ஹேண்டில் பார்…

This entry is part [part not set] of 37 in the series 20090625_Issue

வெற்றி



வாழ்க்கையில் சில விசயங்களை அந்த,அந்த வயதிலேயே அதை செய்துவிட வேண்டும் என்று யாரோ சொன்ன‌தைக் கேட்டு இருக்கிறேன்.அப்படி நான் செய்த,செய்யாது தவற‌ விட்ட‌ விசயங்கள் பல இருந்தாலும்,அதில் செய்த விசயம் ஓன்று தான் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டது..!சிலர் காலை முன்னே வைத்து அமர்வதும்,சிலர் காலை அலேக்காக தூக்கி பின்னால் போட்டு அமர்வதும்,நீண்டு,நேராக நெஞ்சை நிமிர்த்தி சீட்டில் உட்கார்ந்தும்,உடலை தளர்வாக ஓட்டி செல்வதை பார்க்கும்போது,சைக்கிள் ஓட்டும்போது சக மனிதர்களின் மனநிலையை காட்டும் கருவியாக எனது மனதுக்கு படுகிறது.ஓருக்காலத்தில் சைக்கிள் இல்லாத வீடுகள் இல்லை என்றே நினைக்கிறென்.சைக்கிள் பலரது வாழ்வில் பல நினைவுகளாக,நெஞ்சை தொட்ட விசயமாக தான் இருக்கும் என்றும் நான் நம்புகிறேன்.

எனக்கும்,சைக்கிளுக்கும் உண்டான உறவு,எனக்கு நினைவு தெரியாத காலம் தொட்டு இருந்திருக்கிறது.எல்லோரும் நினைவு தெரிந்த காலம் முதல் என்று சொல்லி,எழுதி,படித்து கேட்டியிருப்பிர்கள்,ஆம் ஆனால் எனக்கு மட்டும் நினைவு தெரியாத காலம் தொட்டு..எனக்கு எங்க அம்மா வாங்கிக் கொடுத்த மூன்று சக்கர சைக்கிள் ஓட்டியபோது எனக்கு மூன்று(அ)நான்கு வயது இருக்கும்…!பின் அந்த சைக்கிளை மையமாக வைத்து எனக்கும்,என் தங்கைக்கும் நடந்த சண்டைகள் ஏராளம்..!?.. அது தனிக்கதைகள்…?!

மூன்று ச‌க்க‌ர‌ சைக்கிளிருந்து இர‌ண்டு ச‌க்க‌ர‌ சைக்கிள் ஓட்ட‌ப்பழகுவதற்கு முன்பே ஒரு சின்ன‌ சைக்கிள் விபத்தில் சிக்கியவன் நான்.ப‌ள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு என் அப்பா அழைத்துக்கொண்டு வ‌ரும்போது,பின்னால் அமர்ந்திருந்தவன், காலை சக்கரத்துக்குள் விட்டுவிட்டேன். இன்றும் அந்த காயத்தின் தழும்பு எனது அங்க அடையாளத்திற்கு உதவுகிறது.அந்த சம்பவத்திற்கு பிறகு,பின்னால் உட்காருவதற்கு பயந்து,சீட்டிற்கு முன்பு
நீண்டு இருக்கும் பாரில் மட்டும் உட்கார்த்துக் கொண்டேன்.அப்படி உட்காரும்போது,நான் தான் அந்த சைக்கிளை ஓட்டிக்கொண்டு போவது போலவே இருக்கும்.அதிலும் சில‌ கஷ்டங்கள் இருக்கவே செய்தது,குழியில் இறங்கிவிட்டால் புட்டங்கள் சிவந்துவிடும்.ஆனாலும் சைக்கிள் மீதான காதல் மட்டும் குறையவில்லை.

நான் சிறுவயதாக இருக்கும்போது,எனது உறவினர் ஓருவருடன் சைக்கிளில் வரும்போது “நகராட்சியில் பாஸ்” பிடிப்பதாக எதிரில் வந்தவர் சொல்லிட்டுச் சென்றார்,அன்று தான் நான் தெரியாத‌ பல தெருக்களை தெரிந்துக் கொண்டேன்.நகராட்சி மற்றும் பஞ்சாயத்துக்களில் சைக்கிளுக்கு வரி கட்டி ஒரு பாஸை(வெள்ளை நிற இரும்புத்தகடு) இணைத்துக் கொள்ள வேண்டும்.பெரும்பாலும் யாரும் இதை கட்ட மாட்டார்கள் நான் வந்த உறவினரையும் சேர்த்து.பக்கத்து ஊரில் பொங்கள் திருவிழாக்களில் சைக்கிள் போட்டிகள் நடைபெறும்,12கிலோமீட்ட்ர் வட்ட பாதையாக அமைக்கப்பெற்று முதலவதாக வருபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.அது போல மெதுவாக காலை தரையில் ஊன்றாமல்(ஸ்லோ சைக்கிள்)ஓட்டி வருபவர்களுக்கும் தனியே போட்டிகள் நடைபெறும்.எங்கள் ஊரை சேர்ந்த அண்ணன் அந்த போட்டியில் கலந்துக் கொள்ளும்போது,யாரே அந்த ஊர் குடிமகனால் கத்தியை காட்டி போட்டியில் கலந்து கூடாது என்று மிரட்டபட்டதாக எங்கள் நண்பர்கள் வட்டத்தில் அப்போதே பேச்சு இருந்தது.

