அலறியின் கவிதைகள்

This entry is part [part not set] of 46 in the series 20060331_Issue

அலறி



(01)

சமாதானம் பற்றியதான கனவு

கல்லடிப் பாலத்திற்கு கொஞ்சம் அப்பால்
முகத்துவாரத்தில் உனது வீட்டில்
பெருமரத்தின் கீழ்
உட்கார்ந்திருக்கிறோம்.
உன் கூந்தலில் சூடிய பூவாசமும்
என் கையிலிருக்கும் தேனீரின் ஆவியும்
ஒன்று கலக்கின்றது.

தூரத்தில் சந்தையில்
என் இனத்து வியாபாரிகளும்
உன் இனத்து சனங்களும்
ஒருவருள் ஒருவர் புகுந்து
நிரம்பி வழிகின்றனர்
அவர்கள் சிறகுகளை யாரும் வெட்டிவிடவில்லை
மேலே வானம் நீலமாய் வெழுத்திருக்கிறது.

படைமுகாமில் முன்னரங்குக் காவலரணில்
இரவு
குறட்டைவிட்டுத் தூங்கிய படைவீரன்
துப்பாக்கி முனையில் படிந்த பனியை
துடைத்துக்கொண்டிருக்கிறான்.
மணல் திட்டுக்களில்
புதிது புதிதாய் பூக்கள் மலர்ந்திருக்கிறது

காட்டுக்குள் அடர்ந்த மரங்களுக்கிடையில்
குண்டுகள் பொருத்திய மேலங்கியை
போராளிகள் கழற்றி வைத்திருக்கின்றனர்
வண்ணாத்திப் பூச்சிகள் அதில்
குந்திச் செல்கின்றன
பதுங்கு குழிக்குள் மண்புழுக்கள் நெழிகின்றன
நிலவு முழுசாய் எழுவதற்குள்
வெடிக்கும் வேட்டுக்கள்
சமாதானத்தை அகாலத்துள் இழுத்துச் செல்ல
முனைகின்றன

அது நிலைத்திருக்கப் பிரார்த்திக்கிறது பூக்கள்
நிலைகுலைய நினைக்கிறது நட்டுவக்காலிகள்

பறவைகளிடம்
அவளிடம்
பொதுமகன்
படைவீரன்
போராளி
எல்லோரிடமும்
நம்பிக்கை – அவநம்பிக்கை
இரண்டுக்கிடையிலும்
சமாதானம் பற்றியதான கனவு நீண்டு செல்கின்றது.
கல்லிடை சுழித்தோடும் மட்டுமா வாவிபோல…



(02)
அலறிகடல் குடித்த வீடு

கடலின் காலுக்குள்
என் சிறுவீடு குந்தியிருந்தது.
முற்றமும் இருந்தது
குளியலறை எல்லாமிருந்தது.

கூரைக்கு மேலாக
தென்னை கிளைவிரித்திருந்தது
அவரைக்கொடி பூத்திருந்தது
கொட்டைப்பாக்கான் கூடு வைத்திருந்தது.

குருவிகளோடு கூடவே
என் குஞ்சுகளும் குடியிருந்தது
பாய்விரித்துப் படுக்கவும்
வெள்ளி மணிகளைப் பொறுக்கவும்
முன்வாசல் வாய்த்ததுபோல
கதலி வாழைக் கன்றுகளும் கிணறுமிருந்தது.

கடல் எழுந்து தகா;க்கும் வரை
என் உழைப்பும்
வியர்வைச் சாறும் அதில் ஒட்டியிருந்தது.

ஒவ்வொரு கல் அடுக்கவும்
ஒருசாண் சுவர்முளைக்கவும்
அரேபியப் பாலைவனத்தில்
என் உதிரம் உறைந்த கதைகளை
அலைகள் எப்படி அறிந்திருக்கும் ?

கடல் உறுஞ்சிக்குடித்த
என் சிறு வீட்டில்
கதவுகளில்லை
ஜன்னல்களில்லை
கரப்பான் பூச்சிகளுமில்லை
அடித்தளம் மட்டும் அந்தரத்தில் தொங்குது.

