‘‘பண்டிதமணியின் திருவெம்பாவை உரைத்திறன்’’

This entry is part [part not set] of 24 in the series 20100108_Issue

முனைவர் சி.சேதுராமன்


E.Mail. sethumalar68 yahoo.com

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழிலக்கிய வரலாற்றை வளப்படுத்திய பெருமக்களுள் பண்டிதமணி மு.கதிரேசனார் குறிப்பிடத்தக்கவர். வடமொழியும், தமிழும் வல்ல இவர் திருவாசகத்தின் திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை ஆகிய மூன்று பகுதிகளுக்கு மட்டும் உரை இயற்றியுள்ளளார். பண்டிதமணியாரின் இவ்வுரை ‘கதிர்மணி விளக்கம்’ என்று வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. பண்டிதமணியாரின் உரை உள்ளுணர்விலிருந்து பிறந்து அனுவபத்தை வெளிப்படுத்துகின்றது என்பர்; அறிஞர். பண்டிதமணியின் திருவெம்பாவை உரை நயமுடையதாகவும் அவரது மதிநுட்பத்தினை விளக்குவதாகவும் அமைந்துள்ளது.

பண்டிதமணியின் உரை, கருத்துரை, பதவுரை, விளக்கவுரை என்ற மூன்று நிலைகளில் அமைந்திலங்குகிறது.‘‘ஒவ்வொரு திருப்பாட்டிற்கும் கருத்துரைத்தல், கண்ணழித்தல், பொழிப்புத்திரட்டல், அகலங்கூறல், என்னும் நான்கு வகையாகக் கொண்டு உரைவிளக்கம் செய்யப்படும். அவற்றுள் கருத்துரைத்தலாவது, திருப்பாட்டை அடுத்து அதன் திரண்ட கருத்தையும் முன்னைத் திருப்பாட்டோடு உள்ள இயைபையும் சுருக்கிக் கூறுதலாகும். கண்ணழித்தல், என்பது பதப்;பொருள் சொல்லுதல், பொழிப்புத் திரட்டலைவிட்டு அவற்றிற்குச் சொல்லிய பொருள்களைத் திரட்டிக் காட்டுதல்;. இவ்விரண்டு வகையும் பதப்பொருள் கூறுமுகமாக அமையும் ஆதலின் விரிவஞ்சிப் பொழிப்புத் திரட்டுதலைத் தனியே கூறினோம் அல்லேம். அகலங்கூறலாவது, திருப்பாட்டின் பொருளைத் தூய்மை செய்தற்கு வினாவிடை உள்ளுறுத்தும், ஆற்றன் முதலியவற்றாலும் குறிப்பாலும் சொற்களின் அமைந்து கிடக்கும் பொருள் நயங்களை விளக்கியும், இன்றியமையாத இடங்களில் மேற்கோள் காட்டியும் விளக்கிக் கூறுதலாகும். இம் மூன்றும் முறையே கருத்துரை, பதவுரை, விளக்கவுரை என உரிய இடங்களில் எடுத்தாளப்படும்’’ எனப் பண்டிதமணி திருச்சதகத்திற்கு எழுதிய உரைத்தொடக்கத்தில் தம் உரை நெறியைக் குறித்து விளக்கி உள்ளார்.

இவ்வுரை முறையினையே அவர்தாம் எழுதிய கதிர்மணி விளக்கப் பேருரைகளிலும் கையாண்டுள்ளார். கருத்துரை பாட்டைத் தெளிவுபடுத்துகின்றது. பதவுரை சொல்லின் பொருளை எடுத்துக் காட்டுகின்றது. விளக்கவுரை சொல்லின் நயத்தையும், பொருளின் நுட்பத்தையும் விளக்கிக்காட்டுகின்றது.

முன்னைத் திருப்பாட்டில் இறைவனது அருமையில் எளிய அழகிலே மொழியாற்பாராட்டுதற்குரிய எளிமையைப் பெண்மக்கள் மொழிமூலம் புலப்பட அருளிச் செய்த அடிகள், இத்திருப்பாட்டில் நெஞ்சத்தால் நினைந்து உருகுதலாகிய எளிமையை அவ்வாறே அருளிச் செய்கின்றார்’’ (ப.31) என்பது பண்டிதமணி திருவெம்பாவையின் நான்காம்பாடலுக்கு எழுதியுள்ள கருத்துரையாகும். இதில் அவர் பாடலின் திரண்ட கருத்தினையும் முன்னைப் பாடலோடு இப்பாடலுக்கு உள்ள இயைபினையும் சுருக்கமாகக் கூறியுள்ளார்.

