிய கல்விக்குத் தடையாய் இருக்கிறது. எனவே ஆங்கிலப் பத்திரிகைகள் பற்றிய நம் விமர்சனங்கள், நம் பொதுவாழ்விற்கு இவை ந்தப் பங்களிப்பைச் செய்துள்ளன என்பதைப் பொறுத்துத் தான் அமைய முடியும்.

டி ஹிண்டுவுக்கு 125 வயதானதால் டி ஹிண்டு தன்னைத்தானே பாராட்டிக்கொண்டு எழுதிய எடிட்டோரியலைப் படிக்க முடியவில்லை என்னால். தன்னைத்தானே பாராட்டிக்கொள்கிறது என்று மட்டும் தெரிகிறது. எப்படி பாராட்டிக்கொள்கிறது என்றுதான் புரியவில்லை. முர்டாக்கிஸம் என்கிறது, டைம்ஸ் ஆஃப் இந்தியாவை திட்டுகிறது. எடிட்டோரியலை விற்கிறார்கள் என்று குற்றம் சொல்கிறது. இத்தனைக்கும் நடுவில், தி ஹிண்டுவின் முன்னாள் ஆசிரியரை ஒரு வாங்கு வாங்குகிறது (செய்திகளை எல்லாம் எடிட்டோரியலைஸ் பண்ணிவிட்டார்களாம்). அதை இனிமேல் சரி செய்யப்போகிறார்களாம்.

தமிழில்தான் அறிவுஜீவித்தனமாக எழுத முடியுமா ? ஆங்கிலத்திலும் அதற்கு ஒருபடி மேல் சென்று எழுத முடியும் என்று காண்பிப்பதற்கென்றே எழுதப்பட்ட எடிட்டோரியல் இது. இருப்பினும் ஐரனியை தவிர்க்க முடியவில்லை. ( ஹிண்டுவின் ஆங்கில நடை பற்றி : ஆரம்ப இலக்கணங்கள் சரியாக் கையாளப்பட்ட, வறண்ட நடை. அழகற்றது. படிக்க எந்தத் தூண்டுதலும் அளிக்காதது. )

Higher levels of manipulation of news, analysis, and public affairs information to suit the owners ‘ financial and political interests; prejudice and propaganda masquerading as professional journalism; the downgrading and devaluing of editorial functions in some cases; the growing willingness of newspapers in ‘the drive for dominance ‘ to ‘tailor editorial styles to target the space created by… homogenising influences… in segmented markets ‘;

செய்திகளையும் ஆய்வுக்கட்டுரைகளையும் திரித்து வெளியிடுவது, ஆசிரியரின் கருத்துக்களுக்கு ஏற்ப அரசியல் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப செய்திகளை வெட்டுவது ஒட்டுவது, பிரச்சாரத்தை செய்தி ரூபத்தில் தருவது ஆகியவைகளை எல்லாம் தி ஹிண்டு செய்யவில்லை என்று நம்மை நம்பச் சொல்கிறார்கள். சீனா பற்றிய பிரச்சாரம் ( சீனாவின் துண்டுப் பிரசுரங்களை மறு பிரசுரம் செய்ய ஹிண்டு எதற்கு ?), மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்டு கட்சிகள் பண்ணும் அராஜகங்களை வெளிவராமல் பார்த்துக்கொள்வது, திபெத்தில் தேனும் பாலும் பெருக்கெடுத்து ஓடுகிறது என்ற ‘செய்திகள் ‘, முஷாரஃப் உண்மையிலேயே அமைதிவிரும்பி, ஆனால் வாஜ்பாயிதான் வாயில் ரத்தத்தோடு அலைந்து கொண்டிருக்கிறார், இந்தியா பாகிஸ்தானுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் போன்ற உண்மைச் செய்திகள் ஆகியவை தி ஹிண்டுவின் இன்றைய நிலைதாம். ஆனால், 125 வருட தி ஹிண்டு பாரம்பரியம் என்ன சொல்கிறது ?

