11.04.2010 அன்று நடைபெற்ற கம்பன் மகளிரணி விழா வருணனை

This entry is part [part not set] of 28 in the series 20100418_Issue

புதுவை எழில்


மங்கையர் உள்ளங்களில் எல்லாம் பொங்கும் பூம்புனலாய் மகிழ்ச்சி வெள்ளம்!
இருக்காதா பின்னே! பரி நகரின் புற நகராம் கார்ழ் லே கொநேசு (Garges-lès- Gonesse) நகரில்
11.04.2010 ஞாயிறு அன்று பிற்பகல் 3 மணி அளவில் தொடங்கிய பிரான்சு கம்பன் மகளிரணி விழா
மிகச் சிறப்பாக நடைபெற்றதே! விவரங்கள் வேண்டுமா? இதோ!

இந்தியத் தூதரக அதிகாரி திரு நாராயணன் அவர்தம் துணைவியார் திருமதி பிரியா நாராயணன்,
தலைமை தாங்க வந்த திருமதி லலிதா பத்ரிநாத் (தலை சிறந்த சமூகச் சேவையாளர்)… எனப் பலரும்
சரியாக 3 மணி அளவில் வந்து இறங்கினர். வரவேற்பு, நலம் விசாரிப்புக்குப் .. பிறகு
நாராயணன் இணையர் மங்கல விளக்குக்கு ஓளி ஊட்ட, விழா களை கட்டியது.
பிரான்சு கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி பாரதிதாசன் இறைவேட்டலைப் பாடினார்.
அடுத்து, . ஆடை கட்டிய நிலவொன்று மேடையிலே தோன்றியது!
தமிழ்த் தாய் வாழ்த்து பாடியது.தேனாறு அவையிலே ஓடியது!
பாவேந்தர் பாடல் வரிகளை மென்று விழுங்காமல்
கனியனைய குரலெடுத்து அழகாக ஒலித்துப் பாடிய தேவதைக்குப் பெயர்
செல்வி சக்தி பார்த்தசாரதி. மிக இளம் வயது ஆனாலும் வளமான குரல்!
பின், மகளிரணித் தலைவி திருமதி இராசேசுவரி சிமோன் அனைவரையும் வரவேற்றார்.
மகளிரணி தொடங்குக என வித்திட்டு
அதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துவரும் கவிஞர் கி. பாரதிதாசன்,
மகளிரணிக்கு எனத் தனி வலைப் பூவொன்று அழகாக அமைத்துத் தந்து
அதன் தொழிநுட்பப் பொறுப்பையும் ஏற்றிருக்கும் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ என
இருவருக்கும் தன் நன்றிகளைத் தெரிவித்த போது அவை, கை தட்டி ஆரவ்ரித்தது.
நிகழ்சிகளைத் தொகுத்துத் தரும் பணியை ஏற்றவர் திருமதி பிரபா அசோகன்.
இவர் மேடை ஏறுவது இதுதான் முதல் முறை! என்றாலும் இவர் தொகுத்துத் தந்த சிறப்பும்
அவப்போது வெடிக்கும் பட்டாசாய் அவர் அடித்த துணுக்கு வெடிகளும் பலே!

செல்விகள் சார்ச ரவீந்திரநாதன், கிளமேன்சி இரமேசு, சான்சி இரமேசு மூவரும் அழகிய நடனம் தந்தனர்.
தலைமை தாங்கிய திருமதி லலிதா பத்ரிநாத் மகளிரணிக்குத் தன் பாராட்டுகளைத் தெரிவித்துகொண்டார்.
ஊனமுற்றவர்களுக்குத் தான் செய்துவரும் தொண்டுகள் பற்றிக் குறிப்பிட்டார். ஆன்மீகச் செம்மல் அரவிந்தர் பற்றி
வெண்பா நலம் கனியக் கனிய வெண்பா பாடிய பெண்பால் புலவர் திருமதி அருணா செல்வம், முழு நீள நாவல்கள்,
பலப்பலச் சிறு கதைகள்…மரபுப் பாடல்கள் என எழுதிக் குவிக்கும் படைப்பாளி. தொடர்ந்து, திருமதி சில்பா பாலகிருட்டிணன்
பரத நாட்டிய நடனங்கள் வழங்கித் தம் கலை நயத்தால் அனைவரையும் கவர்ந்தார்.

