திரவியம்

This entry is part [part not set] of 48 in the series 20060414_Issue

ஜெயந்தி சங்கர்


சட்டைக்குள் வலக்கையைவிட்டு, கழுத்தில் தொங்கிய சிலுவையை வெள்ளத்தில் அடித்துக்கொண்டிருந்தவன் கிடைத்ததைப் பற்றிக் கொள்ளும் அழுத்ததோடு பற்றியிருந்தார். ஜன்னல் கம்பியைப் பிடித்துக்கொண்டுப் புதிதாகப் பார்ப்பதைப்போல என்னை வெறித்துப் பார்த்த படியேயிருந்தார். கத்தரிப்பூ நிறத்தில் பூப்போட்ட பேண்ட்டும், அடிக்கவரும் சிவப்புநிறத்தில் பெண்களணியும் சட்டையும் உடுத்தியிருந்தார். முகம் முழுவதும் தோலின் சுருக்கங்களுடன் கவலையின் ரேகைகள். வெள்ளிக்கிழமை. அன்றுதான் தாமஸுக்கு வாரத்தின் வேலையில்லாத ஒரே நாள்.

அலுத்தவுடன் நிராகரிக்கும் விலையுயர்ந்த பணக்காரபெண்களின் உடைகளைத் தான் அவற்றின் அளவைப் பொருட்படுத்தாது எப்போதும் அணிவார் தாமஸ். அவர்கள் அரைகுறையாக உபயோகித்து எறியும் கேசச்சாயப் புட்டியிலிருந்து எடுத்துத்தன் தலையில் தடவிக்கொள்வார். பலவகையான பழுப்பு, கருப்பு என்று அவ்வப்போது அவரது முடி நிறங்களில் மாற்றம் கண்டபடியிருக்கும். அதில் அவருக்குக் கடுகளவுக் கூச்சமும் கிடையாது. முதன்முதலில் பார்ப்பவர்க்கு அடக்கமுடியாமல் சிரிப்புவரலாம். ‘கிறுக்கோ ? ‘ என்று ஜாடைமாடையாகச் சிலர் பேசிச்சிரிப்பது அவரைத் துளியும் தொந்தரவு செய்யாது. பழகியபிறகுதான் தெரியும் அவர் தன் சொற்ப வருமானத்தில் தனக்கென்று உடைகளே வாங்குவதில்லையென்பது. ‘ என்ன பெரிய வித்தியாசம் லாஸ் ‘ணெ¢ட்ஸ் ‘ பாண்டுக்கு முன்னாடி ஜிப்பிருக்கு, இதுக்கு சைட்ல ஜிப்பிருக்கு. கொஞ்சம் கலர்கலரா பூவெல்லாம் போட்டிருக்கு. எனக்கு இது பிடிச்சிருக்கு லா. மத்தவங்க சிரிக்கிறதால எனக்கொண்ணும் கவலையேயில்ல. அவங்களா லா எனக்குத் துணி வாங்கித் தரப் போறாங்க ‘, என்பார் தீவிரத்தொனியுடன்.

பலமுறை தாமஸின் முதலாளி அவரை மருத்துவரிடம் போகச்சொல்லிச் சலித்திருந்தார். இரண்டுமாதங்களுக்கு முன்புகூட தாங்க முடியாத வறட்டு இருமல் வந்து மிகவும் அவதிப்பட்டுவிட்டார் தாமஸ். கூட்டிக் கொண்டு போய் எங்கள் அறையில் வைத்திருந்தோம் நான்கு நாட்களுக்கு.