தமிழ் என்று ஒரு மொழி இந்தியாவில் இருக்கிறது என்பதே தெரியாது என்று சத்தியம் பண்ணக்கூடியவர்கள் தி ஹிண்டுவில் ஆசிரியர் வேலை செய்பவர்கள் என்றுதான் என் கருத்து. இது ஒன்றும் என்னுடைய தனிப்பட்ட கருத்து அல்ல. சும்மா ஒரு வாரத்திய தி ஹிண்டுவை எடுத்து படித்துப் பாருங்கள். tamil என்ற ஒரு வார்த்தை டமில்நாடு என்ற இடத்தில் இல்லாமல் ஒரு இடத்தில் வருகிறதா என்று பாருங்கள். கண்டுபிடிக்க முடியாது. டமில் எழுத்தாளர்கள் பற்றியோ அல்லது டமில் நாவல்கள் பற்றியோ அல்லது டமில் இலக்கிய சூழல் பற்றியோ அல்லது தமிழில் நாடகத்தில், இலக்கியத்தில், இசையில், ஓவியத்தில், கூத்து போன்ற பாரம்பரிய கலைகளில் முன்னணி முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களை பற்றியோ ஒரு வார்த்தை கண்டு பிடிக்க முடியாது. அப்படி இருக்க வேண்டுமென்றால், நீங்கள் அமெரிக்காவில் வாசம் செய்பவராக இருக்கவேண்டும் இல்லையேல் அய்யங்காராக இருக்க வேண்டும், அல்லது நான் தமிழில் எழுதியதே இல்லை என்று சத்தியம் செய்பவராக இருக்கவேண்டும். (லா சு ரங்கராஜன் படத்தைப் போட்டு லா ச ராமாமிர்தம் என்று ஹிண்டுவில் எழுதியிருந்தது பற்றிப் படித்தேன். இரண்டு பேருக்கும் இனிஷியல் எல் எஸ் ஆர் தானே . எல்லாம் பரவாயில்லை என்று ஹிண்டு சொல்லக் கூடும்.)

ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை ஏன் தமிழைப் பற்றி கவலைப்படவேண்டும் என்று கேட்கலாம். வடவர் (அவர் நல்லவரும் அல்லர்! நம்மவரும் அல்லர்! – சொன்னவர் அண்ணா ) நடத்தும் இந்தியன் எக்ஸ்பிரஸில் ஏராளமான தமிழ் இலக்கியம் பற்றி, கலாசாரம் பற்றி கட்டுரைகள் வருகின்றன. தமிழ் எழுத்தாளர்கள் அடிக்கடி இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதுகிறார்கள். அவர்கள் தினமணி என்ற ஒரு சிறப்பான தமிழ்ப் பத்திரிகையை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். நா பார்த்தசாரதி, ஐராவதம் மகாதேவன், ஞாநி, இராம சம்பந்தம் என்று சிறப்பான பணியாளர்கள் பொறுப்பில் இருந்திருக்கிறார்கள். இந்தியா டுடே குழுமம் (மறுபடி வடவர்கள் தான்) இதமிழில் ஒரு பத்திரிகை கொண்டு வருகிறது. ஆனால், சென்னையில் மத்தியில் உட்கார்ந்திருக்கும் தி ஹிண்டு, தமிழ் அய்யங்கார் இனக்குழுவைச் சார்ந்தவர்கள் நடத்தும் தி ஹிண்டு ஏன் ஒரு சிறிய தமிழ்ப் பத்திரிக்கையைக் கூட நடத்த முடியவில்லை ? அல்லது நடத்த விரும்பவில்லை ? அதுவே சொல்வது போன்று 400 கோடி ரூபாய் பெறுமானமான தி ஹிண்டுவை நடத்துபவர்கள், அதில் ஒரு கோடியை வழங்க வேண்டாம், முதலீடு செய்யக் கூட மனதில்லை என்றால் என்ன பொருள் ?

பெங்களூரில் டெக்கான் ஹெரால்ட், கொல்கத்தாவில் ஆனந்தபஜார் பத்ரிகா, மும்பையில் டைம்ஸ் குழுமம் எல்லாமே பிராந்திய மொழிகளின் மீது அக்கறை கொண்டுள்ளன. ஆனால் ஹிண்டு மட்டும் தான் பிராந்திய மொழிகளைப் பற்ற ஆழ்ந்த வெறுப்பும் இளக்காரமும் கொண்டுள்ளது. ஆர் கே நாராயணுக்கு அது தந்த விளம்பரத்தில் நூற்றில் ஒரு பங்கைக் கூட சிவராம காரந்திற்கோ, ஜெயகாந்தனுக்கோ, வைக்கம் முகம்மது பஷீருக்கோ கொடுத்ததில்லை.

