சானக ரூபசிங்க தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
மனித உரிமைகள் சம்பந்தமாக சர்வதேச தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக ஏற்பாடு செய்திருந்த இளைஞர்களின் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கடந்தமாதம் எனக்குக் கிடைத்தது. இந்த நிகழ்ச்சிக்காக இலங்கையர்களோடு பிரான்ஸ், பிலிப்பைன்ஸ், மியன்மார், நேபாளம், இந்தியா மற்றும் மொங்கோலியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் இளைஞர்கள் வந்து கலந்துகொண்டிருந்தார்கள். நாங்கள் குழுக்களாகவும் தனித்தனியாகவும் பிரிந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேசங்களில் கணக்கெடுப்புக்களில் ஈடுபட்டோம். எனது வாழ்நாளில் ஒருபோதும் பாதம் பதித்திராத மன்னார் பிரதேசத்தோடு அதன் சுற்றுப் புறக் கிராமங்கள் சிலவற்றில் கணக்கெடுப்புக்களில் ஈடுபடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கொழும்பிலிருந்து கண்டிக்குச் சென்று ஒரு கிழமையின் பின்னர் மீண்டும் சந்திக்கும் எதிர்பார்ப்போடு கண்டியில் வைத்து நாங்கள் பிரிந்து சென்றோம். பதின்மூன்றாம் திகதி முற்பகலில் கண்டியிலிருந்து புறப்பட்ட நாங்கள் மிகிந்தலை, மடுப்பள்ளியைத் தரிசித்தபடி மன்னாரை அண்மிக்கும் போது மாலையாகி விட்டிருந்தது. அடுத்த நாள் காலை நெற்களஞ்சியப் பிரதேசங்களை நோக்கிப் புறப்பட்டோம். அன்றிலிருந்துதான் நெற்களஞ்சியப் பிரதேசங்களில் ஐந்துநாட்கள் ஆரம்பமாகிறது.
.
மன்னாரிலிருந்து பூநகரி நோக்கிச் செல்லும் பாதையில் முன்னேறிச் செல்லும்போது யுத்தத்தினால் உண்டான கஷ்டங்கள், துயரங்கள் விரக்தி என்பன கொஞ்சம் கொஞ்சமாக எனக்குள் தோன்றுவதற்கும் உணர்வதற்கும் தலைப்பட்டன. விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் யுத்தகாலத்தில் கட்டப்பட்ட உறுதியான மண் மதில்களைத் தாண்டிச் சென்று நெற்களஞ்சியப் பிரதேசங்களுக்குள் பிரவேசித்தேன். இந்தக் கட்டுரையை பயண ஆரம்பத்தில் அனுபவித்த துயர்மிக்க அனுபவமொன்றினைக் கொண்டு ஆரம்பிக்க நினைக்கிறேன். அந் நாட்களில் நடைபெற்றுக் கொண்டிருந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை எழுதிவிட்டு திரும்ப வீடு நோக்கி, மரம் செடி கொடியேதுமற்ற மணல் வீதியின் நெடுகே தகிக்கும் கடுமையான வெயிலில் வெந்து வெந்து, சுமார் பதினெட்டு கிலோமீற்றர்கள் நடந்தே சென்று கொண்டிருந்த நான்கு சிறுமிகளை அன்று நான் சந்தித்தேன். அவர்கள் பரீட்சைக்காக வந்திருந்ததுவும் அவ்வாறேதான்.
நான் அறிந்திராத பிரதேசமொன்றில், தெரியாத மொழி பேசும், முன்னெப்போதும் அறிந்திராத மக்களுடன் கழித்த முதல் நாளிலேயே வேறொரு நாடொன்றில் இருப்பதைப் போன்ற உணர்வை உணர்ந்தேன். எனினும் இரண்டு நாட்கள் கழிந்த பிற்பாடு அப் பிரதேச மக்களுடன் நெருக்கமாகிவிட என்னால் முடிந்தது. அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவுண்டேன். அவர்களது அன்றாட வேலைகளில் ஒத்தாசை புரிந்தேன். சிறு குழந்தைகளுடன் விளையாடினேன். அவர்களுக்கு சிற்சில விடயங்களைக் கற்றுக் கொடுத்தேன். அதற்கிடையில் அவர்களது பிரச்சினைகளை அறிந்துகொள்ள முயற்சித்தேன்.