கதிரேசன் வெற்றிலைக்கஷாயம் வைத்துக்கொடுத்தான். இருமல் சற்று குறைந்ததும் அரட்டையடிக்கத் தொடங்கிவிட்டார். கையில் தமிழ் முரசைவைத்துக்கொண்டு, ‘சம்முவம், இப்ப கொழந்த பெத்துக்கறவங்களுக்குதான் சிங்கப்பூருல நிறைய சலுகை. பேசாம இந்தூருக்காரிய கட்டிகிட்டு, வரிசையா கொழந்த பெத்துக்கோ லா ‘, என்று என்னைச் சீண்டினார். ‘ ஐயோ, அண்ணே, ஆள விடுங்க. நா எப்படா ஊருக்கு ஓடலாம்னு இருக்கேன். இதோ, கதிரேசன் இருக்கான். அவனுக்குத்தான் இந்த ஊர விடவே மனசில்ல ‘, என்றதுமே, கதிரேசன், ‘ நா ரெடி. ஆனா, இந்தூரு பொண்ணுக்கு என்னைப்பிடிக்கணுமே. காதுல வளையமில்ல,. பின்னாடிக் குடுமியில்லன்னா ? பேசாம நீங்க ஒரு பொண்ணப் பாத்து கட்டிக்கங்கண்ணே ‘, என்றான். உடனே சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு, ‘வேணாம்பா பேசாம சம்பாரிச்சுகிட்டு, ஊரப்பாக்கப் போய்ச்சேருங்க. மொதல்ல பெத்துக்காதன்னுவான், அப்பறம் திடார்னு பெத்துக்கோன்னுவான். இதென்ன, வாழ்க்கையா இல்ல ஃபாக்ட்ரியா,..ம் ? ‘, என்று சொன்னார். அந்தக் காலத்தில் பெற்ற ஒரே பிள்ளையைப் பிரிந்துபடும் துயர் அவர் முகத்தில் அன்று கவிந்திருந்தது. இருமல் குணமாகித் தன் இருப்பிடத்திற்கே திரும்பினார்.

அடுத்த வாரமே சொந்த வேலையும் ஒதுக்கி விட்டு ஒரு நாள் அவரது இருப்பிடத்திற்குப்போனேன். முதல் நாளே சொல்லியிருந்தும், கதவு பூட்டியிருந்தது. வெள்ளிக்கிழமை எங்கு போயிருப்பார் என்ற யோசனையுடன் காத்திருந்துவிட்டு வீடு திரும்பிவிட்டேன். மறுபடியும் மாலையில் போனபோதும் வீடு பூட்டியே இருந்தது. கவலையுடன் இரவில் போனபோது, உள்ளே மின்விளக்கு எரிவது ஜன்னல் வழியே தெரிந்தது. கதவைத்தட்டியது திறந்தார். ‘எங்கண்ணே போயிட்டாங்க ? ‘, என்றதுமே, ‘இங்க தானே இருந்தேன் ‘, என்றார் என் முகத்தைப் பார்க்காமலே. ‘ரெண்டுவாட்டி வந்தனே. டாக்டர்கிட்ட போகணும், ரெடியா இருங்கன்னேல்ல நேத்திக்கே. ‘

‘செக்கப்பெல்லாம் வேணாம், சம்முவம். ஏதாவது கோளாறுன்னு சொல்லிட்டா,.. ‘

‘அப்ப, பயந்துகிட்டுதான் எங்கியோ போயிட்டாங்க, இல்ல ? ‘

‘ ஆமா லா, செந்தோசாவுக்குப் போனேன் ‘, என்று ஒத்துக்கொண்டார். எனக்கு ஒன்றுமே சொல்லத் தோன்றவில்லை. மருத்துவப்பரிசோதனைக்கு பயந்து பக்கத்துத்தீவுக்கு ஓடிப்போகும் முதியவரை அவர் வழியிலேயே விட்டுவிடுவதுதான் சரியென்று அன்று தோன்றியது.

குப்பைகளைச் சேகரித்து மறுபயனீட்டுக்கு அனுப்பும் சிறு நிறுவனத்தில் தாமஸுக்கு ஊழியம். சின்ன பிக்கப் வண்டியில் தெருத்தெருவாகச் சென்று வீடுகளில் வேண்டாமென்று களையும் பொருட்களைச் சேகரித்துக் கொண்டு வருவதுதான் வேலை. வாரத்தில் ஆறுநாட்களும். முதலாளி கொடுத்த அறுநூறு வெள்ளிசம்பளம் அவருக்குக் கைக்கும் வாய்க்குமாகவே இருந்தது. உடல்நிலை சரியில்லாமல் வேலைக்குப் போக வில்லையென்றால் கருணையே இல்லாமல் ஒரு நாளைக்கு நாற்பது வெள்ளி வெட்டப்படும். இதற்கு பயந்து புகைக்கும் சிகரெட்டினூடே, கல்கல்லென்று வெண்கலஇருமல் இருமிக்கொண்டே தாமஸ் வேலைக்குச் சென்ற நாட்கள் மாதத்தில் பாதியிருக்கும்.