தமிழுக்குச் சிறந்த தொண்டாற்றியவர்கள் அய்யங்கார்கள் என்பதில் எனக்கு எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் தி ஹிண்டுவின் அய்யங்கார் கும்பல் அத்தனை தொண்டையும் கேவலப்படுத்திவிட்டார்கள் என்பதுதான் என் வருத்தம்.

திமுக ஆட்சியைப் பிடிக்கும் வரை, திமுக என்ற ஒரு பிராந்தியக் கட்சி இருக்கிறது அல்லது பெரியார் என்ற ஒருவர் சொற்பொழிவாற்றினார் என்ற செய்தியே வராமல் வந்த ஒரே ஆங்கில தினசரி பத்திரிக்கை தி ஹிண்டுதான். தி ஹிண்டுவின் பழைய ஏடுகளை எடுத்துப்பாருங்கள். பெரியாரின் செய்தி அறிக்கைகளோ அல்லது திமுகவின் நிலைப்பாடு பற்றிய செய்தியை கண்டுபிடிக்கவே முடியாது. இவர்கள் 125 வருடம் முடிந்ததற்கு தங்களைத் தாங்களே தட்டிக்கொள்கிறார்கள். வெறும் தி ஹிண்டுவை மட்டுமே படித்து வருபவர்கள் ஒரு நாள் திடாரென்று திமுக கட்சி ஆட்சிகட்டில் ஏறியது என்று ( வேறு வழியில்லாமல்) படித்ததும் தலையை நிச்சயம் பிய்த்துக்கொண்டிருப்பார்கள், யார் இவர்கள் என்று. (கீழ்க்கண்ட செய்திகளுக்கு, தி ஹிண்டு என்ன இடம் எங்கே எப்படி கொடுத்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அது நிச்சயம் சரியாகத்தான் இருக்கும். சங்கராச்சாரியார் மறைவு, பெரியார் மறைவு, குன்றக்குடி அடிகளார் மறைவு)

ஏ என் சிவராமன் பணிபுரிந்த தினமணியும் சரி, இந்தியன் எக்ஸ்பிரசும் சரி, எமர்ஜென்ஸி என்ற ஜனநாயகவிரோத நெருக்கடி நிலையை தீவிரமாக எதிர்த்து எழுதின. தி ஹிண்டு மட்டுமே எமர்ஜென்ஸியை ஆதரித்தது. இதனை ஏன் தன் எடிட்டோரியலில் எழுதி தன்னைத்தானே முதுகில் தட்டிக்கொள்ளவில்லை தி ஹிண்டு ? ஓ அது public affairs information to suit the owners ‘ financial and political interests; வா ? அல்லது what is true, what is democratic and just, what is humane, சமாச்சாரமோ என்னமோ ? எமர்ஜன்ஸியை ஆதரித்தது டெமாக்ரடிக் அண்ட் ஜஸ்ட் அண்ட் ஹ்யூமேன் சமாச்சாரம் என்று தி ஹிண்டு காஞ்ச அய்இலையாவை விட்டு சிறப்புக்கட்டுரை எழுதவைத்து பிரசுரித்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். (இருக்கவே இருக்கிறது தலித் சமாச்சாரம். எமர்ஜன்ஸியின் போது தலித்துகளுக்கு அரசாங்கம் சாப்பாடு போட்டது என்று அய்இலையா கண்டுபிடித்து எழுதினால் தீர்ந்தது பிரச்னை)

the path of uniting people for development and social transformation tasks; இதனை எப்போது தி ஹிண்டு மக்கள் செய்தார்கள் என்று யாரேனும் விளக்கிச் சொன்னால் கேட்டுக்கொள்கிறேன்.

resisting chauvinism and divisiveness in the name of caste, language, ethnicity, river waters, and so on;