சைக்கிள் விட கற்றுக் கொண்டது எனக்கு பெரும் சவாலான செயலாகவே இருந்தது.என் வயதை ஒத்த நண்பர்கள் கற்றுக்கொள்ளவதற்கு முன்பு கற்றுக்கொள்ள ஆசைப்பட்டு,பல ஆசான்கள் மற்றும் பல உத்திகள் கையாண்டு அதில் வெற்றியும் பெற்றேன்.ஊரில் இர‌ண்டு சின்ன(கட்ட‌)வாடகை சைக்கிள் தான் இருந்தது,அதை மற்ற‌வ‌ர்க‌ள் எடுக்கும் முன்பு கடை திறப்பதற்குக்காக காத்திருந்து எடுக்க‌ வேண்டும்.விட்டால் எடுத்த‌வ‌ர்க‌ள் வைக்கும் வ‌ரை காத்திருக்க‌ வேண்டும்.அந்த‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் எடுத்த‌வ‌ர்க‌ள் ஓட்டி ப‌ழ‌கும்போது அவ‌ர்க‌ள் பின்னால் ஓடிக்கொண்டிருப்பேன்.நான் எடுக்கவேண்டியது,அதை ஆசான்கள் கையில் ஒப்படைக்கவேண்டியது,அவர்கள் அனுபவித்தது போகத்தான் எனக்கு.பின்னால் ஒருவர் சீட்டை பிடித்துக்கொண்டே ஓடிவரும்போது பேலன்சுடன் ஓட்ட இயலும்.அவர் விட்டு விட்டார் என்று தெரிந்தால் அவ்வளவுதான்.விழுந்துவிடுவேன். பின்பு கட்டையான சுவற்றில் ஓரு காலை ஊன்றிக்கொண்டு, ஓரு காலால் ஊத்தி ஓட்டி பேலன்ஸ் செய்ய பழகியபோது கிடைத்த மகிழ்ச்சி அளவிட முடியாது.நீண்டு இருக்கும் தார் சாலைகளில்,இரண்டு புறமும் பசுமையான நெற்பயிர்களிருந்து வரும் ஈரக்காற்றை கிழித்து பறக்கும் சுகத்தை வார்த்தைகளால் இங்கே விவரிக்க எனது கன்னி எழுத்திற்கு வலிமை கிடையாது.

பெரிய சைக்கிளில் குரங்கு(பாரில் காலை தூக்கிப் போடாமல்,கம்பி பார் நடுவே)பெடல் போட்டு ஓட்டுவது.அந்த சமயங்களில்வீட்டில்மளிகைக்கடைக்கு போகச் சொன்னால் மறுப்பெதுவும் வராது என்னிடம்.ஊரிலிருந்து யாரெனும் விருந்தாளிகள் வீட்டிற்கு வந்தால்,அவர்கள் முன் ஓட்டி,ஓட்டி காட்டுவது என் வழக்கம்,அப்பொழுது என் மாமா என்னிடம் சீட்டில் உட்கார்த்து ஓட்டினால்,ஓர் புதிய சைக்கிள் வாங்கி தருவதாக சொன்னது ஞாபகம்.சீட்டில் உட்கார்ந்து ஓட்ட பழகியும்,வாங்கி தராதது ரொம்ப நாட்கள் மாறாத காயமாக அது இருந்தது.மேலும் டபுள்ஸ்,ட்ரிபிள்ஸ்,கைகளை விட்டு ஓட்டுதல், கழன்று போகும் செயினை மின்னல் வேகத்தில் மாட்டும் உத்தி(பின் சக்கரத்தில் உள்ள‌
செயின் கழன்று போனால்,முன் பக்க செயின் பாதி கழட்டி பின் சக்கர செயினை)போன்ற பயிற்சிகளையும் கடந்த பின் முக்கிய‌ சாலையில் வெள்ளோட்டம்.பல வாகனங்களுக்கு இடையில் சைக்கிளை பெருமையுடன் ஓட்டும்போதும்,என்னை நம்பி என் அம்மா டபுள்ஸ் உட்கார்த்த போதும் நான் அடைந்த மகிழ்ச்சிகள் ஏராளம்.இதை சாகசமாக நினைத்த எனக்கு,அது நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்து இருக்கிறது என்பதை இன்று என்னால் மறுக்க முடியாது.