சற்று உரிமையோடு, கொஞ்சம் கோபமும் கலந்து, ‘என்னாண்ணே, சின்னைப்புள்ள மாதிரி இப்பிடி அடம்பிடிக்கறீங்க ? ‘, என்றதுமே வலக்கையை சிலுவையிலிருந்து அகற்றாமல்,என்மீது பதித்திருந்த பார்வையை மட்டும் ஜன்னல் வழியாக வெகுதூரத்திற்கு அனுப்பினார். கூப்பிடுவது தான் அண்ணன் முறை வைத்து. மற்றபடி, கிராமத்தில் இருக்கும் என் பெரியப்பாவின் வயதுடையவர். இருக்கும் கிட்டத்தட்ட அறுபதுக்குமேல். ‘சரி, பசியாறிட்டுப் போவோம், உங்க பர்ஸ் எடுத்து கிட்டாங்களா ? ம்,. கிளம்புங்க சீக்கிரம் ‘, மனமேயில்லாமல் தன் உடலை வலுக்கட்டாயமாக வீட்டை விட்டு வெளியேற்றினார். சாவியை வாங்கிக் கதவைப் பூட்டினேன்.

படியிலிறங்கியபடியே அவரது கவனத்தைத் திசைதிருப்ப மறுபடியும் நானே பேச்சுக்கொடுத்தேன். ‘அண்ணே, இந்தவாட்டி கிருஸ்துமஸுக்கு உங்களுக்கு ‘ஆஃப் ‘ உண்டு இல்ல ? ‘புலாவ் உபின் ‘போவோமாண்ணே. அலி கூட வரேன்னிருக்கான் ‘, என்றதும் முகத்தில் கொக்கியாக ஒரு கேள்வியைத் தேக்கிக் கொண்டு பார்த்தார். ‘அதாண்ணே, அந்த பங்களாதே ?ி, எங்கூட்டாளி ‘, என்றபடி திரும்பிப்பார்த்தேன். சரியென்றோ ,வேண்டாமென்றோ அனுமானிக்கமுடியாத லேசான சலிப்பு கலந்த ஓர் இரண்டுங்கெட்டான் உணர்ச்சியையே அவரின் முகம் பிரதிபலித்தது. முன்னால் உலகைமறந்து ஒட்டியபடிவந்துகொண்டிருந்த சீனஜோடியின் மீது மோதிவிடாது கொஞ்சம் ஒதுங்கி நடந்தேன்.

காலைநேரப்பரபரப்பு சாலையோரக் கடை ஊழியர்களிடமும் தொற்றிக்கொண்டிருந்தது. ‘சம்முவம், எனக்கு ‘தேத்தண்ணி ‘ மட்டும் போதும். ரொட்டிகிட்டி வாங்கிடாத ‘, காலையிலிருந்து முதல்முறையாக வாயைத்திறந்தார். தாமஸின் கவலையும் பயமும் ஒரு புறம் வேடிக்கையாக இருந்தாலும் மறுபுறம் பரிதாபமே மிகுந்தது. அவர் எப்போதும் குடிக்கும் பால்சேர்க்காத தேநீரும் எனக்கு சர்க்கரை சேர்க்காத பாலும் சொல்லி விட்டு மேசையை அடைந்தேன். மறுபடியும் யோசனையுடனான தூரப் பார்வையில் லயித்திருந்தார். தொந்தரவு செய்யவேண்டாமென்ற தீர்மானத்துடன் நாற்காலியில் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கை பார்க்கவாரம்பித்தேன். தேநீரும் பாலும் கொண்டு வந்து வைத்த சீனப்பெண், தாமஸின் வழக்கத்திற்கு விரோதமான மெளனத்தைக் கண்களாலேயே மெளனமாய்ச் சில நொடிகள் ஆராய்ந்துவிட்டு அகன்றாள். தாமஸ் தன்னிச்சையாக தேநீரைப்பருகத் தொடங்கினார்.