மேலே எழுதியதில் ரிலிஜன் வரவில்லை என்பதைக் கவனியுங்கள். ஏனெனில் அதனைத்தானே தி ஹிண்டு செய்கிறது ? ஹிந்துக்கள் மீது வெறுப்பைக் கக்கி எழுதும் கட்டுரைகளும், ஹிந்துக்கள் மீது நடக்கும் பயங்கரவாதச் செயல்களை நியாயப்படுத்தியும், முஸ்லீம் அல்லது கிரிஸ்துவ தேவாலயத்தில் திருட்டு நடந்தால் கூட பாரதிய ஜனதா கட்சியும் இந்துமதமும் பிராம்மணியமுமே காரணம் என்று காஞ்சா அய்லையா, அஸ்கார் அலி என்ஜினியர், கெயில் ஓம்வேத் போன்றவர்களை எழுதச் சொல்லியும் விலாவாரியாக கட்டுரை எழுதச் சொல்லி பிரசுரிப்பதும் செய்வதுதானே தி ஹிண்டு ? பேரையூர் கோவிலில் குழி மாற்றுத் திருவிழாவின் போது டைவர்ஸிட்டியைப் பற்றி கவலையில்லை. அதில் ஜனநாயக விரோதம், மனித உரிமை அழிப்பு எல்லாவற்றையும் கண்டுபிடிக்கும் தி ஹிண்டு, ஷியா முஸ்லீம்கள் ஊர்வலமாகச் சென்று சிறுவர்கள் தங்கள் தலைகளை பிளேடால் அறுத்துக்கொள்வதை கண்டித்து எழுத வேண்டியதுதானே ? அப்படி எழுதினால் ஜனநாயக விரோதம். அதாவது பிராம்மணர்களின் பழக்க வழக்கங்கள் தவிர மற்ற இந்து மதப் பழக்க வழக்கங்களை கேவலமாக காட்டுவது ஜனநாயகக் கடமை. அப்படிப்பட்ட இந்துமதப் பழக்கவழக்கங்கள் மனித உரிமை மறுப்பு இத்யாதி இத்யாதி. முஸ்லீம் கிரிஸ்துவர்களின் அதே போன்ற பழக்க வழக்கங்களைக் கட்டிக் காப்பாற்ற வேண்டியது ஜனநாயகக் கடமை. கொடிகட்டிப் பறக்கிறது சான்றாண்மை. உங்களுக்கு குறள் என்றால் என்னவென்று தெரியாது என்று தெரியும். அதனாலேயே சொல்கிறேன். சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி என்று ஒரு குறள் இருக்கிறது. யாரிடமாவது கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

சாதியத்தை எதிர்த்து எழுதும் ஹிண்டுவினால் பண லாபம் பெற்ற முகவர்கள், மற்றும் நிருபர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்று யாரும் துப்பறிந்து எழுதலாம்.

improving relations with neighbouring countries;

எவ்வாறு அருகாமை நாடுகளுடன் உறவை வளர்ப்பது ? தி ஹிண்டுவிடம்தான் கேட்கவேண்டும். அதனை விட அதன் தலைமைப் பொறுப்பில் உட்கார்ந்திருக்கும் என் ராமிடமே கேட்கலாம். நாம் கேட்க வேண்டியதில்லை. பாகிஸ்தானிய பத்திரிக்கை நிருபர் கேட்கும் கேள்விக்கு என் ராம் பதிலளிக்கிறார்.

http://www.jang.com.pk/thenews/sep2002-weekly/nos-01-09-2002/pol1.htm#9

PE: India blames Pakistan for all the things that went wrong in Pak-India relations. Historically speaking, did India make any mistake ?

NR: India should not have taken advantage of the 1971 situation. Similarly, you can ‘t threaten war under the cover of December 13th. Then this foolish talk of ‘limited strikes ‘-a new doctrine after the Kargil by our very dubious defense minister-a man with a very dubious outlook and approach, highly opportunistic, capable of chauvinism-George Fernandez. The basic idea is you don ‘t go for an all-out conventional conflict. Given India ‘s very strong conventional forces, you are capable of broad incursions on the LoC and seizing territories, not making deep inroads to Pakistan and using it as a bargaining chip.

இந்த பேட்டி வரும்போது என் ராம் ஃப்ரண்ட்லைன் என்ற பத்திரிக்கையின் ஆசிரியர். இப்போது அவர் தி ஹிண்டுவின் ஆசிரியராகவும் ஆகி இருக்கிறார்.

பாகிஸ்தான் இந்திய உறவு இப்படி மோசமாக இருப்பதற்கு இந்தியா எப்போதும் பாகிஸ்தானையே குறை கூறி வந்துள்ளது. இந்தியா ஏதேனும் தவறுகள் செய்ததா என்ற கேள்விக்கு என் ராம் அவர்கள் கீழ் வருமாறு பதில் கூறுகிறார்.

