தீராத கேள்விக் கரையோரம் பிலால்

This entry is part [part not set] of 28 in the series 20080918_Issue

ஹெச்.ஜி.ரசூல்


அந்த அபிஸீனிய கறுப்பு நட்சத்திரம்
தனதொளியை என்றுமே இருளாக்கியதில்லை
சவுக்குகளும் சாட்டையடிகளும் எழுதிய வரிகளில்
ரத்தச் சொட்டுக்கள் மிச்சமாயின.
சுடுமணற்பரப்பில் புரட்டியெடுத்து
இரும்புச் சங்கிலிகளால் பூட்டப்பட்ட
அடிமை உடல்
வெயில்தீப்பிழம்பில் உருகி வழிந்தது.
என்னைக் காதலாகிக் கசிந்து அரவணைத்த
கருணையின் வசீகரத்தால்
அந்தக் காயங்கள் உதிர்ந்து போயின.சங்கோசைகளும்
மணியோசைகளும்
ஒலிப் பிரவாகமாக ஊற்றெடுத்த நாளில்
இறையை வணங்க உச்சரித்த
எனது பாங்கோசை குரலின் அற்புத ஈர்ப்பில்
உடல்சிலிர்த்து அதிகாலை மலர்ந்தது.
தூரப்பயணங்களில்
உயிர் சிதறிக் கொல்லும் யுத்தக் களங்களில்
ஹபசிக் குலத்தின் கறுப்பு அடையாளத்தோடு
அண்ணல் நபிமுகமதுவின் அருகேநான்
சுவனத்தில் முதலில் கேட்கும்
காலடியோசை எனதாக இருந்தாலும்
பள்ளிவாசல் பராமரிக்கும்
இன்றைய முஅத்தீனாகவே
என் முடிந்து போன வரலாறு
ஆயுளின்கணங்கள் கரைந்துருக
நிழலாய் வடிவாய்
அண்ணல் நபிமுகமதுவின் அருகிருந்தும்
மதிநா நாடாண்ட அபூபக்கர் போல்
உமர் உஸ்மான் அலியைப் போல்
கறுப்பின அடிமை – நான் ஏன்
ஒரு கலீபா ஆக முடியவில்லை?
——————————————
பிலால் – ஆரம்பகாலத்தில் இஸ்லாத்தை தழுவிய
எழுவர்களில் அபிஸீனியாவைச் சார்ந்த கறுப்பின அடிமை.
நபிமுகமதுவின் காலம் முழுவதிலும் மஸ்ஜிதுந் நபவி உட்பட்ட பள்ளிவாசல்களில்
முஸ்லிம்களை ஒன்றுதிரட்டும் தொழுகைக்கான பாங்கை கூறியவர்.கலீபா – மன்னர்


mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்