சாலையின் எதிர்புறம் பிக்கப் வேனின் பின்புறம் மற்றவர்களுடன் ஏறிக்கொண்டிருந்த அலி என்னைப்பார்த்துக் கையசைத்தான். தேநீரைக்குடித்துமுடித்த தாமஸ் எழுந்துகொண்டே, ‘அவஞ்சரியில்ல ஒடம்பம்புட்டும் பொய்யி, ? என்றதும் சிரித்துக்கொண்டே, ‘ வாங்கண்ணே போவோம்,. அந்த ‘ஆசோ ‘கிழவி சொன்னத வச்சிகிட்டு நீங்களும் அதையே சொல்லிகிட்டிருக்கீங்க. அவம்பொய் சொல்லல்லண்ணே, நடந்ததத்தான் சொல்லியிருக்கான். சரி, இப்ப அதெல்லாம் எதுக்கு, வாங்க இப்பவே லேட்டாயிடிச்சி ‘,என்றுகூறி நடையை விரைவாக்கினேன். கூடவே நடந்த தாமஸின் முகத்தில் தற்காலிகமாக மறைந்திருந்த கவலை மீண்டும் பரவியது.

தாமஸுக்குப் பூனைகளைக்கண்டால் அலாதியான பிரியம். தெருவில் அலையும் பூனைகள், கண்களை உருத்தும் அவருடைய உடைகளை வைத்துத் தெரிந்துகொள்ளுமோ, இல்லை மோப்பமோ, பசித்தால் அம்மாவிடம் உணவுகேட்கும் குழந்தைகளைப்போல தாமாஸைப் பின்தொடர்ந்து வரும். அவரும் பாலோ மீன்சோறோ வாங்கிக் கொடுத்து விட்டுத் தானும் உண்பார். அப்படிச்செய்வதால் பூனைகளைத் தொந்தரவு என்று நினைத்து வெறுத்த பணக்காரர்கள் பார்வையில் அவை பல்கிப்பெருகி சுற்றுப்புறத்துக்குத் தொந்தரவாகின. பலமுறை சொல்லியும் தாமஸ் அலட்சியப்படுத்தவே, போலஸில் சொல்லிவிட்டனர். பூனைப்பிரியையான கிழவிதான் தாமஸுக்காகப் போலிஸிடம் பேசி அவரை வெளிக்கொணர்ந்தாள். அப்போதிலிருந்தே கிழவியின் பேச்சு தாமஸுக்கு வேதவாக்கானது. பூனைகளுக்கு உணவு கொடுப்பதை நிறுத்தினார்.

திலோக் ப்ளாங்கா வட்டாரத்தின் பணக்காரர்கள் வசிக்கும் ஒரு தரை வீட்டில் வசித்த சீமாட்டியின் தாய் தான் இந்த ‘ஆசோ ‘ கிழவி. மற்ற இளைய தலைமுறையை ஒப்பு நோக்க அவளுக்குக் கொஞ்சம் இரக்ககுணமுண்டு. ‘தாகா ‘ வை அடுத்து இருந்த ஒரு சிறிய கிராமத்தில் அலியின் குடும்பம் இருந்தது. சென்ற வருடம் வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருந்த கிராமத்திலிருந்து வேறொருவனுக்குத் தகவல் வந்தது.

உடனேயே அலி தன் குடும்பத்தினரை காப்பாற்றிவிடும் வேகத்தில் ஊருக்குக் கிளம்ப நினைத்தான். சிறுகச்சிறுக டிக்கெட்டுக்குப் பணம் சேகரித்தான். ஒன்றும் இரண்டுமாகக் கொடுத்தவர்களிடையே அலியின் கதையைக் கேட்டுவிட்டு மனமிளகி அப்போது முள்ளங்கிப்பத்தையாக ஐம்பது வெள்ளியைக் கொடுத்தவள் அந்தக்கிழவி. நண்பர்களின் உதவியும் கிடைத்தது. மறுநாள் காலையில் கிளம்பவிருந்தான். ஆடுமாடுகளையும் சேர்த்து குடும்பத்தோடு எல்லோரையும் ‘பிரமபுத்ரா ‘ விழுங்கிவிட்டது என்ற செய்தி பின்மாலைநேரம் எட்டியபோது உடைந்துபோனான். கதறியவனைத் தேற்றி ஊருக்குக் கிளம்பச்சொல்லியும் அவன் கேட்கவேயில்லை. இனிமேல் ஊருக்குப்போய் என்னதான் செய்வது என்று ஒரே புலம்பல். அவனது ஊர்காரர்களும் வந்து ஆறுதல் சொல்லி அவனைக் குடிக்கவைத்தனர். குடித்துக் கொண்டிருந்தவனை கிழவி பார்த்துவிட்டு, பொய் சொல்லிப் பணம் சேர்த்திருக்கிறான் என்று வட்டாரத்தில் வசித்த எல்லோரிடமும் பரப்பிவந்தாள்.