‘இந்தியா 1971 நிலைமையை சாதகமாக பயன்படுத்தியிருக்கக்கூடாது. அதே போல, டிஸம்பர் 13ஆம் தேதியை முன்னிட்டு (அன்று, புது தில்லியில், பாராளுமன்றத்தில் பாகிஸ்தானிய தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது) போருக்குப் போகப்போகிறேன் என்று பாகிஸ்தானை மிரட்டக்கூடாது. ‘

பிறகு இருக்கும் வரிகளை நான் திறம்பட மொழி பெயர்க்கவில்லை. அதனால், ஆங்கில வரிகளை அப்படியே கொடுத்துள்ளேன். முக்கியமாக ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் பற்றி, பாகிஸ்தான் மண்ணில் என் ராம் கக்கியிருக்கும் விஷத்தைக் கவனியுங்கள். காரணம் , சீனா பற்றி உண்மையை அவர் கூறியிருந்தது தான்.

எந்த நிலைமையை இந்தியா சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது என்பதை என் ராம் குறிப்பிடவில்லை. பாகிஸ்தானிய ராணுவம் பங்களா தேஷில் நடத்திய வெறியாட்டம் தான் அது.

இதைப் படித்து எனக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. 1971இல் சுமார் 10 லட்சத்திலிருந்து 30 லட்சம் வரைக்கும் ஆயுதமேந்தாத மனிதர்கள் பாகிஸ்தானிய ராணுவத்தால் கொல்லப்பட்டார்கள். http://www.thinnai.com/pl0525024.html.

இவர்களில் பெரும்பாலோனோர் இந்துக்கள் என்பது இரண்டாவது பட்சமான விஷயமாக இருக்கட்டும். இவர்கள் மனிதர்கள் தானே ? பாகிஸ்தானிய ராணுவத்தின் மிக உயர்ந்த பதவியிலிருந்து இந்துக்களை முக்கியமாகக் கொல்ல ஆணைகள் பிறப்பிக்கப்பட்டது என்பது அமெரிக்கா கொஞ்சம் நஞ்சம் வெளியிட்டிருக்கும் ரகசிய ஆவணங்களிலேயே தெரிகிறது. இன்னும் பிரிட்டிஷ் அரசாங்கம் வெளியிட்டிருக்கும் ஆவணங்களிலும் இருக்கிறது. ஆதாரம் கொஞ்சம் தேடினால் கிடைக்கும். ஆனால், இந்த விஷயம், இந்தியாவில் யாராலும் பேசப்படவில்லை. பேசக்கூடிய பெரும் ஆங்கிலப் பத்திரிக்கைகளான இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ், டெலிகிராஃப் போன்ற பத்திரிக்கைகள் எந்தக் காரணத்தாலோ இதனைப் பேசாமல் விட்டு விட்டன. கிஸ்ஸிஞ்சர் பற்றி ஹிட்சின்ஸன் எழுதிய புத்தகத்தில் இது பற்றி இருக்கும் பக்கங்களை மிகுந்த வருத்தத்துடன் படித்திருந்தேன்.