பாடல்களுக்கு உரை எழுதும்போது பண்டிதமணி சில சொற்களுக்குக் கூறுகின்ற பொருள் விளக்கம் சிறப்புற அமைந்து அவருடைய உரைத்திறனை நன்கு வெளிப்படுத்துகின்றது. இதனை, ‘‘திருவென்பது தெய்வத்தன்மை யென்னும் பொருளுடைய மங்கல அடைமொழியாகும்’’(ப.1)

‘‘புரளுதல்-விழிப்புண்டாதற்குத் தொடங்கும் முதற்செயல், அஃது ஈண்டு இலக்கணைச் சொல்லாக நின்று எழுதலைக் குறிக்கும்’’ (ப.6) என்ற பகுதிகள் விளக்குவதாய் அமைந்துள்ளன.

சொல்லுக்குப் பொருள் கூறும்போது தம் கருத்துக்கு அரணாகப் பண்டைய உரையாசிரியரின்; குறிப்பையோ, இலக்கியச் சான்றையோ எடுத்துக் காட்டுவது பண்டிதமணியின்; உரைஉத்தியாகும்.

‘‘தோழம்-பேரெண். ‘ஒரு தோழந் தேவர் விண்ணிற் பொலிய’ (திருஞான. தேவ. 1-74-7) என்பது தமிழ் மறை’’ (ப.58) என்று திருவெம்பாவை உரையின் இடையே வரும் பகுதி இவ்வகையில் குறிப்பிடத்தக்கதாகும்.

பண்டிதமணியின் திருவெம்பாவை உரை அவரது பரந்துபட்ட தமிழிலக்கண இலக்கிய சமய நூலறிவைத் தெளிவுறுத்துவதாக அமைந்துள்ளது. பண்டிதமணி தமக்கு முன் வாழ்ந்த நூலாசிரியர்களைப் ‘பெரியோர்’ என மதிப்போடு சுட்டுகின்றார்; அவர்களது நூல்களைத் ‘தமிழ்மறை’ என்றும், ‘சிவநெறிப் பனுவல்’ என்றும் ஆர்வத்தோடு குறிப்பிடுகின்றார். அவர்களது கருத்துக்களை, ‘அருளுரை’ என்றும், ‘பொருளுரை’ என்றும், திருவாக்கு என்றும் கூறுகின்றார்.

திருமூலர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சேக்கிழார், சிவஞானமுனிவர், தாயுமானவர், இராமலிங்க அடிகள், நம்பியாண்டார் நம்பி, பரஞ்சோதியார், குமரகுருபரர் ஆகிய சிவநெறிச் செல்வர்களின் பாடல்களைப் பண்டிதமணி தம் திருவெம்பாவை உரையுள் பல இடங்களில் மேற்கோள் காட்டியுள்ளார். திருநாவுக்கரசர் தேவாரத்தை அவர் 12 இடங்களில் எடுத்தாண்டுள்ளார்.

சைவ சாத்திரங்களுள் மெய்கண்டார் இயற்றிய சிவஞானபோதத்தை 5 இடங்களிலும், அருணந்திச் சிவாச்சாரியார் இயற்றிய சிவஞானசித்தியாரை 10 இடங்களிலும் பண்டிதமணி மேற்கோள் காட்டியுள்ளார். சிவஞான மாபாடியத்திலிருந்தும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.

பண்டைத்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்திலிருந்தும், திருமுருகாற்றுப்படை, பட்டினப்பாலை, திருக்குறள், நான்மணிக்கடிகை, சிலப்பதிகாரம், நைடதம், ஆகிய இலக்கிய நூல்களிலிருந்தும் பண்டிதமணி பொருந்திய மேற்கோள்கள் பலவற்றை எடுத்துக்காட்டியுள்ளார். அவர் திருக்குறளை 8 இடங்களில் மேற்கோள் காட்டியிருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.

பண்டைய உரையாசிரியர்கள் பால் பெருமதிப்புக் கொண்டவர் பண்டிதமணி. அவர்தம் திருவெம்பாவை உரையின் இடையிடையே அரும்பத உரையாசிரியர், சிவஞானமுனிவர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், பரிமேலழகர் ஆகிய உரையாசிரியர்களின் கருத்துக்களை மேற்கோள்காட்டியிருப்பதனால் இதனை நன்கு உணரலாம். பரிமேலழகர் உரையைப் பண்டிதமணி மூன்று இடங்களில் மேற்கோள்காட்டியுள்ளார்.