நீரின் பொறிக்குள் சிக்கித் திணறிய
என் சிறு வீடு
நீந்திக் கரைசேர முனைகையில்
அதன் செட்டைகளை
அலைகள் முறித்ததாக காற்றுச் சொன்னது.
கடலடியில் மிதக்கும் என் படுக்கையறைக்குள்
அலைகளுக்கஞ்சி மீன்கள் பதுங்கியிருப்பதாக
சந்தைக்குத் தப்பிவந்த கணவாய் சொன்னது.

அலைகள் கடாசிவிட்டு
அகதிக் கிடங்கின் கூடாரத்துள் கிடந்து
கருவாடாய்க் காய்கிறேன்.
என் கண்ணிலும், கனவிலும்
முட்டைக்கோதாய் நொறுங்கிக் கிடக்கும்
என் வீட்டின் கதவுகளும்
ஜன்னல்களும்
இன்னும் திறந்தபடியே கிடக்கிறது.

புறாக்களே!
என்னதும்
உங்களதும் சிறுகூட்டை
நீங்களாவது
காலுக்குள் இடுக்கி வந்து
என் தோளில் வைத்திருக்கக்கூடாதா ?

~ச்சே… போங்கள்|



(03)
குழந்தைகள் கேட்காத அலைகளின் பாடல்

அலைகளின் முடிவுறாப் பாடல்
கரையெங்கும் கேட்கிறது…

நிலவு கூந்தல் விரித்து
வெள்ளிப் பூக்களை அள்ளி இறைக்கும்
இரவுகளில்
நண்டு துரத்திய சிறு பாதங்களை
கடற்காற்றில்
சிவப்பு
பச்சை
நீலப் பட்டங்கள்
பறக்கவிட்ட மென்கரங்களை
மணல் வீடு கட்டி, சிப்பி பொறுக்கிய
சிறுசுகளை
முழுத்தூக்கம் கலையாது
கண் கசக்கி விழிக்காத கண்மணிகளை

இரக்கமில்லாமல் அலைகள்
கொன்று குவித்த அன்று
சூரியன் கடலைச் சுட்டெரித்தது.
வானம் விம்மி வெடித்தது.
பொம்மைகளை கரங்களில் இடுக்கியபடி
தாயின் இடுப்பை இறுக்கியணைத்தபடி
இன்னும்
இறுதிவார்த்தை உச்சரித்த உதடுகள் விரிந்தபடி
கண்களில் ஒளி கசிந்தபடி
மரணம் அவர்களைக் கெளவிக்கொண்டது.

கட்டிட இடிபாடுகளுக்கிடையில்
மணல் திட்டுகளில்
அழுகிய அவர்களின் உடல்களின் நெடி
உப்புக் காற்றில் உறைந்தது.
பெருங்குரலெடுத்துப் பெய்த மழையில்
சிதிலமாய்க் கரைந்தோடியது.

மாண்ட தளிர்களை மண்மூட
உயிர் தப்பிய பிஞ்சொன்று
கதறி அழுது
கடலின் கழுத்தை நெரித்துப் புதைக்குமாறு
புலம்பிய குரல்
அண்டமெங்கும் எதிரொலிக்கிறது.
இன்னொன்று
கடலை மூடிவிடுமாறு கடிந்துகொள்வது
கூடாரத்துள்
தெருவில் தினம் கேட்கிறது.

வைத்தியர்கள் விழிபிதுங்கி முழிக்கின்றனர்…

மகாகாலமும் வியாபிக்கும்
வன்மத்தைப் புரிந்த கடல் மட்டும்
புன்னகை சிந்திச் சிரிக்கிறது.