அப்பாவியான மனிதர்கள் கொல்லப்பட்டால் அதனைத் தடுக்கக் குரல் கொடுக்க வேண்டியது, ‘தேசங்களைக் கடந்த ‘ அல்லது ‘தேசம் என்னும் கருத்துருவாக்கத்தை ஒப்புக்கொள்ளாத ‘ அறிவுஜீவிகளின் கடமை அல்லவா ? அதனைத்தானே, நீங்களும் உங்கள் நண்பரான அருந்ததி ராயும் பாகிஸ்தானில் பேசினீர்கள் ? காஷ்மீரப் பிரச்னையை இரண்டு தேசங்களும் உள்நாட்டில் இருக்கும் பிரச்னைகளை மக்கள் பேசாமல் இருக்க உபயோகப்படுத்துகின்றன என்று சொன்னீர்கள். ஆக பாகிஸ்தானும் இந்தியாவும் ஒன்று. இரண்டுமே தவறு செய்கின்றன. அருந்ததி ராய் அவர்களுக்கு எந்த பத்திரிக்கையின் க்ரடிபிளிட்டியையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் கிடையாது. அவர் இஷ்டம் போல பேசலாம். ஆனால் உங்கள் நிலை என்ன ? ராணுவச் சர்வாதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக காஷ்மீர் பிரச்னையை பிடித்துக்கொண்டு தொங்கும் பாகிஸ்தானிய எஸ்டாபிளிஷ்மெண்டும், ஐந்து வருடத்துக்கு ஒருமுறை புதிய கட்சி புதிய அரசாங்கத்தைக் கொண்டு வந்திருக்கும் இந்திய எஸ்டாபிளிஸ்மெண்டும் ஒன்றா ? மொரார்ஜி தேசாயும், இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும், தேவ கவுடாவும், ஐ கே குஜ்ராலும் காஷ்மீர் பிரச்னையை பெரிது படுத்தி தங்கள் ஆட்சியை நிலை நிறுத்திக்கொள்ள முயன்றார்களா ? இந்திய அரசியல் தலைவர்கள் எல்லோரையும் -அவர்கள் வேறு எந்த விதத்தில் மோசமாய் இருந்தாலும்- பாகிஸ்தானிய, சீன ராணுவ சர்வாதிகாரிகளுக்கு ஒப்பிட முடியுமா ? அப்படி ஒப்பிட்டு ஒரு பாகிஸ்தானிய சர்வாதிகாரிகளை விட கேவலமானவர்களாக இந்திய அரசியல்வாதிகளை சித்தரித்து அருந்ததிராய், பிரபுல் பித்வாய் போன்றவர்கள் எழுதலாம். கருத்து சுதந்திரத்தை முன்னிட்டு அவர்களுக்கும் பத்திரிக்கைகள் இடமும் கொடுக்கலாம். 400 கோடி பெருமானமுள்ள ஒரு பெரும் பத்திரிக்கையின் ஆசிரியராகப் பொறுப்பேற்கும் ராம் அப்படிப்பட்ட கருத்தை கொண்டிருப்பது இந்திய ஜனநாயகத்துக்கே ஆபத்து.

சரி நீங்களே விளக்குங்கள். இந்தியா 1971 நிலைமையை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது என்று கூறுகிறீர்கள். அது எப்படி ? யாருக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது ? இந்தியாவுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டதா ? 1 கோடி அகதிகள் இந்தியாவுக்கு வந்திருந்தார்கள். அவர்களை என்ன செய்திருக்க வேண்டும் ? கிழக்குப் பாகிஸ்தானான பங்களாதேஷ் பிரதேசத்தில் 30 லட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ராணுவமே குறிவைத்து அப்பாவிகளை கொன்று கொண்டிருக்கிறது. இந்தியா கையைக் கட்டிக்கொண்டு அவர்களது உள்நாட்டுப் பிரச்னை என்று பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமா ? (என்ன ஆச்சரியம் – அந்த சமயத்தில் மார்க்ஸிஸ்ட் கட்சியும் இதே தான் சொன்னது – உள்நாட்டுப் பிரசினை இதில் நாம் தலையிடக் கூடாது என்று.)நீங்கள் சொன்னதை சற்றுத் தெளிவாகச் சொல்லுங்கள். இந்தியாவுக்கு கிழக்குப் பாகிஸ்தானான கிழக்கு வங்கத்தில் ஒரு பெரும் இனப்படுகொலையே நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரிகிறது. அதுவும் வெறும் 3 மாதங்களுக்குள்ளாக 30 லட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதன் ஆவணங்கள் உலகெங்கும் இருக்கின்றன. ஏராளமான புத்தகங்கள் இந்திய சார்பற்றவர்களால் எழுதப்பட்டிருக்கின்றன.

அப்போது இந்தியா என்ன செய்திருக்கவேண்டும் ? பாகிஸ்தானுடன் ஆக்ரா பேச்சு வார்த்தை நடத்தியிருக்க வேண்டுமா ? அல்லது லாகூருக்கு பஸ்ஸில் இந்திரா காந்தி சென்று நல்லுறவுப் பாலத்தை உருவாக்கியிருக்க வேண்டுமா ? என்ன செய்திருக்கவேண்டும் ? அந்த சூழ்நிலை உருவாகாமல் பாகிஸ்தான் நடந்து கொண்டிருக்க வேண்டும் என்று இவர் சொஇல்லவில்லை. அப்படி வெறியாட்டம் ஆடியவர்கள் மீது ஒரு பிசாத்து விசாரணை கூட நடக்கவில்லை என்று என் ராம் சொல்லவில்லை. ஒரு ஆள் கூட , மனித குலத்திற்கு எதிரான அந்தக் குற்றத்திற்காக தண்டனை அடையவில்லையே என்று என் ராம் வருத்தம் தெரிவிக்கவில்லை. ஆனால் இந்தியா அதை ‘பயன் படுத்திக் கொண்டிருக்கக் கூடாது ‘ என்று சொல்கிறார். அப்படிப் பயன் படுத்திக் கொண்டிராவிட்டால் இன்னும் ஒரு கோடி மனிதர்கள் அகதிகளாய் கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு வந்திருப்பார்கள். இன்னும் பத்து லட்சம் பேர் பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப் பட்டிருப்பார்கள் . அதனால் என்ன ?