மருத்துவமனையும் வந்துவிட்டது. தாமஸை எக்ஸ்ரே, ரத்தம் மற்றும் சளி போன்ற பரிசோதனைகளுக்கு உள்ளே அனுப்பிவிட்டு வெளியே காத்திருக்க முடிவு செய்தேன். ‘அண்ணே, நா அரமணி நேரமிருப்பேன். அதுக்கப்புறம் வேலக்கிக் கெளம்பிடுவேன் ‘, என்றவனைப் பார்த்து சரியென்று தலையசைத்துக்கொண்டே உள்ளே நுழைந்தார், தேர்வுக் கூடத்திற்குள் நுழையும் பள்ளிச்சிறுவனின் பயத்தை முகத்தில் சுமந்துகொண்டு.

தாமஸுக்கு வேலை கிடைத்தே இரண்டு வருடம் தான் ஆகியிருந்தது. அதற்குமுன்னால், சரியான வேலையில்லாமல் அலைந்து திரிந்து உணவகங்களில் தட்டுகழுவும்வேலை போன்று கிடைத்த சின்னச்சின்ன வேலையைச் செய்துவந்தார். முதல்முறையாக நான் அவரைப்பார்த்தது புகித் மேரா வட்டாரத்தில். சிநேகிதன் ஒருவனைப்பார்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தேன். ஐந்தாவது மாடியின் சுவரில் ஓர் ஆள் நிற்பது தெரிந்தது. தடுமாற்றமும் இருந்தது. மளமளவென்று மாடிப்படிகளில் ஏறிப்போய் பார்த்தால், இந்தியர் ! குடித்திருந்தார். மனைவியும் பிரிந்து, வேலைமில்லாததால், ஐந்தாவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்ளப் பார்த்தாராம். வயதான அந்த உடம்பில் ஊனத்தை நினைத்துப்பார்க்கவே நடுங்கியது. மெதுவாகப் பேசிக் கீழே அழைத்து வந்தேன். போதையில் தன்கதையைப் புலம்பினார்.

அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் லீவெடுத்ததால், கையில் இருந்த வேலையும் போயிற்று. கடைசியாகக் கையிலிருந்த காசில் குடித்துவிட்டு சைனா டெளன் வட்டாரத்தில் குடிபோதையில் சுற்றுப்பயணியிடம் ஏதோ பேசப்போக, அந்த வெள்ளைக்காரர், அவரின் அழுக்குபடிந்த ஆடையை வைத்து பிச்சையெடுக்கிறார் என்று நினைத்து இரண்டு வெள்ளியை இவர் கையில் திணித்திருக்கிறார். இதைப்பார்த்த நீலச்சட்டை ஆசாமிகள் இவரைக் கொண்டுபோய் லாக்கப்பில் இரண்டு நாட்கள் வைத்திருந்து அனுப்பியிருந்தனர். வேலை ஒன்று நிரந்தரமாகக் கிடைத்துவிட்டால் அவரது பிரச்சனை தீரும் என்று தெரிந்தும் என்னால் பரிதாபம் மட்டுமே படமுடிந்தது. அதன்பிறகு வந்த நாட்களில் எங்களிடையே நட்பு வளர்ந்தது.

‘சைனா டெளன்லனதும் அரெஸ்ட் பண்ணினாங்க. இதே சிரெங்கூன்லன்னா, சும்மா கண்டிச்சு விட்டிருப்பாங்களோ. கூண்டுல கிளிய வச்சிகிட்டு சிரெங்கூன்ல ஜோசியம்ன்ற பேருல நெஜமாவே நா பிச்சையெடுத்தாலும், ‘கலாசாரம் ‘ வளக்கறோம்னு சந்தோசமா ஆதரிச்சிருந்தாலும் ஆதரிச்சிருப்பாங்க இல்ல ? ‘, என்று அந்தச் சம்பவத்தைப்பற்றிப் பேசும்போதெல்லாம் விரக்தியுடன் கேட்பார்.