திருவாசகத்தின் பிற பகுதிகளில் இருந்து பதினான்கு இடங்களில் இருந்தும் திருக்கோவையாரிலிருந்தும் (ப.84) பண்டிதமணி மேற்கோள் காட்டியுள்ளார். ‘‘பக்தி வலையிற் படுவோன்’’ (ப.14) ‘அருமையில் எளிய அழகு’ (ப.19) ‘அவனருளே கண்ணாகக் காணில்லால்’ (ப.38) போன்ற திருவாசகத் தொடர்களை அவரது உரையில் பரக்கக் காணலாம்.

‘‘தமிழும் வடமொழியும் கற்றவர்களில் முதன்முதல் பெரும் பேராசிரியர் (மகாமகோபாத்தியாயர்) என்னும் பட்டம் பெற்றவர் பண்டிதமணியே’’ என்பார் கா.சுப்பிரமணியபிள்ளை.

பண்டிதமணியின் வடமொழிப்புலமையைக் காட்டும் சான்றுகள் பல திருவெம்பாவையில் காணப்படுகின்றன. அவர் திருவெம்பாவையின் தொடக்கத் திருப்பாட்டுக்கு எழுதிய விளக்க உரையில், அருட்பெருஞ்சோதியாக விளங்கும் இறையியல்பைக் குறித்துச் சிவானந்த லகரி என்னும் வடமொழி நூலில் சங்கராசாரிய சுவாமிகள் கூறிய ஒரு சுலோகக் கருத்தினை எடுத்துக்காட்டியுள்ளார்.

‘‘பசுபதியாகிய இறைவ! தாமரை நாயகனாகிய ஒரு சூரியன் விண்மண் முழுதும் நிறைந்த பெரிய இருட் குழுவையோட்டிக் காண்பார் கண்களுக்கும் புலனாகின்றான்; நீ கோடி சூரியவொளியுடையவனாக இருந்தும், கண்களுக்கும் புலனாகாமையோடு சிறிய என் அகவிருளையும் போக்குகின்றாயல்லை. என் அகவிருள் நின்னால் ஒழிக்க இயலாத அத்துணை வலியை எங்ஙனம் உடையதாகும்? ஆதலின், அஞ்ஞானம் முழுவதையும் ஒழித்துக் காட்சி தந்தருளவாயக (ப.14) என அச்சுலோகக் கருத்தினைத் தமிழில் அழகுற மொழி பெயர்த்துத் தந்துள்ளார். இப்பகுதி பண்டிதமணியின் வடமொழிப் புலமையைக் காட்டுவதோடு, அவரது மொழிபெயர்ப்புத் திறனையும் ஒருங்கே உணர்த்துவதாகும்.

‘‘பிறர் கருத்தைச் சுட்டியும் மறுத்தும் எழுதித் தம் கருத்தை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு ஓர் உரையாசிரியருக்கு உண்டு’’ என்பர் அறிஞர். பண்டிதமணி தம் திருவெம்பாவை உரையில் பிறர் கருத்தைச் சுட்டும் இடங்களே காணப்படுகின்றன. மறுக்கும் இடங்கள் காணப்படவில்லை.

‘‘பாசம் பரஞ்சோதிக்கு என்பாய்’ என்பது திருவெம்பாவையில் வரும் இரண்டாம் பாடலின் தொடக்கவரி. இவ்வரிக்கு எழுதிய விளக்கவுரையில் பண்டிதமணி, ‘என்பாய் என்பதற்கு எலும்பாகக் கரையுமாறு எனப்பொருள் கூறுவாருமுளர்’’ (ப.21) எனப் பிறர் கருத்தினைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

பண்டிதமணி திருவெம்பாவை உரையின் இடையிடையே தம் காலத்து வழங்கிய பாட வேறபாடுகளையும் சுட்டிச் செல்கிறார்.