சில மாதங்களுக்கு முன்னர் லியனார்ட் லெப்போட் என்ற என்.பி.ஆர் டாக்ஷோ பேச்சாளருடன் ஒரு கிளிண்டன் அனுதாபி பேசினார். கிளிண்டன் அனுதாபி, தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஜனாதிபதி என்ற பெயரில் கிளிண்டன் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருந்தார். லியனார்ட் ஒரு லிபரல் என்று உலகத்துக்கே தெரியும். அவர் சக லிபரலான கிளிண்டனை கிழி கிழி என்று கிழித்தார். காரணம் என்ன ? சுமார் 9 லட்சம் ர்வாண்டா மக்கள் இறந்ததை வேடிக்கைப் பார்த்ததற்காக. கிளிண்டனின் சாதனைகளாக என்னென்னவோ இருந்தாலும், அவரது ஜனாதிபதி பதவிக்காலத்தில் தடுத்திருக்கக்கூடிய ஒரு இனப்படுகொலையை தடுக்காமல் வேடிக்கைப் பார்த்ததற்காக கிளிண்டனின் ஜனாதிபதி பதவியே கறை பட்டது என்று குறிப்பிட்டார். கிளிண்டன் அனுதாபி வேறு வழியின்றி, உண்மைதான் என்று ஒத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

இந்திரா காந்தி அதனை விட தீவிரமான ஒரு இனப்படுகொலையை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இன்னும் பல லட்சம் மக்கள் அங்கு அழிய விட்டிருக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா ?

இது போன்ற கருத்துக்களை வெளியிட்டிருக்கின்ற என் ராம், தி ஹிண்டுவின் தலைமைப் பீடத்தில் எப்படிப்பட்ட பிரச்சாரத்தை, யாருக்காகச் செய்யப்போகிறார் என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

சரி, தி ஹிண்டுவின் அறிவுஜீவிக்கட்டுரைக்கு மீண்டும் செல்வோம்.

arguing for democracy, rationality, science, and education;

ஜனநாயகம் இருக்கும் இந்தியாவில் ஏன் ஜனநாயகத்தைக் கோரவேண்டும் என்று அப்பாவியாக நீங்கள் கேட்டால் இந்தியாவில் எங்கெல்லாம் ஜனநாயகம் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது என்று விலாவாரியாக பதில் வரும். பேரையூர் குழிமாற்றுத் திருவிழா, இந்துக்கோவில்களில் கடா பலிகொடுத்தல் போன்ற ஜனநாயக விரோத விஷயங்கள் விலாவாரியாக பட்டியலிடப்படும். ஆனால், பாகிஸ்தானிலோ, சீனாவிலோ, திபெத்திலோ ஜனநாயகம் பற்றி மூச்… விடக்கூடாது. அப்படி ஏதேனும் எக்குத்தப்பாகக் கேட்டுவிட்டால், முகத்தில் அடிக்கவென்றே, வட கொரியா சர்வாதிகாரியை காந்தியோடு ஒப்பிட்டு ஒரு கட்டுரை, பாகிஸ்தானிய ஜனநாயக ராணுவ சர்வாதிகாரி கொடுத்த ஆப்பிள் ஜூஸ், திபெத் ஜனநாயகத்தில் முங்கி முங்கி குளிக்கும் பெளத்த கன்யாஸ்திரிகள் போன்றோர் பற்றி பாராட்டுக்கட்டுரைகள் வெளிவரும் ஜாக்கிரதை.

It is the social responsibility of a serious newspaper constantly to remind political leaders that the politics of hate, bigotry, communalism, and chauvinism is guaranteed to produce a vicious cycle featuring violence, tension, and instability in society.