சின்னக் கால்கள் நடந்த மணல் தரையில்
இப்போது
அடம்பன்கொடி படர்கிறது.
அறுகம்புல் முளைக்கிறது

குழந்தைகள் காதுகளைப் பொத்திக்கொள்ள,
அலைகளின் முடிவுறாப் பாடல்
கரையெங்கும் கேட்கிறது…



(04)

சாணம் புதைந்த நிலத்தில்

மாடுகள் மேற்கில்
அசைபோட்டு நடந்தன
எங்கள் மாடுகள்

அந்திக்குச் சற்று அப்பால்
சாிந்து கிடக்குதுசூாியன்

மென்பச்சைக் கம்பளி போர்த்தி
நீண்டு படுக்குது
கதிர் பறிந்த வயல்வெளி
மூத்த வாப்பா முங்கிக் குளிக்கும்
வாய்க்கால்
இடந்து நகா;கிறது
அருகு இரண்டும் அறுகம் புற்கள்

மேய்ந்த மாடுகள்
விறைத்துப் பார்த்தேங்கி நின்றன
அப்பக்கமாக

புல்லும் புதரும் மூடுண்டு
காடு பத்தி அடர்ந்து
ஏக்கா; கணக்கில்
எங்கள் வயற்காணிகள்;

பூங்குயிலின் பாடல்
காட்டிடை மறைந்து கேட்குது
மூத்தவாப்பா சிந்திய வியர்வை
சேற்றில் மண்டி மணக்குது.

பற்றைகள் செருக்கி
வரம்பு கட்டி உழுத கழனிகள்
அவணக்கணக்கில்
நெல் விளைந்து சொாிந்த பூமி

மூடை, மூடையாய் ஏற்றி
அாிக்கன் லாம்பு ஒளிப்புகாாில்
வண்டில்கள் அணிவகுத்ததை
மாடுகள் மறக்கவில்லை

வேட்டுக்கள் பறிந்து
சுற்றி வளைக்கும் இரவுகளில்
அடைக்கலம் கொடுத்து
அவித்துக் கொட்டிய சோத்து மணிகள்
ழூஅயத்துத்தான் போனது

எங்கள் மாட்டுச் சாணம்
ஆழப் புதைந்து
எங்கள் மண்வெட்டிகள்
கொத்திய நிலத்தில்
பாம்புகள் குடி கொண்டு

ஒற்றைப் போகமேனும்
விதைத்துப் பார்க்க முனைகிறோம்
ஒத்துக் கொண்டு கை குலுக்குது
கைகளில் ஈரம் காய முன்படமெடுத்துச் சீறுது

எங்கள் மாடுகள்
எங்கள் நிலத்தில்
மேய்வதை உழுவதை
எதுவரை தடுக்கும்
புடையன் பாம்புகள்.

0

ழூஅயத்து – மறந்து

riyasahame@yahoo.co.uk

Series Navigation

அலறி

அலறி

அலறியின் கவிதைகள்

This entry is part [part not set] of 47 in the series 20060224_Issue

அலறி


(01)
அந்திநேர மஞ்சள் வெயில்

வெயில் காய்ந்து மெலிந்து
படுவான்கரைப் பற்றைக்குள்
இறங்கிற்று
பூவரசம் பூக்களில் படிந்து
வைக்கோல் கற்றையில் தெறித்து
மெல்லென முதுகு சுடும்
அந்தி நேர மஞ்சள் வெயில்.

நவியான் குளக்கட்டில் நிற்கிறேன்
சைக்கிளைச் சாத்திவிட்டு

அரிசி ஆலை உமிமேட்டில்
எலும்பு கவ்வி நாயொன்று நகா;கிறது
தோணி மிதந்த தடங்களில்லை குளத்தில்
தூண்டிலிடும் கிழவனுமில்லை
மீன் கூடை கவிழ்ந்து கிடக்குது

நெடு நாட்கள் கழித்து
உப்பு மிளகாய் உறைப்புக்கறி
ருசித்து நாவூறி
குளத்து மீன் தேடி
கறகறக்கும் கறள் சைக்கிளில்
வியர்வை கசிய இழுத்து மிதித்து

சபித்து விட்டுப் போன
நவியான் குளக்கட்டுக்கு
மீண்டும் வந்துள்ளேன்.