சங்கிலியாகப் புகைத்த சிகரெட்டை வேண்டுமானால் விட்டுவிடுவதற்கு முயல்வாராம். மாலையில் குடிப்பதை மட்டும் விடமுடியாதாம். கேட்டால், வரிசையாகக் காரணங்கள். வேலையில் சேர்ந்த புதிதில் தன் சொற்ப சம்பளத்தில் வீட்டுவாடகை கொடுப்பதை அவரால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. அவருடைய முதலாளிதான் அடுக்குமாடிக் கட்டடத்தில் வாடகைக்கு அவர் எடுத்திருந்த ஓரறையில் தங்கிக் கொள்ளும்படி கூறினார். அங்கேதான் ‘கோடெளன் ‘ மாதிரி தற்காலிகமாகத் தரையிலிருந்து கூரைவரை பழைய பேப்பரும், பழைய டாவீ, ரேடியோ, பாத்திரம், பண்டம் என்று சகலவிதமான உயிரற்ற பொருள்களையும் குவித்து வைத்திருந்தார்.

அவ்வப்போது அகற்றப்பட்டதுமே மேலும் குவியும். குவிந்திருக்கும் குப்பைகூளங்களிலிருந்து கிளம்பிய நெடியும் நாற்றமும் ஆரம்பத்தில் அவரைத் தூங்க விடாது துரத்தின. சிலவேளைகளில் சீமாட்டிகளின் வாசனைத் திரவியங்கள் கிடைத்தும் விடுவதுமுண்டு அவருக்கு. பொருட்களை ஒதுக்கி ஆறடிக்கு மூன்றடி இடம் செய்யவேண்டும். உரிமையுடன் கூளங்களிடையே உலவிய கரப்பான்பூச்சிகளுடன் பழையமெத்தையொன்றை விரித்து உறங்கச் சீக்கிரமே பழகினார். அவ்விடத்தில் உறங்க வேண்டுமென்றால், உழைப்பில் வந்த உடலசதி மட்டும் போதாது. நுகரும்புலன் தற்காலிகமாகவேனும் சாகவேண்டும். குடிப்பழக்கம் அவருக்கு ஓரளவிற்கு உதவியதென்று சொல்லிகொள்வார்.

‘ஏம்பா, ரீசைக்கிளிங்க்சாமானமெல்லாமே இந்த நாத்தமடிக்குதே, தினப்படி குப்பை அள்றாங்களே பங்க்ளாதேஷி ஆளுங்க,.எப்பிடித்தான் சகிச்சுக்கறாங்களோ ‘, என்று வியப்பார். குழந்தைகளின் காலைக் கடன்களை ஏந்திய டையப்பர்கள், அழுகிய முட்டை, ஊசிப்போன இறைச்சி சமையல், பெண்களின் மாதந்திர சமாசாரங்கள் என்று உலகில் உள்ள அத்தனை துற்நாற்றங்களையும் கலவையாகக் கொண்ட குப்பைகளை அள்ளும் பங்க்ளாதேஷிக்களுக்கு நாளடைவில் பழகியது போலவே தாமஸுக்கும் பழகிவிட்டது. வேலையின் தேவை அவரைப் பழகும் நிர்பந்தத்திற்குத் தள்ளியது.

திறந்தவெளியில் சேகரிக்கும்போது இருந்த நாற்றம் அறைக்குள் நூறுமடங்காகிப் போகும் அதிசயத்தைச் சொல்லிச்சொல்லி வியப்பார் தாமஸ். முதல்முறை அங்கு போனபோது நிற்கமுடியாமல் திரும்ப ஓடிவந்து விட்டேன். ஒருமுறை தாமஸைக் கூப்பிடவந்த ‘ஆசோ ‘ கிழவி ஒன்றன் மேல் ஒன்றாக இரண்டு மருத்துவ முகமூடிகளணிந்தே வந்தாள். கையை ஆட்டி சைகையால் கூப்பிட்டுவிட்டு ஓடியே போய்விட்டாள்.