யுத்தத்தினால் உடைந்து சிதிலமாகிப் போன வீடுகள், கட்டடங்கள், போக்குவரத்துப் பாதைகள் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன. அடிப்படை வசதிகளை சிரமப்பட்டாவது பெற்றுக்கொள்ளும் வசதி அவர்களுக்கில்லை. மின்சாரம் எப்படிப் போனாலும், சுத்தமான குடிநீர், பயணங்களுக்காக பேரூந்தொன்று கூட அங்கில்லை. ஐநூறு ரூபாய் பெறுமதியான பொருட்களை வாங்கிக் கொண்டு முந்நூறு ரூபாய் மாத்திரமே கொடுத்துச் செல்லும் பலம் வாய்ந்த குழுவொன்று அப் பிரதேசத்தில் சஞ்சரிப்பதை நானே கண்டிருக்கிறேன். விவசாயத்துக்கேற்ற வயல்நிலங்கள் காணுமிடங்களிலெல்லாம் இருந்தபோதிலும், அவை பாழடைந்து போயிருக்கின்றன. விவசாயம் செய்யப்படும் ஒன்றிரண்டு வயல்களுக்கும் உதவியாக டிரக்டர் வண்டியொன்றேனும் வழங்கியிருப்பது அரச சார்பற்ற நிறுவனங்கள்தான். பாடசாலைகள், வைத்தியசாலைகள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனினும் சிக்கல் என்னவெனில், அவற்றைச் செய்வது அரசாங்கத்தினாலா அல்லது வேறு அமைப்புக்களாலா என்பதுதான். தேசப்பற்று மிக்கவர்களெனத் தம்மைச் சொல்லிக் கொள்ளும் கிளர்ச்சிக்காரர்களுக்கு நினைவுபடுத்த வேண்டிய விடயமொன்றிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் முன்னிலையில் பேயாட்டம் ஆடி, சாகும்வரை எனக் கூறிக் கொண்டு உண்ணாவிரதமிருந்து அரச சார்பற்ற அமைப்புக்களை நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டுமெனத் துடிக்கும் ஜோக்கர் வங்ச (இது விமல் வீரவங்சவைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டுள்ள சொல்)அறிந்திராத, எனக்குத் தெரிந்த விடயமொன்றுண்டு. அது வடக்கு, கிழக்கு மக்களது முன்னேற்றத்திற்காக ஏதேனும் செய்யப்படுவது ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பலவித அரச சார்பற்ற நிறுவனங்களாலேயே அன்றி அரசாங்கத்தினாலல்ல என்பதுதான் அது. அரசைச் சார்ந்தவர்கள் செய்வது அடிக்கல் நாட்டுவதுவும், வேறு அமைப்பொன்று செய்த ஏதேனுமொன்றை திறந்துவைப்பதுவும்தான். இல்லாவிடில், முன்பு சொன்ன அமைப்புக்களுக்கு ஏதும் செய்யவிடாமல் தடுப்பதுவும்தான்.
இங்கு வடக்குக்கும் தெற்குக்கும் பொதுவானதொரு விடயத்தை நான் கண்டேன். அதாவது வளர்ச்சி இருப்பது நீங்கள் போகும் வரும் பிரதான வீதிகளில் மட்டும்தான். அனேகமான பகுதிகளில் மக்களது வாழ்க்கை முன்புபோலவேதான். இல்லாதது குண்டுகளின் ஓசை மட்டுமே. காணும் இடங்களிலெல்லாம் இராணுவப் படை. யுத்தம் முடிவுற்றதென்றால் அப் பிரதேசங்களில் பாரிய அளவில் இராணுவத்தைக் குவித்து வைத்திருப்பது ஏனென்று கேட்க வேண்டியிருக்கிறது. யுத்தம் உண்மையிலேயே நிறைவு பெற்று விட்டதென்றால் இருபத்தோராயிரம் கோடி ரூபாய் பாதுகாப்புச் செலவு எதற்காக? இன்னுமின்னும் நவீன ஆயுதங்களைக் கொள்வனவு செய்வது எதற்காக?