குளம் நிரம்பி வழிந்து
மீன்கள் குதித்த பொழுதொன்றில்
காற்றுக் கந்துகளை விலத்தி
புத்தம்புது மோட்டார் சைக்கிளில்
விர்ரென்று விரைந்து
இவ்விடம் நிற்கையில்…

பிடரி மயிர் பிடித்திழுத்து
தொண்டைக்கடியில் துவக்கு வைத்து
பறித்த
எனது மோட்டார் சைக்கிளின்
இலக்கம் 158-4628

வண்டில் மாட்டிடம்,
விறகு வெட்டிகளிடம்
கப்பம் பறிக்க முண்டி
அதிலேறிப் பறந்தனர்.
புகை மணம் மட்டும்
என் நாசிக்கான் அடைத்து…

பக்கத்தில் எருமைகள் இரண்டும்
அடைக்கிலக் குருவியும்
பார்த்திருக்க
எறித்ததும் இதே
அந்திநேர மஞ்சள் வெயில்.

0

(02)
கல்குடா

எரித்த சாம்பல்மேட்டின்
சூடு இன்னும் தணியவில்லை
எழுபதாம்,
எழுபத்தெட்டாம் முறையும்
கலவரமடைந்து, பீதிசூழ்ந்து
நேற்றுப் போலல்ல
மூன்று நாட்கள் நீடித்து
ஹா;த்தால், கடையடைப்பு
நிகழ்ந்திற்று.

சமாதானத்தின்கையெழுத்து
மயானம்வரை நீள்கிறது
இங்குதான்
இங்கிருந்துதான்.

அடக்கப்பட்டவர்களின்
ழூழூகபுறுஸ்த்தானில்
புற்கள் முளைப்பதற்கிடையில்
பூக்கள் மலர்வதற்கிடையில்
ஆட்டோவில்,
அறுவடை வயலில்
குதறப்பட்டவர்களின் ஈனவொலி
ஆற்றை நிறைத்து
காற்றைக் கிழித்து
கடலை மறித்திற்று.

மியான்குளத்தில்
பாலத்தின் அடியில்
ஈழக்கொடி கவிழ்ந்து
முந்தைய முகத்தை மீளக்காட்டிற்று
மனிதாபிமானத்தின் வேரையும்
சேற்றில் புதைத்திற்று.

முக்காட்டு நீர்பெருக்கிட்டு
கடதாசி ஆலை முகடு கிழித்து
ரெயில்வே ஸ்டேஷன் கதவு தகா;த்து
படகுத்துறையில் இறங்கிற்று
அது-
பூமிக்கடியில் தீயாய் படிந்து
எமது தேசத்தின்
எல்லை பிளக்கும்
பொதுச்சுவர் எழும்பும்.

அந்நாள் தூரித்தும்
ஆர்ப்பாட்டமாக…
ஊர்வலமாக…
இடிமின்னலுக்கிடையிலும்
இருள்-
ஒளிர்ந்துகொண்டுதானிருக்கும்.

0

ழூகல்குடா – ஓட்டமாவடி, வாழைச்சேனைப் பிரதேசம்
ழூழூகபுறுஸ்தானம் – முஸ்லிம்களின் அடக்கஸ்த்தலம்

(03)
கோடை வெயிலில் ஒரு கள்ள மழை

கொதித்துக் கொதித்து வழிகிறது
சூாியன்
கருகிக் கருகிச் சுருள்கிறது
பூக்கள்
செடிகொடிகள்

ஆகாயத்தில் அடுப்பு மூட்டி
சூாியனைக் காய்ச்சுவது யார்
அனலாய்த் தகிக்கிறது வெயில்
ஆவியாய்ப் பறக்கிறது ஆறுகள்.

ஒரு கோப்பைத் தண்ணீர்
கொடுப்பாரின்றித் தவிக்கிறது குளம்
நீர்க் கரை தேடி ஓடிய ஓடைகள்
திரும்பவில்லை.

வெயிலைத் தள்ளியவர்கள்
தலையில் சுமந்து திாிந்தவர்கள்
பாரம்தாங்காமல்
வியர்த்துக் களைத்து
மரத்தின் கீழ் ஒதுங்குகின்றனர்
நிழலும் தீய்க்கிறது.