மருத்துவச்சோதனைகள் அதிக நேரமெடுக்கவே நான் என் வேலைக்குக் கிளம்பினேன். ஒரு வருடமாகத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்திருக்கிருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன் அவருடைய முதலாளி மிகவும் வேண்டிக்கொண்டதால், மாலையில் போய் பேச்சையெடுத்ததுமே, ‘ வேணாமே,..ஏதாவது கோளாறுன்னு சொல்லிட்டா ? குடிக்கறேன்ல, லிவர் போச்சுன்னுவான், இல்ல சிகரெட் பிடிக்கறேனா, டாபீன்னுவான். மொத்ததுல மொதலாளி என்னைத் தூக்கிட்டு வேற ஆளப்போட்ருவாரு. எனக்கு வேல போயிடுமே சம்முவம், அப்பறம் என்ன செய்ய சொல்லு, எனக்கென்ன ஸீபீஎஃப் (CPF) இருக்கா ? பேருதாஞ்சிங்கப்பூரு,..ஒரு தேத்தணி வாங்கணும்னாலும்,.. நாயாபேயா ஒழைக்கணும் லா. சாவறதுக்கு முன்னகூட என்னோட பாலுக்கு ஒழைச்சுவச்சிட்டில்ல லா நா சாவணும், அதஎடுத்து ஊத்த ஒரு சொந்தமுண்டா, பந்தமுண்டா ‘, என்று கலங்கிய கண்களுடன் வழக்கமான பல்லவியையே பாடினார்.

‘எதுக்கு இப்ப உணர்ச்சிவசப்படறீங்க, இப்ப நாங்கல்லாம் இல்ல. இதுக்குப் போயி இவ்வளவு கவலப்படறீங்களேண்ணே,..ஒருவேல போனா இன்னோண்ணு, .. ‘, முடிப்பதற்குள்,

‘ஒரு பய வேல தரமாட்டான். ஒனக்கெங்க புரியும். இந்த ஊர விட்டா ஒங்க ஊருக்குப் போயிடுவீங்க,.ஆனா நாங்க ‘, குரலில் பொறாமை தெரிக்கும்.

‘நீங்கதா மெச்சிக்கணும்,..ஊர்ல மழையே இல்லண்ணே. காஞ்சி கெடக்குதாம் பூமி. வெள்ளாமையெல்லாம் இல்லாம ஒரே கஷ்டமாம். அப்பா சொல்லி ரொம்ப வருத்தபட்டுகிட்டாரு. ‘

‘ கஞ்சோ கூழோ, பஞ்சமோ வெள்ளமோ, சொந்த ஊர்னு ஒண்ணு இருக்குல்ல,.எனக்கு அப்பிடியா ? சொல்லு லா ‘

‘ம்,எப்பவுமே இக்கரக்கு அக்கர பச்ச தான்னு வைங்க. ‘

‘என்ன ஒண்ணு, சின்னவயசுல படிக்காம இருந்துட்டேன்,அதத்தவிர நாஞ்செஞ்ச குத்தமென்னன்னுதான் எனக்குந்தெரியல்ல லா ‘, தன் பெரிய கண்களில் சோகம் கவியச் சொல்லும்போது அவர் முகத்தைப் பார்க்க வேண்டுமே ! கிடைக்காத பண்டத்துக்கு ஏமாற்றமும் ஏக்கமும் கொள்ளும் சிறுகுழந்தையைப்போலிருக்கும். கேரளாவின் ஏதோ ஒரு குப்கிராமத்தில் இன்றும் தூரத்துச்சொந்தங்கள் இருப்பதாக அவ்வப்போது சொல்லிக் கொள்வார்.

வேலை முடிந்து மாலையில் தாமஸைப்பார்த்து சோதனை முடிவுகள் எப்போது வரும் என்று கேட்டேன். ஒரு வாரமாகும் என்றார். முகத்தில் காலையில் கவிந்திருந்தகவலை அதிகரித்திருந்தது போலத்தான் தெரிந்தது. தேர்வு முடிவுக்குக் காத்திருக்கும் பள்ளி மாணவனைப்போலத் தெரிந்தார். ‘சம்முவம், கிருஸ்துமஸுக்குள்ள ரிசல்ட் வந்துடும். எல்லாமே சரியா இருந்தா, நீ சொன்னமாதிரி ‘புலாவ் உபின் ‘ போவோம்,..ஓகேவா ‘, என்றார் எனக்காகச் செயற்கையாக வரவழைத்துக்கொண்ட உற்சாகத்துடன். சிறிது நேரம் பொதுவாகப்பேசிவிட்டுக் கிளம்பி வீடு வந்து சேர்ந்தேன்.