பள்ளி நாட்களில் சைக்கிள் ஒரு பெருமையான விஷயம் தான்.எட்டாம்
வகுப்பு படிக்கும் போது எனக்கு புதிய சைக்கிள் கிடைத்தது.அப்போது சைக்கிளை விதவிதமாக‌ அலங்கரித்து வைத்துக்கொள்வதில் நண்பர்களுக்குள் போட்ட போட்டி இருக்கும்.சிலர் ஹேண்டில் பாரில் நீளமான பிளாஸ்டிக் மற்றும் ரிப்பன் துணிகளான‌ குஞ்சங்கள் தொங்கும்.பல விதமான பெல் வகைகள்,டைனமோவுக்கும்,முக்கோணக்கம்பிக்கும் இடையே திருட்டு போகாமல் இருக்க ஒரு சங்கிலி, டூம் விளக்கிற்கு மஞ்சள் கலரில் ஒரு துண்டு துணி,சக்கரத்து போர்க் கம்பிகளில் கலர் கலராக பாசி மணிகள், சக்கரம் சூத்தும் போது,எழுப்பும் ஓசை ரசிக்கதக்கவை.பளபளவென ரிம்வெள்ளைபவுடர் போட்ட‌ சக்கரத்து ரிம்கள்,மட் கார்டுகளில் முறையே முன்னனி நடிகர்களின் ஸ்டிக்கர்ஸ்,என் மாமா,அவர் சைக்கிள் ஹண்டில் பாரில்,அவருடைய பெயருடன்,தாமரை பூவையும் பொரித்திருப்பார்(முந்தைய மன்னர்கள் எழுதிவைத்த கல்வெட்டு போல).இப்படியாக அலங்கரிப்புகள் அவர் அவ‌ர் விருப்பதிற்கும்,எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப‌ இருக்கும்.முன்னனி நடிகர் சைக்கிளில் வரும்,பிரபலமான திரைப்படம் வேறு எங்களை மேலும் அலங்கரிப்புகள் செய்ய வைத்தது. அந்த காலக்கட்டத்தில்,நானும்,நண்பர்களும் போட்டி போட்டுக்கொண்டு தாவணி பெண்களின் முன்னால் பல விதமான சாகசங்கள் செய்தது..இன்றும் இனிக்கும் நினைவுகள்..எனது நண்பனும்,நானும் ஹண்டில் பாரை தொடாமல் கைவிட்டுவிட்டு பல கிலோமீட்ட்ர் சென்றுயிருக்கிறொம்.(சாதனை முயற்சியாக மாற்றாமல் விட்டுவிட்டோமோ?).

என் சைக்கிளை நானே ஓட்டி வருவதில் இருந்த அலாதி பிரியம்,ஏனோ பனிரெண்டாம் வகுப்பு சென்றபோது,நண்பன் ஓருவனை மிதிக்கச் சொல்லி,பின்னால் உட்கார்ந்து வர ஆசை ஏற்பட்டது.அது பெரிய மனிதர் தோரனை தருவதை போலவே உணர்ந்தேன்.எங்கு சென்றாலும் எனக்கு சைக்கிள் மிதிக்க நண்பன் தேவைப்பட்டான்.அடிக்கடி நண்பன் பிரேக் பிடிப்பான்,ஓவ்வொரு முறையும் இறங்கி ஏற வேண்டும்,இப்பொழுது உணர்கிறேன் ஓட்ட அலுப்புபட்டுக்கொண்டு என்னை இறங்கி,இறங்கி ஓட வைத்தானோ..?!ஓட்டி பழகிய புதிதில் பலமுறை மாமா வீட்டிற்கு சைக்கிளில் சென்ற நான்,மெல்ல மெல்ல சைக்கிளில் செல்வதையும் நிறுத்திக்கொண்டேன்.கல்லூரி சென்ற பிறிதொரு நாளில்,யமஹாவில் பெட்ரோல் இல்லாமல் பாதி வழியில் நின்றபோது,வழியில் வந்த வயதானவருடைய சைக்கிளை வாங்கிக் கொண்டு அருகேயுள்ள பங்க் செல்லும் வ்ழியில் என் கல்லூரியில் படிக்கும் பெண் ஓருத்தி தன் கண்களை மெலிதாக சுருக்கி,புன்முறுவலுடன் எதிரே கடந்து சென்றபோது ஏனோ சைக்கிள் ஓட்டுவது ஏதோ அவமானகரமான செயலாகவே எனக்கு தோன்றியது….


vetri.pages@gmail.com

Series Navigation