இங்கு விதவைகள் அதிகமாகக் காணப்படுகின்றனர். அவர்களுக்கு அனேகக் குழந்தைகளும் உள்ளன. இங்கு ஆண்கள் குறைவாகவும் பெண்கள் அதிகமாகவும் இருக்கின்றனர். ஆண்களில் சிலர் இறந்துபோய் விட்டனர். சிலரை இரண்டாண்டு காலமாக இராணுவம் கைது செய்து வைத்திருக்கிறது. சிலர் காணாமல் போயிருக்கிறார்கள். சிலர் இங்குள்ள பெண்களுடன் இணைந்து பெரியதொரு குடும்பமான பின்பு இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கிறார்கள். இப் பிரதேசத்தில் ஆண்களின் எண்ணிக்கைக் குறைபாடு காரணமாக குடும்பங்களின் அனைத்துப் பொறுப்புக்களும் பெண்களின் மீதே சுமத்தப்பட்டுள்ளன.
இம் மக்களுக்கு தெற்கில் நடப்பதென்ன என்பது குறித்து எதுவும் தெரியாது. இவர்களுக்கு ராஜபக்ஷவோ, விக்கிரமசிங்கவோ, பொன்சேகாவோ, சம்பந்தனோ வீரனோ துரோகியோ அல்ல. இவர்களைப் பொருத்தவரையில் இவர்கள் எல்லோருமே சம்பிரதாயபூர்வமான பொய்காரர்கள். அரசாங்கம் குறித்த நிலைப்பாடும் அதுவேதான். எனினும் இவர்களது பொருளாதார சமூக முன்னேற்றத்துக்கு ஏதேனும் செய்வது அரச சார்பற்ற அமைப்புக்கள்தான் என்பதனால் இவர்களுக்கு அரச சார்பற்ற அமைப்புக்களைக் குறித்து ஓரளவு நம்பிக்கை இருக்கிறது.
தெற்கிலிருந்து வடக்கிற்குச் செல்லும் மக்களுக்கு வடக்கு மக்கள் கண்காட்சிப் பொருட்களாக மாறியுள்ளனர். உடைந்து சிதைந்துபோன பெருவீதிகள், வீடுகள் மற்றும் கட்டடங்களைப் பார்த்தபடி தெற்கு மக்கள் பொழுதைப் போக்குகிறார்கள். சொற்ப அளவினரைத் தவிர அனேகம் பேர் எண்ணியிருப்பது யுத்தம் முடிவுற்றதன் பின்னர் எல்லாம் முடிவுற்று விட்டது எனத்தான். ஆனால் உண்மை அதுவா? இல்லை. சுனாமி வருவதற்கு முன்னர் முழுச் சூழலுமே அமைதியானது பற்றி இன்னும் எங்களுக்கு நினைவில்லை. நீண்ட அமைதி என்பது பெரும் அழிவு அண்மையில் என்பதுதான். நாட்டில் எல்லோராலுமே சிங்கள மொழியையும் தமிழ் மொழியையும் கதைக்க முடியுமாகும்போது இந்த அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்படுமென எண்ணும் சிலரும் இருக்கிறார்கள். அவ்வாறானது அபத்தம் அன்றி வேறு இல்லை. உடனடித்தேவையாக இருப்பது தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு நியாயமானதொரு தீர்வை விரைவில் பெற்றுக் கொடுப்பதே.