நண்பனொருவன் விடுமுறையில் இந்தியாவிற்குப்போய் விட இரண்டு ‘ஷிஃப்ட் ‘ செய்ததில் அடுத்த நான்கு நாட்களுக்கு நானும் போய்ப் பார்க்கவேயில்லை. வேலையில் நாட்டமேயில்லாமல் மருத்துவச் சோதனையின் முடிவுபற்றிய கவலையிலேயே அடுத்த சில நாட்களைக் கடத்தியிருக்கிறார். எப்போதும் அவரிடமிருந்த கலகலப்பு முற்றிலும் விடைபெற்றிருந்தது. விடமுடியாமலிருந்த சிகரெட்டைக் கூட வாங்க மறந்திருந்தார். மாலைகளில் ‘தண்ணீர் ‘ மட்டும் தொடர்ந்தபடியிருந்திருக்கிறது. இரண்டு நாட்களுக்குப்பிறகு கதிரேசன்தான் தகவலைக் கொண்டு வந்தான். தாமஸ் மாரடைப்பினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இரண்டு நாட்கள் மூக்கிலும் வாயிலும் குழாய்கள் மாட்டப்பட்டுக் கிடந்தார்.

வெள்ளியன்று மருத்துவச்சோதனை முடிவுகள் வந்தன. புகைத்தலையும் குடித்தலையும் மட்டும் விடும்படி டாக்டர் ஆலோசனை கூறியிருந்தார். மற்றபடி ரத்த அழுத்தம், சர்க்கரை, நுரையீரல் எதிலும் எந்தவிதமான பிரச்சனையுமின்றி சாதாரணமாகவேயிருந்தது. சோதனைமுடிவை அறிந்துகொள்ளாமல் தன் முடிவைத் தழுவிக் கொண்டுவிட்டார். முடிவைப்பற்றிய உளைச்சலில் மன அழுத்தத்திற்குத்தான் தாமஸ் இறுதியில் பலியாகியிருந்தார்.

-தமிழ் முரசு – சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழ்

-வெள்ளி- டாலர்(சிங்கப்பூரின் பணம்)

– புலாவ் உபின் – சிங்கப்பூரைச் சுற்றியிருக்கும் குட்டித்தீவுகளில் ஒன்று.

– ஆசோ – பொதுவாக வயதான பெண்களைக்குறிக்கும் சொல்

– தாகா – பங்க்ளாதேஷ் நாட்டின் தலைநகரம்

– ரீசைக்கிளிங்க் – மறுபயனீடு

– ஸிபீஎஃப் (CPF) – Central Provident Fund (மத்திய சேம நிதி)

(முற்றும்)

குவியம் (கனடா நாட்டு) காலாண்டிதழ் – இலையுதிர் 06

jeyanthisankar@gmail.com

Series Navigation

ஜெயந்தி சங்கர்

ஜெயந்தி சங்கர்

திரவியம்

This entry is part [part not set] of 40 in the series 20050630_Issue

பவளமணி பிரகாசம்


சிலையா இது சிலையா
ச்ிலைதான் பொற்சிலைதான்
கொல்லன் கைபடாத சிலை
கொஞ்சும் அழகு பொங்கும் சிலை

பூவா இது பூவா
பூதான் புத்தம்புது பூதான்
மண்ணில் விளையாத பூ
மயக்கும் சிரிப்புடை பூ

தேனா இது தேனா
தேனேதான் இது தேனேதான்
மலரின் மடியறியா தேன்
மனமினிக்கும் நறுந்தேன்

திரவியமா இது திரவியமா
திரவியந்தான் தேவலோக திரவியந்தான்
தேடக்கிடைக்காத திரவியம்
தொட்டிலில் கண்ட திரவியம்

Pavalamani Pragasam
Pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்