அத்தோடு கூடவே. அதிகம் விற்கும் பத்திரிக்கையின் பொறுப்பு, அப்படிப்பட்ட கண்மூடித்தனமான வெறுப்பு, வகுப்புவாதம் போன்றவற்றை இனக்குழுக்களிடையே வளர்க்காமல் இருப்பதும், வன்முறையை நியாயப்படுத்தாமல் இருப்பதும், அவ்வாறு வன்முறையை நியாயப்படுத்துவதன் மூலம் இன்னும் அதிகமான வன்முறைக்கு மக்களைத் தூண்டாமல் இருப்பதும் ஆகும். மும்பை வெடிகுண்டுகளைப் பற்றி வந்த தலையங்கத்தை எடுத்துப் பாருங்கள். தி ஹிண்டுவால் வன்முறை நியாயப்படுத்தப்படுகிறது. (இந்துக்கள் பங்களாதேசுக்கு எதிராக, கொன்று குவித்த பாகிஸ்தானுக்கு எதிராக பயங்கரவாதச் செயல்களை ஏன் செய்யவில்லை என்று யோசித்துப் பார்க்கலாம்)

இந்தியாவில் எந்த ஒரு வன்முறை நடந்தாலும் அதனை கண்டித்து, அதற்கு நியாயம் வழங்க சட்டரீதியான வழிமுறைகள் இருக்கின்றன என்று மக்களுக்கு உறுதி அளித்து, அப்படிப்பட்ட சட்டரீதியான வழிமுறைகளுக்கு அரசியல்வாதிகளையும் மக்களையும் அழைத்துச் செல்வதுதான் ஒரு நல்ல பத்திரிகையின் அடையாளமாக இருக்க முடியும்.

இந்த அளவுகோல்களை வைத்துப் பார்க்கும்போது தமிழில் வரும் சிறு பத்திரிகைகள் செய்துள்ள அளவு கூட ஹிண்டு எதுவும் செய்யவில்லை என்பது தான் என் கருத்து.

தமிழ் நாட்டில் ஆங்கில மோகத்திற்கு அடிகோலி வளர்த்து வருவது, தமிழ் மொழி மீதும் எழுத்தாளர்கள், இலக்கியகர்த்தாக்கள் மீதும் இளக்காரம், மிக அப்பட்டமான இந்திய எதிர்ப்பு, சீன பாகிஸ்தான் ஸ்ரீலங்கா வின் அரசாங்க நிலைபாடுகளை அப்படியே எதிரொலித்து அங்கே கேட்கும் ஜனநாயகக் குரல்களை இருட்டடிப்புச் செய்வது, மார்க்ஸிஸ்ட் கட்சியின் ஊது குழலாகச் செயல்படுவது, தலித் பாரம்பரியம் தெரியாத காஞ்சா அய்லய்யா, இந்து-இந்திய பாரம்பரியம் தெரியாத கெயில் ஓம்வெத் போன்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து , இந்துமதத்தின் உள்ளே இருக்கும் பரந்த அறிவார்ந்த சமத்துவக் கருத்துகளையும், ஆளுமைகளையும் இருட்டடிப்புச் செய்வது, பாகிஸ்தான் , சீனா போன்ற சர்வாதிகார ஆட்சிகளையும் அவற்றின் ஆட்சியாளர்களையும் கண்டிக்காமல், அவர்களைப் பாராட்டி எழுதுவதன் மூலம் ஜனநாயகம் பற்றிய எதிர்மறைக் கருத்துகளை உருவாக்குவது என்று ஹிண்டு செய்த, செய்ய மறந்த/மறுத்த காரியங்களை பெரும் குற்றப் பத்திரிகையாய் முன் வைக்கலாம்.

நாளை தி ஹிண்டு மூடப்பட்டால் அது தமிழ்நாட்டிற்கு, ஆங்கில மோகம் பிடித்து அலையும் , சொந்த வீட்டில் மனைவி மக்களிடம் கூட ஆங்கிலம் பேசும் மத்தியதர வர்க்கத்திற்கு, தமிழில் படிப்பதைக் கேவலமாய் எண்ணும் அறிவுஜீவிகளுக்கு ஒரு விடிவு காலம் ஆகும். ஒரு துளி கண்ணீர் கூடச் செலவழிக்க வேண்டாத நன்னாளாய் அது இருக்கும்.

****

manjulanavaneedhan@yahoo.com

***

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்