மகளிரணித் தலைவி திருமதி இராசேசுவரி சிமோன் நடுவராய் அமர மகளிர் சிலர்
சொற்போர் அரங்கத்துக்குப் போர் முரசு கொட்டினர். ‘இன்று வரை ஆணாதிக்கம் தொடர்வது
பெண்களால்தான்’ எனப் பெண்களைச் சாடிக் குட்டிக் கதைகள் சில கூறி அமர்ந்தவர் திருமதி ஆதிலட்சுமி வேணுகோபால்.
ஒலிவாங்கியை அடுத்துப் பிடித்த திருமதி கோமதி அரி, ‘ஆணாதிக்கம் தொடர்வது ஆண்களால்தான்’ என்று நகையும் சுவையுமாக
ஆண்களைத் தாளித்துக் கொட்ட அவையில் இருந்த (அடியேன் உட்பட) ஆண்கள் அத்தனை பெரும் கப்சிப் ஆயினர்!
ஆணாதிக்கம் தொடர்வது பெண்களாலும் இல்லை ஆண்களாலும் இல்லை, சமூகத்தால்தான் என்று
ஆராய்ச்சி பூர்வமாக விளக்கிய திருமதி சுகுணா சமரசம் பேச்சை கேட்டு மக்கள் மலைத்துப் போனார்கள்.
திருமதி லினோதினி சண்முகநாதன் ஒரு படி மேலே போய், சிலப்பதிகாரத்தில் பல மேற்கோள்கள் காட்டி,
ஆணாதிக்கம் தொடர்வது இலக்கியத்தால்தான் என்று (அடிக்காத குறையாகப்) பேசி முடித்தார்!
இறுதியாகப் பேச வந்த திருமதி தனசெல்வி தம்பி, ”எல்லாமே மாயை அதிலும் ஆணாதிக்கம் என்பது வெறும் பெரும மாயைதான்”
என்று உரத்துக் கூறியபோது ஏகப்பட்ட வரவேற்பு – வேறு யாரிடமிருந்து ? எல்லாம் ஆண் மக்களிடமிருந்துதான்!
கடைசியாக, ‘இனியேனும் ஆணாதிக்கத்தைக் குறைக்க முயல்வோம்’ என்று ஒரு வரியில் தன் தீர்ப்பை எழுதினர் மகளிரணித் தலைவியும்
நடுவருமான திருமதி இராசேசுவரி சிமோன். இதில் ஒரு வேடிக்கை : இதில் பங்கு கொண்ட பெண்கள் பலரும், தத்தம் கணவர்கள்
தமக்கு உறுதுணையாக இருப்பதாக அறிக்கை இட்டதுதான்.

செல்வி முத்து லிசா செயசிறீ, செல்வன் ச்தாலன் அசுவின் என்ற சிறுசுகள் இருவர் பிசிறில்லாத வயலின் இசையை வாரி வழங்கினர்.
நம் இளைய தலைமுறையிடம் மறைந்து கிடக்கும் கலை ஆற்றலை என்னென்பது!

திருமதி சரோசா தேவராசு, திருமதி பூங்குழலி பெருமாள் & குழுவினர் அளித்த வில்லுப் பாட்டு மகளிரணி விழா மகுடத்தில் பதித்த வைரம்!
குடும்பம் ஒரு கோவில் என்ற தலைப்பில் மல்லுக் கட்டிய வில்லுப்பாட்டில் வந்து விழுந்த கருத்துக் கொட்டும் சொற்கட்டும் பலவகை மெட்டும்…
அடடா அந்த வானத்தையே எட்டும்! எழுதியவருக்கும் (திருமதி சரோசா தேவராசு) பாடியவர்களுக்கும் பக்காவாகப் பக்க வாத்தியம் வாசித்தவர்களுக்கும் பாராட்டுகள்.

மோ நகரப் பூக்கள் கழகக் கண்மணிகள் டிக் சந்தியா, ராசி, செல்வதாரிணி, சக்ரசு டெரோட்டா, பிரிதா டெரோட்டா அளித்த
கண்ணுக்கினிய கோலாட்ட நடனம் அனைவரையும் கவர்ந்தது.

முத்தாய்ப்பாக நடைபெற்ற வினாடி வினா போட்டி, முத்தான நிகழ்ச்சியாகவும் அமைந்திருந்தது.
வினாக்களையும் விடைகளையும் தயார் செய்திருந்தவர் திருமதி லூசியா லெபோ. அவரோடு சேர்ந்து திருமதி பிரபா அசோகன் கேள்விகளைப் பகிர்ந்துகொண்டு கேட்க, பங்கெடுக்க வந்திருந்த மகளிர் பத்துப் பேர் உற்சாகமாகப் பதில் தந்தனர். திருமதி லூசியா லெபோ சில பல துணைக் கேள்விகளைக்; கேட்டு மேலதிகத் தகவல்களைத் தந்தது சிறப்பாக இருந்தது..

பங்கெடுத்த அனைவருக்கும் பொனாடை, பரிசுகள் வழங்கி மகிழ்ந்தது மகளிரணி. வந்தவர்களுக்குச சுவையான சிற்றுண்டி வழங்கும் பொறுப்பை ஏற்றுச் சிறப்பாகச் செயல் பட்ட திருமதி குணசுந்தரி பாரதிதாசன் பாராட்டுக்கு உரியவர். இடையே, பிரான்சு கம்பன் கழகத்தின் பொதுச் செயலர் செவாலியே யூபர்ட் சிமோன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் கையாலேயே கேக்கை வெட்டிப் பரிமாறிய நிகழ்ச்சியும் சிறப்பாக நிறைவேறியது. இறுதியாகத் திருமதி ஆதிலட்சுமி வேணுகோபால் நன்றி உரை கூற பிரான்சு மகளிரணி விழா இனிதே நிறைவுற்றது.

முதல் நிகழ்ச்சியைச சிறப்பாகத் தயாரித்து நல்ல படி நடத்திய பிரான்சு கம்பன் மகளிரணிக்கு ஒ போடுவோம்!
(பின்னாடி நின்று ஆதரவு கொடுத்தது ஆண்களாகிய நாமாக இருந்தாலும்!)
– நேரடி வருணனை , படங்கள் : ‘புதுவை எழில்’ – பிரான்சு.










Series Navigation