மழையே!
இந்நேரம் நீ யெங்கு போனாய் ?
முகிலாய்த்; திரண்டு
கடலுக்குள் ஒழித்ததேன்
ஒரு பாட்டம் சாியேன்
பயிர் பச்சை குடித்து முழுக

இதோ!
துளிர்த்துப்பெய்கிறது மழை
கொதிக்கவைத்துச் சூடாக்குது வெயில்
மாலை
தேனீர் தயாாிக்கலாம்.

0

(04)
அவள் மூழ்கும் இரவுக் கவிதைகள் இரண்டு

01.
அலைகள் ஆர்ப்பரித்தடங்கும்
இன்றின் இரவு
நதியாய் நீளும் உன் நினைவுகளை
காற்றள்ளிச் சென்று
அடிவானில் புதைக்கிறது.
நட்சத்திரங்கள் அங்கு
பூத்துப் பின் உதிர்கிறது.

இந்த இரவென்ன
ஒரு கோடி நிலவல்ல
ஆழ் மனதில் உச்ச வலியெழுப்பி
விம்மிக் கரைகிறது
எனக்குள்

அமாவாசை
அடை மழை
முன்பனி இருளென
எத்தனை இரவுகள் நமக்குள் கரைந்திருக்கும்

முதன் முதலாய்
உன் மார்பில் முகம் புதைத்து
மெதுவாய், மெதுமெதுவாய்
கழுத்துவரை முன் நகா;ந்து
இதழ்கள் நனைத்த இரவொன்று
வெட்கப்பட்டு
உன் கூந்தல் காட்டுக்குள் மறைந்தது
பின் மீளவில்லை.

பெளர்ணமிக்கு முந்திய
இன்னொரு இரவில்
உன் தேகமெங்கும் விரல் நெளிய
வெட்கிச் சிவந்து நீ தடுக்க
விரல் நுனியை நான் கடிக்க
ஆய்… எனச் சிணுங்கிய மெல்லொலி
இரவுப் பறவையின் தொண்டைக்குள் சிக்கி
பாடலாகி ஒலித்தது

இதுபோல எத்தனை இரவுகள்
நமக்குள் கரைந்திருக்கும்

மோகம் முத்திய விரகத்தில்
உருகி ஊத்துண்டு
பூனையாய்ப் பதுங்கி
பழைய வீட்டின் பின்பக்கம்
மூங்கில் கீற்றாய் நீயும்,
தீக்காற்றாய் நானும்
பற்றியெரிந்த இரவை
இலையுதிர்த்து மாவும்
கிளை விரித்து வாகையும்
மூடியல்லவா அணைத்தது.

பின்வந்ததும்
ஈற்றானதுமான பிறிதொரு இரவு
பிரிவின் பெருந்தீயை மூட்டியெரித்து
நீயழுத ஏழு கடலை
ஓர் மிடறில் குடித்து
மூவாயிரம் பகல்களுக்கப்பால்
வீழ்ந்தது.

இன்னும் அவ்விரவு விடியவில்லை…
விடியவேயில்லை…

02.

இரவின் அகன்ற விழிகள்
விரிந்து
விரிந்து
அறை முழுவதும் நிறைந்திருக்கிறது
காரிருள்

இருளின் வெளிச்சத்தை
பேரிறைக்கும்
அவள் கண்களை
அடர்ந்த கூந்தலை
மேனியின் கருமையை
அறையெங்கும் தேடுகின்றேன்.

இரவோடும்
இருளோடும்
அள்ளிச் சென்றுவிட்டாள்.

அமாவாசை நாளொன்றில்
அவிழ்த்துக்கிடந்த கூந்தலிலிருந்து
உதிர்ந்த ஒற்றை முடி ஒளிர்ந்து
கைகளுக்குள் சிக்கிக்கொள்கிறது.

அதன் ஈரம் இன்னும் உலரவில்லை

அவள் நினைவின் சுடராய்
ஆயிரம் இரவுகளுக்கும்
இனி நீண்டிருக்கப்போவது
இக்கூந்தல் முடி மட்டும், மட்டும், மட்டும்…

0

அலறி, இலங்கை

Series Navigation

அலறி

அலறி