‘‘மானே நீ நென்னலை நாளைவந்து உங்களை

நானே எழுப்புவன் என்றலுமே நாணாமே

போன திசை பகராய்; இன்னம் புலர்ந்தின்றோ’’

என்னும் வரிகள் திருவெம்பாவையின் ஆறாம் பாடலில் வருவனவாகும். இப்பாடலுக்கு எழுதிய விளக்கவுரையில் பண்டிதமணி, ‘‘என்றலும் நாணாமே’’ என்பதும் பாடம்’’ எனப் பிறிதொரு பாடம் வழங்குவதைச் சுட்டிக்காட்டுகின்றார்.

ஒரு வினாவையும் அதற்கு இறுக்கும் விடையையும் ஒருங்கு சேர்த்து உரைநடையில் அமைக்கும்போது அவற்றை,‘எனின்’ என்ற சொல்லாலே தொடுத்து, ‘என்பது’ என்ற சொல்லால் முடிப்பது பண்டைக்காலத்தில் பெரு வழக்காக இருந்தது. பண்டைய உரையாசிரியர்களிடம் காணப்படும் இவ்வழக்கினைப் பண்டிதமணியின் உரையிலும் காண முடிகின்றது. இதனை,

‘‘இதன்கண் ‘மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்து’ என்றதனால் சக்தியை வியந்தது என்னும் உள்ளுறை குறிப்பிற் புலப்பட வைத்தவாறாம். என்னை? இறைவன் திருவடி இறையருளாகிய சிவசக்தியைக் குறிக்குமாதலின், திருவடி வாழ்த்துச் சக்தியை வாழ்த்தியதாகுமென்பது’’(ப.18)

என்ற பகுதி தெளிவுறுத்துகின்றது.

பலருக்கும் எளிதில் விளங்கும் உலகியல் நிகழ்ச்சிகளைச் சுட்டிக்காட்டி உரை விளக்கம் எழுதிச் செல்லும் போக்கினை பண்டிதமணியின் ‘கதிர்மணி விளக்க’ப்; பேருரையில் காணலாம்.

பண்டிதமணி தம் திருவெம்பாவை உரையுள் ஆங்காங்கே பொருள் புலப்பாடு கருதியும், அணிநயம் கருதியும் சிறந்த உவமைகளையும் கையாண்டுள்ளார். இதனை,

‘‘இடையறவின்றிப் பெய்யும் மழைநீரை மேட்டுநிலம் வறிதே கழிப்பப் பள்ள நிலம் தாங்கிப் பயன் விளைத்தல் போல ஆண்டவன் திருவிளையாட்டாற் பெய்யும் அருளமுதத்தைத் தூய்மை பெறாத உள்ளத்தினர் விட்டொழிக்க மெய்யன்பினால் தூய்மைபெற்ற நன்னெஞ்சினர் பெற்றுப் பயன்பெறுவர்’’(ப.63).

என்ற பகுதி தெளிவுறுத்துகின்றது.

உரைவிளக்கம் கூறிப்போகும்போதே பண்டிதமணி இலக்கணக் குறிப்புகளையும் இடையிடையே எழுதிச் செல்கின்றார். ‘‘ஆதியும் அந்தமுமில்லா அருட்பெருஞ்சோதியை’’ என்ற முதற் திருப்பாட்டின் உரையில் அவர்,‘‘ பத்தி வயப்பட்டு உருகி மெய்மறந்து கிடந்தாளை அவள் இல்லத்திற்கண்டு அவளையும் உடனழைத்துக் கொண்டு சென்றனர் ஆதலின் அவளைச் சுட்டி இவள் என்னாது ‘‘ஏதேனும் ஆகாள் இங்ஙன் கிடந்தாள்’’ என்று கூறி முடித்தனர். தம் குழவிற் கூடியிருத்தலின் சுட்டுப் பெயராகிய எழுவாயின்றிச் சுட்டிக் கூறிப் பயனிலையளவில் அவள் செயல் கூறப்பட்டதென்க. இவள் என்னும் சுட்டுப்பெயர் ஈண்டுத் தோன்றா எழுவாயாகும்’’ (ப.17) என்று மொழிகுவார்;.

இவ்வாறு தமது அனுபவத்தாலும் நுண்மாண் நுழைபுலத்தாலும் உரைவகுத்த பண்டிதமணியாரின் உரை தமிழன்னைக்குப் புகழ் சேர்க்கும் மணிமகுடமாகத் திகழ்கிறது. மேலும் இவ்வுரை தமிழறிஞர்களால் இன்றும் என்றும் படித்துச் சுவைத்தற்குரியதாகவும் விளங்குகிறது.

முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசி¡¢யர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை,

Series Navigation

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.