விடுதலைப் புலிகள் இயக்கம் யுத்தத்தில் தோல்வி கண்டிருக்கிறது. அத் தோல்வி அனைத்து தமிழ் மக்களினதும் தோல்வியென்ற எண்ணக் கருத்தொன்று உருவாக்கப்பட்டு அது மக்களிடையே ஆழப் பதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் அவர்கள் தோல்வி மனப்பான்மையுடனேயே இருக்கிறார்கள். தமிழ் மக்களின் உள்ளங்களுக்குள் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்பொன்றையோ நம்பிக்கையொன்றையோ உருவாக்க இன்றுவரைக்கும் முடியவில்லை. இதனால் பெரும் சிக்கலொன்று இருப்பது குறித்து பொறுப்பானவர்களுக்கு புரியாமலிருப்பதும் ஏனோ?
யுத்தத்தின் பெறுபேறாக சமூகக்கொலை இடம்பெற்றுள்ளது. எனினும் அதற்கான காரணமானது இன்னும் அழியாமல் உறங்குநிலையில் உள்ளது. ஏற்ற சூழ்நிலையொன்று திரும்பத் தோன்றுமிடத்து அவ் விதையானது உறங்கு நிலையை முடித்துக் கொண்டு மீண்டும் முளைக்க மாட்டாதென யாரால் கூறவியலும்? இதைப் பற்றிச் சிந்தித்தபடி பதினெட்டாம் திகதி நெற்களஞ்சியப் பிரதேசங்களிலிருந்து மீண்டும் திரும்பி வந்தேன்.
– சானக ரூபசிங்க தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 34
- நியூ ஜெர்ஸி சமஸ்கிருதம் கேம்ப் சிறுவ..சிறுமியருக்கு
- புதிய ஏற்பாடு
- முணுமுணுப்பு .. கயிலை மு.வேடியப்பனின் சிறுகதைத்தொகுப்பு… எனது பார்வையில்.
- வாலி வதம் – சில கேள்விகள்.
- மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா 2011
- வாசகர் வட்டம் அங் மோ கியோ நூல் நிலையத்தின் டொமேட்டோ அறையில்
- மலேசிய இலக்கிய மாநாட்டில் கவிபாட கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு வாய்ப்பு.
- நீரைப்போல நாமும் இருந்தால்
- வலிகளின் வரைவிலக்கணமானவள்…
- பச்சோந்தி வாழ்க்கை
- துரோணா – கவிதைகள்
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -8
- புலன்
- காற்று உடைக்கும் விசும்பல் மூச்சு..
- பிந்திய செய்திகள்.
- ஒரு கைப்பிடி இரவு!
- பொற்றாமரைக்குழந்தை
- நேற்றையும் நாளையும்
- குறிப்புகள்
- பிரபஞ்சத்தின் இயக்கம்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -3)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) *பிஸ்மில்லா ! (கவிதை -33)
- இல்லாத ஒன்றுக்கு…
- ரகசிய இருப்பிடங்களின் உற்பத்தி..
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -9
- விஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தேழு
- ஹெச்.ஜி.ரசூலின் புதிய நூல் தலித் முஸ்லிம் பின்காலனிய உரையாடல்
- அமெரிக்க ஆசிய, மத்திய கிழக்கு ஆசிய கொள்கைகள் குறித்து – இந்திய நோக்கில்
- கே.பாலசந்தர் ::::: தாதா சாகிப் பால்கே விருது
- (67) – நினைவுகளின் சுவட்டில்
- பெண்ணியம் பேணிய தமிழ் சான்றோர்களில் – பாரதி
- மீண்டும் முளைவிடக் கூடிய யுத்தம்
- ஜனநாயகமும் இஸ்லாமும் – ஒரு ஒப்பீடு பகுதி – மூன்று (3)
- நிஜத்தின் நிறங்கள்..!
- இருப்பினைப் பருகும் மொழி
- செம்மொழிக் கணினிக் களஞ்சியம் உருவாக்கலும் அதன் பகுப்புகளும்
- முயன்றால் வெல்லலாம்..!!!
- உருண்டோடும்
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- கருவனக் குழி
- சன்னமாய் ஒரு குரல்..
- வனவாசம்
- விக்கிப்பீடியா
- 2007 ஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் கண்காணிப்பும் -2 (ஜூலை 17, 2007)
- இவர்களது எழுத்துமுறை- 36 செ.யோகநாதன்
- ராஜத்தின் மனோரதம்.